Skip to content
Post Views: 2,500
செடியை விட்டு நான் பிரித்த பூக்கள் கொடுத்த சாபமோ? உன்
ஒற்றை நொடி பார்வைக்காக ஏங்கிக் கிடக்கிறேன் நான்!
யாராக இருந்தாலும் அந்த வார்த்தைகளை சொன்னவனை அடித்துப் புரட்டிவிடும் ஆத்திரம் வரும்தான். ஆனால் எனக்காக, நான் சொன்ன வார்த்தைக்காக தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறான் ஷ்யாம்.
இது அவன் மீது எப்போதும் வீசப்படும், அவனை சிதறிப்போக வைக்கும் அணுகுண்டு.
Advertisement
இந்த உலகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் புரியும் ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். அதற்காக ஆண் என்பதலாயே ஒருவனை குற்றவாளி என்று சொல்வது எத்தனை பெரிய பாவம். அழுத்தமாக வலித்தது எனக்குள்ளே.
உறங்கிக்கொண்டிருந்தவனை சில நொடிகள் பார்த்தவள் அவன் கரத்தை மிக மென்மையாக பிடித்துக்கொண்டேன். எனது வயிற்றின் மீது சில நொடிகள் வைத்துக்கொண்டேன். சடக்கென அசைந்தான் ஷ்யாம். நான் உடனே எனது கரத்தை விலக்கிக்கொள்ள
“என்னாச்சு? கூப்பிட்டியா” என்றான் அரை குறை உறக்கத்தில். செவ்வரியோடிக்கிடந்தன அவனது விழிகள்.
Advertisement
“இ..இல்ல நான் கூப்பிடல ” நான் திணற
Advertisement
“தூங்கு பேசாம” கைகளை கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் ஷ்யாம். அவன் முகம் பார்த்து புன்னகைத்துக்கொண்டேன் நான்.
இப்போது அவனை இன்னுமாக பிடிப்பதைப் போலே இருந்தது எனக்கு.
“மலரே மௌனமா உங்களோட மட்டும்தான் பாடுவேன்னு மேடம் மேடை போட்டு சொன்னாங்களே?” சற்று முன் அவர் சொன்னாரே அது என்னவோ அப்பட்டமான உண்மைதான்.
Advertisement
நானும் சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன், பழைய நினைவுகளின் சுனாமி எனக்குள்ளே.
“நான் திரைத்துறையில் பாட ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கழிந்திருந்த நிலையில் எனது வாழ்வில் வந்தது அந்த நாள். அப்போது சித்தாரா மேல் படிப்புக்காக டெல்லி சென்றிருந்தாள்.
அன்று மாலையில் திரைத்துறையை சேர்ந்த ஒருவரின் வீட்டு திருமண வரவேற்புக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன் நான். ஷ்யாம் என் வீட்டுக்கு வந்து என்னை அழைத்து செல்வதாக திட்டம்.
“நீயும் வாயேன்மா. பெரிய பெரிய ஸ்டார்ஸ் எல்லாரும் வருவாங்க எல்லார்கிட்டேயும் நீ பேசலாம். உன்னை எல்லார்கிட்டேயும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்’ எனக்கு ஆசையாசையாய் தலைவாரிப் பின்னிக்கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டேன் நான்.
‘அதெல்லாம் வேண்டாம். எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லைமா. நீ பத்திரமா போயிட்டு பத்திரமா வா” என்றாள் அம்மா. என்னுடைய பாதுகாப்பு குறித்து அம்மாவுக்கு எப்போதும் பயம் அதிகம்.
எனக்கு தலைவாரிப் பின்னிவிடுவது அம்மாவுக்கு எப்போதும் பிடிக்கும். இருந்தாலும் அம்மா எனக்கு இப்படியெல்லாம் செய்து பல நாட்கள் ஆகின்றன. ஏனோ அன்று என்னை பார்த்து பார்த்து அலங்கரித்தாள் அம்மா. தலை நிறைய மல்லிகை சரத்தை சூடிவிட்டு கண்ணார ரசித்தாள்.
அன்றிரவு நான் திரும்பி வரும்போது இப்போது இருக்கும் எல்லா சூழ்நிலையும் தலை கீழாக மாறி இருக்கக்கூடும் என்று அப்போது எங்கள் இருவருக்குமே தோன்றவில்லை.
ஷ்யாம் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துக்கொண்டு கிளம்பிய நேரத்தில் “ஷ்யாம் சந்தியாவை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோப்பா” என்றாள் அம்மா.
அவன் புன்னகையுடன் தலையசைத்தான் ‘நான் ரொம்ப பத்திரமா பார்த்துக்கறேன். நீங்க கவலைப்படாதீங்க”
ஏனோ அவன் காரில் ஏற மனமே இல்லை எனக்கு அம்மாவை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றுதான் ஏறினேன் நான்.
“பத்திரமா இருந்துக்கோமா” அம்மா மறுபடியும் சொன்னாள்.
போகும் வழியெல்லாம் ஷ்யாமிடம் கூட சரியாக பேசவேயில்லை. அப்பா இல்லாமல் அம்மா என்னை வளர்ப்பதற்கு என்னென்ன சிரமங்களை கடந்திருப்பார் என்பதை யோசித்துக்கொண்டே சாலையை வெறித்துக் கொண்டிருந்தேன்.
களைக்கட்டிக் கிடந்த திருமண அரங்கை அடைந்த பிறகு எண்ணங்கள் திசை மாறிப்போயின. அங்கே இருந்த அலங்காரங்களையும், ஆடம்பரங்களையும் வியந்து ரசித்திருந்தேன்.
சிறிய, பெரிய பாடகர்கள் நட்சத்திரங்கள் என அனைவரிடமும் ஷ்யாம் என்னை அறிமுகப்படுத்தி வைக்க அங்கே பொங்கி வழிந்துக்கொண்டிருந்த உற்சாகத்தில் கலந்து போனேன் நான்.
சில மணி நேரங்கள் கடக்க திடீரென என்னுடனே நின்றுக்கொண்டிருந்த ஷ்யாம் கண்களுக்கு தென்படவில்லை.
“ஏதோ ஒன்று சரியில்லை’ என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது எனக்கு. ஏதோ ஒரு பெரிய தப்பு செய்துவிட்டேன் என்று தோன்றியது. இன்று இங்கே வந்திருக்கவே கூடாது எனத் தோன்றியது.
வயிற்றுக்குள் பய அலைகள் உருவாக அவசரமாக ஷ்யாமின் எண்ணுக்கு அழைத்தேன். அந்த நேரத்தில் அவன் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தான்.
அந்த கூட்டத்திலும் தனிமையை உணர்ந்தேன். காரணம் தெரியாத அந்த பய உணர்வுகள் எனக்குள்ளே அதிகரித்துக்கொண்டிருக்க அந்த நேரத்தில் ஒரு கரம் எனது கரத்தை அழுந்தப் பிடித்தது.
உடல் முழுவதும் தூக்கிப்போட திரும்பினேன். ஷ்யாம்தான் நின்றுக்கொண்டிருந்தான். அவன் முகமும், அதிலிருந்த ஏதோ ஒரு செய்தியும் என் பய உணர்வை அதிகரித்தது.
“என்னாச்சு ஷ்யாம்ஸ்?” குரல் ஏனோ வெளி வர மறுத்தது.
‘அது கொஞ்சம் பிரச்சனை. நாம இங்கிருந்து கிளம்பலாம்” என்றான் என்னை கை பிடித்து இழுத்து நகர்த்திக்கொண்டே.
“என்னனு சொல்லுங்க ஷ்யாம்”
“சொல்றேன். சொல்றேன். பதறாம வா” எனது கரம் விடுவிக்காமலே காருக்கு அருகில் அழைத்து வந்தான். வாகன நெரிசலிலிருந்து கார் வெளி வர பல நிமிடங்கள் பிடிக்க அவன் முகத்தில் கலவரம் கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டிருந்தது.
“பாப்பா.. எப்பவும் தைரியமா இருக்கணும் என்ன. உனக்கு யாருமில்லைன்னு நினைச்சுக்காதே. நான் உன் கூடவே இருப்பேன். சரியா” அவன் குரல் ஏதேதோ செய்திகளை உணர்த்தியது. உயிர் நடுங்கியது எனக்கு.
“அம்மாக்கு என்னாச்சு ஷ்யாம்?’ குரல் நடுங்க கேட்டேன் நான்.
சடக்கென திரும்பி பார்த்தான் என்னை. காரின் ஏசியை மீறி வியர்த்தது அவனுக்கு. எனது கண்ணீரை பார்க்கும் தைரியம் இல்லை அவனுக்கு என்று தோன்றியது. ஒரு கையால் காரை செலுத்திக்கொண்டே இன்னொரு கையால் எனது கரத்தை பிடித்துக்கொண்டான்.
“ஒரு பத்து நிமிஷத்திலே வீட்டுக்கு போயிடுவோம் இரு பாப்பா. கொஞ்சம் பொறுமையா இரு” கரகரவென எனது கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த பயணம் முழுவதும் அவன் எனது கரத்தை விடவில்லை.
வீட்டை அடைந்தோம் நாங்கள். சில மணி நேரம் முன்னால் எனக்கு தலைப்பின்னி அலங்கரித்து அழகு பார்த்த அம்மா தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். பரண் மேலிருக்கும் ஏதோ ஒரு பொருளை எடுக்க ஸ்டூலின் மேலே ஏறியவர் பின்னால் சரிந்து கீழே விழ அதன் பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை.
வீட்டின் கதவு திறந்தே இருக்க வீட்டுக்குள் வந்த பக்கத்து வீட்டு பெண் அம்மாவை பார்த்துவிட்டு என்னை தொடர்பு கொள்ள முயன்று முடியாமல், கடைசியில் அம்மாவின் கைப்பேசியிலிருந்து ஷ்யாமின் எண்ணிற்கு அழைத்து விவரத்தை சொல்லி இருக்கிறாள்.
“அம்மாக்குனு யாருமில்லைடா தங்கம். அம்மாவை விட்டு எங்கேயும் போயிடாதே தங்கம். கடைசி வரைக்கும் அம்மா கூடவே இருடா தங்கம்” முன்பொரு நாள் அம்மா சொன்னது மட்டுமே இப்போது எனது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.
“இப்படி நடக்குமென தெரிந்துக்கொண்டுதான் சொன்னாளா அம்மா? இல்லையே! கடைசி நிமிடத்தில் நான் அம்மாவுடன் இல்லையே!”
“எனக்கு அம்மா வேணும் ஷ்யாம்” உடைந்தேன் நான். கதறினேன் நான்.
மற்றவர்கள் அனைவரும் வந்து சேரும் வரை அன்றிரவு வீட்டில் அம்மாவின் அருகில் நானும் ஷ்யாமும் மட்டுமே அமர்ந்திருந்தோம். அந்த நேரத்தில் அவன் தோள்கள் என்னருகில் இல்லையென்றால் நானும் அம்மாவுடன் கிளம்பியிருப்பேனோ என்னவோ?
“சரிடா. சரிடா. தைரியமா இருடா பாப்பா. நான் இருக்கேன்டா. உன் கூடவே இருக்கேன்டா” எனது ஒவ்வொரு சொட்டு கண்ணீரையும் தாங்கிக்கொண்டான் அவன்.
அங்கே மற்ற காரியங்கள் எப்படி நடந்தன என்பது கூட எனக்கு தெரியாது. மொத்தமாக எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான். அடுத்த நாள் மாலையில்தான் வந்து சேர்ந்தாள் சித்தாரா. அதற்குள் எல்லாமே நடந்து முடிந்திருந்தன.
அதன் பிறகு வந்த நாட்களிலும் என்னை முழுவதுமாக தாங்கிக் கொண்டனர் ஷ்யாமும் சித்தாராவும்.
உறவென்று உடனிருந்து தாங்கிக்கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை எனக்கு. அம்மாவுக்காக அழுது அழுது எனது கண்ணீர் முழுவதும் வற்றிப்போயிருக்க சரியாக சாப்பிடாமல், பாடாமல், சிரிக்காமல் ஒரு பொம்மையாய் நாட்களை கடத்திக்கொண்டிருந்தேன் நான்.
என்னை பார்க்கும் போது ஷ்யாமுக்கே கொஞ்சம் பயம் தோன்றியிருக்க வேண்டும். .நானும் அம்மாவைத் தேடி போய்விடுவேனோ என்ற பயம் வந்திருக்க வேண்டும் அவனுக்கு.
அவனது அலுவலகத்துக்கு என்னை தினமும் அழைத்து சென்று விடுவான். ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்து என்னை இயக்கிக்கொண்டே இருப்பான். இரவு நேரங்களில் சித்தாராவுடன் நான் இருக்கும்படி பார்த்துக்கொள்வான்.
நான் சில மணி நேரங்கள் கண்ணில் தென்படவில்லை என்றால் என்னை தேடிக்கொண்டு ஓடி வருவான்
“நல்லா இருக்கதானே பாப்பா. எதுவும் தப்பான முடிவுக்கு எல்லாம் போயிடாதே” அவனது படபடப்புக்கான காரணம் எனக்கு நன்றாகத் தெரியும்.
நான் பாடவில்லை என்றாலும் நான் இசையை விட்டு விலகி விடாதவாறு பார்த்துக்கொண்டான் ஷ்யாம்.
“பாட்டு வேண்டாமா பாப்பா? என் பாட்டு கேக்க மாட்டியா பாப்பா?” என்பான் என் கண்களுக்குள் பார்த்து. “மியூசிக்தான் பாப்பா எல்லாத்துக்கும் மருந்து” அவன் இசையமைக்கும் நேரங்களில் ரெக்கார்டிங் தியேட்டருக்கு. அழைத்து சென்றுவிடுவான்.
நான் விரும்பவில்லை என்றாலும் கூட தினமும் அவனிசையும் அவன் குரலும் என்னை தொடர்ந்து கொண்டே இருந்தன. நான் அறியாமலே எனது வலிகளிலிருந்து நான் மெல்ல மீண்டு கொண்டிருந்தேன். இசை என்னை மீட்டுக் கொண்டிருந்தது.
இப்படியே மூன்று, நான்கு மாதங்கள் கடந்திருந்த நிலையில்தான் வந்தது அந்த இசை நிகழ்ச்சி.
இசை நிகழ்ச்சி நடக்கப்போகும் அன்றைய தினம். அவன் வீட்டில் நானும் அவனும் அமர்ந்திருக்க, என்னை அதில் பாடச் சொல்லி வறுப்புறுத்திக் கொண்டிருந்தான் ஷ்யாம். நான் மறுத்துக் கொண்டேயிருக்க
“எனக்கு தெரியாதுப்பா. அப்புறம் அவனோட அந்த சங்கீதாதான் மலரே மௌனமா பாடுவா” என்றாள் அங்கே வந்த சித்தாரா. என்னுடைய பலவீனம் நன்றாகத் தெரியும் சித்தாராவுக்கு.
நான் அசையாமல் அமர்ந்திருந்தேன். ஆனால் என்னால் ஏனோ அந்த வார்த்தைகளை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
“நீ சங்கீதாவுக்கு போன் பண்ணு ஷ்யாம்” அவள் இன்னுமாக தூபம் போட என் நிலையிலிருந்து அசையவில்லை நான்.
“எனக்கு பாட பிடிக்கலை என்னை விட்டிடுங்க” கத்தினேன் நான். நிகழ்ச்சி துவங்க இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்க
சிகப்பும் கருப்பும் கலந்த கட்டங்கள் போட்ட முழுக்கை சட்டை, அதற்கேற்ற அடர் நீல ஜீன்ஸ் என அவன் தயாராகி என் முன்னே வந்தான்.
இறுகிய சிலையாய் நான் அமர்ந்திருக்க நான் அமர்ந்திருந்த சோபாவின் இரு பக்கத்திலும் கைகளை ஊன்றிக்கொண்டு என் விழிகளுக்குள் பார்த்தான்.
“ரொம்ப நாளாச்சு பாப்பா ஸ்டேஜ்லே பாடி. நீயும் கூட வாயேன்” மெல்ல மெல்ல கரைந்தேன் நான். ஆனாலும் பதில் பேசவில்லை.
“என் கூட பாட மாட்டியா பாப்பா?” கரகர குரலில் வந்தது அடுத்தக் கேள்வி.
அதை கேட்ட நேரம் அவன் கண்ணின் ஓரம் ஒற்றை கண்ணீர் துளி. நான் இல்லாமல் கிளம்புவதற்கு அவனுக்கு மனமே இல்லை போலும். அவ்வளவுதான்! அவ்வளவேதான். என்னுடைய வலிகள் எல்லாம் எனக்கு மறந்திருந்தன. நான் மொத்தமாக உருகியிருந்தேன்.
“நானும் வரேன் ஷ்யாம். நான்தான் உங்ககூட பாடுவேன்” சட்டென எழுந்து அவனை இழுத்து அவன் தோள் சாய்ந்து அணைத்து குலுங்கினேன் நான்.
அவனும் அவன் இசையும் எனக்கு மட்டுமே சொந்தம் எனது உள்ளம் அரற்றிய முதல் நொடி அதுவாகத்தான் இருந்தது.
அவனும் என்னை அணைத்துக்கொள்வான் என நான் நினைக்க எனது இறுக்கமான அணைப்பில் அவனது உடல் மொழியில் சட்டென ஒரு இறுக்கம். இதை அவன் எதிரபார்க்கவில்லை என்று தோன்றியது. இதில் அவனுக்கு துளியும் உடன்பாடு இல்லை என தோன்றியது
அடுத்த நொடி அவனை விட்டு விலகி நின்றேன் நான். “சாரி ஷ்யாம்”
“ரெடியாகு சந்தியா போகலாம்” அவனுக்கு என்ன புரிந்ததோ, என்ன நினைத்தானோ அந்த நொடியே வந்து பாப்பா சந்தியாவாக மாறியிருந்தது. தலை குனிந்துக்கொண்டு அங்கிருந்து அகன்றான் அவன்.
“அப்படி சட்டென உணர்ச்சி வசப் பட்டிருக்கக் கூடாதோ நான்?” கத்தி முனையாய் கீறியது கேள்வி.
கண்களில் கண்ணீர் வழிய சில மாதங்களுக்கு பிறகு மேடையேறினேன் நான் இணைந்து பாடினோம் இருவரும். ஆனால் இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு ஒன்று விழுந்திருந்ததை என்னால் நன்றாக உணர முடிந்தது.
ஆனாலும் எனக்குள்ளே என் ஷ்யாம் என் ஷ்யாமாகவே இருந்தான். அதே நேரத்தில் மறந்தும் கூட அவனது கை விரலைக் கூட தொட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் நான்.
அப்போது வந்தது அந்த திரைப்பட வாய்ப்பு. கர்நாடக இசை சம்மந்தப்பட்ட கதை. அதற்கு இசையமைக்கும் பெரிய வாய்ப்பு. அது ஒரு பெரிய நடிகர் நடிக்கும் படமும் கூட.
“ஏதாவது ஒரு படத்திலே நீ, இந்த கர்நாடக சங்கீதம் மாதிரி வருமே அது மாதிரி பாட்டெலாம் பாடணும். அதுக்கு அவார்டு எல்லாம் கிடைக்கும்” முன்பு ஏக்கமும் ஆசையுமாக சொன்னாளே அம்மா அந்த ஆசையை நிறைவேற்றும் ஒரு வாய்ப்பு.
உடனேயே ஒப்புக்கொண்டோம். ஒன்றாக சேர்ந்து இசையமைத்தோம். அந்த படத்தில் எல்லா பாடல்களையும் நானே பாடினேன். படமும், பாடல்களும் மாபெரும் வெற்றி. வந்து குவிந்தன பாராட்டுக்கள். குறிப்பாக எனக்கு
“நீ இன்னும் இன்னும் நிறைய சாதிக்கணும் சந்தியா” என்றான் நெகிழ்ந்த குரலில்.
ஆனாலும் என்னை விட்டு மனதளவில் அவன் சற்று தள்ளியே நின்றான் என்றுதான் சொல்ல வேண்டும். ஓரிரு முறை அவனறியாமல் வந்து கொண்டிருந்த பாப்பா முழுவதுமாக சந்தியாவாக மாறியிருந்தது.
ஆறு மாதங்களுக்கு முன்னால் வந்தது அந்த தினம்.
அன்று அந்த திரைப்படத்தின் நூறாவது நாள் விழா கொண்டாடப்பட்டது. அவனுக்காக சாரு என்று ஒருத்தி இருக்கிறாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லையே நான். தெரிந்திருந்தால் நான் கண்டிப்பாக என் மனதை பொது வெளியில் வெளிப்படுத்தியிருக்க மாட்டேன் என்பது மட்டும் சத்தியம்.
நானும் ஷ்யாமும் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டோம். அந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நானும் ஷ்யாமும் நினைவு பரிசை பெற ஒன்றாக மேடையேறினோம்.
பலத்த கைதட்டல்கள் எங்களை ஆரவாரித்த நேரத்தில் மேடையில் நினைவு பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்த அந்த பாடகர் எங்கள் இருவரையும் வாழ்த்திவிட்டு
”சந்தியா உங்க மலரே மௌனமா என்னோட ஃபேவரிட். என்னோட ரெண்டு வரி பாடறீங்களா?” என்றார் சாதாரணமாக. எங்களை விட சற்று மூத்த பாடகர் அவர்.
பாடியிருக்க வேண்டும் நான். செய்யவில்லை.
திரும்பி ஷ்யாமின் முகம் பார்த்தேன். அவன் சலனமில்லா புன்னகையுடன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு என்னை பார்த்திருந்தான். அந்தப் பாடல் எங்கள் இருவருக்கு மட்டுமே சொந்தம் என ஒரு பைத்தியக்காரத்தனமான எண்ணம் எனக்குள்ளே.
“ஏன் சார் கூடத்தான் பாடுவீங்களா? என் கூட பாட மாட்டீங்களா?” அவர் விளையாட்டாகத்தான் கேட்டார்.
“ஆமாம் சார்” என்றேன் நான் சட்டென. சற்றே அதிர்ந்த பாவம் ஷ்யாமின் முகத்தில் “
“அந்தப் பாட்டு எனக்கு ரொம்ப சென்டிமென்டான பாட்டு.. அதை ஷ்யாமோட மட்டும்தான் பகிர்ந்துக்க முடியும்” உறுதியாக சொன்னேன் நான்.
திடுக்கென உடல் அதிர குலுங்கி எழுந்தான் விமானத்தில் என்னருகில் அமர்ந்திருந்த ஷ்யாம். அவசரமாக சுற்றி முற்றி பார்த்தான் அவன். எதையோ தவிப்புடன் தேடும் பாவம் இருந்தது அவன் கண்களில்,
தான் விமானத்தில் இருப்பது சில நிமிடங்கள் கழித்துதான் அவனுக்கு புரிந்தது போலும், தன்னை சீர்ப்படுத்திக்கொண்டு இருக்கையில் சாய்ந்து ஆழ் மூச்சு எடுத்துக்கொண்டவன் சட்டென திரும்பி என் முகம் பார்த்தான்.
“என்னாச்சு ஷ்யாம்?” நான் கேட்க
“இல்ல ஒண்ணுமில்லை” கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டான் அவன்.
விமானம் தரையிறங்கும் போது சிங்கபபூர் நேரம் காலை எட்டரையை தொட்டிருந்தது.
பட்டாம் பூச்சி தோட்டம், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குள வசதிகள், 10 மாடி புதிய ஷாப்பிங் மால், நீர் வீழ்ச்சிகள், உள் அரங்கிலேயே அமைத்திருக்கும் காடுகள் என பிரம்மாண்டமாக இருக்கும் உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் எங்களை வரவேற்றது.
அதன் பிரமாண்டத்தை நான் விரிந்த விழிகளால் ரசித்துக்கொண்டிருக்க, எதற்குள்ளோ விழுந்து தொலைந்து போனவனைப்போல் ஒரு ஆழ்ந்த அமைதி ஷ்யாமிடம். எங்களை அழைத்து செல்ல வெளியே கார் காத்திருக்க, எங்கள் உடமைகளுக்காக நாங்கள் காத்திருந்த சமயத்தில் கூட ஒன்றுமே பேசவில்லை அவன்.
“ஜுவல் ஃபால்ஸ் பார்க்கலாமா ஷ்யாம். இங்கே புதுசா ஓபன் பண்ணி இருக்காங்களாம். டைம் இருக்குமா?” நான் கேட்க
“இன்னைக்கு இல்ல நாளைக்குதான் ப்ரோக்ராம். இன்னைக்கு ரிஹர்சல்” என்றான் சம்மதமே இல்லாமல்.
“ஷ்யாம் நான் என்ன கேக்கறேன்?” நீங்க என்ன சொல்றீங்க?” நான் அவனை குரலால் உலுக்க
“ஆங்.. என்ன கேட்ட?” எங்கிருந்தோ கீழிறங்கினான் அவன். அதற்கு மேல் நான் எதுவுமே கேட்கவில்லை. என்ன ஓடிக்கொண்டிருக்கிறது அவனுக்குள் புரியவில்லை எனக்கு.
எங்கள் உடமைகளை ட்ராலியில் வைத்து தள்ளிக்கொண்டு நடந்தோம். என்னிடம் நிறையவே ஜாக்கிரதை உணர்வு. நான் மெதுவாகவே நடக்க, ஷ்யாமும் என் வேகத்துக்கே நடக்க வாயிலை அடைந்த நேரத்தில்
“ஹலோ ஷ்யாம் சார்” குரல் கேட்க நாங்கள் இருவரும் நின்று திரும்ப அங்கே நின்றிருந்தான் தனா. அவனருகில் சாரு.
.”டேய்.. என்னடா இங்கே நிக்குற?” இத்தனை நேரம் காணாமல் போயிருந்த ஷ்யாமின் மொத்த உற்சாகமும் அவனிடம் ஓடி வந்து அமர்ந்துக்கொண்டது.
உயிர் வற்றிப்போகும் என்று சொல்வார்களே அதை நான் இத்தனை நாட்கள் வார்த்தைகளில்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அதை மொத்தமாக உணர்ந்தேன் நான். உடலில் இருந்த மொத்த சக்தியும் வடிந்து போனதைப்போல் நின்றேன் நான்.
‘இந்த நான்கு நாட்கள் எனக்கானது இல்லையா?’
“என்னடா வரமாட்டேன்னு சொன்னே?” சந்தோஷ குரலில் கேட்டான் ஷ்யாம்.
error: Content is protected !!