Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 9.1


வெற்றியை பரிசோதித்த அந்த மருத்துவர், “கண்ணுல துரும்பா விழுந்த எதையோ.. தண்ணியில கழுவி எடுக்கறதுக்கு முன்னாடி, கண்ணை நல்லா கசக்கி இருக்கீங்க. 

அதான் லைட்டா புண்ணான மாதிரி இருக்கு. அதோட எஃபெக்ட் இப்படி உங்களுக்கு உறுத்தற மாதிரி ஃபீல் ஆகுது. 

உங்க கண்ணுல என்ன விழுந்துச்சுன்னு ஏதாவது ஐடியா இருக்கா சார்..? ” என விசாரிக்க,

வெற்றிவேல் நடந்ததை சொல்ல தயங்க.. சமயோஜிதமாய் நந்தன், “காலைல ஒரு கேஸை பிடிக்க போயிருக்கான். 

அக்யூஸ்ட் எஸ்கேப் ஆகறதுக்காக இவன் முகத்துல கையில இருந்த பாலை ஊத்திட்டான். 



Advertisement

நல்ல வேளை பால் ஆறி போனதால முகத்துக்கு எதுவுமாகல.

பர்பாமென்ஸ் ஸ்ட்ராங்கா.. இருக்கறதுக்காக நல்லா பாதாம் பிஸ்தான்னு போட்டு பால சுண்ட காய்ச்சி வச்சிப்பாங்க போல டாக்டர்…” என சொல்லி வெற்றியை பார்த்து கண்ணடித்தான்.

எதிரில் இருக்கும் டாக்டர் அறியாதவாறு நந்தனை வெற்றி முறைக்க, ‘உண்மைய தான்டா சொன்னேன்..’ என்பதாய் ஒரு பார்வையை வீசி விட்டு நமுட்டு சிரிப்போடு நந்தன் இருக்க, 

Advertisement

எல்லாம் என் தலையெழுத்து.. என நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது வெற்றிவேல் செழியனால்.

Advertisement

இவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் மௌன பேச்சுவார்த்தை உணராத அந்த மருத்துவரும்,

Advertisement

“அப்போ அதுல இருந்த பாதாம் தூள் கண்ணுல பட்டிருக்கும் சார்.

இந்த சொட்டு மருந்தை ரெண்டு நாளைக்கு கண்ணுல மூனு சொட்டு ஊத்திட்டு படுங்க சரியாகிடும்..” என சொல்லி எழுதி கொடுக்க, 

“தேங்க்ஸ் டாக்டர்..” சொல்லி வெளியே வந்தனர் நண்பர்கள் இருவரும்.

“ஓகே மச்சா.. நா கிளம்பறேன்..” என வெற்றி சொல்ல,

“மச்சா ஒரு நிமிஷம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இப்போ நீ ஃப்ரீயா இருக்கியா..?” என  கேட்ட நந்தனிடம்,

“என்ன விசயமாடா பேசனும். ஏதாவது முக்கியமானதா..?” என வெற்றி யோசனையோடு கேட்க,

“வா.. என்னோட ரூமுக்கு போயிடலாம்..” என்றவன், அங்கிருந்த ஒருவரை அழைத்து.. வெற்றிக்கான மருந்தை அந்த மருத்துவமனையிலிருந்து வாங்கி வர பணித்து விட்டு வெற்றியுடன் சென்றான்.

அறைக்குள் வந்து அமர்ந்ததும், “சிஸ்டர் பத்தி தான் பேசனும் வெற்றி. நான் நேத்தே உன்கிட்ட தெளிவா சொன்னேன். அவங்க தான் உனக்கு சரியான ஜோடின்னு… 

அப்புறமும் நீ இன்னைக்கு காலைல நடந்தத சொல்லும் போதே கெஸ் பண்ணிட்டேன் உங்களோட லைஃப் இன்னும் ஆரம்பம் ஆகலைன்னு. ஏன்டா..?” என்றான் நண்பனின் வாழ்க்கை குறித்த ஆதங்கத்தோடு.

சில நொடி அமைதியாய் இருந்த வெற்றி, “மச்சா.. அவள இப்ப இல்ல பொறந்த நாள்ல இருந்தே எனக்கு தெரியும். 

இன்ஃபெக்ட் அவள கார்த்திக்கு முன்னாடி கையில வாங்கினது நான் தான். 

கார்த்திக்கு அவனோட அம்மா வலியில அழுததை பார்த்து பயம். அதனால அங்கே இல்ல.. ஆனா குட்டி பாப்பா வருமுன்னு சொன்னதுக்காக நான் அங்கே இருந்தேன்டா.

ஆசையா அவளை கையில வாங்கின மொமண்ட் மறக்கவே முடியாது. 

அதுமட்டுமில்ல குழந்தை தனமா அவ செய்யற சேட்டையை எல்லாம் அவ்வளவு ரசிச்சிருக்கேன்‌.

கார்த்தி எங்கள விட்டு போனதும் உடைஞ்சு போக இருந்த என்னை மீட்டவ அவ.

இப்படி எல்லாமா இருந்தவள விட்டு போக வேண்டிய சூழ்நிலை.

அப்பா இறந்ததுல என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம அழுது கிறங்கி இருந்தவன் தெளியும் போது நாங்க அந்த ஊருல இல்லை. 

“கனி பாப்பாகிட்ட போலம்மா..” ன்னு அப்போ ரொம்ப அழுதிருக்கேன். 

ஆனா மாமா தான் அப்போ.. அம்மாவுக்கு அப்பா போனாதால இருக்கற வருத்தத்தை பத்தி சொல்லி, தனிமையை விட அவங்க எல்லாரோடவும் இருக்கறது தான் அம்மா மனசுக்கு ஆறுதலா இருக்குமுன்னு.. சூழ்நிலையையும் விளக்கி அவங்க கூடவே இருக்க வச்சாங்க.

நிச்சயமா அவள பார்ப்பேன்னு நம்பிக்கையோட தான் இந்த ஊருக்கு வந்த ட்ரான்ஃபரை ஏத்துக்கிட்டேன்.

அவங்க இருந்த வீட்டுல விசாரிக்க அவங்க அங்கிருந்து நாங்க போனதுமே காலி பண்ணிட்டாங்க ன்னு தெரிஞ்சது.

அவங்கள கண்டுபிடிக்கறது பெரிய விசயமில்ல தான்.. இருந்தாலும் இப்போ அவங்களுக்கு என்னை நியாபகம் இருக்குமான்னு தெரியாம அவங்க முன்னாடி நிற்க தயக்கமா இருந்துச்சு.

ஏன்னா அம்மா அவங்களுக்கு போட்ட லெட்டர்ஸ் ரிட்டன் ஆனது எனக்கு தெரியுமே..! 

அவங்க எங்க காண்டாக்ட்ட விரும்பலையா..? இல்ல வேற ரீசனா..ன்னு தெரியாம போய் எப்படி நிற்பேன் சொல்லு..?

அப்படி ஆசையா பார்க்க நினைச்ச பொண்ணு.. கண் முன்னாடி வந்து நின்னா.. என்னை பார்த்ததும் கட்டிக்கிறையான்னு கேட்டா.. எப்படி இருக்கும்..?

அதுலையும் அந்த பொண்ணு நான் தேடற பொண்ணு ன்னு தெரிஞ்சதும் அத்தனை சந்தோஷம். 

அந்த சந்தோஷத்தை நிலைக்க விடாம அவளுக்கு உடம்புல இப்படி ஒரு பிரச்சனை.. இன்னும் சில மாசம் தான் அவ உயிரோட இருப்பான்னு சொன்னா எப்படி இருக்கும்..?

மொத்தமா உடஞ்சு போயிட்டேன் டா. அந்த விசயம் தெரிஞ்ச அன்னைக்கு ஒரு வளர்ந்த ஆண் மகன்.. சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் காவலன்னு மறந்து.. நா அழுதது அந்த நாலு சுவருக்கு தான் தெரியும்.

அப்படி ஒரு நிலையில என்னால வேற எதை சரியா யோசிக்க முடியும்..? நானும் ஒரு எமோஷனல் இடியட்டா பிகேவ் பண்ணிட்டேன். 

அதனால தான் அந்த கல்யாணம் அவ்வளவு அவசரமா ஏற்பாடு பண்ணேன்.

அவ எதை சொல்லியிருந்தாலும் சரிடா.. ஆனா அவ சாகப்போறேன்னு சொல்லி என்னை ஏமாத்தினது தான் என்னால தாங்கவே முடியலடா.

அவள நேசிக்கறவனுக்கு அது எப்படியான வலின்னு அவளுக்கு புரியவே இல்லடா.

உயிரோட மதிப்பு புரியாம பொய் சொல்லி நடிச்சவளுக்கு நா என்னன்னு சொல்லி என் நேசத்தை புரிய வைக்க..!

எல்லா விசயத்திலும் விளையாட்டு. பெரியவங்கன்னு  மரியாதை இல்ல..” என அவளின் மீதான நேசத்தையும் அவளின் அலட்சியமான நடத்தையையும் வெற்றி அடுக்கிக்கொண்டே போக,

அவனின் நிலைமை நன்றாகவே புரிந்தது அந்த மருத்துவனுக்கு.

‘தான் நேசித்த பெண் சொன்ன விசயம் சின்னதாக இருந்தாலும்.. அதில் இருந்த பயங்கரம் அவனை நன்றாகவே பதம் பார்த்திருக்கிறது..’ என்பதை உணர்ந்தவன், அதை நீங்கிடும் பொருட்டு,

அவனின் தோளில் தட்டி அவனை ஆசுவாசமடைய செய்தவன்,

“லிசன் வெற்றி.. சிஸ்டர் சொன்னது பொய் தான். அதை நானும் மறுக்கல. ஆனா அந்த பொய் அவங்க சொல்ல காரணம் உன் மேலே அவங்களுக்கு இருந்த காதல். 

உன்னை கல்யாணம் பண்ணிக்க என்ன செய்யன்னு தெரியாம செய்த முட்டாள்தனமான வேலை. அதை இல்லைன்னு சொல்லல.. ஆனா அதுக்கு காரணமும் நீ தானே.

நீ கல்யாணமே பண்ணிக்காம தில்லுமுல்லு பண்ணி வச்சது அவங்களுக்கு தெரியுமா தெரியல.. ஆனா எனக்கு தெரியும். அப்படி இருக்கற உன்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க தானே இதை செய்தாங்க.

அவங்களுக்கு உன் கூட இருக்க இதை தவிர வேற வழியில்லன்னு கூட செஞ்சிருக்கலாம். அதை முதல்ல புருஞ்சுக்கோ..” எனும் போதே, 

நந்தனின் அறைக்குள் ஓடி வந்த நர்ஸ் சொன்ன தகவலில் எமர்ஜென்சி பகுதியை நோக்கி ஓடிய நந்தனை தொடர்ந்தான் வெற்றிவேல் செழியன்.

அங்கு கனிகாவின் வயதை ஒத்திருக்கும் ஒரு பெண் தலையிலும் உடலிலும் ரத்தம் பெருக ஸ்ரெக்ச்சரில் கிடத்தப்பட்டிருந்தாள்.

நந்தன் மருத்துவனாய் அவளின் நாடியை பரிசோதித்தவனுக்கு புரிந்து போனது அந்த பெண்ணின் மரணம் தவிர்க்க இயலாது என்பது.

இன்னும் சில மணித்துளியில் அவள் உயிர் பிரிவது உறுதி என்பதால் மேற்கொண்டு எந்த சிகிச்சையும் தொடராமல் இருந்தவனை நெருங்கிய வெற்றி, 

“என்னடா.. உள்ளே கொண்டு போக சொல்லாம மரம் மாதிரி நிக்கறே..?” என பதட்டத்தோடு கேட்க, 

வெற்றியை திரும்பி பார்த்தவன் பார்வையே சொன்னது, ‘இனி அடுத்து என்ன..’ என்பதை.

அந்த பெண்ணின் பெற்றோரின் கதறலோடும், உறவினர்களின் கண்ணீரோடும் அந்த பெண்ணின் சடலம் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட,

மீண்டும் நந்தன் தனது அறைக்கு வெற்றியோடு வந்தவன், “இப்போ பார்த்தியே இது மாதிரி நிறைய நீயும் சரி நானும் சரி.. நம்ம வாழ்க்கையில பார்த்திட்டோம். 

அதுவே சொல்லும் மரணம் எப்போ, எப்படி யாருக்கு வருமின்னு யாராலையும் சொல்ல முடியாதுன்னு.

கனி சிஸ்டர் சொன்னது பொய் தான். ஆனா.. அது நடக்கவே நடக்காதுன்னு நீ சொல்ல முடியுமா…? 

வாழ்க்கையில மரணம் வந்தே தீரும். என்ன ஒன்னு காலம் நேரம் தெரியாத வரை சந்தோஷமா இருக்கலாம். தெரிஞ்சா நிம்மதி போயிடும்.

ஏன் உன்னோட போலீஸ் லைஃப்ல எப்போ யாரால உனக்கு என்ன ஆகுமுன்னு உன்னால சொல்ல முடியுமா..? எப்பவும் நீ இப்படியே இருந்திட முடியுமா..? 

ஆபத்து நிறைஞ்ச தொழில்ல இருக்கற நீயே இப்படி இருந்தா எப்படி வெற்றி..?

உனக்கு இப்போ கிடச்ச இந்த வாழ்க்கையை நீ இருக்கற வரை சந்தோஷமா வாழ பாரு. 

யார்.. யாருக்கு முன்னாடி போவா ன்னு யார் சொல்ல..?

இப்போ இறந்த அந்த பொண்ணு மேல தப்பே இல்ல. காலேஜ் போக பஸ்ஸூக்காக அவங்க அப்பா பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு, பத்தடி கூட போகல, தண்ணி போட்டுட்டு ஓட்டுன ஒரு பெரும் குடிமகனோட ஆட்டோ அந்த இடத்துல இருந்த அத்தன பேர் மேலையும் இடுச்சு தள்ளிட்டு போயிருக்கு.

பத்து நிமிஷம் முன்னாடி வீட்டுல இருந்து சந்தோஷமா வந்த பொண்ணு, பிணமா திரும்பி அந்த வீட்டுக்கு போறா. 

உனக்கு இதுக்கு மேல சொல்ல வேண்டியதில்ல.

அப்புறம் கனி சிஸ்டரை பத்தி நீ சொன்ன மத்த விசயங்கள், நீ அவங்ககிட்ட பேசி, பழகி பார்த்தா அப்போ தெரியும் அவங்கள.  

எனக்கு தெரிஞ்ச அளவில் கூட உனக்கு அவங்கள தெரிய வாய்ப்பில்ல. 

சின்ன வயசுல நீ பார்த்து பழகின கனிகா இல்லை அவங்க. 

உன்கிட்ட பேசற விளையாட்டு பேச்சு மட்டுமே அவங்க கேரக்டரை டிசைட் பண்ணாது வெற்றி.

அவங்க கூட பேசி பழகி அவங்கள முழுசா புருஞ்சுக்க முதல்ல முயற்சி செய்.. அதுவே உன்னோட குழப்பத்தை போக்கி சரியான வழியை காட்டும்..”  என சொல்லி வெற்றியின் முகம் பார்க்க,

இதுவரை இருந்த கோபம் குறைந்து ஒரு வித சிந்தனை வயப்பட்டு நின்றிருந்த வெற்றியை கண்டவனுக்குள்,

‘அப்பாடா.. பையன் யோசிக்க ஆரம்பிச்சிட்டான். இனி கரெக்ட்டா ரூட் பிடிச்சு வந்திடுவான்..’ என மனதில் தோன்றிய சந்தோஷத்தோடு அவனை அனுப்பி வைத்த நந்தனுக்கு தெரியவில்லையே.. 

அங்கு கனிகா இவனை கடுப்பேத்தும் முயற்சியை செவ்வனே செய்து வைக்க ரெடியாக இருக்கிறாள் என்று..!!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!