சின்னஞ் சிறு பூவே 22
பூவே 22
முகத்தில் சிரிப்பும், கைநிறைய மகளுக்குத் தேவையான பொருட்களுடன் கணவனோடு வந்தாள் தேவகி.
Advertisement
வண்டியை ஓரமாக நிறுத்திய பார்த்திபன் வருவதற்குள், எல்லாப் பைகளையும் கைகளில் அள்ளிக்கொண்டு வாசலை நோக்கி விரைந்தாள்.
“அக்கா… பாத்து பாத்து… என்ன அவசரம்?” என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தான் வெற்றி.
Advertisement
Advertisement
புன்னகையுடன், “வேலு… எங்க இருக்கா வெற்றி?” என்று கேட்டவளின் பார்வை, வாசலைத் தாண்டி வீட்டுக்குள் சுற்றியது.
“உள்ளே இருக்காக்கா,” என்றவன், மாமனைப் பார்த்து, “வாங்க மாமா…” என்று இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
Advertisement
வேல்விழி பின்கட்டில் ஓரமாக அமர்ந்திருக்க, குளியலறைப் பக்கம் பெண்களின் பேச்சுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
அண்டா முழுவதும் நீர் நிரப்பி, அதில் தேவையான பூக்களும், வேப்பிலை போட்டு ஒரு பக்கம் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
இங்கு விறகடுப்பில் இட்லிப்பாத்திரத்தில் நீர் ஊற்றி, அடித்தட்டு வைத்து, காடாத்துணியை நனைத்து, அதில் உப்புத்தண்ணீர் தெளித்து, மாவை உதுறியாகப் பிசைந்துகொண்டிருந்தாள் அமலா.
அடுத்து மனை ஒரு பக்கம் தயார் நிலையில் இருந்தது. அதற்குக் கொஞ்சம் தள்ளி ,
ராமைய்யா, தன் பேத்திக்குத் குடிசை கட்ட தெண்ணங்கிற்றை
தன் நண்பனுடன் கொள்ளை பக்கம் பின்னணிக் கொண்டிருந்தார்..
மயிலம்மா, குளித்து வேறு புடவையுடன், பேத்திக்குச் செய்ய வேண்டிய சடங்கிற்காக காத்திருந்தார். “அனைத்தும் சரியாக இருக்கா?” என்று பார்வையாலேயே ஒவ்வொன்றையும் ஆராய்ந்துகொண்டிருந்தார்.
ஆனால், அந்த வீட்டில் இருந்த அனைவரின் கவனத்தையும் மீறி, ஒரே ஒருவரின் பார்வை மட்டும் நெருப்பாய் எரிந்தது.
காளியம்மாவின் கண்களில் இருந்த அனல், அங்கே நின்ற ஒவ்வொருவரையும் சுட்டெரிக்கும் அளவுக்கு கொதித்துக்கொண்டிருந்தது.
அவள் முகத்தில் தெரிந்த கோபமும், உள்ளத்தில் கொதித்த வெறுப்பும், அடுத்து அந்த வீட்டில் ஏதோ ஒன்று வெடிக்கப் போகிறது என்பதை அமைதியாகச் சொல்லிக்கொண்டிருந்தது.
அந்த நேரம்தான் வெற்றி, பார்த்திபன், தேவகியுடன் உள்ளே வந்து நின்றான்.
உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த அத்தனை கோபமும், தேவகியின் மீது திரும்பியது காளியம்மாவுக்கு.
“நில்லுடி… தொறந்த வூட்டுக்குள்ள ஏதோ நாழையுற மாதிரி நேரா உள்ள நுழைஞ்சு வர்ற…?!” என்று படபடவென கத்தினார்.
ஒரு கணம்… அவர் என்ன சொன்னார் என்பதே அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை.
ஆனால், அந்த வார்த்தையின் அர்த்தம் யாரை நோக்கி எய்யப்பட்டது என்பதை தேவகி மட்டும் நன்றாகவே புரிந்துகொண்டாள்.
அவளின் முகத்தில் இருந்த சிரிப்பு நொடியில் மறைந்து, கண்கள் கலங்கின.
அன்னையின் பேச்சு புரிந்த வெற்றிக்கோ கோபம் தலைக்கேறியது.
“ம்மா… என்ன பேசுற நீ?” என்று அதட்டினான்.
“நா என்னய்யா பேசுறேன்? இப்ப புதுசா நீதான் எனக்கு எதிரா பேச ஆரம்பிச்சிட்ட. கண்டவளுங்க்காக பெத்த அம்மாவையே எதிர்த்துப் பேசுற அளவுக்கு வந்துட்டியா?” என்று ஆத்திரத்தில் பொங்கினார் காளியம்மா.
“பெரியம்மா… தம்பிய திட்டாதீங்க. என் பொண்ணை மட்டும் பாத்துட்டு போறேன்…” என்று கண்ணீரோடு கெஞ்சினாள் தேவகி.
“உன் பொண்ணை பாக்குறதா? அதையும் கையோட கூட்டிட்டு போயிடு. எனக்கு இந்த சனியன் விட்டுச்சின்னு நிம்மதியா இருப்பேன்!” என்று விஷத்தை உமிழ்ந்தார்.
“நிறுத்துடி!”
இடி முழங்கியது போல அந்தக் குரல் ஒலித்தது.
பேத்தியின் அருகே அமர்ந்திருந்த மயிலம்மா, கம்பை ஊன்றிக்கொண்டு எழுந்து, கோபமாக காளியம்மா முன் வந்து நின்றார்.
“என்னடி சொன்ன…? எம்பேத்தி உனக்கு சனியனா?”
அவரின் குரலில் இருந்த நடுக்கம் வயதால் இல்லை; கொதிக்கும் கோபத்தால்.
“எம் தப்புடி… உன்னைப் போய் இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டுவந்ததுக்குத்தான், இந்த வூடு இவ்வளவு பாடுபடுது!” என்றார் மயிலம்மா..
“அப்பத்தா, அவங்கதான் புரியாம பேசுறாங்க. நீங்களும் பதிலுக்கு பேசினா சரியாபோகுமா?” என்றான் வெற்றி.
“தான் ஆடலைனாலும், தன் தசை ஆடுதாப்பா… ஆனா இவளுக்கு ஆடலையே!” என்று கண்ணீரை அடக்கிக்கொண்டார்.
நெஞ்சில் பழைய நினைவுகள் வந்து மோத, பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு,
“நீ என்னடி அவளை உள்ள வரக்கூடாதுன்னு சொல்லுறது? இது அவளுக்கும் வூடுதான். உன்னை விட அதிக உரிமை அவளுக்கு இருக்கு,” என்றார்.
காளியம்மாவின் நெஞ்சு முழுக்க தீயாக எரிந்தது. இத்தனை பேர் முன்னாடி தன்னைப் பேசிவிட்டார்களே என்ற அவமானமும் கோபமும் சேர்ந்து கொதிக்க, எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
“கெழவி… பெரிய பேத்தின்னு பாசத்தைப் பொழியிற. நீ கால் வராம இருந்தப்ப பார்த்தது எங்கம்மா. அவங்களையே திட்டுற!” என்று கேட்டுக்கொண்டே அவரை நெருங்கினாள் சரசு.
“போடி…” என்று அவளை விரட்டியவர், தேவகியிடம் திரும்பி,
“வாத்தா… வாப்பா…” என்று இருவரையும் அன்போடு வரவேற்றார்.
“அப்பத்தா…” என்று அவரைக் கட்டிக்கொண்டாள் தேவகி.
“விடுடா… உன் பெரியாத்தாளைப் பத்தி உனக்கு தெரியாததா?” என்று பேத்தியின் முதுகை வருடிவிட்டு,
“போய் புள்ளையைப் பாருடா…” என்று தேவகியையும் பார்த்திபனையும் அழைத்துக்கொண்டு வேல்விழி இருந்த இடத்திற்கு வந்தார்.
மகளின் அருகே வந்த தேவகி, அவளைத் தொட கைநீட்டினாள்.
“என்னைத் தொடாதீங்க…” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“ஏன்டி… இப்படி பண்ற நீ?” என்று கேட்டவருக்கு, அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
தேவகியின் தொண்டை அடைத்துக்கொண்டது. வார்த்தைகள் வராமல் மௌனமாக நின்றாள்.
அந்த நேரம்,
“அத்தை தண்ணி ஊத்தலாம்… நல்ல நேரம் வந்தாச்சு,” என்றார் சரளா.
“பெத்தவளே வந்துட்டா… தண்ணி ஊத்தச் சொல்லுங்க,” என்று வேல்விழியைப் பார்த்து,
“போத்தா…” என்றார்.
வேல்விழி முடியாதென்று தலையசைத்தாள்.
“நான் சொல்லுறதைக் கேளுத்தா! போ… தண்ணி ஊத்திக்க,” என்று அதட்டியதும்,
அவள் அழுகையோடு அப்படியே நின்றாள்.
இதுவரை தள்ளி நின்று எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த வெற்றி, அவள் அருகே வந்து,
“என்னாச்சு வேலு?” என்றான்.
“எனக்கு எந்தச் சடங்கும் வேணாம் மாமா… நான் குளிச்சிட்டு வந்து ஒரு மூலையில ஒக்காந்துக்கிறேன். என்னை வச்சு ஆளாளுக்கு சண்டை போட வேணாம்,” என்றாள் அழுதபடி.
“அது எப்படித்தா? பொண்ணுக்கு மஞ்சா தண்ணி சுத்தலனாலும், தண்ணி ஊத்தி ஒக்கார வைக்கணும்,” என்றார் மயிலம்மா.
“அது எல்லா பொண்ணுங்களுக்கும், நடக்கு பாட்டி… எனக்கு அப்படியில்லைன்னு என் விதியில எழுதியிருக்கு போல…” என்றாள் உடைந்த குரலில்.
உண்மையில் அங்கிருந்த யாருமே அவளின் மனநிலையைப் பற்றி யோசிக்கவேயில்லை.
அதே வீட்டில் காவ்யாவும் அபிராமியும் பூப்படைந்தபோது, வீடு முழுக்க சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்திருந்தது. உறவினர்கள் வாழ்த்திச்சொல்ல சூழ்ந்திருந்தார்கள்.
ஆனால் இன்று…
அதே வீடு… அதே சடங்கு…
மாறியிருந்தது அவளைப் பார்க்கும் பார்வை மட்டும்.
யார் முகத்திலும் மனநிறைவான சிரிப்பு இல்லை. ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு வித சங்கடமும், வருத்தமும், கோபமும் கலந்திருந்தது.
‘இப்படியொரு நிகழ்வு எனக்கு தேவையா?
நான் பெண்ணான சந்தோஷத்தைவிட, என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் அதிக வேதனையைக் கொடுத்துட்டேனா?
என்னாலதான் எல்லாரும் சண்டை போட்டுக்கிறாங்களா?’
என்ற எண்ணம் அவளின் சிறிய மனதை நொறுக்க, கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
தன் வாழ்வின் முதல் பெண் பருவ நாள்…
ஒவ்வொரு பெண்ணுக்கும் மறக்க முடியாத இனிய நினைவாக இருக்க வேண்டிய நாள், வேல்விழிக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும் ஆறாத காயத்தை விட்டுச் செல்லும் நாளாக மாறிக்கொண்டிருந்தது.
“அப்படி சொல்லாதத்தா, ஏதோ போறாத நேரம் இன்னைக்கு இந்த பூட்டை சுத்தி வருது” என்று பேத்தி முகத்தை பார்த்தார்..
“இந்த வீட்டுல எனக்கு.. ஒரு விஷயம் வேணாம்னு சொல்ல கூட உரிமையில்லை பாட்டி” என்று வலியுடன் சொன்னவள்..
அடுத்து எதுவும் சொல்லாமல் குளியலறைக்குள் சென்றாள்..
அவளை மனையில் உட்கார வைத்து.
மொத தண்ணீ ஊத்த மாமனை கூப்பிட,
வெற்றிக்கு அவள் பேசி சென்றதே! காதில் ரீங்காரமிட , அவனாலும் வேண்டாமென்று சொல்ல முடியவில்லை..
அமைதியாக அவளை நெருங்கினான்..
ஆள் கணக்குக்கு மூன்று பேர் ஜல்லடை பிடிக்க, அண்டா முழுக்க நீரில் பூக்களும், வேப்பிலை மில் மிதக்க..
சொம்பு கொண்டு நீரை முதலில் ஊற்ற, அவளின் கண்ணீர் மொத்தமும் அந்த தண்ணீரில் கரைந்து போனது…
செய்முறைக்கு மூன்று தடவை ஊற்றி வெளியே சென்று விட்டான்.. அந்த இடத்தில் நிற்காமல்,
“எய்யா, வெற்றி குடிசை கட்டனும் சீக்கிரம் குளிச்சிட்டு வாய்யா” என்ற வார்த்தை அவன் முதுகிலே மோதி நின்றது..
வார்த்தை முடியும் போது அவன் நகர்ந்திருந்தான்..
அடுத்து மாமன் மொறைக்கு வெற்றி எடுத்து வந்த தாவணி , பாவாடையை உடுத்தி.. அவளை மனையில் அமர்த்தினர்..
அவள் முன்னே ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய், கூடவே வாழைப்பழம் பச்சை முட்டை. அடுத்து உளுந்து கலியும் சிவப்பரிசு புட்டும் வைத்திருந்தனர்..
அங்கிருந்த அனைத்தையும் பார்த்தவளுக்கு.. கண்கள் விரிந்தது..
“எதுக்கு இதெல்லாம் வச்சிருக்காங்க பாட்டி” என்றாள்..
“அதெல்லாம் நீ சாப்பிட்டா தான்த்தா.. இடுப்புக்கு வலு கொடுக்கும்” என்றார் மயிலம்மா..
“பாட்டி… இதெல்லாம் தின்னா இடுப்புக்கு வலு கிடைக்காது… வயித்தாலதான் போகும்…” என்று சிணுங்கினாள்.
அவள் சொன்னதைக் கேட்ட அங்கிருந்தவர்கள், இத்தனை நேரம் இறுகிப் போயிருந்த மனதை மறந்து, தானாகவே சிரித்தனர்.
சில நொடிகளுக்கு முன்பு வரை வீட்டைச் சூழ்ந்திருந்த கனத்த அமைதியை, வேல்விழியின் அந்த அப்பாவியான பேச்சு சற்றே இலகுவாக்கியது.
அதைக் கவனித்த மயிலம்மா, “அடிப்போடி… உனக்கு எப்பப் பாரு விளையாட்டுத்தான்!” என்று சிரித்தபடியே அவள் கன்னத்தை வருடினார்.
“ஏந்தா தேவகி… பேத்திக்கு ஆரம்பிச்சு வை…” என்றார்.
தேவகி நடுங்கும் கைகளால் நல்லெண்ணெய்க் கிண்ணத்தை எடுத்தாள். மகளின் வாயருகே கொண்டு செல்ல,
அவளும் மெல்ல வாய் திறந்து வாங்கிக்கொண்டாள்..
இத்தனை வருடங்களுக்குப் பிறகு, தன் மகளுக்குச் செய்ய வேண்டிய முதல் சடங்கு…
சந்தோஷமாக இருக்க வேண்டிய அந்த நொடி, கண்ணீரால் நனைந்து நின்றது.
தேவகி கொடுத்த அனைத்தையும் சாப்பிட்டவள்..
கடைசியாக முட்டை எடுக்க,
“உவாக்” என்று முகத்தை சுழித்து.. “அப்பத்தா ,முட்டை வேணாம்” என்று கெஞ்சினாள்.
“அது தான்த்தா, உடம்புக்கு வலு கொடுக்கும்னு”சொல்ல,
முதல்முறை தன் பாட்டியை முறைத்தாள்..
“பாருய்யா,எம்புத்தி பெருமனிஷி ஆனுதும் என்னை முறைக்குறதை” என்று இன்னும் மயிலம்மா, சிரிப்புடன் சொல்ல..
முகத்தை அழும் நிலைக்கு கொண்டு போனவள்.. விட மாட்டாங்க என்ற நிலைக்கு வந்தவள் ‘கண்களை இறுக்க மூடிக்கொண்டு வாய் திறந்தாள்..
தேவகி மகளின் வாயில் முட்டையை ஒடைச்சி ஊத்த, வாயில் போன அடுத்த நொடி வயிற்றுக்குள் போன மொத்தமும் வெளியே எடுத்திருந்தாள்..
பாவமாக, அனைவரையும் பார்த்தாள்..
“ஏட்டி, இப்படி மொத்தத்தையும் வெளியே எடுத்துட்டியே! கட்டிக்கப்போறவனுக்கு புள்ளையை எப்படிடி பெத்து கொடுப்ப,” என சரளா கேட்டதும்..
“புள்ளையா” என்று நிமிர்ந்து பார்க்க,
அங்கே வெற்றி வேலு போட்டிருந்த தவணிக்கு ஏற்ற கலரில் சட்டையும், வெள்ளை வேஷ்டியுமா வந்து நின்றவனை தான்..
ஏதோ மாமனை முதல் முறை பார்த்தது போல் பார்த்து வைத்தாள்..
அதன்பிறகு, முறை உள்ள ஒவ்வொருவரும் அவள் கையில் பழம், பலகாரம் வைத்து ஆசீர்வதித்தனர்.
“நல்லா இருத்தா… நூறு வருஷம் நெறஞ்ச ஆயுசோட வாழணும்…” என்று ஒவ்வொருவரும் மனதார வாழ்த்திச் சென்றனர்.
“சரித்தா… நல்ல நேரம் முடியறதுக்குள்ள. பேத்தியை குடிசைக்குள்ள கூட்டிட்டு போங்க,” என்றார் மயிலம்மா.
சரளாவும் அமலாவும் வேல்விழியை மெதுவாக எழுப்பி, தென்னங்கீற்றால் கட்டப்பட்ட குடிசைக்குள் அழைத்துச் சென்றனர்.
வாசலில் நின்றவள் ஒரு கணம் தயங்க,
“என்னத்தா… உள்ள போ,” என்று சிரித்தார் சரளா.
மெல்ல உள்ளே சென்று பாயில் அமர்ந்தாள்.
“எய்யா வெற்றி… குடிசையை நல்லா கட்டுடா,” என்று ராமைய்யா சைகையில் சொல்ல,
“சரிங்கப்பா,” என்றவன் வேலையில் இறங்கினான்.
கயிற்றைக் கட்டிக்கொண்டிருந்தவனின் பார்வை ஒரு முறை குடிசைக்குள் அமர்ந்திருந்த வேல்விழியைத் தொட்டுச் சென்றது.
அவளும் யாருக்கும் தெரியாமல் அவனை ஒரு கணம் பார்த்து தலைகுனிந்தாள்.
“எம்மா , என் வயிறு எரியுது.. அந்த சிரிக்கியை அவகிட்ட இருந்து பிரிச்சு வச்சா , பாரு நம்மளை ஒதுக்கிட்டு அவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்க” என்று சரசு புலம்பியது,
மகள் சொன்ன எதையும் காதில் வாங்காமல் , காளியம்மா பார்வை முழுக்க மகனிடமே இருந்தது…
