பல்லை கடித்து தன்னை நிலைப்படுத்த முயன்ற படி, “அச்சோ.. அதான் எனக்கு தெரியுமே. அடுத்து..?” என கேட்க,
“ரொம்பவும் பிடிவாதகாரன்.. தான் நினைச்சதை செஞ்சு முடிக்கனுமுன்னு வைராக்கியத்தோட இருப்பார்.
அவரோட படிப்புல இருந்து இப்போ அவர் பாக்கற உத்யோகம் வரை எல்லாம் அவரோட விருப்பப்படி தான் நடந்திருக்கும்..
என்ன நா சொல்றது உண்மை தானே..?” என வாயெல்லாம் பல்லாக அவர் கேட்க,
மொத்த பொறுமையும் காற்றில் பறக்க, “ஜோசியரே..! அவன் வேலை, பிடிவாதம், பாசம் எல்லாமே பெத்து வளத்து ஆளாக்குன எனக்கு நல்லாவே தெரியும்.
அதையே சொல்லி கடுப்பாக்காம அவனோட ஜாதகத்த இன்னும் நல்லா பாத்து அவனுக்கு கல்யாண யோகம் வந்திடுச்சான்னு மட்டும் பாத்து சொல்லுங்க.. போதும்..” என்றதும்,
அவரின் முகத்தில் இருந்த கடுப்பை அப்போது தான் கண்டு கொண்ட அந்த ஜோசியரோ,
‘ஆஹா.. பெரிய இடம் நல்லா வசூல் ஆகுமுன்னு வந்தது வீணாகிடும் போலவே..!
வெறுங்கைய வீசிட்டு ஆத்துக்கு போனா அம்புஜம் ஆடிடுவாளோ..?’ என மனதுக்குள் அலறியவர்,
“கோபப்படாதீங்கோ.. அடுத்து அத பத்தி தான் சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீங்க அவசரப்பட்டா எப்படி..?
நா சொல்றது உண்மைன்னு நீங்க புருஞ்சுக்க தான் இதுவரை நடந்ததை சொன்னேன்.
இப்போ இவருக்கு நடக்க போறத சொல்றேன் நன்னா கேட்டுக்கோங்கோ..
இப்ப இந்த ஜாதககாரருக்கு குரு உச்சத்துல இருக்கார்.
அதனால எண்ணி இன்னும் ஆறு மாசத்துக்குள்ள நிச்சயமா இவருக்கு கல்யாணம் நடந்தே தீரும்.. இதுல எந்த மாற்றமும் இல்லை..” என்றதும்,
அகமகிழ்ந்து போன சந்திரா, “ஜோசியரே உங்க வாக்கு மட்டும் பழிக்கட்டும் உங்களுக்கு கோவிலே கட்டிடறேன்..” என சந்தோஷமாய் சொல்ல,
ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்த ஜோசியரும் வாயெல்லாம் மீண்டும் பல்லாக, “என்கிட்ட கூட நல்ல நல்ல வரனெல்லாம் ரெடியா இருக்கு மேடம்.
உங்க தகுதிக்கு ஏற்ப சீர் செய்யற இடம் கூட இருக்கு.
பொண்ணு பாக்கவும் மஹாலக்ஷ்மி மாதிரி லட்சணமா அழகா இருக்கும்.
பொண்ணோட போட்டோ நாளைக்கி கொண்டு வர்றேன்.
நீங்க பார்த்துட்டு உங்க புள்ளகிட்டையும் ஒரு வார்த்த கேட்டு, ஓகே சொன்னா பொண்ணு ஆத்துல பேசி கல்யாணத்த நல்லபடியா முடிக்க நானாச்சு..” என சொன்னவரை பார்த்து,
“ஆஹா ஜோசியரே, நீங்க சொன்னது மட்டும் அப்படியே நடந்துட்டா உங்கள எ..ப்..ப..டி….. கவனிக்க போறேன் தெரியுமா..?” என சொன்ன சந்திராவின் எண்ணத்திற்கு மாறாக,
அந்த ஜோசியரை தன் வீட்டிற்கு பின் பக்கமாக தலைகீழாய் கட்டி, நன்கு கவனித்துக் கொண்டிருந்தான் வெற்றிவேல் செழியன் மனதின் உச்சகட்ட கடுப்புடன்.
“சார்.. விட்டுடுங்கோ ப்ளீஸ். தெரியா தனமா உங்க ஜாதகத்த பார்த்து சொல்லிட்டேன்.
இனிமே உங்க தெரு பக்கமில்ல, இந்த ஊருலையே இருக்க மாட்டேன்.
ஏன்.. இந்த ஜோசியம் பார்க்கறதையே விட்டுடுறேன்.
நேக்கு குடும்பம், புள்ள குட்டி இருக்கு..” என,
தனது கண்கள் இரண்டும், ‘எங்கே இனி இப்படியே தொங்கிக்கொண்டிருந்தால் வெளியே வந்துவிடுமோ..?’ என்ற அச்சத்தில் அலறியவரை சாவகாசமாக கீழே இறக்கி விட்டவன்,
“இனி ஒரு தடவ எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு போட்டோ காட்டறேன்.. பொண்ணையே காட்டறேன்னு இந்த வீட்டு பக்கம் உன்ன பார்த்தா நீ காலி. புருஞ்சதா..? ஓடு முதல்ல..” என மிரட்டி அனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தவனை சந்தோஷமாக எதிர்கொண்ட சந்திரா,
“கண்ணா..! நா, ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. இப்பவே கை காலெல்லாம் துறுதுறுன்னு இருக்கு..” என்றவரை அவரே அறியாத நமுட்டு சிரிப்போடு எதிர்கொண்டவன்,
“அம்மா இவ்வளவு எக்சைட் ஆகற அளவு என்ன நடந்துச்சு..?” என்றான் இலகுவாய் ஹால் ஷோஃபாவில் சாய்ந்து அமர்ந்தபடியே.
அவனின் அருகே அமர்ந்து அவனின் தாடையை பற்றி தன்னை முகத்தை பார்க்க வைத்தவர், ஜோசியருடனான பேச்சிவார்த்தையை சொல்லி,
“நாளைக்கே அந்த பொண்ணு பத்தின தகவலோட போட்டோவும் கொண்டு வருவார் கண்ணா.
நீ அவர் கொடுத்ததும், அத பார்த்து ஓகேவான்னு சொல்லு.. அது போதும் தங்கம்..” எனக்கொஞ்ச,
அவருக்காய் முகத்தின் கடுப்பை காட்டாது அழகாய் மறைந்து கொண்டவன் மனத்திற்குள்ளாக, ‘என்னைய மீறி எந்த கொம்பன் பொண்ணு போட்டோவையும் வீட்டையும் காட்டிட போறான்..?
நீங்களும் இப்படியே காத்திட்டு இருந்து வெறுத்துபோய் என்னோட கல்யாணம் பத்தின கனவையே கை விட்டுடுவீங்க..’ என்று நினைத்தபடியே,
“கண்டிப்பா ம்மா. உங்க ஆசைய நிறைவேத்தாம யாரோட ஆசைய நிறைவேத்த போறேன் சொல்லுங்க..” என்று சந்திராவிற்கு ஏற்ற விதமாய் சொன்னதும்,
மகனின் இந்த இலக்கமான பேச்சில் மனம் குளிர்ந்த சந்திராவோ, “எனக்கு வர்போற மருமக எங்கே.. எப்படி இருக்காளோ..?” என மேலே பார்த்து ஆசையாய் சொன்ன நேரம்..
செந்தமிழ் தந்த மாலை பலகாரத்தை தன் வீட்டு ஹாலில் அமர்ந்து மொக்கியபடி டிவி பார்த்துக் கொண்டிருந்க கனிகாவிற்கு புரையேறியது.