Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சொல்லி விடு வெள்ளி நிலவே

சொல்லி விடு வெள்ளி நிலவே – 2

சேலம் நோக்கி ஹை வேஸ் ரோடில் வேகமாக போய்க் கொண்டிருந்தது அந்த அதி நவீன ஹயபூஸா பைக்!

அப்போது போன் கால் ஒன்று வரவும் எடுத்து, “சொல்லும்மி” என்றான் ரித்தீஷ்.

“நீ முதல்ல வண்டிய கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு பேசுடா” என்றாள் அவனின் அம்மா சஷிபாலா.

“உன்னோட பெரிய இம்சைம்மி. நான்  அவசரமா போய்கிட்டுருக்கேன், வண்டிய நிறுத்திட்டு பேச எனக்கு நேரமில்ல இப்ப. அப்படியே பேசப் போறேன்னா பேசு. இல்லன்னா போனை வை!”



Advertisement

“டேய்.. இப்ப வண்டிய நிப்பாட்டிவிட்டு பேசுறயா இல்லையா?” அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை உச்சுக் கொட்டியபடி வண்டியை கொஞ்சம் ஓரமாக நிறுத்தி விட்டு பேச வைத்தது.

“சொல்லு.. என்ன விஷயம்?”

“சார். அப்படி அவசரமா எங்க போய்க்கிட்டு இருக்கீங்க? முதல்ல எங்க இருக்கீங்க அத சொல்லுங்க?”

Advertisement

“முதல்ல நீங்க எங்க இருக்க ம்மி? அத சொல்லு முதல்ல?”

Advertisement

“டேய் உன்னை நான் கேள்வி கேட்டா, நீ என்னை கேக்குறியா? நீ சொல்லுடா முதல்ல..”

“நான் சேலம் போய்க்கிட்டு இருக்கேன். இந்த வீக்எண்டு பசங்க எல்லாம் சேர்ந்து ஏற்காடு போறோம். சேலத்துல ஒரு பிரன்ட் இருக்கான்.

அவன் வீட்டுக்குப் போயிட்டு அப்படியே நாங்க பாய்ஸ் எல்லாம் ஒரு கேங்கா போறோம் அங்க!”

Advertisement

“ஏண்டா கும்பகோணத்தில் இருந்து பைக்கிலேயே சேலம் போய்க்கிட்டு இருக்கியா? உன்னை..”

“ம்மி. இப்படி ஒரு சூப்பர் பைக்கை வச்சுகிட்டு, நான் என்ன ட்ரைன்ல யா போக முடியும் போ ம்மி காமெடி பண்ணிட்டு..”

“டேய்.. ஏண்டா..ஏண்டா.. இப்படி.. உன் வயசு பசங்க எல்லாம் ஒழுங்கா படிச்சு, நல்ல கம்பெனியில பிளேஸ் ஆகி, அவனவவன் வீடு, ப்ளாட்ன்னு  வாங்கிட்டுருக்காங்க.

நீ என்னடான்னா இன்னும் உன்னை விட சின்ன பசங்க கூட சேர்ந்து கிட்டு இப்படி பைக்கில ஊர் ஊரா சுத்திட்டு இருக்க?”

“ஏண்டா.. இந்த பைக் வாங்கின காசுக்கு ஒரு பிளாட் வாங்கி போட்டிருந்தா கூட அது ஒரு இன்வெஸ்ட்மென்டா இருந்திருக்கும்!

ஏண்டா இப்படி வண்டியில போய் இவ்வளவு காசைப் போட்டு வீணடிக்கிற?”

“அய்யோ.. ம்மி, இந்த இன்வெஸ்ட்மென்ட், ப்ராபர்ட்டி சேக்கிறது, இத எல்லாம் செய்யறதுக்கு தான் என்னோட தொழில் காந்தம் மம்மி திருமதி சஷிபாலா அவர்கள் இருக்கியே?

அப்புறம் நான் வேற எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு?

பை தி வே ம்மி, இது நானே என் காசுல வாங்கிகிட்ட பைக்!

என் உழைப்பு, என் சம்பாத்தியம்,  என் இஷ்டம்! உன்கிட்ட காசு வாங்கி வீணடிச்சேனா? விடும்மி..”

“உன்கிட்ட மனுசி பேசுவாளா? வண்டிய மெதுவா ஓட்டிட்டு போ. பத்திரமா இரு. மம்மிக்கு உன்னை விட்டா யாருடா இருக்கா? ஏண்டா அத நீ புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற?”

“என்கிட்ட மனுஷி பேச மாட்டா, ஆனா சஷி பேசுவா..” சொல்லி சிரித்தவன்,  “என்னது மெதுவா போகணுமா, நல்லா காமெடி பண்றே.. மெதுவா போகணும்னா, நான் டிவிஎஸ் பிப்டி தான் ஓட்டணும்.

அப்புறம் என்ன சொன்ன? என்னை விட்டா உனக்கு யாரும் இல்லையா? அது தான் உனக்கு அந்த த்ரீ இடியட்ஸ்.. சாரி..  மூன்று அண்ணன்மார்கள் இருக்கங்காளே! பாசக்காரங்க. சின்ன தம்பி குஷ்பூ தானே நீ!  அப்புறம் என்ன?”

“டேய்.. பெரியவங்கள அப்படி சொல்லக் கூடாது.. அவங்களும் நீயும் ஒன்றா எனக்கு?”

“கண்டிப்பா இல்ல தான், உனக்கு அவங்களுக்கு அப்புறம் தான் நான்! அவங்க சொல்றதுக்கு தான் நீ ஆடுவ.

என்னோட பீலிங்க்ஸ் எல்லாம் புரிஞ்சுக்கவே மாட்டே! இப்பவாச்சும் என்னை என் இஷ்டபடி விடேன் மம்மி!

நான் என்ன குடிச்சு கூத்தடிச்சுட்டு இருக்கேனா, இல்ல பொம்பள பிள்ளைங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேனா?

எங்க உன்னோட பேர நான் கெடுத்துட்டு இருக்கேன்!

என்னமோ நான் கெட்டு சீரழிஞ்சுட்டு இருக்கிற மாதிரி உன் பிரதர்ஸ் பேசுவாங்க, நீயும் ஒண்ணுமே சொல்லாம கேட்டுட்டு இருப்ப!

 என்னால எல்லாம் அத சகிச்சுட்டு இருக்க முடியாதும்மி.”

“டேய். டேய். அப்படி இல்லடா.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க!

நமக்கும் நாலு மனுசங்க வேணும்டா. நீ அத எப்ப தான் புரிஞ்சுக்க போறேன்னு தெரியல!”

“நாலு நல்லவங்க வேணும் தான் ம்மி. ஆனா அந்த நாலு நல்ல மனுசங்க கேட்டகிரியில உன் உடன்பிறப்புகள் வர மாட்டாங்கன்னு தான் சொல்றேன்!

சரி வை. நான் அப்புறம் பேசுறேன்.”

“சேலத்துல நீ எங்க தங்கப் போறே? அங்க நம்ம பானு ஆண்ட்டி பேர்லாண்ட்ஸ்ல தான் இருக்கா? நீ அங்க போய் இருந்துக்கோ.

நீ போனா அவ சந்தோசப்படுவா!”

“என்ன.. சஷி. நான் எங்க போனாலும் இப்படி ஸ்பை வச்சு கண்காணிக்கிறத விடவே மாட்டியா?”

“டேய்.. உதைப்படுவ.. என் பிரன்ட் பானு உனக்கு ஸ்பை மாதிரி தெரியறாளா?  அவ அங்க தனியே இருக்கா.. உன்னைப் பார்த்தா சந்தோசப்படுவான்னு போக சொன்னா.. நீ இப்படி சொல்ற?”

“என்ன பண்றதும்மி.. உன் பாஸ்ட் ஹிஸ்டரி அப்படி..

சரி.. சரி..பாக்கறேன், டைம் இருந்தா, போய் பார்த்துட்டு வரேன். இப்ப போனை வை.”

போனை வைத்த ரித்தீஷ், ஆறடி வளர்ந்த, அல்ட்ரா மாடர்ன் இளைஞன்!

90’ஸ் கிட்ஸ் என்றும் சொல்ல முடியாத, 2K கிட்ஸ் என்றும் சொல்ல முடியாத வருஷம் பிறந்தவன்!

அதனால் அவனது சில செயல்கள், 90’ஸ் கிட்ஸ் போலவும், சில செயல்கள் 2K கிட்ஸ் போலவும் இருக்கும்!

சோசியல் மீடியாவில் பிரபலமாகி ஆகி விட்டிருக்கும் பைக் ட்ராவலர்! அவனின் ரீல்ஸ் மூலம் கிடைத்த வருமானத்தில் வாங்கியது தான் இந்த காஸ்ட்லி சூப்பர் பைக்!

அம்மா சஷி பாலாவுக்கு அவன் ஒரே பையன். அப்பா சதீஷ் இவன் பிறந்த கொஞ்ச நாளிலேயே இறந்து விட, அம்மாவுக்கு எல்லாமே இவன் தான்!

அம்மா பிறந்தது, கும்பகோணம் அருகில் ஒரு கிராமத்தில் , பெரிய பண்ணைக் குடும்பம்!

நிலபுலங்கள், தோப்பு துரவுகள் என்று பரம்பரை சொத்துக்கள் ஏராளம்! இது இல்லாமல் பெரிய ஆயில் மில், ரைஸ் மில் உண்டு.  ஊட்டியில் எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களும் பிற்காலத்தில் வாங்கியிருந்தனர்.

அம்மாவின் கூடப் பிறந்தவர்கள், மொத்தம் நான்கு பேர். மூன்று அண்ணன்கள் மற்றும் ஒரு தங்கை.

தங்கை என்றும் சொல்ல முடியாது. இரட்டையர்கள்! அம்மா சஷி பாலாவும் சித்தி ரிஷி பாலாவும்.

அவர்கள் வீட்டுப் பெண்களை பேருக்கு ஒரு டிகிரி படிக்க வைப்பது மட்டும் தான் அந்த வீட்டுக்கு பழக்கம். அதுவும் போன தலைமுறையில் இருந்து தான்!

ஆனால் அம்மாவும் சித்தியும் நன்றாக படித்தார்கள். யுஜி முடித்த பின், மேற்கொண்டு எம்.பி.ஏ  படிக்க ஆசைப்பட்டார்கள்!

கிட்ட தட்ட காந்தி தாத்தா லண்டன் போய் படிக்க, அவர் அம்மாவிடம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு இணையாக பல்வேறு வாக்குறுதிகள், நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்ட பின் அவர்கள் இருவருக்கும் வெளியூர் சென்று பிஜி படிக்க அனுமதி கிடைத்தது!

ஆனால் விதி, அம்மாவை அங்கு தன்னுடன் படித்த அப்பா சதீஷுடன் காதலில் விழ வைக்க, அதற்கு சித்தியின் தூது!

வீட்டை எதிர்த்து திருமணம்!

தனிக்குடித்தனம்!

ரித்து வயிற்றில் நிறைமாதக் குழந்தையாக இருந்த போது,

அப்போது வீட்டுக்குத் தெரியாமல் அம்மாவை பார்க்க சித்தி ஆசைப்பட , அப்பா சென்று  அவளை பைக்கில் அழைத்து வந்த போது ஏற்பட்ட கோர விபத்தில் அப்பாவும் சித்தியுமே இறந்து விட்டார்கள்!

அம்மா தலையில் இடியே விழுந்தது.

அதன் பின், அனாதரவாக நின்ற அம்மாவை வீட்டுக்கே மீண்டும் அழைத்து வந்து விட்டார்கள் பாட்டியும் தாத்தாவும்!

ஆனால், அந்த வீட்டில் அவன் அம்மாவை ஏற்றுக் கொண்ட அளவு அவனை யாருமே ஏற்றுக் கொள்ள வில்லை!

தாத்தா பாட்டியும் அவனிடம் துவேஷத்தைக் காண்பிக்க வில்லை என்றாலும் அன்பையும் காட்டவில்லை!  கொஞ்சம் தள்ளியே வைத்தார்கள்!

அவனின் மாமன்கள் மூன்று பேருக்கும் சாதிப்பற்று மிக அதிகம்.

வேற ஜாதிக்காரனின் வாரிசை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் சஷிக்காக அவனை சகித்தார்கள்!

எனவே சஷி மட்டுமே அவனுக்கு எல்லாம்!

சஷிக்கும் அப்படி தான்!

ரித்து வளர்ந்தான். அவனின் தேவைக்கு என்று ஒவ்வொரு முறை பணம் கேட்கும் போதெல்லாம் வீட்டினர் முகம் சுளித்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளால்.

எனவே தானாக ஒரு தொழில் தொடங்கினாள்.

அப்பாவின் மற்றும் சித்தியின் இன்சுரன்ஸ் பணம் கொண்டு.

சித்தி அம்மாவை நாமினியாக நியமித்திருந்தது போல ஆவணத்தில் இருக்க, அவளின் டெத் இன்சுரன்ஸ் பணமும் வந்திருந்தது.

அதைக் கொண்டே கும்பகோணத்தில் யாத்திரிகர்கள் வந்து போகும் ஒரு ப்ரைம் பிளேசில் இடம் பிடித்து, “என்றென்றும் இட்லி” (இது என்னுடைய கற்பனை பிராண்ட்!) என்று ஒரு ஹோட்டல் தொடங்கினாள் சஷி.

தோசை போன்ற உணவுகள் உண்டு என்றாலும், முழுக்க முழுக்க இட்லி மட்டுமே பிரதானம் அங்கு!

கும்பகோணம் கடப்பா அங்கு மெயின் சைட்டிஷ் ஆக கொடுக்க, டூரிஸ்ட்களின் முதல் சாய்ஸ் ஆக இருந்தது அது.

வீட்டில் கடும் எதிர்ப்பு!  இவ்வளவு பெரிய பண்ணைக் குடும்பத்தில் பிறந்து விட்டு இட்லிக்கடை போடுவதா என்று!

அவனின் மூன்று மாமாக்கள் தான் முக்கியமாக இதை எதிர்த்தார்கள்.

ரித்து இப்போது கிண்டல் செய்கிற மாதிரி, அவர்களில் ஒருவன் முட்டாள் பீஸ், பெயர் கீர்த்தி வாசன். இன்னொருவன் முரட்டு பீஸ். பெயர் கிரிதரன்! மூன்றாவது ஆளோ சக்தி வாசன் ஒரு படித்த முட்டாள்!

இத்தனைக்கும் அவன் பாங்கில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்!

சஷியின் அண்ணிமார்களோ, “விடுங்க. காலம் காலமா புருஷன் இல்லாத பொம்பளைங்க இட்லிக் கடை போட்டு தானே பிழைப்பு நடத்துவாங்க, அதை தான் உங்க தங்கச்சியும் செய்றா!” என்று கிண்டல் அடித்தார்கள்.

ஆனால், அவர்கள் என்ன சொன்னாலும், சஷி அவள் தொழிலை நல்ல படியாகவே நடத்தினாள்.

ரித்து கூடவே அதுவும் வளர்ந்து, இன்று இந்தியாவையும் தாண்டி, உலகம் பூராவும் அவளின் “என்றென்றும் இட்லி”  ஒரு பெரிய குளோபல் ப்ராண்டாக வளர்ந்து விட்டது!

ஆரம்பத்தில் கும்பகோணம் தாண்டி, திருச்சி, தஞ்சை என்று சொந்தமாக கிளைகளை ஆரம்பித்தவள், பின் தொழில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கிளை உரிமம்(Franchise) கொடுத்து நடத்த தொடங்கி விட்டாள்!

அவள் எடுத்துக் கொண்ட அந்த FOCO (Franchisee – Owned , Company-operated) மாடல் மூலமாக அவள் பெரிதாக முதலீடு செய்ய வேண்டி இருக்க வில்லை, ஆனால் அவள் பிராண்ட்டின் தனித்தன்மையும் கெட வில்லை!

அவள் தன் தொழிலை மட்டுமே பார்த்துக் கொள்ளவில்லை, ரித்துவையும் நன்றாக பார்த்துக் கொண்டாள்!

ஒரு இரட்டைக் குதிரை சவாரி மாதிரி!

ரித்து எல்லா நேரமும் அவளின் பார்வை வட்டத்தில், அவள் கண்காணிப்பில் தான் இருந்தான், அவளின் அத்தனை பணிகளுக்கு இடையிலும்!

ஸ்கூல் டீச்சர்கள், தொடங்கி ஆயாக்கள், வேன் டிரைவர்கள், வாட்ச்மேன்கள் எல்லோரிடமும் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, ரித்துவை பார்த்துக் கொண்டாள்.

அவனின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு தகவலாக போய் விடும்.

அவன் ஆசைப்படும் எதுவும் அவனுக்கு கிடைக்காமல் இருந்ததில்லை! அவளின் நேரம் உள்பட! அவன் ஆசைப்பட்டான் என்றால், எத்தனை முக்கியமான வேலை இருந்தாலும் தள்ளி வைத்து விட்டு அவனுக்காக நேரம் ஒதுக்குவாள்!

அவன் கேட்டு அவள் மறுத்தது, ஒன்றே ஒன்று மட்டும் தான்!

அது வாகனம்!

சின்ன வயதில் சைக்கிள்! வளர்ந்த பின் பைக்!

அதுக்கு மட்டும் அவள் எப்போதும் சொல்வது ஒரு பெரிய “நோ”.

ஆனால் ரித்துவுக்கோ, அவள் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் மாதிரி தான் தெரிந்தாள்!

அவளின் அதிகப்படியான அந்த கேர், அவனின் சுதந்திரத்தை சுத்தமாக பறித்துக் கொண்டதைப் போல உணர்ந்தான்!

அதற்கு காரணமும் இருந்தது.

சின்ன வயதில் கிரவுண்டில் விளையாடும் போது கூட, கூடவே இரண்டு பேர் அவனைக் கவனித்துக்  கொண்டே இருப்பார்கள்!

சில சமயம் அம்மாவிடம் பணம் பெறுவதற்காகவும், அல்லது அவளின் குட் புக்கில் இடம் பெறவும் வேண்டியும்,

“மேம், ரித்து விளையாடும் போது விழப் பார்த்தான், நான் தான் டக்கென்று போய் தூக்கி விட்டேன்” என்றோ,

“ரித்து இன்று சாப்பிட ஒரே அடம்! நான் தான் கொஞ்சம் அதட்டி உருட்டி சாப்பிட வைத்தேன்” என்றோ,

“பசங்களோடு சேர்ந்து மரத்தில் ஏறி விளையாடிட்டு இருந்தான்,

நான் தான் மிரட்டி அனுப்பி வைத்தேன், மாடிப்படியில் சறுக்கி விளையாடினான், நான் தான் இறக்கி விட்டேன்” என்று அம்மாவிடம் அப்டேட்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்!

அவற்றில் பல அவன் செய்தே இருக்க மாட்டான்.

இப்படியே அவனின் பள்ளிக் காலம் முடிந்து விட, கல்லூரியும் அம்மாவுக்கு தெரிந்த மானேஜ்மென்ட் என்ற போது அவன் அங்கு படிக்கவே மாட்டேன் என்று சொல்லி உண்ணாவிரதம் போன்ற சில பல யுக்திகள் பண்ணியும் பயனில்லாமல் போய் விட்டது!

முழுக்க பலனளிக்க வில்லை என்றும் சொல்லி விட முடியாது. அம்மாவின் ஆசை ஐடி.

அவனின் ஆசை மெக்கானிக்கல் இஞ்சினியரிங்.

இரண்டு பேருமே இறங்கி வராமல் போக, காலமும் கடந்து விட, கடைசியில் சீட்டு இல்லாமல், திருச்சியில் ஒரு ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்து விட்டான்.

அதற்கு காரணம் இருந்தது! வீட்டில் அவனது மாமாக்கள் அத்தைகள் நடவடிக்கைகளில் சமீப காலமாக ஏற்பட்டிருந்த மாற்றங்கள்!

அவனின் மேல் ஏற்பட்டு விட்ட திடீர் பாசம்!

முக்கியமாக அத்தைகளுக்கு! அது அவனுக்கு ஒட்ட வில்லை!

கொஞ்சம் தள்ளியிருக்க ஆசைப்பட்டான்.

அவர்களின் திடீர் பாசத்திற்கு காரணம், சமீபத்தில் நடந்து முடிந்த சொத்து பிரிப்பு!

கல்லூரி சேருவதற்கு ஒரு வருடம் முன் அவனின் தாத்தாவும் அவரைத் தொடர்ந்து பாட்டியும் அடுத்த சில மாதங்களில் காலமாகிவிட, சொத்து பிரித்த பின் தான் தெரிந்தது, சஷியின் ரித்துவின் பங்கு மற்ற எல்லோரையும் விட மிக அதிகம் என்று!

அதிலும் சஷி தனிப்பட்ட முறையில் சம்பாதித்தது வேறு கணிசமாக இருக்க, மாமன்களுக்கு பொறாமை தலை தூக்கியது!

கூடி கூடி என்னென்னமோ பேசிக் கொண்டார்கள்.

கோபப்பட்ட மாமன்களை அத்தைகள் அடக்கினார்கள். ஏதேதோ பேசினார்கள்.

அதன் பின் தான் அவர்களிடம் இந்த மாற்றம்!

அவர்களுக்கு ரித்து மாதிரி மகன்கள் இருந்த போதும், ரித்துவுக்கு கல்யாணம் செய்யும் வயதில் மகள்களும் இருந்தார்கள்.

விளைவு?

இப்போது அவர்களுக்குள் யார் ரித்துவிற்கு பெண் கொடுத்து, அவன் சொத்து வெளியே போகாமல் பார்த்துக் கொள்வது என்றே ஆகி விட்டது!

எனவே தான், இப்போது வந்திருக்கும் திடீர் பாசம்! அதன் காரணமாகவே ரித்துவுக்கு ஆதரவு!

ஆனால் அவனால் தான் இவற்றை சகிக்க முடியவில்லை! கிளம்பி விட்டான்.

கல்லூரியில் சேர்ந்த பின், அம்மாவிடம் பைக் கேட்க, இப்போதும் நோ தான்!

ஆனால் கேட்டுக் கொண்டிருக்க, ரித்து ஒன்றும் இன்னமும் சின்ன பையன் இல்லையே!

ஏற்கனவே அவன் மாமன்களின் திடீர் பாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு கார் டிரைவிங் கற்றுக் கொண்டிருந்தான் கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில்.

அவன் அப்பா சதீஷ்க்கு பைக், கார் மீது பயங்கர விருப்பம்! அதுவே அவனுக்கு எமனாக போனதால் தான் சஷி மகனை தனியாக வண்டி ஓட்டவே அனுமதிக்க வில்லை!

ஆனால் சதீஷ் மகனுக்கும் இயற்கையாகவே வாகனங்களின் மீது விருப்பம் ஏற்பட, சஷி என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை!

அப்படி டிரைவிங் கற்றுக் கொள்ளப் போன போது பழக்கமானார் பாபு அண்ணா!

பாபு அண்ணாவிற்கு டிரைவிங் ஸ்கூல் தவிர, திருச்சியில் சொந்தமாக மெக்கானிக் செட் ஒன்றும் இருந்தது. சொந்தமாக மாருதி ஆம்னி வேன்கள், டெம்போ ட்ராவலர் வண்டிகளும் இருந்தன!

அவற்றின் மூலம் ஸ்கூல், காலேஜ் மாணவர்களை ஏற்றி செல்லும் ரெகுலர் சவாரிகளும் அவருக்கு உண்டு.

பிஜி படிக்கும் போது, “மம்மி, இப்பவாச்சும் எனக்கு பைக் வாங்கி கொடேன்” என்று கெஞ்ச, அப்போதும் சஷி வாங்கித் தர மறுக்க, அவன் பாபு அண்ணாவிடம் சொல்லி, பார்ட் டைமாக டிரைவர் வேலைக்கு சென்று விட்டான், பைக் வாங்கவென்று!

அவனுக்கு மதியம் தான் கல்லூரி என்பதால், காலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் டிரைவர் வேலைக்கு சேர்ந்து விட்டான்.

மாலை இவன் கல்லூரி விடும் நேரமும், ஸ்பெசல் கிளாஸ்கள் முடிந்து ப்ளஸ் டூ மாணவிகள் வீடு திரும்பும் நேரமும் சரியாக ஒத்து வர, அவன் வேலையையும் படிப்பையும் தொடர்ந்தான்!

மாமன்கள், குடும்ப மானமே போய் விட்டது என்று குதிக்க, வழக்கம் போல் அவர்கள் மனைவியர் அடக்கினர்!

சஷிக்கும் கொஞ்சம் தலை இறக்கம் தான் இதில்!

தான் ஓடி ஓடி இவனுக்கு சொத்து சம்பாதித்துக் கொண்டிருக்க, அவனோ இப்படி அடுத்தவரிடம் கை நீட்டி சம்பளம் வாங்குவது வலித்தது.

எனினும் அவளின் பைக் பயம் விடவே இல்லை!

அவனின் பைக் காதலும் அவனை விட்ட பாடில்லை!

இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது தான் அவன் வாழ்க்கையில் நுழைந்தாள் அவனின் “செல்ல குட்டிமா”.

அப்போது ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அவள், அவன் ஓட்டும் வண்டியில் தான் வருவாள்.

அவள் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழிகளில், இவன் மனம் தடுமாறி விழுந்து விட்டான்!

பின் எழவே இல்லை! எழ முடியவில்லை!

ஆனால் அவளோ, அவனை விட்டு சென்று விட்டாள்!

அதன் பின்னணியில் மாமன்கள் கைவரிசைகள் இருக்குமோ என்று ஆரம்பத்தில் சந்தேகப் பட்ட அவன், நாளடைவில் அதை உறுதியாக நம்பினான்!

அவனுக்கு பெண் கொடுக்க, மூவருக்கும் பயங்கர போட்டி!

சஷியோ, அவர்களில் யாருக்கு  ஜாதகம் பொருத்தமாக இருக்கிறதோ அவளை ரித்துவுக்கு கட்டி வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டாள்!

அவனோ அவன் குட்டிமாவை தேடி அலையத் தொடங்கினான்!

கூடவே வீட்டில் நடக்கும் ஏற்பாட்டையும் தடுக்க வென்று அவன் எடுத்தது தான் இந்த சூப்பர் பைக்கர் ரோல்!

கண் மண் தெரியாமல் இப்படி வண்டியோட்டி சாகசங்கள் செய்து அடிக்கடி கை கால்களை உடைத்துக் கொண்டு வரும், வேலைக்கும் போகாமல், அம்மாவின் பிசினெசையும் பார்க்காமல், வெட்டியாய் இருக்கும்  அவனுக்கு பெண் கொடுத்து விட்டு, பின் அவள் வாழ்க்கையை நினைத்து வருந்த வேண்டுமா? என்று எண்ணம் அவர்களுக்குள் ஏற்பட வைப்பதே அவனின் நோக்கமாக இருந்தது!

கூட அறிமுக இளைஞர்கள், அவனின் பைக் பயணங்களை, சாகசங்களை அதை வீடியோ எடுத்து யூ டியுபில் போட சொல்ல, அது அவனே எதிர்பாராத வகையில் க்ளிக் ஆகி வருமானத்தையும் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது!

ஆனால், அவளுக்கான அவனின் தேடல் மட்டும் வருடங்கள் கடந்தும் முடியவில்லை!

யோசித்துக் கொண்டே வண்டியோட்டியதில், அவன் நண்பனின் கிராம எல்லையைத் தொட்டு, சர்வீஸ் ரோடில் பிரிந்த போன போது, எங்கிருந்தோ ஒரு பெண் குழந்தை வண்டியின் குறுக்கே வந்து விட, அந்த குழந்தையின் தாய், “அய்யோ குட்டிமா..” என்று அலற, அந்த குட்டிமா விளிப்பில் இவனும் கொஞ்சம் தடுமாற, சறுக்கி விட்டது!

அங்கே ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்த இவனின் நண்பனின் நண்பன் இவனை அடையாளம் கண்டு விட்டு வந்து தூக்கினான்.

அருகில் இருக்கும் அந்த தனியார் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டான் ரித்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!