Skip to content
Post Views: 1,469
ஊரில் இருந்த அந்த ஒரு வாரமும் வசுமதிக்கு மறக்க முடியாத நாட்களாக அப்படியே மனதில் தங்கி விட்டிருந்தன. முழுமையடையாத காதல் கதைகளின் கதைமாந்தர்களை அங்கே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அவளுக்கு இனம்புரியாத ஒரு பரவசத்தைத் தந்தது. இருந்தாலும் மரியாவிடம் பேசிப் பழக வாய்ப்புக் கிடைக்காதது ஒரு வருத்தம்தான். இவ்வளவு முரடன் என்று பேர் வாங்கிய துரைப்பாண்டி, தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைக் கட்டிக்கத் தைரியமில்லாதவனாக இருப்பது வியப்பாகத்தான் இருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்தக் காதல் நதியில் மரியா கரை ஒதுங்கிவிடக்கூடாது என்ற பதைபதைப்பு அவளுக்குள் எழுந்தது. மரியாவின் விஷயத்தை அப்பாவிடம் சொல்லி, துரைப்பாண்டியின் அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் வசுமதி.
***
“அன்னைக்கு பொண்ணு கேட்டாங்களே, உங்க மச்சானுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” என்ற மலரை கேள்விக்குறியோடு பார்த்தார் சரவணன்.
“நீ என்ன சொல்றே?”
Advertisement
“எனக்கு என்னவோ இது சரியா இருக்கும்னுதான் தோணுது.” என்றாள் மலர்.
“அதெல்லாம் சரிப்படாது!” என்று பட்டும் படாமல் கூறிவிட்டு நியூஸ் பேப்பரில் ஆழ்ந்தார் சரவணன்.
“ஏன் இப்படி சொல்றீங்க.. நம்ம பொண்ணால ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்தா நல்லதுதானே?”
Advertisement
“இப்ப மட்டும் என்ன குடும்பம் சிதறியா கிடக்கு.. ஒண்ணாத்தானே இருக்கோம்?”
Advertisement
நாம சேர்ந்துட்டோம். ரமணி அவங்க குடும்பமும் சேரணுமில்லையா?”
“அது அவங்களோட பிரச்சினைப்பா.. அதுக்காக நம்ம பிள்ளையைப் பலி கொடுக்க முடியாது.”
“பலின்னு எதுக்குச் சொல்லணும். உங்க அக்கா மகன்தானே.. அந்தப் பெரியவருக்காக இல்லாட்டாலும் உங்க அக்காவுக்காகவாது அவனை நீங்கதானே ஆதரிக்கணும்?”
Advertisement
“இங்க பாரு மலர்.. அவனை ஆதரிக்கிறது வேற, அவனுக்குப் பொண்ணு கொடுக்கிறது வேற. அவங்க அப்பா கண்டுக்கலைன்னாலும் நானே அவனுக்கு ஏத்த நல்ல பொண்ணா பாத்து என் செலவிலேயே கல்யாணம் பண்ணி கொடுக்கத் தயார். அதை விட்டுட்டு, என் பொண்ண கொடுக்கணும்னா.. அதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன்.”
அதற்கு மேல் சரவணனிடம் பேசமுடியாது. இருந்தாலும் மலருக்கு இந்த சம்பந்தம் அமைய வேண்டும்போல் தோன்றியது. அது எப்படியாவது நடந்துவிட வேண்டுமென்று மனதுக்குள் வேண்டிக்கொண்டாள்.
சரியாக ஒரு வாரம் கழித்து மாரிமுத்துவும் பிச்சை வாத்தியாரும் சரவணனின் வீட்டுக்கே வந்து விட்டார்கள். அவர்களை வரவேற்று ஹாலில் அமர வைத்தார் சரவணன். மலரும் வந்தவர்களை வரவேற்றுவிட்டு சமையலறைக்குள் போனாள்.
“என்ன சரவணா ஆளு பேச்சையே காணோம் நீ போன் போடுவேன்னு எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன்.” என்றார் மாரிமுத்து.
“அதான் சொன்னேனே அண்ணாச்சி சரி வராதுன்னு..” என்றபடி ஆரம்பித்த சரவணன், நேரடியாக தனது மச்சான் பிச்சை வாத்தியாரிடமே பேச ஆரம்பித்தார்.
“பாருங்க மச்சான் துரைப்பாண்டி நல்லவன்தான் நான் இல்லைன்னு சொல்லல. அதுக்காக என் பொண்ணை கொடுக்க முடியாது.”
“என்னப்பா இப்படி சொல்ற.. உன் மக வசதியா வாழ்ந்தா உனக்கு கௌரவம்தானே?” என்றார் மாரிமுத்து
“எப்பவோ நான் செய்த தப்புதான்.. இப்ப என்னைத் திருப்பித் தாக்குதுன்னு நெனைக்கிறேன்.” விட்டத்தை பார்த்தபடி அமைதியாகச் சொன்னார் பிச்சை வாத்தியார்.
“இல்ல மச்சான்.. பழசையெல்லாம் இப்பப் பேசணும்னு அவசியமில்லை.. நீங்க செய்த தப்பையே நானும் செய்துடக்கூடாதுன்னுதான் இப்படிச் சொல்றேன்.”
பிச்சை வாத்தியார் புரியாமல் பார்த்தார்.
“எனக்குக் கௌரவம் முக்கியமில்லை. அது உங்களுக்குத்தான் எப்பவும் முக்கியமா இருக்கும். அதேபோல என் மக வசதியா, செல்வச் செழிப்போட எந்தக் குறையுமில்லாம இருக்கணும்கிறதைவிடவும் அவ சந்தோசமா, நிம்மதியான வாழ்க்கை வாழணும்கிறதுதான் எனக்கு முக்கியம்.”
“இல்ல மாப்ள.. நீ பேசுறது கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா ஒரு பொறுப்பான தகப்பனா யோசிச்சிப் பாரு. பிறவு நாளைக்கு அடடா அப்படிப் பண்னாம விட்டுட்டமேன்னு வருத்தப் படக்கூடாதுல்ல.”
“சரி,, நான் இப்படிச் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க.. நீங்க உங்க கௌரவுத்துக்கு ஏத்த மாதிரி, ஒரு பொறுப்பான அண்ணனா முடிவெடுத்த மாதிரி என்னால முடிவெடுக்க முடியாது. எனக்கு என்னோட மக விருப்பம்தான் முக்கியம்.”
சரவணனின் பேச்சில் ஒரு கணம் விக்கித்து நின்றார் வாத்தியார்.
எல்லாருக்கும் காபி கலந்து எடுத்து வந்தாள் மலர். ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு அவளும் பேச்சில் சேர்ந்து கொண்டாள்.
“இதுல அவகிட்ட கேக்குறதுக்கு என்னங்க இருக்கு.. அவ சின்ன பொண்ணுங்க. நல்லது கெட்டது பற்றி அவளுக்கு என்ன தெரியும்..அவளுக்கு எது நல்லதுன்னு நாமதானே முடிவு எடுக்கணும்?” என்றாள் மலர்.
சரவணன் அமைதியாக மனைவியைப் பார்த்தார். மறுபடியும் பிச்சை வாத்தியாரைப் பார்த்தார்.
“சரி மச்சான், உங்க தங்கச்சி ரமணிக்கு எது நல்லதுன்னு நல்லா யோசிச்சிப் பார்த்து நீங்கதானே முடிவு எடுத்தீங்க.. நீங்க நினைச்ச மாதிரியே அவளும் இப்ப கௌரவமா நல்லா வசதியாத்தானே இருக்கா.. நீங்க சந்தோஷமா நிம்மதியா இருக்கீங்களா? ஒரு தாய்மாமனா அவளோட பிள்ளைகளைத் தூக்கிக் கொஞ்சியிருப்பீங்களா?”
சரவணனின் கேள்வி வாத்தியாரின் இதயத்தில் சாட்டையால் விளாசியது போல் இருந்தது.
இப்போது மலரிடம் திரும்பினார் சரவணன். “என் மகளுக்கு நல்லது கெட்டது தெரியாதுன்னா, அப்ப நீங்க எல்லாரும் சேர்ந்து நல்ல முடிவு எடுத்துக்கோங்க என்ன விட்டுடுங்க.”
சரவணனின் இந்த வார்த்தை மலருக்குப் பெரும் வேதனையைத் தந்தது.
“என்னப்பா சரவணா, அன்னைக்கு வாத்தியார் செய்த மாதிரி இப்போ நீ தான் அடம் பிடிக்கிற மாதிரி இருக்கு.”
மத்தியஸ்தம் செய்வதுபோலப் பேசினார் மாரிமுத்து.
“பாருங்க அண்ணாச்சி நான் அடம் பிடிக்கல. அதுவும் இதுவும் ஒண்ணு கிடையாது. அப்ப அவரா முடிவு எடுத்தாரு. இங்க நான் மட்டும் முடிவெடுக்க முடியாது, என் பொண்ணுக்கும் இதுல விருப்பம் இருக்கணும்னு சொல்றேன்.”
எழுந்து தன் அறைக்குள் போய்விட்டார் சரவணன்.
***
அந்த மதியவேளை சோம்பலாக நகர்ந்து கொண்டிருந்தது. வசுமதியை தேடி யாரோ வந்திருப்பதாகவும் ரிசப்ஷனில் உட்கார்ந்திருப்பதாகவும் சொல்லிவிட்டுப் போனார் பியூன். கீழே வந்த வசுமதிக்கு ஆச்சரியம். மதன் வந்திருந்தான்.
“ஹாய் மதன் எப்படி இருக்கீங்க வேலையெல்லாம் எப்படி போகுது?” என்றாள் புன்னகையுடன்.
“சூப்பரா போகுது. என்னங்க நீங்க பேசவே முடியல.. ஊருக்கு போய்ட்டு வந்துட்டீங்களா, ஊர் எல்லாம் எப்படி இருக்கு?”
“ஊர்லேர்ந்து வந்து ஒரு வாரம் ஆச்சு. எப்படி இருக்கு உங்க வேலை. அதைச் சொல்லுங்க முதல்ல.”
“அருமையான வேலை. ஜாலியா இருக்கு. மனசளவுல ரொம்ப ரிலாக்ஸ் ஆயிட்டேன். உங்களை நேரில் பார்த்து நன்றி சொல்லணும்தான் துடிச்சிட்டு இருந்தேன்.”
“அட இதுக்கெல்லாம் என்னங்க பெரிய நன்றி.. ட்ரீட்டு எப்ப வைக்கப் போறீங்க? அத சொல்லுங்க.” “கண்டிப்பா.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கேட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. முக்கியமான ஆளு நீங்க வந்ததும்தான்னு சொல்லி வச்சிருக்கேன் என்று விட்டு சிரித்தான் மதன்.
இருவரும் கேண்டின் போய் காபி சாப்பிட்டார்கள் சந்தோஷமாக இருந்தது. மதனை அனுப்பி விட்டு சீட்டுக்கு வந்த போது பக்கத்து சீட்டு சாந்தி குறுகுறுவெனப் பார்த்தாள்.
“யாருப்பா அது லவ்ஸா?”
“உனக்கு யாரப் பார்த்தாலும் அப்படித்தானே தோணும். அது என் ஃப்ரெண்ட் வெறும் ஃப்ரெண்ட்.. அவ்வளவுதான்.” என்றாள் வசுமதி.
***
error: Content is protected !!