Skip to content
Post Views: 2,512
மேகம் மறந்து, மறுத்து நிற்கும் வெளிர் வானமாய் நீ
உன் மேகச்சிறகுக்குள் இளைப்பாற தவிக்கும் வெண்ணிலவாய் நான்
அவன் என்னை விட்டு விலகி நின்ற நாட்களில் ஒரு நாள் நான் சித்தாராவின் வீட்டு அருகிலுள்ள அவளது ஆராய்ச்சி கூடத்தில் இருந்த போது
“என்ன ரிசர்ச் பண்றே நீ?” கேட்டேன் அவளிடம்.
Advertisement
“உனக்கு புரியற மாதிரி சொல்லணும்னா, ஆர்டிஃபிஷியல் இன்செமினேஷன். செயற்கை கருத்தரிப்பு முறை. இதிலே பிறவி குறைபாடு எல்லாம் வராம இருக்க என்ன செய்யலாம் அப்படிங்கிறதுக்கு ஒரு ரிசர்ச். நானும் இன்னும் ரெண்டு மூணு டாக்டர்ஸ் சேர்ந்து பண்றோம்”
“இங்கே உனக்கு அசிஸ்டன்ட்ஸ் கூட இருக்காங்க போலிருக்கே?”
“ஆமாம் ரெண்டு பேர் இருக்காங்க”
Advertisement
“சரி ரிஸர்ச்ன்னா என்ன செய்வீங்க?” அன்றைக்கு பொழுது போகாமல் குடைந்துக்கொண்டிருந்தேன் அவளை..
Advertisement
“அதுக்கு சில ஆண்களோட விந்தணுக்களை வாங்கி சேமிச்சு வெச்சிருக்கோம். அதிலே பிறவி குறைபாடுகளோட குழந்தை பிறக்காம இருக்க, என்ன விதமான மாற்றங்களை பண்ணலாம்ன்னு ட்ரை பண்றோம். உனக்கு தெரியுமா ஷ்யாம் கூட கொடுத்திருக்கான் ரிசர்ச்க்காக” அடுத்து வரும் விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லியே விட்டிருந்தாள் சித்தாரா.
இந்த செய்தியை கேட்டு சற்று ஸ்தம்பித்து போனேன் நான். அவளிடம் பிடிவாதம் பிடித்து அதை பார்த்தும் விட்டேன். அது இருக்குமிடம் அதன் அடையாளம் எல்லாம் அவளிடமிருந்து தெரிந்துக்கொண்டேன்.
அதன் பின்தான், அவனும் அவனது இசையுமே வாழ்க்கை என பைத்தியமாய் கிடந்த எனது மனம் சுழல ஆரம்பித்தது.
Advertisement
இனி அவனை பார்ப்பதும், பேசுவதும் அவனுடன் இசைப்பதும் இயலாத காரியம் என்று அருதியிட்டு கூறியது என் மனது. அவன் இல்லையென்றாலும் அவனது குழந்தையாவது வேண்டுமென கூவியது அது.
‘எத்தனை அழகாக இருக்கும் அவனது குழந்தை?” நினைக்கும் போதே சந்தோஷ பூக்கள் எனக்குள்ளே.
‘அவனை போலவே இருக்கும். அவனைப் போலவே சிரிக்கும்தானே? அதுவும் அருமையாக பாடும்தானே?’ அந்த கடைசி எண்ணம் எனக்குள்ளே பேரானந்த ஊற்றை விதைத்தது. .
பல ஆயிரம் கற்பனைகள் எனக்குள்ளே.
“அந்தக் குழந்தையை பெற்று வளர்த்து, படிக்க வைத்து பாட வைத்து..” இரண்டு மூன்று நாட்களுக்குள் எனது கற்பனைகளும், ஆசைகளும் பன்மடங்கு பெருகிப்போயிருந்தன.
காலம் முழுவதும் எங்களது குழந்தையுடனேயே, அந்தக் குழந்தையில் அவனை பார்த்துக்கொண்டே என்னால் உயிர் வாழ்ந்துவிட முடியும் என்று தோன்றியது.
இது தவறு, எத்தனை ஆபத்தான விஷயம் என்று எச்சரித்துக்கொண்டே இருந்த அறிவு, மனதின் தாக்கத்தால் முடக்கப்பட்டது.
“இது அவனுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?” கேள்வி கேட்டது அறிவு.
“தெரிய வேண்டாம். அவனுக்கு எதற்கு தெரியவேண்டும்?” பதில் சொன்னது மனது.
கடைசியில் எந்த ஒரு பெண்ணும், குறிப்பாக என் வயதில் இருக்கும் அதுவும் திருமணமாகாத எந்த பெண்ணும் கனவிலும் எடுக்கத்துணியாத முடிவை நான் எடுத்தேன்.
சித்தாரா இதற்கு கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அந்த நேரம் அவள் ஒரு மாதம் டெல்லி செல்ல வேண்டி வர அந்த நேரத்தை நான் பயன் படுத்திக்கொண்டேன்.
அவளது உதவியாளராக இருந்த ஒரு பெண்ணைப் பிடித்தேன். நான் அங்கே அடிக்கடி செல்வதால் அவள் எனக்கு பழக்கம் ஆகியிருந்தாள். நான் செய்ய நினைத்தது அத்தனை எளிதான விஷயமும் இல்லை, சட்டபடி அத்தனை சரியான விஷயமும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்தது.
நான் பாடி இசைத்து சம்பாதித்து வைத்திருந்த தொகையில் ஒரு லட்சம் வரை கரைந்தது. ஆனால் அது சில பல மாயங்களை செய்தது. அதன் உதவியால், பல வலிகளை கடந்து, அதன் பிறகு எவரும் அறியாமல் அடுத்த சில நாட்களில் அவனது குழந்தை எனது வயிற்றில் இடம் பிடித்திருந்தது.
அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு வலம் வந்து கொண்டிருந்த மிக சாதாரண பெண்ணான எனக்கு எங்கிருந்து இத்தனை தைரியம் வந்தது என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை. கேள்வி கேட்க அம்மா இல்லாத தைரியமா தெரியவில்லை.
நடந்தவைகளை கண்டுபிடிக்க சித்தாராவுக்கு அடுத்த ஒரு மாதம் ஆகியிருந்தது. அது வரை நான் அவள் கண்ணில் கூட படவில்லை. அதற்குள் நான் என் வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு பள்ளியில் இசை ஆசிரியை வேலையும் தேடிக்கொண்டிருந்தேன்.
விஷயம் முழுவதுமாக தெரிய வந்த பிறகு வெடித்தாள். அவளிடம் வேலை பார்த்த அந்த உதவியாளர்களை வேலையை விட்டு நிறுத்தினாள்.
“என்னடி பண்ணி வெச்சிருக்கே நீ? கல்யாணம் ஆகாத பொண்ணு இப்படி ஒரு நிலையிலே நின்னா எல்லாரும் உன்னை எப்படி பேசுவாங்க தெரியுமா? இந்த காலத்திலே எந்த ஒரு பொண்ணும் இப்படி இருக்க மாட்டா. ஒவ்வொரு பொண்ணும் என்னென்ன பண்ணி இந்த உலகத்திலே சாதிச்சிட்டு இருக்காங்க தெரியுமா? நீ இப்படி எமோஷனலா யோசிச்சு உன் வாழ்கையை கெடுத்து வெச்சிருக்கியே. இவ்வளவு பெரிய முட்டாளா நீ? “ என்னை அழைத்து உலுக்கினாள்.
“நீ பண்ணது சட்டபடி எத்தனை பெரிய குற்றம் தெரியுமா? அவன் ஆராய்ச்சிக்குன்னு கொடுத்ததை நீ மிஸ் யூஸ் பண்ணியிருக்கே. அவன் கேஸ் போட்டா உன்னோட சேர்ந்து நானும் தண்டனையை அனுபவிக்கணும்” என்னை அழைத்து உலுக்கினாள். கத்தினாள், சண்டையிட்டாள்.
நான் பதில் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தேன். “நான் செய்தது மிகப்பெரிய தப்புதான் என்பது கண்டிப்பாக தெரியுமெனக்கு”
“கடைசியில் என்னடி இப்படி பண்ணிட்டே? ஏதாவது கொஞ்சம் தப்பா போயிருந்தா கூட செத்து போயிருப்பேடி நீ ” எனக் கதறி அழுதாள்.
“போனா போயிட்டுப் போறேன்” என நான் சொல்ல பளாரென அறைந்தாள் என்னை.
இத்தனை களேபரத்துக்கு நடுவிலும், நான் எது நடந்தாலும் எனது குழந்தையை மட்டும் விட்டுத் தருவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.
“சரி நடந்தது நடந்திடுச்சு. நான் அவன்கிட்டே பேசறேன்” சொன்னாள் சித்தாரா.
“எப்படி நம்புவான் சித்தாரா?” கேட்டேன் நான். “நான் அவனிடத்தில் இருந்தா கூட நம்ப மாட்டேன்”
அவள் விக்கித்துப்போய் என்னை பார்த்தாள்.
“என்னை நம்பாம தப்பா ஒரு கேள்வி கேட்டுடான்னா அதுக்கு அப்புறம் என்னாலே ஷ்யாம் முகத்தைக் கூட பார்க்க முடியாது இல்லையா சித்தாரா?”
……………….
“அப்படியே நம்பினாலும் நான் உன்னை வேண்டாம்னு சொன்ன பிறகும் எனக்கு செக் வெச்சிட்டே இல்லன்னு கேட்க மாட்டானா நீயே சொல்லு” கேட்டேன் நான்.
பதிலில்லை அவளிடத்தில்.
“அப்படியே என்னை கல்யாணம் பண்ணாலும் என்னோட முழு மனசா வாழ முடியுமா அவனாலே நீயே சொல்லு?”
“அப்போ என்னதான் சந்தியா உன்னோட முடிவு?”
“நான் வேறே யாரையும் நம்பி இந்த குழந்தையை ஏத்துக்கலை சித்து. என்னை மட்டும் நம்பித்தான் ஏத்துக்கிட்டேன். எத்தனையோ சிங்கிள் மதர்ஸ் இல்லையா? அது மாதிரி நானும் என் குழந்தையை வளர்த்திடுவேன்” உறுதியாக சொன்னேன் அவளிடம்.
அவளால் நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை. அதற்கு மேல் இதனால் என் உயிருக்கு எதுவும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயமும் அவளை சூழ்ந்திருந்தது.
அதற்கு மேல் என்னை வேறே எங்கேயும் போக அனுமதிக்கவில்லை அவளால். இன்றோடு என் குழந்தை என் வயிற்றில் உதித்து ஐந்து மாதங்கள் ஆகியிருக்கின்றன. இந்த ஐந்து மாதங்களும் அவள் என்னை ஒரு கவசம் போல் காத்திருக்கிறாள்.
அவள் வீட்டிலிருந்து தினமும் நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு என்னை காரில் கொண்டு விட்டு திரும்ப அழைத்து வந்து கொண்டிருக்கிறாள். இந்த நிமிடம் வரை அவள் தாய் தந்தைக்கு கூட இந்த விஷயம் தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நான் முன்பு சொன்னதுதான். ஆரம்பம் முதலே எப்போதும் எனக்காகவே யோசித்து, எனக்காகவே தவித்து, எனக்காகவே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வது அவள் தலைவிதி. இதிலிருந்து அவள் தப்புவதற்கு வழியில்லை.
நான் செய்த அந்த செயலால் அவளது ஆராய்ச்சிகளை கூட ஏதேதோ காரணங்கள் சொல்லி தள்ளி வைத்திருக்கிறாள்.
பாவம் அவள்! இதற்கெல்லாம் பதிலாக அவளுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.
“ஏதாவது சாப்பிடறியா பாப்பா?”. ஏதேதோ நினைவுகளிலிருந்து என்னை கீழிறக்கினான் ஷ்யாம்.
மரங்கொத்தி பறவைகளும், அவ்வபோது எட்டிபார்க்கும் குரங்குகளும் நிறைந்திருந்த காடுகளை தாண்டி, ஆளில்லா ஒரு கடல்பகுதிக்கு நாங்கள் வந்திருந்தோம்.
அன்று அந்தத் தீவில் கூட்டம் அதிகமில்லை. நானும் அவனுமே அந்த முழு தீவுக்கும் சொந்தக்காரர்கள் என்பது போல் ஒரு உணர்வு. அந்த கடற்பகுதியின் கற்களாலான கரையில் அமர்ந்தோம்.
‘இங்கே என்ன சாப்பிட இருக்கு?”. அவன் முகம் பார்த்து நான் கேட்டேன். பசி என் வயிற்றையும் எனது மகனையும் சேர்த்து வாட்டிக்கொண்டுதான் இருந்தது.
“நிறைய ஸ்நாக்ஸ் கொண்டு வந்திருக்கேன்”. என அவனது பேக் பேகை பிரித்தான் ஷ்யாம்.
பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பழங்கள், பழச்சாறு என அவன் கொண்டு வந்தவைகளில் தேடித்தேடி அவசரம் அவசரமாக சாப்பிட்டேன். அவன் என்னையே வாஞ்சையுடன் பார்த்திருக்க
“இப்போவெல்லாம் ரொம்ப பசிக்குது ஷ்யாம்” என்றேன் நான்.
“ஏன்டா?” அவன் குரலில் அத்தனை வாஞ்சை.
சட்டென அவன் கரம் எடுத்து என் வயிற்றில் வைத்துக்கொண்டு எல்லா உண்மைகளையும் அவனிடம் சொல்லிவிட துடித்தது எனக்கு. கண்களில் நீர் கூட சேர்ந்திருந்தது.
“தெரியலை. என்னமோ தெரியலை”
“சரி என்ன வேணுமோ சாப்பிடு” என் தலையை மெல்ல வருடிக்கொடுத்தான் ஷ்யாம்.
அந்த நொடியில், சரியாக அந்த நொடியில் எங்களுக்கு கொஞ்சம் தள்ளியிருந்த சாலையில் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனர் தனாவும், சாருவும். ஷ்யாம் சற்றே திரும்பினால் அவர்களை பார்த்துவிடலாம். தலை முதல் கால் வரை பதறியது எனக்கு.
சடக்கென அவன் கரத்தை இழுத்து என் கைகளுக்குள் பொத்திக்கொண்டு, அவனோடு ஒட்டிக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டு அவன் பக்கவாட்டு தோளில் முகம் புதைத்துக்கொண்டேன். படபடவென எனது இதயம் துடிப்பது எனக்கே கேட்டது.
புதியதாய் ஒருவரை பார்த்தவுடன், அவரை பார்த்து பயந்து, எங்கே அவர் அன்னையை விட்டு தன்னை பிரித்து விடுவரோ என அன்னையுடன் ஒட்டிக்கொள்ளும் குழந்தையின் நிலையாக இருந்தது என் நிலை.
error: Content is protected !!