Skip to content
Post Views: 2,893
டிரைவரை பார்த்து நட்பாக புன்னகைத்தேன் நான். அவரும் பதிலுக்கு நலம் விசாரித்தார். அடுத்து அவசரமாக அவனை தேடி அலைபாய்ந்தன என் கண்கள். காரின் பின் சீட்டில்தான் அமர்ந்திருந்தான் ஷ்யாம். காருக்குள் ஒளிர்ந்துக்கொண்டிருந்த விளக்கு அவன் முகத்தின் அழகை இன்னுமாக கூட்டியது.
“ஷ்யாம் என்னை பார்த்து ஆறு மாதங்கள் ஆகின்றனவே. என்னை பார்த்துவிட கொஞ்சமேனும் தவிக்காதா அவன் உள்ளம்?” உள்ளே ஓடிய கேள்விகளுடனே அவன் முகம் பார்த்தேன் நான்.
அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதைப் போல் சீட்டில் சாய்ந்து கண்மூடியிருந்தான் அவன். காதில் தொங்கிக்கொண்டிருந்த ஹெட் போனில் ஏதோ ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருக்கவேண்டும்.
“நான் பாடிய பாடலாகத்தான் இருக்குமோ?” எனக்குள்ளே ஆர்வ ரேகைகள்.
Advertisement
காரின் கதவு திறந்தே இருக்க பெட்டியை வெளியிலேயே வைத்துவிட்டு காருக்குள் ஏறி அவனருகில் அமர்ந்தேன். அப்போதும் நிமிரவில்லை அவன். ஆனாலும் எனது திடீர் அருகாமையில் அவன் உடலில் ஒரு சிறு சிலிர்ப்பு படர்ந்ததை மட்டும் என்னால் நன்றாக புரிந்துக்கொள்ள முடிந்தது.
சாம்பல் வண்ணத்தில் கருப்பு கோடுகள் போட்ட டி ஷர்டும், கருப்பு நிற பேன்ட்டுமாய் அமர்ந்திருந்தான் என் ஷ்யாம்.
அவனை பார்த்ததும் மனதில் இருக்கும் அத்தனையையும் அவனிடம் கொட்டிவிட பரிதவித்த மனதை கஷ்டப்பட்டு தடுத்து விட்டு
Advertisement
“ஹாய்.. ஷாம்ஸ்” என்றேன் மெலிதான குரலில்.
Advertisement
அப்போதுதான் வேறெதோ ஒரு உலகத்திலிருந்து தரையிறங்கியவனைப் போன்றதொரு பாவத்துடன் என்னை நோக்கி புருவங்கள் உயர திரும்பினான் ஷ்யாம்.
‘ஹாய் வந்துட்டியா?” ஒட்ட வைத்துகொண்ட புன்னகை அவன் இதழ்களில்.
என்னதான் புன்னகையை அவன் ஓட்ட வைத்துக்கொண்டாலும் அவனது பார்வை எனது கண்கள் மீது தாமகவே ஒட்டிக்கொண்டு விலக மறுத்தன. எனக்குள்ளே பரவச மழை. என் வயிற்றுக்குள்ளே படபட அசைவுகள்.
Advertisement
“எப்படி இருக்கீங்க பாஸ்” நான் மெலிதாக கேட்க சடக்கென கலைந்து வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
‘யா ஐ அம் கிரேட்’ சொன்னவன் “கிளம்பலாமா” என ஒலித்துக்கொண்டிருந்த பாடலை நிறுத்த மறந்து ஹெட்போனை கைப்பேசியிலிருந்து விலக்கியிருந்தான்.
மழைத் தேடி காத்திருந்தேன்…… காத்திருந்தேன்…….
மனம் தேடும் மழையானாய்…… மழையானாய்…..
அவனது கைப்பேசியிலிருந்து சற்று சத்தமாகவே ஒலித்தது இந்தப் பாடல். ‘அப்படி என்றால் இத்தனை நேரம் இதைத்தானே அவன் ரசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்” மெலிதாக புன்னகைத்துக்கொண்டேன் எனக்குள்ளே.
முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் வெகு இயல்பாய் பாடலை நிறுத்தினான்.
“போலாம்” என்னைப் பார்க்காமல் சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி டிரைவரிடம் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப சொல்லிவிட்டு பெட்டியை இழுத்துக்கொண்டு நடந்தான் அவன். நானும் எனது பெட்டியை இழுத்துக்கொண்டு அவனுடன் நடந்தேன்.
வானத்தில் நட்சத்திரங்கள் ஏனோ என்னை பார்த்து கண்சிமிட்டி சிரித்தன. “உன்னால் ரகசியத்தை எத்தனை நேரம் காப்பாற்ற முடியும் பார்க்கலாம் என்பதைப்போல”
“அதையெல்லாம் நன்றாக காப்பாற்றுவேன்” அவற்றிடம் பெருமையாக சொல்லிக்கொண்டவள்.
“ஷாம்ஸ்” என துவங்க
“தயவு செய்து ஷ்யாம்ன்னு ஒழுங்கா கூப்பிடு” சூடான குரலில் சட்டென வெடித்தான்.
பக்கென்றது எனக்கு. கொஞ்சம் தடுமாறி நின்றே விட்டேன் நான். சில அடிகள் நடந்தவன் திரும்பி என் முகம் பார்த்தான்.. மெல்ல நடந்து அவனருகில் வந்தேன் இருவரும் நடந்தோம். சில நிமிடங்கள் மௌன ராகம் எங்களிடையே.
‘பரவாயில்லையே. இன்னமும் நாம பாடின பாட்டெலாம் கேக்கறீங்களே!” நான்தான் மறுபடி துவங்கினேன்.
“தினமும் கேட்டுட்டுத்தான் இருக்கேன். முக்கியமா நீ பாடின பாட்டெல்லாம் சாகற வரைக்கும் கேட்பேன். அதிலே எந்த மாற்றமும் இல்லை.’ வெகு இயல்பாக சொல்லிக்கொண்டே நடந்தவன் நின்று திரும்பி என் முகம் பார்த்தான்
“அது நான் உன்னை பார்க்கறதுக்கு முன்னாலே இருந்தே செய்திட்டிருந்த விஷயம். இப்பவும் நாம பழைய மாதிரி சேர்ந்து பாடலாம். சந்தோஷமா பேசிக்கிலாம். அதுக்கு மேலே புதுசா வேறே எதுவும் செய்ய விரும்பலை நான். அதை இத்தனை நாளிலே நீ சரியா புரிஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன்.” அன்று போனில் பேசும்போது சொன்னதையே மறுபடியும் சொன்னான்.
“இந்த ஆறு மாசத்திலேதானே.?” மெல்ல சிரித்தேன். “எஸ். எஸ். இந்த ஆறு மாசத்திலே என் உடம்பிலே மனசிலே நிறைய மாற்றங்கள். எல்லாமே நல்லா புரியுது”. ஆயிரம் அர்த்தங்களுடன் உள்ளுக்குள் புன்னகைத்துக்கொண்டேன் நான்.
“குட். வெரி குட்” திருப்தியான புன்னகையுடன் நடந்தான் ஷ்யாம்.
எனக்குள்ளே மறைந்து கிடக்கும் உண்மைகள் அவன் முன்னால் விரிந்தால் அவன் இப்படியெல்லாம் புன்னகைக்க மாட்டான் என்பது சர்வ நிச்சயம். அப்படி அவனுக்கு எல்லாம் தெரிந்தால் அதன் பிறகு அவனது பார்வையை, அவனது கேள்விகளை என அடுத்தடுத்து வரும் எதனையும் சந்திக்கும் தைரியம் எனக்கில்லை.
அதற்கு மேலாக சில நாட்களுக்கு முன்னால் எனக்கு தெரிந்த மிகப்பெரிய உண்மை அவனுக்காக இன்னொரு பெண் காத்திருக்கிறாள் என்பதுதான்!. ஷ்யாம் அந்த பெண்ணை திருமணம் செய்ய கடமைப் பட்டிருக்கிறான் என்பதுதான்!’”
இந்த உண்மையை நான் அறிந்துக் கொண்ட பிறகு, சித்தாராவுக்கு கூட தெரியாத இந்த உண்மை எனக்கு தெரிந்து விட்ட பிறகு, என்னுடைய உண்மைகள் அவனுக்கு தெரிவதில் எந்த நியாயமும் இல்லை என்பது நன்றாகவே புரிந்தது..
இதில் இன்னொரு பெரிய விஷயம் என்னவென்றால் இந்த உண்மைகள் எனக்குத் தெரியும் என்பது அவனுக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.
“எது எப்படி என்றாலும் எனக்கு இந்த நான்கு நாட்கள் போதும்” மறுபடியும் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன் நான்.
வி.ஐ.பி லாஞ்சுக்குள் சென்று போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு பெட்டிகளையும் செக் இன் செய்து உள்ளே அனுப்பிவிட்டு வந்து அமர்ந்தோம். சுற்றி இருந்தவர்கள் எங்களை பெரிதாக கண்டு கொள்ளவில்லை,. தெரிந்த முகங்களும் தென்படவில்லை என்பதில் ஒரு வித நிம்மதி எனக்குள்ளே.
நேரம் இரவு பன்னிரெண்டரையை தாண்டிக்கொண்டிருந்த போதும் உறக்கம் அருகில் கூட வரவில்லை.
“ஷ்யாம்” அந்த சோபாவில் புதைந்து அமர்ந்துக்கொண்டே அருகிருந்தவனை அழைத்தேன்..
“ம்?” என்றான் கைப்பேசியை துழாவிக்கொண்டே.
“உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும்” அவன் முகம் பார்த்தேன்.
“ம்” நிமிரவில்லை அவன்.
“இந்த நாலு நாள் என்கிட்டே கோபப்படாம சந்தோஷமா சிரிச்சு பேசிட்டு இருக்க முடியுமா?” நான் கொஞ்சம் தயக்கத்துடனே கேட்க சடக்கென திரும்பி என் முகம் படித்தான் அவன்.
“இல்ல இல்ல லவ் எல்லாம் இல்லை. அதெல்லாம் முடிஞ்சது. இது சும்மாதான்” படபடத்தேன் நான். “எனக்கு இந்த நாலு நாள் போதும் அதுக்கு அப்புறம் நான் உங்க முன்னாடியெல்லாம் வர மாட்டேன்” என்னையும் அறியாமல் சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டேன்.
புருவம் சுருக்கி என்னை பார்த்தான் அவன் “புரியலை. ஏன் என் முன்னாடி வர மாட்டே? நான்தான் நாம பழைய மாதிரி சேர்ந்து பாடலாம். சந்தோஷமா பேசிக்கலாம். அப்படின்னு சொன்னேன்ல”
“அதுக்கு என் சூழ்நிலை இடம் கொடுக்கணுமில்ல” என்றேன் விரல்களை பார்த்துக்கொண்டே
“சூழ்நிலையா? என்ன சூழ்நிலை?”
“அது… அது… வந்து… நான்… ஆங்…. நான்.. மறுபடியும் ஐ.டி யிலே வேலைக்கு ட்ரை பண்றேன். அப்படி ஏதாவது ஆன்சைட் போகிற வாய்ப்பு கிடைச்சு நான் வேறே நாட்டுக்கு எங்கேயாவது போயிட்டா அப்புறம் இப்படி எல்லாம்….” சொல்லிக்கொண்டே அவன் முகம் பார்த்தேன்.
“ஓ.. அப்படியா?” என்றான் சாதாரணமாக. நான் சொன்ன வார்த்தையில் அவன் முகத்திலும், குரலிலும் எந்த ஒரு மாற்றமோ அதிர்ச்சியோ இல்லை.
“வேலை கிடைச்சிடுச்சா?” இயல்பாக கேட்டான்.
“இல்ல ட்ரை பண்ணிட்டு இருக்கேன். கிடைச்சிடும்” நான் சொல்ல அவன் முகத்தில் லேசான யோசனை அலைகள் பரவ
“அப்போ பாட்டு?” கேட்டுக்கொண்டே அவன் என் முகத்தை பார்த்த அந்த நேரத்தில் ஒலித்தது அவனது கைப்பேசி. அதில் ஒலித்த பாடலும் நான் பாடிய பாடல்தான்.
அழைத்தவன் தனா என்ற தனஞ்செயன். ஷ்யாமின் உயிரான நண்பன்.
அவனது கைப்பேசி திரையை பார்த்துவிட்டு நான் ஷ்யாமின் முகம் பார்க்க, ஒரு முறை என்னை தீர்கமாக பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றான் ஷ்யாம்.
“சொல்லு தனா” இப்போது ஷ்யாமின் முகத்தில் படர்ந்திருந்த அந்த புன்னகை இவன் தனாவின் மீது கொண்டிருக்கும் நட்பை சொல்லியது.
அதை நட்பென்று சொல்ல விட முடியுமா? இல்லை அதை விட இன்னும் கூட மேலான உறவா இது? அந்த “சொல்லு தனா” விற்குள் ஒளிந்திருந்தது அப்படி ஒரு இதம்.
தினமும் ஒரு முறையாவது தனாவுடன் பேசியே ஆகவேண்டும் ஷ்யாமுக்கு. அவனுடன் பேசும் நேரமெல்லாம் ஷ்யாமின் குரல் இப்படிதான் இருக்கும்.
“எப்படிடா இருக்கே?” எப்போது பேசினாலும் இப்படி கேட்பான் ஷ்யாம். அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற தவிப்பு அந்த கேள்வியில் ஒளிந்திருப்பதை போலவே எனக்கு தோன்றும்.
“அம்மா எப்படி இருக்காங்க? இப்போ பரவாயில்லையா?” அடுத்த கேள்வி. அந்த கேள்வியில் அவனது உள்மன அழுத்தங்களின் பிம்பம்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஷ்யாமுக்காக ஒரு பெண் காத்துக்கொண்டிருக்கிறாள் என்று சொன்னேனே அவளுடைய அண்ணன் தனா.
“ஏர்போர்ட்லே இருக்கேன்டா. கிளம்பிட்டேன்’ என்றான் ஷ்யாம் “சாரு எப்படிடா இருக்கா?” கேட்டான் அடுத்த கேள்வியை.
‘ஆம்! சாரு! அவள்தான் அவனை அடைய கொடுத்து வைத்தவள். அவள் மீது எனக்கு பொறாமை என்பதெல்லாம் துளியும் இல்லை. இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். இருக்கவேண்டும். எனக்கு இந்த நான்கு நாட்களும், அவன் இசையும் போதும்”
“நீ சிங்கப்பூர் வரியா? என்ன பிளான்ஸ்?” அடுத்த வினாவாக தனாவிடம் கேட்டான் ஷ்யாம்.
சற்றே திடுக்கென்றது எனக்கு. “தனா வருகிறானா?”
அவன் வந்துவிட்டால் என்னுடன் பேசக்கூட மாட்டான் ஷ்யாம்! இது அவ்வப்போது நடப்பதுதான் என்றாலும் இந்த முறை அவன் வர வேண்டாம் என்ற வேண்டுதல் எனக்குள்ளே மண்டியது.
“இந்த நான்கு நாட்கள் எனக்கே எனக்காக வேண்டும்!”
தனா இருப்பது மலேசியாவில். வெகு எளிதாக சிங்கபூர் வந்து விடுவான் அவன்.
“இறைவா அவன் வரக் கூடாது” மனதிற்குள் வேண்டிக்கொண்டே ஷ்யாமின் முகம் பார்த்தேன். ‘என்ன சொல்கிறதாம் எதிர்முனை?’ எனக்குள்ளே உச்சக்கட்ட படபடப்பு.
“ஏன்டா? ஒரு நாள் கூட வர முடியாதா?” ஸ்ருதி இறங்கியது ஷ்யாமின் குரலில். எனக்குள்ளே மெலிதாக ஒரு சந்தோஷம்.
எதிர் முனை என்ன சொன்னதோ “சரி விடு. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு எப்படியும் இந்தியா வருவேதானே அப்போ மீட் பண்ணுவோம்” அவன் சொல்ல என்னையும் அறியாமல் என் முகம் கொஞ்சம் மலர்ந்துதான் போனது. பேசி முடித்து என் பக்கம் திரும்பினான் ஷ்யாம்.
“அது என்ன? அவன் வரலைன்னதும் உனக்கு அப்படியொரு சந்தோஷம்?” என் முகம் பார்த்து மனம் படித்திருந்தான்.
“அவர் வந்தா நீங்க என் பக்கம் கூட திரும்ப மாட்டீங்க இல்ல. அதான்” நான் சொல்லியும் விட என்னை ஏற இறங்க பார்த்தான் ஷ்யாம்.
‘இல்ல. இல்ல உங்க மேலே லவ் எல்லாம் இல்லை. அதுக்கு சொல்லலை” பரபரத்தேன் நான். “எனக்கு இந்த நாலு நாள் வேணும். உங்க கூட பாடணும். நிறைய சிரிக்கணும், பேசணும் அவ்வளவுதான்”
சில நொடிகள் என்னையே விழியகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு என்னதான் தோன்றியதோ, அவன் உதட்டோரம் வந்து அமர்ந்தது ஒற்றைத் துளி புன்னகை. பேரதிசயத்தை பார்த்ததைப் போல் விரிந்தன என் கண்கள்.
“டன்” என்றான் மெதுவான குரலில். எனக்குள்ளே சந்தோஷ மழை.
“இன்னும் ஒரே ஒரு ரிக்வஸ்ட்”
“சொல்லு.” புன்னகை அங்கேயே இருந்தது.
“இந்த நாலு நாளும் என்னை பழையபடி பாப்பானு கூப்பிடறீங்களா?” நான் கேட்க சடக்கென்று என்னை விட்டு பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் ஷ்யாம். எந்த பழைய நினைவுகள் அவனை அழுத்தினவோ தெரியவில்லை.
இரண்டொரு நிமிடங்கள் எங்களிடையே மௌனக்காற்று வீசியது. கைப்பேசியில் வந்திருந்த வாட்ஸ் ஆப் செய்திகளை படித்தபடியே அமர்ந்திருந்தவனுக்குள் என்ன ஓடியது என்பது எனக்கு தெரியவில்லை.
ஆறு மாதங்கள் முன்னால் வரை அவன் என்னை “சந்தியா” என்று அழைத்ததை விட “பாப்பா” என அழைத்ததே அதிகம். அவன் சாதாரணமாகக் கூட அழைத்திருக்கலாம். ஆனால் அந்த அழைப்பில் என்னால் அழகானதொரு அன்னியோன்னியத்தை உணர முடிந்திருந்தது,
அதன் பிறகு நடந்த சம்பவங்களினால் அவன் இயல்பாகவே அந்த அழைப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டிருந்தான்.
இப்போது இந்த நான்கு நாட்கள் மட்டும் அந்த அழைப்பை ரசித்து ரசித்து எனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு பேராசை எனக்கு.
“தப்போ அது? ஆம். பேராசைகள் எப்போதுமே தவறுதான். மறுபடியும் கோபம் மூண்டதோ அவனுக்கு. சரி வேண்டாம் என சொல்லி விடலாமா?” ஒரு வித தவிப்புடன் நான் அவன் முகம் பார்க்க
“காபி குடிக்கறியா பாப்பா?” என்றபடியே வெகு இயல்பாக நிமிர்ந்தானே பார்க்கவேண்டும் நான் திக்கு முக்காடிப்போனேன்.
“இரு வரேன்” சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்து அகன்றான் இசை மன்னன்.
தொடரும்
error: Content is protected !!