Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே

பூவே 12

ராதை மனதில் ராதை மனதில்



Advertisement

என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க

கண்ணா வா கண்டு பிடிக்க

Advertisement

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்

Advertisement

கோதை ராதை நடந்தால்

மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்

மூச்சு வாங்கி உறைந்தாள்

Advertisement

பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்

பாவை மறந்து தொலைந்தாள்…

என்ற பாடல் டேப்பர்கார்டில் ஓடிக்கொண்டிருக்க, பாடலின் வரிகளுக்கேற்ப ஐந்து பெண்கள் நடனம் பயின்றுக்கொண்டிருந்தனர்.

இங்கு ஆடிக்கொண்டிருந்த பெண்கள் வாய் அசைந்ததோ இல்லையோ, அங்குக் குழுமியிருந்த சிறுவர், சிறுமியர் வாய் கோரஸாய் பாடியபடி கை, கால்களை அசைத்துக்கொண்டிருந்தனர்.

“அடியே! அமைதியா இருங்கடி, அபியக்கா முறைக்குறாடி” என்று வேல்விழி தன் தோழிகளிடம் அமைதி காக்கும்படி சொல்லிக்கொண்டிருந்தாள்.

“நீ வேறடி, சும்மா புள்ள பூச்சுக்கெல்லாம் பயந்துக்கிட்டிருக்க” எனக் கடுப்பாக சொன்னாள் முனிஸ்.

மற்றவளோ, “இப்படித்தானடி நம்ம ஆடும்போதும் பண்ணுறாங்க. அப்ப நமக்கு எப்படியிருக்கும்? இதெல்லாம் ஜாலியா எடுத்துக்கணும்டி. அதை விட்டு கோபப்படக்கூடாதுன்னு சொல்லுடி அவளுக்கு. இல்லைன்னா தலை நரைச்சு சீக்கிரம் பாட்டியாகிடுவா” என்றாள் கலையரசி.

“உங்களுக்கு என்ன, அவ என்னைத்தான் திட்டுவாடி” என்று முகத்தை சுருக்கினாள் வேல்விழி.

“யாரது, என் செல்லத்தை திட்டினது? நீ என் ஆளுன்னு சொல்லுடி, அவங்களை நான் பார்த்துக்கிறேன்னு” சொன்ன முனிஸை முறைத்து பார்த்தனர்.

“எருமை, இப்படி வெளியே சொல்லிட்டு திரியாதடி. என் சின்ன பாட்டி வெலக்குமாத்தாலே என் முதுகுத் தோலை உரிக்க ஐடியா தரப்போறயாடி” என்று சொல்லிக்கொண்டே அவள் முதுகிலே ஒன்று போட்டாள் வேல்விழி.

“அம்மா!” என்று முதுகை தேய்த்தவள், “போடி, நா உன்கூட டான்ஸ் ஆட மாட்டேன். நீ தனியாவே ஆடு” என்று முறுக்கிக்கொண்டாள்.

அதே நேரம் சிவராணி டீச்சர், “அடுத்த பாட்டுக்கு யார் டான்ஸ்? எழுந்து வாங்க” என்று பாடலை ஓடவிடவும், வேல்விழி பாவமாக முனிஸை பார்த்தாள்.

“சாரிடி, எழுந்து வா. டீச்சர் திட்டப் போறாங்கடி” என்றாள் முணுமுணுப்பாக.

“என் காதுல விழல. இன்னும் சத்தம் கூட்டி சொல்லுடி” என்றாள் சட்டமாக.

“சாரிடி, வாடி. டீச்சர் கவனிக்கறதுக்குள்ள” என்று ஒரு வழியாக அவளை மலையிறக்கினாள்.

“என்னடி பண்ணுறீங்க ரெண்டு பேரும்? சீக்கிரம் வாங்க. அடுத்த உள்ளவங்களும் ஆட வேணாவா?” என்று சத்தம் கொடுத்தார் அஞ்சலி டீச்சர்.

“இதோ வந்துட்டோம் டீச்சர். கால் மரத்துப் போச்சு” என்று காலை உதறிக்கொண்டே எழுந்தவள், கூடவே வேல்விழியுடன் நடுவில் வந்து நின்றாள் முனிஸ்.

அதற்குள்ளே பாடல் பாதி வரிகள் முடிந்திருக்க, மறுபடியும் ரீவைண்ட் பண்ணி முதலிலிருந்து ஓடவிட்டனர்.

பாடல் நல்ல சவுண்டில் ஹை பிச்சில் ஒலிக்க, இருவரும்..

“ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா…

தள்ளாடும் தண்ணியில…

ஏய் தாமரை பூத்திருச்சே மாமா…

தாவணி வாங்கிவாங்க…”

என்ற பாடல் ஒலிக்க,

 கிட்டத்தட்ட இருவரும் அந்தப் படத்தில் வந்த நடன அசைவுகளை இம்மி பிசகாமல் ஆடி முடித்து, மூச்சு வாங்கியபடி நின்றனர்.

“சூப்பர்! இப்படியே ஸ்டேஜிலும் ஆடணும்” என்று ராணி டீச்சர் பாராட்டவும், இருவருக்கும் என்னவோ வானத்தையே தொட்ட மகிழ்ச்சி கிடைத்தது.

“டீச்சர், இன்னும் வேல்விழி டிரஸ் எடுத்துட்டு வந்து காட்டல” என்றார் அஞ்சலி டீச்சர்.

“ஏன் வேல்விழி, இன்னும் டிரஸ் எடுத்துட்டு வரல?” என்று அவளை பார்த்தார் ராணி டீச்சர்.

“மறந்துட்டேன் டீச்சர். நாளைக்கு மறக்காம எடுத்துட்டு வரேன்னு” என்றாள்.

“எத்தனை நாள் அதையே சொல்லுவடி? இன்னைக்கு ரிகர்சல் பாதி முடிஞ்சுருச்சு. நாளைக்கு கண்டிப்பா கொண்டு வரணும்” என்று ராணி டீச்சர் சற்று கண்டிப்பாக சொல்ல,

“சரிங்க டீச்சர்…” என்று தலையை குனிந்து நின்றாள் வேல்விழி.

அதை பார்த்த முனிஸ் உடனே,

“டீச்சர்… அவ வீட்டுல கொஞ்சம் வேலை இருந்திருக்கும். நாளைக்கு நான் கூட போய் வாங்கிட்டு வர்றேன்னு” என்று நடுவில் பேசி சமாளித்தாள்.

“உனக்கு அவள்மேல தான் ரொம்ப பாசம்” என்று கலாய்த்தார் அஞ்சலி டீச்சர்.

“அதெல்லாம் இல்ல டீச்சர்… இவ இல்லாம நான் டான்ஸ் ஆடவே மாட்டேன்ல” என்று சொல்லி வேல்விழியின் தோளில் கை போட்டாள் முனிஸ்.

அதைக் கேட்டு அங்கிருந்த பசங்களெல்லாம், “ஓஹோ…” என்று சத்தம் போட,

“அமைதியா இருங்கடா!” என்று கத்தினார் ராணி டீச்சர்.

அந்த நேரம் பள்ளி மணி அடிக்கவும், “சரி… இன்னைக்கு இவ்வளவு போதும். நாளைக்கு எல்லாரும் டைம்க்கு வந்துரணும்” என்று சொல்லி டீச்சர்கள் வெளியேறினர்.

அதுவரை டான்ஸ் ஆடிய உற்சாகத்தில் இருந்த பசங்களும் பொண்ணுங்கலும் கூட்டம் கூட்டமாக வெளியே ஓட ஆரம்பித்தனர்.

வேல்விழி மட்டும் எதையோ யோசித்தபடி மெதுவாக தன் பையை எடுத்தாள்.

அதை கவனித்த முனிஸ், “என்னடி? டீச்சர் சொன்னதுக்கே இவ்வளவு சோகமா?” என்று கேட்டாள்.

“அதுலாம் இல்லடி…” என்று சொல்லி இழுத்தவள், “வீட்டுல சின்ன பாட்டிக்கிட்ட எப்படி டிரஸ் கேட்குறதுன்னுதான் யோசிக்கிறேன்…” என்றாள் மெதுவாக.

“லூசு, உங்க பாட்டி டிரஸ் உனக்கு எதுக்குடி? உங்க மாமாகிட்ட வேட்டி சட்டை கேக்குறதை விட்டு புலம்பிட்டு இருக்க” என்றாள் முனிஸ்.

“மாமாகிட்ட டிரஸ் கேக்குறதா?” என்று வாய் பிளந்தாள் வேல்விழி.

“எருமை, ரொம்ப வாய் தெறக்காத. கொசு போக்குவரத்து பண்ணப் போகுது. நா மீனா, நீ விஜயகாந்த்னா வேட்டி சட்டைதான் போடணும்டி” என்று சொல்லிக்கொண்டே வகுப்பறைக்குள் வந்தனர்.

“சரிடி, கேட்டு பாக்குறேன். சரி, நா சீக்கிரம் கிளம்புறேன். பாட்டிக்கு கால் எப்படி இருக்குன்னு பாக்கணும்” சொல்லி தன் பள்ளி பையை தூக்கிக்கொண்டு நடக்க, முனிஸும் பின் தொடர்ந்தாள்.

“பாட்டி, காலை அசைக்காம வைங்க” என்று மயிலம்மா காலுக்குத் தலையணை வைத்து திண்ணையில் சாய்த்து உட்கார வைத்தாள் காவ்யா.

“போதும்த்தா, எல்லாரும் என்னை நோயாளி மாதிரியே பாக்குறீங்க” என்று கால் வலியில் முகத்தை சுருக்கி சொல்ல,

“அது சரி, காலை நல்லா வீங்க வச்சிட்டு பேச்சு தான் கெழவி உனக்கு. யானைக்கால் மாதிரி இருக்கும்போது பேச்சு கொறையுதா பாரு” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்..

கொள்ளுப் பேத்தியின் செய்கையில் சிரித்தவர், “ஆமா, எங்கடி உங்கப்பனை ரெண்டு நாளா காணல?” என்றார்.

“மெட்ராஸ் போயிருக்காரு பாட்டி. எங்கத்தை மாமியாருக்கு உடம்புக்கு முடியலையாம். அன்னைக்கு நீங்க கீழே விழுந்தீங்கல்ல, அப்பவே டவுன் வண்டிக்கு கிளம்பிட்டாங்க” என்றாள் காவ்யா.

இவர்கள் இருவரும் திண்ணையில் இருந்த நேரத்தில், உள்ளே காசியம்மாவின் மனதில் தேவையற்ற எண்ணங்களை விதைத்துக்கொண்டிருந்தாள் சரசு.

பொழுது சாயும் நேரத்திலே சோறு வடித்து, குழம்பு வைக்க காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்து கடுகு போட்டதும் அங்க வெடித்ததோ! இல்லையோ! மகள் சொன்னதை கேட்டு இவருக்கு நெஞ்சு வலி வராதது காளியம்மா செய்த புண்ணியம் தான்..

“ஆத்தி…” என்று நெஞ்சில் கை வைத்தவர், “என்னடி, என்னென்னவோ சொல்லுற?” என்றார்

“என்னம்மா, நா சொல்லுறது உனக்கு புரியுதா இல்லையா?” என்றாள் சரசு.

“ஏட்டி, நீ சொன்னதை வூட்டுல சொன்னா வெட்டு குத்தா முடிஞ்சி போயிடும்டி” என்றவருக்கு, மகள் சொன்னதை சொல்லவே முதலில் தைரியம் இல்லை.

“என்னம்மா நீ! இன்னும் எத்தனை காலத்துக்கு நீ அவளை பாத்துக்க முடியும்? அந்த சனியன் பொறந்தப்ப இப்படியொரு இடம் இருக்குன்னு நமக்கு தெரியாம போச்சு. இப்பதான் தெரிஞ்சிடிச்சே! இவளை கொண்டு போய் அந்த ஆசிரமத்துல விட்டு வந்துடலாம்மா” என்று மீண்டும் தன் யோசனையை சொன்னாள்.

“இது சரி வராதுடி…”

“என்னம்மா, நீ புரியாம சரி வராதுன்னு சொல்லுற! இந்த சனியன் இன்னும் கொஞ்ச நாள்ல வயசுக்கு வந்திடும். அப்படி மட்டும் நடந்திச்சுன்னு வை, வெற்றி நமக்கு இல்லை, மொத்தமா அவளுக்கு சொந்தமாகிடுவான். இந்த வூட்டுல என் பொண்ணுங்கதான் ஆளனும். சொல்லிட்டேன்” என்றாள் சரசு.

“எடு செருப்பன்னானா! யாரு யாரடி வூட்டை வுட்டு தொறத்தப் பாக்குறது?” என்று ஆக்ரோஷமாக வந்து நின்றார் மயிலம்மா.

தன் கால் வலியையும் பொருட்படுத்தவில்லை.

“ஐய்யோ அத்தை, இந்த நிலைமையில் ஏன் எழுந்து வந்தீங்க?” என்ற மருமகளை,

பாராதவர் போல ஒரு பார்வை பார்த்தார்.

அந்த பார்வைக்கே காளியம்மாவின் முதுகுத்தண்டு நடுங்கியது.

மருமகளிடமிருந்து பார்வையை சரசு பக்கம் திருப்பினார்.

சரசுக்கும் உள்ளுக்குள் பயம்தான் வந்தது. ‘கெழவியால என்ன பண்ண முடியும்னு’ ஒரு இருமாப்பு வந்ததும் நெஞ்சை நிமிர்த்தி நின்றாள்.

“என் பேத்தியை அனாதை ஆசிரமத்துல விடுன்னு சொல்லுறதுக்கு நீ யாருடி? அவ என்ன வாழ வழி இல்லாம உன் வீட்டுல வந்து கஞ்சிக்கு கையேந்துறாளாடி?” என்றார்.

வார்த்தைகள் வரைமுறை இல்லாமல் வந்து விழப் பார்த்தது. இருந்தும் பேத்தியின்ற காரணத்துக்காக அமைதி காத்தார்.

“ஏன்? இந்த வூட்டுல அவ அண்டிட்டு இருக்குறது பத்தலையா உனக்கு? இன்னும் எத்தனை நாளைக்கு எங்கம்மா அவளுக்கு சேவகம் பண்ணிட்டு இருப்பாங்க? சனியன் ஒழிஞ்சு தொலைய வழி சொன்னா, நா ஆகாதவளா?” என்றாள் பதிலுக்கு.

“யாரு வூட்டுல யாருடி அண்டிட்டு இருக்குறது? இது என் பேத்திக்கும் வூடுதான். சொத்து எல்லாத்துலயும் சரிபங்கு அவளுக்கு இருக்கு. அவ சொத்தைதான் நீ சீருன்னு அள்ளிட்டு போற. வந்துட்டா பேசுறதுக்கு!” என்றார் முறைத்தபடி.

“ஓஹோ… குடுப்பிங்க சொத்தை, அவளுக்கு சொத்துல பங்கு இருக்குன்னா. அவளுக்கு முன்ன இந்த வூட்டுல பொறந்தவ நானு. அப்ப எனக்கும் சொத்துல பங்கு இருக்கு தானே?” கைகளை ஆட்டி கேட்க,

“அதை ஏண்டி என்கிட்ட கேக்குற? நீ பேசுறதுக்கெல்லாம் தலையாட்டுற உன் ஆத்தாளை கேளு. நா சொத்தை என்புள்ளைங்களுக்கு இன்னும் பிரிக்கல. இனியும் பிரிக்காம இருக்கப்போறது இல்லை. சொத்தை சரிபங்கா பிரிச்சு நானும் என் பேத்தியும் ஓட்டு வூட்டுல இருந்துக்குறோம். இப்படியொரு நிலை வரும்னுதான் அந்த வூட்டை இடிச்சு கட்ட நா விடல” என்று மூச்சு வாங்க சொல்லி முடித்தார்.

‘எது… சொத்தை பிரிக்குறதா?’ என்ற வார்த்தையிலேயே…

அடுப்பில் எரிந்த அனலை விட சரசுவின் முகம் அனலாக் கொதித்தது ..

“என்னம்மா சொல்லுது இந்த கெழவி…? உண்மையாவே சொத்தை பிரிக்கப்போறியா?” என்று பதற்றத்தோடு கேட்டாள்.

“ஆமாடி! இவ்வளவு நாளா என் பேத்திக்காகத்தான் பொறுமையா இருந்தேன். ஆனா இனிமேலும் அவளை யாராவது அனாதைன்னு பேசினா, நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்றார் மயிலம்மா.

அவரின் குரலில் இருந்த உறுதியிலே காளியம்மாவுக்கே பயம் வந்தது.

“அத்தை… சின்னப்புள்ளதான். ஏதோ தெரியாம பேசிட்டா…” என்று சமாளிக்க முயன்றார்.

“தெரியாம பேசுற வயசை அவ தாண்டி ரொம்ப நாளாச்சு. மனசுல இருந்ததுதான் வாயில வந்திருக்கு” என்றார் அழுத்தமாக.

அந்த நேரம் வாசலில் இருந்து,

“பாட்டி…” என்ற வேல்விழியின் குரல் கேட்டது.

அவளோடு முனிஸும் உள்ளே வந்தாள்.

உள்ளே இருந்த பதற்றமான சூழ்நிலையை பார்த்த இருவரும் அப்படியே நின்றுவிட்டனர்.

வேல்விழி குழப்பமாக, “என்னாச்சு பாட்டி நிக்குறீங்க கால் வலிக்க போகுது?” என்று அருகே வந்தாள்.

அவளை பார்த்ததும் மயிலம்மாவின் முகம் உடனே மென்மையாயிற்று.

“ஒன்னுமில்ல ராசாத்தி… நீ வா” என்று கையை நீட்டினார்..

வேல்விழி அருகில் அமரவும், அவள் தலைமுடியை வருடியபடி பார்த்தார்.

அதை பார்த்த சரசுவுக்கு உள்ளுக்குள் எரிச்சல் ஏறியது.

“இதுக்குத்தான் சொல்றேன்… இவளை நீங்க ரொம்ப தலைமேல தூக்கி வச்சிருக்கீங்க” என்று முணுமுணுத்தாள்.

அதை கேட்ட முனிஸ், வேல்விழியை பார்த்தாள்.

வேல்விழியோ தலையை குனிந்து அமைதியாக இருந்தாள்.

அவள் முகம் வாடிப்போனதை பார்த்த முனிஸுக்கு கோபம் வந்தது.

“ஏன் பெரியம்மா, அவளை பாட்டி கொஞ்சுனா, உங்களுக்கு எங்க எரியுது?” என்று நேராக கேட்டாள்.

“நீ யாருடி, எங்க வூட்டுப் விஷயத்துல தலையிட..?” என்று சரசு கடுகடுப்பாக சொல்ல,

“வேல்விழி என் தோழி. அவ அழுதா நான் கேப்பேன்” என்று முனிஸும் விடாமல் பதில் சொன்னாள்.

“முனிஸ்…” என்று மெதுவாக அவள் கையை பிடித்தாள் வேல்விழி.

சண்டை பெருசாகிடுமோ என பயந்தாள்.

ஆனால் மயிலம்மாவோ, “என் பேத்திக்காக பேசுறவளை யாரும் எதுவும் சொல்லக்கூடாது” என்று முனிஸுக்கே ஆதரவாக பேசினார்.

அதை கேட்ட சரசு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அந்த நேரம் காவ்யா தண்ணீர் கொண்டு வந்து மயிலம்மாவிடம் கொடுத்து,

“முதல்ல எல்லாரும் அமைதியா இருங்க. பாட்டிக்கு கால் வலி அதிகமாயிடும்” என்றாள்.

அப்போதுதான் மயிலம்மாவும் சற்று அமைதியானார்.

வேல்விழி மெதுவாக, “பாட்டி… உனக்கு ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டாள்.

“உன் முகம் சுருங்கி இருந்தா அதுதான் எனக்கு அதிக வலி” என்று சொன்னவர், அவள் கன்னத்தை வருடினார்.

அந்த ஒரு வார்த்தையிலே வேல்விழியின் கண்கள் கலங்கின.

அதை கவனித்த முனிஸ், “ஏய் லூசு… இப்ப எதுக்கு அழுற?” என்று அவள் தோளில் சாய்ந்தாள்.

“நா அழலடி…” என்று சிரிக்க முயன்றாள் வேல்விழி.

“ஆமாம்… உன் மூக்குத்தான் அழுது காட்டுது” என்று முனிஸ் சொல்ல, காவ்யா சிரித்துவிட்டாள்.

சிறிது நே

ரத்திற்கு முன் கனமாக இருந்த அந்த வீடு, மீண்டும் சற்று இயல்பாக மாறியது.

வேல்விழியின் சிரிப்பு சத்தம். சரசுக்கு வயிற்றெரிச்சலை தான் கொடுத்தது.. பாவம் சிறு பெண்ணின் மீது தேவையில்லாத வன்மத்தை வளர்த்துக்கொண்டார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!