Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவதாளத்தின் லயமிவளோ 13

அத்தியாயம் : 13

பார்ப்பவர்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்த மாளிகையின் முன்னே, அதன் கம்பீரத்தை வெறித்தபடி நின்றிருந்தாள் ஆனந்தி. பூபாலன் அவள் அருகில் வந்து, வாடியிருக்கும் முகத்தைப் பார்த்துவிட்டு, “அம்மா ஆனந்தி!” என்று கனிவோடு அழைக்க, மெல்லத் திரும்பி அவரைப் பார்த்தவள் ஏதும் சொல்லாமல் மௌனமாக நடந்தாள்.

பூபாலனைப் பற்றி அங்குள்ளவர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரியும் என்பதால், காவலாளி அவர் வந்திருப்பதை உடனே உள்ளே தெரிவித்துவிட்டு, உரிய அனுமதி பெற்று அவர்களை மாளிகைக்குள் அனுப்பி வைத்தான்.

தன் தந்தையின் வீட்டிற்குள் முதல் முறையாகப் பாதம் எடுத்து வைத்தாள் ஆனந்தி. அந்த வினாடி அவள் மேனி எங்கும் ஒரு ஜில்லிப்பு பரவியது. அறியாமலேயே கண்கள் கசிய, நாசி விடைக்க, தன் உணர்ச்சிகளைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு பூபாலனைத் தொடர்ந்து உள்ளே சென்றாள்.



Advertisement

பணியாள் அவர்களை ஒரு விசாலமான வரவேற்பறையில் அமர வைத்துவிட்டு, அருந்துவதற்கு ஏதோ எடுத்து வரச் செல்ல, விழிகளால் அந்த இடத்தையே அணுஅணுவாக அளந்து கொண்டிருந்தாள் ஆனந்தி.

அப்போது, வீட்டின் உள்பகுதியிலிருந்து சில பெண்கள் வருவது தெரிந்தது. அதில் இருவர் பூபாலன் அருகில் வந்து, அவரிடம் நலம் விசாரித்தார்கள். அவரது மகன் கபிலனைப் பற்றியும், கூடவே இன்னொருவரைப் பற்றியும் அக்கறையுடன் கேட்டறிந்தார்கள்.

பூபாலனும் முகத்தில் புன்னகை மாறாமல் அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் யாரைப் பற்றி இவ்வளவு நெருக்கமாகப் பேசுகிறார்கள் என்று புரியாமல் குழப்பத்தோடு பார்த்திருந்தாள் ஆனந்தி.

Advertisement

அவளைப் பார்த்த இருவரும், பூபாலனின் உறவினர் பெண்ணாக இருப்பாள் என்று நினைக்க, “இவள் என் மருமகள்” என்று அவர்களிடம் சொல்லி விட்டு, “அம்மா ஆனந்தி! இவங்க ரெண்டு பேரும் தான் இந்த வீட்டு மருமகள்கள்” என்று அவளிடமும் அறிமுகப்படுத்தினார் பூபாலன்.

Advertisement

அவர்களை நோக்கித் திரும்பியவள், ‘இவர்கள் இருவரும் என் சித்தியாகத்தான் இருக்கணும்!’ என்று மனதிற்குள் குறித்துக்கொண்டாள். அவர்களின் முகத்தில் தெரிந்த புன்னகையைப் பார்த்ததும், தானும் மென்மையாக இதழ் பிரித்துப் புன்னகைத்தாள்.

​“ரொம்ப அழகா இருக்கா அண்ணா! உங்க மருமகள் அதிகமா பேச மாட்டாளோ?” ஆனந்தியின் முதல் சித்தி அம்பிகா கேட்க, ​“உங்களை எல்லாம் இப்பதான் அவள் முதல்முறையாகப் பார்க்கிறா, அதான் அந்தத் தயக்கத்துல அமைதியா இருக்கிறா…” என்றார் பூபாலன்.

​“ஓ… ரொம்ப அடக்கமும் அழகும் அமைதியுமாத் தெரியுறா! இவளைக் கட்டிக்கப் போறவன் கொடுத்து வச்சவனாத்தான் இருப்பான்!” அந்த வீட்டின் அடுத்த மருமகளான ஜானகி சொன்னாள்.

Advertisement

பூபாலன் அதைப் புன்னகையுடன் ஆமோதித்து, “ஆமாம்! இந்த வீட்டு மகாலட்சுமி எங்கே?” என்று வினவ, “அவள் தன் அறையில் இருப்பா…” என்றாள் அம்பிகா.

​அவர்கள் யாரைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று தெரியாமல் ஆனந்தி இருக்க, “ஆனந்திக்கு அவளை அறிமுகம் செய்யலாம்னு பார்த்தேன்! அபிநயாவை கொஞ்சம் வரச் சொல்ல முடியுமா?” என்றார் பூபாலன்.

ஏதோ ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று மட்டும் நினைத்துக் கொண்டு, மனதிற்குள் எழுந்த பாரத்தை மறைத்து அமைதி காத்தாள் ஆனந்தி.
சற்று நேரத்தில் பட்டுப்புடவையின் சரசரப்புச் சத்தம் கேட்க, அங்கே வந்த பெண்ணின் காலடி ஓசையை நோக்கி ஆனந்தி நிமிர்ந்து பார்த்தாள்.

அப்போதுதான் புரிந்தது, அவள்தான் இந்த வீட்டின் உண்மையான வாரிசு என்று! நேற்று செல்வா சொன்னானே… ‘உன் அப்பா அமர வேண்டிய இடத்தில் அமர்ந்து, அடுத்தவர்களை ஏவி வேலை வாங்குபவர்’ என்று, அவரின் மனைவிதான் இவள்! இந்த வீட்டு வாரிசு; தனக்கு மாமி முறையானவள். உள்ளுக்குள் கடுத்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதி காக்க வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு.

“வாங்க… எப்படி இருக்கீங்க? சம்சாரம் நல்லா இருக்காங்களா? கபிலன் எப்படி இருக்கான்?”

விசாரித்தபடியே அருகில் வந்த அந்தப் பெண்மணி, “என் பையன் எப்படி இருக்கான்? நீங்க வர்றப்போ ஏன் அவனையும் கூட்டிட்டு வரல? இந்த வீட்டு வேலையைப் பார்க்கவே ஆயிரம் பேர் இருக்காங்க! இவன் என்னடான்னா சொந்தமா வேலை பார்க்கிறேன்னு சொல்லிட்டு, இங்க இருக்கிறதையெல்லாம் விட்டுட்டு அவ்வளவு தூரத்துல போய் இருக்கான். இந்த வீட்டு மூத்த வாரிசா இருந்து குடும்பத் தொழிலைப் பார்த்துக்கணும்னு அவனுக்குக் கொஞ்சம் கூட அக்கறை இருக்கா?” என்று பெருமூச்சு விட்டாள்.

​பூபாலன் மெலிதாகச் சிரித்தபடி இருக்க, இளவரசி தன் அங்கலாய்ப்பைத் தொடர்ந்தாள். “அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கலாம்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு வச்சா… ‘எனக்கு இன்னும் கல்யாண வயசு வரல, அவளும் படிச்சுட்டுத்தானே இருக்கா, கொஞ்ச நாள் போகட்டும்’னு சொல்லிட்டுச் சொந்தத் தொழில் செய்யுற ஆசையில அந்தப் பக்கம் போயிட்டான்!

​அவங்க அப்பா என்கிட்ட தன் மனக்குமுறலைக் கொட்டிக்கிட்டே இருக்கார். ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிற வீட்டுல பிறந்தவன், அடுத்தவங்ககிட்ட வாய்ப்பு தேடி ஓடிக்கிட்டு இருக்கானே!” என்று பொருமித் தீர்த்தாள்.

அவளது அப்பா மார்க்கண்டேயன், தன் ஒற்றை மகளுக்குப் பார்த்துப் பார்த்துச் சூட்டிய பெயர் தான் ‘இளவரசி’. பெயருக்கேற்றாற்போல அவளும் ஒரு இளவரசியின் தோரணையோடும் அழகுடன் தான் காட்சியளித்தாள்.

அவர்கள் பேசுவதை இத்தனை நேரமும் கவனித்ததிலிருந்து, ஒரு ஆணைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்பது ஆனந்திக்குப் புரிந்தது. அவனும் கபிலனுடன் சென்னையில்தான் இருக்கிறான்! யாராக இருக்கும் என்று அவள் மனம் எண்ணியது!

‘இத்தனை பெரிய வசதி வாய்ப்புகளைத் துறந்து, எதற்காகச் சொந்தத் தொழில் தேடி அலைகிறான்?’ என்று அவள் மனம் சற்று ஏளனமாகவே எண்ணியது.

அப்பாவோ ஊரை அடக்கியாளும் கொடூரமான மிருகம்; அப்படியிருக்க மகன் மட்டும் எப்படி நல்லவனாக இருக்க முடியும்? ‘அவன் எவனாக இருந்தால் எனக்கென்ன! வந்த வேலையை முடித்துவிட்டு இங்கிருந்து கிளம்ப வேண்டும்!’ என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.

இளவரசி, அதுவரை அமைதியாகத் தரையைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் சென்று, அவள் முகத்தை உற்று நோக்கினாள். தன்னிடம் இருக்கும் அதே கம்பீரமும், அழகும், வசீகரப் பொலிவும் அந்தச் சோஃபாவில் அமர்ந்திருக்கும் பெண்ணிடமும் இருப்பதை உணர்ந்தாள்! ‘யார் இவள்? ஏற்கனவே இவளை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே… எங்கே பார்த்தேன்?’ என்று யோசனையில் மூழ்க, “என் மருமகள் ஆனந்தி!” என்று கூறி அந்த மௌனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் பூபாலன்.

​ஆனந்தி, தன் பாட்டி ஆனந்தவல்லியின் ஜாடையில் இருப்பதால், அவள் சிரிப்பிலும், நடக்கும் அழகிலும் ஆனந்தவல்லியை அப்படியே உணர முடியும். அதனால்தான், தன் தாயையே மகள் மூலம் கண்டு களித்து வந்தார் அன்புச்செல்வன்.

​இளவரசி தன் தாயின் சாயலை இவளிடம் கண்டாரோ என்னவோ, ‘எங்கோ பார்த்த முகம்!’ என்ற எண்ணம் அவரை ஈர்க்கவே செய்தது. ஆனந்தியின் முக வசீகரம் அவரை அறியாமலேயே ஒரு நெருக்கத்தை உண்டாக்கியது!

பூபாலன், இளவரசியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டார். பின்னாளில் ஆனந்தி யார் என்று தெரியவரும்போது, இந்த வீட்டுப் பெண்களின் ஆதரவு அவளுக்குக் கிடைப்பது நல்லது என அவர் கருதினார். அவர்களுக்குள் ஒரு நல்லுறவு உருவாகட்டும் என்பதே அவர் விருப்பம்.

அப்போது, மூன்று ஆண்கள் அவர்கள் இருந்த திசையை நோக்கி வந்தனர். மரியாதை நிமித்தமாகப் பூபாலன் எழுந்து நிற்க, அவரைத் தொடர்ந்து ஆனந்தியும் எழுந்தாள்.

அந்த வீட்டின் மூத்த மருமகன் ராஜேந்திரன் முன்னே வந்து நிற்க, பூபாலன் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். அதை ஒரு சிறு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டவர், “எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் சௌக்கியமா? நீங்க வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். உங்களைப் பார்க்கணும்னு நினைச்சிருந்தேன், அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க! எனக்கு உங்ககிட்ட தனியாகப் பேசணும். கிளம்பும் முன் என்னைப் பார்த்துட்டுப் போங்க…” என்று உத்தரவிடும் தொனியில் கட்டளையிட்டார்.

​பூபாலன் அதற்குச் செவிசாய்த்துத் தலையசைக்க, “என் மாமனாருக்கு இன்னும் இரண்டு நாட்களில் திதி வரப்போகுது. என் தங்கையின் பிறந்தநாளும் வருவதால், அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கோம். நீங்களும் குடும்பத்தோடு வந்து கலந்துக்கோங்க!” என்றவர், ஆனந்தியை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, “இது யார்… உங்க உறவினரா?” என்று விசாரித்தார்.

ராஜேந்திரனின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமலும், தன் கோபத்தை அடக்க முடியாமலும் பூபாலனின் முதுகுக்குப் பின்னே ஒதுங்கி நின்று கொண்டாள் ஆனந்தி.

“என் மருமகள்… வெளியூரில் வசிக்கிறா! அவளுக்கு மலை சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரை எழுதும் வேலை இருப்பதால், எங்களோடு சேர்ந்து பார்த்துட்டு போக வந்திருக்கா. இப்ப இந்த இடம் ரொம்ப பிடிச்சிருப்பதா சொல்லி இங்கேயே இருக்க ஆசைப்படுறா! ஆனா, நானும் என் மனைவியும் விடுமுறை முடிஞ்சதும் கிளம்பிடுவதால், அவளை மட்டும் இங்கே எப்படித் தனியா விட்டுச் செல்வதுன்னு தயக்கமா இருக்கு… உங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை” என்று மெல்ல விஷயத்திற்கு வந்தார் பூபாலன்.

“பாருங்களேன்… சென்னையில் வளரும் பெண் படிப்பு விஷயமா கிராமத்தைத் தேர்வு செய்து வந்திருக்கா! இதே கிராமத்தில் பிறந்து வளர்ந்த என் மகனோ, என் சொல்லைக் கேட்காம சென்னையில் போய்த் தவம் கிடக்கிறான். என்ன சொல்றதுன்னே தெரியல! நீங்களாவது அவனுக்குக் கொஞ்சம் புத்தி சொல்லி அனுப்பி வைக்கக் கூடாதா? இங்கே பார்ப்பதற்கு எதுவுமே இல்லாமலா அவன் அங்கேயே கிடக்கிறான்?” என்று ஆதங்கமும் ஆற்றாமையும் கலந்த குரலில் கேட்டார் ராஜேந்திரன்.

“நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிட்டு தான் இருக்கேன். உங்க மகன்தான் என் வார்த்தையை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கல. ‘வெறும் கிராமத்தில் மட்டுமே முடங்கி விடாமல் சென்னையிலிருந்து ஆரம்பித்தால், நம் தொழிலை அங்கேயும் விஸ்தரிக்கலாம்; அதன் மூலம் இன்னும் பெரிய வளர்ச்சி அடையலாம் சித்தப்பா’ என்கிறான். கபிலனையும் தன்னோடு இணைத்துத் தன் தேவைக்குப் பயன்படுத்துறான். உங்க மகன் என்பதால் என்னால் மறுத்துப் பேச முடியாம நானும் அமைதியா இருக்கேன்” என்று பூபாலன் கூற,

​“ம்ம்… கல்யாணம் பண்ணிக்கிட்டு பெண்டாட்டியோடு குடித்தனம் நடத்த வேண்டிய வயசுல, சாதிச்சு காட்டப் போறேன்னு நாடகம் ஆடிக்கிட்டு தனியா போயிருந்து கஷ்டப்படுறான். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர இந்த வீடு முழுக்க ஆட்கள் இருக்க, இவன் என்னவோ அநாதையைப் போலக் கண்ட கண்ட கடைகளில் சாப்பிட்டுட்டுத் திரிகிறான். எனக்குப் பிறந்தவன் மாதிரியே தெரியல!” என்றார் ராஜேந்திரன் சினம் மேலிட.

அந்த வார்த்தைகள் இளவரசியின் மனதிற்குள் பெரும் வலியை ஏற்படுத்தியது. உண்மையில், தன் மகன் தனது அப்பாவைப் போலக் கொடூரமானவனாக இல்லை என்பதில் அவருக்கு ஒருவித நிம்மதியே! சொல்லப்போனால், அவனிடம் தாத்தாவின் சாயலோ அல்லது அப்பாவின் குரூரமோ துளிகூடக் கிடையாது. நகைச்சுவை, குறும்புத்தனம், கலாட்டா என்று அந்த வீட்டையே எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பான். அவனது வருகை ஒன்றே இங்கே படிந்திருக்கும் அழுக்குகளையும் கவலைகளையும் துடைத்து எறியும் மருந்தாக இருக்கும். அப்படிப்பட்டவன் இப்போது அருகில் இல்லாததால், அந்தப் பிரம்மாண்ட மாளிகையே சோகையில் வாடிக் கொண்டிருந்தது.

ஒரே மகன் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற வருத்தம் இளவரசியின் மனதை ரணமாக்கியது. அவனது பாட்டி ஆனந்தவல்லி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்க மறுத்துவிட்டான்.

“அப்படி என்ன பிடிவாதம்? யார் சொல்லியும் கேட்காம அங்கே போய் என்னதான் சாதிக்கப் போறான்? எல்லாம் உன் வளர்ப்பு சரியில்லை!” என்று கணவர் தன்னைத் திட்டும்போதெல்லாம் அந்தத் தாய் மௌனமாக அழுவாள். மகனின் மனதை வருத்த அவளுக்கு விருப்பமில்லை.

​“திருமணத்துக்கு முன்பு வரை அவன் விருப்பப்படியே இருக்கட்டும், அதுக்குப் பிறகு எப்படியும் நம்மோடுதான் இருப்பான்” என்று கனவு கண்டாள். ஆனால் அவனோ, ‘ஆடிக்கொன்று ஆவணிக்கொன்று’ என்பது போல எப்போதாவது தலைகாட்டிவிட்டுச் சென்னையிலேயே முழுமையாகத் தங்கிவிட்டான்.

தன் மனைவி கண்கலங்குவதைக் கண்ட ராஜேந்திரன், மகனைப் பற்றிய பேச்சைச் சட்டென நிறுத்திவிட்டு, பூபாலனிடம் தொழில் விஷயமாகப் பேசத் தொடங்கினார். பின்னர் தன் மனைவியைத் திரும்பிப் பார்த்து, “வந்திருப்பவர்களுக்கு விருந்து தயார் பண்ணச் சொல்லு. அந்தப் பெண்ணைப் பார்த்தா ஊருக்குப் புதியவளாகத் தெரிகிறா… பூபாலன் கிளம்பிய பிறகு அவள் எங்கே தங்குவாள், ஏதுன்னு விசாரி! நம்ம மகனுக்கு வெளியூரில் அவங்க நிறைய உதவிகள் செய்திருக்காங்க. அப்படிப்பட்டவர்களுக்கு நம்மால் ஏதேனும் கைம்மாறு செய்ய முடியுமா நீயே கேட்டுக்கோ!” என்று கூறிவிட்டு, அதற்கு மேல் அங்கே நிற்காமல் வெளியே சென்றார்.

தன் செவியில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல், அவர் சென்ற திசையையே உற்று நோக்கினாள் ஆனந்தி. ஆளுமை நிறைந்த மனிதராகத்தான் காட்சியளித்தார் ராஜேந்திரன்; ஆனால் குணம் மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது? என்று எண்ணிக் கொண்டாள்.

அதேநேரம், அந்த வாரிசு யாராக இருக்கும் என்று அவள் யோசித்தபோது, மின்னலென அவன் முகம் நினைவில் வந்து நின்றது. அன்று கபிலனுடன் சேர்ந்து கொண்டு, தன்னை வாயாடித்தனமாகப் பேசிக் கோபப்படுத்தியது நினைவுக்கு வர, அந்த எண்ணத்தை விரட்ட தலையை பலமாக உலுக்கிக் கொண்டாள் ஆனந்தி.

​‘வேண்டாம்… அவனாக மட்டும் இருக்கவே கூடாது! இங்கிருந்து போகும் வரை அவனை மீண்டும் பார்க்கும் சூழ்நிலையே அமையக்கூடாது’ என்று வேண்டிக்கொண்டாள். ஆனால், விதி அவளைப் பார்த்துச் சிரிக்கப்போவதையும், அவன் விரைவில் அவள் கண்களுக்குத் தரிசனம் தரப்போவதையும், பாவம் அவள் அறிந்திருக்கவில்லை.

வீட்டில் உள்ள மற்ற அனைவரையும் பார்த்தாகிவிட்டது. ஆனால், இத்தனை நேரமாகியும் மிக முக்கியமான நபரான ஆனந்தவல்லியை பார்க்க முடியவில்லை. அவளது மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டவர் போல, “உங்க அம்மா வீட்டுல இல்லையா? இவ்வளவு நேரமாகியும் இன்னும் அவர்களைக் காணலயே!” என்றார் பூபாலன்.

உடனே இளவரசி வேலைக்காரப் பெண்ணை அழைத்து, தன் அம்மாவை அழைத்து வரச் சொன்னாள். அந்தப் பெண்ணும் தகவல் சொல்லி, சற்று நேரத்தில் அந்தப் பெரியவரை அழைத்துக்கொண்டு வந்தாள்.

தன் அப்பாவின் அம்மாவைக் கண்டதும், தன்னை மீறி நிமிர்ந்து பார்த்த ஆனந்தியின் கண்கள் கலங்கின. தன் தந்தை அவர் மீது வைத்திருந்த பாசம் நினைவுக்கு வந்து அவளை வாட்டியது. ‘உங்களுக்குக் கூடவா பெத்த மகன் மீது பாசம் இல்லாமப் போயிடுச்சு? மத்தவங்க அவங்க குடும்பம், புருஷன், அந்தஸ்துன்னு ஒதுங்கிப் போயிருக்கலாம்; ஆனா பத்து மாசம் சுமந்து பெத்த உங்களால் எப்படி அவரைத் தூக்கி எறிய முடிஞ்சது? அவர் உசிரோட இருக்கும்போதே, இறந்துட்டதா எப்படி உங்களால் நெனைக்க முடிஞ்சது? என் அப்பா அந்தளவுக்கு என்ன பெரிய தப்பைச் செஞ்சுட்டார்?’ என்று மனதிற்குள் கதறினாள் ஆனந்தி.

ஆனந்தியின் உள்மன ஓலம் அவருக்குக் கேட்டதோ என்னவோ, உள்ளே நடந்து வந்த ஆனந்தவல்லியின் கண்கள் அந்த அறை முழுவதும் அலைபாய்ந்தன. ‘யார் தன்னை அழைக்கிறார்கள்? யாரிடம் இருந்து இந்தத் தவிப்பு வெளிப்படுகிறது?’ என்று அவர் தேடுவது போல இருந்தது.

இறுதியில் அவரது பார்வை ஆனந்தியின் மீது வந்து நிலைக்க, அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அப்படியே திகைத்து நின்றார். ‘யார் இந்தப் பெண்? இதற்கு முன் எங்கேயாவது பார்த்திருக்கிறேனா? அவளது கண்கள் தன்னிடம் ஏதோ சொல்லத் துடிக்கிறதே!’ என்று அவர் மனம் குழம்பியது.

ஆனந்தி சட்டெனத் தன் பார்வையை மாற்றிக்கொள்ள, அவர் மெல்ல மெல்ல நடந்து பூபாலனை நோக்கி வந்தார். ஆனந்தவல்லியைப் பார்த்ததும் பூபாலன் வணக்கம் கூறி, ஆனந்தியின் கைகளை அழுத்திப் பிடித்தார். அவள் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளப் போராடினாள்; தொண்டை அடைக்க, பேச்சு வர மறுத்தது.

தன் கலங்கிய கண்களை அவரிடம் காட்ட விரும்பாமல், சுவரில் இருந்த ஓவியங்களையும் சித்திரங்களையும் பார்ப்பது போலத் திரும்பிக் கொண்டாள். ஆனாலும், சில நிமிடங்களுக்குள் அந்த இளம்பெண்ணின் முகத்தில் ஓடிய பலவித உணர்ச்சி மாற்றங்களைக் கண்டுகொண்ட ஆனந்தவல்லிக்கு, அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது.

“வாங்க பூபாலன், எப்படி இருக்கீங்க? உங்க மனைவியையும் பையனையும் அழைச்சுட்டு வரலயா?” என்று விசாரித்தார்.

​“மகன் சென்னையிலிருந்து இன்னும் வரல, மனைவி வீட்டுல இருக்கா. நீங்க எப்படி இருக்கீங்க? இப்போ உடல்நிலை பரவாயில்லையா?”

​“ஏதோ இருக்கேன். போகணும்னு நினைச்சுட்டா மட்டும் போயிடவா முடியும்? ஆண்டவன் கூப்பிடும் வரை இங்கிருந்து எல்லாத்தையும் அனுபவிக்கத் தானே வேண்டும்!”

அந்த வார்த்தைகளில் இருந்த வலி அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது. ஆனால் ஆனந்தி அதை அலட்சியப்படுத்திவிட்டு விலகி நிற்க, “ஆனந்த் எப்படி இருக்கான்? எப்போ வருவதாகச் சொல்லி இருக்கான்? நேரத்துக்குச் சாப்பிட்டு உடம்பைப் பார்த்துக்குறானா?” என்று விசாரித்தார் ஆனந்தவல்லி.

​“ஆமாம்… எந்தக் குறையும் இல்லாம நலமாகத்தான் இருக்கான். காலை முதல் மாலை வரை வேலை, வேலைன்னு அதிலேயே மூழ்கிக் கிடக்கிறான். கபிலன் அவனுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கிறான்.”

​“எவ்வளவு பெரிய வீட்டுல பிறந்து வளர்ந்தவன்… எதுக்காக இப்படி அலைகிறான் தெரியல!” என்று அவர் தன் ஆற்றாமையைக் கொட்டினார்.

‘உன் பேரன் மட்டும் தனியா இருப்பது உனக்கு அவ்வளவு கஷ்டமாகத் தெரியுதா? நீ பெற்றெடுத்த மகனும் கூடத்தானே இத்தனை வருஷமும் தனியாகவே இருந்து துயரப்பட்டார்! அதைப்பற்றி ஒரு நிமிஷம் கூட உன்னால் நெனைச்சுப் பார்க்க முடிஞ்சுதா? மனசாட்சியே இல்லாத மனிதர்கள்!’ என்று மனதிற்குள் அவர்களை வறுத்தெடுத்தாள் ஆனந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!