Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 21.2

மறுநாள் விடிந்த பொழுது சந்தியாவுக்கு சோதனைக் காலமாகவே விடிந்தது. வழக்கம் போல எழுந்து அலுவலகம் செல்லத் தயாரானவளுக்கு குறித்தநேரத்துக்கு காபியும், காலையுணவும் உணவுமேஜையில் எடுத்துவைக்கப்பட்டுவிட அன்னையையோ, பெரியன்னையையோ நேருக்கு நேராகப் பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லாததால் தலையைக் குனிந்தபடியே சாப்பிட அமர்ந்தாள் அவள்.

 

இரண்டாவது இட்லியை விண்டு வாயில் வைக்கப் போனவள் தந்தையின் தொண்டைச்செருமலில் அசையாமல் சிலையாக, அவள் அருகில் வந்து அமர்ந்தார் தேவராஜ். அவருடன் சதாசிவமும் அமர்ந்துவிட சில நிமிடங்களில் அவர்களுக்கு ஆவி பறக்க இட்லிகளைக் கொண்டு வந்தார் ரேவதி.

 



Advertisement

ஒவ்வொருவராக வரவும் சந்தியாவுக்குள் உள்ளுக்குள் உதறலெடுக்க, அதிசயமாகக் குனிந்த தலை நிமிராமல் சாப்பிடும் தங்கையை ஆச்சரியமாகப் பார்த்தபடி அவள் அருகில் அமர்ந்தாள் சுமித்ரா.

 

ரேணுகா அவள் தட்டில் இட்லியை வைத்தபடி “சுமி உன் தங்கச்சி கிட்ட சொல்லிடு… அவ விருப்பத்துக்கு நாங்க எப்போவுமே தடையா நிக்க மாட்டோம்னு..” என்று பலத்த பீடிகையைப் போட சுமித்ராவுடன் சேர்ந்து சந்தியாவும் நிமிர்ந்து அவளது அன்னையைப் பார்த்தாள்.

Advertisement

 

Advertisement

ரேணுகா அவளது பார்வையைச் சந்திக்க விரும்பாதவராய் “அவளுக்கும் சூரியாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. இன்னைக்குக் காத்தாலே உங்க சித்தப்பா நாராயணன் அண்ணாவுக்குப் போன் பண்ணிச் சொல்லிட்டாங்க” என்று யாருக்கோ சொல்வது போல முகத்தைத் திருப்பிக்கொண்டு சொல்லிவிட்டு சாம்பார்க்கிண்ணத்தைக் கோமதியம்மாளுக்கு நகர்த்தினார்.

 

சந்தியா அவளது தாயாரின் பேச்சில் ஸ்தம்பித்தவள் அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்திருக்க கோமதியம்மாள் பேத்தியில் அதிர்ச்சியில் துணுக்குற்றவர் அவளிடம் “என்னாச்சு ராஜாத்தி? உனக்கு இந்தச் சம்பந்தத்துல விருப்பம் தானே?” என்று கேட்க

Advertisement

 

சந்தியாவுக்கு முந்திக் கொண்டு “அதுல்லாம் விருப்பமா தான் இருக்கும்மா. அவளோடது மூனு வருச லவ்வாச்சே… அவ வேண்டான்னா சொல்லப் போறா?” என்றார் ரேணுகா மகளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.

 

சந்தியா அதிர்ச்சி தெளிந்ததும் எழுந்து கை கழுவிவிட்டு வந்தவள் மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தாள். அனைவரும் கை கழுவி விட்டு வரவே சுமித்ராவுக்கு அலுவலக கேப் வரவும் அவள் கிளம்பிவிட, சந்தியா மட்டும் அங்கேயே நிற்கவும் ரேவதி “என்னடா இன்னைக்கு ஆபிஸ்கு போகலையா?” என்று கேட்க

 

“போகணும் பெரியம்மா.. ஆனா அதுக்கு முன்னாடி உங்க எல்லார் கிட்டவும் ஒரு விஷயத்தைச் சொல்லணும்” என்று தயங்கியபடியே ஆரம்பித்தவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று உள்ளம் பதைக்க ஆனால் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் கேட்க ஆரம்பித்தனர்.

 

“எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் இல்லை.. நான் என் படிப்பை முடிச்சுட்டு என்னோட புரஃபசன்ல எனக்குனு ஒரு இடத்தை உருவாக்கிட்டுத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்”

 

அவளது வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அங்கே அனைவருக்கும் குழப்பத்துடன் கூடிய கோபத்தை உண்டாக்கியது. அவளை ஏதோ சொல்லப் போன ரேணுகாவைக் கையமர்த்திய கோமதியம்மாள் மேலே சொல்லு என்பதைப் போல சந்தியாவைப் பார்க்க அவள் தொடர்ந்தாள்.

 

 

[the_ad id=”6605″]

 

“சூரியாவை நான் காதலிச்சது உண்மை தான்.. ஆனா இப்போ என்னால அவனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது… என்னோட ஆர்டிக்கிள்ஷிப் பீரியட் முடிஞ்சு ஃபைனல் எக்சாமுக்கு அப்புறம் தான் நான் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பேன்”

 

ரேணுகா அதற்கு மேல் பொறுக்க முடியாமல் “ஏன்? இப்போ கல்யாணம் பண்ணுனா உன்னோட ஆர்டிக்கிள்ஷிப், ஃபைனல் எக்சாம் பிரிப்பரேசன்லாம் கெட்டுப் போயிடுமோ?” என்று எரிச்சலுடன் கேட்க

 

சந்தியா “கல்யாணத்துக்கு அப்புறம் குடும்பம், குழந்தைனு வந்துட்டா என்னால ஸ்டடீஸ்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியாதும்மா… சூரியா ஆம்பளை, அவன் கடமை சம்பாதிச்சுக் கொட்டுறதோட முடிஞ்சுதுனு தூசியைத் தட்டிட்டுப் போயிடுவான்… நான் தான் குடும்பப்பொறுப்பு, குழந்தைனு ஒன்னு வந்தா அதோட வளர்ப்பு இதைலாம் என் தலையில தூக்கிப் போட்டுக்கணும்…என்னால அப்பிடி என் புரஃபசனை தியாகம் பண்ணிலாம் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்க முடியாதும்மா” என்றாள் உறுதியாக.

 

அவளது பேச்சில் அனைவரும் வாயடைத்துப் போய் நிற்க ரேணுகா “இப்பிடிலாம் பேச நீ யார் கிட்ட படிச்ச சந்தியா? இவ்ளோ வக்கணையா பேசுறியே, உன்னைப் பெத்தவ நான்… நான் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் கவர்மெண்ட் எக்சாமுக்குப் படிக்க ஆரம்பிச்சேன்…

 

நான் எக்சாம் எழுதப் போனப்போ நீ என் வயித்துல ஆறு மாசம்… உன் அப்பா என்னையும் கவனிச்சிட்டு அவரும் ஆபிஸுக்குப் போயிட்டு வருவாரு… அப்புறம் எனக்கு வேலை கிடைச்சதுக்கு அப்புறமும் வீட்டுவேலையில ஆரம்பிச்சு உன்னைக் கவனிச்சுக்கிறது வரைக்கும் அவரு எல்லா பொறுப்பையும் ஷேர் பண்ணிகிட்டாரு… இப்போ சொல்லு, இனிமேயும் இந்தக் கல்யாணம் வேண்டாமா?” என்று சளைக்காமல் அவளுக்குப் பதிலடி கொடுத்துவிட்டார்

 

சந்தியா “மா! உலகத்துல எல்லா ஆம்பளையும் என் அப்பா மாதிரி இருக்க மாட்டான்மா… சூரியாவும் கூட” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

 

ரேணுகா “போதும் சந்தியா.. ஏற்கெனவே எதுக்குடா இப்பிடி ஒரு பிள்ளையை பெத்தோம்னு நினைக்க வச்சிட்ட… இதுக்கு மேலேயும் கண்டதைப் பேசி எங்களைக் கஷ்டப்படுத்தாதே… காதலிப்பேன் ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொன்னா என்ன அர்த்தம்? நாங்க கவுரமா வெளியே தலைகாட்ட முடியாம பண்ணிடுவ போல… லவ் மேரேஜுக்கே ஒத்துக்க தயங்குனவங்க இறங்கி வந்துட்டாங்கனதும் உன் இஷ்டத்துக்குப் பேசக்கூடாது… ஒழுங்கா கல்யாணத்துக்குத் தயாராகு.. இல்லைனா இப்பிடி ஒரு பொண்ணே எங்களுக்குப் பிறக்கலைனு நினைச்சுத் தலை முழுகிடுறோம்” என்று சராசரி நடுத்தரக் குடும்பத்தலைவியாய் தனது முடிவைச் சொல்லிவிட்டு சென்றுவிட

 

சந்தியா கண்ணீருடன் அங்கிருந்து அகன்றவள் ஹேண்ட்பேகைத் தூக்கிக் கொண்டு அலுவலகத்துக்குச் செல்ல விரைந்தாள். முகத்தை அழுந்த துடைத்துவிட்டு தலைகவசத்தை மாட்டியவள் ஸ்கூட்டியை அலுவலகத்தை நோக்கி விரட்டத் தொடங்கினாள்.

 

மனதில் ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, செல்லும் வழியிலேயே திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. சந்தியா மட்டுமில்லை… அந்த நேரத்தில் இருசக்கரவாகனத்தில் அலுவலகம் சென்று கொண்டிருந்த அனைவரும் அதில் மாட்டிக் கொண்டனர்.

 

சந்தியா இது வெறும் சாரல் தானே என்று எண்ணி முன்னேறியவள் ஒரு கட்டத்தில் பலத்த மழையாக ஆரம்பிக்கவும் ஸ்கூட்டியை எங்கே நிறுத்திவிட்டு ஒதுங்கலாம் என்ற எண்ணத்துடன் சாலையில் இருமருங்கிலும் பார்த்தபடியே ஸ்கூட்டியை ஓட்டியபடி மெயின் ஏரியாவில் ஒரு பெரிய அலுவலகம் மரங்களுடன் தென்படவே அங்கே ஸ்கூட்டியை நிறுத்தினாள்.

 

மரத்தடியில் ஒதுங்கியவளுக்கு அலுவலகத்தின் உள்ளே அரவம் ஏதுமின்றி எதையோ அட்டைப்பெட்டிக்குள் அடுக்கி வைக்கும் சத்தம் மட்டும் கேட்டது. அலுவலகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அதன் கட்டிடத்தில் தளிர் என்ற வார்த்தை பித்தளை எழுத்தாக இருப்பதை அண்ணாந்து பார்த்தபடி இருக்க வானில் மின்னல் வெட்டியது.

 

சட்டென்று தலையைக் குனிந்து கொண்டவளின் செவியை இடியோசை அதிரவைக்க அதே நேரம் அந்த அலுவலகத்தின் வராண்டாவில் டிசர்ட் போட்ட ஓர் இளம்பெண் சந்தியாவைக் கைகாட்டி அழைத்தாள்.

 

சந்தியாவுக்கு மழையில் இரைச்சலில் அவள் சொன்ன வார்த்தைகள் அரைகுறையாகக் காதில் விழுந்தது.

 

“மழை ஹெவியா இருக்கு.. உள்ளே வந்து இருங்க மேம்” என்றவளின் கடைசிவார்த்தை மட்டும் தெளிவாகக் கேட்க சந்தியா இதோ வருகிறேன் என்று சைகை செய்துவிட்டு வண்டியைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு அந்த அலுவலகத்தை நோக்கி ஓடினாள்.

 

உடை முழுவதுமாக நனைந்துவிட அந்த டிசர்ட் போட்டப் பெண் “உள்ளே வாங்க மேம்… மழை இப்போதைக்கு விடாது போல… ரொம்ப நேரமா நிக்கிறிங்களா?” என்று பேச்சு கொடுத்தபடியே சந்தியாவை உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

[the_ad id=”6605″]

 

 

அவளை ஒரு நாற்காலியில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று டவலுடன் திரும்பியவள் “துடைச்சுக்கோங்க.. எனக்கு கொஞ்சம் புக்ஸ் அடுக்குற வேலை இருக்கு.. அதை முடிச்சுட்டு வர்றேன்” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு அகல, சந்தியா டவலால் முகம் துடைத்துக் கொண்டாள்.

 

அலுவலகம் நவீனபாணியில் கட்டப்பட்டிருந்தது. பணியாளர்களுக்காகத் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடித்தடுப்புகள், உள்ளே குளிர்க்காற்றை வழங்குவதற்காகப் போடப்பட்டிருந்த சென்ட்ரல் ஏ.ஸி, சில கண்ணாடித்தடுப்புகளின் உள்ளே போடப்பட்டிருந்த மேஜைகளில் அழகாக வீற்றிருந்த கம்ப்யூட்டர்கள் என்று ஒரு அலுவலகத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தது அந்த அலுவலகம்.

 

உள்ளே இன்னும் சிலரின் பேச்சுக்குரல்கள் கேட்க, சுற்றிமுற்றி வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த சந்தியா “புக்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கானு செக் பண்ணிடு மேரி… ஒவ்வொரு பாக்ஸ்லயும் எல்லா சப்ஜெக்ட் புக்ஸும் இருக்கானு தரோவோ ஒன்ஸ் செக் பண்ணிட்டுப் பாக்ஸை சீல் பண்ணிடுங்க…” என்று சொன்னவரின் குரல் சந்தியாவுக்குப் பழக்கப்பட்டக் குரலாக இருக்கவே யோசனையுடன் அமர்ந்திருந்தாள் அவள்.

 

குரலுக்குச் சொந்தக்காரர் சிறிது நேரத்தில் அந்த டிசர்ட் அணிந்த பெண்ணுடன் சந்தியா அமர்ந்திருக்கும் இடத்துக்கு வரவே அவரை அங்கே எதிர்பார்க்காத சந்தியா “மேம் நீங்களா?” என்று திகைத்துப் போனாள்.

 

அவருமே அவளை இந்நேரம் அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை…

 

திகைப்பை அடக்கியக் குரலில் “நீ ஆபிஸ் வர்றதுக்காகத் தான் சூரியா காத்திருக்கான்… ஆனா நீ மழையில மாட்டிகிட்ட போல இருக்கு” என்று அவருக்கே உரித்தான அலட்சியம் தெறிக்கும் முகத்துடன் நின்று கொண்டிருந்தார் ஹேமா.

 

அவரருகில் நின்று கொண்டிருந்த டிசர்ட் அணிந்தவள் “மேம் இவங்களை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க

 

“ம்ம்.. ஷீ இஸ் மை டாட்டர் இன் லா.. ஐ மீன், இவ கூடிய சீக்கிரமே என்னோட டாட்டர் இன் லா ஆகப் போறா மேரி” என்று தெளிவாக உரைத்துவிட்டு நின்றவரின் பேச்சில் இப்போது அலட்சியம் காணாமல் போயிருந்தது.

 

அந்த மேரியை வேலையைக் கவனிக்குமாறு அனுப்பியவர் சந்தியாவிடம் “இங்கேயே இருக்க வேண்டாம்… நீ என்னோட ஆபிஸ் ரூமுக்குப் போ” என்று கூறவும்

 

சந்தியா “ஓகே மேம்” என்றபடி ஹேண்ட்பேகுடன் நகரப்போனவளை “இன்னும் என்ன மேம் மேம்னு சொல்லிட்டிருக்க… அதான் எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டிங்களே… கால் மீ ஆன்ட்டி” என்று அதட்டிவிட்டு அந்த மேரி சென்ற திசையில் சென்றுவிட்டார் ஹேமா.

 

சந்தியா எதுவும் பேசாமல் அவரது அலுவக அறைக்குள் சென்றவள் அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு அந்த அறையை நோட்டமிட ஆரம்பித்தாள்.

 

[the_ad id=”6605″]

 

அவளுக்கு எதிரே கிடந்த பெரிய மரமேஜையின் மீது கம்ப்யூட்டர் ஒன்று அமர்ந்திருக்க சில கோப்புகள் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் ஒரு பேனாவும் பென்சிலும் இருக்க ஹேமா எதையோ எழுதிக்கொண்டிருந்திருப்பார் போலும் என எண்ணியவள் அவரது சாய்வுநாற்காலிக்குப் பின்புறம் தளிர்என்ற வார்த்தையும் அதன் கீழே புத்தகம் ஒன்று விரித்திருப்பது போல ஒரு லோகோவும் இருக்க அவளது பார்வை அதன் பதிவெண்ணை நோக்கியது.

 

சட்டென்று அவளது எதிர்ப்புற சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்த பதிவுச்சான்றிதழை நோக்கியவளுக்கு அப்போது தான் புரிந்தது அது ஒரு தொண்டு நிறுவனம் என்பது. அதன் அருகில் ஒரு முதியவரின் புகைப்படம் மாட்டிவைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே சூரியராஜன்நிறுவனர்தளிர் தொண்டு நிறுவனம் என்று எழுதப்பட்டிருந்தது.

 

“ஓ! இந்தத் தாத்தா தான் இதை ஆரம்பிச்சவரா?” என்ற ஆச்சரியத்துடன் ஹேமாவின் மேஜையிலிருக்கும் அவரது பெயர்ப்பலகையைப் பார்த்தவள் அதில் ஹேமா சூரியராஜன்மேனேஜிங் டிரஸ்டிஎன்று எழுதியிருக்கவும் “ஹேமா மேமோட அப்பாவா இவரு? அப்போ இந்த டிரஸ்டை இவங்க தான் நடத்துறாங்க போல” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டபடி அடுத்தடுத்து வரிசையாகத் தொங்கியப் புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 

அப்புகைப்படங்களில் எல்லாம் ஜே.கே.ஆர் இண்டர்நேசனல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும், சில மாணவர்களுடன் அந்த மேரியைப் போலச் சில பெண்களும் ஆண்களும் அதே டிசர்ட்டில் நின்று கொண்டிருந்தனர். அடுத்தப் புகைப்படத்தில் ஒரு ஸ்டெத் அணிந்த வாலிபன் அவனது பெற்றோருடன் நின்று கொண்டிருந்தான். அடுத்தப் புகைப்படத்தில் அட்டைப்பெட்டிகள் அடுக்கப்பட்ட தளிர் என்ற பெயர் எழுதப்பட்ட ஒரு மினிவேன் நின்றது.

 

இதை எல்லாம் பார்த்தச் சந்தியா இங்கே கல்வி சம்பந்தப்பட்ட சேவையை ஹேமா செய்து வருகிறாரோ என்று எண்ணமிட்டபடி அமர்ந்தாள்.

 

சாரல் வீசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!