Skip to content
Post Views: 4,850
“முடியல.. மாமா..ரொம்ப கஷ்டமா இருக்கு.. வெளிப்படையா அழக் கூட முடியல..!” வித்யா, போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த ராகவைப் பார்த்து சொன்னாள்.
அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில் இருக்கும் அவளின் அந்த தனி ரூமில் ஒரு ராக்கர் சேரில் உட்கார்ந்து கொண்டு ராகவின் போட்டோவைப் பார்த்துக் கொண்டு வழக்கம் போல பேசினாள்.
“இதுவும் கடந்து போகும்டி மயிலு.. நீ தானே சொன்ன, இது எல்லா பொம்பளைங்களும் கஷ்டப்பட்டு கடக்க வேண்டிய பருவம்னு, சொன்ன நீயே இப்படி அழலாமா?
Advertisement
தைரியம் முக்கியம் மயிலு, என் பொண்டாட்டி எப்பவும் ஸ்ட்ராங் உமனா தான் இருக்கணும்! ராகவோட மயிலு எதுக்கும் கலங்கி போய்டக் கூடாது!
எத்தனையோ பார்த்துட்ட, கடந்து வந்துட்ட, இத கடக்க மாட்டியா? பாரு நீ இப்ப அழறத பார்த்தா, மித்து கலங்கிட மாட்டானா?” ராகவ் பேசுவது போல நினைத்துக் கொண்டாள்.
“ம்ம். சரி.. மாமா, நான் அழல.. ஆமா. நம்ம மித்து இப்ப தான் ரொம்ப ஹேப்பியா இருக்கான், நான் அதைக் கெடுத்துடக் கூடாது!
Advertisement
மாமா, உனக்கு தெரியுமா. நம்ம மித்து ஒரு பொண்ணை ரொம்ப லவ் பண்றான். அவனை, இப்ப தான் என் இடுப்பில இருந்து கீழே இறக்கி விட்ட மாதிரி இருக்கு, ஆனா, இப்ப அவனுக்கு லவ் பண்ணி கல்யாணம் பண்ற வயசாயுடுச்சு!
Advertisement
அந்த பொண்ணும் நல்ல பொண்ணு தான் மாமா, ரொம்ப கேரிங்கா இருக்கா, அவன் கிட்ட மட்டுமில்ல, என் கிட்டயும்!
எனக்கு இன்னிக்கு கூட எங்கிருந்தோ வாழைப் பூ எல்லாம் வரவழைச்சு அதில கசாயம் எல்லாம் பண்ணிக் கொடுத்தா மாமா!
எனக்கு அந்த அக்கறை, மெனக்கிடல், எல்லாம் ரொம்ப பிடிச்சுருக்கு!
Advertisement
நம்ம மித்து என்னமோ அவன் லவ்ல ஸ்ட்ராங்கா தான் இருக்கான்! அவ இவனை லவ் தான் பண்றாளான்னு கொஞ்சம் கன்பர்ம் பண்ண வேண்டியிருக்கு!
ஏன்னா ரொம்ப பெரிய மரியாதை வச்சுருக்கா மாமா, அவ, நம்ம மித்து மேலே!
வயசுக் கூட ரொம்ப சரியா இருக்கு மாமா அவளுக்கு! ஒரு நாலஞ்சு வயசு வித்தியாசம் இருக்கும்! நான் ஜாதகம் எல்லாம் பார்க்க மாட்டேன் மாமா, அவங்க ரெண்டுப் பேருக்கும் பிடிச்சுருந்தா மட்டும் போதும்!
அவளுக்கு நம்ம மித்துவை பிடிச்சுருக்குன்னா, அவ தான் மாமா நம்ம மருமக!
மித்து கல்யாணம் ஒரு திருவிழா போல நடக்கணும்!
அந்த ஒரு நாளுக்காக தானே நான் எந்த ஒரு நல்ல விஷயத்துலயும் ரொம்ப கலந்துக்காம, கலந்துக்கிட்டா அது மித்துவோட கல்யாணமா தான் இருக்கணும்னு ரொம்ப உறுதியா , வைராக்கியமா இத்தனை வருஷமா இருக்கேன்!
எல்லாம் நல்லபடியா நடக்க உன் ஆசீர்வாதம் வேணும் மாமா!” என்று அவள் மாமாவிடம் மனதோடு பேசியவள், ஒரு சின்ன மன நிம்மதியுடன் சேரில் பின்னால் சாய்ந்துக் கொண்டு கண் மூடி, ராகவின் இறப்பிற்கு பின், தான் கடந்து வந்த பாதையை கொஞ்சம் நினைத்துப் பார்த்தாள்!
அவள் கடந்து வந்த பாதை ஒன்றும் ராஜப் பாட்டை அல்ல!
இந்த சினிமாவில் .. இல்லை கதைகளில் சொல்லுவார்கள், அப்பா இல்லாத கதாநாயகனை அவன் அம்மா இட்லிக்கடைப் போட்டு, இல்லை பூ விற்று, கீரை விற்று,
இல்லையென்றால் சித்தாள் வேலை, வீட்டு வேலை, சமையல் வேலை செய்து தனியொருத்தியாக வளர்த்து ஆளாக்கினாள் என்று சிம்பிளாக சொல்லி விடுவார்கள்!
அங்கு அவர்களின் பொருளாதார இறக்க நிலை மட்டுமே சொல்லப்படும்!
ஆனால் மற்றவை இன்னும் எவ்வளவோ இருக்கிறதே!
இப்போது கூட சமீபத்தில் ஒரு தொழிலதிபர் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட, அவரின் மனைவி தைரியமாக செயல்பட்டு அவர் தொழில் சாம்ராஜ்யத்தை கடனில் இருந்து விரைவாக மீட்டெடுத்தார் என்று சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வைரல் ஆக்கினார்கள்!
வெகு நிச்சயமாக அது மிகப்பெரிய சாதனை தான்! அவரும் சிங்கப் பெண் தான்! அதில் எந்த சந்தேகமும் சர்வ நிச்சயமாக இல்லை!
ஆனால், இப்படி யோசித்துப் பார்த்தால்,
ஒரு பாக்யராஜ் பட சீனில் அவர் போஸ்ட்மேனாக வருவார் பஞ்சாயத்து சீன் ஒன்றில்!
அதில் பஞ்சாயத்து பெரிய தலைகளைப் பார்த்துக் கேட்பார்.
“பத்தினிங்க பேர்கள் ஒரு நாலு பேர் பேரை சொல்லுங்க” என்பார்.
உடனே அவர்கள் “சாவித்திரி, நளாயினி” என்று அடுக்கிக் கொண்டு போகும் போது, “ஏன் உங்க வீட்டுல உங்க அம்மா, அக்கா, உங்க சம்சாரம் எல்லாம் பத்தினி இல்லையா? ஏன் அவங்க பேரை சொல்லல?” என்று கேட்டு திகைக்க வைப்பார்!
அது போல அந்த சிங்கப் பெண்ணைப் பாராட்டித் தீர்க்கும் இந்த சமூகத்திற்கு, தன் ஊரிலோ, அல்லது வீட்டருகிலோ அது போல வாழ்ந்துக் கொண்டிருக்கும் சிங்கப் பெண்களை பற்றி அறிந்து உணரும் எண்ணமே இருப்பதே இல்லை!
என்ன அந்த தொழிலதிபர் பெண்ணிற்கும் இந்த மாதிரி பெண்களுக்குமான பினான்சியல் ஸ்கேல் வேண்டுமானால் ரொம்பவும் வித்தியாசம் இருக்கலாம், ஆனால் போராட்டம் ஒன்று தான்! மன உறுதியும் ஒன்று தான்!
ஏதேதோ நினைத்துக் கொண்ட வித்யா, அவள் ராகவோடு வாழ்ந்த அந்த வீட்டை காலி செய்து கிளம்பிய அந்த நாளை நினைத்துப் பார்த்தாள்.
இப்பவும் கண்ணில் நீரை வரவழைக்கும் அதை நினைத்தால்!
———–
காதல் அன்று.
வித்யா வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த எலக்ட்ரிசியன் பேனைக் கழட்டிக் கொண்டிருப்பதை!
இதோ, நாளை கிளம்பப் போகிறார்கள். ராகவோடு அவள் சந்தோசமாக வாழ்ந்த இந்த வீட்டை விட்டு!
சியாம் சொன்ன படி, கேசை நடத்த ஈசியாகவும் இருக்கும் என்றும் முக்கியமாக வித்யா இங்கேயே இருந்தால் ராகவின் நினைப்பில் டிப்ரசனுக்கு போய் விடுவாள் என்றும் இந்த ஏற்பாடு!
கூடவே இருந்தார் லதா!
அவர் அமெரிக்காவுக்கு திரும்பிப் போக வில்லை!
வித்யாவிற்கு துணையாக இங்கேயே இருந்து கொண்டார்.
வித்யா தன்னையே பார்த்துக் கொண்டாள்!
அவளா இப்படி. இளைத்துப் போய், கருத்துப் போய்!
முக்கியமா இப்படி தலை முடியை இப்படி பாப் கட்டிங் செய்துக் கொண்டு!
பாப் கட்டிங்?
ஆமா அது லதா விடாப்பிடியாக ஒரு பியுட்டிசியனை வீட்டிற்கு அழைத்து வந்து செய்து விட்டது!
ராகவ் இறந்த பின், அவள் என்ன சாப்பிட்டாள், எப்போது குளித்தாள், என்ன உடுத்தினாள் என்று அவளுக்கே கூட நினைவில்லாமல் பித்துப் பிடித்த மாதிரி இருந்தாள்.
இதில் அவளின் நீளமான தலைமுடியில் சடைப் பிடித்து விட்டது!
ராகவ் ரொம்பவும் ரசித்த அந்த நீளமான தலைமுடி! ஆசை ஆசையாக
அவன் பூ வாங்கிக் கொடுத்த அவள் சூடி மகிழ்ந்த அந்த நீளமான கூந்தல்!
அவள் பாட்டி வள்ளி மயில், “முடி அழகு முக்கா அழகு!” என்று பெருமிதப்பட்ட அந்த கூந்தலை வெறிப் பிடித்த மாதிரி ஒரு கத்தரிக்கோல் கொண்டு கட் பண்ணி எறிந்தாள் வித்யா!
லதா ஓடி வந்து தடுக்குமுன் அலங்கோலமாகிவிட்டது அது!
லதா பதறிப் போய் அவளை உலுக்கி, தன்னிலைக்கு வர வைத்தார்.
பின் திட்டிக் கொண்டே தான் ஒரு பியுட்டிசியனை வீட்டிற்கே வர வைத்து இப்படி வெட்டி விட சொல்லி விட்டார்!
பின் அதுவே அவளின் ஹேர் ஸ்டைலாக மாறி விட்டது!
அப்புறம், அவள் அழுதுக் கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாதே!
உயிர் வாழ வேண்டுமே! மித்துவை வளர்த்து ஆளாக்க வேண்டுமே!
அதற்கு அவள் வேலைக்குப் போக வேண்டுமே!
எல்லாவற்றிற்கும் மேலாக மித்துவின் மனது இவளின் கோலம் கண்டு பாதிக்கப்படக் கூடாதே!
அதனால் அவள் தோற்றத்தில் கொஞ்சம் கவனமாகவும் இருக்க வேண்டி தான் இருந்தது!
இப்படி புறத்தோற்றத்தில் மட்டுமல்ல, அவள் மனதளவிலும் நிறைய மாற வேண்டியிருந்தது!
முன்பு போல ராகவ் பார்த்துக் கொள்வான் என்று அசிரத்தையாகவெல்லாம் இருக்க முடியாது மனிதர்களை கையாளுவதில்!
பாம்பு என்றும் பழுதென்றும் எண்ண முடியாத மனிதர்கள்!
இதில் ஆண் பெண் பேதமில்லை!
இளம் விதவை என்று அவளிடம் அப்ரோச் செய்ய நினைப்பவர்கள், நிஜமாகவே அவளின் நிலைக் கண்டு இரக்கம் கொண்டு ஆதரிக்க நினைப்பவர்கள்,
கேட்பதற்கு ஆள் இல்லை என்று பணம் ஏமாற்ற நினைப்பவர்கள், வேண்டுமென்றே வம்பு செய்து பணம் கறக்க நினைப்பவர்கள்,
வலிய வந்து உதவி விட்டு, பின் பலன் எதிர்பார்ப்பவர்கள், அல்லது உதவி செய்து விட்டு நல்ல அறிமுகம் ஏற்படுத்தி பழக்கம் செய்து கொண்டு அவள் பேரை கெடுத்து விட்டு, அதில் பலன் காண நினைப்பவர்கள்,
“என் அம்மா உங்க மாதிரி தாங்க, உங்க இளம்வயதில் என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள்” என்ற சாப்ட் கார்னர் உள்ளவர்கள் என்று ஆண்களில் பல விதம் என்றால்,
பெண்களில், இன்னமும் சகுனம் பார்ப்பவர்கள், அப்படி பார்ப்பதை மற்றவர்களுக்கு தெரியாத மாதிரி காட்டிக் கொள்பவர்கள்,
மங்கள காரியங்கள் எதிலாவது இவள் முன்னே கலந்து கொள்ள வரும் சந்தர்ப்பம் எதிர்பார்த்து அப்போது அவளைக் காயப்படுத்தி சந்தோசம் காண நினைப்பவர்கள்,
இல்லை அப்படியான நிகழ்வுகளில் ஒதுங்கி நிற்கும் இவளை, வேண்டுமென்றே சபை நடுவில் சத்தமாக அழைத்து, “நான் அதெல்லாம் பார்க்க மாட்டேன்” என்று உரக்க சொல்லி தன் முற்போக்குத்தனத்தை பறை சாற்றிக் கொள்பவர்கள்,
“சின்னப் பொண்ணு இவ, யாருக்கும் இவ நிலைமை வரக் கூடாது” என்று அவள் வலியை முழுமையாக உணர்ந்தவர்கள்,
அவளை தப்பான எண்ணங்களுடன் நெருங்கும் ஆண்களைத் தடுத்து நிறுத்துபவர்கள், இல்லை இவளையாவது அலர்ட் பண்ணுபவர்கள்,
உதவி என்று கேட்காமலே துணையாக கூட வருபவர்கள்,
“இவளை பார்த்து புருஷன் செத்துப் போய்ட்டான், பாரு இவ
ஹேர் ஸ்டைலையும் பான்ட் சட்டையையும், கியர் வண்டி ஓட்டும் திமிரையும்” என்று திட்டிக் தீர்க்கும் என்று ஏகப்பட்ட வகை!
இதில் ஜெண்டர், ஜாதி, மத பேதமில்லாமல் உண்மையான நட்புடன் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் திவ்யா அம்மா, செலின் அக்கா, சியாம் அண்ணா, கெவின் அண்ணா, எதிர்வீட்டு மாமி மற்றும் அவளின் கர்ப்பக் காலம் முதல் துணை நிற்கும் ராகவின் நண்பர் சலீம் குடும்பம் என்ற நல்ல மனிதர்கள் ஒரு பக்கம்!
ஆனால், அவளின் சொந்தங்கள் வகையில் மட்டும் பெரியப்பா மறைவிற்குப் பிறகு யாருடைய ஆதரவும் அவளுக்குக் கிடைக்க வில்லை!
உபயம் ஈஸ்வரி!
இப்படி எல்லா வகை மனிதர்களோடும் தான் அவள் வாழ்ந்தாக வேண்டும்!
எல்லோரையும் பேஸ் பண்ணி தான் ஆக வேண்டும்!
அவள் மட்டும் தனித்து காட்டிலா இருக்க போகிறாள்?
அப்படி வாழ அவள் என்ன ரிஷ்யசிருங்கரா?
இவர்களோடு தானே வாழ்ந்தாக வேண்டும்!
சர்வைவலுக்காக வேலைக்கு செல்ல வேண்டும்! பணம் சம்பாதிக்க வேண்டும்! உட்கார்ந்து ஒரு மூச்சு அழுவதற்கு கூட நேரமில்லாமல் ஓட வேண்டும்!
அவள் பெரிதாக படித்திருக்க வில்லை!
அவளுக்கு தெரிந்தது யோகா, டைலரிங் மட்டுமே!
மித்து படித்துக் கொண்டிருந்த, மற்றும் இவள் வேலைப் பார்த்த அந்த ஸ்கூலின் கரஸ்பாண்டன்ட், தனியார் பள்ளிகளின் அசோசியேசன் தலைவராக இருந்தார்!
அவர் கொடுத்த நற்சான்றிதழ், சிபாரிசு கடிதம், மற்றும் அவளின் யோகா ஸ்டுடென்டஸ்களின் சாதனை நிகழ்ச்சிகள் அடங்கிய டிவிடிக்கள் சகிதம் அவள் சென்னையில் பல தனியார் பள்ளிகளை அப்ரோச் செய்து ப்ரீலான்ஸ் யோகா டீச்சராக ஐந்து பள்ளிகளில் வேலை வாங்கி விட்டாள்!
செலின் அக்கா துணையுடன்!
முதன் முதலில் ஒரு பள்ளியைத் தொடர்பு கொள்ள அவள் சென்ற போது அவள் மிகவும் பதட்டமாக இருந்தாள்!
செலின் அக்காவை அவள் சர்ச்சில் இருந்து பிக்கப் செய்து கொள்ள தன் ஸ்ப்லண்டர் வண்டியில் சென்று காத்திருந்தாள்!
அது தான் நல்ல மயிலேஜ் தந்தது அவளுக்கு!
ராகவின் வண்டி தான் அது! அவளின் ஸ்கூட்டியை விற்று விட்டாள்!
ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட்டு கட்டுப்படியாக வில்லை என்று, இந்த வண்டியை ஓட்ட ஆரம்பித்து இருந்தாள்!
சேலைக் கட்டிக் கொண்டு இந்த வண்டியை ஓட்ட முடியாத காரணத்தால் பான்ட் சட்டையே அவளின் உடையானது!
நாலு பான்ட்கள் ஆறு ஏழு சட்டைகளை வைத்துக் கொண்டே ரொம்பவும் ரிப்பீட் ஆகாமல் போட்டுக் கொள்ள முடிந்தது!
சுடிதாரில் இது முடியாதே!
எல்லாவற்றையும் யோசித்து யோசித்து தான் செய்வாள்!
இப்போது கொஞ்சம் பயம், படப்படப்புடன், இந்த வேலை கிடைக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டு,
“மாமா ப்ளீஸ், நீ தான் எனக்கு இந்த வேலையை எப்படியாவது வாங்கி கொடுக்கணும்” என்று வேண்டிக் கொண்டவள் கண்ணில் பட்டது, அந்த சர்ச் சுவரில் எழுதப் பட்டிருந்த பைபிள் வாசகம்!
“பயப்படாதே! நான் துணை நிற்கிறேன்!”
———
ஹை கோர்ட்டில் அவளின் கேஸ் நடந்து கொண்டு தான் இருந்தது, ஆனால் மெதுவாக!
இந்த மாதிரி சிவில் கேஸ்கள் அப்படி தான் இழுக்கும் என்றார்கள்!
பெரியப்பா இறந்தப் பின் அவரின் மேல் இருந்த அந்த பினாமி சொத்து கேஸ் நீர்த்துப் போய்விட்டிருக்க, அவரின் பாங்க் லாக்கர் அவரது வாரிசுகளால் திறக்கப்பட்டு, ராகவ் கேசுக்குத் தேவையான அத்தனை ஆதார டாகுமென்ட்ஸ் எல்லாம் கிடைத்தே விட்டது!
இப்போது வாய்தா வாங்குவது ஈஸ்வரி தரப்பு வேலையாயிற்று!
சில சமயம் இவர்களே கூட வாங்கும் படியும் ஆகிக் கொண்டிருந்தது!
காரணம்! கெவினின் மாமனார்! அவர் திறமையான லாயர் என்றாலும் மிகவும் பிஸி!
அவள் கேஸ் மெதுவாக நகர இதுவும் ஒரு காரணம்!
கேஸ் மெதுவாகவே நடக்கட்டும்! மித்து கொஞ்சம் குடும்ப கஷ்டம், தெரிந்தே வளரட்டும்! அப்போது தான் தைரியம் வரும், எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று!
அது ராகவிடம் அந்த தைரியம் கொஞ்சம் குறைவாக இருந்தது! அவனால் வறுமையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
மித்து அப்படி வளர்ந்து விடக் கூடாது என்பதில் வித்யா உறுதியாக இருந்தாள்!
அவள் மாமாவிடம் குறை என்று அவள் கண்டது அது மட்டுமே!
மற்றபடி அவள் ராகவிடம் வேறு குறை ஒன்றும் இருப்பதாக அவள் நினைக்க வில்லை! யாரையும் அவனைக் குறை சொல்லவும் அனுமதிக்க வில்லை!
இதனால் அவள், அவள் அம்மா லதாவின் ஆதரவையுமே கூட இழக்க வேண்டியதாகிவிட்டது, ஒரு சூழ்நிலையில்!
அப்போது மித்து மூன்றாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தான்.
ராகவ் மரணத்திற்குப் பிறகு கொஞ்ச வருடங்கள் வித்யாவுக்குத் துணையாக தான் லதா அவளுடன் இருந்தார்.
ஆனால் அமெரிக்காவில் அவரது மகனுக்கு இரண்டாவது குழந்தைப் பிறந்து இருக்கிறது, வாணியும் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாள் என்று போன் வந்த பின், அவள் புலம்பத் தொடங்கினார்.
“அங்கே வாகீசன் பொண்டாட்டிக்கும் வாணியின் கணவனுக்கும் அம்மா இல்லாத காரணத்தால், பெண் துணை இல்லாது ரொம்பவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறாங்க.
இங்க அம்மாக்காரி நான் இருந்தும் அவங்கள இப்படி தவிக்க விட்டடுட்டு இங்க இருக்கிற மாதிரி என் கையைக் கட்டிப் போட்டு விட்டு, உன் புருஷன் இப்படி உன்னை விட்டுட்டுப் போவானா?
அவன் சுமையை என் தலையில் வச்சுட்டுப் போய்ட்டான், நான் கிடந்து அல்லாடுறேன்” என்று ஒரு புலம்பி விட்டார் லதா!
அவள் மாமாவை இப்படி சொன்னவுடன் வித்யாவுக்கு கோபம் தலைக்கேறியது!
“அம்மா, உன்னை யாரும் இங்க கட்டிப் போடல, உனக்கு உன் பிள்ளைங்கள பார்த்துக் கொள்ள நீ அங்க போகணும்னா தாராளமாக போ, அதுக்காக என் மாமாவைத் திட்ற வேலையெல்லாம் வேண்டாம்” வித்யாவும் கத்தி விட்டாள்.
அவள் அவளின் மாமா மேல் இருக்கும் அன்பைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தும் கூட ஒரு ஆதங்கத்தில் புலம்பி விட்ட லதா, தன் தவறை உணர்ந்து, “சாரிடி மயூ,, நான் ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன், நானும் உனக்குத் துணையா இல்லைன்னா நீ என்ன பண்ணுவ, மித்துவை வச்சுக்கிட்டு?”
“இல்ல நான், பார்த்துக்கறேன், நீ கிளம்பு, என் கூட என்னிக்கும் என் மாமா துணை இருப்பார், அவர் எங்களைப் பார்த்துப்பார், யாரையாவது அனுப்பி வைப்பார்!” என்றாள் வித்யா உறுதியுடன்!
லதா மனமே இல்லாமல் அமெரிக்கா கிளம்பினார், வித்யாவின் தீவிர வற்புறுத்தலால்!
போகும் போது கூட, “இந்தா, என் பென்சன் கார்டையாவது வச்சுக்கோ, உனக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லி அவரின் ஏடிஎம் கார்டைத் தர, அதையும் வாங்க மறுத்து விட்டாள் வித்யா!
ஆனால் அவளின் நம்பிக்கை மட்டும் பொய்க்க வில்லை!
அவள் சொன்ன மாதிரியே, ராகவின் நண்பரான, வித்யாவின் கர்ப்பக் காலத்தில் அவர்கள் காலையில் போய் தங்கும் அந்த முஸ்லீம் குடும்பம், இவள் பிளாட்டிற்கு எதிர் பிளாட்டில் குடி வந்தார்கள்!
ராகவின் நண்பர் என்றாலும் சலீம் வயதில் மூத்தவர்! அவரின் பையன் வித்யா கர்ப்பமாக இருந்த போதே காலேஜ் முதல் வருடம் சேர்ந்திருந்தான்!
இப்போது அவனுக்குத் திருமணம் ஆகி துபாயில் இருக்க, இவர்கள் இப்போது இங்கு வந்து விட்டார்கள்!
வித்யா வேலைக்குப் போன பின் மித்துவைவின் பொறுப்பு அவர்களே!
சலீம் , மேலும் ஒரு உதவியை செய்தார் வித்யாவுக்கு.
அவருக்குத் தெரிந்த நைட்டி தயாரிக்கும் கார்மென்ட் பாக்டரி ஒன்றில் கட்டிங் மாஸ்டருக்கு அசிஸ்டன்ட் வேண்டுமென்று கேட்கிறார்கள் என்று சொன்னார்!
வெறும் ப்ரீலான்ஸ் யோகா வகுப்புகளில் வரும் வருமானமும், அவளின் நகைகள் மொத்தத்தையும் விற்று வந்த பணத்தை போஸ்ட் ஆபிஸ் எப்டியில் வரும் மாதாந்திர வட்டிப் பணமும் மித்து பெரிய கிளாஸ் போகப் போக பற்றாமல் போய்க் கொண்டிருந்தது!
அதனால் அந்த வேலை பிற்பகல் நேரம் என்பதாலும் ஒத்துக் கொண்டாள்.
ஆனால் சலீமின் மனைவி கொஞ்சம் பயந்தார்.
“அந்த சீனியர் கட்டிங் மாஸ்டர் கொஞ்சம் பெண்களிடம் வழியும் ரகம், பெண்கள் விசயத்தில் கூட கொஞ்சம் வீக் என்று சொல்வார்கள், அவன் கிட்டே போய் நீ எப்படி வேலை செய்வ? ஆனா நல்ல சம்பளம் அங்க.. அதையும் யோசிக்க வேண்டியிருக்கு” என்றார்.
வித்யா, “மாமா நீ பார்த்துக்கோ,” என்று வேண்டிக் கொண்டு கிளம்பினாள் அங்கு.
போகும் வழியில் ஒரு காரின் பின் புறம் இருந்த வாசகம் அவளுக்கு தெம்பு ஊட்டியது!
“நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வை ஆக்குவேன்”
error: Content is protected !!