Skip to content
Post Views: 1,538
அதற்குப் பிறகு இரண்டு மூன்று முறை மலரிடம் பேசிவிட்டான் துரைப்பாண்டி.
“என்னப்பா செய்றது.. அவ இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்றா. படிக்கப் போறாளாம். என்ன பண்றது?”
“இல்ல அத்தை பேசிக்கிடலாம். அப்பா நேர்ல போய் பேசலாம்னு சொன்னாரு. நாங்க இந்த சனிக்கிழமை அங்க வர்றோம் அப்ப பேசிக்கலாம். அவள ரொம்ப ஃபோர்ஸ் பண்ண வேண்டாம்.” என்றான் துரைப்பாண்டி.
“சரிப்பா நீங்க வாங்க. நான் மாமாகிட்ட சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் மலர். பிரபு ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருந்தான். ஒரு மீட்டிங் இருப்பதாக சொல்லி அன்று வசுமதி காலையில் சீக்கிரமே கிளம்பி சென்று விட்டாள். ஊரிலிருந்து துரைப்பாண்டியும் அவனது அப்பாவும் வரும் விஷயத்தை மலர் யாரிடமும் சொல்லவில்லை. வரும்போது பேசிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள்.
**
அன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது சிறிதாக மழைத்துளிகள் விழுந்து கொண்டே இருந்தன. இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று செய்தியில் சொல்லியிருந்தார்கள். அன்று சரவணன், பஜாரில் இருந்து சீக்கிரமே வீட்டுக்குத் திரும்பிவிட்டார். வாசலின் அருகே மலர் அமர்ந்திருந்தாள். அவளுக்கு எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்த சரவணன், ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அன்று வசுமதி பேசியதிலிருந்து தாயும் மகளும் இரண்டு நாட்கள் சரியாக முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை. எல்லாம் தானே சரியாகிவிடும் என்று தோன்றினாலும் மனதுக்குள் ஒரு வருத்தம் இருந்து கொண்டுதான் இருந்தது. மகளுக்குப் பாதிக்காத வகையில் துரைப்பாண்டி விசயத்தை எப்படிக் கையாள்வது என்பதில் அவரால் எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை. அதே நேரத்தில் மிகவும் தெளிவாகப் பேசிய மகளை எண்ணி வியந்தார். வயிற்றில் தவழ்ந்து தாடியை கலைத்த அந்தச் சிறு குழந்தை, இன்று இவ்வளவு பெரிய மனுஷியா மாறிவிட்டாள் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாகத்தான் இருந்தது.
வசுமதி மாடியில் நின்றுகொன்டு இருந்தாள். மழை வரும்போல் இருந்தது. இப்போதெல்லாம் அவர்கள் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பேசுவது குறைந்துவிட்டது. அப்படியே பேசினாலும் அதில் வசுமதி கலந்து கொள்வதில்லை. அம்மாவுக்கும் அவளுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு திரை விழுந்தாற்போல் இருந்தது. சங்கரிடம் பேச வேண்டும்போல் இருந்தது. அவனுடனான அந்த இரண்டு சந்திப்புகளிலும் ரொம்பவும் ஜெண்டிலாகவே நடந்து கொண்டான். அப்படிப்பட்டவனிடம் அந்த ஞாயிற்றுக்கிழமை, தான் அப்படிப் பேசியிருக்கக்கூடாதோ என்று தோன்றியது. “வந்து என்னைப் பொண்ணு கேக்கப் போறாரா என்ன?” என்ற கேள்வியில் சங்கரும் மதனும் நிலைகுலைந்ததை எண்ணி, அவளுக்கு இப்போது சிரிப்பு வந்தது. அப்போது அங்கு பிரபு வந்தான்.
“என்னடா படிச்சி முடிச்சிட்டியா?”
“அக்கா உனக்குத் தெரியுமா? இந்த சனிக்கிழமை ஊர்ல இருந்து அந்த மாமாவும் அத்தானும் வராங்களாம்.” வசுமதிக்கு திக்-கென்று இருந்தது.
“உனக்கு எப்படிடா தெரியும்?”
“நான் கிளம்பும்போது, அம்மா போன்ல பேசிட்டு இருந்தாங்க. அதனால் தெரியும்.”என்றான்.
வசுமதிக்கு இது பிடிக்கவில்லை. அம்மா இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட தன்னிடம் சொல்லாமல் இருந்தது அவளுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. இந்த வாரத்தில் மட்டும் சனி ஞாயிறு வராமலிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. வரப்போகும் விருந்தினரைப் பார்க்க அவளுக்கு விருப்பமில்லை.
அந்த வியாழக்கிழமை இரவு, வசுமதி தனது திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தாள்.
“அப்பா நான் நாளைக்கு பெங்களூர் போறேன்.”
“என்னம்மா விஷயம்?”
“ஞாயிற்றுக்கிழமை ஃப்ரண்டு ஒருத்திக்கு கல்யாணம். சனிக்கிழமையே அங்கே போயிடுவோம்.”
மலர் பரபரவென்று வந்தாள். “இது என்ன கதை.. அப்ப, சனிக்கிழமை நீ வீட்ல இருக்க மாட்டியா?”
“அன்னைக்கு பெங்களூர்ல ரிசப்ஷன்மா… மறுநாள் காலையில கல்யாணம். எப்படி போகாம இருக்கிறது?”
“எனக்கென்னமோ இது சரியா படல.” என்றாள் மலர்.
மனைவியை விசித்திரமாக பார்த்தார் சரவணன்.
“நீ என்ன இப்ப வரவர எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகுற? இது உடம்புக்கு நல்லது இல்ல!”
“இல்ல இந்த சனிக்கிழமை உங்க மச்சானும் மச்சான் மகனும் ஊர்ல இருந்து வர்றாங்களாம். சொல்லி இருந்தாங்க.”
“இது எப்ப நடந்தது? என்கிட்ட சொல்லவே இல்ல.” சிரித்தார் சரவணன்.
“ரெண்டு நாள் முன்னாடி துரைப்பாண்டி பேசுனான். அப்பா நேர்ல பேசனும்னாங்க. ரெண்டு பேரும் வர்றோம்னு சொன்னான். நான் என்ன சொல்ல? வேலையில உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்”
“சரி விடு.. நாமளே பேசிக்க வேண்டியதுதான், இப்ப என்ன பொண்ணா பாக்க வர்றாங்க..” என்றபடி வசுமதியைப் பார்த்து சிரித்தார் சரவணன்.
“இத பாரும்மா, கவனமா போயிட்டு கவனமாக வரணும். அக்கவுண்ட்ல காசு இருக்கா?”
“எல்லாம் இருக்குப்பா. நான் தேவைனா கேக்குறேன்.” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போய்விட்டாள் வசுமதி.
****
வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டாள். ஆறு மணிக்கு சாந்தி வீட்டுக்குப் போய், அங்கிருந்து நண்பர்களோடு பெங்களூருக்குக் காரில் போவதாக ஏற்பாடு. இரண்டு நாட்களுக்குத் தேவையான உடைகளை பேக்கில் எடுத்து வைத்துக்கொண்டாள். அம்மாவிடம் சொல்லிவிட்டு டாக்சி புக் பண்ண போனை எடுத்தாள்.
“மழை வர்றா மாதிரி இருக்கு, பார்த்துக் கவனமாப் போயிட்டு வா.” என்றாள் மலர். மகள் இப்படிப் பட்டும் படாமலும் இருப்பது அவளுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது.
மணி ஆறை நெருங்கியது. மழை சிறிது சிறிதாக வேகம் எடுக்கத் தொடங்கியது. சங்கரும் குட்டியும் வெளியே உள்ள பொருட்களை கடைக்குள் எடுத்து வைக்கும் வேலையில் தீவிரமாக இருந்தனர்.
“குட்டி நீ வீட்டுக்கு போ நான் பாத்துக்குறேன்”என்றான் சங்கர்.
“இல்லண்ணா, கடையை அடைச்சிட்டுப் போறேன்.”என்று பொறுப்புடன் சொன்னான் குட்டி.
“மழை போகப் போக பெருசாகுதுடா. நீ போ, நான் பாத்துக்குறேன்.” என்று குட்டியை அனுப்பி வைத்துவிட்டு தனியாக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். மழை வலுக்கத் தொடங்கியபோது கடைக்கு எதிரே ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து கையில் ஒரு ட்ராவல் பேக்குடன் வசுமதி இறங்கினாள்.சங்கர் திகைத்துப்போய் நின்றான். மழையில் நனைந்தபடியே சில வினாடிகள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏங்க, கடைக்கு வந்தவங்கள வாங்கன்னு சொல்ல மாட்டீங்களா?” மெதுவாக கேட்டாள் வசுமதி.
“உ..உள்ள வாங்க” என்று தயக்கத்தோடு சொன்ன சங்கர், கலைந்து கிடந்த டூல்ஸையும் சில பழைய டயர்களையும் ஓரமாகத் தள்ளி, அவள் வசதியாக நிற்பதற்கு இடம் தந்தான். பின் மறுபடியும் வெளியே கிடந்த பொருட்களை எடுத்து உள்ளே வைக்கத் தொடங்கினான். பத்துக்குப் பனிரெண்டு அடி இருக்கும் அந்தச் சிறு கடையின் சுவரோரத்தில், பின் சக்கரம் இல்லாத ஒரு பைக்கும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. மர ஸ்டூலைக் காட்டி அவளை உட்காரச் சொன்னான். எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, தானும் வந்து நின்றுகொண்டான்.
வசுமதி மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு குளிரில் நடுங்கியபடி இருந்தாள்.
“என்ன இந்த நேரம்.. என்னைப் பார்க்கவா வந்தீங்க?”
“ஏன் வரக்கூடாதா?” என்று மெல்ல சிரித்தபடிக் கேட்டாள்.
“அதுக்கில்ல.. இருட்டினபிறகு வந்திருக்கீங்களே.. என்னாச்சு? ஏதும் பிரச்சினையா?”
தலையைக் குனிந்து கொண்டு அமைதியாக இருந்தாள்.
“நாளைக்கு வீட்டுக்கு கெஸ்ட் வராங்க.” மெதுவாக சொன்னாள்.
“ஓ!”
மீண்டும் சில வினாடிகள் மௌனம்.”நான் சொன்னேனே, எனக்குப் பிடிக்காத சம்பந்தம்… கட்டாயக் கல்யானம்னு. அதுக்கு என்னைச் சம்மதிக்க வைக்கிறதுக்காக வர்றாங்க.”சங்கர் எதுவும் சொல்லாமல் அவளை பார்த்தபடியே நின்றான்.
அறையின் மூலையில் ஒன்றன்மீது ஒன்றாக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஸ்டூலைக் காட்டினாள் வசுமதி.“உட்காருங்களேன் ப்ளீஸ்.”கட்டளைக்குக் கட்டுப்பட்டது போல உடனே உட்கார்ந்தான் சங்கர்.
“எனக்கு அவங்களப் பார்க்கப் பிடிக்கல. அதான்…”
“அதுக்கு?” அவனது கேள்வியில் ஒரு பீதி ஒட்டிக் கொண்டது.”
“ஃப்ரெண்டு கல்யாணத்துக்கு பெங்களூர் போறேன்னு சொல்லிட்டு இங்க வந்துட்டேன்.” என்று அவள் தயக்கத்துடன் மெதுவாகச் சொல்லி முடித்தபோது சங்கர் எழுந்துவிட்டான். அவள் எந்தச் சலனமும் இல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளது பளிங்கு முகத்தில், தாடையின் கீழிருந்த மச்சம் வேறு அவனை ஒரு பார்வை பார்த்தது. இப்போது தான் என்ன செய்வது? கோபப் படுவதா..இல்லை அவளுக்குப் புத்திமதி சொல்வதா? சங்கர் தத்தளித்தான். மழையை ஊடுருவிக்கொண்டு வீசிய குளிர் காற்றில் ஆடிக்கொண்டிருந்த அவளது இளஞ்சிவப்பு நிறத் துப்பட்டா அவனைக் கேலி செய்வது போல் இருந்தது.
“இல்ல.. இது தப்பு. வங்க உங்களைக் கொண்டு போயி வீட்ல விட்டுடுறேன்.”
அவன் வெளியே வந்து தன் பல்சரை ஸ்டார்ட் பண்ணிணான்.
வசுமதி முகத்தை சுளித்தாள். அவளுக்குக் கோபம் வந்தது. “நான் எங்கேயும் வரல.”
“வரலைன்னா.. என்ன அர்த்தம்?”
“வரலைன்னு அர்த்தம்!” தெளிவாக அவன் கண்களைப் பார்த்துப் பேசினாள்.
“நீங்க வேணா வீட்டுக்குப் போங்க. நான் இங்கயே இருந்துக்கறேன்.” மழையில் நனைந்தபடியே வண்டியில் அமர்ந்திருந்த சங்கர், அவளது கண்களைப் பார்க்க முடியாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டான். வண்டியை நிறுத்திவிட்டு மறுபடியும் அவளருகே வந்தான்.
“நிலைமையைப் புரிஞ்சிக்கங்க வசுமதி. செய்தியில புயல். மழைன்னு எச்சரிக்கை விட்ருக்காங்க. பத்து நிமிசம் மழை பேஞ்சாலே இந்த ஏரியவில தண்ணி நிக்கும். இந்த சூழ்நிலையில நீங்க இப்படி அதுவும், ராத்திரி நேரம் வெளிய இருக்கிறது நல்லது இல்ல.”
“இங்க பாருங்க, இந்த புயல், மழையெல்லாம் இன்னைக்கு நியூஸ். ஆனா நான் இந்த முடிவை ரெண்டு நாள் முன்னாடியே எடுத்துட்டேன். எனக்கு யார் மேலேயும் எந்தப் பயமும் இல்ல. உங்களுக்குப் பயமா இருந்தா, கிளம்புங்க.” அவளது குரலில் இருந்த உறுதியைப் பார்த்து மலைத்துப் போனான் சங்கர்.
***
error: Content is protected !!