Skip to content
Post Views: 4,685
“அஞ்சலியோட தங்கச்சிங்க ரெண்டு பேரும் இப்ப படிச்சிட்டு இருக்காங்கப்பா. இப்போதைக்கு நம்ம ரங்கனோட சப்போர்ட் அவங்களுக்கு தேவை. அதனால் அவன் பேர்ல துணிக்கடையை சென்னையில் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். சிந்துவோட அப்பா வேற அங்க ஒரு இடம் வாடகைக்கு வருதுன்னு சொன்னார். நம்மளை தான் அங்க கடையை ஆரம்பிக்கச் சொன்னார். எனக்கு அங்க ரங்கனுக்கு ஆரம்பிச்சு கொடுக்கணும்னு ஆசை. துணி சப்ளை எல்லாம் நம்ம கிட்ட இருந்து தான் போகும். அதுக்கெல்லாம், அப்புறம் பணம் வாங்கிருவேன். ஆனா அதுக்கு அப்புறம் வர லாபம் எல்லாம் அவனுக்கு தான். ஆனா கொஞ்சம் பெரிய அளவுல கடையை ஆரம்பிக்கணும். குறைஞ்சது ஒரு மூணு மாடியாவது ஆரம்பிக்கணும் பா. அப்ப தான் வொர்த்தா இருக்கும்“
“அவனுக்கு நாம செய்ய கடமைப் பட்டுருக்கோம் ஆதவா. தாராளமா செஞ்சிறலாம். எத்தனை நாள் அவனும் நம்ம கைக்குள்ளயே இருப்பான்? நாம அவன் பேர்ல பல லட்சம் சேத்து வச்சாலும் அது அவனுக்கு தேவைப்படுறப்ப அவன் கிட்ட தானே இருக்கணும்? ஆனா உனக்கு அப்படி ஒரு கடை ஆரம்பிக்கணும்னு ஆசை இருக்கு தானே ஆதவா? இப்ப ரங்கனுக்கு ஆரம்பிச்சா உனக்கு அதை செய்ய முடியாது டா”
Advertisement
“பரவால்ல பா. அது கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாம். அப்படி இல்லைன்னா இருக்கவே இருக்கார். என் மாமனார். பணத்துக்கா பஞ்சம். கடன் வாங்கிட்டு திருப்பிக் கொடுத்துறலாம்”
Advertisement
“அப்படின்னா சரிப்பா. சென்னையில ஆரம்பிக்கப் போற கடை ரங்கனுக்கு மட்டுமே இருக்கட்டும். அதுல நமக்கு எந்த தொடர்பும் வரக் கூடாது. ஏன்னா நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா அதை நாம திருப்பி வாங்கிக்கிற மாதிரி ஒரு வாய்ப்பு இருக்கவே கூடாது. மொத்தமா அவனோடதா மாறிறனும்”
Advertisement
“சரிப்பா. நான் எல்லா ஏற்பாடும் பண்ணிறேன். முதல்ல என் மாமனார் கிட்ட சொல்லி அந்த இடத்துக்கு அட்வான்ஸ் போடச் சொல்றேன். கடை வேலை முடிஞ்ச உடனேயே அஞ்சலி வீட்ல பேசுவோம். ஏன்னா அவங்களுக்கும் கொஞ்சம் ரங்கன் மேல நம்பிக்கை வரணும்ல?”, என்றான்.
Advertisement
“சரிப்பா, எல்லாம் பாத்து செய்”, என்று ரத்தினம் சொல்ல மகையும் சம்மதம் சொன்னாள். அதற்கு பின்னர் தன்னுடைய அறைக்கு வந்தான். ஏதோ பெரிய அளவில் சாதித்த சந்தோஷம் அவனுக்கு வந்திருந்தது.
“என்ன ஆச்சுங்க?”, என்று சிந்து கேட்க அனைத்தையும் சொன்னான். அதைக் கேட்டு அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. உடனே ஆதவன் ஏகாம்பரத்தை அழைத்து அந்த இடத்தை ரங்கன் பெயரில் முடிக்கச் சொல்ல “ரங்கனுக்கா?”, என்று ஒரு நொடி திகைத்தவர் அவர்கள் வீட்டில் ரங்கனுக்கான முக்கியத்துவம் புரிய “சரி மாப்பிள்ளை”, என்றார்.
அவர் மனச் சிணுங்கல் அவனுக்கு புரிய “கொஞ்ச நாள் கழிச்சு சிந்து ஸ்டோர்ஸ்ன்னு நிறைய இடத்துல ஆரம்பிச்சிறலாம், மாமா. கவலைப்படாதீங்க. அதுக்கு நீங்க தான் பினான்ஸ் பண்ணனும். கொஞ்ச வருஷம் கழிச்சு தான் திருப்ப்க் கொடுப்பேன்”, என்றான்.
“கண்டிப்பா மாப்பிள்ளை. உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன். என் சொத்து எல்லாம் யாருக்கு என் பிள்ளைகளுக்கு தானே? நான் நாளைக்கே அட்வான்ஸ் கொடுத்துறேன். நீங்க ரிஜிஸ்ட்ரேசன் அன்னைக்கு ரங்கனை அழைச்சிட்டு வாங்க”, என்று சொல்லி விட்டு வைத்தார் அவர்.
குழந்தையை தூங்க வைத்து விட்டு வந்து சிந்து கட்டிலில் அமர அவளை இழுத்து தன்னுடைய மார்பில் சாய்த்துக் கொண்டான் ஆதவன். இன்று சிந்து அழகாக இருப்பது போல பட்டது. அவன் மார்பில் சாய்ந்த படியே கதை பேசிக் கொண்டிருக்க அவனோ அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் அவள் கன்னத்தில் பதிய அவன் தொடுகையில் கரைந்தாள் சிந்து. ஆனால் பெரியவர்கள் எச்சரித்திருக்க இருவரும் கவனமாக இருந்தார்கள்.
அடுத்து வந்த நாட்களில் பல நல்ல விஷயம் நடந்தது. அசோக் ஜானகி திருமணம் பிரம்மாண்டமாக நடந்திருந்தது. மருமகளுக்காகா ஏகாம்பரமே நகைகளை வாங்கிக் கொடுத்திருந்தார். ஜோசியர் குடும்பம் மகளின் நல் வாழ்க்கையையும் அசோக் போல மருமகன் கிடைத்ததையும் எண்ணி பூரித்து போனார்கள். திருமணம் முடிந்த அன்றே அவர்கள் வாழ்க்கை அழகாக மலர்ந்தது.
அசோக் மற்றும் ஜானகி திருமணம் முடிந்து சிந்து ஆதவனுடன் சென்னையில் தான் ஒரு வாரம் தங்கி இருந்தாள். அப்போது குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டி ஆதவன் சிந்துவையும் சித்தார்த்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.
அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த கோகுல் அவர்களைப் பார்த்து விட்டான். ஆதவன் ஏதோ சொல்ல அதற்கு சிந்து முகம் சிவப்பதைப் பார்த்தவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்களின் காதலுக்கு சாட்சியாக சிந்து கையில் இருக்கும் குழந்தையை அவனால் நம்பவே முடிய வில்லை.
அவளுக்கு சுய உணர்வுகளே இல்லை என்று தான் அவன் சிந்துவை உதறித் தள்ளினான். ஆனால் இப்போதோ அவளது மாற்றம் அவனுக்கு பெரும் வியப்பாக இருந்தது. எவ்வளவு பெரிய வளமான வாழ்க்கையை இழந்திருக்கிறோம் என்று புரிந்தது. அவன் மட்டும் சிந்துவை திருமணம் செய்திருந்தால் இன்று சொந்த பங்களா சொந்த மருத்துவமனை அனைத்தும் அவன் வசம் ஆகி இருக்கும்.
ஆனால் இப்போதோ சித்ரா என்ற பெண்ணை விரும்பிக் கொண்டிருந்தான். கூடிய சீக்கிரம் அவளும் ஒரு டாக்டர் தான். சிந்துவைப் போல பணக்காரியும் தான். ஆனால் அவனை ஒரு பைசாவுக்கு கூட மதிக்க மாட்டாள். அவள் மட்டும் இல்லை. அவளுடைய குடும்பமே அவனை கீழாகத் தான் பார்ப்பார்கள். சில நேரம் திருமணமே வேண்டாம் என்று தான் எண்ணுவான். ஆனால் அவள் மூலம் கிடைக்கும் பணக்கார வாழ்க்கைக்காக சரி என்று சொன்னான். இதை எல்லாம் எண்ணி ஒரு பெரு மூச்சை வெளியிட்டவன் சிந்து கண்ணில் படாமல் அங்கிருந்து நகன்றான்.
அடுத்து சில மாதங்களில் வைகுந்த் வைதேகி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவனுக்கு விஷால் என்று பெயரிட்டார்கள்.
அடுத்த நல்ல விஷயமாக ரங்கன் மறுக்க மறுக்க அவனது பெயரில் சென்னையில் கடை வேலையை ஆரம்பித்தான் ஆதவன். நான் இந்த வீட்டில் இருந்து போக மாட்டேன் என்று எவ்வளவோ ரங்கன் மறுத்துப் பார்த்தான். அழுது கூட பார்த்தான். ஆனால் யாரும் அவன் பேச்சைக் கேட்டுக் கொள்ள வில்லை. கட்டிட வேலைகள் பாதி முடிந்ததும் உடனே ஆதவன் ரங்கனுக்காக அஞ்சலி வீட்டில் பேசி அவர்கள் திருமணத்தை உறுதி செய்திருந்தான். கடை திறப்பு விழா முடிந்ததும் அவர்கள் திருமணம் என்று உறுதி செய்யப் பட்டது.
அடுத்ததாக பிரியாவுக்காக ஒரு செவ்வாதோசம் உள்ள மாப்பிள்ளையை பேசி முடித்திருந்தார்கள். மகளின் திருமணத்துக்காக விஸ்வம் ஊரில் இருந்து வந்து விட்டார். இனி குடும்பத்தை விட்டுப் போக கூடாது என்று அவர் முடிவு எடுத்தாலும் வேணியிடம் பேசுவதை மட்டும் நிறுத்திக் கொண்டார்.
பிரியா மாதேஷ் திருமணம் நல்ல படியாக முடிந்தது. விஸ்வம் மற்றும் சக்திக்காக ஆதவன் குடும்பத்தில் இருந்த அனைவரும் சென்றிருந்தார்கள்.
மணமேடையில் வைத்து குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த சிந்துவைப் பார்த்த பிரியாவுக்கு என்ன உணர்வு எழுந்தது என்று மட்டும் புரியவே இல்லை. ஆனால் நிச்சயம் போட்டி பொறாமை மட்டும் எழவே இல்லை.
தாய்மாமன் சீரை ரத்தினம் ஆதவன் மற்றும் சிந்துவை பிரியாவுக்குச் செய்யச் சொல்ல இருவரும் சந்தோஷமாக மேடை ஏறினார்கள்.
சிந்துவுக்கு மட்டும் கேட்கும் வகையில் “சாரி”, என்று சொன்னாள் பிரியா. அதைக் கேட்ட சிந்து அவள் கையைப் பற்றி ஆதரவாக அழுத்திக் கொடுத்தாள். அவளுடைய பெருந்தன்மையான மன்னிப்பில் பிரியாவுக்கு குற்ற உணர்வு அதிகம் எழுந்தது.
பிரியாவின் திருமணம் முடிந்தது மட்டுமல்லாமல் தந்தையும் திரும்பி வந்ததால் சக்தி அன்று சந்தோஷமாக இருந்தான். அன்றே அவன் இரண்டாவது குழந்தையைப் பற்றி மனைவியிடம் பேச சிறு புன்னகையுடன் அவனுக்கு ஒப்புதல் அளித்தாள் செல்வி.
எல்லாருடைய வாழ்க்கையும் அவர்களுக்கு ஏற்றார் போல் மாறிப் போனாலும் ஆதவன் மற்றும் சிந்து வாழ்க்கை எப்போதும் போல காதலும் கொஞ்சலுமாக சென்றது. ஆதவனின் தாகத்தை தீர்க்கும் நதி சிந்து தான். அவளும் அவனது மகனும் ஆதவனுக்கு உயிராகிப் போனார்கள். அவனுக்கு ஒரு பெண் பிள்ளை வேண்டும் என்ற ஆசை இருக்கிறது தான். அதை அவள் அவனுக்கு நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பாள் என்று நம்புவோம்….
….முற்றும்…..
error: Content is protected !!