ஜீவ தாளம் : 5
ஜீவ தாளம் : 5
இங்கு நடக்கின்ற எதுவும் தெரியாமல், தனது காரில் இருந்து இறங்கி அலுவலகத்தை நோக்கி நடந்து வந்த ஆனந்த், தான் யார் என்பதை வரவேற்புப் பெண்ணிடம் தெரியப்படுத்தி, பூபாலனின் அனுமதியுடன் அவரைச் சந்திக்கச் சென்றான்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அவன் சொன்ன அனைத்தையும் ஏற்றுக் கொண்ட பூபாலன் கண்டிப்பாக வருவதாக உறுதியளித்தார். ஆனந்த் நண்பனைப் பற்றி விசாரிக்க, அவரோ முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகளைத் துடைத்துக்கொண்டு, முக்கியமான வேலை விஷயமாக வெளியே சென்றிருப்பதாகப் பொய்யுரைத்தார்.
“அந்த எருமை மாட்டிடம் இப்பதானே நான் இங்கு வரப் போவதா சொல்லியிருந்தேன். கொஞ்ச நேரம் பொறுமை இல்லாம அதுக்குள்ளே கிளம்பிட்டானா? வரட்டும் அப்ப வச்சுக்கிறேன்!” என்றவன், அவரிடம் விடைபெற்று வெளியே வர, அந்த நேரத்தில் அங்குப் பணிபுரிந்த நபர்களில் அவனுக்கு வேண்டியவர் ஒருவர், இவனைக் கண்டதும் மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டு, கபிலன் மூன்றாவது மாடியில் இருப்பதாகச் சொல்லி விட்டார்.
Advertisement
“அடேய் பக்கிரி சாமி! நீ மேல இருந்துட்டு இல்லைன்னு சொல்லச் சொல்லி என்னை ஏமாத்துறியாடா? இந்தா வரேன்…” என்று சொல்லிக்கொண்டே, ‘மதுரவீரன் நானே… என்னை உசுப்பி விட்ட நீயே! இப்ப விசிலு பறக்கும் தானே, பேராண்டி மதுரை வீரன் தானே!’ என்று பாடிக்கொண்டே மின்தூக்கியின் அருகில் சென்று மூன்றாவது மாடிக்குச் செல்லும் பொத்தானை அழுத்தினான் ஆனந்த்.
இத்தனை நேரத்திற்குள் அங்கு ஜீவா அவனை ஒரு வழியாக்கி இருந்தாள். முக்கியமான வேலை இருக்கிறது என்று சொல்லி அழைத்து வந்து, சும்மா சும்மா ஜன்னல் வழியாக உற்றுப் பார்த்துக்கொண்டு நிற்பவனைக் காணும்போது எரிச்சல் மண்டியது.
“கபில், உனக்கு என்னதான் பிரச்சனை? ஏன் இப்படி நடந்துக்கிற? எனக்கு வேலை இருப்பது உனக்கு மறந்து போயிடுச்சா?”
Advertisement
அவன் அப்போதும் திரும்பாமல் வெளியே தலையைத் தொங்க போட்டவாறு இருக்க, ‘இன்னைக்குக் காலையில எழுந்த நேரத்தில் இருந்து நேரமே சரியில்ல. எப்பப் பாரு ஏதாவது வம்பாவே நடந்துட்டு இருக்கு. இருக்கிற தொல்லை போதாதுன்னு இந்த மங்கி வேற!’ என்று அவள் முணுமுணுக்க, அவன் அப்போதும் அசையவில்லை.
Advertisement
எவ்வளவு நேரம்தான் அங்கேயே புலம்பிக் கொண்டு அடைபட்டுக் கிடப்பது? அவனும் அழைக்க அழைக்க அசையாமல் இருக்கவும், அவள் கடுப்புடன் அங்கிருந்து வெளியேறி செல்ல முயற்சிக்க, அந்த நேரத்தில் ஆனந்தின் தலை அந்தப் பக்கமாகத் தெரிந்தது. அடுத்த கணம் அவன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் அவள் நான்காவது மாடிக்குச் சென்றுவிட, மாடிக்கு வந்த ஆனந்த், கதவைத் திறந்து கொண்டு நண்பனை தேடினான்.
ஒவ்வொரு அறையாகப் பார்த்துக்கொண்டு வந்த ஆனந்த், இறுதியில் கபிலன் ஜன்னல் வழியாக வெளியே உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்டதும், தன்னைத்தான் தேடுகிறானோ என்று நினைத்தவாறு அருகில் வர, கபிலனின் முகத்தில் இருந்த பதற்றம் அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது.
“யாரை எருமை இங்க இருந்து சைட் அடிச்சுட்டு இருக்கே?”
தன்னருகில் வந்து நிற்பது ஆனந்த் என்று அறியாமல், “ஏம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா? நானே அந்த ராட்சக்ஷனின் கண்ணில் மாட்டிடக் கூடாதுன்னு பயத்துல இருக்கேன்,” என்க, “ராட்சக்ஷனா?” என்றான் அவன் எதுவும் தெரியாதது போல…
Advertisement
“ஆமா ராட்சக்ஷன்தான்! பார்க்கக் காண்டாமிருகம் மாதிரி இருப்பான். எப்பப் பாரு என்கிட்ட வம்பு இழுப்பதே வேலையா வச்சுருப்பான். ம்ப்ச்… இப்பவும் வந்தா விடமாட்டானேன்னுதான் ஓடி வந்து ஒளிஞ்சுக்கிட்டேன். நீயும் அவன் கண்ணுல மாட்டாம கொஞ்ச நேரம் மறைஞ்சுக்கோ!”
ஆனந்தைப் பற்றி அவனிடமே சொன்னதும், பல்லைக் கடித்துக்கொண்டு, “அந்த அளவுக்குப் பெரிய ஆளா அவன்? இப்படி என்னையும் கூப்பிட்டு வந்து மறைஞ்சிருக்க?” என்றதும், “அச்சச்சோ!! அந்த ரோதனை வேதனை சோதனை இருக்கே, அதை வாயால் சொல்ல முடியாது. அனுபவிச்சா தான் தெரியும்” என்று உரைத்து வராத கண்ணீரைத் துடைத்தான்.
நண்பனின் பேச்சில் துளிர்விட்ட சிரிப்பை மறைத்துக்கொண்டு, கோபமாக முகத்தை வைப்பது போல பாவனையில் ஈடுபட்டு, “படவா ராஸ்கல்! உன் ஆளைத் தள்ளிட்டு வந்து ஒளிஞ்சிருந்து பேசுறதுக்காக என்னையே திட்டுறியாடா? இந்த மூணாவது மாடியில் இருந்து உன்னைத் தூக்கி தலைகுப்புற போட்டுடுவேன்!” என்று எச்சரித்தான்.
அவ்வளவு நேரமும் ஜீவா என்று நினைத்திருந்து அப்போதுதான் குரலில் மாற்றம் தெரியவும், “என்னாச்சு ஜீவி, தொண்டையில் எலி எதுவும் புகுந்திருச்சா? இதுக்குத்தான் டென்ஷன் ஆகாம சொன்னதைக் கேட்டு அமைதியா இருக்கணும்னு சொல்றது. காலையில என்னை எவ்வளவு தூரம் டென்ஷன் படுத்திவிட்டே, இப்ப பாத்தியா உன் சத்தம் கர் குர்னு மங்கியை ஞாபகப்படுத்துது…” என்றான் கபிலன்.
அவன் முதுகில் ஓங்கி ஒன்று போட்டதும், “அடியே ராட்சக்ஷி! அவன் தான் அடிச்சுத் துரத்துறான்னு பார்த்தா நீ அவனுக்கு மேல இருக்குறியே! உங்க ரெண்டு பேரையும் என்ன பண்றேன் பாருங்க!” என்று கடுப்புடன் உரைத்தான். கைவிரல்கள் முதுகு பகுதியில் அவன் அடித்த இடத்தைத் தடவி விட்டன.
“ஏண்டா எருமை மாடு! ஆம்பளை குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மயங்கிப் போய் கிடக்கிறியாடா?” என்று குரல் உயர்த்திக் கேட்டதும், பேந்த பேந்த முழித்துக்கொண்டு திரும்பினான் கபிலன்.
அங்குச் சகலகலா வல்லவன் போல் நின்றிருந்தான் ஆனந்த். அவனைப் பார்த்ததும் இடறி கீழே விழப் போனான் கபிலன்!
“ஏண்டா! நீ எல்லாம் ஒரு நண்பனா? உன்னைப் பாக்க ஆசையா வரேன்னு சொன்ன பிறகும், என்னை ஏமாத்திட்டு இங்கு வந்து உன் ஆளோட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கியாடா? எங்கேடா அவள்? நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் வந்திருந்து பிரச்சனையை உண்டு பண்ணும் சதிகாரி!” என்று முறைக்க, ‘ஆத்தாடியோ! வில்லங்கம் வீடு தேடி வந்துருச்சுடா… தெரியாம வந்து இதுகளுக்கு இடையில மாட்டிக்கிட்டேனே… நான் ஆணா பிறந்தது குத்தமா? இல்லை இதுங்களுக்கு நண்பனா வாய்த்தது தான் செய்த பிழையா? டாடி, இந்த ரெண்டு கேடிகளுக்கு இடையிலும் மாட்டி விட்டு என்னை, டெட் பாடி ஆக்கப் பார்க்குறீங்களே!’ என்று மனதிற்குள் குமுறினான்.
அவன் முகத்தை வைத்துக் கபிலன் தன்னைத் திட்டுவதைப் புரிந்து கொண்டு, “என்னைத் திட்டுறியா எருமை மாடு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியும் இப்பவும் என்னைப் பார்த்து ராட்சக்ஷன்னு தானே சொன்னே! ராட்சக்ஷன் என்ன செய்வான் தெரியுமாடா?” என்று கேட்டுக் கொண்டே, அவனது வலது கையைப் பின்னோக்கி வளைத்துக் கால் முட்டைத் தூக்கி முதுகில் வைத்து அழுத்தினான் ஆனந்த்.
அவனும் வலி தாளாமல் அலறிவிட, நான்காவது மாடியில் நின்றிருந்த ஜீவாவுக்கு இங்கு நடந்த எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“எங்கேடா உன் ஆளு? நான் வரேன்னு தெரிஞ்சதும் மறைச்சு வைக்கப் பாக்குறியா? வரச் சொல்லுடா, எனக்கு இப்பவே பாக்கணும்!” என்று அந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்துவிட, கபிலன் நிலை பரிதாபத்திற்குரியது.
இவன் கெஞ்ச, அவன் மிரட்ட, இவன் அழ, அவன் அதட்ட… என்று நண்பர்கள் இருவருக்கும் இடையில் சரியான கலாட்டாவாக இருந்தது.
ஜவுளிக் கடையில் வைத்து நடந்த சம்பவம் கபிலனுக்கும் தெரிந்திருந்ததால்தான், ஆனந்த் இங்கு வருவதை அறிந்ததும் தன்னை அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்திருப்பதாக நினைத்த ஜீவா, அதற்கு மேலும் அங்கிருக்க பிடிக்காமல், அவர்கள் இருவரின் கண்ணிலும் படாமல் நேராகத் தரைப்பகுதிக்குச் சென்றுவிட்டாள்.
இங்கு ஆனந்த் விடவே மாட்டேன் என்று அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்ல, மூன்றாவது மாடியில் எங்கேயுமே அவளைக் காணவில்லை. அதன் பிறகுதான் எங்குச் சென்றுவிட்டாள் என்று அவனுமே தேடத் தொடங்கினான்.
எசகுபிசகாக இவர்கள் இருவரும் மோதி விடக்கூடாது, அப்பா வேறு இருக்கிறார் என்று அவன் பயப்பட, ஜீவாவை அந்தப் பகுதியில் காணாததும், அவளும் ஆனந்தைப் பார்த்துவிட்டுத்தான் மறைந்துகொண்டாள் என்று தெரிய வர, கபிலனிடம் நிம்மதிப் பெருமூச்சு தானாகவே வெளிப்பட்டது.
“என்னடா உன் ஆளு என் கண்ணுல மாட்டாம தப்பிப் போய்ட்டான்னு நிம்மதியா இருக்கியா? மவனே, ஆபீஸ்ல நடக்கக்கூடிய பார்ட்டிக்குக் கண்டிப்பா கூப்பிட்டு வரல நடப்பதே வேறு!” என்று மிரட்டினான்.
தொண்டையில் வைத்த உணவு விக்கிக் கொண்டது போல அவன் நிற்க, “இன்னைக்கு பயங்கரமா ஷாக் ஆகிட்டு இருக்காதே… அப்புறம் அந்தச் சின்ன இதயம் வெடிச்சுடப் போகுது. அதான், உன் ஆளு போயாச்சுல்ல! இனி, இங்க இருந்து என்ன செய்யப் போற? வா!” என்று கையோடு பிடித்து இழுத்துக்கொண்டு வந்தான்.
ஏற்கனவே அவன் பூபாலனைப் பார்த்து விட்டதால், நண்பனிடம் சற்று நேரம் பேசிவிட்டுத் தனது அலுவலகத்திற்குக் கிளம்பினான் ஆனந்த். அவன் அந்த இடத்தை விட்டு அகன்ற பிறகே நிம்மதியாக மூச்சு விட்டான் கபிலன்.
அவன் அப்பாவிடம் சென்று ஆனந்த் பேசி விட்டுச் சென்ற விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். பின்னர், அவர்கள் இருவருமாக சேர்ந்து அலுவலகப் பார்ட்டிக்குச் செல்வது, ஜீவாவை ஊருக்குப் போக விடாமல் தடுத்து இங்கேயே இருக்க வைப்பது… குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மாலையில் வீட்டிற்குச் செல்லும்போது, அந்தக் கடைக்குப் போக மனமில்லாமல் வேறு கடைக்குச் சென்று புதிய உடைகள் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். அந்த உடைக்கு ஏற்ற நிறத்தில் அணிய ரவிக்கை இல்லாததால், தையல் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருந்த பாரதி, அவளிடம் இருந்து துணியை வாங்கித் தானே ரவிக்கை தைத்துத் தருவதாகச் சொன்னார். அத்துடன், அவளது மற்ற புதிய ஆடைகளையும் வாங்கித் தானே தையலிட்டுக் கொடுத்தார்.
‘தன் கையே தனக்கு உதவி’ என்பது எத்தனை சரியாக இருக்கிறது! பாரதி தையல்கலைப் பயிற்சி பெற்றிருந்ததால் தான், தனக்குரியதை அடுத்த நிமிடம் எடுத்துப் படபடவெனச் செய்து விட்டார். இது அவருக்குத் தெரியாமல் இருந்தால், இந்த நேரம் வேறு நபரைத் தேடி அலைய வேண்டும்.
ஏற்கனவே அவரை அவளுக்கு அதிகமாய்ப் பிடிக்கும். இப்போது இன்னும் பிடித்தது. சற்று நேரம் தனது அறைக்குச் சென்று ஓய்வெடுத்து, பின்னர் இரவு உணவுக்கு வெளியே வந்தாள். மறுநாள் காலை நேரம் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்குப் பாரதியுடன் சென்றிருந்தாள் ஜீவா.
ஜோடியாக வீற்றிருக்கும் பரமசிவன் பார்வதியின் காலடியில் மண்டியிட்டு, ‘தம்பியின் உடல்நிலை எப்போது சரியாகும்? இந்த வயதில் அவனுக்கு எதற்காக இப்படி ஒரு தண்டனை?’ என்று மனதிற்குள் இறைவனிடம் கண்கலங்கி முறையிட்டாள்.
பாரதிக்கு அவளது நிலை சங்கடத்தைத் தோற்றுவிக்க, தோளில் கை வைத்து இதமாக அழுத்தினார். அவள் குலுங்கி அழுவதைப் பார்க்கும்போது மனபாரமும் அதிகரித்தது.
அவளுக்காக இறைவனிடம் மனமுருகக் கோரிக்கை வைத்தார். அப்போது அவர்களுக்குப் பிரசாதத்தைக் கொண்டு வந்த பூசாரி, என்ன விஷயம் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, “குலதெய்வக் குறை இருந்தாலும் இப்படி இருக்கலாம். முதலில் உங்க சாமிக்குச் செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடியுங்க… அவரே உங்க கூட இருந்து நல்லதை நடத்தித் தருவார்!” என்று சொல்ல, அவளோ அப்படி என்றால் என்னவென்று கூடத் தெரியாமல் முழித்தாள்.
அதைப் புரிந்துகொண்டு, அடிக்கடி அங்கு வரும் பாரதியை அவருக்கு நன்கு தெரிந்திருந்ததால், அவரிடம் அது விஷயமாகத் தெளிவுபடுத்தினார்.
“எல்லாத்தையும் ஆண்டவனே பார்த்துக்குவார். நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க!” என்று விபூதியை அவள் நெற்றியிலும் பூசிவிட்டார்.
இறை வழிபாடு முடிந்ததும், இருவரும் பேசிக்கொண்டே நடந்து அருகிலுள்ள வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வரும் வழியில் பூசாரி சொன்ன விஷயமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்தக் கோவிலுக்குத் தேவையான பூஜைகளைச் செய்தால் தனது தம்பி உடனே சரியாகிவிடுவானா என்று அவள் விசாரிக்க, கணவர் பூபாலனிடம் சொல்லி அதற்கு ஆவன செய்து தருவதாக அவரும் வாக்களித்தார்.
இருவரும் வீட்டிற்கு வந்ததும், அந்த விஷயத்தை உடனடியாக அவரிடம் தெரிவித்து, அவரது சொந்த ஊருக்குச் சென்று தம்பி ஆதர்ஷ் உடல்நலம் சரியாக வேண்டிப் பூஜைகள் செய்வதற்கு உதவுமாறு காலில் விழுந்து கேட்டாள் ஜீவா. அவரும் முழுமனதாய் சம்மதிக்க, கபிலனை மட்டும் சென்னையில் விட்டுவிட்டு அவர்கள் மூவரும் பூபாலனின் சொந்த ஊராகிய தக்கலைக்கு அருகில் உள்ள அழகியபாண்டிபுரத்திற்குச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது.
தம்பியின் உடல் நலத்திற்காக மட்டுமே அவள் அங்கு வரச் சம்மதிக்க, அவர்களும் அவளை ஒரு வார்த்தை கூட மறித்துப் பேசவில்லை. ஏனெனில் அவளை இங்கிருந்து அனுப்பி வைக்கும் எண்ணம் அவர்களுக்கு எப்போதும் இல்லை. அடுத்து, எப்படி அவளை அங்கு அழைத்துச் செல்வது என்று யோசனையில் இருந்தவர்களுக்கு, கிடைத்த வாய்ப்பை நழுவவிடும் எண்ணமும் இல்லை.
அதுபோல அங்குச் செல்வதற்கு முன் அலுவல் ரீதியாக நடக்க இருக்கும் பார்ட்டிக்கும் அவள் வர வேண்டும். அப்போதுதான் இந்த அலுவலகத்தில் தொடர்புடைய நபர்களை அறிய ஏதுவாய் இருக்கும் என்று வலியுறுத்த, அவளோ தான் யார் என்ற விஷயம் அவர்கள் மூவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியக் கூடாது, தன்னைப் பற்றிய விபரங்கள் வெளியாட்களுக்குப் பகிரக் கூடாது என்று தீர்க்கமாகக் கூறினாள்.
ஜீவா வந்தால் போதும் என்ற நிலையில், அவள் சொன்ன அனைத்திற்கும் தலையைத் தலையை ஆட்டினார் பூபாலன்!
அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று ஊரில் பூஜை வைக்க வேண்டும். அலுவலகத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான பணிகள் அனைத்தையும் ஓரளவுக்கு முடித்துவிட்டு, அதற்கு ஒரு நாள் முன்பு ஊருக்குச் செல்ல வேண்டும். மகன் கபிலனை இங்கிருந்து மேற்பார்வையிடச் செய்ய வேண்டும் என்ற முடிவுடன், மகனிடம் சென்று அவர் மனதில் இருப்பதைத் தெரியப்படுத்தினார்.
ஒரு வாரம் அவர்களைப் பார்க்க முடியாது என்றதும் அவன் முகம் சுருங்கியது. அத்துடன் அவனாலும் அங்குப் போக முடியாது என்பதால் வாயை மூடிக்கொண்டு நின்றான்.
“நானே இப்படி ஒரு வாய்ப்பு அமைய எத்தனை நாளாக எதிர்பார்த்து இருக்கேன்னு உனக்குத் தெரியாதா? ஆண்டவனா பார்த்து இப்போ அதுக்கு ஒரு வழிகாட்டியிருக்கார். இந்த நேரம் நீ இப்படி நடந்துக்கிறது சரியில்லை!” என்று அதிருப்தியுடன் சொன்னார்.
அவன் தவிப்புடன் பார்த்ததும், “ஜீவாவின் மனம் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகும் அப்படியேதான் இறுகி இருக்கு. அது முன்னே மாதிரி வர சில விஷயம் செய்தாகணும். அவளை இப்படியே விட என்னால் முடியாது. அவள் உன் தோழி, அவள் வாழ்க்கை நல்ல விதமாய் அமைய ஆசை உனக்கு இல்லையா?” என்று கறாராக வினவ, அவனால் சம்மதிப்பது தவிர வேறு வழி இருக்கவில்லை.
அவர் தனது திட்டத்தை அடுக்கிக் கொண்டே போக, அவன் முகம் சுவிட்ச் போட்ட விளக்கு போலப் பளீரிட்டது. அதன் பிறகு அவர்களின் திட்டத்தில் எந்தச் சறுக்கலும் இல்லை. எல்லோரும் முன்பு போலச் சுமூகமாகப் பேச, ஆனந்தின் அலுவலக பார்ட்டி நாளும் வந்தது.
இன்று என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் அவன் மனதில்!
ஏற்கனவே ஒருவரை ஒருவர் பார்த்ததும் முட்டிக் கொள்வார்கள். இன்று எப்படியோ என்று படபடக்கும் மனதை அடக்க முடியாமல், அப்பாவிடம் அவளை விட்டுவிட்டுத் தனியாகத் தப்பி ஓடிவிட வேண்டும். அவரே அந்த ராட்சஷனுக்கு ஒரு முடிவு கட்டட்டும் என்று மனதிற்குள் நினைத்து, மாலை நேரம் நடக்க உள்ள பார்ட்டிக்குச் செல்லத் தயாரானான்.
சரியாக ஐந்தரை மணியளவில் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட, பதினைந்து நிமிடத்தில் அந்த இடத்தை வந்து அடைந்தனர். ஜீவா சுற்றியுள்ள பகுதிகளைப் பார்த்தபடியே இருக்க, கபிலன் நண்பனை அணைத்துப் பேசிவிட்டு அங்கிருந்து ஓடிவிடப் பார்த்தான். ஆனால், அவனா விடுவான்?
அதுபோல பூபாலனிடம் பேசிச் சிரித்தவன், தனது நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தினான். அவர்கள் அங்கு நின்று பேசியபடி இருக்க, அந்த நேரம் கோல்டன் நிறமும் வெண்பட்டு நிறமும் கலந்த புடவையில் மெரூன் நிற ரவிக்கை அணிந்து அழகோவியமாய்த் திகழ்ந்த ஜீவா அங்கு வந்தாள்.
ஆனந்தின் கண்கள் கீழிருந்து மேலாக அவளை அளவெடுக்க, அவளோ சுற்றிலும் வியப்பாகப் பார்த்துவிட்டு, விழிகளைத் திருப்பித் தன்னைக் கண்ணிமைக்காமல் நோக்கியவாறு இருக்கும் அவனது இரு விழிகளில் சிக்கி நின்றாள்!
