Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நாதம்

ஜீவ நாதம் – 7

அன்பின் அணைப்பு கவலைகளை தூரத்தில் நிற்க வைக்கும்.. அப்படி ஒரு பாதுகாப்பான இடத்தில் இருப்பதை போல் நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள் மதுரா. 



Advertisement

அரவிந்த் கதவை தட்டிப் பார்த்தும் அது திறக்காததால் கண்மணியை பார்க்க மாடிக்கு வந்தான். 

கூடவே ஆதியும் இருக்க, 

Advertisement

“மாமா. காலைலயே எழுந்தாச்சா..” 

Advertisement

“வாழ்க்கை முறையே இந்த ஒரு மாசத்துல மாறிடுச்சு அரவிந்த். காலைலேயே உன் அம்மா பிஸியோதெரபிஸ்ட் கொடுத்த அத்தனை எக்ஸர்சைஸையும் செய்ய வச்சிடறா..அதுக்கு அப்புறமா.. அந்த தெரபி இந்த தெரபின்னு சொல்லி தெரபிஸ்ட்ஸ் வந்திடறாங்க.” 

Advertisement

“நல்லது தானே. நீங்க சீக்கிரமா நல்லா ஆகனும்னு தானே பண்றாங்க. மாமா, ரத்னா விஷயம் நீங்க கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்க. அவரால உங்களுக்கு திரும்ப எதாவது ஒன்னுன்னா எங்க யாராலயும் தாங்கிக்க முடியாது. இப்ப நம்ம பக்கம் சப்போர்ட்டும் குறைவு தான்.” 

“யாரையும் முழுசா நம்பி யாரும் அரசியல்ல இறங்க முடியாது அரவிந்த். நான் நிச்சயம் கவனமா இருப்பேன். இப்போ நீங்க எல்லாருமே என் கூட இருக்கீங்க.. உங்களுக்காகவாவது நான் வாழனும்னு நினைக்கிறேன்.” என்று அவனின் தோளை தொட்டு சொன்னான் ஆதி. 

“சரி..மாமா.. நைட் என்னோட ஒரு பொண்ணு வந்திருந்தா. அம்மா சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.” 

“ஆமா.. ஹாஸ்டல்ல விடலைன்னு சொன்னா. பொறுமையா இருந்துட்டு போகட்டும்.” 

“ம்ம் உங்க ரெண்டு பேர்ட்டையும் அவளை பத்தி சொல்லனும். நான் நேத்து முழுக்க சரியா தூங்கல. அவ இந்த வயசுல பட்ட கஷ்டங்களையும், அவ ஊர்ல நடந்த விஷயங்களையும் கேள்விப்பட்டு எனக்கு ஏதோ நாம வேற ஒரு உலகத்துல வாழ்றதா தோணுச்சு.” 

ஆதிக்கும், கண்மணிக்கும் எதுவும் புரியவில்லை. அரவிந்த்தை கேள்வியாக பார்க்க, அவன் மதுரா சொல்லிய அனைத்தையும் அவர்களிடம் சொன்னான். 

கண்மணிக்கு வார்த்தைகள் வரவில்லை‌. இருந்தும் அவள் மேலோட்டமாக தான் அரவிந்திடம் சொல்லி இருக்கிறாள் என்று புரிந்தது. ஆனால் அதுவே அவனிடம் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆதிக்கு இது போல் சில விஷயங்கள் தெரியும் என்பதால் அவள் மேல் பரிதாபம் வந்தது. 

ஆதி கண்மணியை பார்த்தான். அவள் கண்களை ஆறுதலாக அசைத்தாள். 

“அரவிந்த். உனக்கு இன்னிக்கு எந்த வேலையும் இல்லல்ல.. நாம பொறுமையா அந்த பொண்ணுக்கிட்ட பேசலாம். நம்மளால என்ன பண்ண முடியுமோ அதை செய்வோம். நீ இதெல்லாம் புதுசா கேள்விப்படற இல்ல. அதான் உன் மைண்ட் டிஸ்டர்பா இருக்கு.. ரிலாக்ஸா இரு.‌” கண்மணி சொல்ல அவர்களுக்கு அருகில் அமர்ந்தான் அரவிந்த். 

“மாமா.. அவ இங்கேயே இருக்கட்டுமா?.. அவ வீட்டில் யாரும் வரல. இந்த சீசன் முடியற வரைக்கும் இங்க இருந்தா அவளுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்.” 

ஆதிக்கு சரியென்று பட்டது. ஆனால் கண்மணிக்கு ராகா நினைவுக்கு வந்தாள். அவள் மனம் வேதனைப்படும் எந்த விஷயத்தையும் கண்மணி செய்வதாக இல்லை. 

“அரவிந்த். அந்த பொண்ணு முதல்ல எழுந்திரிக்கட்டும். அவ விருப்பத்தையும் கேட்கனும் இல்ல.” 

“சரிதான் மா.” என்று எழுந்தான் அரவிந்த்.

அவன் போவதையே பார்த்திருந்த ஆதிக்கு அரவிந்த் எத்தனை மென்மையானவன் என்று தோன்றியது. அவனுக்கு அப்படியே எதிர் பக்கத்தில் அரவிந்த் இருந்தான். 

“கண்மணி.. இவனுக்கு நீ இசையை அறிமுகப்படுத்தி இருக்க கூடாது. பாரு.. எவ்ளோ இளகின மனசா இருக்கான். ஆனா இந்த உலகம் ரொம்ப மோசமானது மா. அதோட இனிமேல் தான் வாழ்க்கைல போராட ஆரம்பிக்கனும். அதுக்கு தைரியம் வேணும். எது வந்தாலும் தாங்கிக்க கூடிய வலிமையை அவன் வளர்த்துக்கனும்.” 

“அப்படி ஒரு சூழல் அவனுக்கு வரப்போகுதா என்ன? அவன் வாழக்கை ஒரு தென்றல் காற்றா இருந்துட்டு போகட்டுமே. ராகா அவன் வாழ்க்கைல வந்தா இன்னும் அவனுக்கு ரெண்டு பக்கத்து உறவுகள் கிடைக்கும். இந்த பக்கம் நீங்க.. அந்த பக்கம் தேவன். இரண்டு பேரும் அவனுக்கு பாதுகாப்பா இருக்க மாட்டீங்களா.. உங்க ரெண்டு பேரையும் பாத்து அவன் எல்லாத்தையும் கத்துக்க போறான்.” 

“கண்மணி. அவ்ளோ கான்ஃபிடன்டா இருக்கியா.? தேவா குடும்பம் என்னை முழுசா ஏத்துப்பாங்கன்னு நினைக்கிறியா..?” கண்மணியின் மனதில் குழப்பம் சூழ்ந்தது. 

அவளது கைகள் அவனது தோளைத் தொட்டன. ஆதி அவளை இறுக அணைத்து அவளின் தோளைப் பிடித்து எழுந்தான். 

“யாருக்கு யார்னு நாம முடிவு பண்ணிட முடியாது கண்மணி.. விதி என்ன எழுதியிருக்கோ அதை அக்சப்ட் பண்ணிக்கனும்.” ஆதி சொல்வதன் அர்த்தம் புரிந்தது கண்மணிக்கு. ஆனால் நூறாயிரம் கனவுகளுடன் அரவிந்த் பின் சுற்றும் ராகாவை நினைக்கையில் அவளுக்கு எந்த வித குழப்பங்களும் இல்லாமல் இவர்கள் இருவரின் திருமணம் முடிய வேண்டுமே என்று தோன்றியது. 

காலை சிற்றுண்டிக்கு மதுரா வந்திருந்தாள். அதற்குள் அவளுக்கு மாற்று உடை ஏற்பாடு செய்திருந்த அரவிந்த்தை பார்த்தாள் கண்மணி. ஒரு பக்கம் அவனது பொறுப்பு கர்வத்தை தந்தது. இன்னொரு பக்கம் அவன் மதுரா பக்கம் சாய்வதை போல ஒரு தோற்றம் தெரிந்து கவலையும் வந்தது. 

அதற்குள் வீட்டில் அனைவருக்கும் மதுரா பற்றிய ஒரு அறிமுகத்தை தந்திருந்தான் அரவிந்த். அவளின் தோற்றமும், இயல்பும் அன்னபூரணிக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவளிடம் இயல்பாக தமிழில் உரையாடி அவளையும் கற்றுக் கொள்ள சொல்லிக் கொண்டிருந்தார் அவர். 

இரவு முழுக்க நந்தா சொல்லிய விஷயங்கள் ராகாவை எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து அரவிந்த்தை தன் பக்கமாக முழுதும் திருப்ப வேண்டும் என்று முடிவெடுக்க வைத்து இருந்தது. 

“இங்க பாரு ராகா. அரவிந்த்..” என்று பல்லவி அவள் அலைபேசியை கொண்டு வந்து ராகாவிடம் தந்தாள். வழக்கம் போல் அவனின் இசை பற்றிய ரீலாக இருக்கும் என்று நினைத்தவள் அதை பார்த்ததும் முகம் மாறினாள். 

ஏதோ ஒரு காதல் பாடலுக்கு அரவிந்த் மதுராவையும், மதுரா அரவிந்தையும் காதலுடன் பார்த்துக் கொள்வதும், அவர்களின் கண்களின் சந்திப்பையும், வேறு எதற்கோ சிரித்த அரவிந்தின் சிரிப்பை மதுராக்காக மாற்றி என அழகாக புனையப்பட்ட ஒரு வீடியோ உலா வந்திருந்தது. 

யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஆயாசமாக இருந்தது ராகாக்கு. இனி இதுவே எல்லார் மனதிலும் பதிய ஆரம்பிக்கும். வரும் பார்வையாளர்கள் அவர்கள் இருவரையும் இதே கண்ணோட்டத்துடன் பார்க்க தான் விரும்புவார்கள். உடனே அரவிந்த்க்கு அந்த காணொளியை அனுப்பி விட்டு, அவனை பார்க்க கிளம்பினாள். 

இன்று ஒளிபரப்புக்கு  பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்துக் கொடுக்க வேண்டும். இவர்களின் குழுவிற்கு இன்று தான் அத்தனை வேலை இருக்கின்றது என காலையிலேயே வரச்சொல்லி இருந்தார்கள். ஆனால் அதற்கு முன் அரவிந்த்தை விட்டு, ஒரு மறுப்பை இணைய வெளியில் தர சொல்ல வேண்டும் என்று தான் வந்தாள் ராகா. 

எதை பார்த்து கோபமும் வருத்தமுமாக வந்தாளோ, அதே காட்சியை நேரில் பார்த்தாள். அரவிந்த் வீட்டில் அவனுக்கு நெருக்கமாக மதுரா. அவன் கிடாரில் வாசிப்பதை பற்றி மதுராவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவளும் அவனையும், கிடாரையும் அத்தனை ஆர்வமாக பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள். 

தனக்கான ஒரு பொருள் வேறு ஒருவரின் கையில் இருப்பதை பார்த்தாலே எவ்வளவு கோபம் வரும்..? அப்படியிருக்கையில் தன் வாழ்க்கையே வேறு ஒருவரிடம் சென்று விட்டதை பார்க்கையில் எப்படி இருக்கும்?  

 

ராகா நின்றுக் கொண்டிருக்கும் போதே தரை நழுவி போவதை உணர்ந்தாள். அதுவும் அத்தனை நெருக்கமும், சிரிப்பும் அதற்குள் இருவரிடமும் எப்படி வரும்.. 

‘பூவெல்லாம் முள்ளாகி போனால் வாழ்வெல்லாம் கானலாகி போகும்.’ 

இன்று அப்படித்தான் இருந்தது ராகாவுக்கு. யாரிடமும் பேசாமல் வந்த வழி திரும்பினாள். 

படியிறங்க இறங்க அவள் மனதில் பாரம் கூடிக் கொண்டே வந்தது. 

இவ்வளவு மலிவானதா தன் காதல்..? உயிர் முழுக்க அவனே என்று நாய்க்குட்டியை போல் அவன் பின் சுற்றியதால் அவ்வளவு இளப்பமாக நினைத்து விட்டானா..? 

கோபப்படுவதற்கு கூட அவளுக்கு தெம்பில்லை. காற்றில் ஆடும் காகிதம் போல் ஆனாள். 

தப்பாக அவனை நினைக்கவும் முடியவில்லை. ஆனால் தப்பாக போவதற்கான அத்தனை வாய்ப்பும் அவர்கள் இருவருக்கு முன் இருப்பதாக தோன்றியது. 

‘சந்தேகம் கொள்ளாதே’ அவள் உள் மனது நந்தாவின் குரலில் எச்சரித்தது. ஆனால் கண்ட காட்சி உண்மையை சொல்லி விட்டதே. இனி தனக்கும் அரவிந்த்க்கும் ஆயிரம் மைல்கள் இடைவெளி விழுந்து விட்டது என்று தோன்றியது‌. 

‘அப்படி என்ன நான் தவறு செய்து விட்டேன் அரவிந்த்.. உனது குடும்பமும் எனது குடும்பமும் எதிர் துருவங்களாக இருக்கிறது என்று உனக்கு முன்னாடியே தெரியாதா..? எதற்கு எனக்கு நம்பிக்கை அளித்தாய்? எதற்கு என் காதலுக்கு முன்னுரிமை அளித்து நிறுத்தி வைத்தாய்..?’ 

கேள்விகள் அவளின் நெஞ்சில் அனலை மூட்டியது. அதில் வெந்து அடங்கியது அவள் கொண்ட காதல்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!