Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 18

பூவே 18



Advertisement

அச்சச்சோ புன்னகை

ஆள்தின்னும் புன்னகை

கைகுட்டையில் நான்

Advertisement

பிடித்து கையோடு மறைத்துக்கொண்டேன்..

Advertisement

என்ற பாடல் வரிகள் வரவும்.

“ஏய்! என் தங்கச்சி ஆடப் போறாடி!” என்ற சந்தோஷக் குரலுடன் ஜன்னல் அருகே ஓடி வந்தாள் முனீஸ்வரி.

Advertisement

அவள் பின்னே வேல்விழியும் வந்து நின்றாள்.

லைட் வெளிச்சத்தில், பாடலின் வரிகளுக்கேற்ப ஏழாம் வகுப்பு பிள்ளைகளின் நடனம் முடிந்தது.

ஃபோட்டோகிராப்பர், இருவரின் நடனத்தையும் தன் கேமராவுக்குள் அடைக்கும் வேலையைச் செவ்வனே செய்தார்.

“பாருடியாத்தா… தம்மாத்துண்டு இருந்துக்கிட்டு, ஆம்பளை புள்ளை கூட ஆடுறதை… இவ ஆத்தாக்கிட்ட சொல்லி வைக்கணும்.” என்றாள் சரசு.

“அமைதியா பாரும்மா. பள்ளிக்கூடத்துல ஆம்பள, பொம்பளன்னு பாக்க மாட்டாங்க.” என்ற காவ்யா, இருவரின் நடனத்தைப் பார்த்துக் கைதட்டினாள்.

“ம்ஹூம்… இப்ப இருக்குற புள்ளைங்களுக்கு நம்ம சொல்லுறது எங்க காதுல வாங்குதுங்க?” என்று முணுமுணுத்தபடி இவரும் பார்வையை மேடைக்குத் திருப்பினார்.

“அக்கா… எங்க உங்க பையனைக் காணல?” என்று அமலா கேட்க,

“இருடி… நானும் அவனைத்தான் தேடுறேன். ஏதோ கட்டபொம்மன் நாடகத்துல இருக்கான்னு சொன்னான்டி.” என்று மேடையைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னாள் வைதேகி.

“அடுத்து நிகழ்ச்சியாக, ஆங்கிலேயரை எதிர்த்து போராடின கட்டபொம்மன் கதை உங்களுக்காக மேடையில். ஆறாம் வகுப்பு மாணவர்கள் நடத்திக் காட்டப் போறாங்க.” என்று ஆங்கில ஆசிரியர் சொன்னதும்,

“அமலா… என் பையன் வரப்போறான்டி!” என்று வைதேகி சந்தோஷத்துடன் சொல்ல,

மேடையின் நடுவில், அரச அரியணை போல் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் கட்டபொம்மன்.

முறுக்கு மீசை, தலையில் கிரீடம், கையில் வாள் என அசத்தலாக இருந்த அவனைப் பார்த்ததும் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.

அப்போது ஆங்கிலேய அதிகாரியாக வேடமிட்ட மாணவன் முன்னே வந்து,

“கட்டபொம்மா… நீ… நீ… வரி… வந்து… எங்களுக்கு… அதான்…” என்று வசனம் மறந்து திக்கித் திணற,

ஒரு நொடி மேடையே அமைதியாகிவிட்டது.

திரைக்குப் பின்னால் நின்ற ஆசிரியர் மெதுவாக வசனத்தைச் சொல்லிக் கொடுக்க முயன்றார்.

அதைக் கேட்ட மாணவன் பதற்றத்தில்,

“எங்களுக்கு… வரி கட்டுங்க… இல்ல… நாங்க உங்களுக்கு வரி கட்டுறோம்!” என்று உளறி கொட்டினான்.

அவ்வளவுதான்… கீழே இருந்த மாணவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தனர்.

பெற்றோர்களும் வாயை மூடிக்கொண்டு சிரிக்க, சிலர் கைதட்டினர்.

“அடடா… ஆங்கிலேயரே வரி கட்டப் போறாங்களாம்!” என்று ஒருவர் கிண்டலடிக்க, சிரிப்பு இன்னும் அதிகமானது.

மேடையில் இருந்த கட்டபொம்மனாக நடித்த மாணவனுக்கே சிரிப்பை அடக்க முடியாமல் போனது. உதட்டைக் கடித்துக்கொண்டு முகத்தைத் திருப்பினான்.

உடனே ஆசிரியர் திரைக்குப் பின்னால் இருந்து,

“வசனம்… வசனம்…” என்று மீண்டும் சொல்லிக் கொடுத்தார்.

சுதாரித்துக்கொண்ட மாணவன்,

“இல்ல… இல்லை… நீதான் எங்களுக்கு வரி கட்டணும்!” என்று சரியாகச் சொல்லி நாடகத்தைத் தொடர்ந்தான்.

அதன்பிறகு நாடகம் எந்தத் தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து, இறுதியில் அனைவரின் கைதட்டலையும் பெற்றது.

சிரிப்புடன் வந்த ஆசிரியர்,

“கட்டபொம்மன் காலத்துல நடக்காத செயலை, எங்க பள்ளி மாணவர்கள் நடத்திக் காட்டிருக்காங்க. அதுக்கே  நீங்க பலத்த கைதட்டல் கொடுக்கணும் பெற்றோர்களே!” என்றதும்,

விசில் சத்தமும், கைதட்டலும் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.

“அடுத்த நிகழ்ச்சியாக, பத்தாம் வகுப்பு மாணவிகள் குரூப் டான்ஸ்!” என்றதும்,

அபிராமியுடன் இன்னும் மூன்று பெண்கள் வந்து நிற்கவும், பின்பக்கம் பாடல் இசைக்கத் தொடங்கியது.

ராதை மனதில் ராதை மனதில்

என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க

கண்ணா வா கண்டு பிடிக்க…

என்று நால்வரும் ஒன்றுபோல் ஆடினர்.

“காவ்யா… அபி நல்லா ஆடுறாடி!” என்று புன்னகையுடன் சொன்ன அன்னையை விசித்திரமாகப் பார்த்தாள்.

“அடுத்த நிகழ்ச்சியாக, ஒன்பதாம் வகுப்பு மாணவிகள்… உங்க முன்னாடி விஜயகாந்த், மீனாவைக் கொண்டு வந்து நிறுத்தப் போறாங்க!” என்றதும்,

வேல்விழியும், முனீஸ்வரியும் படபடக்கும் நெஞ்சுடன், கைகளைப் பிசைந்தபடி வந்து நின்றனர்.

இவர்களுக்கான பாடலும் இசைக்கத் தொடங்கியது.

“ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா…

தள்ளாடும் தண்ணியில…

ஏய் தாமரை பூத்திருச்சே மாமா…

தாவணி வாங்கி வாங்க…”

என்ற பாடல் ஒலிக்க,

இருவரும் தங்கள் நடனத்தை மிக இயல்பாகவே ஆடி முடித்தனர்.

வேல்விழியின் கண்கள் மட்டும் சுற்றி முற்றி தன் மாமனைத் தேடிட,

ஐயோ பாவம்… அவள் கண்களில் மட்டும் அவன் உருவம் படவே இல்லை.

வேல்விழியின் நடனத்தை அதே நேரம் இரு கண்கள் கண்ணீருடன் பார்த்திருந்தது..

“தேவகி… அழுகவா? இங்க வந்த…” என்ற குரலில்,

கண்களைத் துடைத்தவள்,

“இல்லைங்க… அவ எவ்ளோ வளந்துட்டா பாருங்களேன்…” என்று சொல்லும்போதே, மின் விளக்கு வெளிச்சத்தில் அவள் கண்ணீர் கண்ணாடி போல மின்னியது.

“போதும்டி… இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே கண்ணீர் விடப் போற? சொல்லு…” என்றான்.

“அவளைப் பார்க்கும்போது… என்னை மீறி என்னென்னவோ ஞாபகத்துல வருது…” என்று சொல்லவே முடியலங்க.

நெஞ்சில் பாராங்கல்லை வைத்தது போல வலித்தது அவளுக்கு.

அவள் கணவனும் அறியாதவன் இல்லையே.

“இப்ப நம்ம பொண்ணை நம்மளோடவே வச்சுக்கலாமா?” என்றான்.

“அவ வர மாட்டா… அந்தக் கொடுப்பினை எனக்கு இல்லை. அவளை காலத்துக்கும் தள்ளி நின்னே வலியைச் சுமக்கணும்னு என் தலையில எழுதி இருக்கு போல…” என்று சொல்லிக்கொண்டே கண்களைத் துடைத்தாள்.

வேல்விழியின் நடனம் மட்டுமல்ல… அவள் யாரையோ தேடித் தேடி அலைந்த கண்களையும் கவனித்தபடி, உள்ளுக்குள் சிறு புன்னகையை அடக்கிக்கொண்டு இவர்களை நோக்கி வந்தான் வெற்றி.

“என்னக்கா… வேலு டான்ஸ் பார்த்து சந்தோஷப்பட வரவச்சா, நீ அழுகுற?” என்றான் வெற்றி.

“நா அழலடா… இது சந்தோஷத்துல வந்த கண்ணீர்டா தம்பி…” என்று அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள் தேவகி.

“அவளை… என் கூட பேச சொல்லுடா…” என்று ஏக்கமாகக் கேட்டாள்.

அந்த ஏக்கத்தின் ஆழம் வெற்றிக்குப் புரிந்தலும்  ஒரு நொடி அமைதியாக இருந்தவன்,

“பேசுவாக்கா… அவளுக்கும் கொஞ்சம் நேரம் கொடு. இத்தனை வருஷம் மனசுல இருந்ததை ஒரே நாள்ல ஏத்துக்க முடியாது…” என்றான் மெதுவாக.

“சரிடா… நாங்க கிளம்புறோம். பசங்களை அத்தைக்கிட்ட விட்டுட்டு வந்திருக்கோம்.” என்றாள்.

“என்னக்கா… அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்லுற? வீட்டுக்கு வந்துட்டுப் போக்கா. அப்பத்தா உன்னைப் பார்த்தா சந்தோஷப்படுவாங்க.” என்றவன்,

அருகில் நின்ற மாமனைப் பார்த்து, “நீங்களாவது சொல்லுங்க மாமா…” என்றான்.

“அவ இப்ப வரமாட்டா வெற்றி.. என்னைக்கு அவ பொண்ணு பேசுறாளோ! அன்னைக்கு வருவாடா” என்றான்

“இப்படியே! இருந்தா எப்படி மாமா” என்றான் வருத்தமாக,

“என்னத்தடா பண்ண சொல்லுற, அவ அழுகாத நாளே இல்லடா. அங்க பசங்களுக்கு எதாவது ஆசையா செய்து கொடுத்தாக்கூட, இவளுக்கு பொண்ணு ஞாபகம்தான் வருது…” என்று மனைவியைப் பார்த்துச் சொன்னான் தேவகியின் கணவன் பார்த்திபன்.

வெற்றிக்கும் அக்காவின் மனநிலை புரிந்தாலும், இதுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நின்றான்.

“அவரு அப்படித்தான்… விடுடா தம்பி. நாங்க வரோம்…” என்று சொல்லிவிட்டு,

போகும்போதும் மகளை கண்ணுக்குள் நிறைத்துக்கொண்டே சென்றாள் தேவகி.

பார்த்திபன் இருசக்கர வண்டியை கிளப்ப,

“போயிட்டு வரோம் வெற்றி…” என்று சொல்லிக்கொண்டு இருவரும் கிளம்பினர்.

கண் பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை அங்கேயே நின்றிருந்தான் வெற்றி.

திரும்பியவன் பார்வையில், வேல்விழி கண்ணீருடன் ஏதோ முனீஸ்வரியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ஓ… கதை இப்படி போகுதா? வரேன்டா பங்காளி… என் கைய ஒடைக்கப் பார்த்த இல்லை , உன் நிம்மதியை நா அழிக்குறேன்டா…” என்ற ராஜனின் நக்கல் பார்வை வேல்விழி மீதே இருந்தது.

இங்கு இவளின் புலம்பலைக் கேட்க முடியாமல், “அடியே! நிறுத்துடி… உன் கூட தெரியாத்தனமா ஜோடி சேர்ந்ததுக்கு, போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு புலம்பிட்ட. இப்ப பரிசு கொடுக்கப் போறாங்கடி!” என்றாள் கடுப்புடன்.

“போடி… மாமா வரவேயில்லை. இங்க எல்லாரும் அவங்கவங்க குடும்பத்துல இருந்து வந்திருக்காங்க. எனக்குன்னு இருக்குறது பாட்டியும், மாமாவும் தான்…” என்று மூக்கைச் சிந்தி, அருகிலிருந்தவள் புடவையில் துடைத்தாள்.

“அடியே! இது எங்கம்மா புடவைடி! இதுல போய் மூக்குசளி துடைக்குற? ஏன், உன் வேஷ்டில துடைக்க வேண்டியதுதானே?” என்றாள்.

“நா எவ்வளோ வருத்தமா இருக்கேன்… உனக்கு புடவைதான் முக்கியமாடி!” என்றாள் வேல்விழி.

“உங்கூட ஒரே இம்சைடி!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் முனீஸ்வரி.

அடுத்து நிகழ்ச்சி முடிவுக்கு வர, விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதற்காக தலைமை ஆசிரியரும், ஊர் தலைவரும் மேடையை நோக்கி வந்தனர்.

கீழே அமர்ந்திருந்த மாணவர்கள் உற்சாகமாக கைதட்ட, தங்கள் பெயர் எப்போது அழைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொருவரின் முகத்திலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது…

ஒவ்வொரு பெயராக சொல்லி பரிசுளை தர, அங்கே கைதட்டல் சத்தம் பலமாக இருந்தது..

கடைசியாக, முனீஸ்வரி, வேல்விழி பெயர் வரவும்..

இருவரும் சேர்ந்து வந்து பரிசுகளை வாங்கிக்கொண்டு மேடையை விட்டு கீழே ! இறங்க சிரித்த முகத்துடன் நின்றிருந்தான்  வெற்றி..

அதுவரை சோகமாக சுற்றியவள். மாமனை கண்டதும் மகிழ்ச்சியில் , அவன் கைகளை பிடித்துக்கொண்டாள்..

அவனும் சிரிப்புடன் நிற்க,

“இங்க பாரு மாமா, இவளை இப்படியே கூட்டிட்டு போயிடு.. கூட இருந்த கொஞ்ச நேரத்துல என் உசுரை வாங்கிட்டா,” என்ற முனீஸ்வரி அவளை அங்கேயே விட்டுட்டு கிளம்பினாள்..

இருவருக்கும் வார்த்தை வரவில்லை, சிரிப்புடனே நின்றிருக்க,

“இவர்களின் மகிழ்ச்சியைக் கண்ட சாமிக்கண்ணுவின் முகத்தில் குரூரமான சிரிப்பு தோன்றியது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!