Skip to content
Post Views: 3,112
“அதெல்லாம் எதுவும் வேண்டாம்” என்றான் சட்டென. “இன்னும் ரெண்டு நாளிலே டெலிவரி இருக்கும்னு சித்தாரா சொல்றா. விளையாடுறியா நீ?
“ஷ்யாம் வேண்டாம் ஷ்யாம். அவங்க எல்லாரும் வந்தா இதெல்லாம் சரியா வராது ஷ்யாம்” நான் சொல்ல என் முகத்துக்கு நேரே கை நீட்டினான் அவன்.
“அது என் பிரச்சனை. நான் பார்த்துக்கறேன். நான் எதுவுமே சொல்லலைன்னாலும் என் தனா என்னை நம்புவான்’ அவன் குரலில் புதிதாய் ஒரு நம்பிக்கையும் உறுதியும்.
“ஷ்யாம்.. நான்”
Advertisement
“பேசாம போய் படு” முடித்துவிட்டான் அவன்.
உடை மாற்றிக் கொண்டு, படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டேன் நான். அவனும் அந்த சோபாவில் சாய்ந்திருந்தான். என்னென்ன ஓடிக்கொண்டிருந்ததோ அவனது மனதில் தெரியவில்லை.
திடீரென திறந்திருந்த அறைக்கதவை லேசாக தட்டிவிட்டு எனதருகில் வந்தான் ஷ்யாம். என்னை வருடிய அவனது பார்வை வீங்கிக்கிடந்த எனது பாதங்கள் மீது விழுந்தது.
Advertisement
‘என்ன பாப்பா கால் இப்படி வீங்கியிருக்கு?” நிறைய கவலை அவன் குரலில்.
Advertisement
“குழந்தை பிறக்குற வரைக்கும் இப்படிதான் இருக்கும் ஷ்யாம். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க போங்க”
“கால் வலிக்குதா மா?” என்றபடியே எனதருகில் அமர்ந்து தனது மடி மீது எனது பாதங்களை எடுத்து வைத்துக்கொண்டு பிடித்து விடலானான்.
“இதெல்லாம் வேண்டாம் ஷ்யாம்” நான் பாதங்களை இழுத்துக்கொள்ள முயல
Advertisement
“இருக்கட்டும் படுத்துக்கோ நீ” என்றான் எனது கோபக்காரன் “இத்தனை கஷ்டப்பட்டு என் குழந்தையை சுமக்குற நீ. உனக்கு இது கூட செய்யக்கூடாதா நான்? தூங்கு நீ”
“ஓவர் சென்ட்டி யா இருக்கு” நான் மெல்ல சிரிக்க அவனும் சிரிப்பில் இணைந்துக் கொண்டான்.
“தூங்குமா” அவன் சொல்ல அப்போது அவனது கைப்பேசிக்கு வந்தது அந்த வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி. அனுப்பியவள் சாரு.
அவர்கள் நாளை வரும் விமானத்தின் விவரங்களை அனுப்பியிருந்தாள்.
சில நிமிடங்கள் அதையே பார்வை விலக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவன். அவன் முகத்தில் இருந்த அந்த சின்ன வெளிச்சம் மெல்ல காணாமல் போவது போல் எனக்குத்தான் தோன்றியதா தெரியவில்லை.
அதன் பின் மெல்ல நிமிர்ந்தவன் “எதாவது சாப்பிடறியா பாப்பா” என்றபடியே எனது பாதங்களை மறுபடியும் பிடித்துவிடலானான்..
“அதெல்லாம் எதுவும் வேண்டாம் ஷ்யாம்” முகம் மட்டும் வாடிக்கிடந்தது. நான் அவனை விட்டு கிளம்ப வேண்டும் என்ற நிதர்சனம் அவனை வருத்தியது என்று தோன்றியது
“ஷ்யாம் கண்ணாமூச்சி ஏனடா?” பாட்டு என்ன ராகம் சொல்லுங்க” என்றேன் நான். அவனை சரிப்படுத்த இதைவிட வேறு மருந்து என்னிடம் இல்லை.
“சஹானான்னு நினைக்கிறேன்” புன்னகைத்தான் அவன்.
“ம்ஹூம் கண்ணாமூச்சி ஏனடா சஹானா இல்லை. நாட்டகுறுஞ்சி”. என்றேன் நான் கண்சிமிட்டி. பழைய கால சந்தோஷ மழைச்சாரல் மறுபடியும் திரும்பி வந்த திருப்தி எனக்குள்ளே..
“இல்ல சஹானாதான்”
“உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா” மெல்லப் பாடினேன் நான் “இதுக்கு அப்புறம் ஒரு ஆலாபனை வரும் தெரியுமா? அதுதான் சஹானா”.
மெலிதாக பாடினேன் அந்த ஆலாபனையை
“என்ன?” என்றேன் புருவம் உயர்த்தி”
“ஒன்ஸ் மோர் ப்ளீஸ்” என்றான் கெஞ்சலாக.
மறுபடியும் பாடினேன் நான். அங்கே இசை மறுபடியும் எங்கள் இருவருக்கும் தாயாகி தாலாட்டியது. எப்போது உறங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.
‘எங்கேயோ ஒரு அத்வான காட்டில் தனியாக நிற்கிறேன். யாரோ என்னை வாவென அழைக்கிறார்கள். தூரத்தில் கையில் குழந்தையுடன் ஷ்யாம் எனக்கு கை அசைக்கிறான்’ ஏதேதோ குழப்பமான கனவுகள் எனக்கு.
காலையில் நான் கண்விழித்த போது மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பதறியடித்துக்கொண்டு எழுந்தேன் நான். ஷ்யாம் உள்ளே சமைத்துக்கொண்டிருந்தான்.
நான் எழுந்ததை எப்படித்தான் உணர்ந்தானோ அடுத்த நிமிடம் அங்கே வந்து நின்றிருந்தான்.
“குட் மார்னிங்” ஷ்யாம்” நான் சொல்ல புன்னகையுடன் தலையை மட்டும் அசைத்தான். அந்த குட் மார்னிங் ஏனோ இருவரையும் வருத்தியது போன்றே தோன்றியது.
“சாரி ரொம்ப லேட் ஆகிடுச்சு ஷ்யாம். இதோ கிளம்பிடுறேன்” அவசரமாக எனது பொருட்களை எனது பைக்குள் அடைத்துக்கொள்ள நான் ஆரம்பித்து சில நொடிகள்தான் கடந்திருக்கும் வயிற்றை ஏனோ புரட்டி எடுத்தது. சட்டென எழுந்து நான் பாத்ரூம் நோக்கி ஓட என்னுடன் ஓடி வந்தான் ஷ்யாம்.
“என்னாச்சு பாப்பா?” இரவு சாப்பிட்ட உணவுகள் எல்லாம் வெளியில் வரும் அளவுக்கு வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன் நான்.
பதறிப்போனான் ஷ்யாம்..
“திடீர்னு என்னாச்சு பாப்பா?” சித்தாராவை கூப்பிடவா? என்றான் எனக்கு முகம் கழுவ உதவி செய்தபடியே.
‘”இதெல்லாம் நார்மல்தான் ஷ்யாம். நேத்து வெளியிலே சாப்பிட்டது ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன்”
நான் கட்டிலில் வந்து அமர்ந்துக்கொள்ள எனது அருகில் அமர்ந்தான் அவன். அடுத்த சில நிமிடங்களில் மறுபடியும் அதே போன்றதொரு வாந்தி.
“இரு பாப்பா. நான் சித்தாரவுக்கு கால் பண்றேன்”
“ஷ்யாம். அதெல்லாம் வேண்டாம் ஷ்யாம்’ அவனைத் தடுத்தேன் நான். “
.“தலையெல்லாம் சுத்துதா பாப்பா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஷ்யாம்” நான் எனது பொருட்களை எடுத்து வைக்கும் வேலையை தொடர
“இப்போ எதுக்கு இதெல்லாம் பண்றே நீ?’
“நான் கிளம்பணும் ஷ்யாம். அவங்க வரும்போது நான் இருந்தா எப்படி சரியா வரும். நான் இப்போ எங்க வீட்டுக்கு போறேன். ரெண்டு நாளிலே சித்தாரா டேட் சொன்ன பிறகு நீங்க வாங்க ஷ்யாம்’ நான் சொல்லிக்கொண்டிருக்க மறுபடியும் குமட்டல். வாந்தி. சில நிமிடங்கள் கழித்து நான் முகம் துடைத்துக்கொண்டு வெளியே வர
“நீ எங்கேயும் போகப் போறது இல்லை.” என்றான் ஷ்யாம். “இவ்வளவு வாமிட் பண்றே பாப்பா நீ? இதோட அங்கே போய் என்ன பண்ணுவே. இங்கேயே இரு. அதுக்கு மேலே நான் அவங்ககிட்டே எதையும் மறைக்குற மாதிரியும் இல்லை. அவங்களை நான் சமாளிச்சுக்கறேன். எனக்கு இதெல்லாம் விட என் குழந்தை முக்கியம். அவன் பிறந்ததும் நீ எங்கே வேணும்னாலும் போ” முடித்திருந்தான் அவன்.
அதற்கு மேல் அவனிடம் பேச எதுவும் இல்லை. கட்டிலில் சாய்ந்தேன் நான் நேற்று அவன் அணிவித்த வளையல்களை மீது எனது கன்னத்தை வைத்துக் கொண்டேன்.
அப்போது முதுகில் இருந்து துவங்கியது ஒரு சுரீர் வலி. எப்போதும் இருக்கும் முதுகு வலியை விட இது சற்று அதிகமாகவே இருந்தது. உள்ளுக்குள் ஏதோ மணியடித்தது.
“சித்தாரா முதிலிலேயே சொல்லி இருந்தாள். பிரசவ வலிக்கு முதல் அறிகுறி முதுகு வலிதான். அது கொஞ்சம் அப் நார்மலா வலிச்சா உடனே அலெர்ட் ஆகு சரியா?”
மறுபடியும் சுளீர் என வலி வந்து மறைய அவசரமாக சித்தாரவை அழைத்தேன். அவள் கைப்பேசி அணைக்கப் பட்டிருந்தது. ‘ஏதாவது ஒரு அறுவை சிகிச்சையில் இருக்கக் கூடும் அவள்’
பொதுவாக அவள் அப்படி செய்வதில்லை. என்னிடமிருந்து அழைப்பு வரும் என்பதற்காவே அவள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பாள். ஆனால் இப்போதெல்லாம் நான் ஷ்யாமுடன் இருக்கிறேன் என்ற ஒரு சின்ன தைரியம் அவளுக்கு.
அவர்கள் வரும் நேரம் எப்படியும் அவர்களை அழைத்து வர விமான நிலையம் செல்ல வேண்டியிருக்கும் அவன். அதனால் அவனிடம் இப்போது சொல்லி அவனை கலவரப் படுத்த வேண்டாம் எனத் தோன்றியது. அதற்குள் சித்தாராவிடம் பேசிவிட்டால் அவள் ஏதாவது வழி சொல்வாள்.
சில நிமடங்கள் கழித்து வலி கொஞ்சம் குறைந்தது போல் தோன்ற குளித்து விட்டு வந்தேன் நான். எப்போதும் போல் எனக்காக சோபாவிலேயே காத்திருந்தான் அவன்.
“என்னையே இப்படி பார்த்துக் கொள்கிறானே இன்னும் மகன் வந்தால் என்னவெல்லாம் செய்வான். அவனது மகன் கொடுத்து வைத்தவன் எனும் எண்ணம் வந்து போனது எனக்கு”
ஆனால் ஷ்யாமின் முகத்தில் எப்போதும் காணும் ஒரு வெளிச்சம் இல்லை.
“நீங்க ஏர்போர்ட் போக்கணும் இல்லையா ஷ்யாம்?”
“இல்லமா நான் போகலை.” அவன் சொல்ல எனக்கு அது பேரதிர்ச்சி.
எப்போதும் நண்பன் வருகிறான் என்ற செய்தி கிடைத்தவுடனேயே விமான நிலையத்துக்கு சென்று நிற்கும் ஆள் இவன்.
‘இன்று என்னவாயிற்று அவனுக்கு?’
நான் யோசிக்கும்போது எனது வயிற்றில் மெல்ல மெல்ல ஏதேதோ மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. என்னவென்று புரியவில்லை. மெலிதாக புறப்பட்டது. ஒரு வலி.
மூச்சை அடக்கி அதை பொறுத்துக்கொண்டு அவனிடம் கேட்டேன் நான் “ஏன் ஷ்யாம் எப்பவும் போவீங்கதானே?”
“இன்னைக்கு போகணும் தோணலை விடும்மா” எனது முகம் பார்க்கவில்லை அவன். பார்த்திருந்தால் எனது வலியை முகம் பார்த்தே உணர்ந்திருப்பான். சில நொடிகளில் காணாமல் போனது வலி.
“ஏன் ஷ்யாம்? போயிட்டு வாங்களேன்”
“பச்..” நிமிர்ந்தான் அவன் “என்னாலே அவன் முகம் பார்க்க முடியும்ன்னு தோணலை சந்தியா. என் மேலே எந்த தப்பும் இல்லைதான் ஆனா இந்த விஷயத்தை அவன் முகம் பார்த்து எப்படி சொல்வேன்னு தெரியலை. அங்கே போனா நான் அவன்கிட்டே சொல்லியே ஆகணும். வரட்டும். இங்கே அவனே வந்து தெரிஞ்சுக்கட்டும்”
அவன் சொல்லி முடிக்க வயிற்றில் வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறதே ஒரு வலி அதை விட மிக அதிகமான ஒரு வலி எனக்குள் எழுந்தது..
‘என்ன செய்து வைத்திருக்கிறேன் நான். அவனை எப்படிப்பட்ட தர்மசங்கடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். இதற்கு பெயர்தான் நான் அவன் மீது வைத்திருக்கும் காதலா? சுற்றி இருப்பவர்களை எல்லாம் மன அழுத்தத்தில் தள்ளிவிட்டு நாம் ஜெயிப்பதற்கு பெயர்தான் நேசமா?’
“சாரி ஷ்யாம்”
“விடும்மா. எப்படியும் அவனுக்கு தெரியத்தான் வேணும். தெரியட்டும். ஒண்ணும் பிரச்சனை இல்லை. நீ சாப்பிட வா”
“இல்லை ஷ்யாம் பசிக்கலை. இப்போதானே வாமிட் பண்ணேன். அப்புறம் சாப்பிடறேன்” சொல்லிவிட்டு அறைக்குள் போய் படுத்துக்கொண்டேன். வலி இப்போது சற்று குறைந்திருந்தது. சித்தாராவை அழைக்கத் தோன்றவில்லை எனக்கு.
இரண்டு மணி நேரங்கள் செயலற்று போனதைப்போலவே படுத்திருந்தேன் நான்.
“சந்தியா? தூங்கறியா? ப்ளீஸ் ஏதாவது சாப்பிடு வா. அப்புறம் ரொம்ப டயர்டாகிடுவே” அவனது ப்ளீஸ் என்னை ஏதோ செய்தது. அவன் முகம் பார்க்கவே கூசியது எனக்கு. எழுந்து வந்து பெயருக்கு ஏதோ சாப்பிட்டு வைத்தேன்.
அவர்கள் வரும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அவனது மனமும் ஒரு நிலையில் இல்லை . பியானோவின் முன்னால் சென்று அமர்ந்து இசைக்க ஆரம்பித்திருந்தான். மௌனமாய் சோபாவில் அமர்ந்தேன் நான்.
இப்போது மறுபடியும் வந்து நின்றது அந்த சுளீர் வலி. அவனிடம் காண்பித்துக் கொள்ளவில்லை நான். சில நிமிடங்களில் வாசலில் வந்து நின்றது தனா வந்த டாக்சி.
மெதுவாக எழுந்தான் பியானோவை விட்டு. எனக்கு சுளீர் என இன்னொரு வலி. பல்லைக் கடித்து பொறுத்துக்கொண்டேன்.
வாசலுக்கு சென்று அவர்களை வரவேற்றான் ஷ்யாம், ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தேன் நான்.
“ஏதாவது சாப்பிட்டியா சாரு? ஏன் முகம் இவ்வளவு டல்லா இருக்கு” வாசலில் பேசிக்கொண்டிருந்த ஷ்யாமின் அக்கறையான குரல் எனக்குக் கேட்டது. இருந்தாலும் அவனது குரலில் அத்தனை உற்சாகம் இல்லைதான்.
அவனது ஒவ்வொரு அசைவும் என்னை குத்திக் கிழித்தது.
“வீடு ஜம்முன்னு இருக்குடா” சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் தனா
“இப்போதான் முதல் தடவையா பார்க்கிற மாதிரி பார்க்கிறே ஏன்டா?” என்றான் ஷ்யாம்.
அவர்கள் மூவரும் உள்ளே வர நான் மெல்ல சோபாவிலிருந்து எழுந்தேன். நிறைமாத வயிறுடன் நின்றுக்கொண்டிருத்த என்னைப் பார்த்ததும் இருவர் முகத்திலும் கொஞ்சம் அதிர்ச்சிக் கோடுகள்.
என்னை பார்த்துவிட்டு தனாவின் முகத்தை பார்த்தான் ஷ்யாம்.. அவனது உடல் மொழியில் அப்படி ஒரு தளர்ச்சி. சற்றே கூனிக் குறுகித்தான் நின்றான் ஷ்யாம்.
“என்ன செய்து வைத்திருக்கிறேன் எனது காதலனை? இப்படித்தானே நின்றிருப்பான்? அன்று முதலிரவு அறையில் ரஞ்சனா உயிரை விட்ட போது, காலையில் வெளியில் வந்து தனாவின் முன்னால் இப்படிதானே நின்றிருப்பான். இன்று அதே நிலையில் அவனை நான் நிறுத்தி வைத்திருக்கிறேனே? அவளுக்கும் எனக்கும் என்ன பெரிய வித்தியாசம். நான் அவனை காதலிப்பதாக வேறு பறைசாற்றி கொள்கிறேனே” உள்ளுக்குள் செத்து நொறுங்கிப் போனேன் நான். “இதை எப்படி காதல் என்று சொல்ல முடியும் என்னால்.”
“நாமும் வாழ்ந்து அடுத்தவங்களையும் வாழ வைக்கறதுதான் லவ் இதுக்கு பேர் லவ் இல்லை.” அன்று ஷ்யாம் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.
அடுத்த சில நொடிகளில்
“எப்படி இருக்கீங்க சந்தியா?” மிக இயல்பான நலம் விசாரிப்புடன் சோபாவில் வந்து அமர்ந்தான் தனா. சாருவுமே வெகு இயல்பாக மாறியிருந்தாள்
‘என்னடா சந்தியா பத்தி எதுவமே கேக்கலை?” வார்த்தைகளை தயங்கித் தயங்கி கோர்த்தான் ஷ்யாம்.
“என்ன கேட்கணும்?’ என்றான் தனா “நீ என் ஃப்ரெண்ட்டா, நீ தப்பு எதுவும் செஞ்சிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். வேறே ஏதாவது நடந்திருக்கும். உனக்கு சொல்ல விருப்பம் இருந்தால் சொல்லு”
ஆடிப்போனேன் நான். சத்தியமாக ஆடிப்போனேன்.
‘எப்படிப்பட்ட நண்பன் இந்த தனா? எப்படிப் பட்ட நட்பு இது?”
அப்படியே நெகிழ்ந்து போய் தனாவின் தோள்களை அணைத்துக்கொண்டான் ஷ்யாம்
“பார்த்தியா என் ஃப்ரெண்ட் எப்படின்னு?” கேட்டான் அவன். அவன் முகத்தில் பெருக்கெடுத்தது நிம்மதி.
பேச வார்த்தைகள் இல்லாமல் தலையசைத்தேன் நான். சாருவின் முகத்திலும் புன்னகை.
“என்ன சாரு நான் சொல்றது கரெக்ட்தானே?” தனா கேட்க நிறைவான புன்னகையுடன் தலை ஆட்டினாள் அவள்.
தனா அவனை நம்புவது கூட பெரிய விஷயம் இல்லை என்று தோன்றியது எனக்கு. சாரு ஷ்யாமை நம்புவதே பெரிய விஷயம். இவர்களுக்காக இந்தக் குடும்பத்திற்காக ஷ்யாம் சாருவை திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும். அதுதான் நியாயம்.
சுளீர் என ஒரு வலி வந்து என்னை அழுத்தியது. மூச்சை இறுக்கி சரிப்படுத்திக்கொண்டேன் நான்.
‘சந்தியா வலிக்குதா?” எனது முகம் பார்த்து அருகே ஓடி வந்தான் ஷ்யாம். அவர்கள் இருவரும் கூட எழுந்தார்கள். எனக்கு உடல் வியர்க்க ஆரம்பித்திருந்தது.
“வலிக்குதுதான். ஹாஸ்பிடல் போகணும். நீங்க சித்தாரா கூப்பிடுங்க. நான் அதுக்கு முன்னாடி சாருகிட்டே இந்த பிரெக்னென்ஸி பத்தி பேசணும்” அவளிடம் பேசுவது எனது தார்மீக கடமை என்று தோன்றியது.
“இல்ல சந்தியா” முன்னால் வந்தான் தனா “இப்போ அதுக்கெல்லாம் அவசியம் இல்லைமா. நான் உங்ககிட்டே சிலது பேசணும். நீங்க முதலிலே ஹாஸ்பிடல்..”
“ப்ளீஸ் தனா சார்….. அதுக்கு அப்புறம் எனக்கு டைம் இருக்குமா தெரியலை” எனது கண்களில் கொஞ்சம் கண்ணீர் கூட வந்தது.
‘சரி நீங்க பேசுங்க”. கொஞ்சம் திகைத்தவனாக அங்கிருந்து நகர்ந்திருந்தான் தனா
“பாப்பா இப்போ இதெல்லாம் எதுக்கும்மா?” ஷ்யாம் கேட்க
“அஞ்சு நிமிஷம் ஷ்யாம்” கெஞ்சினேன் நான்.
அடி வயிற்றில் திடீரென ஏதோ சில மாற்றங்கள் “பனிக்குடம் உடைந்து விட்டதா என்ன?”
நான் மடமடவென அவளிடம் நடந்ததை மொத்தமும் ஒப்பித்து வைத்தேன்.
“போதும்டா. நாம இப்போ ஹாஸ்பிடல் போலாம்” இடை வந்த ஷ்யாமையும் தடுத்து விட்டு எல்லாம் சொல்லி முடித்தேன். தலையசைத்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள் அவள்.
“ஷ்யாம் ரொம்ப ரொம்ப நல்லவர். நீங்க அவரை ஏதும் தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு சந்தேகம் வராது. வந்தால் என்னோட ரிபோர்ட்ஸ் எல்லாம் இருக்கு. அதிலே எல்லாம் தெளிவா இருக்கு. சரியா” நான் சொல்லி முடிக்க இப்போது சுளீரென இன்னொரு வலி
“அ..ம்…மா” முனகினேன் நான். “ரொம்ப வ.. வலிக்..குது ஷ்…யா….ம்”
“நீங்க அவரை…” நான் ஏதோ சொல்ல முயல்வதற்குள் என்னை அழுத்தியது வலி
“ஷ்யாம் வலிக்குது”
“சரிடா சரிடா. சித்தாரா போன் அணைச்சு வெச்சிருக்கா. நாம ஹாஸ்பிட்டல் போயிடலாம்” பதற்றத்துடன் என்னருகில் வந்தவன் “காரிலே உட்கார்ந்து வந்திடுவியா சந்தியா?’’ என்றான்
அடுத்த சில நிமிடங்களில் காரில் சித்தாராவின் மருத்துவமனை நோக்கி விரைந்து கொண்டிருந்தோம்.
மறுபடியும் சுளீர் வலி “ஷ்… யாம்..’ வலிக்குது”
“இதோ இதோடா இன்னும் கொஞ்ச நேரம்”
“ஷ்யாம்” வலியினூடே அழைத்தேன்.
‘சொல்லு பாப்பா” என்றான் காரை ஓட்டிக்கொண்டே.
“ஷ்யாம் சாரி ஷ்யாம்”
“எதுக்குடா?”
“நான் உங்களுக்கு நிறைய கஷ்டம் கொடுத்திருக்கேன்” அவனிடம் மெல்ல சொன்னேன்.
‘குழந்தையை பார்த்ததும் எல்லாம் சரியாயிடும்டா. விடு.” சொன்னான் அவன்.
கண்ணீர் கோர்த்தது எனக்கு. இனி எந்த நிலையிலும் அவனுக்கு வருத்தம் தந்து விடக் கூடாது என்பதே எனது உறுதியாக இருந்தது.
“ஷ்யாம்”
“ம்”
“உங்களுக்கு குழந்தை வேணுமா ஷ்யாம்?”
“இப்போ எதுவும் பேசவேண்டாம் பாப்பா. அது பிறக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்”
“இல்ல ஷ்யாம். அப்புறம் டைம் இருக்காது. நேத்து நீங்க சொன்னா மாதிரி குழந்தை பிறந்ததும் அதை தூக்கிட்டு எங்கேயாவது ஓடிடுங்க. என் கண்ணிலேயே காட்டாதீங்க. அதை பார்த்தா நான் உங்ககிட்டே கொடுக்க மாட்டேன்”
“பாப்பா கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணும்மா.” என்றான் கெஞ்சலாக. எனக்கு இப்போதே பேசிவிட வேண்டும் என்றிருந்தது.
“ஷ்யாம் எனக்கு கடைசியா ஒண்ணு மட்டும் சொல்லணும்”
“சொல்லுடா
“லவ் யூ ஷ்யாம்” என்றேன் தைரியமாய் இப்போது எதுவும் திட்ட மாட்டான் எனும் நம்பிக்கை.
“ம்” சாலையை பார்த்துக்கொண்டே தலையசைத்தான் அவன்
அவன் மீதான காதல் இன்னும் இன்னும் வளர்ந்துக்கொண்டே போகும் உணர்வு எனக்கு. அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு வலி
‘ஷ்யாம் லவ் யூ ஷ்யாம்” என்றேன் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டே.
“ம்”
இன்னொரு வலி!
‘ஷ்…யா…ம் ல…வ் யூ ஷ்…யா…ம்” இப்போது அவன் கண்களில் கண்ணீர் பூத்தது. விரலால் கண்ணீரை சுண்டி விட்டுக்கொண்டு காரின் வேகத்தை கூட்டினான்.
நான் சீட்டில் கண்களை மூடி சாய்ந்துக்கொண்டேன். மனதார அவனிடம் உரைத்து விட்டேன் என் காதலை. சந்தோஷ சாகரம் எனக்குள்ளே. எல்லாவற்றையும் சரியாக செய்து முடித்த ஆனந்தம்.
“ஷ்யாம் குழந்தை உங்களுக்குதான் ஷ்யாம்” வாய்விட்டு சொன்னேன் நான்.
மருத்துவமனையை அடைந்ததும் பதறிப்போனாள் சித்து.
“அறிவிருக்கா உனக்கு? போனை அணைச்சு வெச்சிருக்கே” அந்த நேரத்திலும் அவளைத் திட்டி வைத்தேன். அடுத்த நிமிடம் ஒரு ராட்சச வலி என்னைத் தாக்கியது
“அ…ம்…மா” நிற்க முடியாமல் ஷ்யாம் மீது நான் சரிய அப்படியே என்னை கைகளில் அள்ளிக்கொண்டான் அவன்.
“வலிக்குது ஷ்யாம்” அவன் முகத்தில் இப்போது பய ரேகைகள். நேற்று ஸ்டூடியோவில் இருந்த அந்த திகில் பாவம். அந்த காட்சிகள் நினைவுக்கு வந்தனவோ என்று தோன்றியது எனக்கு.
“ஏதாவது ஆகப்போகிறதோ எனக்கு?” நடுக்கம் எனக்குள்ளே.
அடுத்த சில நிமிடங்களில் நான் பிரசவ அறையில் இருந்தேன். உச்சக்கட்ட பரபரப்பில் இருந்தாள் சித்து.
“பனிக்குடம் உடைஞ்சிடுச்சு. ஷ்யாம் நீ கொஞ்ச நேரம் வெளியிலே இரேன்’
“ஒகே’ அவன் நகரப்போக
“ஷ்யாம் ப்ளீஸ் ஷ்யாம். என் கூட இருங்க ஷ்யாம். “ நான் கத்த
“சரி சரி இரு” என்றாள் சித்து.
இன்னும் இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் எல்லாருக்கும் எங்களை அடையாளம் தெரிகிறது. பிறக்கப் போவது அவனது குழந்தை என்பதும் அவர்களுக்கு புரிகிறது. அவன் அதற்கெல்லாம் கவலைப்படாமல் என்னருகில் அமர்ந்திருந்தான்.
“ஷ்… யா…ம்” அலறினேன். அடுத்தக் கட்ட வலி எனக்கு. அவன் முகத்தில் பயத்தை தவிர வேறெதுவும் இல்லை.
இரண்டு மணி நேரங்கள் மருத்துவர்களும் நானும், ஷ்யாமுமே கூட போராட எந்த பயனும் இல்லை.
எனது கையை பிடித்துக்கொண்டே அமர்ந்திருந்தான் அவன். “இன்னும் கொஞ்ச நேரம்டா பாப்பா. நான் இருக்கேன்டா. ஒண்ணும் ஆகாதுடா” என்றான் நூறாவது முறையாக. எனது அலறல்களில் துவண்டு போயிருந்தான் ஷ்யாம்.
திடீரென “தியேட்டர் ரெடி பண்ணிடலாம் டாக்டர்” சொன்னாள் சித்து குழந்தையோட ஹார்ட் பீட் குறையுது”
“என்னாச்சு சித்து” ஷ்யாம் துடிக்க
“எமெர்ஜென்சி ஸி. செக்ஷன் போகணும் ஷ்யாம். இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாது”
“ஷ்யாம் ஷ்யாம் குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது இல்ல ஷ்யாம்”
“இல்லடா இல்லடா பாப்பா ஒண்ணும் ஆகாது”
“ஷ்யாம் பயமா இருக்கு ஷ்யாம்” நான் சொல்ல உயிர் இழுக்கும் ஒரு வலி எனக்கு.
ஆரம்பத்திலிருந்து எனது நான் வாழ்ந்த வாழ்க்கை எனது நினைவுகளில் வந்து வந்து போனது.
அவனை மனதார காதலித்தாகி விட்டது. எனது மகனை நான் சுமந்து கொண்டிருந்த காலத்தில் அவனுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்றியாகிவிட்டது. பாடி சிரித்து மகிழ்ந்தாகி விட்டது. மூன்று மாதங்கள் அவன் கையால் சாப்பிட்டும் மகிழ்ந்துவிட்டேன். கடைசியாக மனம் நிறைய நிறைய அவனிடம் எனது காதலையும் சொல்லியாகி விட்டது. நினைக்க நினைக்க மனம் குளிர்ந்து நின்றது.
ஏதேதோ எண்ணங்கள் வந்து போக இரண்டாவது நிமிடம் ஏதோ ஒரு வேகம். என் மகனை காப்பாற்றி இந்த பூமிக்கு கொண்டு வந்து, ஷ்யாமுக்கு தந்து விட வேண்டுமென்ற ஒரு வேகம்.
நான் எனது முழு சக்தியும் பிரயோகித்து முயல சித்தாரா முதற்கொண்டு அனைவரும் பரபரப்பாக இயங்க
“ஷ்………..யா……..ம் ஐ… லவ் யூ…… ஷ்…யா…..ம்” நான் பூதாகர வலியில் அலற
“பாப்பா கிரேட்” ஷ்யாம் கத்த, பூமியை தொட்டிருந்தான் எனது மகன். குழந்தையின் அழுகுரல் எனது செவி தொட்டது
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒரு பெரிய போராட்டம்தான். அதிலும் என்னை பொறுத்தவரை அவனை எனக்குள்ளே சேர்த்துக் கொண்டதிலிருந்து அவன் பூமி தொட்ட இந்த நிமிடம் வரை நான் செய்தது எல்லாமே மிகப் பெரிய சாதனைதான்.
அந்த சாதனையை வெற்றிகரமாக செய்து விட்ட சந்தோஷ புன்னகையுடன், எப்படியும் ஷ்யாமும், சாருவும் அவனை நன்றாக வளர்ப்பார்கள் எனும் நம்பிக்கையுடனும் நிம்மதியாய் மயங்கி,
“ஹேய் பாப்பா..” ஷ்யாமின் குரல் என்னைத் துரத்திய வேளையில் என்னை மறந்து எங்கோ தொலைந்து கண்கள் மூடியிருந்தேன் நான்.
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்
error: Content is protected !!