Skip to content
Post Views: 259
அத்தியாயம் – 23
கோவை, தேவராஜன் இல்லம்
Advertisement
கடந்த சில மாதங்கள் வருணனுக்கு மின்னல் வேகத்தில் பறந்தது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல். அதற்கான உத்திகளை வடிவமைத்து செயல்படுத்துவதில் வேலை நெட்டித் தள்ளியது. நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தவர், தேர்தல் முடிந்த பின்னரே வீட்டில் தளர்வாக அமர்ந்திருந்தார்.
“கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடு கண்ணு! அதான் எலெக்ஷன் எல்லாம் முடிஞ்சிடுச்சே. அப்பாவும், புள்ளயும் இன்னும் எதுக்கு இப்டி ஓடிக்கிட்டே இருக்கீங்கன்னு தெரியல” என்று சலித்தபடி மகனுக்கு உணவை பரிமாறினார் ராஜேஷ்வரி.
Advertisement
Advertisement
அதற்கு பதிலளிக்காமல் சிரித்த வருணன், வெகு நாட்களுக்குப் பிறகு அன்னையின் கைப்பக்குவத்தில் ஒரு பிடி அதிகமாகவே உண்டார்.
“என்னடா, தமிழ்நாட்டுல யாரு வருவா? எல்லாரும் வெற்றி வேந்தன் தான்னு அடிச்சு சொல்றாங்க…” என்றார் ராஜி. எப்படியாவது மகனைப் பேச வைத்து விடும் ஆர்வம் அவரிடம்.
Advertisement
“நீங்க தான் எக்சிட் போல் பார்த்தீங்களே…அப்புறம் எங்கிட்ட கேக்குறீங்க?” என்றார் விடாக்கண்டனாக.
“ம்ம்ம், என்னவோ போ. ஜனங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்?”
அன்னையை நிமிர்ந்த பார்த்த வருணன், அதை ஆமோதிப்பது போல் தலையை அசைத்தார்.
“சரி அதெல்லாம் கெடக்கட்டும். வசு கிட்ட பேசினியா?” என்றதும் வருணனிடம் மௌனம்.
“ரெண்டு நாள் முன்னாடி கூட என்கிட்ட பேசினாடா. புள்ள குரலே ரொம்ப வாட்டமா இருந்துச்சு”
“ம்ம்ம்”
“அது சரி, நீ இப்டி பிடிச்ச வைச்ச புள்ளையாராட்டம் உக்காந்திருந்தா நல்லாவா இருக்கு”
அன்னையை விநோதமாகப் பார்த்த வருணன்,
“ஏன் மா, இப்ப தான் ரெஸ்ட் எடுன்னு அட்வைஸ் பண்ணீங்க? அதுக்குள்ள வேற மாதிரி பேசுறீங்க…” என்றார் சிரித்தபடியே.
“ம்ப்ச், வருண் என்ன விளையாட்டு இது?” என்று மகனைத் கடிந்தார் ராஜி.
“என்னப் பார்த்தா விளையாடுறதுக்கு டைம் இருக்க ஆள் மாதிரியா இருக்கு” என்று அன்னையை முறைத்தார் வருணன்.
“அப்டி சொல்லல கண்ணு. நீ வேணும்னே புள்ள கிட்ட பேசாம இருக்கியா என்ன? உன்னைப் பத்தி தான் கேட்டுச்சு, எனக்கென்னவோ உங்கிட்ட பேச முடியாம என்கிட்ட பேசின மாதிரி தான் தோனுச்சு”
“மா, பாக்குறீங்க தானே. இன்னிக்கு தான் இப்டி உக்காந்து நிம்மதியா சாப்டவே நேரம் கிடைச்சிருக்கு”
இந்த முறை மகனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்த ராஜி,
“ஏன்டா, அதுக்குன்னு நீ ப்ரைம் மினிஸ்டரை விட பிசியா இருக்குன்னு நீ சொல்றத நான் நம்பணுமா?” என்று எகிறினார்.
“ஹா, ஹா தேவராஜன் பொண்டாட்டின்னு கரெக்ட்டா ப்ரூவ் பண்றமா” என்ற வருணன், எழுந்து வந்து அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டவர்,
“ஆனாலும் நீங்க பாயிண்ட் எல்லாம் இப்டி கரெக்டா கேட்ச் பண்ணுக்கூடாது” என்றார்.
“ம்ப்ச், ஒழுங்கா பதில் சொல்லு வருண்! நாங்க அவளைப் பார்க்கப் போயிருந்தப்போ புள்ள உன்னையத் தேடி ஏங்கி போயிடுச்சு கண்ணு. ஆதரவா நின்னு எல்லாத்தையும் சரியா நடத்திக்க வேண்டிய நேரத்துல ஏட்டிக்குப் போட்டியா எதுவும் பண்ணிராதப்பா!”
வருணன் அதற்கு பதிலளிக்கும் முன்பே, அலைபேசியை காதில் கொடுத்தபடியே வந்த தேவராஜன், மனைவியிடம் கண் காட்டி விட்டு,
“கண்ணு, உதய் தம்பி பேசணுமாம்…” என்றபடி மகனிடம் தர, யோசனையுடனே அதைக் காதில் வைத்தார்.
“சொல்லுங்கண்ணா, ஏன் அப்பா நம்பர்க்கு கூப்ட்ருக்கீங்க?”
“அப்பா பேசினாங்க, வீட்ல இருக்கவும் உங்கிட்ட கொடுக்க சொன்னேன்…” என்று சில நொடிகள் மௌனம் காக்க,
“அது பரவாயில்ல, எதுவும் பிரச்சனையா?” என்று வருணன் அவரை பேச ஊக்கினார்.
“இல்லன்னு சொல்ல மாட்டேன்…”
“ரைட்…புரிஞ்சது!”
“உன்னால சென்னை வர முடியுமா?” என்க, வருணன் தயக்கத்தில் மௌனம் காத்தார்.
“என்னடா…யோசிக்கிற?”
“நாளைக்கு ரிசல்ட் வர்றப்போ நான் டெல்லில இருக்கணுமேணா”
“ஓ…” என்று நிறுத்தியவர்,
“இன்னிக்கு வர முடியுமா பாரேன் வருண். நாளைக்கு இங்க இருந்தே டெல்லி கிளம்பு?” என வினவ,
“ஹ்ம்ம்ம்…ஓகே…வந்துட்டு கால் பண்றேன்” என்று அழைப்பை துண்டித்தார்.
“என்ன கண்ணு?” என்றார் தேவராஜன்.
“இன்னிக்கே சென்னை வர சொல்றாங்கப்பா. நிலைமை நாம நினைச்சத விட மோசமா இருக்கு” என்றார் வருணன் யோசனையுடன்.
“ம்ம்ம்…மணிவாசகம் அண்ணாவும் அப்டித் தான் சொன்னாங்க” என்ற தேவராஜன் முகமும் சற்று கலவரமாகத் தான் இருந்தது.
“இங்க பெருசா சீட்ஸ் கெடைக்காதுப்பா! அதனால தான் மித்த ஸ்டேட்ஸ் ஃபோக்கஸ் பண்ண சொன்னேன். இப்ப பிளான் கொஞ்சம் சேஞ் பண்ணனும்”
“அப்போ ஒன்னு பண்ணலாம். நானும் உன் கூட சென்னை வர்றேன். என்ன பண்றதுன்னு பார்த்துக்கலாம்”
“சரிப்பா, அது கூட நல்ல ஐடியா தான்” என்றவுடன், தேவராஜன் பயணத்திற்கான ஆயத்தங்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்.
அது வரை பார்வையாளராக இருந்த ராஜி,
“நான் கேட்டதுக்கு சரியா பதில் சொல்லலையே?” என்றார் தீவிரமான குரலில்.
“நான் ஏன்மா ஏட்டிக்குப் போட்டியா பண்ணப் போறேன்? உண்மையிலயே வேலை ஜாஸ்தி! அதோட இவ்வளவு வருஷம் டைம் கொடுத்திட்டேன். இப்ப கொஞ்சம் ஸ்பேஸும் கொடுத்துருக்கேன், அவ்ளோ தான்”
“அதுக்காக பேசாம இருக்கியா என்ன?”
“பேசமயா? அதெல்லாம் இல்ல. அவங்க எங்க கட்சி பிரதமர். நான் பேசாம எப்டி இருக்க முடியும்?”
“வருண்! உன்னோட வாய்ச்சவடால் எல்லாம் எங்கிட்ட வேணாம். நீ வேலை விசயமா பேசுறதப் பத்தியா நான் கேக்குறேன்?” என்று மகனை முறைத்தார்.
அதற்குப் பதிலில்லை வருணிடம். மகனது மௌனமே ராஜிக்கு தேவையான பதிலைத் தந்து விட,
“நீ பண்றது சரி கிடையாது வருண்!” என்றவர் கணவருக்கு உதவ சென்று விட்டார்.
சில நிமிடங்கள் உணவு மேசை நாற்காலியிலேயே, இலக்கில்லாமல் வெறித்தபடி அமர்ந்திருந்தார் வருணன். கடிகாரத்தின் ஓசையில் சிந்தனை கலைந்தவர், மடமடவென தயாராகி, தந்தையுடன் சென்னை சென்றார்.
வருணனுக்கு மின்னல் போல நகர்ந்த அதே சில மாதங்கள் வசுந்தராவிற்கு நத்தை போல் ஊர்ந்தது! கௌதம் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்திருக்க, மனோகர் சித்தார்த்தின் பணியிடத்தை அழகாய் இட்டு நிரப்பினார்.
லலிதா தலைமை அமைச்சரின் அலுவலகத்தை ‘Business as usual’ என்பார்களே, அது போன்ற ஒரு இயல்புக்குக் கொண்டு வந்திருந்தார். இந்த வெளி முன்னேற்றங்கள் எல்லாம் வசுந்தராவின் மனநிலையை எந்த விதத்திலும் இலகுவாக்கவில்லை.
அன்று வழமையான பணியில் இருந்தவர்,
“மறுபடியும் தலை ரொம்ப வலிக்குது லலிதா” என்க, அவரை கவலையாகப் பார்த்தார் லலிதா. இந்த வாரத்தில் இது தொடர்ந்து நான்காவது நாள், இஞ்சி டீயிலும், வலி நிவாரணிகளிலும் வசுந்தரா அந்த நாளை நெட்டித் தள்ளுவது.
தேவையானவற்றை வரவழைத்துக் கொடுத்த லலிதா, அதற்கு மேல் அழுத்தி எதையும் கேட்க தயங்கினார். ஆனால் அந்த தயக்கம் எல்லாம் மனோகருக்கு இல்லை போலும்.
அவர்களது உரையாடலைக் கேட்டபடி இருந்தவர்,
“மேம், சாரி டு இன்ட்டரப்பட். பட் இதுவும் என்னோட டியூட்டி தான். நீங்க நைட் சரியா தூங்குறது இல்லையா?” என்றார் நேரடியாக.
வசுந்தரா அவரை கேள்வியாகப் பார்க்க,
“கௌதம் என்கிட்ட உங்க வெல் பீயிங் பத்தி கன்செர்ன் ரைஸ் பண்ணாரு” என்றார் மனோகர்.
இப்போது மனோகரை கேள்வியாகப் பார்த்த வசுந்தரா,
“வெல் பீயிங் கன்செர்னா?” என்றார் கண்டனமான குரலில்.
“எஸ் மேம், அடிக்கடி அண்டைம்ல வாக்கிங் போறீங்க. யூ ஆர் நாட் கெட்டிங் இனஃப் ஸ்லீப். இது SPG அப்சர்வேஷன்”
“ரைட்…ஆனா இது என்னோட பெர்சனல் ஸ்பேஸ்!”
“தேர் இஸ் எ டெலிகேட் ஓவர்லேப்! உங்களோட ஹெல்த் அண்ட் வெல் பீயிங் ப்ரொடெக்ட் பண்றது கூட எங்க டியூட்டி தான். நீங்க எடுக்குற டிசிசன்ஸ்ல அது இம்பாக்ட் பண்ணும்.”
ஒரு நீண்ட பெருமூச்சு வசுந்தராவிடம். அவர் லலிதாவை குறிப்பாகப் பார்க்க, அவர்,
“ஐ’ல் பினிஷ் திஸ் ஃபைல் சார்” என்றுவிட்டு, வெளியேறினார்.
“உக்காருங்க மனோகர் ஜி” என்று இருக்கையை கைகாட்டிய வசுந்தரா, எழுந்து சாளரத்தின் அருகில் நின்றார். அவரது தயக்கத்தை உணர்ந்த மனோகர்,
“ஐ அண்டர்ஸ்டேண்ட் யுவர் பெர்சனல் ஸ்பேஸ். நீங்க என்கிட்ட எதுவும் சொல்ல அவசியம் இல்ல” என்றார்.
“ம்ம்ம்…ஐ நோ! நீங்க எப்டி இருக்கீங்க?”
இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காத மனோகர் சில நொடிகள் விழித்து,
“ஐ…ஐ ஆம் ஃபைன் மேம்! தேங்க் யூ ஃபார் ஆஸ்கிங்” என்றார்.
“சித்தார்த் இல்லாத வீட்டுக்கு பழகிட்டீங்களா?”
சில நிமிட அமைதிக்குப் பிறகு,
“உண்மைய சொல்லணும்னா, அவன் காலேஜ் முடிச்சப்பறம் நாங்க ஒரே வீட்ல இருந்த டைமை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனா எந்த நாட்ல இருந்தாலும், எங்களுக்கு அப்டி தள்ளி இருக்க ஃபீலே கொடுக்க மாட்டான்” என்று லேசாகப் புன்னகைத்தார் மகனின் நினைவில்.
அவர் சிலாகிப்பதை, குறுக்கிடாமல் கவனமாகக் கேட்டிருந்தார் வசுந்தரா.
“இந்த போஸ்ட் எடுத்தப்புறம் எங்க கூட இருக்குறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணான். பட், எப்பவும் டியூட்டி தான் ஃபர்ஸ்ட். இட்ஸ் இன் அவர் ப்ளட்!” என்க, வசுந்தரா ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.
“உங்களைக் கஷ்டப்படுத்துறது என்னன்னு எனக்கு முழுசா புரியல…ஒருவேளை சிட் காரணமா, நீங்க உங்களைத் தண்டிச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா அது தேவையில்லாதது மேம்” என்றதும், வசுந்தரா அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய,
“நானும், சித்தார்த்தும் ஏன் பிரேக்-அப் பண்ணோம்னு தெரியுமா?” என்று மெதுவாகக் கேட்க, அதற்கு இல்லையென்பது போல் தலையசைத்த மனோகர்.
“அது உங்களோட பெர்சனல்! நடந்து முடிஞ்சது அப்டியே இருக்கட்டுமே. சிட் இருந்திருந்தாலும்…நீங்க ஒரு ஹேப்பி லைஃப் லீட் பண்ணனும் தான்னு நினைச்சிருப்பான். அது என்னால கண்டிப்பா சொல்ல முடியும்!”
மனோகர் கூறியதை நிதானமாய் உள்வாங்கிய வசுந்தரா, நெஞ்சில் கை வைத்து,
“தேங்க் யூ, மனோகர் ஜி” என்க, அதைக் கேட்டவரின் மனம் ஒரு நொடி கனத்தது. ஆனால் வசுந்தராவை ஆதுரமாகப் பார்த்து புன்னகைத்தவர், ஒரு தலையசைப்புடன் விடைபெற்றார்.
வசுந்தராவிற்கு மனதில் இருந்து பெரும் பாரம் நீங்கிய உணர்வு. மனோகர் தானாகவே இந்த விஷயத்தைப் பேசியது அவருக்கு அப்படி ஒரு ஆறுதலைக் கொடுத்தது. இருக்கையில் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தவர், காக்க வைத்த காலங்கள் போதும் என்று உணர்ந்தாரோ என்னவோ, உடனடியாக வருணனின் தனிப்பட்ட எண்ணிற்கு அழைத்தார்.
விமான நிலையத்தில் காத்திருந்த வருணனுக்கு வசுந்தராவின் எண்ணைப் பார்த்ததும், கண்கள் ஒளிர்வதை தவிர்க்க முடியவில்லை. நெற்றி சுருங்க அலைபேசியைப் பார்த்தவர், அழைப்பை ஏற்கவில்லை. மூன்று அழைப்புகள் தவறிய பின்னர், ‘எதுவும் அவசரமோ’ என தனது அலுவலக எண்ணை எடுத்துப் பார்த்தார். அதில் எந்த அழைப்பும் இல்லை.
அருகிலிருந்த தேவராஜன் வேறு,
“என்ன கண்ணு…போனை அட்டெண்ட் பண்ணாம யோசனை பண்ணிட்டு இருக்க?” என்கவும், அவரிடம் ஐந்து நிமிடம் என்பது போல் சைகை செய்தவர், சற்று ஒதுக்கமான இடத்திற்குச் சென்று, வசுந்தராவிற்கு அழைத்தார்.
எடுத்தவுடனேயே,
“எதுவும் பிரச்சனையா, வசு?” என அழுத்தமான குரலில் கேட்க, எதிர் முனையில் மௌனம்.
“வசு…லைன்ல இருக்கியா?” என சற்று அதட்டலாகவே கேட்க,
“ம்ம்ம்…இருக்கேன்” என்றார் வசுந்தரா மெல்லிய குரலில்.
“ம்ப்ச், இத்தனை வாட்டி கூப்பிட்டுருக்க…நான் கூப்பிட்டா அமைதியா இருக்க?”
“நீ கூப்பிடுவன்னு நினைக்கல…”
“அது சரி! ஏன் ஆஃபிஸ் ஃபோனுக்கு கூப்பிடாம இதுல கூப்ட்ருக்க?”
“விஷயம் இருந்தா தான் கூப்பிடணுமா? நீயும், நானும் அப்டியா பழகிருக்கோம்?”
என்றார் சலுகையான குரலில். பல வருடங்களுக்குப் பிறகு இது போன்ற ஒரு குரல். அதை சிறிதும் எதிர்பார்க்காத வருணன், ஒரு முறை அலைபேசியைப் பார்த்தார். இந்த மாற்றத்தை உள்வாங்க நேரம் வேண்டும் போல் இருக்க,
“ஒன்னும் பிரச்சனையில்லாட்டி, அப்றமா கூப்பிட்றேன்” என அழைப்பை துண்டிக்கப் போனார். அதற்குள்,
“ஒரு 2 மினிட்ஸ்” என்று வேகமாக இடையிட்ட வசுந்தரா, “எனக்கு உன்னை நேர்ல பாக்கணும் வரு…” என்றார்.
‘இதைச் சொல்வதற்கு…இத்தனை நாட்களா?’ என நினைத்த வருணன், குரலில் எதையும் காண்பிக்காமல்,
“நாளைக்கு அசெம்பிளி எலெக்ஷன்ஸ் ரிசல்ட்ஸ் வருதுல்ல…தாரா மேமைப் பாக்கணும்” என்றார்.
“ரொம்ப நல்லதா போச்சு. இந்த வாட்டி என்னைப் பாக்காம நீ கோவைக்குப் போகக் கூடாது” என உரிமையாகக் கூற, அதில் சுர்றென்று ஏறி விட்டது வருணனுக்கு.
“என்னைய பாக்குறதுக்கெல்லாம் பிரதமருக்கு டைம் இருக்குமா?” என நக்கலாகக் கேட்க,
“நான் பண்ண தப்பை நீயும் பண்ணாத வரு!” என்றார் வசுந்தரா இரும்புக்குரலில்.
குரலின் பேதத்தில் தன்னையே நொந்து கொண்ட வருணன்…
“சென்னை போக ஏர்போர்ட்ல இருக்கேன் வசு. டெல்லி வந்தப்புறம்…இந்த எலெக்ஷன் டென்ஷன் கொஞ்சம் செட்டில் ஆகட்டும்” என்றார் சற்று இறங்கி வந்து.
“ம்ம்ம்…”
அந்த ‘ம்ம்ம்’ பல மாதங்களாக காணாமல் போயிருந்த பழைய வசுவை நினைவுபடுத்த, இறுக்கம் தளர்ந்து இயல்பான வருணன் எட்டிப் பார்த்தார் போலும்.
“ம்ப்ச்…எவ்ளோ நாள் கழிச்சு பெர்சனலா பேசுறோம்? இவ்ளோ தான் ரியாக்ஷனா?” என்று வேண்டுமென்றே சீண்டவும், வசுந்தரா
“ரியாக்ஷன் எல்லாம் ரிசர்வ்ட்” என்றார் மீண்டு விட்ட மிடுக்குடன்.
அதில் திருப்தியான வருணன்,
“ரியாக்ஷன் மட்டும் தான் ரிசர்வ்டா, வசு?” என்றார் கரகரத்த குரலில்.
“அது உன் கைல தான் இருக்கு!”
“பார்றா, இது எப்பயிருந்து?”
“நேர்ல வா சொல்றேன்!”
“இந்தப் பகுமானத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல”
“ஏன் வேற எதுல குறைச்சல் உனக்கு?” என்ற வசுந்தராவின் குரல் சற்று உயர,
“ம்ப்ச், தெரியாத மாதிரி கேக்காத வசு” என்றார் வருண் பல்லைக் கடித்து.
பின்னணியில் சென்னை விமானப் பயணிகளுக்கான அழைப்பு விடுக்கப்பட,
“ஹேவ் அ சேஃப் ப்ளைட் வருண்!” என்று இணைப்பைத் துண்டித்து விட, ஒரு நீண்ட பெரு மூச்சுடன், தந்தையை நோக்கி நடந்தார் வருணன்.
error: Content is protected !!