Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 16

“கூல் கூல்மா.. எதையும் மறைக்கவோ யாருக்கும் பயப்படவோ தேவையே இல்லை. உன் வாழ்க்கையை நீ வாழ போற. சரியா.. என்ன உதவின்னாலும் என்கிட்ட தயங்காம கேளு.” என்று சீரியஸாக அட்வைஸ் கொடுத்தாள் சாந்தி.

 சாந்திக்கு வயசு இருபத்தியெட்டு. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. கல்யாணத்தில் அவளுக்கு நம்பிக்கையும் இல்லை. சொந்த ஊர் நாகர்கோவில். அப்பா அம்மா கல்யாண பேச்சை எடுக்கும் போதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டு, இங்கே ஒரு பிகாரி இளைஞனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாள். யாருக்கும் பயப்படாத அவளுடைய தைரியத்தைப் பார்க்கும்போது வசுமதிக்கு வியப்பாக இருக்கும்.
“ஒருவேளை நான் யாரையாவது காதலிச்சா.. அதுல ஏதும் பிரச்சனை வந்தா கண்டிப்பா உதவி கேட்டு உன்கிட்டதான் வருவேன். அதுவரைக்கும் அமைதியா இரு சாந்தியக்கா.” என்று சொல்லிவிட்டு சிரித்தபடியே கிளம்பினாள் வசுமதி.

***
சரவணன் விட்டுக்குள் நுழையும்போது அவருக்காக காத்திருந்தது போல் பேச வந்தாள்.
“அப்பா உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். துரைப்பாண்டி அத்தானை பத்தி.”
“என்னாச்சு.. அவன உனக்கு புடிச்சிருக்கா?” என்று கேட்டபடியே சமையலறையில் இருந்து வந்தாள் மலர்.
“எனக்கு புடிச்சிருக்காவா.. என்ன உளறுறீங்க?” என்றாள் வசுமதி.
முகம் கழுவிட்டு அவள் அருகில் வந்து உட்கார்ந்தார் சரவணன்.
“சரி நீ சொல்ல வந்ததைச் சொல்லு.” என்றார் மகளைப் பார்த்து.
“ஊர்ல மாமா வீட்ல சமையல் செய்றாங்கல்ல எஸ்தர்னு.. அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு பேர் மரியா. அந்தப் பொண்ணத்தான் அத்தான் லவ் பண்ணினார் போல.”
“உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள் மலர்.
“நான் ஊர்ல பார்த்ததை வச்சு சொல்றேன். எனக்கு அப்படித்தான் தோணுது.”
“சும்மா எதையாவது கற்பனை பண்ணிட்டு இருக்காத. அவங்க உன்ன துரைப்பாண்டிக்கு பெண் கேக்குறாங்க.”
அம்மா பேசிய அந்த கடைசி வார்த்தையில் உண்மையிலேயே அதிர்ந்து போனாள் வசுமதி.
போனை நோண்டிக்கொண்டிருந்த பிரபு நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான். “நெனைச்சேன்.. ஊர்ல வெச்சி அத்தானோட கவனிப்பு ரொம்ப ஓவராத்தான் இருந்துச்சி.”
“பெரியவங்க பேசும்போது நீ என்ன குறுக்கே? உள்ள போ.” என்று அவனை விரட்டினாள் மலர்.
“என்னப்பா சொல்றாங்க.. எல்லாரும் ஒத்துக்கிட்டீங்களா?” தன் அப்பாவைப் பார்த்துக் கேட்டாள் வசுமதி.
சரவணன் பேசாமல் அமைதியாக இருக்க, மலர்தான் பேசினாள்.
“இது நம்ம குடும்பத்துக்கு நல்ல சம்பந்தம்தான். ஆனா உங்க அப்பாவுக்கு இதுல இஷ்டம் இல்லை. அதுக்காக எதிர்க்கவும் இல்லை. உனக்குப் பிடிச்சா சரிதான்னு சொல்லிட்டாரு. இப்ப நீ சொல்றதுலதான் இருக்கு வசு!”
“இன்னைக்கு ஊர்ல இருந்து அந்த மாமாவும் மாரிமுத்து அவரும் வந்திருந்தாங்க. இதைப்பற்றித்தான் பேசினோம். எல்லாம் உன் நல்லதுக்குத்தான். நீ ஓகேன்னு சொல்லிட்டாப் போதும். அப்பாவும் ஒத்துக்குவாங்க.”
“ஏன் நல்லதுக்காகத்தான் சொல்றேன், என்னால இதுக்கு ஓகே சொல்ல முடியாது.”
“என்ன சொல்ற வசு, பெரியவங்க நாங்க உன் நல்லதுக்காகத்தானே சொல்றோம்?”
“சும்மா இருங்கம்மா.. பெரியவங்க நீங்க சொல்லுவீங்க, வாழப் போறது நான்தானே… எனக்கு எது நல்லதுன்னு எனக்குத் தெரியும்!”
என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்று விட்டாள் வசுமதி. பரிதாபமாக நின்ற மலரைப் பார்த்து தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார் சரவணன்.
கம்ப்யூட்டரைப் போட்டாள். அது ஆன் ஆகவில்லை. அம்மா மீது இருந்த கோபத்தோடு சிபியுவை ஒரு தட்டு தட்டினாள். சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள் மலர். என்ன ஆச்சு? ஒண்ணும் ஆகலை. நீங்க போங்க, நான் பார்த்துகுறேன். ‘இன்னைக்கு இந்தக் கம்ப்யூட்டரை ஒடைக்கப்போறேன்.’ கோபத்தில் மூளை வேலை செய்யவில்லை. பலம் கொண்ட மட்டும் ரீஸ்டார்ட் பட்டனில் குத்தினாள். அப்போதும் ஆன் ஆகவில்லை. இப்ப என்ன பண்றது. ஆபீஸில் சிஸ்டம் எஞ்ஜினீயர்கள் செய்வது நினைவுக்கு வந்தது. பாக்ஸைக் கழற்றி, மெமரி கார்டை துடைச்சிப் போடணும். ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்து சிபியுவைத் திறந்தாள். சரவணன் மாடிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்.
அவருக்குத் தனிமை தேவைப்படும்போதெல்லாம் மொட்டைமாடியில் போய் நின்று கொள்வது வழக்கம். அங்கிருந்து ரோட்டையும். பின்னால் இருக்கும் தோட்டத்தையும் பார்த்துக்கொண்டிருப்பார்.
‘அடடா இதைக் கிளீன் பண்றதுக்கு எரேசர் வேணுமே’ எரேசரைத் தேடி அப்பாவின் அறைக்குப் போனாள்.
‘பிசியை ஆன் பண்றதுக்குள்ள எத்தனை வேலை பார்க்க வேண்டியிருக்கு..’ டேபிளில் எரேசரைக் காணவில்லை. பேனாக்களும் பென்சிலுமாக நிறைந்திருந்த கப்பிலும் இல்லை. ‘தேவையில்லாதப்ப, புது ரப்பரா கண்ல மாட்டும்.’
அலுத்துக் கொண்டாள். டேபிள் டிராவை இழுத்தாள். மேலோட்டமாக வைக்கப்பட்டிருந்த சில பேப்பர்கள் கீழே விழுந்தன. அவற்றை எடுத்துப் பார்த்தாள். ஏஎதோ ஜாதகக் குறிப்பு போல் இருந்தது. எரேசரைத் தேடும் வேலை கொஞ்சம் தாமதமானது. திரும்ப அவற்றை அடுக்கி வைக்கும்போது ஏற்பட்ட எண்ணம் சுவாரஸ்யமாக இருந்தது. எரேசரும் கிடைத்துவிட்டது.
****
மறுநாள் அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. தான் நினைப்பது சரியா என்று தன்னையே பலமுறை கேட்டுக் கொண்டாள் வசுமதி. இருந்தாலும் அவளுக்கு வேறு வழி இல்லை. அம்மாவை நினைத்தால் கோபம் கோபமாக வந்தது. தான் எப்படியும் துரைப்பாண்டியுடனான திருமணத்துக்குச் சம்மதிக்க வேண்டும் என்பதே அம்மாவின் முடிவு. அதை இரண்டு நாட்களில் சொல்லிவிடு என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள். அப்பாவைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“இது உன் வாழ்க்கை. நீதான் முடிவு எடுக்கணும். நல்ல முடிவா எடு. உன்னோட மனப்பூர்வமான எந்த முடிவுக்கும் என்னோட ஆசிர்வாதம் கண்டிப்பாக உண்டு.” என்று சொன்ன அப்பாவை நினைத்தால் பெருமையாகத்தான் இருந்தது.
“என்ன வசு? சிந்தனை பலமா இருக்கு. ஏதும் பிரச்சினையா?” என்று கேட்டாள் சாந்தி.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல..”
“இல்ல ஏதோ இருக்கு. எதுவா இருந்தாலும் சொல்லு. சரி பண்ணிடலாம். என்ன.. பிரேக்கப்பா?”
வசுமதி சோகமாகச் சிரித்தாள்.
“சரி வா, ஒரு காபியைப் போடலாம்.” என்றபடி அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி கேன்ட்டீனுக்கு அழைத்துப் போனாள் சாந்தி.
அப்போதைய மனநிலைக்கு காபி குடிப்பது, வசுமதிக்கும் தேவையாகத்தான் இருந்தது.
சாந்தியைத் தவிர்க்க முடியவில்லை. தனது பிரச்சினையை அவளிடம் மேலோட்டமாகச் சொன்னாள்.
“இதென்ன அநியாயமா இருக்கு? நீ ஒத்துக்காதே. இதுக்குத்தான் யாரையாவது லவ் பண்ணியிருக்கணும். இப்பப் புரியுதா?”
“சாந்திக்கா… இப்ப லவ் பண்றதுக்கெல்லாம் நேரமில்ல. ஸ்ரெயிட்டா கல்யாணம்தான்?”
“காமெடி..?அப்ப, எவனையாவது கூட்டிட்டு வா. நானே ஒனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அவ்ளோதான் பிராப்ளம் சால்வ்டு.” என்று சிரித்தாள் சாந்தி.
****
சங்கருக்கு தலையை வலித்தது சாய்ந்து அமர வேண்டும்போல் இருந்தது. ஒரு டூவீலருக்கு காற்றடைத்துக் கொண்டிருந்த குட்டியிடம் டீ வாங்கி வரச் சொல்லிவிட்டு எழுந்தான். மெக்கானிக் செட்டின் மேல்புறத்தில் தகரக் கூரையுடன் கூடிய ஒரு சிறு தங்கும் அறை இருந்தது. அங்கு செல்வதற்கு இரும்புச் சட்டங்களால் ஆன படிக்கட்டு, செட்டின் வலப்புற சந்தில் இருந்தது. மெதுவாக அதில் ஏறிச்சென்ற சங்கர், அறையில் இருந்த சிறு கட்டிலில் அமர்ந்து ஃபேனைப் போட்டான். இப்போதெல்லாம் மதனை அதிகம் பார்க்க முடிவதில்லை. வேலை கிடைத்த பின் வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வந்து சங்கரை பார்த்து விட்டுப் போவான். மித்ராவும் அதிகம் வருவதில்லை. மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை வந்து ஹாய் சொல்லிவிட்டுப் போவதோடு சரி. சென்ற முறை வந்தபோது புதிதாக இ பைக் வாங்கி இருப்பதைக் காட்டி, ஸ்வீட் பாக்ஸ் கொடுத்துவிட்டுப் போனாள். அவளை நினைக்கும் போது இன்னும் தலைவலி அதிகமாவது போல் தோன்றியது.
கண்களை மூடிக்கொண்டான். செல்போன் சிணுங்கியது. அதை எடுக்கக்கூட மனம் வரவில்லை. எடுத்துப் பார்த்தான். ஏதோ புது நம்பர் போல் இருந்தது. வேண்டா வெறுப்பாய் அட்டென்ட் பண்ண, எதிர் முனையில் ஒரு பெண் பேசினாள்.
“நீங்க மெக்கானிக் சங்கர்தானே?”
“ஆமா நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?”
சில நொடி மௌனத்திற்குப் பின் பேசினாள் அந்தப் பெண்.
“ஒண்ணுமில்ல.. எனக்கு செகண்ட் ஹாண்ட் டூ வீலர் ஒண்ணு வாங்கணும். ஒரு ஃப்ரெண்டுதான் உங்க நம்பர் கொடுத்தாங்க. நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா?”
“எவ்வளவு உங்க பட்ஜெட்?” நெற்றியைத் தேய்த்துக் கொண்டே கேட்டான்.
“அது.. அதை நாம நேர்ல பேசிக்கலாமே.
“சரி, எப்ப வேணாலும் வாங்க பேசிக்கலாம். வச்சிடவா?”
“ஹ.. ஹலோ! உங்க கடை அட்ரஸ் எனக்குத் தெரியாது. அதை மட்டும் எனக்கு டெக்ஸ்ட் பண்றீங்களா ப்ளீஸ்.. நான் வந்துடறேன். நாளைக்கு “காலைல வரவா?” அவள் கெஞ்சுவது போல பேசியது இவனுக்கு எரிச்சலாக இருந்தது.
“எப்ப வேணா வாங்க.” என்றுவிட்டு போனைத் துண்டித்தான்.
“ஒடம்புக்கு முடியலையாண்ணா?” என்றபடி டீயோடு வந்தான் குட்டி.
“அதெல்லாம் இல்லடா. இந்தா நீயும் டீ சாப்பிட்டுக்க.” என்றபடி அதற்கும் சேர்த்துப் பணம் கொடுத்து அவனை அனுப்பிவிட்டு, டீயை எடுத்துக் குடித்தான் சங்கர். கொஞ்சம் இதமாக இருந்தது. மறக்காமல் அந்த நம்பருக்கு அட்ரஸை அனுப்பிவிட்டு மறுபடியும் மித்ராவைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். அவளுக்காகத் தன் இதயக் கதவைத் திறந்து வைத்தபடி காத்திருக்க ஆரம்பித்தான்.
———–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!