தித்திக்கும் நிலவு -4
வீட்டிற்குள் வந்து நடு கூடத்தில் நின்றிருப்பவனை பார்த்த அவ்வீட்டினர் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்ச்சி. அம்மையப்பரும், ராகவனும் கோவமாக பார்த்தார்கள் என்றால் பாக்கியலட்சுமி பாசத்துடன் பார்த்தார்.
முகிலன் ‘என் மேல இருக்க கேஸ் போதாதுன்னு இவன் வேற வந்து நிக்குறானே‘ என நினைக்க, சுசீலாவோ ‘இன்னைக்கு விடிஞ்சது சரியில்லையோ எல்லாம் வில்லங்கமாவே நடக்குதே‘ என்று நினைத்தாள்.
இவர்கள் அனைவரையும் விட அதிர்ச்சியில் உறைந்து தனி ஒரு உலகினில் நின்றிருந்தாள் இளமதி. வந்திருப்பது தன்னவன் தானா? எதற்கு வந்திருக்கிறான் இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது ஏன்? பல கேள்விகள் மனதில் உதயமானாலும் நடப்பது கனவோ என நினைத்து கைகளை வேறு கிள்ளிக் கொண்டாள்.
வீட்டினர் அனைவரின் பார்வையும் தன் மீது இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அம்மையப்பரை மட்டுமே முறைத்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
Advertisement
வந்திருந்தது இளங்கோ தான். ராகவன் வேகமாக வந்து இளங்கோவின் சட்டையை பிடிக்க பார்க்க அதற்குள் முகிலன் இளங்கோவின் முன் வந்து மறிப்பது போல் நின்று கொண்டான்.
“டேய் நீ தள்ளுடா நம்ம வீட்டுக்குள்ள வந்தது மட்டுமில்லாம நம்ம முன்னாடியே அப்பாவ முறைச்சு வேற பாக்குறான், இவன சும்மா விடனுமா?“ என்று முகிலனை பார்த்துக் கேட்டான்.
“நீயும், அப்பாவும் கூட தான் அவன பாத்து முறைக்குறீங்க அதுக்கு என்ன பன்ன?“ என்று அண்ணனை கேட்டான்.
Advertisement
முகிலனுக்கு பதில் சொல்லாமல் “நீ எதுக்கு எங்க வீட்டுக்கு வந்த“ என்று இளங்கோவிடம் எகிறினான்.
Advertisement
“சொல்றேன் மச்சான், சொல்லாம எங்க போக போறேன்“ பொறுமையாக சொன்னான் இளங்கோ அவனின் பொறுமை ராகவனை சீண்ட மீண்டும் அவன் மேல் பாய போனான் முகிலன் தான் பிடித்துக் கொண்டு “அவன் என்ன பாக்க தான் வந்துருக்கான்…. என்ன தேடி நம்ம வீட்டுக்கு வந்தவனை கிட்ட நீ இப்படி தான் நடந்துப்பியா?“ என்று அண்ணனை பார்த்துக் கேட்டான்.
ராகவனிற்கு அகரனையும், அந்த குடும்பத்தையும் தான் பிடிக்காதே தவிர மற்றபடி நல்லவன். தந்தையின் சொல் ஒன்றே பிரதானம் என்று இருந்தாலும் தம்பி, தங்கை மீது மிகுந்த பாசம் உள்ளவன். அதனால் தான் முகிலனின் வார்த்தையில் நிதானம் காத்தான். அது தெரிந்து தானே முகிலனும் சொன்னது.
ஆனால் இளங்கோவோ, ராகவனின் பொறுமையை சோதிக்க வேண்டுமென்றே “இல்லடா நான் உங்க அப்பாவ தான் பாக்க வந்தேன்.. அவருகிட்ட தான் நான் பேசனும்“ என்றுவிட்டு அம்மையப்பரிடம் திரும்பி “என்ன பேசுவோமா?“ என்றான்.
Advertisement
போட்டியின் இரு தினங்களுக்கு முன்பு நடந்ததை மனதில் நினைத்த படி அம்மையப்பரை நேர் பார்வை பார்த்தான்.
நான்கு தினங்களுக்கு முன்பு
அருகில் உள்ள கிராம தலைவரின் தோட்ட வீட்டில் 10 கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருந்தனர். கூடியது என்னவோ ஊர் முன்னேற்றத்தை பற்றி பேச தான். என்ன என்ன செய்யலாம் என்பதை பற்றி பேசி முடித்து விட்டு அஞ்சனூர் கிராம தலைவர் ஆரம்பித்தார்.
“என்ன அம்மையப்பா இந்த திருவிழாவுக்காது உனக்கு முதல்ல மரியாதை செய்வாங்களா இல்ல இந்த தடவையும் வாத்தியாருக்கு தானா?“ எனக் கேட்டார்.
மற்றொருவரோ, “அது தெரிஞ்ச கதை தான எப்பவும் வாத்தியாருக்கு தான முதல்ல மரியாத“ என்றார்.
“எந்த ஊருலையும் இல்லாத கூத்து உங்க ஊருல மட்டும் தான் நடக்கும் அம்மையப்பா, நீ எப்படி தான் இதுலா தாங்கிட்டு இருக்கியோ, எங்க ஊரா இருந்துருக்கனும் நடக்குறதே வேற“ என்று அம்மையப்பரை மேலும் தூண்டிவிட்டனர்.
ஏற்கனவே ஊர் மக்கள் அனைவரும் தன்னை விட சேனாதிபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவருக்கு பிடிக்கவில்லை. மற்ற ஊர்களில் தலைவர் என்றால் எவ்வளவு மதிப்பும், மரியாதையும் உள்ளது. அந்த மதிப்பும், மரியாதையும் தன்னை விட சேனாதிபதிக்கே அதிகம் தருவதாக அவர் நினைக்கிறார். அது உண்மையும் கூட. இப்போது மற்ற ஊர் தலைவர்கள் அனைவரும் அம்மையப்பரின் கோபத்திற்கு தூபம் போட்டனர். இப்போது அம்மையப்பரிடம் பேசும் அனைவரும் சேனாதிபதி முன்னால் வாயைக் கூட திறக்காமல் அவர்களும் மரியாதையாக தான் நடந்து கொள்வார்கள் என்பது பாவம் அவருக்கு தான் தெரியவில்லை. இந்த தடவை விட்டு விடக் கூடாது என்று சில திட்டங்களை தீட்டினார்.
அதன்படி கூட்டம் முடிந்ததும் தன் ஆட்களை வைத்து சேனாதிபதியின் சிலம்ப பயிற்சி பள்ளிகளை சேதபடுத்த ஆணையிட்டார். அவர் அதனை சரிசெய்யும் போது அவரின் வயலினை சேதப்படுத்தி சேனாதிபதி திருவிழாவின் போது ஊரில் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் என திட்டமிட்டார். அவரின் ஆட்களில் ஒருவன் இளங்கோவின் உடன் பணிபுரியும் நண்பரின் உறவினன். அதனால் அந்த திட்டங்கள் அனைத்தும் இளங்கோவிற்கு தெரிந்து விட்டது. அன்றே நேரடியாக வந்து அம்மையப்பரின் சட்டையை பிடித்து விட்டான்.
“என்ன நினைச்சுட்ட இருக்கிங்க நீங்க? இந்தனை நாள் போன போகுதுன்னு விட்டா என்ன வேனா பன்னலாம்னு நினைப்பா? சிலம்ப ஸ்கூல் மேலயும், வயல் மேலயும் கைய வைச்சு பாருங்களேன் அகரன் உங்கள சும்மா விட்டுருவானா?“ என்று அவரிடம் சண்டையிட்டான்.
அவன் கூறியதை கேட்ட அம்மையப்பருக்கு அப்போது தன் செயலின் வீரியம் புரிந்தது அதற்காக விட்டுக் கொடுக்க முடியாதே “ஆமாடா அப்படி தான் பன்னுவேன் என்ன பன்னுவ நீ?“ என்றார்.
“எங்க அப்பா என்ன பன்னிட்டாரு அப்படி உங்கள? என கேட்டதற்கு, “என்ன பன்னல எனக்கு கிடைக்க வேண்டிய மொத்த மரியாதைவும் உங்க அப்பாக்கு தான கிடைக்குது? கொத்திப்புடன் சொன்னார்.
“ அது அவங்க அவங்க நடந்துக்குற விதத்துல இருக்கு, எங்க அப்பாவ பிடிக்காமலேயே இருந்தாலும் நேர் வழியில மோதனும், எதுக்கு இந்த குறுக்கு புத்தி உங்களுக்கு?“ என்று சூடாக கேட்டான்.
“நீ சொல்ற மாதிரியே நேர் வழில வர்றேன் வர சிலம்ப போட்டியில என் புள்ள ஜெயிச்சுட்டா திருவிழாவுல எனக்கு தான் முதல் மரியாத செய்யனும் சம்மதமா உனக்கு“ என்று கேட்டார்.
யோசித்துக் கொண்டே “சரி நீங்க சொல்ற மாதிரியே நானும் ஒத்துக்குறேன்… உங்க புள்ள தோத்து எங்க அகரன் ஜெயிட்டா என்ன பன்னலாம்?“ என்று கேட்டான்.
அவர் பதில் சொல்வதற்குள் “நான் சொல்றது நீங்க செய்யனும்“ என்றான்.
“என்ன?“ என்றவரிடம், “நாங்க ஜெய்சிட்டா திருவிழவுல உங்களுக்கு இந்த தடவை மரியாத செய்ய வேணான்னு சொல்லனும் அது மட்டும் இல்லாம எங்க அப்பாவுக்கு உங்க கையாலயே மரியாத செய்யனும் சம்மதமா?“ என்று கேட்டான்.
“என்ன விளையாடுறியா?“ அவர் கோவமாக கேட்க, “நீங்க சொன்னதுக்கு நான் ஒத்துக்கிட்டேனே“ என்றான்.
பின்பு அவரும் மகன் மேல் உள்ள நம்பிக்கையில் ஒத்துக் கொண்டார்.
நடந்தவை அனைத்தும் கண் முன்னே வலம்வர இளங்கோவை தான் எரித்து விடுவதை போல் பார்த்தார்.
அவர் முறைப்பதை பொருட்படுத்தாமல் “இன்னிக்கு சாயங்காலம் சொன்னது மாதிரியே செய்றீங்க, இல்ல நடக்குறதே வேற“ என்று மிரட்டுவது போல் கூறிவிட்டு முகிலனிடம் திரும்பி தலையை மட்டும் அசைத்து விட்டு சென்று விட்டான்.
******
அகரன் வயலில் இருந்தான். அவன் அருகில் நின்றிருந்த வயலில் வேலை செய்பவர்களிடம் அடுத்த வாரம் விற்பனை செய்விருக்கும் தக்காளி, மிளகாய் மற்ற வகைகளை பற்றியும், தற்போது போட்டிருப்பவற்றை பற்றியும் பேசிக் கொண்டிருந்தான். அப்போது இளங்கோ அங்கு வந்தான்.
இளங்கோவை பார்த்த அகரன் “நீ இன்னைக்கு வேலைக்கு போகல“ என்றான். இளங்கோ அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறான். அகரனை முறைத்துக் கொண்டே “11 மணிக்கு என்ன வரசொன்னியே அதான் வந்தேன்“ என்றான்.
“சரி வா“ என்று அவனை அழைத்துக் கொண்டு இளங்கோவின் பள்ளிக்கு சென்றான். 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இளங்கோ அறிவியல் பாடம் எடுப்பான். அந்த வகுப்பு ஆசிரியரும் அவன் தான். இந்த வருடம் நடக்கும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பள்ளி மாணவர்களையும் பங்கெடுக்க வைக்க தலைமை ஆசிரியரிடம் பேசினான். அவர் ஒத்துக் கொள்ளவில்லை மறுத்துவிட்டு படிப்பை மட்டும் பாரக்க சொன்னார். அதனால் தான் அகரனிடம் சொல்லி மாணவர்களாக பேச சொன்னான். அதில் வெற்றி பெற்றால் சென்னையில் நடைபெறும் அறிவியல் கருத்தரங்கிற்கு மாணவர்கள் செல்லலாம். இது மாணவர்களுக்கு மிக பெரும் வாய்ப்பாக அமையும். அதன் பின் அகரன் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பேசி சம்மதம் வாங்கி விட்டான். தற்போது தலைமை ஆசிரியரை பார்த்து பேச தான் செல்கிறார்கள். அவரிடம் பேசி வேலையை முடித்து விட்டு மீண்டும் வயலுக்கு சென்று விட்டான்.
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று திருவிழா காலையில் அனைவரும் பொங்கல் வைத்து வழிபட்டு விட்டு மாலை மொளப்பாரி எடுத்துச் செல்வது வழக்கம்.
ஊரில் உள்ள அனைவரும் கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அகரன், இளங்கோ, முகிலன் அனைவரும் கோவிலில் வேலை செய்து கொண்டிருந்தனர். ராகவன் தந்தையுடன் இருந்தான். சேனாதிபதியை அகரனும், இளங்கோவும் எந்த வேலையும் செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களே பார்த்து கொண்டனர். முகிலனும் உடன் இருந்ததால் அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொண்டனர்.
அகரனும், இளங்கோவும் கோவிலுக்குள் அனைத்தையும் மேற்பார்வை செய்ய முகிலன் வெளியில் பார்த்துக் கொள்வதாய் சொல்லி சென்றான். அவன் சென்றதும் அகரன் இளங்கோவிடம் “நீ எதுக்கு மதி வீட்டிக்கு போன?“ என்று கேட்டான்.
“ஏன் போக கூடாதா? அது என் நண்பன் வீடுடா“ என்று அகரனின் முகத்தை பார்க்காமல் பேசினான். “என்கிட்ட எதையாவது சொல்லாம மறைக்கிறியா இளா“ என கேட்டான்.
அகரனிடமிருந்து இளா என்ற அழைப்பு எப்போது வரும் என்பது இளங்கோவிற்கு தெரியும் என்பதால் பதில் சொல்லாமல் மௌனமாய் பார்த்தான். “நீ காரணம் இல்லாம என்கிட்ட சொல்லாம இருக்க மாட்டன்னு தெரியும்“ என்று இளங்கோவை இளகுவாக்கினான். அது வரை அகரனிடம் சொல்லவில்லையே என மனதில் உறுத்திக் கொண்டு தான் இருந்தது. தற்போது அவனது புரிதலில் அது நீங்கியது. புன்னகைத்து கொண்டே “சரி“ என்பதாய் தலை அசைத்தான் இளங்கோ.
மாலை நெருங்க நெருங்க அகரனின் முகம் மலர்ந்து கொண்டே இருந்தது. எப்போதையும் விட கூடுதல் மகிழ்ச்சி.
இளங்கோ கூட “என்னடா இன்னைக்கு முகத்துல ரொம்ப பல்ப் எரியுதே“ என கேட்டான். சீண்டினால் விளையாட்டாய் முறைப்பவன் தற்போதும் புன்னகையே பதிலாய் தர “என்னமோ இருக்குடா“ என்றான் சிரித்துக் கொண்டே.
அகரனிற்கோ மனதில் கோடி மத்தாப்பு. ஒவ்வொரு வருடமும் அந்த நாள் அவனின் மனம் முழுவதும் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். காரணம் அவன் அறியாதது இல்லை. அன்று தான் அவன் ஆதிராவின் மீது தனக்கு காதல் இருக்கிறது என்பதை உணர்ந்தான். அதை உணர்ந்த போது அதிர்ந்து தான் போனான். இது தவறு என்று தனக்குள் ஆயிரம் காரணம் கூறிக் கொண்டான். ஆனால் தற்போது வரை அன்றைய தினத்தை எண்ணி எண்ணி மகிழாமல் இருக்க முடியவில்லை.
கோவிலில் ஊர் முழுவதும் கூடியிருந்ததாலும் அவன் விழிகளோ தன்னவளை காணத் தான் தவமிருந்தது.
…தித்திக்கும்…
