Skip to content
Post Views: 869
நள்ளிரவு தாண்டி விட்டது.
மாயாவும் தருணும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க, விக்னேஷ் அவர்களை பார்த்தபடியே நடமாடினான்.
Advertisement
தருணுக்கு ரதியை கட்டி வைத்ததற்கு பதிலாக மாயாவை கட்டி வைத்திருந்தால் சரியாய் இருந்திருக்கும் என்று தோன்றியது விக்னேஷுக்கு.
தருண் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு தன் மச்சினியிடம் திரும்பினான். “நீ வீட்டுக்கு கிளம்பு. எவ்வளவு நேரம் தூங்காம இருப்ப?” என்று கேட்டான்.
Advertisement
Advertisement
“உள்ளே உயிருக்கு போராடிகிட்டு இருப்பது என் அக்கா. எனக்கு எப்படி தூக்கம் தரும்?” என்று சீறலாக கேட்டாள் இவள்.
நம் அண்ணனின் அக்கறையை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாளே என்று விக்னேஷுக்கு மாயாவின் மீது கோபம் வந்தது.
Advertisement
“சரி இங்கேயாவது தூங்கு. நீ ரொம்ப நேரம் விழிச்சு இருந்தா உனக்கு தேவை இல்லாம கோபமும் தலை சுத்தலும் வரும்ன்னு உன் அக்கா சொல்லி இருக்கா..” என்றான் கவலையாக.
இந்த விஷயத்தை கூட இவர்கள் பேசிக்கொள்வார்களா என்று விக்னேஷுக்கு ஆச்சரியம். அவனுக்கு என்னவோ அண்ணனும் அண்ணியும் மற்றவர்கள் முன்னால் இருப்பது போலவே தனியாக இருக்கும்போதும் ஊமையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை.
அக்கா நம் மீது அக்கறையாய் இருந்திருக்கிறாளே இதைப் பற்றி மாமனிடம் கூட சொல்லி இருக்கிறாளே என்று நினைத்த மாயாவுக்கு அக்காவின் மாமியார் மீது மீண்டும் புது கோபம் வந்தது.
“எல்லாம் என்னாலதான். நான் எல்லாத்தையும் சீக்கிரமா சரி பண்ணுறேன். என் அம்மாகிட்ட பேசுறேன். நீ நிம்மதியா தூங்க போ..” என்று மச்சினியை அனுப்புவதற்கு மீண்டும் முயற்சித்தான் தருண்.
மாயா முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்தாள். என்னவோ மாமன் மீது புது நம்பிக்கை. தனது கைப்பையில் இருந்த செல்போனை எடுத்து அவள் கேபை புக் செய்ய இருந்த நேரத்தில் அந்த போனுக்கு ஒரு கால் வந்தது.
போனில் பேசியவர்கள் காரின் நம்பரை சொன்னார்கள். “இந்த காருக்கு சொந்தக்காரர் ஆக்சிடென்டால ஸ்பாட் அவுட் ஆகிட்டாரு..” என்றார்கள்.
மாயாவின் செல்போன் கீழே விழுந்தது. அடுத்ததாக அவளும் பொத்தென்று தரையில் விழுந்தாள்.
கொஞ்சம் விட்டிருந்தால் அங்கிருந்த இரும்பு நாற்காலிகளில் தலை மோதி மண்டை உடைந்திருக்கும். ஆனால் அதற்குள் அவளை தாங்கிப் பிடித்து விட்டான் விக்னேஷ்.
“என்ன ஆச்சி?” என்று அவன் பதற, கீழே விழுந்த செல்போனை எடுத்து வந்த நம்பருக்கு மீண்டும் கால் செய்து என்ன விஷயம் என்று விசாரித்தான் தருண்.
அவனின் மாமனார் சசிதரன் இறந்துவிட்டார் என்ற செய்தி செல்போனில் சொல்லப்படவும் நெஞ்சை பிடித்துக் கொண்டு இவனும் நாற்காலியோடு அமர்ந்தான். தம்பியிடம் விஷயத்தை சொன்னான்.
மாயாவை தன்னோடு அணைத்து பிடித்து இருந்தவன் அண்ணன் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் தவித்தான். இப்படி ஏன் நிகழ வேண்டும் என்று யோசித்தவனுக்கு கேள்விக்கான பதில் ஒன்றும் அவ்வளவு சிரமமானதாக இருக்கவில்லை. இவனின் அம்மாவிற்கு தர வேண்டிய கடனை கட்டுவதற்காகதான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பார் என்பதை சுலபமாக யூகிக்க முடிந்தது.
“அவங்க வீட்டுல நான் என்ன நேரத்துல கால் எடுத்து வச்சேனோ? என்னால அவங்க பிசினஸ் நாசமாகிடுச்சு. அவங்க பொண்ணோட வாழ்க்கை நாசமாயிடுச்சு. இப்ப அந்த மனுஷன் உயிரையும் விட்டுட்டாரு. நியாயமா முதல்ல செத்திருக்க வேண்டியது நான்தான்..” என்று புலம்பினான் தருண்.
“ஏற்கனவே பிரச்சினைகள் கட்டுக்கடங்காம போயிட்டு இருக்கு. நீ புதுசா எதையாவது இழுத்து வச்சிடாத. போய் டாக்டரை கூட்டிவா. இவளுக்கு ட்ரீட்மென்ட் பண்ணலாம்..” என்றான் தம்பி.
தருண் ரோபோட் போல எழுந்தான். அவனின் இதயம் துடிக்கிறதா என்றே அவனுக்கு தெரியவில்லை. இதயத்தின் காயத்தால் உடம்பு முழுக்க வலித்தது. ரதி கண் திறந்த பிறகு இந்த விஷயத்தை கேள்விப்பட்டால் என்ன செய்வாள்? நம்மை எந்த அளவுக்கு கேவலமாக பார்ப்பாள்? அவளின் காதல் என்னை விட்டுப் போய் விடுமே என்று நினைத்தவனுக்கு வாழ விருப்பமே இல்லை.
ஆனாலும் அப்போதைக்கு தவறான முடிவுக்கு போகாமல் அவன் மருத்துவரை அழைத்து வந்தது பெரிய விஷயம்தான்.
அதிர்ச்சி மயக்கம் என்று சொல்லி மாயாவுக்கான சிகிச்சை தந்து விட்டு சென்றார் மருத்துவர்.
“நீ இவளை பார்த்துக்க. நான் ஆக்சிடென்ட்டான இடத்துக்கு போறேன்..” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் விக்னேஷ்.
மாயாவின் அம்மா தருணுக்கு போன் செய்தாள்.
கை நடுங்க போனை எடுத்தான் இவன்.
“மாப்ள. அவருக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு போன் வந்தது. கொஞ்ச நேரம் முன்னாடிதான் என்னை ஆட்டோவில் ஏத்தி அனுப்பினார். அதுக்குள்ள இப்படி ஒரு நியூஸ் வருது. யாரோ ஃபிராங் பண்றாங்கன்னு நினைக்கிறேன் மாப்ள. அந்த நம்பரை சொல்றேன். நீங்க கொஞ்சம் போன் போட்டு விசாரிக்கிறீங்களா?” என்று அப்பாவியாக கேட்டாள். மாமியார் பேசும்போது இவனுக்கு தன் மனைவியின் சாயல் தெரிந்தது.
நெஞ்சில் இருந்த துக்கத்திற்கு கதறி அழ வேண்டும். “நியூஸ் உண்மைதான் அத்தை. மாமா நம்மை விட்டு போயிட்டாரு. விக்னேஷ் ஸ்பாட்டுக்கு போய் இருக்கான். மாயா மயக்கம் போட்டுட்டா. நான் மாயாவுக்கும் ரதிக்கும் துணையா ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்.” என்று கரகரத்த குரலில் சொன்னான்.
“ஐயோ!” என்று மாமியார் கதறி அழுவது இவனின் காதுகளில் விழுந்தது. கண்ணீரும் தானாக வழிந்தது.
சம்பவ இடத்திற்கு வந்தான் விக்னேஷ். உருக்குலைந்து போன சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
விஷயம் கனகவதியின் காதுகளுக்கும் சென்றது. சம்மந்தி இறந்துவிட்டார் என்ற கவலையை விடவும் கொடுத்த கடன் திரும்பி வராது என்ற கவலைதான் அவளை பெரிதும் பிடித்துக் கொண்டது.
மறுநாள் காலையில் கண்களைத் திறந்தாள் ரதி. கண் முன்னால் கணவன்
இருந்தான்.
கண் விழித்ததும் அழ ஆரம்பித்து விட்டாள்.
“அத்தை நமக்கு விவாகரத்து பண்ண பார்க்கிறாங்க. நான் உங்களை பிரிஞ்சு போகணுமாம்..” என்றாள்.
இவனின் முகம் கல்லாக இருந்தது. அதைப் பார்த்து அவளுக்கு சந்தேகம் வந்தது. ஒருவேளை அந்த விவாகரத்தில் இவனுக்கும் சம்மதமோ என்று நினைத்தாள்.
“என்னாச்சு? ஏன் பேச மாட்டேங்கிறிங்க?” என்று கேட்டாள்.
அவளின் கையைப் பிடித்தவன் “ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட ரதி. என் மேல கொஞ்சமாவது நீ நம்பிக்கை வெச்சிருக்கலாம்..” என்றான்.
ஏன் என்ன ஆயிற்று? ஒருவேளை நாம் இறந்து விட்டோமா? நம் ஆவியோடு இன்னும் பேசிக் கொண்டிருக்கிறானா என்று ரதி குழப்பமாய் யோசித்தாள்.
“உன்னோட அப்பா நம்மை விட்டு போயிட்டாரு!” என்று அவன் சொன்னதும் அவளின் விழிகள் அதிர்ச்சியில் நிலை குத்தி போயின.
“மனக்குழப்பத்துல காரை ஓட்டி போனவர் ஒரேடியா நம்ம விட்டு போயிட்டாரு..” என்றான்.
அவளின் விழிகளில் வழிந்த புது கண்ணீரில் அவ்வளவு குற்ற உணர்வும் கவலையும் தீராத சுய கோபமும் இருந்தது.
தந்தையை கொன்று விட்டோம். நம் உறவை காப்பாற்றிக்கொள்ள நமக்கு வக்கில்லை என்று ஒரு அப்பாவி மனிதனை இழந்து விட்டோம் என்று உள்ளம் சொன்னது. அவளின் கண்ணீரின் அடர்த்தி கூடியது.
இன்னும் கொஞ்சம் ஆழமாக அறுத்து கொண்டு செத்துப் போய் இருக்கக் கூடாதா என்று யோசித்தாள்.
குடும்பத்தின் தலைவனே இறந்து விட்டான். இனி நாம் இருந்து என்ன செய்யப் போகிறோம் என்று துக்கப்பட்டாள்.
அவளின் நிலை குத்திய கண்களை பார்த்து பயந்த தருண் அவளின் கன்னங்களை அள்ளினான்.
“ப்ளீஸ் என்னை பாரு. கண்டதை யோசிக்காத. உன் அப்பா விபத்தால இறந்துட்டாரு. நீயும் நானும்தான் அவரோட மரணத்துக்கு காரணம். அதை நானும் இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா அதை காரணமா வச்சு நீ உடைஞ்சுடாத..” என்று சொன்னான்.
ஆனால் அவனின் ஆறுதல் அவளுக்கு உதவவில்லை.
அன்று மாலை நேரம்.
சசிதரனின் உடம்புக்கு இறுதி சடங்கு நடைபெற்றது.
ரதி சிலை போல ஓரமாய் உட்கார்ந்து இருந்தாள். கண்களில் கண்ணீரே தீர்ந்து விட்டது. மறு ஓரத்தில் அமர்ந்திருந்த மாயா இது அத்தனையும் கனவாய் இருக்கக் கூடாதா என்று ஏங்கினாள்.
மாயாவின் அம்மா அமலா கணவனின் உடம்பின் மீது விழுந்து கதறினாள். அம்மாவின் அழுகையை மகள்களால் பார்க்கவே முடியவில்லை.
மின்தகனத்திற்காக சசிதரனின் உடம்பு எடுத்துச் செல்லப்பட்டது.
தருணும் விக்னேஷும் அத்தனை சடங்குகளிலும் உடன் இருந்தார்கள். மின் தகனமும் முடிந்தது.
இரவு நேரம். மாயாவின் வீட்டில் பெண்கள் மூவரும் ஆளுக்கு ஒரு திசையில் அமர்ந்திருந்தார்கள். மூவரின் மனதுக்குள்ளும் மூன்றாயிரம் விதமான யோசனைகள்.
நம் வயிற்றில் பெண் குழந்தைகள் பிறந்ததற்கு பதிலாக ஆண் குழந்தைகள் பிறந்து இருந்தால் இப்படி ஒரு நிலைமை நம் கணவருக்கு வந்திருக்காதோ என்று யோசித்தாள் அமலா.
கைலாஷை பழி வாங்கும் எண்ணத்தோடு அவரின் நிறுவனத்திற்கு நாம் போயிருக்க கூடாதோ என்று யோசித்தாள் மாயா.
எல்லாமே நம்மால்தான். நாம் பிறந்து இருக்கக் கூடாதோ என்று நினைத்தாள் ரதி.
உறவுகள் கூட அதிகம் வந்திருக்கவில்லை. பணத்தோடு இருந்தபோது வீடு முழுக்க உறவுகள் இருப்பார்கள். எப்போதும் சமையல் செய்து கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகள் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் இப்போது வந்த உறவுகள் எல்லாம் இறந்தவரின் முகத்தை பார்த்துவிட்டு ஐந்து நிமிடங்களில் திரும்பி போய் விட்டார்கள். ஒருவர் கூட ஒரு இரவு இங்கே தங்கவில்லை.
யாருமே உண்மை இல்லையோ என்று அமலா யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தருண் உணவு பொட்டலத்தோடு வீட்டுக்குள் நுழைந்தான். அவனின் பின்னால் விக்னேஷும் வந்தான்.
மாமனாரின் புகைப்படத்தின் முன்னால் இருந்த விளக்கில் எண்ணை குறைவாக இருப்பதை கண்டு விட்டு அதற்கு எண்ணெயை ஊற்றினான் தருண்.
தட்டை எடுத்து வந்து உணவை பரிமாறி அதை மாமியாரின் முன்னால் கொண்டு வந்து வைத்தான்.
அமலா அதை சாப்பிடவில்லை. மருமகனின் முகம் பார்த்தவள் “என் புருஷனோட டெத்துக்கு கூட உங்க அம்மா வரல. அப்படி என்ன தம்பி நாங்க பாவம் பண்ணிட்டோம்? இன்னைக்கு சொத்து இல்லன்னு எங்களை விலக்கி வைக்கிறாங்க. நாளைக்கு ஒரு பெரிய இடத்துல உங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பாங்க. ஒருவேளை கல்யாணத்துக்கு பிறகு அவங்களும் எங்கள மாதிரி நடுரோட்டுக்கு வந்துட்டா அந்த பொண்ணையும் உங்க அம்மா விவாகரத்து பண்ணி அனுப்பிடுவாங்களா? என் பொண்ணு லட்சணமா இருக்கா நல்லா படிச்சி இருக்கா அவளை உங்களுக்கு பிடிச்சிருக்கு அதனால கல்யாணம் பண்றீங்கன்னு நெனச்சேன். ஆனா பணத்துக்காகதான் கல்யாணம் பண்ணிங்களா?” என்று கேட்டாள்.
இவனுக்கு கண்ணீர் துளிகள் கொட்டியது. “நான் அப்படிப்பட்டவன் இல்ல ஆன்ட்டி..” என்று மிகவும் சிறிய குரலில் சொன்னான்.
“என் புருஷனே எங்களை விட்டு போயிட்டாரு. இனி நான் யாரை நம்புவோம்? குத்துக்கல் போல ஒரு மனுஷன் இருக்கும் போதே உங்க அம்மா அந்த ஆட்டம் ஆடும். இனிமே சொல்லவே தேவையில்லை. நீங்க இங்க இருந்தா உங்க அம்மா என் பொண்ணு மேல மட்டும் பழி போடாம என் மேலயும் சேர்த்து பழியை போட்டுடுவாங்க. தயவு செஞ்சு போயிடுங்க தம்பி..” என்றாள்.
ஆனால் மனைவியையும் அவளின் குடும்பத்தையும் இந்த நிலையில் விட்டு விட்டு செல்ல அவனால் முடியாது.
“நீங்க என் அம்மாவை பத்தி யோசிக்காதீங்க ஆன்ட்டி. அங்கிள் அவசர முடிவு எடுத்துட்டாரு. ஆனா உங்களுக்கு துணையா நாங்க இருக்கோம்.” என்றான் விக்னேஷ்.
மாயா கசந்த சிரிப்பு சிரித்தாள்.
“குடும்பமா சேர்ந்து எங்க அப்பாவை போட்டு தள்ளிட்டு இப்ப கருணை காட்டுறீங்களா?” என்று நக்கலாக கேட்டாள்.
“நீ கொஞ்சம் சும்மா இரு மாயா. நான் உன்கிட்ட தனியா பேசிக்கிறேன்..” என்றான் விக்னேஷ்.
தொடரும்
error: Content is protected !!