Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 10 ( PART 01 )

 

ஏற்கனவே பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்யப்போகிறோம் என்ற குற்றவுணர்வில் தவித்திருப்பவள், இவனது நெருக்கம் வேறு சற்று அதிகப்படியோ, என்று காலையில் இவனது செய்கையிலேயே மனதைக் குழப்பிக் கொண்டிருப்பவள், இந்த சூழலில் வெற்றி மீண்டும் நெருக்கம் காட்டினால்? அதுவும் வெகு இயல்பு போல! அதனால் தான் கோபத்தில் பேசிவிட்டாள்.

 



Advertisement

அதென்ன பழக்கம் எப்பொழுது பார்த்தாலும் முத்தமிடுவது? என்று கடுகடுப்பாய் எண்ணியது அவளின் மனம்.

 

வெற்றிச்செல்வனை பிடிக்கும் தான். அதிலும் முதல்முறை பார்த்த அன்று, எந்தவொரு அனாவசிய கேள்விகளைக் கேட்டும் அவளைச் சங்கடப்படுத்தாமல், அவளுடைய பாதுகாப்பைப் பற்றி மட்டுமே பிரதானமாய் யோசித்தான். பரமேஸ்வரன் ஐயாவாக இருந்திருந்தால் கூட, ‘இவள் ஏன் தனித்து வந்தாள்? என்ன பிரச்சனை?’ என்று கேட்டுத் துளைத்து எடுத்திருப்பார். ஆனால், வெற்றி அப்படி எதுவுமே செய்யவில்லை. முன்பின் தெரியாத தன்மீது, தன் செய்கை மீது இத்தனை நம்பிக்கையா என்று எண்ணி இன்று வரையிலும் வியந்திருக்கிறாள்.

Advertisement

 

Advertisement

அன்றே அவன்மீது நல்ல அபிப்ராயம் தொடங்கியிருந்தது. அதனால் தானோ என்னவோ, அவன் தனக்குப் பிடித்த பரமேஸ்வரன் ஐயாவைப் போல இருக்க வேண்டும் என்று அவளது மனம் ஆசையாய் எதிர்பார்த்தது. அப்பொழுது தான் அவளது பிடித்தம் இன்னும் அதிகரிக்கும் என்று எண்ணினாளோ என்னவோ! இல்லாவிட்டால், அவள் ஏன் அவனை இப்படி இரு, அப்படி இரு என்று அறிவுறுத்தப் போகிறாள்?

 

ஊரார் அவனது கோபத்தையும், நிதானமின்மையையும் பற்றிப் பேசினால், அவளுக்கு அப்படி ஒரு ஆத்திரம் கிளம்பும். அவர்களிடம் கூடக்கூட வாயடித்து, சண்டை காட்டும் ஆத்திரம். முயன்று கட்டுப்படுத்திக் கொள்வாள். அவர்கள் சொல்வது மெய்யா என்று தெரிந்து கொள்ள, அவன் அறியாமல் அவனை நோட்டம் விட்ட நாட்களும் உண்டு. அப்பொழுது அடித்தது தான் அந்த திருட்டு சைட். என்னவோ அவன் அவளை அத்தனை ஈர்த்தான். அதிலும் அவனது கண்கள் அதன்மீது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு தனி மயக்கம் இருக்கும். கள்ளன் எப்படியோ அவனை சைட் அடித்ததையும் தெரிந்து வைத்திருக்கிறான். அதை இன்று காலையில் சொல்லி வேறு காண்பித்தானே!

Advertisement

 

அவள் மனதில் அவன் வேரூன்றி இருக்கிறான் தான். அது அவளுக்கும் நன்கு தெரியும். ஆனால், ஒப்புக்கொள்ளத் தான் மனம் இல்லை. அவள் சூழல் அப்படி! பெற்றோர் இல்லாமல் தனித்திருக்கும் சூழல்.

 

செந்தாமரையின் பேச்சில் வெற்றிச்செல்வனுக்கு கோபம் வந்தது. “அப்படின்னா…?” பார்வை கூர்மை பெற அடிக்குரலில் சீறினான்.

 

‘கோபம் என்ன வேண்டியிருக்கிறது? நான் மட்டுமா இவனது தந்தைக்காக ஒப்புக் கொண்டேன். இவன் மட்டும் என்ன பெரிய ஒழுங்காம்?’ என்று மனதிற்குள் கரித்துக் கொட்டியவள், “இப்போ தான் தெரியுது. நீங்களும் உங்க அப்பா சொன்னாருன்னு தான் என்னை கட்டிக்க முடிவு செஞ்சிருப்பீங்க போல” என்றாள் இகழ்ச்சியாக. இதற்கும் இத்தனை நேரமும் அவளின் முன்பு தான், அவன் தன் தாயிடம் தன் மனதைத் திறந்து காட்டிக் கொண்டிருந்தான்.

 

அதை கேட்டுவிட்டும் இப்படிப் பேசுகிறாளே என்ற ஆத்திரத்தில், “அவரு சொன்னதுக்காகன்னா… ரெண்டு வருஷம் முன்னாடியே நம்ம கல்யாணம் முடிஞ்சிருக்கும்” என்றான் அவளைச் சலிக்காமல் பார்த்தபடி.

 

அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவளின் செய்கை மேலும் ஆத்திரமூட்ட, அவளது தோள்களை அழுத்திப் பிடித்தவன், “எனக்கும் உன்னை பிடிச்சதால… அப்பறம் உனக்கும் என்னை பிடிக்கும்ன்னு நான் தெரிஞ்சுக்கிட்டதால மட்டும் தான் இந்த கல்யாணம்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

 

[the_ad id=”6605″]

 

“என்ன உளறுறீங்க? உங்களை ஆர்வமா பார்த்திருக்கேன் இல்லைன்னு சொல்லலை. அதுக்கு பேரு பிடித்தம் எல்லாம் இல்லை” என்றாள் தடுமாற்றத்துடன். சைட் அடித்ததைத் தெரிந்து வைத்திருக்கிறான் சரி. ஆழ்மனதின் ரகசியத்தையும் கூடவா! இவனிடம் சற்று எச்சரிக்கையுடன் இரு என்றது அறிவு.

 

அவளது தடுமாற்றத்தை ரசித்தவனிடம், தற்காலிகமாக ஆத்திரம் மறைந்து, ரசனை எட்டிப்பார்த்தது. ‘அப்படியா?’ என்ற பார்வையால் கேட்டவனின் விழிகள் குறும்பில் சிரிக்க, இதழ்களிலும் மெல்லிய இகழ்ச்சி புன்னகை, ‘உன்னை நானறிவேன்’ என்பது போல. மங்கையவளின் மனம் அவனது பாவனைகளில் படபடத்தது.

 

மேற்கொண்டு அவனைப் பார்த்துப் பேச முடியவில்லை. “நீங்க என்ன சொன்னாலும், அதான் நிஜம். உங்க அப்பாவுக்காக மட்டும் தான் நம்ம கல்யாணம்” என்று எங்கோ பார்த்தபடி தீர்க்கமாகக் கூறினாள். ‘இதென்ன வீராப்பு?’ மீண்டும் அவனது பார்வை ரசனையைத் தொலைத்து கூர்மை பெற்றது.

 

அதை அவள் பார்த்தால் தானே! இப்பொழுதும் அவனது விழிகளைப் பார்ப்பதை வேண்டுமென்றே தவிர்த்தவள், பேச்சு வார்த்தையைத் தொடர மனமில்லாமல், “நான் கிளம்பறேன்” என்றாள் காற்றாய் போய்விட்ட குரலில். பின்னே, மீண்டும் நெருங்கியல்லவா நிற்கிறான். நெருக்கம் பிடிக்கவில்லை என்றில்லை. ஆனால், இப்பொழுது எதற்கு என்பது அவளது எண்ணம். இது சற்று அதிகப்படி உரிமை பாராட்டுதல் என்று எண்ணினாள்.

 

அவள் அவளுடைய காதலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை தான். ஆனால், இதென்ன பேச்சு? உனக்காக இல்லை, உன் தந்தைக்காக உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்பது போல! அந்தமாதிரி அர்த்தம் கொண்ட பேச்சு சுத்தமாக ரசிக்கவில்லை அவனுக்கு. அவனது தன்மானத்தை வெகுவாக சீண்டியும் விட்டது.

 

அதில் எழுந்த கோபத்தில், “உன் வேலையை ரிசைன் செஞ்சுடு. என் பிரண்ட் திருச்சியில இருக்கா சொன்னேனே, அங்க போயிடு. நான் எல்லா ஏற்பாடும் பண்ணிடறேன்” என்றான் ஒட்டாத தன்மையுடன்.

 

‘என்ன உளறல் இது?’ என்பது போல அவள் கண்டனத்துடன் பார்க்க,

 

“என் அப்பாவுக்காக எல்லாம் யாரும் என்னைக் கல்யாணம் செய்ய வேண்டாம். அப்படி எந்த அவசியமும் எனக்கு இல்லை. என்னை எனக்காகக் கல்யாணம் செய்யற பொண்ணு தான் எனக்கு வேணும்” என்றவன் அவளது தோள்களை விடுவித்து விட்டு, அவனுடைய நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

அவளுக்குத் திக்கென்று இருந்தது. என்ன பின்வாங்கல் இது? கோபம் வரலாம் தான், அதற்காக என்னை வேண்டாம் என்பானா? என்று மனம் தவித்தது. அவள் பேசியது அதிகம் என்பது இன்னமும் அவளுக்கு உறைக்கவில்லை.

 

அவனையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தவளுக்கு, இப்பொழுது நிலைமையைச் சீர் செய்யும் வழி தெரியவில்லை. அவனோ, இவள் புறம் மறந்தும் பார்வையை திருப்பவில்லை. ஏன் அங்கே ஒருத்தி இருப்பது போலக் கூட காட்டிக்கொள்ளவில்லை. அவனுடைய வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தான்.

 

அழுகை பொங்கியது பெண்ணிற்கு. ஆனால், அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பழக்கம் இல்லாதவள் என்பதால் அதையும் முயன்று அடக்கினாள்.

 

தலை வலிக்கும் போல இருந்தது. இங்கிருந்து உடனே சென்றுவிடு என்று அறிவு அறிவுறுத்த, மனமோ அறிவை அடக்குவதிலேயே குறியாக இருந்தது.

 

 

இப்படி கோபமாய் இருப்பவனை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல மனமே வரவில்லை. அன்னையிடமும், தம்பியிடம் என்னைப்பற்றி அப்படி உருகி உருகிப் பேசினான். அதற்குள் நொடியில் வேண்டாம் என்று முடிவெடுக்கிறான் என்று அவனைப்பற்றி புரிந்து கொள்ள முடியாமல் திண்டாடினாள்.

 

[the_ad id=”6605″]

 

 

“தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!

நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்த லாலா!”

 

 

தீயின் தீண்டல் எப்படி நந்தனின் தீண்டலாக இருக்கும் என இத்தனை நாளாய் குழம்பி தவித்தவளுக்கு, அதன் முழு அர்த்தமும் இந்த நொடி விளங்கியது.

 

 

பனியின் தீண்டல் மட்டும் தான் தித்திக்குமா என்ன? இதமான நெருப்பின் தீண்டல் தித்தித்திடாதா? முன்பு காதலால் தித்திக்க வைத்தவன், இப்பொழுது ஊடலால் அலைக்கழிக்கப் பார்க்கிறான் என்று புரிந்தது.

 

 

அதை அவள் வளர்த்து விடுவதா என்ன? அவனது கண்டுக்கொள்ளாமையை சிறிது நேரம் பொறுமையாக அனுசரித்தாள். அவனது பொறுமைக்கும் எல்லை வரட்டும் என்று காத்திருந்தாள்.

 

 

எல்லை வந்திருந்தது. “கிளம்பாம என்ன செய்யற?” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.

 

 

“என்னை நீங்க ஒன்னும் வரச்சொல்லலையே! நானா வந்தேன், நானா போயிப்பேன்” என்றாள் வீம்பாக.

 

 

நிமிர்ந்து அவளைப் பார்த்தவன், ஒன்றும் சொல்லாமல் மீண்டும் கணக்குவழக்குகளில் மூழ்கினான். அவளுக்குச் சப்பென்றானது. மேலும் அவனைச் சீண்ட, “உங்களோட எனக்கு கல்யாணம் வேண்டாம்” என்றாள்.

 

[the_ad id=”6605″]

 

 

“அதைத் தான் நானும் கொஞ்ச நேரத்துக்கு முன்ன வேற மாதிரி சொன்னேன்” என்றான் அவனும் அசராமல்.

 

 

“எனக்கு உங்களை பிடிக்கலை” என்றாள் குரலை உயர்த்தி.

 

 

அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல், “நீ இதை அப்பவே சொல்லிட்ட” என்றான்.

 

 

அவனது அலட்சியமும், கண்டுகொள்ளாமையும் அவளை வெகுவாக சீண்டியது. “உங்களைச் சுத்தமா பிடிக்கலை…” அழுத்தம் திருத்தமாகச் சொல்ல நினைத்தவள், பிசிரான குரலில் சொல்லியிருந்தாள்.

 

 

சமாதானம் செய்யும் முறையா இது? இவள் சமாதானம் செய்யத்தான் தேங்கியிருக்கிறாள் என்றால் கடவுள் கூட நம்ப மாட்டார்.

 

 

இப்பொழுதும் பார்வையை உயர்த்தாமல், “சந்தோஷம்” என்றான் வெற்றி.

 

 

அவ்வளவுதானா? உண்மையிலேயே நான் வேண்டாமா? மங்கையவளின் மனம் கசங்கி விட, கண்ணீர் கரையை கடக்கும் முன்பு வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அறையை விட்டு வெளியேறத் திரும்பினாள்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!