Skip to content
Post Views: 1,539

அத்தியாயம்-23
மறுநாள் காலை அதிதி தயாராகி அறையிலிருந்து வெளியே வரவும் பக்கத்து அறையிலிருந்து வசீகரன் வரவும் சரியாக இருந்தது, இவளைப்பார்த்ததும் முகம் மலர்ந்து,
“ஹாய் பேபி குட் மார்னிங்..” என்றான் உற்சாகமாக..
Advertisement
அவனது உற்சாகம் அவளையும் தொற்றிக்கொள்ள..
“குட் மார்னிங்..” என்றாள் புன்னகையுடன்..
“பரவால்லையே சீக்கிரம் ரெடி ஆகிட்ட..!!”
Advertisement
“க்ளையண்ட் அப்பாய்ண்ட்மெண்ட்க்கு எப்படி லேட்டா போறது..?” என்று அவள் கேட்க..
Advertisement
“ஓ..”என்று தலையசைத்தவன்
“சரி நல்லா தூங்கினியா?” என்றான்.
“ம்ம்..” என்றாள் தரையைப்பார்த்தபடி
Advertisement
வெளியே எப்போதும் போல் பேசினாலும் உள்ளுக்குள் நேற்றைய இரவை நினைத்து மனம் கள்ளுண்ட குரங்கு போல் மயங்கிப்போயிருந்தது.
அவனது கண்ணைப்பார்த்து பேசமுடியாமல் தவித்தாள், இதை நன்றாக தெரிந்து கொண்டவன், அதை வைத்து அவளை சீண்டினான்.
“கீழ எதாவது போட்டுட்டியா அதி, அப்போ இருந்து தேடிக்கிட்டே இருக்கியே..” என்றான்.
அவள் சட்டென்று நிமிர்ந்து அவனைப்பார்க்க அவனோ குறும்பு கூத்தாடும் கண்களுடன் உதட்டைக்குவித்து முத்தமிடுவது போல் பாவனைகாட்ட,
“ச்சு” என்று உச்சுகொட்டி அவனைப்பார்த்து முறைக்க முயன்றவள் முடியாமல் போக தன் முகச்சிவப்பை மறைக்க வேகமாக அவனைத்தாண்டி முன்னே போனாள்.
டைனிங் டேபிளில் வசீகரனின் அப்பா அமர்ந்து காஃபி குடித்துக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்ததும் இவள் தயங்கி நின்றுவிட, வசீகரன் அவளைப்பார்த்து தைரியமூட்டும் விதமாக தலையசைத்து கண் சிமிட்டிவிட்டு…
“ஹாய் பா.. குட் மார்னிங்..” என்றபடி அவர் அருகில் ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
“மார்னிங் வசி..நைட் லேட்டாதான் வந்தியா..?” என்று கேட்டவர்
தயங்கியபடி நின்றிருந்த அதிதியை கேள்வியாகப் பார்த்தார்
“ஆமாப்பா..கொஞ்சம் லேட் ஆகிடுச்சி..”என்றவன் தந்தையின் பார்வையில் இருக்கும் கேள்விக்கு பதிலாக..
“அப்பா இது அதிதி, இன்ஃபி டெக்ல இருந்து வந்திருக்காங்க…” என்றான்.
வரவேற்பாக தலையசைத்தவர்
“உக்காருமா..”என்றார்.
“காஃபி சாப்பிடுறியா..?” என்று உபசரித்து அருகிலிருந்த ஃபிளாஸ்கை எடுக்கவும்,
“நானே எடுத்துக்கறேன் சார்..” என்று அவசரமாக எழுந்தவள்,
ஒரு கப்பில் காஃபியை ஊற்றி வசீகரனுக்கு கொடுத்துவிட்டு இன்னொரு கப்பில் தான் எடுத்துக்கொண்டதை கவனியாதது போல் கவனித்தவர்..
“சுகர் போட்டுக்கோமா.. எனக்கு வயசாகிட்டதால நான் போட்டுக்கறதில்லை..” என்றார்.
வசீகரனும் டயட் கான்ஸியஸினால் சக்கரைப்போட்டுக் கொள்ளமாட்டான் என்று தெரியும் இப்போது அவள் மட்டும் போட்டுக்கொண்டால் வித்தியாசமாகத் தெரியும் என்பதால்,
“நானும் போட்டுக்கமாட்டேன் சார்.. சுகர் ஃப்ரீ டயட்ல இருக்கேன்..” என்றாள் உதட்டை விரித்து சிரித்தபடி..
“அடிப்பாவி நேத்துதானே கால்கிலோ சாக்லேட்டை உள்ள தள்ளுன..” என்று அவன் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு அடிக்குரலில் கூற.. வெளியே தெரியாதவாறு டேபிளுக்கு அடியில் அவன் காலை உதைத்தவள்,
“சும்மா இருங்க..இப்ப யாராவது கேட்டாங்களா..?” என்றாள் முணுமுணுப்பாக..
காஃபியை வாயில் வைத்துவிட்டு கசப்பில் முகம் சுளிக்காமல் சிரமப்பட்டு விழுங்கினாள்.
அதிதி முதல்முறை சிவசந்திரனை வசீகரனிடம் கோபப்பட்டு பேசியபோது பார்த்ததாலோ என்னவோ அவளுக்கு அவர் முன் பேசவே தயக்கமாக இருந்தது. அவர் எப்போது கோபப்பட்டு குரல் உயர்த்தி பேசிவிடுவாரோ என்று உள்ளுக்குள் பயமாகவே இருந்தது.
“சரி என்ன விஷயமா வந்திருக்காங்க?” என்று அவர் அதிதியைப் காட்டி வினவவும்
அவள் அதிர்ந்து விழிக்க,
“பா நான்தான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே..” என்றான் வசீகரன் அலுத்த குரலில்
“சொல்லியிருந்தா என்னடா.. எனக்கு மறந்துடுச்சி திரும்ப சொல்லேன்.. அதுல என்ன உனக்கு கஷ்டம்?” என்றார் சாதாரணமாக..
“இன்ஃபினிடி டெக்னாலஜி விக்ரம் அண்ணாவோட ஐடி கம்பெனி..அதிதி அங்க வேலை பார்க்குறா, நம்ம புது யூனிட்க்கு சாஃப்ட்வேர் சப்போர்ட்டுக்காக கேட்டிருந்தேன் அதுக்காக வந்திருக்காங்க..” என்று பல்லைக்கடித்து விளக்கினான் எரிச்சல் மறையாத குரலில்.
அவர் எதுவும் பேசாமல் நிதானமாக தன் காஃபியை அருந்தத்தொடங்கவும்..
“பா.. என்னப்பா..?” என்றான் வசீகரன் பொறுமையை இழுத்துப்பிடித்து..
“என்ன என்னப்பா..? இங்க பாரு வசி .. நீ எதோ புதுசா ஐடி ஃபீல்டுல இன்வெஸ்ட் பண்ணனும்னு சொன்ன.. சரி அது உன் விருப்பம்னு விட்டுட்டேன், ஆனா இது நம்ம கம்பெனி விஷயம், இதுல நான் தலையிடாம இருக்கமுடியாது, நம்மகிட்ட ஏற்கனவே ஐடி டீம் இருக்காங்க.. எல்லாம் நல்லாதானே போயிட்டு இருக்கு..? இப்ப தேவையில்லாம எதுக்கு இந்த தண்டசெலவு..” என்று கேட்டவர்
உடனே தணிந்து “சாரிமா நீ தப்பா எடுத்துக்காத..” என்று அதிதியைப்பார்த்து சொல்லவும்
“அய்யோ இல்ல சார்..” என்றாள் அவசரமாக..
“நான் எந்த முடிவும் எடுக்கக்கூடாதுன்னா எதுக்கு என்கிட்ட பொறுப்பை ஒப்படைக்கனும் நீங்களே பார்த்துக்கவேண்டியது தானே..” எனறு வசீகரனுன் சற்று கடுப்பாகவே கேட்டான்.
‘பொறுமையாக இரு’ என்று சொல்வது போல் டேபிளுக்கு அடியில் அவன் கை மீது தன் கையை வைத்து அழுத்தினாள்.
“உன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டதால எனக்கு நம்ம ஃபேக்ட்ரி மேலயும் என்ப்லாயீஸ் மேலயும் அக்கறை இல்லாம போயிடாது..” என்றார் அவரும் சூடாக..
“அப்போ எனக்கு இல்லைன்னு சொல்றீங்களா?”
“உனக்கு அனுபவம் பத்தாதுன்னு சொல்றேன்..”
“அப்ப நீங்களே பாத்துக்கோங்கப்பா.. என்ன விட்றுங்க..” என்றான் வசீகரன் எரிச்சலாக.
“இதுதான் இந்த ஜெனரேஷனுக்கு இருக்கற பிரச்சனை..பொறுமையே கொஞ்சம்கூட இல்ல, ஒரு சின்ன விமர்சனத்தக்கூட ஏத்துக்க முடியறதில்ல..” என்று குறைகூறினார்.
“இதுதான் உங்க ஜெனரேஷன்கிட்ட இருக்க ப்ராப்ளம், ஒரு நல்ல விஷயமே சொன்னாலும் சொல்றவங்க உங்களவிட சின்னவங்கன்ற ஒரே காரணத்துனால அதை ஏத்துக முடியறதில்லை..” என்று எதிர்த்துப்பேசினான்.”
“சரிடா,நாளைக்குதானே மீட்டிங் இருக்கு..அப்போ இவங்க என்ன ப்ரோபொசல் கொண்டு வராங்கன்னு பார்க்கலாம்..அப்புறமா நாம இதபத்தி திரும்ப பேசலாம்..” என்று அந்தப்பேச்சை முடித்தவர்
“என்ன இவங்க இப்படி அடிச்சிக்கறாங்கன்னு நீ ஒன்னும் பயப்படாதம்மா.. இது டெய்லி நடக்கறது தான்..” என்றார் பேயறைந்தது போல் அமர்ந்திருந்த அதிதியைப்பார்த்து லேசாக சிரித்து.
“டே வசி இனிமே ஆபீஸ் விஷயத்தை வீட்ல பேச வேண்டாம்..” என்றவர்
அதிதியைப்பார்த்து
“ஏம்மா உங்க கம்பெனில சண்டே கூட வேலைப்பாக்கனுமா?” என்றார்.
“எப்பவும் இல்ல சார், ஆனா இந்த மாதிரி க்ளையண்ட்ஸ் அவங்க கன்வீனியண்ட்னு சொல்லும் போது மறுக்கமுடியாது..” என்றாள்
“அப்படிலாம் ஒத்துக்கக்கூடாதுமா.. நோ சொல்ல கத்துக்கனும்.. இல்லைன்னா இந்த கார்ப்பரேட்ல நம்ம உழைப்ப சுரண்டிடுவாங்க..” என்று அறிவுரைக்கூறினார்.
“இல்ல சார் எங்க பாஸ் அப்படிலாம் இல்ல, வீக்கெண்டுல எப்பவுமே எங்கள தொந்தரவு பண்ணமாட்டாரு..இன்னிக்கு வொர்க் பண்றதுக்கு கூட நான் வீக் டேஸ்ல லீவ் எடுத்துப்பேன்..”என்றாள்.
“அப்பா.. நான்தான் சண்டே வர சொன்னேன் அப்போதான் நான் ஃப்ரீயா இருப்பேன்னு .” என்று உச்சுக்கொட்டினான் வசீகரன்.
“ஓ அப்படியா..!”என்று கொஞ்சம் அதிகபடியாக வியந்தவர்
“சரிடா எனக்கு வாக்கிங்க்கு டைம் ஆச்சி.. நான் கெளம்பறேன்..” என்று எழுந்தவர் திடுமென நினைவு வந்தது போல்
“அப்புறம் வசி, ராமதாஸ் இருக்காருல்ல, அதாண்டா நம்ம அசோசியேஷன் சேர்மேன், அவரு பொண்ணு அமெரிக்காவுல இருந்து வந்துடுச்சாம் எப்ப பார்க்கவரீங்கன்னு கேட்டாரு உனக்கு எப்ப டைம் இருக்கோ சொல்லு..” என்று குண்டைத் தூக்கிப் போட்டவர் எதுவும் நடவாதது போல வாசலை நோக்கி செல்ல
சட்டென்று எழுந்தவன்
“ஒரு நிமிஷம் வந்துடுறேன்..” என்று அதிதியிடம் கூறிவிட்டு வேகமாக தன் தந்தையைப் பின் தொடர்ந்து சென்றான்.
அதிதி ரோலர் கோஸ்டரில் பயணித்து முடித்தது போல் அப்பாடா என்று மூச்சுவிட்டாள், வசீகரனின் தந்தை இருந்த வரைக்கும் ஏதோ இண்ட்டர்வியூ பேனலில் இருந்தது போல் இருந்தது அவளுக்கு. இந்த பதற்றத்தில் அவர் கடைசியாக சொன்னதைக்கூட அவள் கவனிக்கவில்லை..
“அப்பா.. “ என்று அவரை வாசலில் மடக்கிப்பிடித்தவன்,
“வேணும்ன்னே தானே இப்ப அந்த பொண்ணப்பத்தி பேசினீங்க? ஏம்பா..?” என்றான் சலித்தகுரலில்
“ஏம்ப்பா என் பையன்கிட்ட அவன் கல்யாண விஷயம் பேச கூட எனக்கு உரிமையில்லையா..” என்று புருவம் உயர்த்தி வியந்தார்.
தூங்குவது போல் நடிப்பவரை எப்படி எழுப்புவது?
“நீங்க ஏன் இப்படிலாம் பண்றீங்கன்னு எனக்கு தெரியும்.. அந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு ஒரே கியூரியாசிட்டி அதானே..”
“ஏன் இருக்கக்கூடாதா..? யாருன்னே தெரியாத ஒரு பொண்ண நீ வீட்ல கொண்டுவந்து தங்க வச்சிருக்க, உங்களுக்குள்ள என்ன உறவுன்னு தெரிஞ்சிக்க நினைக்கறதுல என்ன தப்பு..?”
“நான்தான் சொன்னேன்ல , அவ வேலை விஷயமாதான் வந்திருக்கா.. வேற ஒன்னும் இல்ல,”
“இதெல்லாம் எவனாவது இளிச்சவாயன் இருப்பான் அவன்கிட்ட சொல்லுடா.. எத்தனை பேரை நாம வேலை விஷயமா சந்திக்கறோம் எல்லாரையும் இப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வைக்கிறமா?”
“அவ ஒன்னும் யாரோ இல்ல, எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான், காலேஜ்ல என்னோட ஜூனியர்..” என்றான் தாழ்ந்த குரலில்
“காலேஜ்ஜா..அப்போ அது..” என்று அவர் எதோ புரிந்தது போல தொடங்கவும்,
“அடுத்து நீங்க என்ன கேக்கப்போறீங்கன்னு தெரியும், ஆனா தயவு செஞ்சி வேண்டாம்..” என்று தடுத்தான்.
“சரி அத விடு, உங்க அண்ணா என்னடா இவ்ளோ சின்னப்பொண்ண இவ்ளோ பெரிய வேலைக்கு அனுப்பியிருக்கான்..?” என்றுகேட்டார்.
“அப்பா அவ ரொம்ப டேலெண்ட்டட் , நீங்களே பாப்பீங்க..” என்றான் உறுதியான குரலில்
“அதையும் பாக்கலாம்..” என்றவர்
“ஆமா அந்த பொண்ணோட அப்பா என்ன பண்றாரு ?” என்று ஆர்வமாக விசாரிக்கவும்
“அப்பா..எதுவா இருந்தாலும் நானே சொல்றேன் அதுவரைக்கும் நீங்க எதுவும் பேசாதீங்க..” என்றான் மன்றாடும் குரலில்
“சரி என்னமோ பண்ணு..”
என்றவர் கிளம்பி வேக நடையுடன் சென்றுவிட
இவன் ஒரு களைத்த பெருமூச்சுடன் உள்ளேப் போனான்.
“உங்க அப்பா என்ன சொன்னாரு..? என்னை கிளம்பி போக சொல்லிட்டாரா?” என்று கவலையுடன் கேட்டவளிடம்
“ச்சா ச்சா.. நீ ஏன் இப்படிலாம் யோசிக்கற..” என்றவன் தொடர்ந்து..
“ஆமா எங்கப்பாவ எதுக்கு அத்தனை சார் போடுற..? நான்லாம் உங்க அப்பாவை அழகா அங்கிள்ன்னு கூப்பிடல..?” என்று சற்று கோபமாக கேட்க
“ஆமா உங்கப்பா என் முன்னாடியே எதுக்கு இந்த தண்டசெலவுன்னு சொன்னாரு அதுலாம் உங்களுக்கு பெருசா தெரியல.. இப்ப நான் சார் போட்டு கூப்ட்டதுதான் குத்தமாகிடுச்சா..?” என்று எரிந்து விழுந்துவிட்டு, காரில் ஏறி அமர்ந்து டொம்மென்று கதவை சாத்தினாள்..
என்ன ரெண்டு பக்கமும் என்னை வச்சி செய்யறாங்க என்று விழிபிதுங்கினான் வசி.
லிங்கா மெஷினரீஸ் என்று பெரிதாக போர்டு போடப்பட்ட காம்பவுண்டுக்குள் வசீகரனின் கார் நுழைந்தது.
அந்த பெரிய வளாகத்தின் வலபுறமாக ஒரு சிறிய சிவன் கோவில் இருந்தது.
லிங்க வடிவில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த சிவனுக்கு ஆரத்திக்காட்டிக் கொண்டிருந்தார் அர்ச்சகர்..
வசீகரனைப் பார்த்ததும் “வாங்கோ தம்பி..” என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றுவிட்டு
“நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க..”
என்று திருவாசகத்தை சற்று உரக்க சொல்லிக்கொண்டே தீபாராதனைக் காட்டினான்.
“அதி.. இதுதான் நம்ம குலதெய்வம்..” என்றுவிட்டு அவன் கண்மூடி கரம்குவித்து நின்றிருக்க, அவன் அத்தனை இயல்பாக அவளையும் குடும்பத்தின் அங்கமாக சேர்த்துப் பேசியது அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.. அவனுடன் அருகில் நின்று ஈசனை வணங்கிய போது மன நிறைவாக உணர்ந்தாள்.
அதன் பிறகு வசீகரன் அவளுக்கு தனது சாம்ராஜ்ஜியத்தை சுற்றிக்காட்டினான்
பெரிய ஃபேக்டரியில் இருந்த மெஷின்கள், அவற்றின் செயல்முறை, அவர்கள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் முறை அதை பேக் செய்து நாட்டின் பல இடங்களுக்கு அனுப்புவது என்று எல்லாமே அவளுக்கு காட்டினான்.
அவன் முகத்தில் சந்தோஷமும் பெருமிதமாக ஒவ்வொன்றையும் காட்டுவதிலேயே அவன் அந்த வேலையை எவ்வளவு பிடித்து செய்கிறான் என்று புரிந்தது, இது வெறும் குடும்பத்தொழில் என்பதற்காக என்று இல்லாமல் வசீகரன் உண்மையிலேயே விரும்பித்தான் இந்த துறையில் இருக்கிறான் என்று அறியமுடிந்தது.
“இன்னிக்கு சண்டே ப்ரொடக்ஷன் கம்மிதான், ஆனா மெயிண்டனன்ஸ் வேலைகள் நடக்கும். இன்னிக்குதான் நானே உனக்கு பர்சனலா எல்லாத்தையும் காட்டமுடியும், நாளைக்கு நான் வேலையில பிஸி ஆகிடுவேன் கிட்டி அதான் இன்னிக்கு வர சொன்னேன்.” என்று விளக்கம் தந்தவன்
“எங்கப்பா சொன்ன மாதிரி உன்னை சுரண்டல்லாம் இல்ல..” என்று சேர்த்துக் கூறினான்.
“உங்க அப்பாவுக்கு என்னைப் பிடிக்கலையா வசி?”என்று கவலையாக கேட்டாள்.
“ஏய் லூசு. அப்படிலாம் இல்ல, அவரு நான் தேவையில்லாம செலவு பண்றேன்னு நினைக்கிறாரு, ஆனா கடைசில அவருக்குப் பிடிக்கலைன்னாலும் எனக்காக அவரு ஒத்துப்பாருதான் ஆனாலும் எனக்கு அவர் முழுமனசோட சம்மதிக்கனும்.. அப்பதான் எனக்கும் நிம்மதியா இருக்கும்.எப்படியாவது நீதான் அவரை கன்வின்ஸ் பண்ணனும் கிட்டி..” என்று சீரியஸாக அவன் பேச..
இவன் எதைப்பத்தி பேசுறான் என்று சந்தேகமாக அவள் பார்க்க
“ஹேய் நான் இந்த ஏஐ சப்போர்ட் பத்திதான் சென்னேன்..”என்றான் நகைத்தபடி..
“ஆனா இதே டயலாக் வேற சிட்டுவேஷனுக்கும் அப்படியே ஒத்துப்போகுதுல்ல..?” என்று புருவம் உயர்த்திக் கேட்க
“போகும்.. போகும்.. மொதல்ல வந்த வேலைய பார்க்கலாம்.” என்றவள்
தன் பையிலிருந்து ஐபேடை எடுத்து எதோ குறித்துக்கொண்டே வந்தாள்.
அவ்வப்போது ஃபோட்டோவும் எடுத்துக்கொண்டாள்.
ப்ரெசெண்டேஷனில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்று குறிப்பெடுத்துக்கொண்டாள்.
லிங்கா மெஷினரீஸ்சின் விதை வசீகரனின் கொள்ளு தாத்தா சிவலிங்கம் போட்டது.
குடும்பத்தொழிலான விவசாயத்தில் நாட்டம் இல்லாமல் முதலில் ஒரு லேத் பட்டரை ஆரம்பித்து அதிலிருந்து படிப்படியாக வளர்ந்து சின்ன சின்ன ஃபேர் பார்ட்ஸ் செய்யும் சிறுதொழிலாக வளர்த்தார், அதன் பிறகு அவன் தாத்தா சிவசுப்பிரமணி,இன்று லிங்கா மெஷினரீஸ் இருக்கும் இடத்தை வாங்கி அந்த இடத்தில் பேக்ட்டரி கட்டி முதன்முதலில் ஃபர்னஸ் மெஷின் வாங்கி உருக்காலையை உருவாக்கினார்.
அதன் தொடர்ச்சியாக சிவசந்திரன் மோட்டார் மற்றும் பம்ப் தயாரிக்கும் துறையிலும் கால் பதித்து இன்று இந்தியா மட்டுமில்லாமல் பல வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
நான்காம் தலைமுறையாக வசீகரன் பொறுப்பேற்று ஏற்றுமதியை இருமடங்காகப் பெருக்கியிருந்தான்.
அவனது முயற்சியினால் தான் புதிய ப்ளாண்ட் ஒன்று உருவாகியிருந்தது.. தொழிற்சாலையில் நவீனத்துவத்தை புகுத்த மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவன். அதற்கான முதற்படியாகத்தான் இந்த ஏஐ தொழில் நுட்பத்தைப்பயன்படுத்த நினைப்பது..
இதெல்லாம் அதிதி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தது தான் என்றாலும் நேரில் பார்க்கும் போது ,நான்கு தலைமுறையின் உழைப்பு வளர்ந்து எப்படி இன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது என்பது கண்முன்னே படமாக விரிய அவளுக்கு மலைப்பாகவும் பெருமையாகவும் இருந்தது.
வசீகரன் அங்கிருந்த தொழிலாளர்களிடம் இன்முகத்துடன் சிரித்து பேசிக்கொண்டே வேலைவாங்கியது, ஒவ்வொருவருக்கும் அவருக்குத்தக்க பேச்சுகொடுத்து அவர்களை ஸ்பெஷலாக உணரவைத்ததாகட்டும், ஒரு இடத்தில் நில்லாமல் பம்பரமாக சுழன்று வேலைப்பார்த்ததாகட்டும் அவனைப்பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது.
புது ப்ளாண்டின் நுழைவாயிலில் இருந்த சுவற்றில் அவனது கொள்ளுத்தாத்தாவின் பெயர் அடுத்து அவனது தாத்தாவின் பெயர், அவனது அப்பாவின் பெயர் என்று வரிசையாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்க..அதைப்பார்த்தவள்..
“சிவலிங்கம்.. சிவசுப்பிரமணி.. அப்புறம் சிவசந்திரன்… ஆனா உங்க பேர் மட்டும் ஏன் வசீகரன்..? சிவான்னு ஆரம்பிக்காம வித்தியாசமா இருக்கு..” என்று கேட்டாள்.
“அதுக்கு காரணம் எங்க அம்மா.. அவங்களுக்கு இந்த மாதிரி பரம்பரை பேர் வைக்கறதுல பெருசா நம்பிக்கை இல்லை போல.. அதான் அப்பா வைக்கறேன்னு சொன்ன பேர கூட வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களாம்..”
“என்ன பேர் வெக்கலாம்னு இருந்தாங்க..?” என்று அவள் ஆர்வாகக் கேட்க
“அது எதுக்கு வேண்டாம் விடு..” என்று அவன் தயங்கினான், அதைப்பார்த்து அவளுக்கு மேலும் ஆர்வம் அதிகமான
“அப்படி என்ன பேரு சொல்லுங்க..”என்றாள் கொஞ்சலாக
“சிவசங்கர்..” என்றான் கம்மியக்குரலில்
“சிவசங்கரா..” என்று கேட்டவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“இப்படி நீயெல்லாம் சிரிப்பன்னுதான் எங்க அம்மா சிவாவ திருப்பிபோட்டு வசின்னு வச்சாங்க..அதுவும் இல்லாம அப்பாவ அம்மா சிவான்னுதான் கூப்பிடுவாங்க அதே பேரை எனக்கு வைக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களாம்..” என்றான்.
“ஓ இதுதான் உங்க பேர் காரணமா? நான் கூட வேற நெனைச்சேன்..” என்றாள்
“என்ன நினைச்ச..?”
“இல்ல ஆளப்பார்த்து பேர் வச்சிருப்பாங்கன்னு நெனைச்சேன்..”
அவன் புரியாமல் புருவம் சுருக்கவும்
“அடடடடா ஒன்னும் தெரியாத மாதிரி மூஞ்சிய வச்சிக்க வேண்டியது..,”
“ஹே நிஜமா தெரியல..”
“உங்கள மாதிரி அழகா இருக்கறவங்களுக்கெல்லாம் அதை இன்னொருத்தர் வாயால சொல்ல கேக்கணும்.. அப்படி ஒரு வியாதி..” என்றாள் அவனை முறைத்தபடி.
“அப்போ நான் அழகா இருக்கேனா கிட்டி..?”
“ஏன் உங்களுக்கு தெரியாதா?” என்று அவள் திருப்பி கேட்கவும், சிரித்துவிட்டு..
“சரி அதைவிடு நாம பரம்ரைப்பேரை பத்திதானே பேசிட்டு இருந்தோம்… எனக்கு என்ன ஆசைத்தெரியுமா..? எனக்கு பொறக்குற பையனுக்கு எங்க பாரம்பரியப்படிதான் பேர் வைக்கனும்..”
“ஓ.. என்ன வைக்கப்போறீங்க?” என்று ஆர்வமானாள்
“சிவ லிங்கா.. எப்படி இருக்கு? உனக்கு ஓகே வா?” என்று அவன் கேட்க
“என்கிட்ட ஏன் கேக்குறீங்க..?” என்றாள் அவள் அலட்சியமாக
“வேற யார்கிட்ட கேக்குறது?” என்று அவன் ஒற்றைப்புருவம் உயர்த்தி கேட்க..
அவள் பதிலில்லாமல் விழித்தாள்.
அதைப்பார்த்து கொஞ்சம் பரிதாபப்பட்டோ என்னவோ
“இங்க நீ மட்டும்தானே இருக்க அதான் உன்னோட ஒப்பீனியன் கேட்டேன்.
“அது.. இந்த மாதிரி பரம்பரைப்பேர் வைக்கறது நல்லதுதான், அதுவும் உங்க கொள்ளு தாத்தாவோட பேரு… அஞ்சாவது தலைமுறையா தொடருறது எவ்ளோ பெரியவிஷயம்..!! உங்க குடும்பத்துக்கும் இது ரொம்ப மீனிங் ஃபுல்லா இருக்கும்.” என்றாள்.
“அப்போ அப்படியே வெச்சிடலாம்..” என்று சொல்லி அவள் முகம் சிவப்பதை ரசித்து விட்டு
“அது என்னமோ தெரியல எங்க குடும்பத்துல எல்லாருமே ஒற்றை பிள்ளைகளா நின்னுட்டோம்
நானாவது அந்த கர்ஸ்ச(curse) பிரேக் பண்ணனும்ன்னு நெனைக்கறேன். எனக்கு மினிமம் ரெண்டு குழந்தையாவது வேணும்..சரியா..?” என்றான்.
“அத உங்க ஒயிஃப் கிட்டசொல்லுங்க..”என்றாள்.
“அதான் உன்கிட்ட சொல்றேன்.” என்று அவன் அவளை ஆழ்ந்து பார்க்கவும்
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வெட்கத்தில் முகம் சிவப்பதையும் தடுக்கமுடியாமல் அவள் திக்கு முக்காடிப்போனாள்..
அவள்படும் அவஸ்தையைப்பார்த்து சிரித்தவன்..
“சரி உனக்கு வேற எதாவது பார்க்கனுமா..?” என்று கேட்டான்..
“உங்க இன்வெண்டரி லிஸ்ட், சேஃப்டீ மெஷர்ஸ், இப்ப யூஸ் பண்ற சாஃப்ட்வேர்,டெக்னாலஜி.. இதெல்லாம் பார்க்கமுடியுமா?”
என்று கேட்டாள்…
அவன் அவளை அவன் ஆஃபீஸ் அறைக்கு அழைத்து சென்று அவள் கேட்ட தகவல்களைத் தந்தான்.
அதிதி வேலையில் மூழ்கிப்போக ..
திடுமென நினைவு வந்தவன் போல..
“அதி வா.. நாம ஒரு இடத்துக்கு போகனும்..” என்றான்.
“எங்க?” என்றாள் கம்ப்யூட்டர்திரையில் மூழ்கியிருந்தவள் அரைகவனமாக..
“பேசாம வா கேள்வி கேட்டுட்டே இருக்காத..” என்று அவன் அழைத்து சென்ற இடம் அவர்களது கல்லூரி..
“இங்க எதுக்கு வந்திருக்கோம்?” என்று அவள் அதிர்ச்சியடைய..
“தெரியாதா இன்னிக்கு நம்ம காலேஜ் அலுமினி மீட்டிங், ஒரு மாசம் முன்னாடியே மெயில் வந்திருந்ததே.. நேத்து க்ரூப்ல ரிமண்டர் கூட போட்டிருந்தாங்க..” என்றான்
“எனக்கும் வந்திருக்கும்.. நான்தான் கவனிக்கல போல..” என்றாள்.
“சரி வா உள்ளப்போலாம்..” என்று அவன் காரைவிட்டு இறங்கப்போக..
அவளுக்கு தயக்கமாக இருந்தது.. ‘இங்கே சொல்லிக்கொள்ளும்படியாக நல்ல நினைவுகள் எதுவும் அவளுக்கு இல்லையே.. குறைந்த பட்சம் அவளது நண்பர்கள் இருந்தாலாவது கொஞ்சம் ஆதரவாக இருக்கும், இப்போது இவனுடன் போனால் கேட்கவே வேண்டாம் தேவையில்லாத கவனமெல்லாம் தன் மீதுதான் விழும்..’ என்று எண்ணியவள்
“வரேன் ஆனா நீங்க தனியா போங்க.. நான் தனியா போறேன்..” என்றாள்.
“ஏன் ஏன் ஏன் ..”
“இங்க பாருங்க உங்க கூடலாம் வரமாட்டேன்.. அப்புறம் எல்லாரோட அட்டென்ஷனும் என்மேல தான் இருக்கும். நான் இருக்கற இடம் தெரியாம இருக்கனும்னு நெனைக்கறேன்.. உங்க கூட வந்தா அது நடக்காது…இதுக்கு ஓக்கேனா சொல்லுங்க வரேன்.. இல்லைன்னா நான் வரல..” என்று விடாப்பிடியாக கூறிவிட
“சரி நீ யாருன்னே எனக்குத் தெரியாது போதுமா..?” என்று விட்டு கீழே இறங்கினான்
“கிளம்பனும்ன்னா கால் பண்ணு நான் வந்துடுறேன்..” என்றுவிட்டு போனான்.
வசீகரன் போனதும் ஒரு கும்பல் அப்படியே அவனை சூழ்ந்து கொள்ள..
இவள் மெதுவாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடந்தாள், தெரிந்த முகம் ஏதும் கண்ணுக்கு புலப்படுகிறதா என்று தேடியபடி,
ஹாஸ்ட்டல் தோழிகள் சிலர் வந்திருக்கவே அவர்களுடன் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருக்க நன்றாகத்தான் இருந்தது.
சங்கடமாக இருக்கும் என்று அவள் நினைத்தது போல் இல்லாமல் பழகிய இடங்களைப் பார்ப்பதும் பழைய நினைவுகளை அசைப்போடுவதும் மனதிற்கு இதமாக இருந்தது. எல்லோரும் எந்தவித தயக்கமோ மனத்தடையோ இல்லாமல், குரோதங்கள் பேதங்கள் மறந்து பார்ப்போரிடமெல்லாம் இன்முகமாக பேசிக்கொண்டனர். கல்லூரியைவிட்டு வெளியேறி நிஜ உலகில் நெடுதூரம் பயணித்தவர்களுக்கு,எதோ டைம் மெஷினில் ஏறி எந்த கவலையுமில்லாத அந்த இளமைக்காலத்திற்கே மீண்டும் திரும்பியது போன்ற இனிய அனுபவமாக இருந்தது.
அங்கே உள்ளே ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது வசீகரன் வேறு சில பிரபலமான அலுமினிகளுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்தான்.
எதற்கும் இருக்கட்டும் என்று வர்ஷினியிடம் காட்டுவதற்காக செல்ஃபி போட்டோக்கள் என்று எடுத்து வைத்தாள் அதிதி.
முன்னால் மாணவர்களில் வெற்றிபெற்ற சாதனையாளர்கள் என்று அங்கிருந்த பெரிய திரையில் ஏவி போட்டனர், அதில் விக்ரமாதித்யா பெயரும் வர இவள் மட்டும்
“ஊ..” என்று கூச்சலிட்டு கைத்தட்டினாள்.
வந்த முக்கியமானவர்கள் எல்லோரும் பேசி முடித்ததும்,எல்லோருக்கும் லன்ச் ஏற்பாடு செய்திருப்பதால் சாப்பிட்டு செல்லுமாறு அன்புக்கட்டளையிட்டார் பிரின்சிபல் சார்.
“கிட்டி சாப்ட வெளிய போகலாம்..நீ பார்கிங்ல வெயிட் பண்ணு வரேன்..” என்று வசீகரனிடமிருந்து மெசேஜ் வந்தது.
இவள் மெதுவாக கிளம்பி அருகில் தெரிந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பார்க்கிங்கை நோக்கி நடக்கையில்
“ஹே அதிதி..அதிதி தானே..?” என்று கேட்டவாறு இவள் எதிரில் வந்து நின்றாள் வைஷாலி..
error: Content is protected !!