Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 27

அந்த அறை ஹாலுக்குப் பாதி அளவில் இருந்தது. நீண்ட சோபாவில் அவனை உட்காரச் சொல்லிவிட்டு, எதிரே இருந்த மற்றொரு சோபாவில் உட்கார்ந்தாள் ப்ரியா. டீபாயில் வைக்கப்பட்டிருந்த அதைப் பார்த்து அதிர்ந்து போனான் மதன். பளபளவென பூவேலைப்பாடுகளுடன் கூடிய மூடியிட்ட ஒரு கலசமும் அதன் கீழே ஒரு புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் ஒரு பூங்காவின் பின்னணியில் ஐந்து வயது மதனைக் கொஞ்சியபடி அழகாக நின்றிருந்தாள் மேகலா.
மதன் எதுவும் பேசாமல், வாயைப் பொத்தியபடி மௌனமாக அழுதான். அந்தப் படத்தை எடுத்தபோது அவன் கைகள் நடுங்கின. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
மெதுவாக அவன் தோளைத் தட்டினாள் ப்ரியா.
“அவ இறந்து ஆறு வருஷமாயிடிச்சி. உன் அம்மா மேல எந்தத் தப்புமில்ல. கடைசிக் காலத்துல அவ உன்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாலும், இவ்ளோ நாள் தொடர்பில்லாம இருந்த குற்ற உணர்ச்சியே அவளைக் கட்டிப்போட்டுடுச்சி. இவளோ லேட்டா வந்ததுக்கு நீ என் மேலதான் கோபப்படணும். எனக்கும் இங்க வர்றதுல சில பிரச்சினைகள் இருந்ததால உடனே உன்னைத் தேடி வர முடியல. அதுவுமில்லாம மேகலாவோட இன்சூரன்ஸ் பணம் கிளீயராகி வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சி.
“இன்னும் ஒரு வாரத்துல மேகலாவோட லாயர் இங்க வரப்போறார். ஃபார்மலிட்டீஸ் எல்லாம் முடிஞ்சி முறையா உங்க அம்மாவோட பணம் உனக்கு வந்துடும்.”
தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான் மதன். மௌனமான அழுகை தவிர வேறென்றும் அவனிடமிருந்து பதிலாக வெளிவரவில்லை.
“ஆனா மதன், நீ உங்க அம்மாவுக்காக செய்ய வேண்டிய ஒரே ஒரு விஷயம் இருக்கு.”
கண்களைத் துடைத்துக் கொண்டு ப்ரியாவை பரிதாபமாகப் பார்த்தான்.
“உன் அம்மாவோட அஸ்தியை நீ எங்க வேணா கரைக்கலாம். ஆனா அதை உன் கையாலதான் கரைக்கணும். அதுதான் அவளுடைய கடைசி ஆசை. அதை செய்வியா கண்ணா?”
கலசத்தை எடுத்து, தன் மார்போடு அணைத்துக் கொண்டு தலையாட்டினான் மதன்.
“இன்னும் ரெண்டு வாரத்துக்கு நான் இங்கதான் இருப்பேன். இதை நீ இப்பவோ, இல்ல எப்ப வேணும்னாலும் வந்து எடுத்துக்கோ. இதுதான் என்னோட இப்போதைய நம்பர். எப்ப வேணும்னாலும் கூப்பிடு.” போன் நம்பர் எழுதப்பட்ட ஒரு துண்டுச் சீட்டை அவனிடம் தந்தாள் ப்ரியா. வாங்கிக்கொண்டு எழுந்தான் மதன். இப்போது ப்ரியாவின் கணவரும் உள்ளே வந்தார். அவன் தோளை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தார்.
“எப்பவும்போல தைரியமா இருக்கணும் மதன். பாட்டியைப் பார்த்துக்கோ. நாங்களும் உனக்கு அம்மா அப்பா மாதிரிதான். சரியா..? என்ன உதவி தேவைப்பட்டாலும் கால் பண்ணு.”
“ம்ம்..” இருவருக்கும் பொதுவாக கை கூப்பினான். கலசத்தை அங்கேயே வைத்துவிட்டு, அந்த புகைப்படத்தை மட்டும் தன்னுடன் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
“கொஞ்சம் இரு மதன். நீ ரொம்ப டல்லா இருக்க. இந்த மனநிலையோட நீ தனியாப் போறது சரியில்ல. உட்கார். உன் ஃப்ரெண்டு யரையாவது வரச்சொல்லேன்.”
“அய்யோ இல்லைங்க.. நான் ஓகேதான். நான் இப்ப ஆபீஸ் போகணும்.” விடைபெற்றுக்கொண்டு கீழே வந்தான். ப்ரியாவும் அவள் கணவரும் ரொம்பவும் இயல்பாக அன்பு காட்டியது மதனுக்கு என்னவோ போல் இருந்தது. ரெண்டு மணி நேரத்துக்கு முன், மனம் முழுக்க கோபத்தோடு, வேண்டாதவர்களைப் பார்க்க வந்தது போல் வந்தவனுக்கு இந்த அன்பு மேலும் கழிவிரக்கத்தையே தந்தது. மெட்ரோவில் வந்ததால் பைக் எடுத்து வரவில்லை. மெட்ரோவுக்கு செல்லவேண்டியதை மறந்து, கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.
ஒரு பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடையில் அப்படியே உட்கார்ந்து விட்டான்.

இத்தனை வருஷமா ஒரு சுயநலம் பிடிச்ச வில்லி மாதிரி நினைச்சிட்டு இருந்துருக்கேன். வசுமதி, நேத்து அறிமுகமான ஒரு பொண்ணு. பார்த்தேயிராத பழகியிராத ஒருத்தங்களைப் பத்திப் பேசும்போதும் எத்தனை பாசிட்டிவா நல்லவிதமா யோசிச்சிருக்காங்க? அஞ்சு வருஷம் தூக்கி வளர்த்த அம்மாவை எப்படி என்னால அப்படி நினைக்க முடிஞ்சது. அவங்க சொன்ன மாதிரி எப்படி இருந்தாலும் அம்மா அம்மாதானே? மதனுக்குத் தலையே வெடித்துவிடும்போல் இருந்தது. மகனைப் பார்க்க முடியாமல், கொஞ்ச முடியாமல், உணவூட்டி சீராட்டிப் பாசத்தைப் பொழிய முடியாமல்.. நொறுங்கிய மனதும் உருக்குலைந்த உடலுமாய் அந்தத் தாயின் மன வேதனை எப்படி இருந்திருக்கும்? கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. அப்படியே சாய்ந்து படுக்க வேண்டும்போல் இருந்தது.
தூரத்தில் ஒரு கார் க்ரீச்சிட்டு நிற்கும் சத்தம் கேட்டது.
****
மேகலா அந்த பூங்காவைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்தாள். தன் பிஞ்சுக் கைகளை இறக்கை போல் விரித்துக் கொண்டு அவளைப் பிடிக்க வந்தான் மதன். அவனுக்குப் பிடி கொடுக்காமல் வளைந்து வளைந்து ஓடிக் கொண்டிருந்தாள் மேகலா. அவள் அணிந்திருந்த நீல நிறப் புடவையின் முந்தானையில் சிதறிக் கிடந்த வெள்ளை நட்சத்திரங்கள் மதனைப் பார்த்துச் சிரித்தன. தங்களைப் பிடிக்க வருமாறு அவனை அழைத்தன. அவன் ஓடிக்கொண்டே இருந்தான். வழியெங்கும் பூத்துக் குலுங்கிய சோலையில் அங்கங்கே சங்கரும் வசுமதியும் பாட்டியும் இடையிடையே வந்து அவனை உற்சாகப்படுத்தினார்கள். மேகலா திரும்பிப் பாராமல் ஓடிக்கொண்டே இருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளின் உருவம் மதனின் பார்வையிலிருந்து மறைய, அவளின் முந்தானை மட்டுமே அவனுக்குத் தெரிகிறது. அவனை வா வா என்று அழைத்தபடி அதுவும் காற்றில் கரைகிறது. குறுக்கே வந்த சிறு பாறையில் இடறிக் கீழே விழுந்தான் மதன். மேகலாவும் முந்தானையும் சோலையும் நண்பர்களும் மறைய இருளின் அகண்ட பெருவெளியில் தனியே கிடந்தான். எங்கும் கும்மிருட்டு. கண்களைத் திறக்க முடியவில்லை.
“ம்மா..!” – என்ற அவனின் கூக்குரல் யாருக்கும் கேட்காமல் இருளில் தேய்ந்து மறைந்தது. அமைதி. பெரும் அமைதி மட்டுமே அவனைச் சுற்றிலும் வியாபித்திருக்கிறது. அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்த சத்தம் கேட்கிறது. அவள் திரும்பி வருகிறாள்.
“மதன்..”
மேகலா இன்னும் அருகில் வருகிறாள். மகனருகே குனிந்தாள்.
“மதன்..” அவளின் குளிர்ந்த கரம் அவன் கன்னத்தைத் தொட்டது.
***

 மதன் கண் விழித்தபோது அவன் கன்னங்களைத் தட்டிக் கொண்டிருந்தாள் ஜனனி.
“டேய் மதன், எழுந்திர்ரா..” அவன் முகத்தில் தண்ணீரை அடித்தான் சங்கர். காரின் பின் சீட்டிலிருந்து அவனை எழுப்பி, மெதுவாக வெளியே கொண்டு வந்து ஒரு ஸ்டூலில் உட்கார வைத்தான்.
“இன்னன்னா ஆச்சி.. அண்ணனுக்கு?” என்றபடி குட்டியும் அருகில் நின்றான்.
மதனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“இங்க.. நீங்க.. மேடம் நீங்க எப்படி?”
அவள் பதில் சொல்வதற்குள் திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவனாய் பரபரப்பாக எழுந்தான்.
“என் பேக்.. என்னோட பேக் எங்க?”
“இதோ இருக்கு இருக்கு!” அதே பரபரப்புடன் காரிலிருந்து பேக்கை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள் ஜனனி.
“மேடம் நீங்க ஆபீஸ் போகல?”
“எப்படிப் போறது? உங்களால நானும் இன்னிக்கு ஆபீசுக்கு மட்டம்தான்.” பின் சங்கரிடம் திரும்பினாள். “பஸ்ஸ்டாப்புல பிச்சைக்காரன் மாதிரி சாய்ஞ்சு கிடக்குறார்ண்ணா.. நான் அந்த வழியா வரப்போயி பார்த்துக்கிட்டேன். இல்லேன்னா எப்படித் தெரியும்? முடியலேன்னா, உங்க யாருக்காவது ஒரு போன் போட்டு சொல்லிருக்கலாம்ல?”
“பயப்படாதீங்க..ஜனனி, இவனுக்கெல்லாம் ஒண்ணும் ஆகாது. கிறுக்கன்.. காலையில சாப்பிடாமப் போயிருப்பான்னு நெனைக்கிறேன்.”
மதன் ஆழ்ந்த சிந்தனையோடு ஜனனியையே பார்த்துக் கொன்டிருந்தான். அவலது நீல நிற துப்பட்டா காற்றில் அவனை நோக்கிப் படபடத்தது.
அப்போது வசுமதியும் தன்னுடைய ஆக்டிவாவில் வந்து இறங்கினாள்.
“என்னாச்சு சங்கர்? என்னவாம் மதனுக்கு?”
“காலையில அந்தம்மாவைப் பார்க்க கிண்டிக்குப் போயிருக்கான். வரும்போது பஸ் ஸ்டாப்புல கிறங்கி விழுந்துட்டான் போல.”
அவள் ஜனனியைப் பார்த்தாள்.
“நேத்து ஊருக்குப் போயிருந்தேன்க்கா. காலையில கிண்டிக்கிட்ட ட்ராபிக்ல வரும்போது யதேச்சையாப் பார்த்தேன். பார்த்த முகமா இருக்கேன்னு ஸ்லோ பண்ணா இவரு.. பார்த்ததும் எனக்கு உங்க ஞாபகம்தான் வந்துச்சி. அங்க ரெண்டு பேரை வச்சி கார்ல ஏத்திட்டு, உங்களுக்கு போன் போட்டேன்.”
“என்னால உடனே வரமுடியலைப்பா. அதான் சங்கருக்குப் பேசி, உனக்கு லொக்கேஷன் அனுப்பச் சொன்னேன்… இப்பப் பரவாயில்லையா மதன்?”
“மேடம்.. நீங்க சொன்னதுதான் சரி.”
“என்னது சரி.. என்னாச்சு மதன்?” வசுமதி ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள்.
பேக்கிலிருந்து அந்தப் புகைப்படத்தை எடுத்து வசுமதியிடம் காட்டினான். ஜனனியிடம் காட்டினான். சங்கரிடம் கொடுத்தான்.
“எங்க அம்மா.. இறந்து ஆறு வருஷம் ஆச்சாம். எட்டு வருஷமா டிபியோட போராடிட்டு இருந்துருக்காங்க.”
முகம் பொத்தி அழுகையை அடக்கினான். வசுமதிக்கும் சங்கருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவன் கையைப் பற்றித் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டாள் ஜனனி.
“ஒருவேளை நான் நினைச்சிருந்தா.. அவங்களைத் தேடிப் போயிப் பார்த்திருக்கலாம். கடைசிவரைக்கும் என்னை நினைச்சிக்கிட்டே உயிரை விட்ருக்காங்க.”
“சரி விடுறா.. எத்தனை வருஷம் ஆனாலும் இழப்பு இழப்புதான். அதை யாராலும் ஈடு செய்ய முடியாதுதான். அதுக்காக இப்படி உட்கார்ந்துடலாமா? உன்னை இப்படிப் பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு மதன். அடுத்து என்ன செய்யணும்னு யோசி.”
“அவங்க அஸ்தியைக் கரைக்கனும். ராமேஸ்வரம் போலாம்னு இருக்கேன்.”
“அது எங்க இருக்கு?” என்று கேட்டாள் வசுமதி.
“கிண்டியில.. ஹோட்டல் ரூம்லதான். அதை வீட்ல  கொண்டுவந்து வைக்க கஷ்டமாயிருக்கு. பாட்டிக்கும் சிரமம் கொடுக்கக்கூடாது. அம்மோவோட ஃப்ரெண்டு.. அந்த ப்ரியா மேடம் இன்னும் ரெண்டு வாரம் இங்கதான் இருப்பாங்களாம். அதுக்குள்ள ப்ளான் பண்ணி அஸ்தியைக் கரைக்கணும்.”
சொல்லி முடித்துவிட்டு ஜனனியைப் பார்த்தான்.
“ஸாரி மேடம்.. என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம்.”
“சரி, இப்ப எதாவது சாப்பிடலாமா? எனக்கு ரொம்பப் பசிக்குது.” என்றாள் ஜனனி.
*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!