Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

டிங் டாங் காதல்

டிங் டாங் – 10

மாலை சுந்தரிடம் தான் செய்த வேலையை வைஷ்ணவி காட்டிவிட்டு கிளம்ப தனக்கு முன்னால் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டும் முயற்சியில் இருந்தான். வேகத்தை கூடி ஓடியவள் அவன் அருகே சென்றதும் வேகத்தை குறைத்து சாதாரணமாக நின்றாள்.

சிகையை சரி செய்து அவன் வாகனத்தை உயிர்ப்பிக்கும் முன்னர், “ஹாய்…” அழைத்தாள் அவனை.

திரும்பி பார்த்தவன், “ஹாய்” என்றான்.

“வீட்டுக்கா போறீங்க?” – வைஷ்ணவி



Advertisement

“ஆமாங்க” – கார்த்தி

தயக்கமாய் நிற்பது போல் தயங்கி நின்று நடித்தவள் நடிப்பை நம்பியவன், “எதாவது வேணுமா?” பணம் கொண்டு வரவில்லையோ என்று கேட்டான் அவன்.

“இல்ல… இன்னைக்கு நான் விரதம். ஏதாவது சிவன் கோவிலுக்கு போய் தான் விரதத்தை முடிக்கணும். அம்மா குற்றால நாதன பாத்து விரதத்தை முடிச்சிட்டு வர சொன்னாங்க”

Advertisement

“நான் வழி சொல்றேன் வாங்க” பைக்கை விட்டு இறங்கியவன் ஹெல்மெட்டை அவிழ்க்கும் முயற்சியில் இருக்க, பின்னால் இருந்து அந்த ஹெல்மெட்டில் அடிக்க கை ஓங்கியவள்,

Advertisement

‘மவனே நீ கன்னி கழியாம தான்டா சாக போற’ காற்றிலே அவன் தலைக்கு இரண்டு அடி வைத்து வயிற்றில் ஒன்றையும் மறக்காமல் வைத்து அவனை வளைத்து சென்று கண் முன்னே வந்து நின்றாள்.

“இல்ல இல்ல வழி தெரியும். ஆனா காலைல இருந்து சாப்புடாம இருந்ததுனால கொஞ்சம் மயக்கம் வர்ற மாதிரி தலை சுத்துது”

அவள் எதை கேட்க வருகிறாள் என்று புரிந்தது ஆனால் உடன் அழைத்து செல்ல தயக்கம் அவனுக்கு. பெண்களோடு அதிகம் பழகியிராதவன் இல்லை, ஆனால் தன்னுடன் வாகனத்தில் ஏற்றி எங்கும் சென்றதில்லை இதுவரை.

Advertisement

“ஒரு ஆட்டோ புடிச்சு தரீங்களா?” நல்ல பிள்ளையாக நாடகம் ஆடியவளை புரிந்துகொள்ளவில்லை அவன் புத்தி.

“எப்படிங்க தனியா போவீங்க… வண்டில ஏறுங்க” தன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தவன் அவளை பார்க்க அவளோ தயக்கமாய் அவனை பார்த்தாள்.

உண்மையிலேயே தயக்கம் தான், முதல் முதலில் தந்தை, சகோதரன் அல்லாது ஒரு ஆணுடன் வாகனத்தில் செல்கிறாள் தயக்கம் இருக்க தான் செய்தது. பிறகும் இவனுடன் தான் மொத்த காலத்தையும் கடத்த போகிறோம் என்ற தைரியம் உடனே வளர்ந்துகொண்டது.

உடனே சம்மதித்து விட கூடாதல்லவா, “உங்களுக்கு ஏன் கார்த்திக் சிரமம்? நானே போய்க்கிறேன்” பவ்யமாக பேசினாள்.

“இல்லங்க மயக்கம் வருதுன்னு சொல்றிங்க. தனியா ஆட்டோல அனுப்பி வைக்க மனசு வரல. வாங்க” இந்த முறை மறுப்பு தெரிவிக்காமல் ஏறி அமர்ந்துகொண்டாள்.

சரியாக வாங்கி புறப்பட்ட சமயம் இவளை பார்த்துவிட்ட சார்லஸ் முகம் எல்லாம் புன்னகையுடன், “வைஷ்ணவிவிவி…” கிண்டல் செய்ய, அவனை பார்த்து முறைத்தவள், ‘போடா பட்டி’ முணுமுணுத்து சென்றாள்.

பத்தே நிமிடத்தில் கோவிலை அடைந்தவர்கள் வாகனத்தை நிறுத்தி கோவிலுக்குள் செல்ல அவனும் உடன் வருவான் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை அவள்.

“கோவிலுக்கு அடிக்கடி வருவீங்களா?”

அவன் கண்கள் சற்று தூரத்தில் இரைச்சலோடு பலமாய் ஆர்ப்பரித்து விழும் வெள்ளி நீரை ஊருக்கே கொடுக்கும் அருவியில் நின்றது, “ம்ம்ம் வருவேன்” பார்வையை அவளிடம் திருப்பி மெல்லிய புன்னகையை கொடுத்து நடந்தான்.

அவளோ அந்த மெல்லிய சிரிப்பில் சரிந்திருந்தாள். மனதளவில் இப்பொழுதும் இந்த உணர்விற்கு பெயர் காதல் என்று சொல்ல முடியவில்லை. தோழியை, அவனின் தாயை சமாளிக்கவே அந்த வார்த்தை தேவைப்பட்டது.

அதையும் மீறி அவன் மேல் தோன்றியிருக்கும் இந்த உணர்வில் அவனை எவரிடமுட்டும் விட்டுக்கொடுக்க கூடாதென்று கடினமாக மனம் உரைத்தது. இந்த உணர்விற்கு காதல் என்னும் பொருளும் இருக்கலாம் அதை உணர அவளுக்கு நேரம் தேவைப்பட்டது.

கோவில் சன்னிதானத்திற்குள் சென்ற வைஷ்ணவிக்கு மனதில் சொல்ல முடியாத நிம்மதி. இருவரும் இணைந்து முதல் முதலில் வந்த இடம் அவள் மனதிற்கு பிடித்த குற்றாலநாதனின் சன்னிதானம்.

நிறைந்த புன்னகையுடன் இறைவனிடம் தங்களது வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல் ஒன்று சேரவேண்டும் என வேண்டுதலை வைத்து அவனை பார்க்க, அய்யர் கொடுத்த திருநீர் குங்குமத்தை நெற்றியில் இட்டு அவளை பார்த்து அவளுக்கும் அதை நீட்டினான்.

அவள் சற்று கழுத்தை வளைத்து ஐயரை பார்க்க அவர் அடுத்தடுத்து கொடுக்க சென்றிருந்தார்.

“எடுத்துக்கோங்க” மீண்டும் அவன் கொடுக்க யோசனை இல்லாமல் எடுத்து சிரிப்போடு நெற்றியில் வைத்தாள். கோவிலுக்கு சென்றாலே இதயம் லேசானது போல் இருக்கும், அதுவும் நம் மனதிற்கு இனிமையான உறவுடன் வரும் பொழுது அந்த மனதின் மகிழ்ச்சியை சொல்லவா வேண்டும்?

“நீங்க கோவில் சுத்தி வாங்க நான் கொடி மரம் முன்னாடி வெயிட் பண்றேன்” கார்த்தி சென்றிட வேகமாக அணைத்து தெய்வங்களையும் வழிபட்டு இருவரும் கோவிலை விட்டு வெளியில் வந்தனர்.

இனி பேருந்தில் ஏற்றி விடுவான் என்று சோகமாக அவள் வர ஒரு ரோட்டோரம் சிறிய கடை முன் வண்டியை நிறுத்தினான். “எதுக்கு கார்த்திக்? வீட்டுக்கு போய் சாப்டுக்குவேன்ல?”

“இப்பயே மயக்கம் வருதுன்னு சொல்றிங்க… வாங்க” இருவருக்கும் தோசை வாங்கி அவள் கையில் ஒன்றை கொடுத்தான்.

“ஏன் இந்த குட்டி கடை?”

“நீங்களே சொல்லுவீங்க” என்றான் சிறு புன்னகையோடு. அவன் கூறியதை போலவே அதன் காரணத்தை அவள் உண்டபிறகு தான் தெரிந்துகொண்டாள்.

அவ்வளவு ருசி. வீட்டில் உண்பது போல் அதே சுவையில் இருந்தது. சாம்பார், கார சட்னி போலவே தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, மல்லி சட்னி அது அல்லாது இட்லி பொடியுடன் நல்லெண்ணெய்.

“செம்மையா இருக்கு எப்படி இத கண்டு புடிச்சீங்க… ப்பா பேசாம இந்த மாஸ்டர் யாருனு பாத்து உங்க ஹோட்டல்ல வேலைக்கு சேத்துக்கோங்க” அவளை தலை தூக்கி பார்த்தவன் ஒற்றை சிரிப்பில் புரிந்துகொண்டாள் அவன் செயலை.

“பேசிட்டிங்களா?” ஆச்சிரியமாக இருந்தது அவளுக்கு.

ஆமாம் என்று தலையை ஆட்டினான், “நேத்து தான் பேசுனேன். ரிசார்ட் ஓபன் பண்ணதும் கூப்ட்ருக்கேன்” என்றவன்,

“இங்க நான் வெஜ் கொளம்பு நல்லா இருக்கும். இன்னொரு நாள் ட்ரை பண்ணி பாருங்க” தலையை தூக்கி கூட அவளை பார்க்கவில்லை.

“ஏன் இப்பயே சாப்பிடலாமே” எழுந்து சென்று கறி குழம்பி வானத்து வந்தவளை விசித்திரமாக பார்த்தான்.

“உங்களுக்கும் வேணுமா?” கேள்வி அவளிடம் அவன் பார்வைக்கு பதிலாக.

“விரதம் இருந்தா எப்படி? நான் வெஜ் சாப்புட கூடாதுல?” திரு திரு பார்வை அவளிடமிருந்து.

“இல்ல… நம்ம… நம்ம மனசு தானே காரணம் எல்லாத்துக்கும்? அதான் விரதம் விடாச்சுல சாம்பார் சாப்பிட்டு முடிச்சிட்டேன். இனி கணக்கில்ல” தன் தட்டை அவன் கையில் வைத்து அவனுடைய தட்டை வாங்கி அவனுக்கு ஒரு முட்டை தோசையும் கறி குழம்பும் வாங்கி நீட்டினாள்.

அமைதியாக வாங்கி உண்டவன் முகம் பார்த்து, “நீங்க எப்பையுமே இப்டி தானா?”

அவளை பார்த்தான் கார்த்திக், “புரியல”

“எல்லாருக்கும் இப்டி தான் ஹெல்ப் பண்ணுவிங்களா?” – வைஷ்ணவி

“பசங்க விரதம் இருந்து நான் பாத்தே இல்ல. பொண்ணுங்ககிட்ட பழகுனது இல்ல. சோ இது தான் பர்ஸ்ட் டைம்” – கார்த்தி

“நம்புற மாதிரி இல்ல சமையல்காறாரே” சிரித்தாள் மென்மையாக.

“பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் டூ டுவல்த் பசங்க ஸ்கூல். காலேஜ்… சொல்லவே வேணாம்” மெல்ல விரிந்தது அவன் இதழ்கள் சிரிப்பில்.

“நேத்து ஏதாவது பிரச்சனையா?” புரியாமல் அவளை பார்த்தான்.

“இல்ல நேத்து ஏதோ டென்ஷன்ல இருந்திங்க. பேங்க் போறேன்னு. நான் வேற தேவையில்லாம பேசிட்டேன்” உண்டு முடித்து அவளுக்காக காத்திருந்தான்.

“கொஞ்சம் பிரச்சனை. இப்போ சரியாகிடுச்சு” – கார்த்தி

தன்னிடம் என்ன என்று கூட கூற மாட்டானா என்ற வருத்தம் வைஷ்ணவிக்கு, கூறுவதற்கு இருவருக்கும் நடுவில் உறவென்னும் ஒரு நூல் வேண்டுமே, “என்ன பிரச்னை ஏதுன்னு வெளிய சொல்ல கூட மாட்டிங்களா?” அவளை பார்த்தான் தவிர பதில் கூறவில்லை.

“எல்லாத்தையும் மனசுலயே பூட்டி வச்சா அந்த மனசு என்ன பாடு படும்னு யோசிச்சீங்களா? அம்மாகிட்ட கூட சொல்ல தோணாதா?”

“நம்ம மனசுல இருக்குற கஷ்டம் நம்மள மட்டும் பாதிக்கும்னா வெளிய யார்கிட்ட வேணாலும் சொல்லலாம். அதுவே அவங்களையும் பாதிச்சா ஏன் சொல்லணும்?”

என்ன மனிதன் இவன்? முதல் முறை வைஷ்ணவியை ஒரு மனிதன் அமைதியாக்கியிருந்தான் வார்த்தைகள் கொண்டு.

“லோன்ல ஏதாவது பிரச்சனையா?” தோளை குலுக்கினான்,

“சரியாகிடுச்சுனு வச்சுக்கோங்க”

அவள் உண்டு முடித்ததை பார்த்து எழுந்தான். அவளோ நின்றவனை அமர்ந்த வாக்கிலே பார்த்து, “சார்லஸ் சொன்னது சரி தான். பசங்க எதையும் யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்க மாட்டிங்களா?”

புன்னகையோடு, “நிரந்தரமா எனக்கு ஒரு உறவு வர்றப்ப சொல்லுவேன்” நழுவிவிட்டான் கை கழுவ.

அவனை பார்த்துக்கொண்டே அவனை தொடர்ந்து கை கழுவி பணம் செலுத்த போன கார்த்தியை பிடித்து நிறுத்தி தான் பணம் கொடுப்பதாக கூறி பார்க்க அவனோ முடியவே முடியாதென்று தானே பணம் செலுத்தினான்.

இருவரும் அமைதியாக நிற்க வைஷ்ணவி தங்களுக்கு இரு பக்கமும் பார்த்தாள். பேருந்துகள் அடிக்கடி வந்து செல்லும் பகுதி தான். சற்று தொலைவில் கூட ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது.

அவனுடன் பயணம் செய்ய இன்னும் ஆசை தான், இருந்தாலும் இதற்கு மேல் அவனையும் தொந்தரவு செய்ய கூடாதென்று அவனிடம், “தேங்க்ஸ் கார்த்திக்” அவள் முகத்தில் சொல்ல முடியாத சந்தோசம் தாண்டவம் ஆடியது.

அவன் சிறு புன்னகையோடு தலை அசைக்க, இவளும் நேரமாக பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.

இங்கிருந்து பேருந்து நிலையம் சென்றால் அங்கிருந்து செங்கோட்டை செல்லும் பேருந்தை பிடித்துவிடலாம் என்று வேக வேகமாக நடந்தவள் முன்பே வந்து பாதையை மறித்து வாகனத்தை நிறுத்தினான் கார்த்திக்.

“எங்க போறீங்க?” என்றான்.

“பஸ் ஸ்டாண்ட் போய் அங்கேயிருந்து ஊருக்கு பஸ் ஏறிடுவேன்” என்றாள்.

“வேணாம் வண்டில ஏறுங்க. வீட்டுக்கு தான் நானும் போறேன்”

இது இன்ப அதிர்ச்சி வைஷ்ணவிக்கு, “இல்ல கார்த்திக். ஏற்கனவே நான் உங்களுக்கு சிரமம் குடுத்துருக்கேன். இன்னும் நீங்க என்ன வண்டில கூட்டிட்டு சுத்துனா டிரைவர் வேலை பாக்குற மாதிரி ஆகிடும். சும்மாவே நான் சோம்பேறி நீங்க என்ன இன்னும் சோம்பேறி ஆக்கிடாதீங்க” மெல்லிய புன்னகையோடு உண்மையாகவே இந்த முறை அவன் அழைப்பை மறுத்தாள்.

அவன் முகமோ சீரியஸாக இருந்தது, “நேத்தே உங்கள அவ்ளோ நேரம் ஆனதும் தனியா அனுப்புனது ஒரு மாதிரி உறுத்தலா வீடு போய் சேருற வர இருந்தது. இன்னைக்கு அத விட நேரம் ஆச்சு. சோ ப்ளீஸ் வாங்க” என்றவன் கண்கள் அவளை கெஞ்சியது.

மனம் அழகிய வாய்ப்பை பயன்படுத்த கூறிவிட, மறுக்காமல் அவனுடன் இலத்திக்கு பயணப்பட்டாள். செல்லும் வழி எங்கும் அமைதியே இருவருக்கும். அவன் பொதுவாகவே அமைதி. இவளுக்கு சந்தோஷத்தில் அமைதி. அரை மணி நேரம் பயணத்தை இருவதே நிமிடத்தில் முடித்திருந்தான் தன்னுடைய வேகத்தில். இலத்தின் தெரு முக்கிலே வாகனத்தை நிறுத்த கூறினாள்.

“என்ன வாட்ச் பண்ணவே ஒரு பத்து டிக்கெட் அந்த ஏரியால இருக்கும்” வண்டியில் இருந்து இறங்கினாள், “அதுலயும் ஒரு கெழவி. எங்க வீட்டை விட்டு ரெண்டு வீடு தள்ளி இருக்கும் பாருங்க… டெய்லி மகேஷ்கிட்ட வந்து ஒரு மணி நேரம் பொண்ணு இப்டி வளக்கணும், அப்டி வளக்கணும்-னு கிளாஸ் எடுக்கும். இப்ப உங்ககூட பாத்தா அவ்ளோ தான்”

“வயசானவங்க அப்டி தான் முன்ன பின்ன இருப்பாங்க”

“உங்க வீட்டு கெழவி மாதிரியா?” அவளை முறைத்தான் கார்த்தி,

“கோவத்தை பாருயா கடலைமிட்டாய்க்கு. உங்க பாட்டி பகல் நேரத்துல பண்ணுற லூட்டியை கேட்டா நீங்களே சிரிப்பிங்க”

“சீரியல் பாத்து தானே?”

“ஆமா… ‘எடுபட்ட சிறுக்கி ஆதாரம் வேணும்னா கையில இருக்க அந்த செல்லுல படம் எடுத்துப்போட்டு போக வேண்டியது தானே. என்றா நாடகம் எடுத்து போடுறீங்க?’ ” என கூறி வைஷ்ணவி சிரிக்க, தன் பாட்டியை போலவே ஆச்சு மாறாமல் பேசுபவளை பார்த்து கார்த்தி முகத்திலும் புன்னகை தான்.

“இது வெறும் சாம்பிள் தாங்க. அன்னைக்கு உங்க வீட்டு பக்கத்துல இருக்க பட்டாளத்துகாரோட வைப் கூட சண்டையாம் அந்த அம்மா நாடகத்துல வர்ற மாமியாருக்கு சப்போர்ட் பண்ணதுக்கு. உங்க பாட்டி பண்ண ரகலைல தெருவே கூடிடுச்சாம்” அவன் பாட்டியை ரசிப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

அதே சமயம் கூச்சமாகவும் இருந்தது. அன்னை கூறி கேட்டிருந்தான் அன்று. “சரிங்க நீங்க வீட்டுக்கு போங்க. அம்மா அப்பயே எனக்கு கால் பண்ணிட்டாங்க” வண்டியை உயிர்பித்தவன் அவள் கிளம்ப காத்திருந்தான்.

அவளோ சண்டித்தனம் பிடித்த குழந்தையாய்  நின்று அவன் முகம் பார்த்தாள். அவள் பார்வையின் வித்யாசம் கண்டவன் என்ன என்று புருவம் உயர்த்த ஒன்றும் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

மீண்டும் கிளம்பிப்போனவனை, “ஒரு நிமிஷம் கார்த்திக்” அவன் கையில் தன்னுடைய கையை வைக்க பதறியது அவனுக்கு.

சுற்றிலும் பார்த்தான் அதிகம் செடி கொடிகள் நிறைந்த பகுதியில் தான் வண்டியை நிறுத்தியிருந்தாள் அதனால் எந்த பிரச்னையும் இல்லை. எவரேனும் பார்த்தால் என்ன ஆவது என்ற பயம் அவனுக்கு.

“வைஷ்ணவி என்ன…”

“ப்ளீஸ் கார்த்திக். ஒரு நிமிஷம் நான் பேசிக்கிறேன்” அவனுக்கு சரியாகப்படவில்லை அவள் கண்ணில் இருந்த தவிப்பு.

அவள் கண்கள் அவன் கூர்மையான கண்களை பார்த்தது, “உங்க மனசுல இருக்குறத எல்லாம் மறைக்காம ஷேர் பண்ணிக்கிற அந்த நிரந்தர உறவா நான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்”

இதை சிறிதும் எதிர்பாராதவன் அதிர்ந்து நிற்க அவளோ வந்த கடமை முடிந்ததை வேகமாக வீட்டை நோக்கி சென்றவள் பாதியிலேயே நின்று மீண்டும் அவனை திரும்பி பார்த்தாள்.

“சமையல்காரரே…” தரையை வெரித்தவன் அவள் குரலில் திரும்ப,

“பொறுமையா யோசிச்சு சொல்லுங்கன்னு டைம் எல்லாம் தர்றேன். ஆனா எப்ப பதில் சொன்னாலும் ஓகே தவற வேற பதில் சொல்ல கூடாது… அர்த்தமைந்தா (புரிஞ்சுதா?)” அதிகாரமாய் கேட்டவளை ஆச்சிரியம் விலகாமல் பார்த்தான் அவன்.

அதிர்ச்சியில் கண்கள் விரிய நின்றவன் பதில் நிச்சயம் சொல்ல மாட்டான் என்று விலகாத சிரிப்போடு விலகினாள் இல்லம் நோக்கி.

வீட்டிற்குள் நுழைந்த கார்த்தியின் பித்து பிடித்த முகத்தை பார்த்த மஹாலக்ஷ்மி, “கார்த்தி” என்று அழைக்க, அவனவளோ எண்ணென்ற எண்ணங்களை எண்ண வைத்து என்னென்னவோ செய்து கொண்டிருந்தாள்.

அவனை போல் அவளுக்கும் அவன் எண்ணங்கள் இருக்கும் ஆனால் அவள் நிம்மதியாக… அவன் அயற்சியாக அவஸ்தையில்.

கடிவாளமிற்ற குதிரையாய் அவள் வார்த்தைகளை தாண்டி அவனால் எதுவும் யோசிக்க முடியவில்லை. அன்னை அழைத்தது கூட அவன் தோளில் அவர் கை படவும் தான் கேட்டது.

“ம்மா?” அவனை ஆச்சிரியமாக பார்த்தார் அவர், உடன் அவன் பாட்டியும்.

“ஏனுங் ராசா வர்ற வழில காத்து கருப்பு எதுவும் அடிச்சிடுச்சா.. அம்மா கொள்ள நேரமா அழைச்சிட்டே இருக்கா… அப்டி என்ன யோசனை?” அன்னையை பார்த்தான்.

அவன் பதிலுக்காக காத்திருந்தது அவர் முகம்.

“ஒரு யோசனைல இருந்தேன் ம்மா… சாரி கவனிக்கல”

“இருக்கட்டும் ப்பா… கை கால் கழுவிட்டு வா. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”

“இல்ல ம்மா… வெளிய சாப்பிட்டு வந்துட்டேன்” என்றான்.

“வெளிய சாப்ட்டா வீட்டுல சொல்ல மாட்டியா கார்த்தி? உனக்காக இவ இடியாப்பம் செஞ்சு வச்சா” உள்ளிருந்து வந்தார் சுப்பிரமணி.

“இல்ல பா வேகமா வந்துடலாம்னு தான் நெனச்சேன் ஆனா லேட்டா ஆகிடுச்சு. மாவை உள்ள வைங்க ம்மா. நாளைக்கு சாப்புடுறேன்”

சமையல் வேலை எவ்வளவு கடினம் என்று கல்லூரி சென்று படிக்க துவங்கிய பொழுது தான் அன்னையின் அருமையும் புரிந்தது அவனுக்கு. கல்லூரி செல்லும் முன் வரை அன்னையிடம் வாதங்கள் செய்பவனை அந்த கல்லூரி மாற்றியிருந்தது. அன்னையின் அருமை புரிந்தவன் அன்னையின் மகனானான்.

அன்னை சமையலறை சென்றதும் அவரை பின் தொடர்ந்தவன் அமைதியாக வந்து திட்டில் சாய்ந்து நிற்க பாத்திரங்களை ஒதுக்கி வைத்த மஹாலக்ஷ்மியின் பார்வையும் மகனை அடிக்கடி தொட்டு மீண்டது.

“என்ன கார்த்தி என்ன பலமான யோசனை? நேத்தும் உன் முகமே காலைல சரியில்ல. என்ன நடந்தாலும் அம்மாகிட்ட சொல்லிடுபா” பரிவாய் வந்து மகனின் கன்னம் தொட்டு கேட்டார்.

“ஓராயிரம் பிரச்னை வந்தாலும் நின்னு சமாளிக்கிற தைரியம் என் அம்மா எனக்கு தருவாங்க. நான் ஏன் பிரச்சனைக்கு பயப்புடனும்?” சுருங்கிய அவர் முகம் மகனின் பேச்சிலும் அவன் சின்ன சிரிப்பிலும் பிரகாசித்தது.

செல்லமாக அவன் கையில் அடித்தவர், “நீ பேசி பேசியே எல்லாரையும் மயக்கிடு” வைஷ்ணவியை மனதில் வைத்து அன்னை சொல்ல, அவனுக்கும் மீண்டும் அவள் நியாபகம் தான்.

நிம்மதியுடன் விட்ட வேலையை தொடர்வருக்கு அதிர்ச்சியை வைத்தான் தன் செய்தியில், “ஆறு மாசம் பாரின் போக போறேன் மா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!