Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தூது செ(சொ) ல்லாயோ மெல்லிசையே

தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 08_02

காற்றின் வேகம் படகின் வேகத்தில் தெரிய, எனக்குள்ளும் கலவையான உணர்வுகளின் சுனாமி. எல்லாவற்றையும் உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு

“நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன் ஷ்யாம். டோன்ட் வொர்ரி” என்றேன் மெதுவாக. அவனறியாமல் எனது கரம் எனது வயிற்றை மெல்ல வருடிக்கொடுத்தது. உள்ளே இன்னமும் அசைவில்லை.

“உள்ளே என்னடா பண்றே கண்ணா? ஒரு தடவை அம்மாவை கூப்பிடேன்” கெஞ்சினேன் எனது குழந்தையிடம். எனது கண்ணின் ஓரம் ரகசிய நீர்த்துளி. பார்வையை கடலின் மீது வைத்துக்கொண்டேன் நான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் எங்கள் ஹோட்டலை அடைந்திருந்தோம் நாங்கள். சாருவும், தனாவும் எங்களுடனே வந்திருந்தார்கள்.



Advertisement

“ஏதாவது சாப்பிடலாம் வா பாப்பா” என்னை உணவகத்துக்கு அழைத்தான் ஷ்யாம்.

“இல்ல நீங்க சாப்பிடுங்க நான் ரூமுக்கு போறேன்” சொல்லிவிட்டு அறைக்கு வந்து சேர்ந்திருந்தேன். அங்கே சங்கீதாவும் இல்லை. நான் மட்டும் தனியே கட்டிலில் சாய்ந்தேன். எனக்குள்ளே எந்த அசைவும் இல்லை.

‘என்ன நடக்கிறது எனக்குள்ளே?. நான்தான் தேவையின்றி கவலைப்படுகிறேனா? அல்லது கவலைப்படும்படி ஏதேனும் நிஜமாகவே நடந்துவிட்டதா?’ தெரியவில்லை எனக்கு.

Advertisement

சித்தாராவை அழைத்துவிடலாம் என்றுதான் தோன்றியது. அதே நேரத்தில் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் அமர்ந்திருப்பவளை தேவை இல்லாமல் குழப்பி விடவும் மனமில்லை. இன்னும் ஒரு அரை மணி நேரம் பார்க்கலாம் என்று தோன்றியது.

Advertisement

“கண்ணா ப்ளீஸ்டா கண்ணா”

எழுந்து அறையில் இங்குமங்கும் நடக்கத் துவங்கினேன் நான். அதனால் ஏதும் பலன் இருக்கலாம். கால் மணி நேரம் நடந்தும் பயனில்லை. பயத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தது.

கைப்பைக்குள் இருந்த உலர் பழங்கள், பாதாம் பருப்பு, என சிலவற்றை சாப்பிட்டு பார்த்தேன். அரை மணி நேரம் படுத்துக்கிடந்தேன் பலனில்லை.

Advertisement

அடிவயிற்றில் வலிக்க ஆரம்பித்தது. கண்களில் மொத்தமாக நீர் கட்டிக்கொண்டது.

“ஏதோ தவறாக நடந்துவிட்டது” என்றே எனது மனம் உறுதி செய்தது.

“ஆண்டவா” என அழைத்தபடியே எழுந்து அவசரமாக கைப்பேசியை எடுத்து சித்தாராவை நான் அழைக்க நினைத்த நேரத்தில் தட்டப்பட்டது அறைக்கதவு.

கண்களை துடைத்துக்கொண்டு சென்று நான் கதவைத் திறக்க, வாசலில் நின்றிருந்தான் ஷ்யாம். அவர்கள் இருவரும் விடைப் பெற்றுக்கொண்டு சென்றிருக்க வேண்டும்.

“என்ன பாப்பா இங்கே வந்திட்டே. பசிக்கலையா? லஞ்ச் எதுவுமே சாப்பிடலையே நீ? ஏன் தனியா இங்கே வந்திட்டே? உடம்புக்கு எதுவும் முடியலையா?” அறைக் கதவை தாழிட்டுக்கொண்டே அவன் சற்றே உயர்ந்த குரலில் படபடக்க

எப்படி நடந்ததோ, அவன் குரலில்தான் அப்படி நிகழ்ந்ததோ தெரியவில்லை, எனது வயிற்றுக்குள் படபடபடவென அசைவுகள். சட்டென வயிற்றின் மீது கை வைத்துக்கொண்டேன் நான். மிகப்பெரிய ஆனந்த பிரவாகம் எனக்குள்ளே. கண்களில் சந்தோஷ கண்ணீர் வழிந்தது.

“என்ன பாப்பா வயிறு வலிக்குதா? ஏன் அழறே?” என்னை ஏற இறங்க பார்த்தபடியே அவன் கேட்க அடுத்த நொடி அவன் தோள்களில் சாய்ந்து தேம்பிக் கொண்டிருந்தேன் நான்.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஏன் கணவனின் அருகாமை அடிக்கடி தேவைப் படுகிறது என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. ஆனால் அவனுக்கு எதுவுமே புரிந்திருக்க நியாயமில்லை.

“என்ன பாப்பா?” என்றான் பதற்றமான குரலில்.

“ஒண்ணுமில்லை ஷ்யாம். பயப்படற மாதிரி எதுவுமில்லை, ஷ்யாம்.” நான் சொல்லிக்கொண்டிருக்க எனது கண்ணீர் அவனது சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.

“அப்புறம் ஏன் பாப்பா அழறே?” என்றபடியே என் முகம் நிமிர்த்தி என் கண்களுக்குள் பார்த்தான். “நீ சாரு பார்த்ததும்…..?”அவன் முடிக்கவில்லை

“இல்ல ஷ்யாம்.’ படபடத்தேன் நான். ‘எனக்கு உங்க மேலே லவ் எல்லாம் இல்லை. சத்தியமா ஷ்யாம். நான் பொய் சொல்லலை. இது வேறே” மறுபடி அவன் தோளில் சாய்ந்தேன். “கொஞ்ச நேரம் இப்படியே  இருந்துக்கறேன் ப்ளீஸ்.”

“அது இல்லன்னா வேறே என்னாச்சுடா?”

“நான் கீழே விழுந்ததும் ரொம்ப பயந்துட்டேன் ஷ்யாம். அதான்” சொன்னேன் நான். அவனுக்கு கண்டிப்பாக புரிந்திருக்காது.

இன்னுமும் கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது எனக்கு. அது சந்தோஷ கண்ணீர், நிம்மதியில் விளைந்த கண்ணீர்  என்பதை அவனுக்கு எப்படிப் புரிய வைக்க என்பது எனக்கும் தெரியவில்லை.

‘இதற்கே இப்படி அழுகிறாயே. நாளை தனியாளாக உனது பிள்ளையை எப்படி வளர்க்கக் போகிறாய்?” என்று கேலி செய்தது உள்மனது.

“அதெல்லாம் நான் நினைத்தால் முடியுமென்னால்” என அந்த எண்ணத்தை புறம் தள்ளினேன் நான். சில நொடிகள் கழித்து அவனை விட்டு விலகினேன்.

அவனது முகத்தில் குழப்ப  ரேகைகள்.

“உனக்கு நிஜமா உடம்பு ரொம்ப சரியில்லைன்னு தோணுது எனக்கு”

‘அதெல்லாம் இல்லை. ரொம்ப பசிக்குது. அதான்” துண்டை எடுத்து முகம் துடைத்துக்கொண்டு புன்னகைத்தேன் நான்.

இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு, வாயைத் திறந்து காற்றை உள்ளிழுத்துக்கொண்டபடியே  என்னை ஏற இறங்கப் பார்த்தான் ஷ்யாம்.

“பசிக்குது. ஏதாவது ஆர்டர் பண்ணுங்க ப்ளீஸ்”

“சரி இப்படி வந்து உட்கார்”. என்றபடியே கட்டிலில் அமர்ந்தான் ஷ்யாம். நானும் அவனருகில் அமர்ந்தேன்.

“சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு நீங்க உங்க ரூமுக்கு போங்க ஷ்யாம். யாரவது பார்த்தா ஏதாவது பேசுவாங்க “

“ஆமாம். இதெல்லாம் என்ன புதுசா? எல்லாரும் நிறைய பேசியாச்சு. நானும் நிறைய கேட்டாச்சு. விடு. உனக்கு சாப்பிட என்ன வேணும் சொல்லு,” என்றான் என்னை பார்த்து அன்பாக புன்னகைத்தபடியே.

நான் எனக்கு வேண்டியதை சொல்ல, “அதோட சேர்த்து ஒரு ஐஸ்கிரீம் சரியா?” என்றான் ஒரு குழந்தையிடம் பேசும் பாவத்துடன்.

“வேண்டாம் ஷ்யாம். ஜுரம் வந்தா வம்பு. அப்புறம் நாளைக்கு பாடவும் முடியாது”

“அப்போ மில்க் ஷேக் வித் அவுட் ஐஸ்கிரீம் ஒகேவா. பாப்பாக்கு பிடிக்கும்தானே” அவன் குரலில் இருந்த வாஞ்சை உயிர் வரை வருடியது.

“போதும். இந்த நான்கு நாட்களின் ஆனந்தம் வாழ்வனைத்துக்கும் போதுமெனக்கு”

“ஒகே” மகிழ்ச்சியின் உச்சத்தில் தலையசைத்தேன் நான்

“காலிலே அடிப்பட்டிருக்கு டி,டி ஊசி போடணுமாடா?” கேட்டான் அவன்.

நான் கிளம்பும் முன்னே அதையும் எனக்குள் செலுத்தித்தான் அனுப்பி வைத்திருந்தாள் சித்தாரா. இதன் பயன் மூன்று மாதங்கள் இருக்கும் என சொல்லியிருந்தாள் அவள். இப்படி ஏதாவது நடக்கும் எனத் தெரியும் அவளுக்கு.

“இல்ல ஷ்யாம். நான் கிளம்பறதுக்கு முன்னாடிதான் போட்டுட்டு வந்தேன். நீங்க சாப்பாடு ஆர்டர் பண்ணுங்க நான் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்திடறேன்” சொல்லிவிட்டு நான் பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டேன்.

நான் வெளியில் வரும்போது தனது சட்டையின் மீது மீதமிருந்த எனது கண்ணீரின் ஈரத்தை தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான் ஷ்யாம். நான் அவன் அருகில் வர

“இப்படி அழுதுட்டியே பாப்பா” என்றான் குரலில் ஏறியிருந்த வருத்தத்துடன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. எல்லாம் சரியாயிடுச்சு” என்றவள் “நீங்க எனக்காக கீ போர்ட்லே ஏதாவது பாட்டு வாசிப்பீங்களாம் நான் இன்னும் கூல் ஆகிடுவேனாம்”

இன்று நான் என்ன கேட்டாலும் செய்வான் என்றொரு தைரியம் எனக்கு.

தனது அறைக்கு சென்று அவன் கீ போர்டுடன் திரும்புவதற்கும் ஆர்டர் செய்த உணவுகள் அறைக்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

“முதல்லே சாப்பிடு பாப்பா. அப்புறம் பாட்டு”

‘நீங்க?”

“நான் கீழே ஸ்நாக்ஸ் ஒரு கட்டு கட்டிட்டுத்தான் வந்தேன். நீ சாப்பிடு” எனக்கு எல்லாவற்றையும் தட்டில் பரிமாறினான். நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்,

‘அட சாப்பிடு பாப்பா” என தலையில் குட்டினான் அவன். பேரானந்தம் எனக்கு.

நான் சாப்பிட்டு முடிக்க “இப்போ ரிலக்ஸ்டா படு “ என்றான் இதமாக.

“ரிஹர்சல் இல்லையா ஷ்யாம்?”

“இருக்கு. மத்தவங்க பண்ணட்டும். உனக்கென்ன நீ ரிஹர்சல் இல்லாமலே பாடுவே. நாம மார்னிங் பார்த்துக்கலாம். நேத்து நைட்டும் நீ தூங்கலை. இப்போ தூங்கு பாப்பா”

“நீங்க கீ போர்டு வாசிக்க மாட்டீங்களா ஷ்யாம் இப்போ?” எனது குரலில் அப்படி ஒரு ஏக்கம்.

“வாசிக்கறேன். கண்டிப்பா வாசிக்கறேன். நீ நிம்மதியா தூங்கு”

நான் கட்டிலில் சாய்ந்துக்கொள்ள, இரவு விளக்கின் ஒளியில் கீ போர்டில் விளையாடத் துவங்கின அவனது விரல்கள். நான் அவனை முதன் முதலில் சந்தித்த போது அவன் வாசித்த அந்தப் பாடலுடனே துவங்கினான் ஷ்யாம்.

அந்த அறையின் ஓரத்தில் இருந்த அந்த பெரிய கண்ணாடியின் வழியே இரவு நேர சிங்கப்பூர் ஒளிர்ந்துக்கொண்டிருக்க, அவன் கண்களை மூடிக்கொண்டு இசை உலகத்துக்குள் நுழைந்திருந்தான்.

அந்த அறை முழுவதும் இசை மழைத் தூறிக்கொண்டிருந்தது. நானும் எனது மகனும்  அதில் ஆசைத் தீர நனைந்துக் கொண்டிருந்தோம். என் மகன் அவனது தந்தையின் இசையை, வாசிப்பை  நேரடியாக கேட்பது இதுவே முதல் முறை.

அவன் அதைக் கேட்டு அசைந்தானோ, இல்லை அவனாகவே துள்ளிக் கொண்டிருந்தானோ தெரியவில்லை. ஆனால் நான் என்னை மறந்து உறக்கத்துக்குள் போகும் வரை தனது மகிழ்ச்சியை  எனக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தான் என் மகன்.

காலையில் .நான் எழும் போது மணி எட்டை நெருங்கியிருந்தது. சங்கீதா பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தாள். ஷ்யாம் எப்போது வெளியில் போனான், இவள் எப்போது உள்ளே வந்தாள் என்பது எதுவுமே அறியாத நிம்மதியான உறக்கம்.

நான் உடனே ஷ்யாமை அழைக்க ‘குட் ,மார்னிங்” மறுமுனை உற்சாகமாக சொன்னது. “செம தூக்கமா?”

“குட் மார்னிங் ஷ்யாம்” என்றேன் குளிர் குரலில் “நல்ல தூக்கம். தேங்க்ஸ் ஷ்யாம்.”

என்னுடைய .தேங்க்ஸ் அவனை என்ன செய்தது என்று புரியவில்லை. சில நொடிகள் மௌனம் அவனிடத்தில்.

“என்னாச்சு ஷ்யாம்?” நான் அவனை குரலால் உலுக்க

“ஒண்ணுமில்லை. இன்னும் அரை மணி நேரத்திலே ரெடியாகு. நாம ஆடிட்டோரியம் போலாம்” என்றான் அவன்.

காலை உணவை முடித்துக்கொண்டு நாங்கள் அரங்கத்தை அடைந்த நேரத்தில் அங்கே அந்த அதிர்ச்சி காத்திருந்தது எனக்கு.

அங்கே இன்னொரு இசையமைப்பாளரின் குழுவில் இருந்தாள் அவள். அவர்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருக்க அவர்களுடன் வீணை வாசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் நிரஞ்சனா.

அவள் வேறு யாருமில்லை. சித்தாராவின் ஆராய்ச்சி கூடத்தில் அவளுக்கு உதவியாளராக இருந்து, எனது மகன் எனது வயிற்றுக்குள் வர உதவினாளே அவளேதான். சித்தாராவுக்கு அடுத்ததாக, அவன் ஷ்யாம் மகன் என்பது முதற்கொண்டு அத்தனை விவரங்களையும் அறிந்தவள் அவள்.

அசைய மறந்து அவளையே பார்த்தபடி நின்றிருந்தேன் நான்.

சிங்கப்பூரின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றான ஸ்டார் தியேட்டரில் இருந்தோம் நாங்கள். அதன் பிரம்மாண்டத்தில் வியந்து நின்றிருந்தேன் நான். கிட்டதட்ட ஐயாயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம் அது.

“தி ஸ்டார் பெர்ஃபார்மிங் சென்டர்” எனும் பெயர் அலங்காரம் எங்களை வரவேற்றது. குளிர்சாதனத்தின் சிலீர் காற்று எங்களை ஊடுருவி சென்றது.

இதமான மெரூன் நிற பின்னணியில் நேர்த்தியான இரண்டு அரைவட்ட அடுக்குகளாக இருக்கைகள் அமைந்திருந்தன. கண்ணை உறுத்தாத அழகான மின் விளக்கு அலங்காரங்கள் என்னை கவர்ந்தன. மிகப் பிரமாண்டமான அந்த மேடையை ஒரு முறை ரசித்து விட்டு நகர்ந்தேன் நான்.

அங்கேயே ஒத்திகைககள் பார்த்துக்கொள்ள, உடை மாற்றிக்கொள்ள, தங்கிக்கொள்ள என அறைகள் இருந்தன. அப்படி ஒரு பகுதியில்தான் நடந்து கொண்டிருந்தது அந்த ஒத்திகை.

“கொல்லைத் துளசி எல்லைக் கடந்தால் வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா?”

தேன் குரலில் கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தார் அங்கே ஒத்திகையில் பாடிக்கொண்டிருந்த பாடகி. ஏதோ ஒன்று சுருக்கென தைத்தது என்னை.

சில நேரங்களில் நாம் மறைக்க நினைக்கும் சில விஷயங்கள் நம்மை விரட்டி விரட்டி தோற்கடிக்கும். ஒரு கட்டத்தில் நமது இயலாமையை பயன்படுத்தி அது ஜெயித்து விடும். அப்படி ஏதோ ஒன்று இன்று நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு எனக்கு உணர்த்த ஆரம்பித்தது.

 “பூவே பெண் பூவே..” வீணையில் பேசிக்கொண்டிருந்தாள் நிரஞ்சனா.

“அவள் எல்லாவற்றையும் சொல்லி விடுவாளோ?” ஒரு வித கலக்கத்துடன் வீணை வாசிப்பவளையே பார்த்திருந்தேன்.

“ஓய். என்ன இங்கேயே அப்படியே நின்னுட்டே?” என்னை கலைத்தான் அருகிருந்த ஷ்யாம்.

“இல்ல ஒண்ணுமில்லை”

“நீ எத்தனை ஒண்ணுமில்லை சொல்லுவேன்னு தெரியலை. ஆனா ஏதோ ஒண்ணு இருக்குன்னு மட்டும் எனக்கு புரியுது. நேத்து நீ அழுதது மனசு ஆறவேயில்லை பாப்பா.” அவன் கண்களில் இருந்த அன்பில் கண்டிப்பாய் நெகிழ்ந்தேன் நான்.

“நீ சந்தோஷமா இருக்கணும் பாப்பா. அதுக்கு நான் என்ன செய்யணும்?” அவன் கேட்க பதில் பேசாமல் அவன் முகம் பார்த்தேன் நான்.

“லவ் பண்ண மட்டும் சொல்லாதே பாப்பா” என்றான் தலை குனிந்து கொண்டு “வேறே எது வேணும்னாலும் கேளு”

“உங்க கூட மலரே மௌனமா பாடணும்”

“பாடினா சந்தோஷமா ஆகிடுவியா?”

“கண்டிப்பா”

“சரி வா”

அங்கிருந்து நகர்ந்து எங்கள் குழுவின் ஒத்திகை நடக்கும் இடத்துக்கு வந்தோம். தபலா. கீ போர்ட், வயலின், வீணை என சுற்றிலும் இருந்த இசைக்கருவிகள் எங்களை வரவேற்றன. அவை எனக்குள்ளே ஒரு மெலிதான சந்தோஷ ஊற்றை உருவாக்கின.

பல நாட்களுக்கு பிறகு பொது வெளியில் பாடப்போகும் மகிழ்ச்சியும் எனக்குள்ளே பொங்கியது. அங்கே கூடியிருந்தனர் எங்களது குழுவின் இசைக்கலைஞர்கள். என்னைப் பார்த்ததும் அங்கே சின்னதாய் ஒரு உற்சாக கூக்குரல்.

அங்கே இருந்த அனைவருமே தெரிந்த முகங்கள். பல நாட்கள் எங்களுடன் பணியாற்றியவர்கள்.

“ஆறு மாசம் ஆச்சு சந்தியாக்கா  உங்களை பார்த்து.” மகிழ்ச்சி ஆரவாரம் அங்கே

“இன்னைக்கு பாடப் போறியாமா?. நம்ம  சார் கூடவா? சந்தோஷம். ரொம்ப சந்தோஷம்“அவர்களுக்கு எல்லாம் பதிலாக எனது புன்னகை.

“எங்கே நீங்க இனிமே பாடவே மாட்டீங்களோன்னு நினைச்சேன். நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம். உங்க குரலை கண்டிப்பா கேட்கணும் சந்தியா”

“மலரே மௌனமா உண்டா அக்கா?”

“கண்டிப்பா உண்டு” இது ஷ்யாம்.

அவர்களிடம் உற்சாக கைத்தட்டல்கள். நாங்கள் இருவரும் இணைந்து எத்தனை பாடல்கள் பாடியிருந்தாலும் இந்தப் பாடலின் மேல் எல்லாருக்கும் ஏன் அத்தனை ஆர்வம் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

அவர்கள் என்னை வரவேற்பதையும், கொண்டாடுவதையும் ஒரு வித ரசிப்புடனே பார்த்திருந்தான் ஷ்யாம்.

வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு அவரவர்கள் தங்களுடைய இசைக் கருவிகளுடன் தயாராக அங்கிருந்த மைக்கின் முன்னால் இருந்த நாற்காலிகளில்  அமர்ந்தோம் நானும் ஷ்யாமும்.

முதலில் துவங்கியது நான் கடைசியாக இசையமைத்த அந்தத் திரைப்படத்தின் பாடல். கர்நாடக சங்கீத பாணியில் அமைந்த பாடல் அது. அதன் துவக்கமாக கீ போர்டில் எழுந்தது மெலிதான நாதஸ்வர இசை. அதன் இனிமையில் கிறங்கினேன் நான்.

மெலிதான ஒரு ஆலாபனையுடன் துவங்கும் அந்தப் பாடல்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பாடுகிறேன், அதுவும் வயிற்றில் குழந்தையோடு! . எனது குரலும், எனது உடலும் ஏன் சுவாசமும் கூட எனக்கு துணை வருமோ வராதோ எனும் தவிப்புடனேயே நான் துவங்க இயல்பாய் இசையோடு குழைந்து ஒலித்தது எனது குரல்.

“மேகம் பாடும் ராகங்கள். மழைத்துளியே தாளங்கள்”

நான் துவங்க எனதருகில் இருந்த ஷ்யாமின் உடலில் எழுந்த மெலிதான சிலிர்ப்பை என்னால் நன்றாக உணர முடிந்தது. வார்த்தைகளின் இடையிடையே நிறைய ஸ்வர ஜதிகள் நிறைந்த பாடலது. அவற்றை வெகு அனாயாசமாய் பாடிக்கொண்டிருந்தான் ஷ்யாம்.

நான் அவற்றை பாடி முடிப்பதற்குள் எனக்குள்ளே சில பல அசைவுகள், எப்படியோ என்னை ஒரு நிலையில் நிறுத்திக்கொண்டு நான் பாடி முடிக்க எழுந்து நின்று படபடவென கைத்தட்டினான் ஷ்யாம். சட்டென அவனுடன் எங்கள் இசைக்குழுவினரும் இணைந்துக்கொண்டு கைத்தட்ட நான் திக்கு முக்காடிப்போனேன்.

என் முகத்தில் தோன்றிய ஒரு சின்னதான வெட்க புன்னகையுடன் எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் சற்றே தூரத்தில் எங்களை பார்த்தபடியே நின்றிருந்தாள் நிரஞ்சனா. அவள் முகத்தில் அழகாய் ஒரு புன்னகை. எனக்கு தலை முதல் கால் வரை மொத்தமாக உதறலெடுக்க

“வாவ் வாவ் வாவ்” எங்கள் அருகில் ஒரு குரல் கேட்டது. நான் திகைத்து திரும்ப அங்கே மைக்குடன் நின்றிருந்தாள் ஒரு பெண். ஏதோ ஒரு தொலைக்காட்சி அலைவரிசையின் தொகுப்பாளினி போலும்.

அவர்கள் அலைவரிசையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள் போலும். அதற்கான சிறு சிறு பதிவுகள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருப்பது அப்போது புரிந்தது.

என்னிடமும் ஷ்யாமிடமும் பேட்டி எடுப்பதற்கான அனுமதியை வாங்கிகொண்டு மைக்கை நீட்டினாள் அந்தப் பெண். அப்போதும் எங்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் நிரஞ்சனா. நா வறண்டு போனது எனக்கு.

இப்போது திடீரென எல்லா விவரங்களும் அவனுக்கு தெரிந்து போனால் என்ன நடக்கும், அந்த கோபக்காரன் என்ன செய்வான் என்பதை  என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

“வாவ் ஷ்யாம் அண்ட் சந்தியா” துவங்கினாள் அந்த தொகுப்பாளினி. “உங்க ரெண்டு பேரையும் ரொம்ப நாளைக்கு அப்புறம் சேர்த்து பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் இணைஞ்சு பாடுறதை பத்தி எப்படி ஃபீல் பண்றீங்க?”

நான் அப்போதிருந்த மனநிலையில் அதற்கு என்ன பதில் சொல்வது என்பதே புரியவில்லை எனக்கு. எங்களை நோக்கி அடியெடுத்து வந்து கொண்டிருந்தாள் நிரஞ்சனா.

அந்த தொகுப்பாளினியின் கேள்விக்கு அழகாய் சிரித்தான் ஷ்யாம் “நாங்க ரெண்டு பேரும் எப்போ பிரிஞ்சோம் மறுபடியும் இணையறதுக்கு? நாங்க எப்போதும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். என்ன சந்தியா?” கேமரா எங்கள் இருவரையும் விழுங்கிக்கொண்டிருந்தது.

“கண்டிப்பா.” என்றபடியே நானும் அந்த பதிலில் இணைந்துக்கொண்டேன். “நடுவில் எனக்கு கொஞ்சம் பிரேக், ரெஸ்ட் தேவைப்பட்டது. அதனாலே நான் கொஞ்ச நாள் பாடலை அவ்வளவுதான்”

“அப்போ மலரே மௌனமா இந்த தடவை உண்டு இல்லையா?” அந்த தொகுப்பாளினி கேட்க

“கண்டிப்பா உண்டு” ஷ்யாம் சொல்ல அதற்குள் எங்கள் அருகில் வந்து விட்டிருந்தாள் நிரஞ்சனா

அடுத்து அந்த நிகழ்ச்சியை பற்றி சில கேள்விகளை எங்களிடம் கேட்டுவிட்டு, எங்கள் குழுவினர்கள் ஒன்றிரண்டு பேருடன் பேசிவிட்டு நிரஞ்சனாவை நோக்கி மைக்கை திருப்பினாள் அந்தப்பெண்

நிரஞ்சனா என்னையே பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க எனக்குள்ளே பய அதிர்வுகள். இதனிடையே சரியாக அழைத்து வைத்தாள் சித்தாரா. வழக்கமான நலம் விசாரிப்புகள் அவளிடமிருந்து.

நேற்று நடந்தது எதையும் அவளிடம் சொல்லாமல் எப்படியோ பேசி சமாளித்து முடித்தேன்.

அடுத்த சில நிமிடங்கள் கழித்து ஒரு வழியாக அந்த தொகுப்பாளினி விலக, நான் பேசி முடித்துவிட்டு ஷ்யாமின் அருகே வர எங்கள் இருவரின் முகம் பார்த்து புன்னகைத்தாள் நிரஞ்சனா. அவள் முகம் பார்த்து எதையும் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

“ஹாய் “ என்றாள் என்னை பார்த்து.

“ஹாய்” என்றேன் எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டு.

“பெரிய ஆச்சரியம் எனக்கு. ரெண்டு பேரும் இப்படி ஒண்ணா வந்து நிக்கறீங்க?” அவள் சொல்ல அவனுக்கு எல்லா விவரங்களும் தெரியும் என அவள் நினைக்கிறாள்  எனத் தோன்றியது எனக்கு.

அதே நேரத்தில் என்னையும் அவளையும் மாற்றி மாற்றி பார்த்தான் ஷ்யாம்.

“மேடம் யாரு பாப்பா?” இயல்பாக கேட்டான் அவன்.

“பாப்பாவா? அது சரி இவங்களுக்கே…”

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!