Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நாதம்

ஜீவ நாதம் – 11

பெரிய அறிவிப்புகளின்றி படம் துவங்கப்பட்டு இருந்தாலும், கண்மணி அத்தனையையும் மாளவியிடம் பகிர்ந்து இருந்தாள். மாளவி சொல்லித்தான் ராகாக்கு தெரியும் என்ற நிலை. 



Advertisement

‘கைவிட்டுப் போகும் எல்லாமே 

ஒரு நாள் உன் கைக்கு சொந்தமாக இருந்தவை தான்..’ கண்ணீர் சொன்னது இதயத்திடம். 

Advertisement

‘அவன் அவ்வளவு தூரம் சென்று விட்டபின், அவன் அருகில் போக துடித்து உன் காதலை நீயே ஏன் தாழ்த்திக் கொள்கிறாய்.’ மூளை இதயத்துக்கு புத்திமதி சொன்னது.

Advertisement

இதயத்துக்கும், மூளைக்கும் பட்டிமன்றம் நடத்தும் போதெல்லாம் காதல் தான் நீதிபதியாக இருந்து தொலைக்கிறது. அதற்கு சாதகமாகத்தானே அது தீர்ப்பு எழுதும்.

Advertisement

அனிச்சையாக ராகாவின் கைகள் அரவிந்தின் எண்ணை தடவி எடுத்தது. 

அது அவனது இதயத்தை தடவியிருக்கும் போல‌.. அவள் அழைக்கும் முன் அவன் அழைத்தான். 

இன்னும் மிச்சமிருக்கும் காதலுக்கு சாட்சி இதுதான்.. ராகாவின் இதயம் சொன்னது..

அழுத கண்கள் சிரிக்க, காதில் ஒலிப்பானை பொருத்தினாள். 

“ராகா. இன்னிக்கு என்னோட கனவு நிஜமாகற முதல் நாள். முதல் பாட்டை நீ பாடனும்னு நினைக்கிறேன். ரிக்கார்டிங் நீ சொல்ற நேரத்தில் வச்சிக்கலாம்”

இதயத்தின் சிறகுகள் அவன் சொல்லிய சொல்லில் படபடத்து அவனை இறுக்கி அணைத்தன. 

“அரவிந்த்..” தழுதழுத்த குரலை கண்களை மூடி சமாதானப்படுத்தினாள்.

“ம்ம்‌. ராகா.‌ இன்னிக்கு உனக்கு வேலை இருக்கா.?” 

“நீ எப்போன்னு சொல்லு. அதை விட பெரிய வேலை எனக்கு என்ன இருக்க போகுது?” 

“ஹேய். நீ லீவ் சொல்லனும் இல்ல.. வேலை தான் உனக்கு முக்கியம்.” 

“அங்க நீ இருக்கங்கறதுக்காக தான் வேலைக்கே சேர்ந்தேன் அரவிந்த். இப்ப நீ கூப்பிடறப்ப அது எனக்கு பெருசா தெரியல. உன்னோட இருக்க ஒவ்வொரு நிமிஷமும் நான் என் வாழ்க்கையில மிஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன்” 

“ராகா” .. தர்மசங்கடமாக இருந்தது அரவிந்த்க்கு. ‘காதலை மொத்தமாக கொட்டி மூச்சடைக்க வைப்பவளை என்ன சொல்லி தள்ளி நிறுத்துவது.?’

“சொல்லு எப்ப வரணும்.. எங்க வரணும்?” 

“ம்ம்.. மாமாவோட ப்ரொடக்ஷன் ஆபிஸ் அட்ரஸ் அனுப்பறேன். அங்க வந்திடு. காலைல பதினோரு மணிக்கு வந்திடுவ இல்ல..” 

“கரெக்டா இருப்பேன்..” 

இதழோரம் சிரிப்போடு அலைபேசியை அணைத்தான் அரவிந்த். 

 ராகாவுக்கும் அவனுக்குமான சந்திப்பு நிகழ்ந்த முதல் நாள் ஞாபகம் வந்தது‌. 

தேவாவின் வீடு அவனுக்கு  அன்று வேடந்தாங்கலை போல தோன்றியது. அவன் தோளில் வந்து அமர்ந்த பறவை போல் ஆனாள் ராகா. 

அவளின் சின்னஞ்சிறு கைகளை பிடித்து விளையாடியது நினைவுக்கு வந்தது.  ஸ்வரா வந்து அவனை தொட்ட போதே அவளுக்கு அவ்வளவு கோபம். வெடுக்கென்று அவளை தள்ளி விட்டு அவன் கையை இறுகப் பற்றி கொண்டாள். 

அன்று பிடித்த அவனை இன்றும் அவள் விடவே இல்லை என்பது  புரிகிறது. ஆனால் மதில் போல் பூனையாக நிற்கும் மனதிற்கு மணி கட்டுவது எப்படி.. 

அலைபேசியை பார்த்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருப்பவனை கலைத்தது மதுராவின் குரல். 

“வா மதுரா.” அவன் அழைத்தது அறைக்குள். அவளுக்கோ அவனின் இதய வாசலை அவன் திறந்து அழைத்தது போல் இருந்தது. அதை நோக்கி தறி கெட்டு ஓடும் மனதிற்கு தாழ்ப்பாள் போட்டாள்.  

“இந்த டிராக் யார் பாடப்போறாங்க.. ட்யூன் ரொம்ப நல்லா இருக்கு..” 

“ராகா.. தான். அம்மாவும் அதான் சொன்னாங்க. இழந்த காதலை வலியோடு பாட அழுத்தமான குரல் வேணும். அதே சமயம் இளமையாவும் இருக்கணும். உன் குரல் காதல் பாட்டுக்கு தான் நல்லா இருக்கும். அதான் ராகாவை வர சொல்லி இருக்கேன்.” 

“ஓ..” என்றாள். 

“வாய் ஓயாம பேசுவ.. ஏன் ஒரு வார்த்தையில் முடிச்சிட்ட” 

“வலியோடவே வாழ்ந்தவங்களுக்கு காதல் வலி மட்டும் தெரியாதா என்ன? நீங்க நான் பாடி கேட்காமயே முடிவு பண்ணிட்டீங்க?” 

“அப்படி இல்ல மதுரா. இதுல ஒரு செண்டிமெண்ட்டும் இருக்கு. எனக்கு எப்பவும் எதுனாலும் ராகா தான் முதல்ல வந்து நிப்பா. நாங்க ரெண்டு பேரும் தான் ஒன்னா பாடக் கத்துக்கிட்டோம்.. அதுக்கு அப்பறம் ஒரு நாள் வயலினை கையில் கொடுத்தது அவ தான். அந்த முதல் தருணம் தான் இத்தனை இசைக்கருவிகளை நான் வாசிக்க காரணமா அமைஞ்சது. சோ.. இந்த முதலும் அவளா இருக்கட்டுமே.”

“ம்ம்.. சரிதான்.. உங்களோட சரிபாதி அவங்க தானே. அப்ப அவங்க கூட இருக்கறது நல்லது தானே.” 

அவளை ஆழ்ந்து பார்த்தான் அரவிந்த். ஏமாற்றமும், வலியும், காதலும் ஒருசேர அவள் கண்களில் தெரிந்தது. 

அவன் நினைத்து பார்க்காத திசையில் இருந்து அவனை நோக்கி புதுப்புயல் வீசத்துவங்கப் போகிறதோ என்று அவனுக்குள் மணியடித்தது. 

உதடு காய்ந்து உள்ளுக்குள் துடித்தது அவனுக்கு. காதலின் முதல் படி கருணை. அதை அவன் மதுராவிடம் காட்டிய விதம் தவறோ என்று முதன்முதலாக யோசித்தான். 

“அரவிந்த் கண்ணா.. கிளம்பலாமா..?” கண்மணியின் குரலில் தலையை உதறி அந்த எண்ணங்களையும் உதறினான். அவன் கண்ணெதிரில் இப்போது இந்த திரைப்படம் நல்ல முறையில் வெளியாக வேண்டும். தன் இசை அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்ற பதைபதைப்பு மட்டுமே இருந்தது. 

“எஸ் மா. கிளம்பலாம். நாங்க ரெடி..” 

“வா.. கீழ போய் தாத்தா, பாட்டிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு, ஸ்வாதி அம்மா படத்துக்கு மாலை போட்டு  வேண்டிட்டு கிளம்பு.” சொன்ன கண்மணியின் தோளில் சாய்ந்தான் அரவிந்த். 

“அம்மா.. ஸ்வாதிம்மா எப்பவும் எனக்கு உங்க முகத்துல தெரியறாங்க மா. என்னால் பிரிச்சு பாக்க முடியல..அவங்க ஆசீர்வாதம் தான் நீங்க என் கூடவே இருக்கறது” 

“நான் எப்பவும் உன் ஸ்வாதி அம்மா தான். ஆனாலும் அவங்க மனசு இன்னிக்கு முழுசா திருப்தியாகனும் இல்ல.. எனக்குமே அவங்ககிட்ட உங்க பையனை நல்லபடியா வளர்த்து அவன் இந்த உலகத்துக்கு ஒரு நல்ல கலைஞனா, அதை விட நல்ல மனுஷனா இருக்கான்னு சொல்லனும்.. சோ.. வா.. நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போய் மாலையை போட்டுட்டு அவங்ககிட்ட சொல்லலாம்” 

இருவரையும் பார்க்க மதுராக்கு அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது. இந்த  சங்கமத்தில் தான் ஒரு துளியாகவாவது இருந்திட அந்த கடவுள் மனம் வைக்க கூடாதா என்று தோன்றியது.  

பெருமூச்சு அதை வெளிப்படுத்தியது. 

வரவேற்பறையில் நீண்ட நாட்களுக்கு பின் அனைவரும் சங்கமித்து இருந்தார்கள். 

யமுனா, அரவிந்தின் கையில் ‘எஸ்’ வடிவ எழுத்து பதித்த ஒரு ப்ரேஸ்லெட்டை அணிவித்தாள். 

“அம்மாக்கு ரொம்ப பெருமையா இருக்கும் அரவிந்த். அவங்க உன் கூடவே இருப்பாங்க.. ஆல் தி பெஸ்ட்..” என்று அவன் கன்னத்தில் தட்டிக் கொடுத்தாள்.‌

அன்னபூரணி, மயில் ராவணன் இரண்டு பேர் முகத்திலும் பெருமிதம் வழிந்தது. அது முத்தங்களாக அவன் கன்னத்தில் நிறைந்தது. 

ஆதி படியில் இருந்து இறங்கி வந்தான். கண்மணியின் கண்கள் காதலை சிந்தின. அந்த வெள்ளை நிற லினன் சட்டையும், வான் நீலத்தின் ஜீன்ஸூம் அவனை பத்து வயது குறைத்து காட்டின.

தாரா அவன் வந்ததும் அவனது வலது கையை மேலே தூக்கினாள். ஆதி சற்று குனிந்து அவனின் கையை முறுக்கினான். தசைப்பிடிப்புகள் அவனை பழைய ஆதியாக காண்பித்தது. தாரா அதில் தொங்கி ஊஞ்சலாடினாள். 

அன்னபூரணியின் கண்கள் அதை பார்த்து கண்ணீரில் நிறைந்தது. 

அத்தனை பேரும் சந்தோஷமாக இருக்கும் போது.. வெளியில் கார்கள் அணிவகுக்குத்து வரும் சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து தனி பாதுகாப்பு படையினர் வீட்டிற்குள் வந்தனர். 

மயில் ராவணன் சற்று ஆச்சர்யத்துடன் பார்த்தார். ரத்னா தான் வந்து கொண்டிருக்கிறானோ என்று யோசித்தார். ஆனால் பதவியில் இல்லாதவருக்கு இத்தனை பாதுகாப்பு படையினர் வர வேண்டிய அவசியம் என்ன இருக்க போகிறது என்று யோசித்தார். 

வெள்ளை கரை வேட்டி சரசரக்க, உள்ளே நுழைந்தது ஸ்வாதியின் மாமனாரும், தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சருமான தணிகாச்சலமூர்த்தி.. 

கோபத்தில் கண்கள் சிவந்தது மயில் ராவணனுக்கு. ஆனால் கத்தி அவரை வெளியில் போக சொல்லவும் பயம். அமைச்சரை அவமதித்ததாக வழக்கு பாய்ந்தால் உள்ளே கம்பி எண்ண வேண்டி இருக்குமே. 

நொடியில் சிந்தித்து தனது எதிர்ப்பை அவருக்கு முதுகு காட்டி நின்று தெரிவித்தார். 

தணிகாச்சலமோ அவரை சட்டை கூட செய்யவில்லை. 

நேராக அரவிந்தின் அருகில் சென்று அவனை கட்டிப்பிடித்து, தலையில் கைவைத்து ஆசீர்வதித்து, அவனது கழுத்தில், தன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழட்டி மாட்டினார். அவர் அழைத்து வந்திருந்த புகைப்பட கலைஞர்கள் அதை படம் பிடித்தனர். அதன்பின் அவர் கண்காண்பித்ததும் அவருடன் வந்தவர்கள் வெளியேறினர்.

“அரவிந்த் கண்ணா.. இந்த தாத்தாவை நீ வேணா மறக்கலாம். ஒவ்வொரு நாளும்.. ஏன் ஒவ்வொரு நொடியும் என் மனசு உன்னையே நினைச்சிட்டு இருக்கு. உன் அப்பன் எனக்கு ஒரே பிள்ளை. அவன் போன பின்னாடி இந்த தாத்தா உயிர் வாழ்றதே உனக்காக தான். அதனால்தான் உன் முதல் படம் இன்னிக்கு ஆரம்பிக்க போகுதுன்னு கேள்விப்பட்டு ஓடோடி வந்திருக்கேன். நீ கவலைப்படாம ம்யூசிக் பண்ணு. ஓகோன்னு இந்த படத்தை ஓட வைக்க வேண்டியது என் பொறுப்பு. உனக்கு இந்த வருஷம் எல்லா அவார்ட்ஸூம் அணிவகுத்து வரப்போகுது பாரு..” மீசையை முறுக்கி விட்டு அவர் சொன்னதை பார்த்து மயில் ராவணனுக்கு எரிச்சல். 

“தாத்தா.. என் திறமைக்கு கிடைக்கற அவார்ட்ஸ் தான் எனக்கு பெருமை.” சொன்ன அரவிந்தை புருவம் உயர்த்தி பார்த்து அட்டகாசமாக ஒரு சிரிப்பை சிரித்தார்‌ தணிகாச்சலம். 

“இன்னிக்கு நாம எடுத்த ஃபோட்டோ பேப்பர்ல வந்ததும் பாரு.. உன் ரேஞ்ச் எங்க போகப்போகுதுன்னு. அப்படியே உங்கப்பாவை உரிச்சு வச்சிருக்க குணத்துல. அவனும் இப்படித்தான். இந்த புகழ், பணம், பெருமைக்கு ஆசைப்பட மாட்டான். ஆனா

.அவனை போய்….” கண்கள் கலங்கின அவருக்கு. 

கண்மணி பயத்துடன் ஆதியை திரும்பி பார்த்தாள். அவனோ சலனமற்ற புகைப்படம் போல் நின்றிருந்தான். 

அரவிந்த்க்கும் உள்ளூர ஒரு நடுக்கம்.. ஆதி இப்போது தான் மீண்டு வந்திருக்கும் போது இதென்ன புது புகைச்சல்.. 

அன்னபூரணி மயில் ராவணன் அருகில் வந்து நின்று அவரது கையை பிடித்துக் கொண்டார். 

மயில் ராவணனும் அடுத்து தணிகாச்சலம் பேசப்போகும் வார்த்தைக்காக காத்திருந்தார். 

ஆதியை எவ்வளவு தான் அசிங்கப்படுத்தினாலும் அவர் ஆடாவிட்டாலும் அவரின் சதை ஆடியது. அடுத்து ஆதியை என்ன செய்யப்போகிறேன் என்று சொல்லத்தான் தணிகாச்சலம் வந்திருக்கிறாரோ என்ற எண்ணம் ஓடியது…ஆனாலும் வெளிக்காட்டிக்காமல் நின்றிருந்தார். 

அத்தனை பேரின் பார்வையும் தணிகாச்சலம் மேல் குவிய, அவர் கண்களை துடைத்துக் கொண்டு திரும்பி ஆதியை நோக்கி போனார். 

கண்மணிக்கு உடல் நடுங்க துவங்கி விட்டது. 

“ஆதி.. உங்க புதுப்படத்துக்கு என் வாழ்த்துகள். என்ன பிரச்சினைனாலும் என்னை கூப்பிடுங்க. எந்த தடை வந்தாலும் நான் அதை உடைப்பேன். என் பேரன் இந்த தாத்தாவுக்கு பெருமை சேர்க்கனும். அதுக்கு நான் என்ன வேணா பண்ண தயாரா இருக்கேன்.” 

ஆதியின் தோளை அவர் கைகள் தட்டிக் கொடுத்தன. ஆதி ஒன்றுமே நடக்காதது போல் அவர் கைகளை பற்றி குலுக்கினான். 

தணிகாச்சலம் மீண்டும் வந்து அரவிந்தை கட்டி அணைத்து உச்சி முகர்ந்து விட்டு, விடுவிடுவென சென்றார். 

அவர் கிளம்பியதும் ஆக்ரோஷமாக திரும்பி ஆதியிடம் வந்தார் மயில் ராவணன். 

“அவன் எப்படி இங்க வந்தான்? வந்து உறவு வேற கொண்டாடிட்டு போறான். நீ சொல்லியிருந்தா தானே அவன் இங்க வர முடியும்? என்ன திரும்ப உன் விளையாட்டை ஆட ஆரம்பிச்சிட்டியா? ஸ்வாதி செத்தது பத்தாதா உனக்கு?” 

“நான் விளையாட்டை இன்னும் ஆரம்பிக்கலப்பா. நீங்க திரும்ப திரும்ப பேசி என்னை பழையபடி ஆக்கலாம்னு பார்க்காதீங்க. அவர் நான் சொல்லித்தான் வந்தார். ஆனா எதுக்கு வந்தார்.. அவரால் நமக்கு என்ன பிரயோஜனம்னு கூடிய சீக்கிரம் நீங்க புரிஞ்சுப்பீங்க. என்ன இருந்தாலும் அவருக்கும் அரவிந்த் மேல் உரிமை இருக்கு. அதை யார் நினைச்சாலும் தடுக்க முடியாது.” 

“டேய்.. என்னடா புடலங்கா உரிமை?. அவன் எதுக்கு வந்திருந்தாலும் எனக்கு கவலையில்ல. அவன் வந்தது எனக்கு பிடிக்கல. இதுக்கு மேல நீ அவனை திரும்ப இந்த வீட்டில் நுழைய விட்டா நீங்க எல்லாரும் வெளிய போக வேண்டியது தான்.. ஞாபகத்துல வச்சுக்க.” 

“அப்பா. நீங்க திரும்ப பதவிக்கு வரணும்னா நான் சொல்றதை கேளுங்க. இல்லன்னா உங்க இஷ்டத்துக்கு ஆடுங்க. எனக்கு கவலையில்லை.. அப்புறம் நீங்க என்னை வீட்டை விட்டு போக சொல்ல எந்த உரிமையும் இல்லை. என் பேரில் இந்த வீடு இருக்குங்கறதை நீங்க மறந்திடறீங்க அப்பப்ப..” அவரின் நெற்றியில் இரு விரல்களை வைத்து சொல்லி விட்டு வெளியே வந்தான். அவன் பின் அரவிந்த், மதுரா கண்மணியும் சென்றனர்.

குப்பென்று வியர்த்தது மயில் ராவணனுக்கு. தனக்கு பதவி கிடைத்து விடும் என்று ஆதி உடல் நலம் தேறி வந்தபோதே தெரிந்து விட்டது அவருக்கு‌. ஆனால் அவனை தன் பிடியில் வைக்கலாம் என்று நினைத்தவருக்கு, அவன்  அவருக்கு அப்பன் என்று மீண்டும் நிரூபித்து விட்டு போவதை பார்த்து உள்ளுக்குள் ஏறிய போதை இறங்கி இருந்தது. 

 

ஆதியின் அலுவலகத்தில் ஒரு பிரிவு ஸ்டூடியோவாக மாற்றம் பெற்று இருந்தது. 

அவனின் தொலைக்காட்சி இசைத்துறையின் நண்பர்களே பாடல் பதிவுக்கு வாசிக்க வந்திருந்தார்கள். 

‘இசை நெறியாளர்’ இசை வல்லுனர்களுக்கு குறிப்புகளை கொடுத்து கொண்டு இருந்தார். 

ராகாக்கும் பாடலின் ராகமும் பாவமும், பாடலின் தன்மையும் சொல்லப்பட்டது. அவளின் கவனம் அங்கிருந்தாலும் கண்கள் அடிக்கடி அரவிந்தின் மேல் சென்று மீண்டது. 

“நான் ஒருத்தி மட்டும் பிரிவின் நரகத்துள் உழல்வதோ.. வார்த்தை தவறி விட்டாய்.. கண்ணா…” ராகா உயிரை உருக்கி பாட, அவளின் நிலையும் அந்த அர்த்தத்தில் இணைய, பாடல் வெகு அழகாக உயிர்ப்பெற்றது. 

மதுராக்கு அரவிந்த் வீட்டில் சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்தது. ராகா இவ்வளவு அழகாக பாடுவாள் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

கண்மணிக்கு மாளவியே வந்து பாடுவதை போல் இருந்தது. அதை அப்படியே படம் பிடித்து மாளவிக்கும், நந்தாவுக்கும் அனுப்பி வைத்தாள். 

பாடி முடித்ததும் ஒலிப்பதிவு அறையில் இருந்து வெளியே வந்தாள் ராகா. அவளின் கன்னங்களில் முதல் முத்தம் கண்மணியுடையதாகியது. அரவிந்த் எழுந்து வந்து அவளின் கைகளை பிடித்துக் கொண்டான். 

இருவரின் விழிகளும் ஒருவருக்கு ஒருவர் நன்றியை தெரிவித்து கொண்டன. 

ஜெயந்தனுக்கு பரம திருப்தி. ராகாவை முதல் முறை பார்ப்பதால் அவளை அறிமுகம் செய்து இருந்தான் ஆதி. 

“இவ்வளவு அழகான பாடகி ஏன் பாட்டை விட்டுட்டு உதவி இயக்குநரா போகனும்..” 

“இரண்டுமே எங்க தாத்தாக்காக. அவர் தான் இசையை எனக்கு தந்தவர்.அவர் அது மட்டும் போதாது.. உனக்குன்னு ஒரு படிப்பு, வேலை வேணும்னு சொல்லிட்டே இருப்பார். எனக்கு திரைத்துறை ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம் என் சித்தப்பா.. சின்ன வயசுல இருந்து படங்களை பத்தி பேசிட்டே இருப்பார். அதான் எனக்கு உள்ளுக்குள்ள இந்த ஆசை. சரி முறைப்படி கத்துக்கனும்னு ஏடி யா, வின் டிவில சேர்ந்தேன்.” 

“ஓ.. அப்ப உங்களுக்கு பெர்மணெண்ட் ஜாப்பா அது..?” 

“இல்லல்ல. அரவிந்த் சொல்லி அந்த ப்ரொக்ராம் டிரக்டர் என்னை எடுத்துருக்கார். இந்த ரியாலிட்டி ஷோக்கு மட்டும் தான் ஏடி யா வர்க் பண்றேன்.” 

“அப்ப.. நீங்க ஏன் இந்த படத்திலும் ஏடி யா வர்க் பண்ண கூடாது. எனக்கும் இப்படி ஒரு எனர்ஜிட்டிக்கான அசிஸ்டென்ட் இருந்தா நல்லா இருக்கும்..” ஜெயந்தன் சொல்ல அவள் கண்கள் ஆர்வத்தில் மின்னின. 

ஆதியும், கண்மணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

“அப்ப நம்ம குடும்ப படம் ஆகிடுச்சு இது.. “ ஆதி சொல்லி சிரித்தான். 

வாசமில்லாத மலருக்கு கூட வண்டின் அண்மை தேவை. அரவிந்திற்கு மனதில் காதல் இன்னும் வரவில்லையென்றாலும் கூட  ராகா அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 

ராகாக்கு சொல்லவா வேண்டும்? அரவிந்த் இருக்குமிடத்தில் தானே அவளின் இதயம் இருக்கும். உடனே சரியென்று சொன்னாள். 

“நீங்க உங்க ப்ரொக்ராம்க்கு போற நேரத்திற்கு போய்ட்டு வாங்க. அந்த கமிட்மெண்ட்டை பாதியில் விடக்கூடாது இல்ல..” 

ஜெயந்தன் சொல்ல, ராகாக்கு அவனின் மீதும் ஒரு மரியாதை வந்தது. 

பட‌ பூஜையின் காட்சிகள் வெளியாகும் முன், அரவிந்த் இசையமைப்பாளராக வருவது பற்றி ‘ப்ரேக்கிங் நியூஸ்’ வெளிவந்திருந்தது. 

அதுவும் பொதுப்பணி துறை அமைச்சரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது என்று மீண்டும்  மீண்டும் அவர்கள் மக்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டே இருந்தார்கள். 

அந்த செய்தியை பார்த்ததும், ரத்னாக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. 

‘ராஸ்கல்.. ஆதி.. என்னை கழுத்தறுக்க புது ப்ளான் போட்டிருக்கியா. என்கிட்ட நல்லவன் மாதிரி நடிச்சிருக்க அப்ப..’ முனகிக்கொண்டே ஆதிக்கு அழைத்தான்.

“சொல்லு ரத்னா.. ந்யூஸ் பாத்தியா.. எப்படி நம்ம ப்ளான். மனுஷன் எப்படி அடிச்சு பிடிச்சு வந்து அவரே ந்யூஸ் கொடுத்திருக்கார் பாத்தியா.. இந்த துருப்பு சீட்டை வச்சுத்தான் அந்த ஆட்சியை கதிகலங்க வைக்கப் போறோம்..” 

ஆதி பேசப்பேச ரத்னா கோபம் சீட்டுக் கட்டு கோபுரமாக சரிந்தது. 

தன் பெரியப்பாவான  நிறைவேந்தனின்  வாழ்க்கையையே தனக்காக முடித்து வைத்தவன், ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இப்போது தணிகாச்சலத்தை அவன் வீட்டிற்கு வரவைத்து இருக்கிறான் என்பதை யோசிக்க மறந்து விட்டோம் என்ற குற்றவுணர்ச்சி ரத்னாவை சூழ்ந்தது‌..

“அதான் ஆதி நானும் யோசிச்சேன். காரணமில்லாம ஒரு விஷயத்தை நீ செய்ய மாட்டியேன்னு.. எப்படியோ மச்சி.. நாம திரும்ப ஆட்சிக்கு வரணும். அதுக்கு நீ என்ன கேட்டாலும் செய்ய தயாரா இருக்கேன். ஆட்சில கூட நீ யாரை சொல்றியோ, அவங்களை அமைச்சராக்கிடலாம்..” ரத்னாவின் பேச்சு எரிச்சலாக இருந்தது ஆதிக்கு. 

“நேரம் வரப்ப எனக்கு என்ன வேணும்னு சொல்றேன் ரத்னா…” 

ஆதியின் கண்கள் ஒரு சிறுத்தையின் பாய்ச்சலுக்கு தயாரானதை பிரதிபலித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!