Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 22

அத்தியாயம் : 22

அம்மாவின் முகத்தையே பார்த்திருந்த அன்புச்செல்வன், “அப்பாதான் நான் சொல்றது எதையுமே கேட்க மாட்டேங்கிறார். நீங்களாவது கொஞ்சம் என் மனசைப் புரிஞ்சுக்க மாட்டீங்களாமா?” என்று கெஞ்சுதலாக கேட்க, மகன் மீது உயிரையே வைத்திருந்த ஆனந்தவல்லிக்கு அதற்கு மேல் மறுப்புச் சொல்ல முடியவில்லை.

அதே சமயம், மகன் மனதில் இத்தனை ஆழமாகப் பதிந்திருக்கும் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலும் அவருக்கு ஏற்பட்டது. “ஒருவேளை எனக்குப் பிடிக்கலைன்னு சொன்னா, நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” என்று கேட்டார்.

அன்புச்செல்வன் தன் அம்மாவின் குறும்புத்தனத்தை நினைத்துப் புன்னகைத்தான். அவர் தோளில் சாய்ந்து கொண்டு, “இந்த உலகத்திலேயே என் மேல உண்மையான பாசம் வச்சுருப்பது எங்க அம்மாதான்னு எனக்குத் தெரியும். என் மனசு வருத்தப்படுற மாதிரி அவங்க எப்பவும் நடந்துக்க மாட்டாங்க” என்றவன்,



Advertisement

“நீங்க என் கூடவே வந்து அவளைப் பாருங்க. பார்த்த பிறகு உங்க முடிவைச் சொன்னா போதும், ஒண்ணும் அவசரமில்லை” என்று கூறினான்.

ஆனந்தவல்லிக்குத் தன் பயத்தையும் மீறிச் சிரிப்பு வந்தது. ‘மகன் பேச்சை எவ்வளவு அழகாகத் திசை திருப்புகிறான்… இவனுக்குப் பயமே இல்லையா!’ என்று வியந்தவர், “சரிப்பா, உன் ஆசைப்படியே போயிட்டு வரலாம். ஆனா, இந்த விஷயம் நம்ம ரெண்டு பேரையும் தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது” என்றார்.

“கண்டிப்பாமா” என்று உற்சாகமாக ஒத்துக்கொண்டான் அன்புச்செல்வன்.

Advertisement

அதன்படியே வெள்ளிக்கிழமை அன்று தன் அம்மாவை அழைத்துக்கொண்டு அங்கே சென்றான். அபிராமியோ, அடிக்கடி அன்புச்செல்வனைப் பார்க்கும் போதெல்லாம் அடிமனதில் தோன்றும் நேசத்தை மறைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன்னைத் தேடி வரும் ஆடவனின் பாசத்தில், அவளையும் அறியாமல் கண்கள் அவனைத் தேடத் தொடங்கின. இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடுமோ என்று பயந்தாலும், அவன் மீது உள்ளூர ஊற்றெடுக்கும் நேசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Advertisement

இந்நிலையில், அன்று கோவிலுக்கு வந்தவள் வழக்கமாக வரும் அன்புச்செல்வனுடன் ஒரு பெண்மணி இருப்பதைக் கண்டு அச்சத்தில் நடுங்கினாள். அவர்கள் இருவரின் பார்வையும் தன் மீது இருப்பதையும், அன்புச்செல்வன் அவளைக் காண்பித்து ஏதோ சொல்வதையும் உணர்ந்தவளுக்கு இயல்பாக இருக்க முடியவில்லை.

அந்தப் பெண்மணி அவளை நோக்கி நடந்து வருவதைக் கண்டதும், அபிராமிக்குக் கை கால்கள் உதறத் தொடங்கின.

அவர் அவள் அருகில் வந்து மென்மையாகப் புன்னகைத்து, அவளது பெயரைப் பிரியத்துடன் கேட்டுத் தெரிந்துகொண்டார். தன்னை அன்புச்செல்வனின் தாயார் என்று அறிமுகப்படுத்தியதும், அபிராமிக்குள் பயப்பந்து சுழன்று ஓடியது. அவர் ஏதேனும் தவறாகச் சொல்லிவிடுவாரோ என்று அவள் அஞ்சியிருக்க, அவரோ மிகவும் இயல்பாக அவளிடம் பேசினார். அவளது படிப்பு, வீடு, பெற்றோர் என விசாரித்து தெரிந்து கொண்டவர், “நீ ரொம்பவும் அடக்கமாகவும், அழகாகவும் இருக்கேம்மா! என் மகனுக்கு மட்டும் இல்லை, எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. கூடிய சீக்கிரம் நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசைப்படுறேன்” என்று தன் விருப்பத்தை வெளிப்படையாகவே சொன்னார்.

Advertisement

ஆனந்தவல்லி அவ்வளவு கனிவாகப் பேசியதும், அதுவரை மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த அபிராமி, நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டாள். நெகிழ்ச்சியில் அவர் கால்களைத் தொட்டு வணங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். மகனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த ஆனந்தவல்லி, அதில் ஓடிய சந்தோஷ உணர்வுகளைப் படித்தபடியே மனதார ஆசீர்வதித்தார்.

அங்கு நடக்கும் அனைத்தையும் சற்றுத் தொலைவில் நின்று பார்த்திருந்த அன்புச்செல்வனின் மகிழ்ச்சியை யாராலும் அளவிட முடியவில்லை. அந்த அளவிற்கு அவன் பூரித்துப் போயிருந்தான். வெளிநாட்டிலிருந்து தனக்கு வேண்டப்பட்ட ஒருவர் மூலமாகத் தருவிக்கப்பட்ட நவீனக் கைப்பேசியில், அங்கு நடந்த அந்த அழகான தருணங்களை அப்படியே படம்பிடித்து ஒரு பொக்கிஷமாகச் சேகரித்து வைத்திருந்தான். அம்மாவும் அவளும் பேசிக்கொள்வதையும், அம்மாவின் முழுச் சம்மதம் கிடைத்ததையும் கண்டு அவன் உள்ளம் உவப்படைந்தது.

அதன்பிறகு இருவரும் வீட்டிற்குத் திரும்பினார்கள். வரும் வழியெங்கும் அவர்கள் பேச்சு அபிராமியைப் பற்றியதாக இருந்தது. ஆனால், இந்த விஷயத்தை எப்படி ஆரம்பித்துத் தந்தையிடம் சொல்வது என்கிற பயம் தயக்கமாக மாறி நீண்டு கொண்டே சென்றது. ஒரு பக்கம் அன்புச்செல்வன் அபிராமியின் காதல் பயணம் அமைதியாகத் தொடர, இன்னொரு பக்கம் அன்புச்செல்வனை ஒருதலையாகக் காதலித்து வந்தாள் பிரதீபா.

இத்தனை நாட்களாகத் தன் மனதிற்குள் வைத்து அவளைப் பார்வையால் மட்டுமே யாசித்து வந்த அன்புச்செல்வன், அம்மாவின் சம்மதம் கிடைக்க பெற்றதும் அபிராமியிடம் பேசவும் தொடங்கினான். அன்புச்செல்வனும் அபிராமியும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசிக்கத் தொடங்கினர்.

‘கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் வெளியூரில் படித்து வந்தவன், அங்கே எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல், ஊருக்கு வந்த அன்றே இந்தக் கிராமத்துப் பெண் மேல் இவ்வளவு ஆசைப்படுகிறானே! இதை எப்படி நிறைவேற்றுவது? கணவர் ஏற்கனவே தன் மகளின் நாத்தனாரை முடிவு செய்து வைத்திருக்கிறாரே… தவிர, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இவளை அவர் எப்படி மருமகளாக ஏற்றுக்கொள்வார்?’ என்ற கேள்வியும் பயமும் ஆனந்தவல்லியை வாட்டின. மகனின் ஆசைகள் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற ஏக்கம் அந்தத் தாயை நிலைகுலைய வைத்தது.

அன்புச்செல்வனிடம் இதைச் சொன்னபோது, “இதெல்லாம் பெரிய விஷயமா அம்மா? நான் அந்தப் பொண்ணு பிரதீபாவை இதுவரைக்கும் சரியா பார்த்தது கூட கிடையாது. இதுல கல்யாணம் செய்யறதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அப்பாகிட்ட நீங்களே இது விஷயமா பேசி, அவளை வேற யாருக்காவது கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டான்.

அன்புச்செல்வன் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். ஆனால், அதைச் செயல்படுத்துவது அவ்வளவு சுலபமல்லவே!

கணவர் மார்க்கண்டேயனை நினைத்தாலே ஆனந்தவல்லிக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தது. இந்த விஷயத்தைச் சொன்னால் மகனது திருமணம் நடப்பதற்குள் என்னென்ன விபரீதங்கள் நிகழுமோ எனும் பயம் அவர் நாவைக் கட்டிப்போட்டது. இருந்தாலும், வெகுநாளைக்கு மறைத்து வைக்க முடியாது என்பதால், “உன் மகன் கல்யாண விஷயமா ஏதாவது சொன்னானா?” என அவர் கேட்டதும்,

“அவனுக்குத் தீபாவை கல்யாணம் செய்றதுல விருப்பம் இல்லையாம். அவளை வேற யாருக்காவது கட்டி வைக்கச் சொன்னான்” என அவர் முடித்த அடுத்த நிமிடம், ஆனந்தவல்லியின் கன்னத்தில் பொறி பறந்தது போல் ஒரு அறை விழுந்தது…

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்? மருமகன்கிட்ட இதை எப்படிச் சொல்ல முடியும்? அவரோட தங்கச்சியின் அடக்கத்தையும் அழகையும் பார்த்துத்தானே அவளையும் இதே வீட்டுக்கு மருமகளாக்க முடிவு செஞ்சு வச்சிருந்தேன். இப்பப் போய் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா என்ன அர்த்தம்? நான் இப்போவே மருமகன் வீட்டுக்குப் போய் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கப் போறேன். ஒழுங்கா உன் மகனை வந்து தாலியைக் கட்டச் சொல்லு!” என மிரட்டலாகச் சொன்னார் மார்க்கண்டேயன்.

​“கல்யாணம் செஞ்சுட்டு அவகூட வாழப் போறது நம்ம மகன் தானே! அவனுக்கு விருப்பம் இல்லாம எப்படி வற்புறுத்த முடியும்? நாளைக்கு ஏதாவது தப்பா நடந்துட்டா, அந்தப் பாவத்துக்கு நாமளும் இல்லையா பொறுப்பேற்கணும்?” என ஆனந்தவல்லி அழுதுகொண்டே சொல்ல, கோபத்துடன் தன் மனைவியை அடிக்கப் பாய்ந்தார் மார்க்கண்டேயன்.

​“அம்மாவுக்கும் மகனுக்கும் என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? வெட்டிப் பலி போட்டுருவேன் ஜாக்கிரதை! இந்த வீட்டுக்கு நம்ம மருமகனோட தங்கச்சிதான் மூத்த மருமகளா வரணும். வேற எவளையும் நான் ஏத்துக்க மாட்டேன்!” என வீராப்புடன் முடித்தார்.

​‘இப்படிப்பட்ட மனுஷன்கிட்ட என்ன சொல்ல? தப்பை அவர் செஞ்சுட்டு நம்ம மேல கோபப்படுறாரே!’ என வெம்பிய ஆனந்தவல்லி, பெற்ற மகன் மீது கொஞ்சமும் பாசம் இல்லாத இப்படி ஒரு தந்தை இருக்க முடியுமா என எண்ணிக் கண்ணீர் விட்டார்.

அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியூரில் படித்துக் கொண்டிருந்த மகன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல், மார்க்கண்டேயன் அவசரப்பட்டுப் பெண் பார்த்துச் சம்மதம் சொன்னது பெரிய தவறு. ஒருவேளை மகன் யாரையாவது விரும்பி, ‘அவளை எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று வந்து நின்றால் என்ன செய்வது என்று அவர் ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை. தன் மருமகன் கேட்டான் என்பதற்காக, மனைவியிடம் கூடக் கலந்தாலோசிக்காமல் சம்மதம் தெரிவித்துவிட்டார். அன்று அவர் செய்த அந்தத் தவறுதான், இன்று மகனின் வாழ்க்கையையே புரட்டிப் போடக் காத்திருக்கிறது.

“ஏய்! உன் பையனைப் படிக்க மட்டும்தான் வெளியூருக்கு அனுப்பி வச்சேன்; அவன் இஷ்டத்துக்கு நடக்கிறதுக்கு இல்லை! நான் பார்த்து வச்சிருக்கிற பெண்ணைக் கட்டிக்கிறதுக்கு அவனுக்கு என்ன குறைச்சல்? மருமகன் மட்டும் இதைத் தெரிஞ்சுக்கிட்டா எவ்வளவு பெரிய விபரீதம் நடக்கும்னு உனக்குத் தெரியாதா?” என்று கர்ஜித்தார்.

‘மருமகன், மருமகன்! என்று நிமிடத்திற்கு நிமிடம் ராஜேந்திரனை பற்றி நினைக்கிறாரே தவிர, பெற்ற மகனைப் பற்றி ஒரு நிமிடம் கூட எண்ணிப் பார்க்கவில்லையே!’ என்று வேதனையால் அந்த தாய் உள்ளம் துடித்தது.

மனைவியின் மௌனமும் கண்ணீரையும் கண்டு உள்ளுக்குள் இறுகியவர், “உன் மகன் படிக்கப் போன இடத்துல வேற யாரையாவது விரும்பினானா? அதனால தான் தீபாவை கல்யாணம் பண்ணிக்க மறுக்கிறானா?” என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு ‘ஆமாம்’ எனப் பதிலளித்தால், அடுத்த நிமிடம் அந்தப் பெண்ணைப் பற்றிய முழு விபரத்தையும் கேட்டுத் துளைத்தெடுப்பார்; ‘இத்தனை நாள் தெரிஞ்சிருந்தும் என்கிட்ட மறைச்சிருக்கே’ எனக் குதிப்பார். ஒருவேளை ‘தெரியாது’ எனச் சொல்லிவிட்டால், பிரதீபாவுக்குத் திருமணம் செய்து வைக்க இன்னும் மும்முரம் காட்டுவார்.

அதிலும், அபிராமி அவர்கள் ஜாதியைச் சேர்ந்த பெண்ணாக இருந்திருந்தால்கூட, தைரியமாக அவரிடம் எதிர்த்து நிற்க முடியும். ஆனால், அவள் வேறு ஜாதியைச் சார்ந்த பெண்ணாக இருந்ததால், உண்மையைச் சட்டென்று அவரிடம் போட்டுடைக்க முடியவில்லை. ஏனெனில், ‘நட்பாகப் பழகுவதற்கு ஜாதி ஒரு தடையில்லை; ஆனால் திருமணம் என்று வந்துவிட்டால் அவரவர் ஜாதியில்தான் செய்துகொள்ள வேண்டும்’ எனச் சில கட்டுப்பாடுகளை விதித்து, அப்பா காலத்திலிருந்தே அதன்படி வாழ்ந்து வருகிறார் மார்க்கண்டேயன். இதில் எங்கிருந்து மகனின் காதலுக்கு அவர் சம்மதம் தெரிவிக்கப் போகிறார்? இந்தக் கேள்வியே ஆனந்தவல்லியை எதுவும் சொல்ல முடியாமல் ஆற்றாமையில் வாட வைத்தது.

“வீட்டுக்கு மூத்த பிள்ளையா போயிட்டான்னு அதிகச் செல்லம் கொடுத்து வளர்த்தது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பதான் புரியுது. உன் மகன்கிட்ட ஒழுங்காப் பேசு. அவன் எவளையாவது விரும்பினாலும் அதை மறந்துட்டு, மருமகனோட தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கச் சொல்லு. இல்லைன்னா, பெத்த புள்ளைன்னு கூடப் பார்க்க மாட்டேன்!” என்று உறுமினார்.

கணவர் அத்தனை சீக்கிரம் இறங்கி வரமாட்டார் என்பது ஆனந்தவல்லிக்குத் தெரிந்த விஷயம். இனி என்ன செய்வதென்று தெரியாமல் அவர் மகனிடம் விபரத்தைக் கூற, அவனுக்கும் அப்பாவின் குணம் நன்கு தெரிந்தே இருந்தது. இது தன் வாழ்க்கைச் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால், கடனே என்று வாழ்வதற்கோ அல்லது தன் காதலை விட்டுக்கொடுப்பதற்கோ அன்புச்செல்வனுக்கு மனம் வரவில்லை.

தனக்கிருக்கும் அத்தனை வீம்பும் தன் வாரிசுக்கும் இருக்கும் என்பதை மார்க்கண்டேயன் மறந்துவிட்டார் போலும்! ‘என்ன ஆனாலும் அபிராமியைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன்’ எனும் உறுதியுடன் அன்புச்செல்வன் தன் வேலையில் ஆழ்ந்தான்.

விருப்பமில்லை எனச் சொல்லும் மகனை எப்படிக் கட்டாயப்படுத்தித் திருமண பந்தத்தில் தள்ளுவது என்று மார்க்கண்டேயன் திணறினாலும், மருமகனின் முன்பு மாற்றிப் பேசுவதற்கு அவரால் முடியவில்லை. அவர் யோசனையில் ஆழ்ந்திருக்க… வீட்டில் நடக்கும் சலசலப்புகள், மார்க்கண்டேயனின் கடுகடுப்பான முகம், சிரிப்பைத் தொலைத்த ஆனந்தவல்லி, அன்புச்செல்வனின் வழக்கமான கோயில் வருகை என அனைத்தும் ராஜேந்திரனின் பார்வையில் பட்டன. ‘தனக்குத் தெரியாமல் இங்கே ஏதோ நடக்கிறது’ என்பதை அவர் புரிந்து கொண்டார்.

உடனடியாகத் தனக்கு வேண்டப்பட்ட ஒருவனை அழைத்து, மைத்துனன் அன்புச்செல்வனின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கச் சொன்னார். அதன் மூலம் கிடைத்த செய்தி அவர் மனதில் சீற்றத்தை உண்டாக்கியது. ‘என் தங்கை வாழ வேண்டிய இடத்தில் யாரோ ஒருத்தியா?’ என்று கொதித்தவர், அதற்கு மேல் தாமதிக்காமல் தன் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு முறைப்படி திருமணப் பேச்சை முடிக்க வந்துவிட்டார்.

அன்புச்செல்வன் வெளியே சென்றிருக்க, ஆனந்தவல்லியால் எதுவும் செய்ய முடியாமல் இருக்க, மார்க்கண்டேயன் கொடுத்த வாக்குக்கு கட்டுப்பட்டு அவர்களிடம் திருமணத்தைக் குறித்துப் பேசினார். அடுத்த மாதமே திருமணம் நடத்தலாம் என்று அவர்களால் பேசப்பட்டு, இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. மாலையில் வீட்டிற்கு வந்த அன்புச்செல்வன் விஷயத்தை அறிந்து அப்பாவிடம் சென்று பேசினான்.

மார்க்கண்டேயன் கேட்க மறுக்கவும், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் மோதல் உருவானது. “என் பேச்சைக் கேட்டு நடக்கலைன்னா வீட்டை விட்டு வெளியே போயிடு. என் மகன் உயிரோடு இல்லைன்னு நான் தலை முழுகிடுறேன்” என்று இறுதியாக அவர் சொன்னார்.

“பெத்தப்பிள்ளையின் ஆசையை விட உங்க வைராக்கியம் தான் பெருசா போயிடுச்சா? கல்யாணம் என்பது ஆயுள் வரை கூடவே வரக்கூடிய பந்தமா இல்லை அடுத்த நாளில் அறுத்து போட்டு போகக் கூடியதா? உங்களுக்கு உண்மையிலேயே என் மேலே பாசம் இருந்திருந்தா நீங்க இப்படி பேச மாட்டீங்க. உங்களுக்கு என்னை விட மற்றவர்கள்தான் பெரியதா போயிட்டாங்க” என்று தாக்கிப் பேசியதும், “ஆமாம்! நீயும் கூட தான் என் மேல கொஞ்சம் கூட பாசம் இல்லாம கிட்டத்தட்ட ஆறு வருஷமா இங்குள்ள சொத்து சுகம் எதையும் பார்க்காம வெளியூரில் போய் உன் படிப்பை மட்டுமே பார்த்துட்டு இருந்தே… ஆனா உன் தங்கையைக் கல்யாணம் செய்து வந்த நாளிலிருந்து இந்த வீட்டுக்காகவும், என் வார்த்தைக்கு கட்டுப்பட்டும் வாழ்ந்து வருகிறார் மருமகன். உன்னை மாதிரி அவரும் சுயநலவாதியா இருந்திருந்தா, எப்பவோ உன் தங்கை அரசியை அழைச்சுட்டு அவர் வீட்டுக்குப் போயிருப்பார். அதுமட்டுமல்ல கோடிக்கணக்கான சொத்துக்களில் பாதியையும் ஏமாற்றி எடுத்திருப்பார்.

அவர் தங்கையைக் கல்யாணம் செய்வதால் உனக்கு என்ன குறைந்து போயிடுச்சு? எத்தனையோ வீட்டில் பெண் எடுத்து கொடுக்கலையா? நீ இப்போ எடுக்க போற முடிவால் பாதிக்கப்பட போவது உன் தங்கையின் வாழ்க்கையும் தான்னு மறந்துடாதே!” என்று கடுமையாக எச்சரித்து, திருமண வேலையை வேகமாக நடத்த தொடங்கினார்.

இத்தனை தூரம் வெளிப்படையாக தன் மனதில் உள்ளதை தெரியப்படுத்தியும், அப்பா புரிந்து கொள்ள மறுக்கிறாரே! என்று ஆதங்கத்தில் அம்மாவின் மடியில் சாய்ந்து மன பாரங்களை பகிர்ந்தான் அன்புச்செல்வன். அவரோ கணவரின் குணம் தெரிந்ததால் எதுவும் செய்ய முடியாமல் இருக்க, “ஒழுங்கா உன் மகனின் மனசை மாத்தி குறிச்ச முகூர்த்தத்தில் அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட சொல்லு. இல்லை என்னை உயிரோடு பார்க்க முடியாது” என்று எச்சரித்தார்.

வீட்டுப் பெண்களின் நிலை எப்போதுமே பரிதாபத்திற்குரியது. கணவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும், பெற்றோருக்காகவும், உடன்பிறந்தவர்களுக்காகவும் பேசிப் பேசியே அவர்களின் வாழ்க்கையில் உள்ள பாதி நாட்களும் கரைந்து போய்விடுகின்றன. தமக்கென்று அவர்கள் எதையும் நினைப்பதும் இல்லை; தங்களுக்காக அவர்கள் வாழ்வதும் இல்லை. ஒருவேளை, ‘இனி நமக்காக வாழ்வோம்’ என்று அவர்கள் நினைக்கும்போது, வாழ்க்கையின் பாதி கட்டம் முடிந்து விடுகிறது. ‘இதற்கு மேல் என்ன இருக்கிறது? எதற்காக இந்தப் பிறப்பு?’ என்ற விரக்தியிலேயே மீதமுள்ள நாட்களும் கரைந்து போகின்றன.

​இப்போது வேண்டுமானால் பெண்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்; ஆனால், இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு என்பது அத்தனை சாதாரணமானது அல்ல!

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிணக்கை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் ஆனந்தவல்லி இறைவனின் காலடியில் விழுந்து கிடக்க, ‘அந்தப் பெண் இருக்கும் வரை தனது தங்கை இந்த வீட்டிற்கு மருமகளாக வர முடியாது, அன்புச்செல்வன் சம்மதிக்கவும் மாட்டான்’ என்பதைப் புரிந்து கொண்ட ராஜேந்திரன் யாருக்கும் தெரியாமல் அந்தக் காரியத்தில் இறங்கினார். ஆனால், அது தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவர் நினைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!