Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 11 1

11

வீரைய்யனுக்கு அருகே அமர்ந்து தனது அம்மத்தாவை பார்த்துக்கொண்டிருந்தான் ஜேகோபியன்.  மிகவும் வாடிய தோற்றத்தில் அரை மயக்கம் போன்ற நிலையில் அவர் இருக்க,



Advertisement

“என்ன பிரச்சனை தாத்தா? நல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் பார்க்கலாமே!? இல்லன்னா என்கூட வாங்க… ஆஸ்ட்ரேலியாலையே தி பெஸ்ட் ட்ரீட்மென்ட் குடுக்குற டாக்டர்ஸ் கிட்ட நான் அழைச்சுட்டு போறேன்! பாட்டி கண்டிப்பா சரி ஆகிடுவாங்க” என்ற ஜேகோபிடம் வருத்தமான முறுவலை சிந்தியவர்,

“வியாதி உடம்புக்கு இருந்தா தான்பா வைத்தியம் தேவை! இவளுக்கு வியாதி மனசுல இருக்கு…” என்றவரை கேள்வியாய் பார்த்தான் ஜேகோப்.

Advertisement

Advertisement

“ஏக்கம் புடிச்சு கடக்கா! ஆசை ஆசையா பெத்து வளர்த்த பொண்ணை கண்ணுல கூட காங்க முடியாத நிலைல இருக்கோங்குற வேதனை… அவளை பார்த்துடவே முடியாதோ? பார்க்காமலே இந்த ஜென்மம் முடிஞ்சுடுமோங்குற பரிதவிப்பு… பெரிய வியாதின்னு எதுவுமே இல்லாத உடம்பை கூட கரையான் புத்து மாறி மனசுல கடக்க ஏக்கம் கடந்து அரிச்சு அரிச்சு இப்போ படுக்கைல தள்ளிடுச்சு! மருந்து குடுத்து எல்லாம் சரி பண்ண முடியாது… உன்னை பெத்தவ முகத்தை ஒரு தரம் பார்த்தா அவ தெளிஞ்சுடுவா!”

தாத்தன் இப்படி சொல்ல, ஜேகோபிற்கு ஒன்று மட்டும் தான் புரியவில்லை. இத்தனை தெளிவாய் என்ன வேண்டும் என்று சொல்பவர் அதை செய்தால் என்ன? அதாவது ஒரே ஒரு அழைப்பு… மகளிடம், ‘வா’ என்ற ஒரு வார்த்தை…! அது போதாதா இந்த அணங்கெல்லாம் அகல…!?

Advertisement

வாய்விட்டே கேட்டுவிட்டான்!

அதற்கும் கசப்பான முறுவலை முகத்தில் தாங்கியவர், “அது அத்தனை சுலபம் இல்ல பப்பூ’ப்பா! இத்தனை வருஷம் வீம்பு, கோவம், வெறுப்புன்னு ஒதுக்கி வச்சுட்டு இப்போ தேவைன்னதும் ‘வா’ன்னு சொல்ல எனக்கு வாய் வரல! அதுமில்லாம நான் மட்டும் ‘வா’ ன்னு சொல்லி அவ வரது இங்க அவளுக்கு மரியாதையையும் கொடுக்காது!” என்றார். அதாவது பரமு’விற்கு விருப்பமின்றி வந்தால் இங்கே மரியாதை கிடைக்காது என்கிறார்.

“நீ வந்து வாசல்ல நின்னப்போ என்னால நம்பவே முடியல… உன்னை உள்ள அழைக்க கூட எனக்கு தயக்கம் தான்! நான் முன்ன ஒருக்க உன் அப்பனை வாசலோட திருப்பி அனுப்பி அவமானப்படுத்தின மாதிரி உன்னையும் செஞ்சுட்டா, ரொம்ப தப்பா போய்டும். உறவு காலத்துக்கும் ஒட்டாம போய்டும்! அதுமில்லாம என் பொண்ணோட ரத்தம்… உன்னை பார்த்தாலாது இவ கொஞ்சம் தேறுவாளோன்னு ஒரு சுயநலத்துல தான் அத்தனை பேரு முன்னையும் பரமுவை  எதிர்த்து உன்னை அழைச்சுக்கிட்டேன்!” என்றவர்,

“அவனுக்கு ரொம்ப வருத்தம் அதுல! ஹும்ம்! அவன் வரைல கோவம் நியாயம் தானே?! நான் காட்டுன வெறுப்பையும், ஒதுக்கத்தையும் பார்த்து தான் அவன் பழகுனான். இப்போ திடீர்ன்னு நான் மாறுனா, அவனுக்கு எப்படி புரியும்? தான் ஆடலன்னாலும் தன் தசை ஆடுதே அதை அவனுக்கு என்னன்னு சொல்லி புரியவைக்க முடியும் சொல்லு? ம்ச்… புரிஞ்சுப்பான்! என்னைக்காது ஒரு நாள்…” அவர் தன் போக்கில் பேசிக்கொண்டே சென்றார்.

அவர் பேசியதில் பாதி வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்றுக்கூட அவனுக்கு புரியவில்லை. அமைதியாய் செவிமடுத்தபடி கமலத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

கமலம் லேசாக அசைய, அவர் காதருகே சென்ற வீரைய்யன், “அம்மாடி… கமலா… கமலாஆஆ… இங்க பாரேன்! யார் வந்துருக்கா பாரேன்!” கன்னத்தை தட்டிக்கொண்டே அவர் பேச, சிரமப்பட்டு கண்களை திறந்தார் கமலம்.

“இங்க பாரு உன் பேரனை! பேரன்னா’ யாருன்னு தெரியுதா? உன் மவளோட மவன்… தேவகி புள்ள! உன் பொண்ணு தேவகி பெத்த புள்ள… உன்னை பாக்கணும்ன்னு வந்துருக்கு!” அவர் சொல்ல சொல்ல… அவரது ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் கமலத்தின் சுருங்கிய வதனத்தில் உயிர்ப்பு ஏறிக்கொண்டே சென்றது.

காய்ந்துக்கிடந்த உதடுகளை பிரிக்க அவர் சிரமப்பட, பஞ்சில் நீரை தொட்டு துடைத்து விட்டார் வீரைய்யன். கண்களை அழுந்த மூடி எச்சில் கூட்டி விழுங்கியவர், விரலை மட்டும் உயர்த்தி, “தேவகி’யா?” என்றார்.

“ஆமா… உன் புள்ள தேவகி தான்! அவளோட பையன்!” இன்னும் அழுத்தமாய் வீரைய்யன் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாய் அவர் முகத்தில் பரவசம் ஏறியது.

கண்களில் நீர்ப்படலம் கூழ, “எங்…க அவ?” என்றார் சுற்றிலும் தேடிக்கொண்டு.

“அவ… பிறகு வருவா! இப்போ அவ புள்ளையை அனுப்பிருக்கா! நீ நல்லா தெம்பா இருந்தா தான் அவ வருவாளாம்… உன்னை இந்த கோலத்துல அவளால பாக்க முடியலையாம்!” இறுதியாய் சொல்கையில் வீரைய்யனுக்கு குரல் கமறியது. அது தன் மனதின் குரல் அல்லவா?! மீண்டும் மனைவியை நடமாட்டத்துடன் பார்த்துவிடமாட்டோமா என்ற தவிப்பு அவருக்கு.

கமலத்தின் முகத்தின் நம்பிக்கை இன்மையின் சாயல்…! ஜேகோபை உற்று பார்த்தார். அவனிடம் மகளின் சாயலை தேடினார் போலும். அதுதான் மருந்துக்கும் இருக்காதே!!! அவன் ரிச்சர்ட்டின் அச்சில் ஊற்றிய மறுபதிப்பு!

தேடல் தோல்வியடைய சோர்ந்துப்போய் கண்மூடியவரின் அருகே வேகமாய் வந்து அவரது மெல்லிய கரத்தை பற்றிய ஜேகோப், “பொண்ணு மட்டும் தான் வேணுமா? பேரன் வேண்டாமா?” என்று கேட்க, அவனது குரலில் சட்டென கண்களை திறந்துப்பார்த்தார் கமலம்.

“பாட்டியை பாக்க தான் ஆசையா வந்தேன்… ஆனா, பாட்டி என்னை வேண்டாம்ன்னு சொல்றாங்க” குழந்தையாய் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சொன்னவனிடம் மகளின்  செய்கையை கண்டுக்கொண்டாரோ என்னவோ, அவர் கண்களில் ஒரு பளிச்சிடல்…!

“என்கிட்டே எல்லாம் பேச மாட்டீங்களா?” அவன் மீண்டும் கேட்க, அவரது மற்றொரு கரம் சற்று சிரமத்துடன் மேலுயர்த்து அவன் சிகையை வருட முயல, அதை புரிந்தவன் போல அவருக்கு வாகாய் குனிந்துக்கொண்டான் ஜேகோப்.

ருக்மணி அப்போது கையில் கிண்ணத்துடன் வந்தார். வழமைபோல, “மாமா… கஞ்சி” என்று கொடுக்க, இங்கே கமலத்தின் முகம் சுருங்கியது.

ஜேகோப், ‘என்ன?’ என்பதை போல கேட்க, “சாப்பாடே வேண்டாம்ன்னு கடக்கா கிழவி!” மனைவியின் சின்ன முன்னேற்றதிற்கே அப்படியொரு உற்சாகம் வீரைய்யனுக்கு.

“இஸ் இட்?” என்றவன், “என்கிட்டே குடுங்க… நான் ஊட்டுறேன் பாட்டிக்கு… நான் குடுத்தா ஃபுல் பவுல் காலி பண்ணுவாங்க என் பாட்டி!” என்று  சொல்லி வாங்கியவன் கரண்டியில் எடுத்து அவர் வாயருகே கொண்டுப்போக, முகத்தில் மறுப்பு இருந்தாலும் பேரனிடம் தன்னால் வாயை திறந்தார் கமலம்.

ஏதேதோ பேசி சிறிது ஊட்டியவன் அதற்கு மேல் அவர் போதும் என்று மறுத்துவிட, “இதை ஃபுல்லா சாப்பிடுங்க… அம்மாக்கு வீடியோ கால் போட்டு உங்கக்கிட்ட பேச வைக்குறேன்” அவன் பேரம் பேச, தன்னால் முடிந்த அளவு… ஏன் அதற்கும் மேலே முயன்று கஞ்சியை குடித்துக்கொண்டிருந்தார் கமலம்.

ஆனாலும் பாதிக்கு மேல் காய்ந்து கிடந்த வயிறு சட்டென வாங்கிக்கொள்ள மறுக்க, அதை புரிந்தவனாய், “ஓகே இப்போ டேப்லெட்ஸ்” என்று மருந்துகளையும் அவரை உட்க்கொள்ள வைத்து எழுந்துக்கொள்ள, அவசரமாய் அவன் கையை பிடித்து நிறுத்தினார் அவர்.

எதற்கென புரிந்தவன், “இன்னைக்கு புல்லா நல்லா சாப்பிட்டு தெம்பா எழுந்து உட்காந்தா தான் நான் அம்மாக்கிட்ட உங்களை காட்டுவேன் பாட்டி… நீங்க இப்படி பெட்’ல இருக்குறதை பார்த்தா மாம்மி வில் வொர்ரி எ லாட்!” என்றுவிட, கமலத்தின் முகம் வாடிப்போனது.

உடனே, “சரி, இப்போ நான் சொன்னேன்னு குட் கேர்ளா பாட்டி சாப்பிட்டதுக்கு கிப்ட்’டா…” என்றவன், பின்பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்து அதற்குள் இருந்த ஒரு விரல் நீள புகைப்படத்தை கமலத்தின் கரத்தில் கொடுத்து, “இந்த போட்டோ வச்சுக்கோங்க! இது டேட், நடுல நான்…அப்பறம் இது…” என்று இழுக்க,

“என் மவ!” கண்கள் நிறக்க அதை பார்த்துக்கொண்டே சொன்னார் கமலம்.

“எஸ்! உங்க பொண்ணை பார்த்து, நல்லா சாப்பிட்டு தெம்பா எழுந்து உட்காந்துட்டு சொல்லுங்க… அப்போ காட்டுறேன் என் மாம்மி’ய” என்றான்.

சின்னகுழந்தை கையில் மிட்டாய் கொடுத்ததை போல அத்தனை பூரிப்புடன், பரவசத்துடன் அந்த நிழல்படத்தில் இருந்த மகளை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு கைகளில் மகளை தாங்குவதை போன்றொரு பிரம்மை!

தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த வீரைய்யனுக்கு, ‘இத்தனை ஆசை, ஏக்கம் இருக்குன்னு ஒரு கோடு காட்டிருந்தா கூட புரிஞ்சுக்க முயற்சி பண்ணிருப்பேனேடி… யாருட்டயும் சொல்லாம உனக்குள்ளேயே புதைச்சுக்கிட்டு மருகிக்கிட்டு கடந்துருக்கியே!’ என்ற ஆற்றாமை!

இரண்டு கரண்டி கஞ்சியில் இத்தனை நாள் உயிரை நீட்டிக்கொண்டிருந்த கமலம், இன்று அரை கிண்ணம் வரை உண்டுவிட்டது நிம்மதியை கொடுத்தது. என்னதான் மாமியார் என்றாலும், ஒருநாளும் அவர் அந்த பதவியில் நின்று நடந்ததில்லை.  அமைதியான, அதிகம் பேசாத குணம்! அவர் அதிகமாய் பேசுவது தேவகியிடம் மட்டும் தானென வேலையாட்கள் சொல்ல கேட்டிருக்கிறார்.

தேவகி வீட்டை விட்டு போன சமயத்தில், பரமுவுக்கும் சரி, சத்தியனுக்கும் சரி… திருமணம் ஆகியிருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!