மழை விடும் வழியைக் காணோம். மதியம் பிடித்த மழை, இதோ இரவு பொழுது வந்தும் கொட்டி தீர்த்தது.
Advertisement
“மன்னிச்சிடுங்க டாக்டர் சார். இப்படி மழை வரும்னு நா எதிர்பாக்கல,” என்று வருத்தமாக வெற்றி சொன்னதும்,
“நோ சார்… மழை வரும்னு தெரிஞ்சா வரவச்சீங்க இல்லையே! இது இயற்கையோட செயல்,” என்று தன் சட்டையில் ஒட்டியிருந்த மழை நீரை கைகளாலே உதறினான் குமரன்.
Advertisement
Advertisement
“டாக்டர், உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா இன்னைக்கு எங்க வீட்டுல தங்கலாமே,” என வெற்றி கேட்டதும்,
“நாங்க வர்றதால உங்க மனைவிக்கு எதுவும் பிரச்சினை வரப்போகுதா சார்?” என குமரன் தயக்கமாக கேட்டான்.
Advertisement
“அவங்க வீட்டுல இல்லை. ஊருக்கு போயிருக்காங்க டாக்டர்,” என்ற வெற்றியை,
‘திடுக்கென நிமிர்ந்து பார்த்தாள்’ வேல்விழி
“சார், நாங்க உங்க வீட்டுக்கு வந்துட்டா, எங்க லேடீஸ் ஸ்டாப் எல்லாம் எங்க தங்க வைக்குறது?” என்றான் மற்றொரு டாக்டர் ஜனகன்.
“அவங்க பத்திரமா எங்க நண்பர்கள் வீட்டுல தங்க வைக்கலாம் டாக்டர் சார்,” என்றான் வெற்றி.
“சிஸ்டர், உங்களுக்கு ஓகேவா? வெற்றி சார் சொன்னதுக்கு,” என்று ஜனகன் அனைவரையும் பார்த்துக் கேட்க,
மூவரும் சரியென தலையாட்டினர்.
வேல்விழி அமைதியாக நிற்பதைக் கண்டு,
“என்ன மேடம், எங்க ஊர்ல தங்குறதுல உங்களுக்கு விருப்பம் இல்லாத மாதிரி தெரியுதே!” என்று யாருக்கும் தெரியாமல் அவளைப் பார்த்து குறும்பாக புன்னகைத்தான் வெற்றி.
அவனின் இந்த திடீர் செய்கையில் ஒரு நிமிடம் உடல் தூக்கிப்போட்டது வேல்விழிக்கு.
“ஏட்டி, உன்னைத் தாண்டி சார் கேக்குறாரு. பதில் சொல்லுடி,” என்று அம்சவள்ளி வேற இடித்துச் சொல்லவும்,
“ஐய்யோ!” என்ற நிலைதான் அவளுக்கு.
“என்னாச்சு மிஸ் வேல்விழி? உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க. இல்லை, வேற ஏற்பாடு பண்ணுறேன்,” என்று இப்போது குமரன் கேட்க,
“எனக்கு ஓகே தான் டாக்டர்,” என்று இருவரையும் பார்த்தாள்.
அடுத்ததாக பெண்கள் நால்வரையும் மாறன் வீட்டில் தங்க வைத்து,
டாக்டர் இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் வெற்றி.
“வெற்றி சார், வீடு ரொம்ப நல்லாவே கட்டியிருக்கீங்க,” என்று சுற்றிப் பார்த்தபடி சொன்னான் ஜனகன்.
“இந்த மாதிரி தான் வீடு இருக்கணும்னு என் மனைவி ரொம்ப ஆசைப்பட்டாங்க சார்,” என்று ஒவ்வொரு இடமாகக் காட்டினான்.
“அப்ப சார், லவ் மேரேஜ் தானே?” என்றான ஜனகன்.
சின்ன சிரிப்பைப் பதிலாக தந்தான் வெற்றி.
“பாரு ஜனா, வெற்றி சார் முகம் தவுசன் வாட்ஸ் பல்ப் மாதிரி பிரகாசமா இருக்கு,” என்று இன்னும் கேலி செய்தான் குமரன்.
“நீங்க மட்டும் ஜாலியா பேர் சொல்லி கூப்பிடுறீங்க. என்னை மட்டும் ‘சார்’னு சொல்லுறது எனக்கு புடிக்கல,” என்றான் வெற்றி.
“ஓகே வெற்றி சார்… நாங்க பேர் சொல்லி கூப்பிட்டா, நீங்க உங்களோட லவ் ஸ்டோரி மொத்தமும் சொல்லணும். இதுக்கு சம்மதம்னா, நீங்க எங்கக்கூட பிரண்டாகலாம்,” என்று வெற்றி தோளில் கைப்போட்டான் ஜனகன்.
“சொல்லுறேன் ஜனா… ஆனா இப்ப இல்லை,” என்றான் அவனும்.
“ஏன் வெற்றி அப்படி சொல்லுறீங்க? ஓ… பார்த்தா ஒரு நாள்ல இவங்கூட எப்படி பர்சனல் ஷேர் பண்ணுறதுனு நினைக்குறீங்களா?” என்றான் குமரன்.
“நா அப்படி நெனைக்கல குமரா. காலையிலிருந்து உங்க ரெண்டு பேருக்கும் நிறைய வேலை. குளிச்சிட்டு சாப்பிட்டு ஆற அமர பேசலாம்,” என்றான் வெற்றி.
“உன் லவ் ஸ்டோரி ரொம்ப டிராஜடியா இருக்கும் போல,” என்றனர் இருவரும்.
“அதை கதை கேட்டு தெரிஞ்சிக்குங்க. இப்ப வந்து குளிங்க,” என்று இருவரையும் அழைத்துச் சென்றான்.
இங்கு மாறன் வீட்டில் நால்வருக்கும் மாடியில் அறை ஒதுக்கப்பட்டது…
வேல்விழி ஜன்னல் அருகே நின்றவளுக்கு மனதில் என்ன ஓடுது என்று புரியவில்லை.
அன்றைக்கு அனைவரும் பார்க்கத்தான் போலிஸ் ஜீப்பில் ஏறியவள், மீண்டும் இந்த ஊரில் கால் வைக்க ஏழு வருடங்கள் கடந்து போனது.
இவள் இங்கிருப்பதைக் கண்டு, ஊரில் உள்ளவர்களும் இவளை வந்து பாத்து சென்றனர்.
“வேலு…” என்று வாசலிலே தயங்கி நின்றாள் சரசு.
வேல்விழி பார்த்தாளே தவிர வாய் திறக்கவில்லை.
“ஏண்டி, பேச மாட்டியா நீ?” என்றார் காட்டமாக.
“நா பேசினா தான் உங்களுக்கு புடிக்காதே! அப்படி இருக்க… நா என்ன பேசுறது?” என்று எழுந்து நின்றாள்.
அதுவரை ஜன்னல் திண்டில் அமர்ந்திருந்தவள்.
“ஏண்டி, அப்படி பேசுற நீ, உன்னை படுத்தின பாட்டுக்குத்தான்… காவ்யாவுக்கு இத்தனை வருஷம் குழந்தை இல்லாம, இப்பத்தான் முழுகாம இருக்கா…” என்றார்.
பெரியம்மாவை, “என்ன சொல்லுறீங்க?” என்று சிறு அதிர்வுடன் தான் கேட்டாள்.
“அமாடி…” மூக்கைச் சிந்தி தன் முந்தானையில் துடைத்து…
“வவுத்துல ஏதோ கட்டி இருந்துச்சுனு வயித்தை அறுத்துட்டாங்க… வயித்துல குழந்தை வந்தாலும் கலைஞ்சு போச்சுடி. உன்னை அழ வச்ச பாவத்துக்குத்தான்… என் மகளை படுத்துதோன்னு ஒரு பயம்டி,” என்று வெடித்தார்.
அவளுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. தன்னை அன்பாக பார்த்த காவ்யாக்காவுக்கு இப்படி ஒரு நிலையை அவள் கனவில் கூட கண்டதில்லை.
தன் முன்னே அழுகையுடன் நின்ற பெரியம்மாவைப் பார்த்து,
அவள் வார்த்தை நெஞ்சில் பால் வார்த்தாலும்… அடி வயித்தில் தீயை வைத்தது.
தான் வந்ததிலிருந்து ஒரு தடவை கூட ‘பெரியம்மா’ என்று பெருக்குக் கூட அழைக்காமல் இருப்பவளை இப்போது நிமிர்ந்து பார்த்தார்.
“என்னை ஏன் வேலு பெரியம்மான்னு கூப்பிடல நீ?” எனவும்,
“அப்படி கூப்பிட வரல எனக்கு,” என்று திரும்பினாள்.
அன்று வார்த்தையாலே வதைத்து, இன்று வந்து பாவமன்னிப்பு கேட்டு நின்றாலும்… அது மகளின் வாழ்க்கையும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஒன்றும் நேராமல் பூமியில் நடமாட வேண்டி தான் இவளை தேடி வந்தது.
மனதில் சிறு உருத்தல் இருந்தாலும், ‘மன்னிப்பு கேட்டது நிஜம் தானே! இன்னொரு மகள் வாழ்க்கையை எண்ணி தான் வந்தார்…’ என்று நினைத்து கண் கலங்கி நின்ற சரசுவைப் பார்த்தாள
மெல்ல படியேறி மூச்சு வாங்க வந்து நின்றவர் “ஏத்தா, வெளக்கு வச்ச நேரத்துல அழுவுற நீ! எனக்கு கூட இந்த அபி பொண்ணை பாத்தா அழுகையா வருது…” என்று கண்ணை கசக்கினார் பஞ்சவர்ணம்.
“யாரு அந்த அபி? சொல்லுங்கம்மா! போலிஸ்ல புடிச்சு உள்ள வச்சிடலாம்,” என்று அடியும் முனையும் புரியாமல் வந்து தலையை கொடுத்தாள் அம்சவள்ளி.
“அந்த கொடுமையை ஏந்தா கேக்குற… இந்த அபி மாமியா இருக்கா பாரு. அபிக்கு சீதனமா கொடுத்த வெள்ளித்தட்டு, டம்ளர் எல்லாத்தையும் மூட்டை கட்டி மூத்த பொண்ணுக்கு கொடுத்துட்டா! இதுல அந்த பாஸ்கர் சண்டாள பாவி… அபியை அடிக்கப்போயிட்டான்,” என்றார் கதை கேக்க ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்.
பஞ்சவர்ணம் சொன்னது புரியாமல், தன் அருகிலிருந்தவள் காதருகே நெருங்கி, “யாருடி இந்த அபி… மாமியார்… பாஸ்கர்?” என்றாள் அம்சவள்ளி.
“எருமை… அவங்க கோலங்கள் நாடகம் பத்தி பேசுறாங்க…” என்று பல்லைக் கடித்தாள் வேல்விழி.
அம்சவள்ளி “பே…” என விழித்தாள்.
“ம்மோவ்…” என்று கீழிருந்து கத்தினான் மாறன்.
“இதோ வரேன்யா…” என்று கீழே குரல் கொடுத்தவர், “சரித்தா, நீங்க இருங்க… நா வரேன்,” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினார்.
சரசு, நிமிர்ந்து வேல்விழியைப் பார்க்க…
அவள் எதுவும் பேசாமல் அமைதியைக் கடைப்பிடிக்க,
மனமே இல்லாமல்தான் அங்கேயிருந்து நகர்ந்தார்.
“ஏண்டி, ஒரு வார்த்தைதான் பேசினா என்னடி… அவங்க பாரு, முகம் சுருங்கிப் போறாங்க,” என்றாள் அம்சவள்ளி.
“நா என்னடி பேச… அவங்க வந்தது பொண்ணுங்களுக்காக. எங்க என் கண்ணீர் அவங்களுக்கு சாபமா மாறிடுமோன்னு,” என்றாள் வேல்விழி.
“இப்படியே இருந்தா என்னடி… உன் வயசு என்னன்னு தெரியுமா?” எனக் கேட்டுக்கொண்டே, அவள் முகத்தைத் தன்னைப் பார்க்கும்படி நிமிர்த்தினாள் அம்சவள்ளி.
முகம் வாடியவளைக் கண்டு,
“என்னடி வேலு…” என்றாள் உள்ளே போன குரலில்.
“முடியலடி… இன்னைக்கு வந்து இவங்க பேசுறாங்களே! அன்னைக்கு என்னெல்லாம் பேசினாங்கன்னு இப்ப நினைச்சா கூட தாங்கலடி…” என்று கதறினாள்.
அவளை அணைத்துக்கொண்டு, “விடுடி, நா எதுவும் கேக்கல… நீ அழுகாத…” என்று சமாதானம் செய்ய அம்சவள்ளி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது..
நேற்றிலிருந்து அவளுக்கு பழைய ஞாபகங்கள் தான் மாறி மாறி வந்த நேரத்தில், தன் மீதே அவளுக்கு கோவமும் வந்தது..
“இப்போது வந்தவர் கூட ஒரு வார்த்தை, எப்படி இருக்கன்னு கேக்க கூட வாய் வரலடி அவங்களுக்கு.. நா என்னடி பண்ணேன்? ஆளாளுக்கு என்னையே பந்தாடுறாங்க…” என்று இன்னும் கண்ணீர் விட்டாள்..
“வேலு, உங்க மாமாகிட்ட பேச வேண்டிதானேடி,” என்றாள்..
அவளை விட்டு விலகி நின்றாளே தவிர, பதில் சொல்லவில்லை.
“ஏண்டி, அமைதியா இருக்க?” என்றதும் மீண்டும் அவள் முகம் திருப்பினாள்.
“எனக்கு வாய் இருக்கு, நானே எனக்காக பேசிக்குறேன்.. என்னை தேடி வராதவங்ககிட்ட நா எதுக்கு பஞ்சாயத்து வைக்கணும்?” என்ற வேல்விழி, கண்களை துடைத்துக்கொண்டாள்..
இதுவரை அழுத தடம் மொத்தமும் ஒரு நொடியில் மறைக்கும் வித்தை, இவளுக்கு மட்டும் எங்கிருந்து தெரிந்ததோ! என்று தான் அதிசயித்தாள் அம்சவள்ளி..
வாசலில் நின்ற வெற்றி, “உள்ளே வரலாமா?” என அனுமதி கேட்டு நின்றான்..
“வாங்க சார்,” என்று வரவேற்றது என்னவோ, அம்சவள்ளி தான்..
‘எங்கே நம்ம பேசினது கேட்டிருக்குமோ?’ என எண்ணிக்கொண்டு விலகி நின்றாள் வேல்விழி..
“உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்.. வீட்டுக்கு வந்தவங்களைக் கூப்பிட்டு தானே விருந்து வைக்கணும்.. அதான் நானே வந்தேன்ம்மா,” என்று பதில் அம்சவள்ளியிடம் இருந்தாலும், பார்வை என்னவோ வேல்விழியிடம் தான் இருந்தது அவனுக்கு..
“நீங்க போங்க சார்.. நாங்க வரோம்,” என அம்சவள்ளி சொன்னதும்..
“அப்பறம் உங்க தோழிகிட்ட சொல்லுங்க.. ஏற்கெனவே மழை பெய்ஞ்சி ஈரக்காத்தா இருக்கு.. இவங்க அழுது சளி புடிச்சுக்க போகுது,” என்றான் அவளை பார்த்து..
அவன் வந்ததிலிருந்து அவள் பார்வை அவன் பக்கம் திரும்பவே இல்லை. இப்போது அவன் சொன்னதை கேட்டு இன்னும் கோவம் தான் வந்தது..
“அம்சா, சளி புடிச்சா எனக்கு பாத்துக்கத் தெரியும்.. மத்தவங்க கரிசனை எனக்கு வேண்டாம்,” என்றாள் சூடாக..
“ஏட்டி, அவரு உன் நல்லதுக்கு தானே சொன்னாரு.. சரின்னு கேட்டா குறைஞ்சா போயிடுவ நீ,” என்றாள் அம்சவள்ளியும்..
“விடு தங்கச்சிம்மா.. சில நேரம் வலி கூட நல்லதுக்கு தான்.. ரெண்டு பேரும் சீக்கிரம் சாப்பிட வாங்க,” என்று கீழே இறங்கினான்..
“உனக்கு வாய் ரொம்ப அதிகம்டி.. எங்கம்மா என்னை தான் வாயாடின்னு திட்டும். ஊமை மாதிரி இருந்துக்கிட்டு, ஊர் தலைவரை எதிர்த்து பேசுற நீ…” என்றாள் படபடப்பாக..
“ஏன்? எனக்கு என்னை பாத்துக்கத் தெரியும்னு பதில் சொன்னது வாயாடின்னா, நா வாயாடியாவே இருக்கேன்.. சாப்பிட வர்றியா இல்லையா? நா கீழே போறேன்,” என்றாள் எரிந்து விழுந்தபடி…
“வரேன் டி,” என்றவள். ‘முருகா, நாளைக்கு உருப்படியா ஊர் போய் சேர வழிகாட்டுய்யா.. இவ ஊர்த்தலைவர்கூட வம்பு இழுத்து வைக்குறா! கம்பத்துல கட்டி வச்சி அடிக்கப்போறாங்க,’ என்று முணுமுணுத்துக்கொண்டு கீழே இறங்கினாள்..
நால்வருக்கும் பரிமாற வந்தார் பஞ்சவர்ணம்..
“பெரியம்மா, நம்ம தானே இருக்கோம். இதுக்கு ஒராளு பரிமாறணுமா? நீங்களும் உட்காருங்க, சேர்ந்து சாப்பிடலாம்,” என்றாள் வேல்விழி..