“சுருதிக்கா… நாங்க கிளம்புறோம். அம்மம்மா சொல்லிட்டு வரச் சொன்னாங்க.” என்றபடி அருகில் வந்தவளை,
Advertisement
“கொஞ்சம் டச்சப் பண்ணணும். ஹெல்ப் பண்றியா அதி?” என்று கேட்டு மேடை இறங்கி, ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
நலுங்கிய புடவையைச் சரிசெய்ய அதிதி உதவினாள். பின் சுருதியைப் பார்த்தபடி இருக்க,
Advertisement
Advertisement
“என்ன பாக்குற?”
“இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!” என்று வெண்நிறத்தில் பால் ரோஸ் நிற சரிகைப் பட்டில் அப்சரஸ்ஸாக இருந்த சுருதியின் அழகைப் பாராட்ட,
Advertisement
“நீயும் தான் இன்னைக்கு புதுவிதமான அழகா இருக்க. எந்த ப்யூட்டி பார்லர்?” என்று கேட்டு கண்சிமிட்டினாள்
“ஐயோ பார்லர்லாம் போகல. எல்லாமே ரிது ஆன்டி தான் பண்ணி விட்டாங்க. மாமா கூட கூட்டீட்டு போறேன்னு சொன்னாரு. ஆனா ஆன்டி நான் பாத்துங்கிறேன்னு சொல்லி எல்லாமே அவங்க தான் செஞ்சி விட்டாங்க.” என்று தன்னை வட்டமிட்டுக் காட்டியவள்,
“நைட்டெல்லாம் முகத்துல கடலமாவு போட்டு விட்டாங்க. தலை டிசைனா பின்னி விட்டாங்க. மருதாணி கோன் கூட அவங்க தான் வரைஞ்சி விட்டாங்க. பாருங்க.” என்று காட்டிய கரத்தை ஆவலுடன் பற்றிப் பார்த்தாள் சுருதி. அழகான அராபிக் மெஹந்தி டிசைன் வரையப்பட்டிருந்தது. அதுவும் முழங்கை வரை. சிறுமியின் பளீர் நிறத்தில் அடர் சிவப்புக் கருமையில் கிறுக்கப்பட்டிருந்த மருதாணி பளிச்சென்று பல்லைக் காட்டி, சிறுமியின் வாழைத்தண்டு கரத்தை வடிவாக்கியது.
“ரொம்ப நேரம் எடுத்திருக்குமே இதுக்கு?”
“ம்… நைட் எனக்கும் சரிகாக்கும் போட்டுட்டு தூங்க மணி ரெண்டாச்சி.” என்றவள், அணிந்திருந்த தாவணியைக் கண்ணாடியில் பார்த்து சரி செய்தாள்.
“இது எங்க ஊர் தாவணியாச்சே!” என்று அதிதி உடுத்தியிருந்ததைக் குறிப்பிட்டுக் கேட்டாள்.
“இதுவும் ரிது ஆன்டி தான் தைச்சுத் தந்தாங்க. கேக்குற எல்லாக் கடைலயும் லெகங்கா தான் இருந்தது. பாவாடை தாவணி கிடைக்கல. அதுனால ஆர்டர் போட்டு வரவச்சி, அளவெடுத்து தைச்சி தந்தாங்க. மாமா கூட சூப்பரா இருக்குன்னு சொன்னாரு. நிறைய போட்டோஸ் எடுத்தோம்.” என்று தன் அலைபேசியில் காலையில் இருந்து எடுத்த சுயமிகளைக் காட்டி மகிழ்ந்தாள்.
“நல்லாவே…” என்றவள் கண்களால் ரிதன்யாவை நோக்கினாள். அங்கு பத்ரியும் அவளும் தீவிரமாக வாக்குவாதம் செய்வது தெரிந்தது.
அவர்கள் அப்படித்தான். அவர்களுக்குள் சில நிமிடங்களில், நார்மலாக ஆரம்பிக்கும் உரையாடல், காரசாரமாக மாறி, பல நிமிடங்களுக்கு வாதமாக தொடரும். அதை அவளும் தான் பார்த்திருக்கிறாளே! இருவரையும் கண்டு புன்னகைத்தவள், திரும்பி சுருதிக்குச் சின்னத் தலையசைப்பைத் தந்து விட்டு, இருவரையும் நோக்கி நடந்தாள்.
இருவரின் வாதத்திற்கு காரணம்…
ரிதன்யா படிக்கட்டில் முன்னே இறங்க, பத்ரி தெரியாது படியில் படர்ந்திருந்த அவளின் புடவை முந்தானையில் கால் வைத்து விட்டான்.
ஒரு நொடி தடுமாறியவள், பட்டென விலக இருந்த முந்தானையில் கை வைத்து தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, திரும்பி அவனை முறைத்தாள்.
“சாரி சாரி… நான் கவனிக்காம.” என்று அவன் வேகமாகச் சொல்ல,
“செஞ்சிட்டு செஞ்சிட்டு சாரி கேக்காதீங்க.” என்று விரைப்போடு சொன்னவள்,
“இதே பொழப்பா போச்சி.” என்று முணுமுணுத்து விட்டு நடக்க,
“ஏய் என்ன சொன்ன? பொலப்பா!”
“ஆமாம்… உங்களுக்கு சாரி கேக்குறது தான் ரொம்ப ஈசியா வருதே.”
“நீ எதை மைண்ட்ல வச்சிட்டு பேசுறன்னு எனக்கு நல்லாத் தெரியும். இது மட்டுமில்ல அதுவும் ஒரு ஆக்சிடென்ட்.” என்றவனைத் திரும்பிப்பார்த்து முறைத்தவள்,
“ஆக்சிடென்ட்!!” என்று இடையில் கைவைத்துக் கொண்டு இழுவையாகச் சொன்னவள்,
“உங்களுக்கு என்ன! ஆக்சிடென்ட்னு ஈசியா சொல்லிட்டுப் போய்டுவீங்க. லாஸ் யாருக்கு? எனக்கு தான்.”
“நாந்தான் அதைச் சரி பண்ணித் தந்தேன்ல. என்னோட செலவுல.”
“காச யாரு பாத்தா. நான் சொன்னது என்னோட டயம். அது வேஸ்ட்டாகிடுச்சி. உங்களால ஒரு வாரம் நாங்க ஆட்டோல ஸ்கூலுக்கு போனோம்.” என்று வாதம் செய்து கொண்டிருக்க,
“என்னாச்சி மாவய்யா?” என்றபடி வந்து சேர்ந்தாள் அதிதி.
“தேவையில்லாம பிரச்சனை பண்றா அதி”
“எது நான் பிரச்சனை பண்றேனா?”
“ஆமா நீ தான்… தெரியாம ஒரு விசயம் நடந்தா அதைக் கடந்து போகணும். அத விட்டுட்டு குத்தி காட்டி பெரிய விசயமா ஆக்கக்கூடாது.” என்க, இருவரும் அடித்துக் கொள்ளவில்லை அது தான் குறை.
“எதுக்காக அடிச்சுக்கிறீங்கன்னு சொல்லிட்டு சண்ட போடுங்க மாமா.” என்று இருவருக்கும் இடையில் வந்து நின்றாள்.
சில வாரத்திற்கு முன் நடந்தது அது.
ஏன் என்று தெரியாத அதிதியின் கோபத்தைக் குறைக்க வேண்டி, அவள் வெகு நாள்களாகக் கேட்டதற்கு சம்மதித்தான் பத்ரி.
அது என்னவென்றால் ஸ்கூட்டி ஓட்டக் கற்றுத் தருவது.
“உனக்கு இன்னும் 18 வயசு ஆகல.”
“ஆனா என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஓட்டத் தெரியும். நான் ஸ்கூலுக்கு அதுல போகப்போறேன்னு சொல்லல. ஓட்ட கத்துக் குடுங்கன்னு தான் சொல்றேன்.” என்றவளுக்கு அப்பொழுது மறுப்பைத் தந்தவன், அவளை மலையிறக்கும் பொருட்டு,
“நம்ம காலனிக்குள்ள தான் ஓட்டணும். நான் இல்லாம ரோட்டுக்குப் போக கூடாது.” என்று நிபந்தனைகள் போட்டு, பின்னால் அமர்ந்து கொண்டு கற்றுக் கொடுத்தான். அதுவும் ரிதன்யாவின் ஸ்கூட்டியை.
அவனிடம் இருப்பது பைக் தான். அதை சென்னையில் உள்ள அவனின் குவாட்டர்ஸ்க்கு எடுத்துச் சென்று விட்டான். டெல்லியில் உபயோகித்து வந்த காரை, மருமகளை வெளியே அழைத்துச் செல்ல வசதியாக இருக்கும் என்று வீட்டில் நிறுத்தி வைத்திருக்கிறான். ஆதலால் ரிதன்யாவிடம் கடனாக வாங்கினான்.
செல்ஃப் ஸ்டாட் இருந்த போதும், கிக்கரை உதைத்து ஸ்டார்ட் செய்ய கற்றுத் தருகிறேன் என்று அதை உதைத்து உதைத்தே உடைத்து விட்டான்.
ரிதன்யாவிற்கு அந்த ஸ்கூட்டி சற்று ஸ்பெஷல். அது இல்லாது விடியவே செய்யாது என்ற நிலைக்குச் சென்றிருக்க, அதை உடைத்து விட்டான் என்றால் கோபம் வராதா என்ன?
அவன் கடையில் கொடுத்து பழுது நீக்கி கொடுத்து விட்டான் தான். ஆனாலும், மறையாத சிறு கோபத்தை அவ்வப்போது இப்படிக் காட்ட, இருவரும் முட்டிக் கொண்டு நின்றனர்.
“ம்ஹிம்… நான் மட்டுமில்ல, மாமாவும் சாப்பிடல. அம்மம்மாக்கு மட்டும் தான் எடுத்திட்டு வந்தோம்.” என்க, பத்ரி அவளின் முதுகில் கை வைத்து தள்ளினான், அவளோ ரிதன்யாவின் இடையிலும் கரம் கோர்த்துக் கொண்டு நடக்க, ரிதன்யா திரும்பி சரிகாவைக் கண்டாள்.
சாப்பிடலாம் வா என்று அழைக்க, வேகமாக ஓடிவந்தவள் தாயின் கைக்குள் நுழைந்து கொண்டாள்.
நால்வரும் அருகருகே அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறி, பேசி சிரித்து உண்டு கொண்டிருப்பதைத் தூரத்தில் இருந்து பார்த்தபடியே நின்றாள் சுருதி. அவளுக்கு இரு கட்டை விரலைகளை உயர்த்திக் காட்டி, அதிதி அழகாய் புன்னகைக்க, சுருதியின் மனத்தில் ஒருவித நிம்மதி பரவியது.
பத்ரி என்ற அடிவேரை அசைக்க அம்பை ஏய்தி விட்டாயிற்று. இனி அவனை அந்த அம்பு பார்த்துக் கொள்ளும். அடுத்தது ரிதன்யாவிற்கும் அம்பெய்த வேண்டுமே.
சுதாவும் முத்துலெட்சுமியும் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதைத் கண்டு அவர்களை நோக்கிச் சென்றாள்.
“பெரியம்மா…” என்றபடி அவரின் அருகில் கிடந்த நாற்காலியில் அமர, அவர் முகம் திரும்பிக் கொண்டார்.
அவரால் அவள் செய்த காரியத்தை மறந்து மன்னிக்க முடியவில்லை. அவரின் கையைப் பிடித்தவள், அவரைச் சமாதானம் செய்ய முயன்றாள்.
வீட்டு விடயம் என்று தெரிந்த சுதா, நாசுக்காக எழுந்து வேறிடம் சென்றமர்ந்தார்.
“என்னை மன்னிச்சிடுங்க பெரிம்மா. நான் இப்படி ஆகும்னு நினைச்சு எதுவும் செய்யல. என்னால தான் அவளோட வாழ்க்கை இப்படியாகிடுச்சின்னு நான் தினம் தினம் அழுதிட்டு இருக்கேன். என்னை மன்னிச்சி என்னோட குற்ற உணர்ச்சி குறைக்க உதவி செய்ங்க பெரிம்மா. ப்ளீஸ்…” என்று கெஞ்சும் குரலில் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டு சொல்ல,
“நீ பண்ணது தப்பு தான். ஆனா தப்பு நீ மட்டுமே பண்ணது இல்லை. எல்லாம் விதி… இனி அழுதா மட்டும் மாறிடுமா… விடு… கல்யாண நாள் அதுவுமா அழுதிட்டு.” என்று கண்ணைத் துடைத்தெடுத்தார்.
“இதுவரை நடந்தத விதின்னு வேடிக்க பாத்திட்டோம். ஆனா இனி நடக்கப் போறதையும் விதியேன்னு ஏத்துக்கப் போறீங்களா பெரிம்மா?” என்றாள் பூதாகரமாக. அவர் புருவம் சுருக்கவும்,
“ரிதுவோட வாழ்க்க, அவ மகளோடு முடிஞ்சிடலாம். ரிதன்யாக்குத் துணையா சரிகா இருக்கா. ஆனா சரிகாக்குத் துணை… இனிமே தான் வாழ்க்கை இருக்கு அவளுக்கு. அதை விதின்னு கைக் கட்டி வேடிக்க பாக்க முடியாதே பெரிம்மா.
என்னதான் ரிது வயித்துல பிறந்து புண்ணியம் செஞ்சாலும். விக்ரம் மாதிரியான ஒரு அப்பனுக்குப் பிறந்த பாவத்த அந்தக் குழந்த எங்க போய் கழிப்பா?” என்று சரியாகக் காயை நகர்த்தினாள் சுருதி.
ஏனெனில் நீ குடும்பமாக வாழ வேண்டும். அதற்காக மறுமணம் செய்து கொள் என்று ஏற்கனவே முத்து லெட்சுமி ரிதன்யாவிடம் கூறியிருக்கிறார். அந்தக் கோபத்தில் தான், வீட்டைவிட்டு வந்தாள். மறுபடியும் அதே பேச்சை, எடுத்தால் சம்மதிக்க மாட்டாள். ஆதலால் எந்தக் கோணத்தில் ரிதன்யாவை அப்ரோச் செய்ய வேண்டும் என்று முத்து லெட்சுமிக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சொல்ல வர்ற சுருதி? தெரிவாச் சொல்லு.”
“நான் உங்க பொண்ணப் பத்தி பேசல. நல்லதோ! கெட்டதோ! எதையோ ஒன்ன உங்க மக பாத்திட்டா. கொஞ்சத்துக்குக் கொஞ்சமும் வாழ்ந்திட்டா. அனுபவிக்க வேண்டிய நிறைய விசயங்கள அனுபவிச்சிட்டா. ஆனா சரிகா? அவ பச்ச மண்ணு அவளுக்கு எதுவும் தெரியாது. எதையும் அனுபவிச்சதும் கிடையாது. தனி மரமா நின்னு, உங்க மக, அவ மகளுக்கு நிழலா இருப்பா. ஆனா உங்க பேத்தி உங்க மகளுக்காக மட்டும் இருந்தா போதுமா?
அம்மா தான் படிக்க வச்சா. அம்மா தான் எனக்கு எல்லா நேரத்துலயும் துணையா இருக்கா… சப்போட்டா இருக்கா… எதுக்கு அப்பாங்கிற கேள்வியோட வளந்தவளுக்கு அப்பா வெறும் பேரளவு உறவு தான்.
அம்மா பட்ட கஷ்டத்த நேர்ல பாத்து வளருற பசங்க எதிர்காலம் ரொம்ப வித்தியாசமா இருக்கும். அவங்க லைஃப்ல அப்பாங்கிற கேரக்டரே இருக்காது.
அப்படி இருக்குறப்ப ஹஸ்பெண்ட்ட பத்தி எப்படி யோசிப்பாங்க? முக்கியமா கல்யாணத்து மேல ஒரு வெறுப்பு வரும். அப்பா மாதிரியே தனக்கு வாழ்க்கைத் துணை அமைஞ்சா என்னாகுங்கிற கேள்வியே அவங்க கல்யாணத்த விட்டு விலகி இருக்க வைக்கும். இத நான் சொல்லல. அப்பா இருந்தும் இல்லாம வளர்ற குழந்தைங்களோட நிலை இதுதான்னு சர்வே சொல்லுது. சரிகாவுக்கும் அது மாதிரி கண்டிப்பா கேள்வி எழும்.
உங்க பேத்தி அப்படியே அவ அம்மா மாதிரி. பிடிவாதக்காரி. பிடிவாதமாக அம்மா மட்டும் போதும்னு தனியாவே வாழ வாய்ப்பிருக்கு.
சரி நாம எல்லாரும் பேசி அவளோட மனச மாத்தினாலும்… கல்யாணத்தப்ப விக்ரம் மிகப்பெரிய கேள்வியா வந்து நிப்பான். அவன் வாங்கி வச்ச கடன், பெத்த மகள கடத்தீட்டு போனதுன்னு நிறைய விசயம் இருக்கு. நல்லா இருக்குற பொண்ணயே ஆயிரத்தெட்டு காரணம் சொல்லி விமர்சிக்கும் ஊரு இது. அது இப்படிப்பட்ட அப்பனுக்கு மக-ன்னா சும்மா வா விடும்.”
“இப்ப என்னதான்டி சொல்லவர்ற?”
“ஊருக்குள்ள விக்ரம் ஏற்படுத்தி வச்ச அடையாளம் அழியணும்னா உங்க பேத்திய இன்னார் மகன்னு உலகம் சொல்லணும். அப்பா பாசம்ன்னா என்னென்னு அவளுக்குத் தெரியணும். அதுக்கு…”
“உடனே மாப்ள பாக்க ஆரம்பிக்கிறேன்.”
“கல்யாணத்துக்கு உங்க பொண்ணு சம்மதிக்கணுமே.”
“சம்மதிக்க வைப்பேன்.”
“சூப்பர்… ஆனா ஏற்கனவே வாழ்க்கைல கீழ விழ்ந்து அடிபட்டவ அவ… எழுந்து ஓட என்ன, நிக்கவே ரொம்ப பயப்படுவா… அத்தோட அவளுக்கு வர்ற வாழ்க்கைத் துணை, சரிகாக்கு அப்பாவா மட்டுமில்லாம அவளுக்கும் நல்லதொரு துணையா இருக்கணும்.”
“போன தடவ மாதிரி இல்லாம இந்தத் தடவை நல்லா விசாரிச்சுத் தான் செய்வோம்.” என்றவர் அறியாது, தீப் பார்வை பார்த்தவள்,
“அப்ப அந்த மாதிரி ஒரு பையனப் பாருங்க.” என்று உணவுக்கூடத்தைக் கண்களால் காட்ட, அங்கு பார்த்தவருக்கு, மனம் நிறைந்து போயிருந்தது.
அங்கு, அதிதி முதலில் அமர்ந்திருக்க, ரிதன்யா அடுத்ததாக இருக்க, சரிகா தாயின் அண்மையில் இருந்தாள். பத்ரி வேண்டுமென்றே சரிகாவின் இலையை நிறைக்க, அவள் சிணுங்கிய படி தாயிடம் முறையிட்டாள்.
அவள் தான் பத்ரியுடன் பேச மாட்டாளே. அதான் பார்வை சண்டை.
“ஆத்தாடி சந்திரமுகியாட்டம் இருக்க. இந்தா! உனக்குள்ள இருக்குற சந்திரமுகிக்கும் சேத்து சாப்பிட்டு.” என்று மீண்டும் ஒரு கரண்டி வைத்தான். அவள் கை கால்களை உதறி அழ, அதிதி மாமனுக்கு ஆதரவாக பேசி வெடிப்பு சிரிப்பு சிரிக்க, ரிதன்யா பத்ரியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் தன் மகளை விட்டுவிடும்படி.
பத்ரி, சரிகாவின் அருகில் அமர்ந்து உணவைப் பங்கிட்டு, “இலைல வச்சத வேஸ்ட் பண்ணக் கூடாது. இத நீ சாப்பிடு. இத நான் எடுத்துக்கிறேன்.” என்று ஒரு இலையில் தன் பங்கை எடுத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினான்.
பத்ரி கேலியாக எதுவோ சொல்ல, சரிகா சிணுங்க, ரிதன்யா கெஞ்ச, அதிதி சிரிக்க என்று நிறைவோடு இருந்த காட்சியைக் கண்டு விழிகள் கலங்கின.
ரிதன்யா ஏற்கனவே ஒரு வாழ்க்கையைக் கண்டவள். கிட்டத்தட்ட சூடு கண்ட பூனை. ஆனால் பத்ரி அப்படி அல்லவே. திருமணம் ஆகாதவன். அவனை எப்படி தன் மகளுக்காக கேட்பது? என்ற தயக்கத்தோடு சுதாவைத் திரும்பிப் பார்க்க, அவரும் உடைப்பெடுத்த கண்களோடு மகனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு எந்த அம்பும் தேவையில்லை. அவர் தான் பார்க்கும் எல்லா பெண்களையும் மனத்தில் மகனின் அண்மையில் நிற்க வைத்து ஜோடிப் பொருத்தம் பார்க்கின்றவரே…
அதை எத்தனையோ முறை சுருதியிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார்.
“இவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிட்டா… நான் நிம்மதியா கண் மூடுவேன். இவெ என்னடான்னா ஒருத்தியையும் பண்ணிக்க மாட்டேங்கிறான். கேட்டா எனக்கு அப்படி யாரையும் பாக்கத் தோனல, பழகத் தோனலங்கிறான். அவன் உடம்புக்கு, எதோ வியாதியா இருக்குமோன்னு, நினைச்சி நினைச்சே பிரஷரும் சுகரும் கண்டமேனிக்கு எகுறுது.” என்ற வசனத்தை, மாதம் தவறாது சுருதியிடம் சொல்லி விடுவார்.
இவளும் அவனிடம், “ஒரு கல்யாணம் தான சார்… பண்ணா என்ன? உங்கம்மாக்கு உடம்பு கெட்டுப் போறது உங்கள நினைச்சு தான்.” என்று குற்றம் சுமத்த, பல நாள்கள் பதிலே சொல்ல மாட்டான். சிரித்தபடி கடந்து விடுவான் அந்தக் கேள்வியை.
ஒரு நாள் சுதா மிகவும் மனவருத்தத்துடன், பத்ரியின் இருண்ட பக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டினார்.
அவர் சொன்னதைக் கேட்டவளுக்கு பத்ரி, டெமிசெக்சுவல் என்ற நிலையில் இருக்கிறானோ என்ற சந்தேகம் வந்தது. அவனின் நடவடிக்கைகளும் உறுதிபடுத்தியது.
அக்கா, அம்மா, அதிதி என்று பெண்களுக்கு மத்தியில் அவர்களின் பிரச்சனைகளைப் பார்த்து பழகியவனுக்கு, பெண்ணின் அருகாமை கிளர்ச்சியையும் காதல் உணர்ச்சியையும் தராது போயிருக்கிறது.
ஆனால் அவனை உரிமையுடன் நெருங்கி, அவன் மனத்தைத் தொடும் மங்கையிடம் அதுவரை வேலை நிறுத்தம் செய்த ஹார்மோன்கள் செயல்படும்.
ஆதலால் திருமணமானால் சரியாகும் என்று சுதாவிடம் சொல்லி வைத்தாள்.
நிச்சயம் ரிதன்யா பத்ரியின் மனைவியானால் மட்டுமே இதயத்தில் இடம் பிடிப்பாள். அது அவர்களை நல்லதொரு இல்லற வாழ்க்கைக்கு வழி காட்டும்.