Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் ரட்சகா

காதல் ரட்சகா 7

கைலாஷ் கோவில் பூசாரியிடம் பேசி விட்டு வந்தார்.

கோவில் திண்ணையில் ஒரு ஓரமாக நின்றிருந்த அவரின் மகன் சரவணன் “இந்த மேரேஜ் அவசியமா?” எனக் கேட்டான். இத்தோடு நூறாவது முறையாக கேட்கிறான்.



Advertisement

இருக்கும் சொத்து சுகத்திற்கு ஒரு பெரிய குடும்பத்தில் பெண் எடுக்கலாம். வசதியோடு வசதி சேர்ந்து இருக்கும். இந்த பிச்சைக்கார குடும்பத்தில் ஏன் பெண் எடுக்க வேண்டும் என்று அவனுக்கு எரிச்சல்.

“இந்த பொண்ணை கனகவதியோட பையன் லவ் பண்றான். கனகவதியோட குடும்பத்துல எப்பவும் சந்தோஷமே இருக்கக்கூடாது. இந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா கனகவதியோட பையன் காலத்துக்கும் அவங்க அம்மாவை திட்டிக்கிட்டே இருப்பான்..” என்றார்.

Advertisement

Advertisement

இவன் தலையை கோதினான். “ரொம்ப சைல்டிஸா இருக்குப்பா. அவங்க பேமிலியை பழிவாங்க உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா? இந்த மொக்கை மூஞ்சை கல்யாணம் பண்ணி நான் என்ன பண்ணட்டும்?”

மகனின் தோளில் கை பதித்தவர் “கல்யாணம் எல்லாம் வெறும் கடமைக்குதான். ஒரு ரெண்டு மாசம் போகட்டும். கார் ஆக்சிடென்ட்ல போட்டு தள்ளிடலாம். அப்புறம் உனக்கு ஏத்த நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்கிறேன். இப்போதைக்கு குடும்ப பழிவாங்கல் மட்டும்தான் முக்கியம். அதை நல்லா ஞாபகத்துல வச்சிக்க..” என்றார்.

Advertisement

இரண்டு மாதத்தில் அவளை கொன்று விடுவேன் என்று இவர் சொன்ன பிறகுதான் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியே பிறந்தது.

“அப்படின்னா சரி..”

மனைவியை திரும்பிப் பார்த்த கைலாஷ் “போய் அவளை கூட்டி வா. அவளால நமக்கு ஒரு நாள் வேஸ்ட். பணமும் வேஸ்ட்..” என்றார் கடுப்பாக.

அவரின் மனைவி போய் பார்த்துவிட்டு சில நிமிடங்களில் திரும்பி ஓடி வந்தாள். “பொண்ணை காணோம்..”

இவருக்கு ரத்தம் கொதித்தது. “எங்கிட்ட பணத்தை வாங்கிட்டு ஓடிப் போறாளா?” என்று கர்ஜித்தவர் அந்த கோவிலில் இருந்த சிசிடிவி ரெக்கார்ட் காட்சிகளை வாங்கி பார்த்தார்.

யாரோ சிலர் அவளை கடத்திச் செல்வது தெரிந்தது.

“கடத்தி போனவன் எவனா இருந்தாலும் செத்துப் போகணும்..” என்று தனது ஆட்களுக்கு வேலை தந்த அனுப்பினார்.

மாயாவை காரில் அடைத்து வைத்திருந்தார்கள். அவளின் கைகள் கட்டப்பட்ட இருந்தன. முகத்தில் இருந்த துணி கொஞ்சம் கூட நகரவில்லை. அவளால் அசைய முடியவில்லை. இரண்டு புறமும் இரண்டு பேர் இறுக்கமாய் பிடித்து வைத்திருந்தார்கள்.

“யாருடா நீங்க? என்னை விடுங்கடா..” என்று அவள் கத்தியதை யாரும் காதில் வாங்கவில்லை.

இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு கார் நின்றது. இவளை இழுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.

நம்மை கொல்லப் போகிறார்கள் என்று நினைத்தாள் மாயா.

ஓரிடத்தில் அவளை நிறுத்தி அவள் முகத்தின் மீது இருந்த துணியை விலக்கினார்கள்.

சூரிய வெளிச்சம் கண்களை கூசியது. கண்களை தேய்க்க கூட கைகள் சுதந்திரமாக இல்லை.

இமைகளை சில முறை சிமிட்டி விட்டு நேராய் பார்த்தாள். எதிரில் கனகவதி நின்று கொண்டு இருந்தாள்.

ஒரு குடோனுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள் இவர்கள். மாயாவை சுற்றி அடியாட்கள் இருந்தார்கள். பக்கத்தில் மூன்று கார்கள் இருந்தன. மற்றபடி காக்கை குருவி கூட அங்கே இல்லை.

“ஐயோ இந்த பைத்தியமா?” என்று இவள் தன்னை மீறி சத்தமாய் சொல்ல, இவளின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விழுந்தது. அடிவாங்கியவள் திரும்பிப் பார்த்தாள். ஒரு அடியாள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.

“எவ்வளவு தைரியம் இருந்தா எங்க மேடமை பார்த்து இப்படி சொல்வ? ஒழுங்கா சாரி கேளு..” என்றான்.

மாயா பற்களை கடித்தாள்.

“என்னை எதுக்காக இங்கே கடத்தி வந்திங்க?” என்று கனகவதியை பார்த்துக் கேட்டாள்.

கனகவதி இவளை மேலும் கீழும் பார்த்தாள். கரும்பச்சை பட்டுடுத்தி கழுத்தெல்லாம் ஆபரணங்கள் பூட்டி பேரழகாய் இருந்தாள் மாயா.

“உனக்கும் கைலாஸோட மகனுக்கும் கல்யாணம்ன்னு கேள்விப்பட்டேன்..” என்று அவள் நக்கலாய் சொல்ல, “அதுதான் உனக்கு கட்ட வேண்டிய கடனை கொடுத்தாச்சே! இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்?” என்று எரிச்சலாக கேட்டாள் இவள்.

இவளை நெருங்கி வந்து தாடையை பிடித்தாள் கனகவதி.

“நீ என் எதிரியோட கம்பெனிக்கு வேலைக்கு போனதே எனக்கு பிடிக்கலன்னு சொன்னேன். நீ அவனுக்கு மருமகளா போனா எப்படி ஏத்துக்க முடியும்?” என்று கேட்டாள்.

அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள் மாயா. “உனக்கு என்னதான் வேணும் லேடி? என் அக்காவை உன் வீட்டுக்கு மருமகளாக கூட்டி போன. என் குடும்பத்தோட சந்தோஷம் அத்தோடு அழிஞ்சே போச்சி. என் அப்பாவை கூட நான் இழந்துட்டேன். இப்ப மறுபடியும் என்னை கடத்தி என்ன பண்ண போற?” என்று எரிச்சலாக கேட்டாள்.

“நீ அந்த டேஷ் மகனுக்கு மருமகளா போவதை நான் விரும்பல.”

“அதுக்கு நீ அந்த டேஷ் மகன்கிட்டேயே சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு என்னை கடத்தி வந்த? அட்லீஸ்ட் என் கையையாவது அவுத்து விடு..” என்றாள்.

கை கட்டுகள் அவிழ்க்கப்பட்டால் எதிரில் இருப்பவளை கழுத்தை நெறித்து கொன்றுவிடும் கோபம் இவளுக்கு.

“நீ எவ்வளவு மோசமானவன்னு எனக்கு தெரியும். உன் கையை என்னால அவிழ்த்து விட முடியாது. உன்னை இங்கே கடத்தி வர காரணம் உன்னை போட்டு தள்ளணும்ன்னுதான்..” என்றாள் கனகவதி.

மாயா அதிர்ச்சியோடு அவளை பார்த்தாள்.

தாடையில் இருந்த கனகவதியின் கை கொஞ்சம் மேலேறி மாயாவின் தலைமுடியை பற்றியது.

“நீ அவனோட கம்பெனிக்கு இன்டர்வியூக்கு போன முதல் நாளே நான் உன்னை கொன்னு இருக்கணும். இவ்வளவு நாள் விட்டு வச்சது என்னோட தப்புதான். எனக்கு ஒருத்தனை பிடிக்கலன்னா யாரும் அவனோடு பழக்கம் வச்சிக்க கூடாது. அதுவும் எனக்கு அடிமையாக இருக்கும் நீ அவனை நெருங்கவே கூடாது..” என்றாள்.

“நான் ஒன்னும் உன் அடிமை கிடையாது..” என்றாள் மாயா கோபமாக.

“உன் அக்காவை என் வீட்டுக்கு அனுப்பிய அடுத்த நாளே நீ எனக்கு அடிமைதான். நான் சொன்னா சரிங்க மேடம்ன்னு கேட்டு நடக்கணும். என் பையனை டைவர்ஸ் பண்ணிடுன்னு நான் சொன்னா உங்க அக்கா அதை உடனே செஞ்சிருக்கணும். இப்ப நான் உன்னை செத்து போன்னு சொல்றேன். நீயும் சாகணும். இல்லன்னா நான் ஆசைப்பட்டதை செய்வேன்..” என்றவள் இவளின் தலைமுடியை விட்டு விட்டாள்.

“உன்னால என் இரண்டு பசங்களும் என்னை விட்டு விலகி போயிட்டாங்க. என் எதிரியோடு வேற கூட்டணி போட போயிட்ட. ஜஸ்ட் டிஸ்கஸ்டிங்..” என்றவள் அடுத்த நொடி பக்கத்தில் இருந்தவனிடம் உருட்டு கட்டையை வாங்கி இவளின் தலையில் வீசினாள்.

கை கட்டப்பட்டு சுற்றிலும் ரவுடிகள் சூழ இருக்கும் நிலையில் மாயா மட்டும் என்ற செய்வாள்? தலையில் அடிப்பட்ட அடுத்த கணம் தரையில் விழுந்தாள்.

கனகவதி மற்றொருவனிடம் இருந்து துப்பாக்கியை வாங்கினாள்.

“கைலாஷ் எப்பவும் ஜெயிக்கவே கூடாது. அதுக்காக நான் என்ன வேணா செய்வேன்..” என்றவள் மாயாவின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியை நீட்டி சுட்டாள்.

கட்டையால் விழுந்த அடியிலேயே அரை மயக்கத்திற்கு போய் விட்டாள் மாயா. இப்போது புல்லட் பாயவும் மொத்தமாக கண் மூடி விட்டாள்‌.

“இவளை கொண்டுப் போய் எங்காவது போட்டுடுங்க. கைலாஷ்தான் இவளை கொலை பண்ணான்னு பழியை அவன் மேல தூக்கி போடுங்க..” என்று சொல்லிவிட்டு கனகவதி அங்கிருந்து சென்றாள்.

அடியாட்கள் மாயாவை தூக்கிக் கொண்டு கிளம்பினார்கள்.

விக்னேஷ் நேற்று இரவு முழுக்க உறங்கவேயில்லை. மாயா அந்த சரவணனை திருமணம் செய்துக் கொள்ள மாட்டாள் என்று மனம் சொன்னது. ஆனாலும் ஏதோ பயம்.

மாயாவின் வீட்டில் சுவரோடு சாய்ந்து அமர்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்தவனுக்கு இதயம் மட்டும் தடதடவென்றே அடித்துக் கொண்டது.

அமலா வழக்கமான சோகத்தில் இருந்தாள்.

ரதியின் பக்கத்தில் அமர்ந்து இருந்த தருண் “நீ வேணா வாசலையே பார்த்துட்டு இரு. மாயா கடைசி செகண்ட்ல மாலையை கழட்டி வீசிட்டு வந்துட போறா..” என்று சொன்னான்.

ரதிக்கும் அதுதான் தேவை.

கணவனின் முகம் பார்த்தவள் “உங்க அம்மாவுக்கும் கைலாஷூக்கும் நடுவுல அப்படி என்ன சண்டை?” என்று கேட்டாள்.

பிரச்சனைகளுக்குப் பிறகு அவளாய் ஒரு உரையாடலை ஆரம்பித்தது இதுவே முதல் முறை.

“எனக்கும் தெரியல. நான் கேட்டபோது அப்பா எதையும் சொல்லல..” என்றான்.

‘அப்படின்னா நீ ஆம்பளையே இல்ல!’ மாயாவாக இருந்திருந்தால் இதைத்தான் கேட்டிருப்பாள். ஆனால் ரதி மனதுக்குள் கூட இப்படி எதையும் நினைக்க மாட்டாள்.

நேரம் சென்று கொண்டே இருந்தது. விக்னேஷ் அடிக்கடி கடிகாரத்தை பார்த்தான். மாயா எப்போது திரும்பி வருவாள் என்று காத்திருந்தான்.

திருமணம் செய்து மாலையும் கழுத்துமாக அவள் வந்து விட்டால் அதன் பிறகு தன்னால் அதை தாங்கிக் கொள்ளவே முடியாது என்ற கவலை வேறு அவனை கொலை செய்தது.

அவளை தனியே போக விட்டிருக்கக் கூடாதோ? அவள் அறியாமல் பின் தொடர்ந்து சென்று அவள் செய்வதை எல்லாம் பார்த்து இருக்க வேண்டுமோ? அவள் திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தாலும் அதை நிறுத்தி இருக்க வேண்டுமோ? முட்டாள் போல இங்கே அமர்ந்திருப்பது நம் தவறோ?

விக்னேஷ் ஏதேதோ யோசித்து குழம்பி கொண்டு இருக்க அந்த வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் முக்கிய செய்தி ஓடியது.

“நேரு நகர் பகுதியில் சாலை ஓரத்தில் கிடக்கும் பெண் பிணம்.. யார் கொலையாளி?” என்று செய்தி வாசிக்கப்பட்டது. அங்கே மாயாவின் புகைப்படம் காட்டப்பட்டது.

வீட்டில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றார்கள். பட்டுப் புடவையில் பரவி கிடந்த ரத்தத்தோடு சாலை ஓரத்தில் விழுந்து கிடந்தாள் மாயா.

நிறைய பேர் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். “பார்க்க கல்யாண பொண்ணு மாதிரி தெரியுது. யார் இந்த வேலையை பண்ணி இருப்பாங்க?” என்று ஒருவன் சோகத்தோடு கேட்டான்.

விக்னேஷ் அனிச்சை செயலாக தனது இடது பக்க நெஞ்சை பற்றினான். புல்லட் வேகத்தில் துடித்த இதயம் இவனை மரணத்திற்கு அழைத்து செல்ல பார்த்தது.

“ஐயோ என் பொண்ணு..” என்று அமலா கதற ஆரம்பித்தாள்.

ரதி மயக்கத்தோடு பக்கத்தில் இருந்த சுவரை பற்றினாள்.

“மாயா!?” தருண் குழம்பி போனான்.

அரை மணி நேரத்திற்கு பிறகு..

மருத்துவமனை வாசலில் நின்றிருந்தது ரதி குடும்பம். ரதியும் அமலாவும் அழுதுக் கொண்டு இருந்தார்கள்.

“கல்யாணம் பண்ணிக்க போனா. அப்படி என்ன ஆகியிருக்கும்?” என்று தருணுக்கு குழப்பம்.

விக்னேஷூக்கு வாழ்க்கையே முடிந்து விட்டது போல் இருந்தது. முதல் கிரஷ் அவள். இன்னும் காதலாய் கூட டெவலப் ஆகி இருக்கவில்லை. அவளின் மனதோடு தன் மனதை இவன் கலந்திருக்கவும் இல்லை. அதற்குள் இப்படி ஆகி விட்டது.

நொடிக்கொரு முறை செல்போனில் செய்தி பார்த்தான் இவன்.

கைலாஷ் வருத்தத்தோடு பேட்டி கொடுத்தார். “எங்க மருமக அவ. இப்படி நடக்கும்ன்னு நாங்க எதிர்பார்க்கல. எல்லாமே நல்லா போயிட்டு இருந்தது. திடீர்ன்னு யாரோ அவளை கடத்தி போயிட்டாங்க..” என்று சிசிடிவி ரெக்கார்ட் காட்சிகளை காட்டினார்.

“கண்டிப்பா இது அந்த கனகவதி பார்த்த வேலையாதான் இருக்கும். நீங்க அவளை நல்லா விசாரிங்க. கொலைக்கார லேடி..” என்றார்.

அவர் சொன்னதை கேட்டு விக்னேஷ்க்கு இதயம் உறைந்து போனது. ‘நம் அம்மா இதை செய்திருப்பாரா? என் மாயாவை கொன்றது அவரா?’ யோசிக்கும்போதே தலை சுற்றியது இவனுக்கு.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!