Skip to content
Post Views: 1,643

அத்தியாயம் 29
வசீகரன் அலுப்புடன் வந்து தன் சேரில் சாய்ந்து அமர்ந்தான். இப்போதெல்லாம் அடிக்கடி சோர்ந்து போகிறான்.. மனதின் அழுத்தம் உடலையும் பாதிக்கிறதோ என்று தோன்றியது.
அதிதியிடம் பேசி ஒரு வாரம் கடந்திருந்தது.. ஆனால் அவளை நினைக்காமல் ஒரு நொடி கூட கடக்கமுடிவதில்லை.
Advertisement
அவள் அனுப்பிய குறுஞ்செய்திகள் வாய்ஸ் நோட்ஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அவளிடம் கோபமெல்லாம் ஒன்றும் இல்லை.. ஆனால் எதோ ஒன்று அவனைத் தடுத்தது.. ‘தனது ஈகோவா..?’ என்று யோசித்தான்
‘ஆனால் அவளிடம் எனக்கென்ன ஈகோ அவள் காலில் விழவும் அவன் தயங்க மாட்டானே.’ என்று உடனே மனம் முரண்டியது.
நான் எவ்வளவு அன்பாக இருந்தாலும்.. அவளுக்குப் போதவில்லையே..
Advertisement
கஷ்டப்படாமல் ஈஸியாக கிடைப்பதால் என் அன்பின் மகத்துவம் அவளுக்குப் புரிவதில்லையா..
Advertisement
என்னதான் அவளுக்காக பார்த்துப்பார்த்து எல்லாம் செய்தாலும் அதை மதிக்காமல் மிக எளிதாக என் அன்பைப் புறந்தள்ளிவிடுகிறாளே..
என்னை என் நடத்தையை தவறாக நினைப்பது அவளுக்கு ஏன் அவ்வளவு எளிதாகப் போய்விடுகிறது..?
என் காதலுக்கு மதிப்பில்லையா? என்ற வலிதான் அவனை பேசவிடாமல் தடுத்தது.
Advertisement
எப்படியும் அவளிடம் பேசித்தான் ஆகவேண்டும்.. பேசாமல் போனால் பைத்தியம் பிடித்துவிடக்கூடும்..
ஏற்கனவே அப்பா மீட்டிங்கில் இரண்டு முறை கேட்டுவிட்டார்..
‘எங்கடா கவனத்த வச்சிட்டு இருக்க..’ என்று..
அவனால் எதிலும் மனதை முழுமையாக ஈடுபடுத்த முடியவில்லை.. சிந்தை முழுவதையும் ஆக்ரமித்திருந்தாள் அவள்..
“ராட்சசி ..” என்று மனதிற்குள் வைதவன்
ஃபோனை எடுத்துப் பார்த்தான்..
அவளிடமிருந்து மிஸ்டுகால் வந்திருந்தது.
அவன் லன்ச் சாப்பிட போன போது வந்தது வேண்டுமென்றே எடுக்காமல் விட்டான்.
ஃபோன் ரிங் ஆவது நின்றவுடன் அவன் மனமும் வாடிப்போனது..
அதிதியை பழிவாங்கவென்றெல்லாம் அவன் பேசாமல் இல்லை.. ஃபோனை எடுத்தாலும் அவளிடம் சகஜமாக பேச முடியும் என்று தோன்றவில்லை.. அதனால் தான் அவன் பேசாமல் தவிர்த்தான்.
வாட்ஸ்ஆப் இல் அவள் மெசேஜை திறந்து அவளது வாய்ஸ் நோட்ஸை முதலிலிருந்து ஓட விட்டான்..
டே1 “வசி ப்ளீஸ் என்கிட்ட பேசுங்க.. நான் அப்படி உங்கள பேசினது தப்புதான் நான் யோசிக்காம பேசிட்டேன் சாரி..”
அடுத்த வாய்ஸ் நோட் தானாக ஓடியது
டே2 “ரெண்டு நாள் ஆச்சி நீங்க என்கிட்ட பேசி.. என் ஃபோனையும் எடுக்க மாட்டேங்குறீங்க மெசேஜ்ஜுக்கும் ரிப்ளை பண்ண மாட்டேங்குறீங்க.. நான் என்னதான் பண்றது? ப்ளீஸ் பேசுங்க ..”
டே 3 “வசி..என் செல்லம்ல.. பட்டுல்ல.. மை டார்லிங் டெவில்ல.. பேசுங்க ப்ளீஸ்.” என்ற கொஞ்சலில் முகம் சிவந்தது அவனுக்கு.
டே4 “நீங்க பேசலைன்னு நான் சரியா சாப்பிடுறதுகூட இல்ல தெரியுமா.. அரைக் கிலோ இளைச்சிட்டேன்.. பார்க்கறவங்கல்லாம் ஏன் இளைச்சிட்டன்னு கேக்குறாங்க.. உங்களாலதான்னு சொல்லப்போறேன்..” என்ற அவளது கியூட் குற்றச்சாட்டில்
அவனையறியாமல் இதழ்கள் தானாக புன்னகையில் விரிந்தது..
டே5 “அப்படி என்ன கோபம் உங்களுக்கு..? இங்க பாருங்க இப்ப நீங்க பேசலைன்னா நானும் இனிமே பேசமாட்டேன்…” என்ற செல்லக்கோபத்தில் அவன் பக்கென்று சிரித்தான்..
டே6 “வசி… ஐ ரியலி ரியலி மிஸ் யூ.. என்கிட்ட சண்டைப் போடுறதுக்காகவாது பேசுங்க..” என்ற மன்றாடுதலில் அவன் மனம் உருகிப்போனது..
டே7 “இன்னிக்கு டே செவன் இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.. உங்க வாய்ஸ கேக்கனும் போல இருக்கு வசி.. ப்ளீஸ்..”
என்ற கெஞ்சலுடன் முடித்திருந்தாள். அந்தக் குரலில் அவ்வளவு ஏக்கமும் துக்கமும் நிறைந்திருந்தது.
இது புதிதாக காலையில் அனுப்பியிருக்கிறாள்..
அதைக்கேட்டதும் தானாக கை மொபைலை எடுத்துவிட்டது.. அவளிடம் பேசி விடலாம் என்று..
அப்போது அவனது கதவைத் தட்டும் ஒலி கேட்க
“யெஸ்..” என்றான்.
உள்ளே வந்த நாகராஜ்
“சார் நீங்க வந்துட்டிங்களா?” என்றான் அவசரக் குரலில்
“என்ன விஷயம்..?”
“அதிதி மேடம் கால் பண்ணாங்க.. எதோ முக்கியமான விஷயமாம் உங்ககிட்ட பேசனும்னு சொன்னங்க..” என்றான் பணிவாக
“சரி நான் பேசிக்கறேன் நீ போ..” என்றுவிட்டு அவன் தன் வேலையைப்பார்க்க அவன் போகாமல் அங்கேயே நின்றான்.
“இன்னும் என்ன..?” என்றான் பொறுமையிழந்த குரலில்
“சார் நீங்க பொண்ணு பாக்க போன விஷயத்த மேடம் கிட்ட சொல்லிட்டேன்..” என்றான் முகத்தில் அசட்டுச் சிரிப்புடன்
“வாட்..” என்று அதிர்ந்து கத்திவிட்டான் வசி
அவன் புன்னகை மேலும் விரிய
“மேடமும் வாட்ன்னு இப்படியேதான் ஷாக் ஆனாங்க..” என்றான் குதூகலத்துடன்..
வசீகரன் அவன் பேசிமுடிக்கும் முன் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவன் சட்டைக் காலரைப் பிடித்திருந்தான்.
“டேய் முழுசா சொல்லு அதிதி கிட்ட என்ன சொல்லித் தொலைச்ச..?”
வசீகரனிடம் இப்படி ஒரு கொந்தளிப்பை எதிர்பார்க்காத நாகு திடுக்கிட்டான்..
‘தான் சொதப்பிவிட்டோமோ..?’ என்ற பயம் அவனை கவ்வியது
“நான் எதுவும் சொல்லல சார்” என்று அவன் சமாளிக்கப்பார்க்க
வசீகரன் முயன்று தன்னை அடக்கிக்கொண்டு
அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தான்.
“இங்க பாரு..நான் உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன், என்ன நடந்துச்சின்னு முழுசா சொல்லு..” என்றான் முடிந்தவரை நிதானமாக.
நாகராஜ் அதிதியிடம் வசி பெண் பார்க்க சென்ற விஷயத்தை சொல்லியதை சொன்னான்.
‘இருக்கற பிரச்சனை போதாதுன்னு இப்ப இது வேற.. சும்மாவே ஆடுவா இப்ப சலங்கை கட்டிட்டுல்ல ஆடுவா.. கடவுளே..!!’ என்று நினைத்தவன்
“சரி நீ சொன்னதுக்கு அவங்க என்ன சொன்னாங்க..?” என்று கேட்டான்.
“ஒன்னு சொல்லல சார்.. அந்தப்பக்கதுல இருந்து சத்தமே வரலங்களா.. அதான் லைன் ப்ராப்ளமா இருக்குங்காட்டியும்னு ஃபோனை வச்சிட்டனுங்க..” என்றான்.
“சரி நீ போ.. இப்படி ஊரெல்லாம் போய் நான் பொண்ணு பார்க்க போனேன்னு புரளிய கிளம்பிவிட்டுட்டு இருக்காத..நான் என் ஃப்ரண்ட பார்க்க தான் போனேன்..” என்று சொல்லி அனுப்பினான்.
வசீகரனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. அதிதி அவனைத் தவறாக நினைத்துவிடுவாள் என்ற எண்ணமே அவனை வாட்டியது.. அதுவரை இருந்த ஊடல் எல்லாம் போன இடம் தெரியவில்லை.. உடனே அவளைப்பார்த்து இந்த தவறான புரிதலை சரி செய்துவிட வேண்டும் என்று தவித்தான். அவளிடம் போனில் பேசலாமா என்று யோசித்தவன் நேரிலே பேசிவிடலாம் என்று கிளம்பிவிட்டான்.
அலைப்பேசி இணைப்பு தானாக துண்டானது கூட தெரியாமல் அதிதி அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டாள்.
‘வசீகரன் வேறு பெண்ணைப் பார்க்கப்போகிறானா? என்னதான் என் மீது கோபம் இருந்தாலும் அவன் அவளுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்ய மாட்டான் என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும்.’
‘அப்படி மட்டும் நடந்துவிட்டால் அவன் இத்தனை நாள் காட்டிய அன்புக்கும் வார்த்தையால் இல்லாவிட்டாலும் பார்வையிலும் செயலிலும் அவன் பொழிந்த காதலுக்கும் அர்த்தமில்லாமல் போய்விடாதா..?’
‘ஒருவேளை என்னை பழிவாங்கவென்று இப்படி செய்திருப்பானோ.. யாருக்குத் தெரியும் வேண்டுமென்றே என்னை வெறுப்பேற்ற அந்த நாகராஜிடம் பொய்யாக நடிக்கக்கூட சொல்லியிருக்கலாம்..’
‘ஆனால் அவன் இப்படி நாடகம் போடும் அளவுக்குப்போவான் என்றும் தோன்றவில்லை..’
எப்படி யோசித்தாலும் குழப்பம் மட்டுமே மிஞ்சியது..
‘இது மட்டும் உண்மையாக இருக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு..’ என்று மனதில் கறுவியவள்..
முதலில் இங்கே இருக்கும் பிரச்சனையை பார்ப்போம்
அடுத்தவர் காதலுக்கு நீர் ஊற்றினால் தன் காதல் தானாக வளரும் என்று முடிவெடுத்தவள் விக்ரமின் கேபினை நோக்கிப்போனாள்.
“சார் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்..” என்றாள் தயங்கியபடி
“சொல்லு..” என்றான் சுருக்கமாக
“இங்க இல்ல சார்.. நாம வெளிய எங்கயாவது போய் பேசலாம்..”
“ஐ டோண்ட் ஹேவ் டைம் ஃபார் தட்..நான் இப்போ புது ஆஃபீஸ் லொகேஷன் பார்க்கப்போறேன்.” என்றான் கிளம்புவதற்கு தயாரானபடி..
“பரவால்ல சார்.. நீங்க வர்ற வரைக்கும் நான் வெயிட் பண்றேன்..” என்றாள் பவ்யமாக
“ரொம்ப முக்கியமான விஷயமா?” என்றான் யோசனையாக
“ஆமா சார்.. நீங்க உங்க வொர்க் முடிச்சிட்டு நாம ரெகுலரா போற ரெஸ்டாரண்ட்டுக்கு வந்துடுங்க..” என்றாள்.
“என்ன டேட் மாதிரி சொல்ற?”
“அப்பதான் வருவீங்கன்னா அப்படியே வச்சிக்கோங்க சார்..” என்றாள்.
“சரி நான் பக்கத்துல வந்ததும் டெக்ஸ்ட் பண்றேன்..” என்றவன்..
“வாட் எவர் இட் ஈஸ்…இட்ஸ் பெட்டர் பீ வொர்த் மை டைம்..” என்று எச்சரிப்பதுபோல் சொல்லிவிட்டு சென்றான்.
“உப்…” என்று அதுவரை அடக்கிவைத்திருந்த மூச்சைவிட்டாள்..
ஸ்டேஜ் ஒன் ஓவர்.. அடுத்து பவி மேம்
என்று அவளிடம் சென்றாள்
“மேம் நான் பாஸ் கிட்ட உங்கள பத்தி எப்படி பேசுறதுன்னு கொஞ்சம் ப்ளான் பண்ண வேண்டியிருக்கு.. நீங்க ஒரு எட்டு மணிக்கா நம்ம ஆபீஸ்க்கு கீழ இருக்கற ரெஸ்டாரண்டுக்கு வந்துடுங்க..” என்றாள்.
“அதிதி நீ தேவையில்லாத வேலை பார்க்குறன்னு தோணுது.. இதெல்லாம் வேண்டாம்..”
“இருக்கட்டும் மேம் என்னோட திருப்திக்காக இந்த ஒரு முயற்சிய நான் பண்றேனே..” என்று விடாப்பிடியாக கூறினாள்.
தனக்காக சம்பந்தமே இல்லாமல் அதிதியே இவ்வளவு பிரயத்தனம் செய்யும் போது தான் ஒன்றுமே செய்யாமல் வெட்டியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த பவித்ரா சரி என்று தலையாட்டினாள்.
ஸ்டேஜ் 2 ஓவர்.. என்று விட்டு அடுத்து விக்ரம் வருவதற்காக காத்திருந்தாள்.
வசீகரன் சென்னை வந்து சேரும் போது இரவு 7 மணி ஆகியிருந்தது..
இப்போது அவர்களது ஆஃபீஸ் முடிந்திருக்குமே அதிதியை எப்படி பார்ப்பது என்று யோசித்தவன் எதற்கும் இருக்கட்டும் என்று விக்ரமுக்கு அழைத்தான்..
“விக்கி நான் சென்னை வந்திருக்கேன்.. இங்க உங்க ஆஃபீஸ் ஏரியாவில தான் இருக்கேன்.. உங்க ஆஃபீஸ்க்கு வரலாமா இல்லை க்ளோஸ் ஆகிடுச்சா?” என்று கேட்டான்.
“ஆறு மணிக்கே எல்லாரும் போய் இருப்பாங்கடா.. நான் கொஞ்சம் வெளிய வந்திருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்.. நீ ஆஃபீஸ்ல வெயிட் பண்ணு நான் வந்து பார்க்கறேன் “ என்றவன் திடுமென நினைவு வர
“ஹே அதிதி ஆஃபீஸ்ல இருப்பான்னு நினைக்கறேன்.. நீ வேணா ஃபோன் பண்ணிப்பாரு.. அவவேற என்கிட்ட எதோ முக்கியமான விஷயம் பேசனும்ன்னு சொன்னா.. டின்னர் டேட் லாம் அரேஞ்ச் பண்ணியிருக்கா..” என்றான் சிரித்தபடி..
“டேட்” என்ற வார்த்தையில்
வசீகரன் கண்களில் கனல் எரிந்தது..
நர நர வென்று பல்லைக் கடித்தவன்..
“இல்ல நா இன்னிக்கு வரல நாளைக்கு பார்த்துக்கறேன்..” என்றுவிட்டு போனை வைத்தவன் நேரே இன்ஃபி டெக்கிற்கு போனான்.
அவன் அங்கே சென்றபோது அதிதி ரெஸ்ட் ஏரியாவில் மசாஜ் சோஃபாவில் வசதியாக அமர்ந்து கொண்டு ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தாள்..
கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள்
வசீகரனைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் திகைத்துப்போனாள்.
அனிச்சையாக எழுந்து அவனை நோக்கி ஆவலுடன் சில அடிகள் எடுத்துவைத்தவள்..
அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைபார்த்து சற்று தயங்கினாள்..
“என்னமோ என்னைப்பார்க்காம இளைச்சிட்டேன், களைச்சிட்டேன்னு சொன்ன அப்படிலாம் ஒன்னும் தெரியலயே ‘டேட்’ போற அளவுக்கு நல்ல தெம்பாதானே இருக்க..”
என்றான் உதட்டில் ஏளன வளைவுடன்..
தான் கேட்டுவிடமாட்டோமா என்று ஒருவாரமாக ஏங்கித் தவமாய்தவமிருந்த குரலை கேட்கிறாள் ஆனால் ஏன் இப்படி தனலைக்கொட்டியது போல் எரிகிறது..?
இப்போது கூட என்னிடம் பேச வரவில்லை என்னை குற்றம்சாட்டதான் வந்திருக்கிறான்..என்று அவளது மனமும் இறுகியது
“அதை வரன் பார்க்க போனவங்க ஒன்னும் சொல்லத்தேவையில்லை…” என்றாள் கண்களில் கனல் எழ..
ஒரு கணம் கண்மூடித்திறந்தான்..
அவன் என்னவோ இவளுக்கு விளக்கம் அளிக்கத்தான் வந்தான் ஆனால் இப்போது இந்த எதிர்பாரா சூழ்நிலையில் மனமாற்றம் கொண்டு இவளுக்கு ஏன் நான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டான்..
“அது என்னோட பர்சனல் விஷயம்” என்றான் வெடுக்கென்று
‘அப்போ நிஜமாகவே பெண்பார்க்க போனானா..?’ என்று ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு
அவனை முறைத்து பார்த்து..
“இது என்னோட பர்சனல்..” என்றாள் சற்றும் பின்வாங்காமல் அதே கோபத்துடன்..
“நீயெல்லாம் மாறவே மாட்டடி.. திமிறு திமிறு உடம்பெல்லாம் திமிறு.. நான் ஒன்னு பண்ணிட்டேன்னா உடனே அதுக்கு போட்டியா நீயும் ஒன்னு பண்ணிடனும் அப்பதான் உன் கணக்கு நேர் ஆகும் அப்படித்தானே..” என்றான் கொதிப்புடன்..
‘என்ன பேசுகிறான் இவன்.. இவனுக்காக ஒருத்தி உருகி உருகி வாய்ஸ் மெசேஜெல்லாம் போட்டுவிட்டு காத்துகிட்டு இருந்தா இப்படி ஈட்டியால குத்துற மாதிரி பேசுறானே..’ என்று நினைத்தவளுக்கு ஆத்திரத்தைமீறி அழுகை வந்தது.
அவள் பதிலில்லாமல் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க
“டிங்” என்ற சத்தத்தில் உணர்ச்சி பெற்று கையிலிருந்த ஃபோனைப்பார்த்தாள்
விக்ரம் பக்கத்தில் வந்துவிட்டதாக மெசேஜ் போட்டிருந்தான்..
அவள் பேசாமல் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பவும். அதுவரை ஆக்ரோஷமாக நின்றிருந்தவன்..மனதில் குளிர் பரவியது.. அவள் விக்ரமுடன் டின்னருக்கு செல்வதை அவனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை..
சட்டென்று அவள் கையைப்பற்றியவன் “எங்க போற..?” என்றான் அவள் கையை இன்னும் அழுந்தப்பற்றி
“எனக்கு விக்ரம் சார் கூட மீட்டிங் இருக்கு..”
“வேலை விஷயமா போனாதான் அது மீட்டிங்.. சும்மா போனா அது டேட்டிங்..”
“அது கூட தெரியாத தத்தி இல்ல நானு..”
“அப்ப தெரிஞ்சிதான் போறியா.?”
“ஆமா..”
“வேணாம் அதி என்னைப் பழிவாங்கறதுக்காக நீ கீழ இறங்கி போகாத..”
“நாட் எவ்ரிதிங் ஈஸ் அபவுட் யூ வசி..எனக்கு டைம் ஆச்சி நான் கிளம்புறேன்..” என்று கையை உதறிக்கொண்டு போக முயன்றவளின் கையை விடாமல் சுண்டியிழுத்து தன் எதிரில் நிறுத்தினான்.
“போகாத..” என்றான் மீண்டும் இப்போது குரலில் கொஞ்சம் பதற்றம் தெரிந்தது..
“ஏன் போகக்கூடாது..?”
“ப்ளீஸ் போகாத..”
“அதான் ஏன்னு கேட்கறேன்..”
“என்னை லவ் பண்ணிட்டு என் அண்ணன டேட் பண்ணுவியா..?உனக்கே அசிங்கமா இல்ல..” என்று கேட்டான் சூடாக..
“எக்ஸ்கியூஸ்மீ.. நான் என்ன பண்ணனும்னு எனக்கு நீங்க சொல்லாதீங்க..”
“நாட் அகேன் அதிதி..ஐயம் நாட் ரெடி ஃபார் திஸ் ரைட் நவ்.. என்னை பழிவாங்கனும்ன்னா வேற எதாவது பண்ணு நாட் திஸ் ப்ளீஸ்..”
“நான் உங்கள லவ் பண்றேன்னு நெனைச்சி இப்படிலாம் பேசிட்டு இருக்கீங்களா..அந்த மாயைல இருந்து வெளிய வாங்க மிஸ்டர் வசீகரன்..” என்று வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றவே பேசினாள்..
“அம்மா தாயே…அது நீயில்ல நான்தான்.. நான் தான் உன்ன லவ் பண்றேன் போதுமா..? உனக்கு முன்னாடி இருந்தே.. நீ என்ன பார்க்கறதுக்கு முன்னாடியே.. நான் உன்ன பார்த்த நிமிஷத்துல இருந்தே உன்னதான் உன்னை மட்டும்தான் லவ் பண்றேன் போதுமா..?” என்று கோபத்தில் வார்த்தைகளை கொட்டியவன் கொஞ்சம் நிதானித்து..
“ஐ லவ் யூ கிட்டி.. ட்ரூலி.. டீப்லீ..மேட்லீ இன் லவ் வித் யூ..” என்று அவள் கண்களைப்பார்த்து தன் இதயத்தைத் திறந்து காட்டினான்.
அதிதியின் இதயம் தன்கூட்டிலிருந்து வெளியே வந்துவிடுமோ என்னுமளவிற்கு படபட வென்று வேகமாகத் துடித்தது..
தன் மனதின் போராட்டங்களை எல்லாம் கடந்து தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் கொட்டிவிட்டு இனி மறைப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை என்பது போல் அவளிடம் சரணடைந்து நின்றவனிடம்
“நா போகனும்..” என்று வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு ஓடிப்போனாள் அவள்.
தன்னை உதறிவிட்டுப் போபவளைக் கண்ணில் வலியுடன் பார்த்திருந்தான் வசீகரன்.
error: Content is protected !!