Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 3.2

ரேணுகாவுக்கும், தேவராஜுக்கும் விடுமுறை முடிந்து விட்டதால் இருவரும் பணிக்கு மீண்டும் திரும்பும் நாள் வர இருவரும் ஆயிரம் அறிவுரைகள் வழங்கிவிட்டு கிளம்பினர்.

 

பெற்றோர் ஊருக்கு கிளம்பியது தான் தாமதம், சந்தியாவுக்கு இனி தாயாரின் கண்டிப்பு பார்வை இல்லை என்ற சந்தோசம் அவளை வானில் பறக்க வைத்தது. கல்லூரி திறப்பதற்கு இன்னும் நாட்கள் இருந்ததால் அந்த ஊர் சிறுவர்களுடன் சேர்ந்து நன்றாகவே ஊரை வலம் வந்தாள். அப்படி ஒரு நாள் எங்கேயோ நின்ற முந்திரி மரத்தின் கீழே கிடந்த பருப்புகளை பொறுக்கிக் கொண்டு வந்தவர்கள் அதை ஒரு வாணலியில் போட்டு தீ மூட்டி தோலை பிரிக்க முயன்று கொண்டிருந்த போது காரில் ஜித்தேஷுடன் சென்று கொண்டிருந்த சூரியா அந்த சிறுவர்களுடன் சந்தியாவை பார்த்துவிட்டான்.

 



Advertisement

நண்பனிடம் காரை நிறுத்துமாறு கூறியவன் தான் போன் செய்த பிறகு தன்னை அழைத்துச் செல்ல வருமாறு கூறிவிட்டு அவர்களை நோக்கிச் செல்ல ஜித்தேஷ் சரியென்று தலையசைத்துவிட்டு சென்றான்.

 

சூரியா அவர்களை நெருங்கியவன் “பிரவுனி என்ன பண்ணிட்டிருக்க நீ?” என்றவாறு அவளைச் சூழ்ந்து நின்ற சிறுவர்களுடன் சேர்ந்து அவனும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தபடி கேட்டான்.

Advertisement

[the_ad id=”6605″]

Advertisement

சந்தியா அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவள் “முந்திரி பருப்பை சுட்டிட்டுருக்கோம் மார்ஸ்மாலோ. கொஞ்சம் தள்ளி நில்லு, இல்லைனா புகை முகத்துக்குள்ளேயே வரும்” என்று சொல்லவும் அவள் வாணலியில் போட்டிருந்த முந்திரிகள் புகைய தொடங்கியது. சிறிது நேரத்தில் கருநிறமாக மாறிய பருப்புகளை ஒரு பேப்பருக்கு மாற்றிவிட்டு “யாரும் கையை வைக்காதிங்க! ஹீட்டா இருக்கும். அப்புறம் கை பொத்துடும்” என்று கூற

 

சூரியா “இந்த டிரிக்ஸ்லாம் உனக்கு எப்பிடி தெரியும்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டவாறு அவளைப் பார்க்க சந்தியா இல்லாத காலரை தூக்கிவிட்டு பெருமைப்பட்டுக் கொண்டாள். அவளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிய சூரியா பொறுமையில்லாதவனாய் அவற்றில் ஒன்றை எடுக்க அதன் சூட்டில் கை பொத்து விட அவன் வலியில் கையை உதறினான்.

Advertisement

 

“என்னாச்சுடா?” என்றபடி அவன் கையை பிடித்தவள் “எடுக்காதேனு சொன்னேன், கேட்டியா?” என்று கடிந்தபடி வாயினால் காற்றை ஊதி எரிச்சலை மட்டுப்படுத்த முயல சூரியாவுக்கு அவளது அக்கறையான செய்கையில் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

 

சந்தியாவோ அவன் வலியில் தான் கண் கலங்குகிறான் என்று பதறியவள் “டேய் சிண்டு! உங்க வீடு பக்கத்துல தானே இருக்கு. நீ போய் தேங்காய் எண்ணெய் கொண்டு வா” என்று சிண்டுவை விரட்டிவிட்டு “ரொம்ப எரியுதா?” என்று தனது பெரிய முட்டைவிழிகளை விரித்துக் கேட்க அவன் இல்லையென்று தலையசைத்தான்.

“லைட்டா தான் எரியுது பிரவுனி. என் கிட்ட இது வரைக்கும் யாரும் இவ்ளோ அக்கறையா நடந்துக்கிட்டது இல்லை. அதான் நான் கொஞ்சம் எமோசனல் ஆயிட்டேன்” என்று கூற

 

சந்தியா “ஏன் உங்க அம்மா அக்கறை காட்ட மாட்டாங்களா? போடா மார்ஸ்மாலோ! நீ ரொம்ப வித்தியாசமா பேசுற” என்றபடி சிண்டு கொண்டு வந்த தேங்காய் எண்ணெய்யை அவனது சூடுபட்ட கரத்தில் போட்டுவிட ஆரம்பித்தாள்.

 

சூரியா தலையை குனிந்து கொண்டவன் “என்னோட அம்மாவோ குடும்பமோ நீ நினைக்கிற மாதிரி இல்ல பிரவுனி. ஃபேமிலிங்கிற விஷயத்துல நான் பெரிய துரதிர்ஷ்டசாலி” என்றான் வலியுடன். சந்தியா அவனது கடைசி வார்த்தையில் துணுக்குற்றவள் சிறுவர்களிடம் முந்திரிபருப்புகளுடன் எண்ணெயையும் சேர்த்துக் கொடுத்துவிட்டு அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டாள். சூரியாவையும் தான் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகில் அமரச் சொல்ல அவனும் அமர்ந்து கொண்டான்.

 

அந்த சிறுவர்கள் சென்றதும் சூரியாவின் புறம் திரும்பியவள் “நீ இவ்ளோ வேதனைப்படற அளவுக்கு என்னாச்சு மார்ஸ்மாலோ?” என்று ஆதுரமாகக் கேட்க அவன் தன்னை பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் கூற ஆரம்பித்தான்.

[the_ad id=”6605″]

“எங்க ஃபேமிலியில மொத்தம் நாலு பேர். நான், என்னோட தம்பி அப்புறம் அப்பாவும் அம்மாவும். இதுல அப்பாக்கு ட்வெண்டி போர் அவர்ஸும் பிஸினஸ் நியாபகம் தான். அம்மாக்கு லேடிஸ் கிளப், சோஷியல் சர்வீஸ் இதுல்லாம் தான் உலகம். இதுக்கு இடையில நானும் தம்பியும் தான் பாவம்.

 

ஆளாளுக்கு ஒரு பக்கம் போனவங்க எங்க ரெண்டு பேரையும் ஊட்டியில போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க. லீவ் டைம் வீட்டுக்கு வந்தா கூட ரெண்டு பேர்ல ஒருத்தர் கூட வீட்டுல இருக்க மாட்டாங்க. சுத்தி சர்வெண்ட்ஸ் மட்டும் தான் இருப்பாங்க. நாங்க கேக்காத விஷயம் எல்லாமே எங்களுக்கு கிடைச்சுது. ஆனா நாங்க ஏங்குன அம்மாவோட அன்பும், அப்பாவோட அரவணைப்பும் எங்க ரெண்டு பேருக்கும் இப்போ வரைக்கும் கிடைக்கல.

 

ஆரியா, அதான் என்னோட தம்பி அவங்க அப்பிடி தான்னு ஏத்துக்கப் பழகிட்டான். என்னால அப்பிடி நினைக்க முடியல பிரவுனி. நீ ரொம்ப லக்கி. உனக்கு பாட்டி, அக்கா, பெரியம்மா, பெரியப்பா அப்புறம் உன்னோட லவ்வபிள் பேரண்ட்ஸுனு எவ்ளோ பேர் இருக்காங்க” என்று கடைசி வார்த்தையை ஏக்கத்துடன் கூறி முடித்தான்.

 

சந்தியா அவன் கூறிய அனைத்தையும் உம் கொட்டி கேட்டவள் “எனக்கு நீ சொல்லுற மாதிரி எல்லாரும் இருக்காங்க தான். ஆனா நானும் உன்னை மாதிரி தான்” என்று கூற சூரியா விலுக்கென்று நிமிர்ந்தவன் அவளது வார்த்தைகள் ஏற்படுத்திய குழப்பத்தில் அமைதியாக அவளை நோக்கினான்.

 

சந்தியா மெல்லிய குரலில் “நானும் கடந்த ஆறு வருசமா ஹாஸ்டல்ல தான் இருந்தேன். லீவுல மட்டும் தான் அப்பா அம்மாவை பார்க்க முடியும். பெரியப்பா, பெரியம்மா, ஆச்சி, சுமிக்கா கூடல்லாம் இருக்க முடியும். ஆனா எனக்கு எங்க அப்பா அம்மா என்னை ஒதுக்கி வச்சிட்டாங்கன்னு கோவம் இல்ல. ஃபர்ஸ்ட் டைம் ஹாஸ்டல்ல விடுறப்போ எனக்கும் உன்னை மாதிரியே ஏக்கம், கோவம்லாம் நிறைய இருந்துச்சு. இவ்ளோ ஏன், ஹாஸ்டலுக்கு போன் பண்ணுறப்போ நான் அம்மா கிட்ட பேசாம கூட இருந்திருக்கேன்.

 

ஆனா ஹாஸ்டல்ல மதர் எனக்கு ஒரு நாள் அட்வைஸ் பண்ணுனாங்க. இந்த உலகத்துல பிறந்த எல்லாருக்கும் சில கனவு, இலட்சியம் இருக்கும். அதுக்கு தடையா எதுவும் வந்துடக் கூடாதுனு அவங்க நினைப்பாங்க. சில நேரங்கள்ல அவங்க கனவுகளே அவங்களைச் சார்ந்தவங்களுக்கு ஆபத்தை கொண்டு வரும்னு நினைச்சு பயப்படுவாங்க. அதோட விளைவா அவங்க சில முடிவுகள் எடுப்பாங்க. அது ஆரம்பத்துல அவங்களை சார்ந்தவங்களுக்கு கஷ்டத்தைக் குடுத்தாலும் பின்னாடி நன்மையை தான் குடுக்கும்னு சொன்னாங்க எங்க மதர் சுப்பீரியர். அது என் மனசுல பதிஞ்சுப் போயிடுச்சு.

[the_ad id=”6605″]

என்னோட அப்பாக்கும் அம்மாக்கும் அவங்களோட கவர்மெண்ட் ஜாப் ரொம்ப பெரிய விஷயம். அதுல எப்போவும் நியாயமாவும், நேர்மையாவும் இருக்கணும்ங்கிறது அவங்களோட இலட்சியம். ஆனா அதால அப்பாவோட உயிருக்கு ஒரு தடவை ஆபத்து வந்துச்சு. அப்பா ஒரு ஃபைல்ல கையெழுத்து போட மாட்டேனு சொன்னதால கோவப்பட்ட ஒருத்தர் அப்பாவை லாரி வச்சு கொல்ல டிரை பண்ணுனாரு. ஆனா என் அப்பாவோட நேர்மை அவருக்கு பெருசா எதுவும் அடிபடவிடலை. ஆனாலும் அந்த ஆக்சிடெண்டால இப்போவும் அப்பாவால ஒரு காலை நேரா வச்சு நடக்க முடியாது.

 

அம்மா அதுல தான் பயந்து போயிட்டாங்க. சப்போஸ் எதிர்காலத்துலயும் இப்பிடி ஏதாவது ஒருத்தர் தன்னோட காரியத்தை சாதிக்கிறதுக்கு என்னை டார்கெட் பண்ணிடுவாங்களோனு அம்மாக்கு பயம். அதான் ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டாங்க. இது எல்லாமே எங்க ஹாஸ்டல் மதர் என் கிட்ட சொன்னாங்க. அதுக்கு அப்புறம் என் அப்பா அம்மாவை என்னால வெறுக்க முடியல சூரியா. அவங்க என் அப்பா அம்மாங்கிறதுக்காக அவங்களோட கொள்கையை விட்டுட்டு மத்த ஆபிசர்ஸ் மாதிரி லஞ்சம் வாங்கிட்டு இருந்திருந்தாங்கன்னா அது அவங்க லட்சியத்துக்கு கட்டுன சமாதி மாதிரினு அம்மா சொல்லுவாங்க. அதை கேக்கிறப்போ எனக்கு பெருமையா தான் இருக்கும்” என்று கண்ணில் பெருமிதம் மின்ன கூறி முடித்தாள் சந்தியா.

 

சூரியா யோசனையுடன் அவளைப் பார்த்து “இதுக்கும் என்னோட சிச்சுவேசனுக்கும் எதாவது சிமிலாரிட்டி இருக்கா பிரவுனி?” என்க

 

சந்தியா “என்னடா நீ விடிய விடிய இராமாயாணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாவானு கேக்கிற! உனக்கு இன்னுமா புரியலை? உன்னோட பேரண்ட்ஸும் காரணம் இல்லாம ஒன்னும் உன்னையும், உன் பிரதரையும் போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிருக்க மாட்டாங்க மார்ஸ்மாலோ. இந்த உலகத்துல மோசமான ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ஃப் இருக்கலாம், ஆனா மோசமான பேரண்ட்ஸ் இருக்கவே மாட்டாங்க. நீ அவங்க கிட்ட கேளு! கண்டிப்பா உனக்கு அவங்க செய்கைக்கான காரணம் கிடைக்கும்” என்று கூறியவாறு எழுந்தவள் அவனுக்கும் கை நீட்ட அவள் கையை பிடித்தபடி எழுந்தான் சூரியா.

 

“நான் சொன்னதுல எதாச்சும் இப்போ உனக்கு புரிஞ்சுதா?” என்று கேட்டவளிடம் ஆமென்று தலையாட்டியவன் “நான் இன்னைக்கே அப்பா கிட்ட பேசுறேன். ஆரியா கிட்டவும் பேசணும். என்னோட சோகத்துல மூழ்கி நான் அவனை மறந்துட்டேன் பிரவுனி” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

 

பின்னர் புன்னகையுடன் சந்தியாவை பார்த்தவன் “தேங்க்யூ! எனக்கு நிறைய விஷயத்தைப் புரிய வச்சதுக்கு. நீ பார்க்க குட்டிப்பொண்ணா இருந்தாலும் உனக்குள்ள இவ்ளோ அறிவா?” என்று கேலியுடன் முடிக்க

 

சந்தியா அந்த கேலியைப் புரிந்து கொண்டவளாய் “ஐயோ! போதும் போதும்.. எனக்கு புகழ்ச்சினா அலர்ஜி மார்ஸ்மாலோ” என்று பெரியமனதுடன் அதை ஏற்றுக் கொள்ள அவள் பேசிய விதத்தில் சிரித்தவன் அவளுடன் சேர்ந்து நடந்து சென்றான் சூரியா.

 

சாரல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!