Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 20

பூவே 20

 

 

 



Advertisement

“ம்ஹூம்… ம்ஹூ…” என்று தேம்பிக்கொண்டிருந்தாள் வேல்விழி.

 

இரவு அடக்கி வைத்த அழுகை, இப்போது காவேரி ஊற்றாய் வந்துகொண்டிருந்தது.

Advertisement

 

Advertisement

“போதும் வேலு, இன்னும் எவ்ளோ நேரம் அழுதுட்டே இருக்கப் போற?” என்றான் வெற்றி.

 

அவனும் என்னதான் செய்ய முடியும்? இரவெல்லாம் விழித்திருந்தவள், சேவல் சத்தம் கேட்டதும் ஆரம்பித்தவள்தான். இன்னும் அழுகையை நிறுத்தவில்லை.

Advertisement

 

அவள் மனம் கொஞ்சம் ஆறட்டும் என்று சிறிது நேரம் அழ விட்டவன், இப்போது அழுகையை நிறுத்தச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தான்.

 

“எப்படி மாமா, அவங்களால அந்த வார்த்தை சொல்ல முடிஞ்சது?” என்று மீண்டும் அழுகைக்குத் தயாரானாள்.

 

“போதும் வேலு. இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே அழுதுட்டு இருக்கப் போற? சொல்லு,” என்று அவள் அருகே முட்டி போட்டு அமர்ந்தான்.

 

கலங்கிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நா ஓசி சோறு சாப்பிடுறேனா, மாமா?” என்று சொல்லி முடிக்கும் போதே, அவள் குரல் உடைந்து போனது.

 

“ஏண்டி, இப்படியெல்லாம் பேசுற? உன்னை அந்த வார்த்தை சொன்னதுக்குத்தான் நானும் பேசிட்டு வந்துட்டேனே. இன்னும் அதையே நினைச்சிட்டு இருந்தா என்னம்மா அர்த்தம்?” என்று அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான்.

 

தன் எதிரே முட்டி போட்டிருந்தவனை, அவன் இடுப்போடு  கட்டிக்கொண்டு இன்னும் தேம்பினாள்.

 

பெருமூச்சு விட்டவன், “வேலு, இப்ப அழறதை நிறுத்தப் போறியா, இல்லையா?” என்று அவள் தலையை தடவி கொடுத்தாலும், சற்றுக் கடினமாகக் தான் கேட்டான்.

 

அவனை விட்டு விலகியவள், “பாரு, நீ கூட என்னை  திட்டுற,” என்று மீண்டும் தேம்பினாள்.

 

அவள் அழுகையைத் தாங்க முடியாமல் எழுந்து நின்றவன், “இனிமே உன் கண்ணுல தண்ணி வந்தா, உன்னைப் பொறுத்தவரை நா செத்ததுக்குச் சமம், வேலு,” என்றான், அவளை முறைத்தபடி.

 

“நேத்தும்  இப்படி சொல்லித்தான் நா அழுகாம நின்னேன், மாமா. சும்மா சும்மா இதையே சொல்லாத. அழுக கூட எனக்கு உரிமையில்லைன்னா, நா பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலதான் இருப்பேன்,” என்று அழாமல் சொன்னாள்.

 

“உனக்கு அழுக வந்தா, அழு. உனக்கு அந்த உரிமை இருக்கு, வேலு. ஆனா நம்ம கண்ணீருக்கு ஒரு அர்த்தம் வேணும். சும்மா இவங்க திட்டினாங்க, அவங்க திட்டினாங்கன்னு அழுதா, காலம் முழுக்க நீ அழுகத்தான் வேணும்.

 

நமக்குப் பிடிக்காதவங்களுக்கு வெற்றி எது தெரியுமா? உன்னோட கண்ணீர்.

 

இப்படி நீ அழுது, உன்னை நீயே கோழையா காட்டிக்காத. நமக்கு அழுகையே வந்தாலும், கல்லு மாதிரி நிக்கணும். அதுதான் உன் வெற்றி,” என்றான் வெற்றிவேந்தன்.

 

“அப்ப அவங்க பேசினது சரின்னு சொல்லுறியா, மாமா?” என்று பாவமாக சொன்னாள் தலையை குனிந்துக்கொண்டு.

 

“அவங்க பேசினதும் சரியில்லை. அதுக்கு நீ நின்னதும் சரியில்லை, வேலு, தப்பே பண்ணாம தண்டனை அனுபவிக்க முடியாது” என்றான். கைகளை பின்பக்கம் கட்டிக்கொண்டு ,

 

“என்னை பேசினதை என்னால தாங்க முடியல, மாமா. அதான்…” என்று தயங்கி அவன் முகம் பார்த்தாள்.

 

இருவரின் நினைவும் நேற்றைய நிகழ்வுக்குச் சென்றது.

 

காவ்யா நிச்சய விழாவில், வேல்விழியும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.

 

வேல்விழியைப் பார்க்கும் போதெல்லாம், மகளின் கண்ணீரும், தன் வீட்டில் ஒரு வாய் சாப்பிட முடியாத ஏக்கமும் காளியம்மாவின் மனதில் எழுந்தது. அதற்கெல்லாம் இவள்தான் காரணம் என்ற எண்ணம், அவருடைய மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தது.

 

மூத்த மகள் மேல் வைத்திருந்த பாசத்தில், செய்யக்கூடாத செயலையும் செய்யத் துணிந்தார்.

 

சிரித்த முகத்துடன் பவனி வந்தவளை, இன்று அழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வலுத்தது.

 

“ஏட்டி!” என்று உரக்கக் கூப்பிட்டார்.

 

பாட்டு சத்தம் அதிகமாக இருந்ததால், பின்பக்க வாசலில் நின்று அவர் கூப்பிட்டது, பாவம், வேல்விழி காதில் விழவே இல்லை.

 

வேகமாக நடந்து அவள் அருகே வந்தவர்,

 

தன் அருகில் நிழல் தெரிவதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தவள்,

 

அவள் கையைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டுபோனார்..

 

“என்னாச்சு, பாட்டி?” என்று கேட்டுக்க்கொண்டே ,அவர் இழுப்புக்கு சென்றாள்..

 

பத்தி நடந்த இடம் வந்ததும் அவள் கையை விட்டதும்..

“அங்க கிடக்குற எச்சி இலையை எடு. தின்னுறது ஓசி சோறு, ஒரு வேலையும் செய்யுறது இல்லை,” என்று அவர் சொல்லி முடிக்கும் நேரத்தில், ஐயோ பாவம், அங்கே ஒலித்துக்கொண்டிருந்த பாட்டுச் சத்தமும் நின்றுபோனது.

 

அவர் சத்தம் காதில் விழுவதற்கு முன்பு கையை உதறிக்கொண்டிருந்தாள்..

 

திடிரென அவர் பேச்சு சத்தம் கேட்டு, எதிரே நின்ற வேல்விழி அதிர்ந்து போய் நின்றாள்.

கண்கள் குளம் கட்டின.

 

எப்போ வேண்டுமானாலும் பூமியை முத்தமிடக் காத்திருந்த விழிநீரை, கண்களைச் சிமிட்டி உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.

 

அந்த நொடி, மின்னல் போல மாமன் சொன்ன வார்த்தை அவள் நினைவுக்கு வந்ததும்.

கண்களில் இருந்த கண்ணீரை இமை மூடி அடக்கிக் கொண்டாள்…

 

“இப்ப என்ன பண்ணனும், பாட்டி? இந்த இலைகளை எடுக்கணும், அவ்ளோதானே?” என்று கேட்டவள், ஓரமாக கிடந்த மூங்கில் கூடையை எடுத்தாள்.

 

இவர்கள் இருவரையும் தவிர, வைக்கோல் போரின் பின்னால் இருந்து வெளியே வந்த வெற்றி காதிலும், அன்னை சொன்ன வார்த்தை தெளிவாக விழுந்தது.

 

ஒரு நொடி, உயிரே நின்றது போல அப்படியே உறைந்து போனான்.

 

சுயநினைவுக்கு வந்த அடுத்த நிமிடமே, அவன் பார்வை வேல்விழியைத் தேடியது.

 

அவன் கண்களில் விழுந்தது, முகத்தில் இரத்தப் பசை இல்லாமல், உயிரே இல்லாதவள் போல, குனிந்து இலை எடுக்கப் போன வேல்விழிதான்.

 

ஒரே எட்டில் அவளைத் தடுத்திருந்தான் வெற்றி.

கையில் இருந்த மூங்கில் கூடை, அவள் விரல்களில் இருந்து நழுவி கீழே விழுந்தது.

 

காளியம்மா அந்த இடத்தில் மகனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

கைகளைப் பிசைந்தபடி, “அது… அது…” என்று இழுத்தார்.

 

“இப்பவும் அவதான் இலை எடுக்குறேன்னு சொன்னாளா, ம்மா?” என்று நிதானமாகக் கேட்டான்.

 

அவன் குரல் அமைதியாக இருந்தாலும், நெஞ்சு முழுக்க கொதித்துக் கொண்டிருந்த கோபம் அவன் முகத்தில் தெரிந்தது.

 

அன்னை என்ற ஒரே காரணத்துக்காக, தொண்டை வரை வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டான்.

 

 

“பின்ன என்னடா, சும்மா இருக்கா? அதான் வேலை செய்யச் சொன்னேன்,” என்றார் மகனிடம்.

 

“என்னால முடியல, ம்மா. இந்த வேலையைச் செஞ்சு கொடுன்னு சொன்னா, அவ சந்தோஷமா செய்திருப்பா. இந்த வேலை மட்டுமில்ல, இந்த வீட்டுல இருக்க மொத்த வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்திருப்பா.

 

விசேஷ வீடுன்னு கூட பாக்காம, அவளை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்த உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு, ம்மா?” என்றான்.

 

கோபத்தை அடக்க அடக்க, அவன் நெஞ்சுக்குழி ஏறி இறங்கியது.

 

“விடு மாமா, நா செய்யுறேன்,” என்றாள் வேல்விழி.

 

அவளிடம் திரும்பி ஒரு பார்வை மட்டும்தான் பார்த்தான்.

 

அந்த ஒரு பார்வையிலேயே, ‘வாயை மூடிட்டு நில்…’ என்ற கட்டளை இருந்தது.

 

அன்னையிடம் காட்ட முடியாத கோபம் மொத்தமும், வேல்விழியிடமே இறங்கியது.

 

காளியம்மா, மகனிடம் இப்படியொரு கோபத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

யாரும் கவனிக்க மாட்டாங்க என்ற தைரியத்தில்தான், வேல்விழியிடம் அப்படி பேசிவிட்டார்.

 

இப்போது மகனிடமே மாட்டிக்கொண்டதை நினைத்து, உள்ளுக்குள் லேசாகப் பயமும் வந்தது.

 

“நீ வீட்டுக்குக் கிளம்பு,” என்றான் வேல்விழியைப் பார்த்து.

 

“மாமா… அது பாட்டி…” என்று இழுத்தவளை, அவன் பார்த்த ஒரே பார்வையில், உயிரே ஆட்டம் கண்டது சின்னவளுக்கு.

 

“சரி மாமா…” என்று தலையைக் குனிந்தபடி, அங்கிருந்து மெதுவாக நகர்ந்தாள்.

 

அதற்குப் பிறகு அன்னையிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை வெற்றி.

 

நண்பர்கள் கேட்ட வேலைகளை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு, அவனும் வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

 

ஹாலில் அமர்ந்திருந்த வேல்விழி, உடை கூட மாற்றாமல், வெறித்த பார்வையோடு விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

 

நெஞ்சை ஏதோ பாரம் ஒன்று அழுத்திக்கொண்டே இருந்தது.

 

அழுகை தொண்டை வரை வந்தாலும், அதைக்கூட வெளிக்காட்ட முடியாத நிலையில் இருந்தாள்.

 

உள்ளே வந்தவன், அவள் நிலையைப் பார்த்ததும் எதுவும் பேசவில்லை.

 

அவளையே சில நொடிகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டு, அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

 

அந்த இரவு, இருவருக்குமே தூக்கத்தை விட வலிதான் அதிகமாக இருந்தது.

 

“போதும் வேலு… நீ அழுதது போதும்,” என்றான் மெதுவாக.

 

“போய் முகம் கழுவிட்டு வா,” என்று அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான்.

 

‘ம்…’ என்று தலையசைத்தவள் எழுந்து அங்கிருந்து சென்றாள்..

 

முட்டி போட்டபடியே அமர்ந்திருந்தவன் எழுந்திருக்கப் போனபோது, கீழே சிந்தியிருந்த இரத்தத் துளிகள் அவன் கண்ணில் பட்டது.

 

ஒரு நிமிடம், என்ன நினைத்தான் என்றே அவனுக்கே தெரியவில்லை.

 

மெல்ல தலையை நிமிர்த்தி, சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான்.

அதுவோ அதிகாலை 4.55 என்று காட்டியது.

 

அதே நேரம், வெளியே போன வேல்விழி அழுதபடியே உள்ளே வந்தாள்.

 

“மாமா…” என்று கண்ணீருடன் நின்றவளுக்கு, அதற்கு மேல் பேச முடியவில்லை.

 

அவளை நிமிர்ந்து பார்த்தவன், “இங்கேயே கொஞ்ச நேரம் படுத்துக்கோ, வேலு. இப்ப யாருகிட்டயும் எதுவும் சொல்லாத. அப்பத்தாகிட்ட மட்டும் சொல்லு.

நா உன்கூட இருந்ததை மட்டும் சொல்லிடாத,” என்றான்.

 

அவள் தலையில் கை வைக்கப் போனவன், ஒரு நொடி தயங்கி, தன் கையை மீண்டும் பின்னுக்கு இழுத்துக்கொண்டான்.

 

அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு, அமைதியாக வெளியே அறையை விட்டு வாசல் அருகே வந்தவன்..

 

அவனையே! பார்த்துக்கொண்டிருந்தாள் வேல்விழி.

 

“அப்பத்தா நேரம் கேட்டா, நாலு ஐம்பத்திதஞ்சுன்னு சொல்லு,” என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியேறினான்.

 

என்னவோ ஒரு புதுவிதமான உணர்வு அவளைச் சூழ்ந்தது.

பெண்ணின் முதல் பருவம்…

 

அதைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. வெளிப்படுத்தவும் தெரியவில்லை.

 

கண்கள் மீண்டும் கலங்கின.

சிறிய தேம்பல் மட்டும் அவள் உதடுகளை விட்டு வெளியேறியது.

 

வாசலில் நின்றிருந்த வெற்றிக்கும், அந்த நிமிடத்தைக் கடக்க வழி தெரியவில்லை.

 

மற்ற அக்கா பெண்கள் தள்ளி நின்றபோது கூட, அவனுக்கு பெரிதாக எதுவும் தோன்றியதில்லை.

 

ஆனால், தன்னோடு வளர்ந்தவளின் வலி, அவன் நெஞ்சை என்னவோ செய்துகொண்டே இருந்தது.

 

சரசு வீட்டிலிருந்த மயிலம்மா, தட்டுத்தடுமாறி எழுந்து அமர்ந்தவர்..

 

பார்வையாலே ! தன் பேத்தியை தேட , அவர் விழிகளி மட்டும் அவர் ஆசை பேத்தி விழவே இல்லை..

 

“ஏந்தா” என்று குரல் கொடுக்க,

 

“என்னாச்சு பாட்டி” என வந்தாள் அபிராமி..

 

“வேலு எங்கத்தா..‌ கண்ணுல அகப்படல” என்றார்..

 

“அவ இங்க இல்லை பாட்டி.. இராத்திரியே! வீட்டுக்கு போயிட்டா,”  என்று அங்கிருந்து நகர்ந்தாள்..

 

“இராத்திரியே! வீட்டுக்கு போயிட்டாளா..?” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவர்..

 

மெல்ல எழுந்து நிற்க போனவரை , பார்த்து ஓடி வந்தா காவ்யா தாங்கிகொண்டாள்..

 

“பாட்டி குரல் கொடுத்தா , வர போறோம்

. அதை விட்டு தனியா எழுந்து நிற்க பாக்குறீங்க” என்று காவ்யா கடிந்து கொண்டாள்..

 

“இல்லத்தா, நா  நல்லா தான் இருக்கேன்.. என்னை வாசல் வரைக்கும் கூட்டிப் போத்தா” என்றார்..

 

இவர்கள் இருவரும் வெளி வாசலுக்கு வரவும்..

 

“ம்மா, உனக்கு கொஞ்சம் கூட , அறிவு இருக்கா? இப்படி ஒரு வேலையை நீ பார்த்தது தெரிஞ்சது அவ்ளோ தான்” என்று சரசு  சலித்துக்கொண்டாள்..

 

“நா‌ என்னடி பண்ணுவேன்..

போன வாரம் உன் அக்காவை பாத்துட்டு வந்ததிலிருந்து.. என் நெஞ்சே அறுக்குதுடி, அவளுக்கு ஒரு வாய் சோறு, என் கையாள சாப்பிட ஏங்குறாடி” என்று கண்ணீருடன் சொன்னதும்.

 

“அதுக்குன்னு , இப்படி அவளை போய் எச்சி இலை எடுக்க சொல்லி ,அதை தம்பி பார்த்து.. இப்ப உனக்கு தானே கஷ்டம்” என்று மீண்டும் திரும்பியவர் நேற்று வந்த சீர் பொருட்களை ,பங்காளி வீடுகளுக்கு பங்கு பிரித்துக்கொண்டிருந்த நேரத்தில் ‘டொம்’ என்ற சத்தம் இருவரையும் திரும்பி பார்க்க வைத்தது..

 

 

முதலில் திரும்பி பார்த்த,  காளியம்மா, “அத்தை” என்று எழுந்து நின்றார்..

 

சரசுவும் , எழுந்து நின்றவள். ‘ இந்த கெழவிக்கு சும்மாவே பாம்பு காது.. இப்ப வேற‌ நானே வெங்கல குரல்ல கத்தி வச்சிருக்கேன்’ என்ன பண்ண போகுதுன்னு தெரியலையே! என்ற மனதுக்குள் உலா போக ,அமைதியாக நின்றாள்..

 

 

வாய்திறந்து எதுவும் பேசவில்லை, “ச்சீ” என்ற ஒரு பார்வை,

 

காளியம்மாவை நடுரோட்டில் நிற்க வைப்பது போல் இருந்தது..

 

அந்த நிமிஷம் எங்கிருந்து அவ்வளவு பலம் வந்தததோ! எழுந்து நடந்து வரவே! ஒருத்தியின் உதவி எதிர் பார்த்தவர்..

 

வேகமாக எட்டு வைத்து அங்கிருந்து நடந்தார்..

 

“அத்தை”

 

“பாட்டி”

 

என் பல குரல்கள் அவரை பின்தொடர்ந்ததை , அவர் கவனத்திலே இல்லை நெஞ்சு முழுக்க.. ‘பேத்தியின் வரிவடிவம் தான் வந்து வந்து போனது..

 

வாசலில், காலடி வைத்தவருக்கு.. நெஞ்சில் சருக்கென்னு‌ஒரு வலி, வாசல் குப்பையாக இருப்பதை பார்த்து , வீட்டிற்குள் நுழைய மயான அமைதியைக் கண்டு, மயிலம்மா உள்ளே வந்தார்.

 

சுருண்டு படுத்திருந்த பேத்தியைப் பார்த்து கண்கள் கலங்கியது…

“ஏம்த்தா… சுருண்டு கிடக்குற?” என்று மெதுவாக அழைத்தார்.

 

இரவெல்லாம் தூங்காததும், காலையில் அழுததும், அதோடு பெண்ணின் முதல் பருவம் வந்த

உள்ளசோர்வும் சேர்ந்து, வேல்விழியை ஆழ்ந்த உறக்கத்திற்குத் தள்ளியிருந்தது.

 

தூங்கிக்கொண்டிருந்த பேத்தியை எழுப்ப மனம் வராமல், திரும்பிச் செல்லப் போனவர், அவள் பாவாடையில் இருந்த இரத்தக் கறையைப் பார்த்ததும்…

 

ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டார்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!