Skip to content
Post Views: 5,133
தூறல் – 10
அதிகாலை வேளையில் மதுரை வந்து சேர்ந்திருந்தான் குரு. மனதில் ஒரு சிறு நிம்மதி. இரு உயிர்களை காப்பாற்றியதை தாண்டி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை அவளுக்குள் அழுத்தமாக பதித்ததில் ஒரு சிறு மகிழ்ச்சி. அதையும் தாண்டி அவளுக்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து வந்ததில் ஓர் நிறைவு.
Advertisement
சவியை நினைத்தவுடன் பார்க்க முடியாது என்று எண்ணும்போது மெலிதான வலியும் தோன்றியது. அவனது புண்ணான இதயத்திற்கு அந்த பொன்னான புன்னகை அத்தனை ஓர் ஆறுதலை கொடுக்கும்.
தாய்க்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக கண்களை உருட்டி உருட்டி தலை சாய்த்து அவனைப் பார்த்து சிரிப்பதும், கண்கள் முழுக்க அன்பை தேக்கி அவனை பார்ப்பதும் என்று அவனை நிறையவே கட்டிப் போட்டிருந்தாள் சவி.
Advertisement
Advertisement
எப்படியோ அஞ்சலியின் மனதில் தேங்கியிருந்த தன் மீதான தவறுதலான எண்ணத்தையும் களைந்து எறிந்தாயிற்று. சாமர்த்தியமான பெண்தான்… சாதுரியமாக பிழைத்துக் கொள்வாள் என்று தோன்றியது.
ஆனாலும் அவள் மீதான அவள் குழந்தையின் மீதான பாதுகாப்பு தன்னைச் சேர்ந்தது என்று அவனையும் அறியாமல் ஆழமாக மனதிற்குள் ஒரு எண்ணம் பதிந்து போனது. அத்தை அருகில் இருக்கிறார்தான். ஆனால் ஒரு பெண் தனித்து வாழ்வதில் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவனுக்கும் தெரியும்.
Advertisement
முதலில் அந்த வாழ்க்கைக்கு அவள் அவளை பழக்கிக் கொள்ளட்டும். அடுத்து நடப்பதை பிறகு பார்க்கலாம். தனக்குள் சொல்லிக் கொண்டவன் சிறிது நேரம் உறங்கி எழுந்தான்.
பின் வழக்கம்போல் பணிக்கு கிளம்பி முன்னே வர அஞ்சலியின் வீட்டில் ஆட்களின் நடமாட்டம் தெரிந்தது. அவனது வயதை ஒத்த ஆண் ஒருவன் வாசலில் யாருடனோ நின்று தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான். அவன் முகச் சாயலை வைத்து அஞ்சலியின் அண்ணன் என்பதை அறிந்து கொண்டான். அவனைப் பார்க்கையில் எரிச்சலும் கோபமும்தான் எழுந்தது.
கையில் கீரைக் கட்டுடன் அந்த பக்கமாக நடந்து சென்ற காமாட்சி அவனைப் பார்த்து சிரித்தபடியே அவனை நெருங்கினார்.
“எப்போ தம்பி வந்தீங்க..?”
“காலையிலதான் கா…”
சட்டென குரலை தழைத்துக் கொண்டவர் “அஞ்சலியை பத்தி ஒரு தகவலும் தெரியல… இவய்ங்களும் எங்கெங்கயோ ஆள் அனுப்பி எப்படி எப்படியோ விசாரிக்கிறாய்ங்க. போலீஸ்ல போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமான்னா அப்பனும் அவ அண்ணனும் சம்மதிக்க மாட்டேங்கிறாய்ங்க. குடும்ப கவுரவம் போயிடுமாம்… பிள்ளையே வீட்ட விட்டு போயிருச்சு… இவனுகளுக்கு கவுரவம் ஒன்னுதான் கேடு… பொசகெட்ட பயலுக…”
தலையில் அடித்தபடி பேசினார் காமாட்சி.
“நேத்து ராத்திரி பாக்கணுமே.. அந்த தேனிக்காரய்ங்க வந்து ஆடின ஆட்டத்தை… அப்பப்பா… நல்லவேளை… அந்த புள்ள வீட்டை விட்டு போனது எவ்வளவோ நல்லதுதேன். கொஞ்சம் வார்த்தைகளா கேட்டாய்ங்க… காதே அவிஞ்சு போற அளவுக்கு பேசிட்டாய்ங்க. மொத்த தெருவும் நின்னு வேடிக்கை பாக்குற அளவுக்கு அம்புட்டு அசிங்கமா பேசனாய்ங்க. யாரையோ இழுத்துக்கிட்டுதேன் இவ ஓடிட்டா… கள்ளப்புருஷன் கூட ஓடிப் போனா… பொறந்த புள்ளகூட எங்க வீட்டு பையனுக்கு பொறந்ததா இல்ல வேற ஒருத்தனுக்கு சொமந்து பெத்தாளான்னு கேட்ட கேள்வி இவ்வளவுதேன்னு இல்ல தம்பி…”
காமாட்சி பேசியதை கேட்க கேட்க வெறியில் உச்சி முடி நட்டுக் கொண்டு கைமுஷ்டி தானாகவே இறுகியது. அத்தனை பேரையும் அடித்து நொறுக்கும் ஆவேசம் கொந்தளித்துக் கிளம்பியது.
“கேடுகெட்ட நாய்ங்க…” பல்லை கடித்து உறுமினான்.
“அஞ்சலி அண்ணன்காரன் அதுக்குமேல ஆடறான். தங்கச்சி சந்தி சிரிக்க வச்சுட்டாளாம்… அப்படியே கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்தாலும் தீ வச்சு கொளுத்திருவானாம். ரெண்டு குடும்பத்துக்கும் அடிதடியே ஆகிப்போச்சு…”
உள்ளுக்குள் பிரவாகமாய் வெறி கிளர்ந்து எழுந்தாலும் அனைத்தையும் கட்டுப்படுத்தி முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றிருந்தான் குரு.
“சரி தம்பி… உங்களுக்கு பள்ளியோடத்துக்கு நேரமாச்சு… நீங்க கெளம்புங்க… சாயங்காலமா பேசிக்கலாம்…” என்றவர் அங்கிருந்து கிளம்பியிருக்க தானும் தன் வண்டியை கிளப்பிக் கொண்டு பள்ளியை நோக்கி செலுத்தினான் குரு.
வந்த சில நாட்களிலேயே பள்ளியிலும் அவனுக்கு நல்ல பெயர். அவனது கற்பிக்கும் திறனில் மாணவர்கள் மட்டுமல்ல சக ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் அவனிடம் தனி மதிப்பு காட்டியது.
கையில் பிரம்பை தூக்காமல் கண்களில் கண்டிப்பை காட்டி மாணவர்களிடம் அவன் நடந்து கொள்ளும் முறையில் மாணவர்களிடமும் அவனின் மீது அத்தனை பிடித்தம்.
அஞ்சலியின் சான்றிதழ்களை எப்படி வாங்குவது என்றுதான் யோசித்தபடி தனது ஓய்வறையில் அமர்ந்திருந்தான் குரு. பள்ளியிலும் வந்து விசாரித்து சென்றிருக்கிறார்கள். அவளைப் பற்றி ஆங்காங்கே பேசியது தெரிந்தது.
“திறமையான டீச்சர்தான்… ஆனா அந்த பிள்ளைக்கு தனிப்பட்ட முறையில என்ன பிரச்சனையோ..? ஏதோ இங்க வந்து போய்தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. எல்லாருமா சேர்ந்து கெடுத்துப்புட்டாய்ங்க… பாவம் நல்ல புள்ள. மூனு வயசு புள்ளைய கையில வச்சிக்கிட்டு எங்க போயி எப்படி கஷ்டப்படுதோ..?”
அலுவலகப் பணியில் இருந்த ஒரு ஊழியர் சக ஊழியரிடம் பேசிக் கொண்டிருப்பதை அங்கு கையெழுத்திட சென்றபோது கவனித்தான் குரு. மதிய உணவு இடைவேளையின்போது அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தான்.
“சின்னப் புள்ளையா இருந்தப்ப இருந்தே இந்த புள்ளைய நல்லா தெரியும் சார். இங்க வேலைக்கு சேர்த்து விட்டதே நான்தேன். என்கிட்டதேன் கொஞ்சம் மனசுவிட்டு பேசும். நானும் நிறைய ஆறுதல் சொல்லுவேன். போகணும்னு முடிவு பண்ணுன புள்ள என்கிட்ட மட்டுமாச்சும் சொல்லி இருந்தா இந்த சர்டிபிகேட்டை எல்லாம் கையில கொடுத்து அனுப்பி இருப்பேன்… எங்கேயாவது போய் பொழைச்சிருக்குமே…”
அவர் சொன்ன இந்த ஒரு வார்த்தை அவனுக்கு போதுமானதாகிப் போனது. அவள் நல்வாழ்வில் அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதர். அவரை தனியே அழைத்துச் சென்றான்.
“சார்… நீங்க அஞ்சலி மேல ரொம்ப அக்கறையானவர்னு தெரியுது. நீங்க மனசு வச்சா அந்த பொண்ணு பிரச்சனை இல்லாம இருக்கும்…”
புரியாமல் பார்த்தார் அவர்… தங்கபாண்டியன்.
“அஞ்சலி எனக்கு போன் பண்ணி இருந்துச்சு சார்…”
அவருக்கு தோதாக கதையை மாற்றினான்.
“நான்தானே பக்கத்து வீடு… அதுவும் இங்க புதுசா வந்திருக்கிறவன்… வேற யார் மேலேயும் அந்த பொண்ணுக்கு பெருசா நம்பிக்கை இல்ல போல… எங்க இருக்கு என்னன்னு எல்லாம் தெரியாது… எப்படியாவது உங்ககிட்ட பேசி சர்டிபிகேட்டை மட்டும் வாங்கிக் கொடுக்க சொல்லுச்சு…”
“இப்போ அந்தப் புள்ள எந்த ஊர்ல இருக்கு…?” அதிர்ந்து கேட்டார் தங்கபாண்டியன்.
“அதான் சொன்னேனே சார்… ஊரெல்லாம் சொல்லல… சர்டிபிகேட்டை வாங்கிட்டு தகவல் சொல்ல சொல்லுச்சு… அதுக்கு நம்பகமான ஒரு ஆள் இருக்காங்களாம். அவங்க கைல குடுத்துற சொல்லுச்சு…”
இழுத்து நிம்மதி பெருமூச்சு விட்டார் தங்கபாண்டியன்
“எப்படியோ ஏதோ ஒரு பக்கம் அந்தப் புள்ள உயிரோட இருக்கே அதுவே போதும்… தப்பில்ல சார்… என்னையும் உங்களையும் அந்தப் புள்ள நம்பி இருக்கு… அந்த நம்பிக்கையை நாம காப்பாத்தலாம்… எங்கேயோ ஒரு பக்கம் நல்லா இருக்கட்டும்… இன்னைக்கு சாயந்திரம் சத்தம் இல்லாமல் அதோட செர்டிபிகேட் எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்துடுறேன்…”
குருவிற்கு இந்த நொடிதான் நிம்மதியாகவே மூச்சுவிட முடிந்தது.
“சார்… இந்த விஷயம்…”
“சத்தியமா உங்களையும் என்னையும் தவிர யாருக்கும் தெரியாம நான் பாத்துக்குவேன் சார்…”
அவர் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டான் குரு.
நல்ல மனிதர்களும் நாட்டில் ஆங்காங்கே உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தமாக நாடு சூனியம் கொண்ட சுடுகாடாக மாறிவிடவில்லை.
சொன்னது போன்றே அன்று மாலையே அவளது சான்றிதழ்கள் அனைத்தும் அவன் கையில் ஒப்படைக்கப்பட்டன.
அனைத்தையும் பாதுகாப்பாக பேக் செய்து கூரியர் மூலம் ராதாவின் முகவரிக்கு அனுப்பி வைத்தான். பொதுவாக சான்றிதழ்களை கூரியரில் அனுப்புவது பாதுகாப்பானது அல்ல என்பது தெரிந்தாலும் இதை தாண்டி வேறு வழியும் அவனுக்கு இல்லை. நிச்சயம் பத்திரமாக சென்று சேரும் என்று நம்பினான்.
மறுநாள் சான்றிதழ்கள் கையில் கிடைத்துவிட்டது என்று அவளிடம் இருந்து தகவல் வந்த பின்புதான் முழுமையாக ஆசுவாசமானான் குரு.
ராதாவின் கைப்பேசியில் இருந்துதான் அழைத்துப் பேசி இருந்தாள் அஞ்சலி. அவள்தான் இங்கிருந்து செல்லும்போது எதனையும் கையில் எடுத்துச் செல்லவில்லையே. குறிப்பாக கையில் செல்போன் இருந்தால் அதை வைத்தே தன்னை எளிதாக நெருங்கிவிடுவர் என்று பயந்ததால் அனைத்தையும் விடுத்துதான் அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ் குரு சார்…”
“அடிக்கடி இந்த வார்த்தை சொல்லாத அஞ்சலி… அதிலும் இனிமே சார்னு எல்லாம் கூப்பிடாத. என்னமோ மாதிரி இருக்கு. பேர் சொல்லியே கூப்பிடு போதும்…”
“ம்ம்… சவி உங்களை கேட்டா…”
“இப்ப என்ன பண்றா..?”
“இங்க பக்கத்துல நிறைய குழந்தைகள் இருக்காங்கல்ல… சேர்ந்து விளையாடிட்டு இருக்கா… கூப்பிடட்டுமா..?”
“இல்ல வேணாம்… விளையாடட்டும்… உனக்கு அங்கே எல்லாம் ஓகேதானே…”
“ம்ம்… ராதாம்மா ரொம்ப பிரியமா இருக்காங்க… நீங்க பார்த்துக் கொடுத்த வீடு நல்லா இருக்கு. நாளைக்கே அங்கே போறேன்…”
“அத்தை உன்னை அந்த ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவாங்க. நடந்து போற தூரம்தான்… சங்கர்னு அங்கே மேத்ஸ் மாஸ்டர் இருக்கார். அவர் உன்னை ரிஸீவ் பண்ணி பிரின்ஸி கிட்ட கூட்டிட்டு போவார். சர்டிபிகேட்ஸ் கொடுத்து இண்ட்ரோ பண்ணிக்கோ. மத்த விஷயங்கள் நான் பேசிட்டேன். அடுத்த நாள் வேலையில் ஜாயின் பண்ணிக்கலாம்…”
“ம்ம்…” என்றவளுக்கு குரல் அடைத்தது போல் தெரிந்தது.
“அஞ்சலி…”
“ம்ம்…”
“என்னாச்சு..?”
“ஒ..ஒன்னுமில்ல…”
“விதிச்ச காலம் வரைக்கும் வாழறதுன்னு முடிவு பண்ணியாச்சுல்ல. அந்த வாழ்க்கையை சந்தோஷமா மாத்த முயற்சி பண்ணு… குறிப்பா சவிக்காக. இனி அவ சந்தோஷத்துலதான் உன் சந்தோஷம் அடங்கி இருக்கு. அதை மனசுல ஆழமா பதிய வச்சுக்கோ. சவியை அத்தை பார்த்துப்பாங்க… கொஞ்சநாள் கழிச்சு அங்கேயே ப்ரீகேஜி சேர்த்து விட்டுடலாம். என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்கு எப்ப வேணாலும் கால் பண்ணு…”
எதிர் முனையில் விசும்பல் சத்தம் கேட்டது.
“ஹேய் அழறியா.?”
“நீங்க ரொம்ப நல்லவர்…”
“இந்த பட்டத்தை உன்கிட்ட வாங்குறதுக்கு தான் இத்தனை மெனக்கெட்டேன்னு நினைக்கிறியா…”
“நீங்க இயல்பாவே ரொம்ப ரொம்ப நல்லவர்…”
“அப்படியா… ரொம்ப சந்தோஷம்… அதையும் உன் வாயால கேட்கும்போது உண்மையிலேயே சந்தோஷமாதான் இருக்கு…”
இதழ் பிரித்து இவன் சிரித்திருக்க அவளும் அங்கே புன்னகைத்திருக்க வேண்டும்.
“எ..எப்போ வருவீங்க.” கீழிதழை கடித்து தடுமாறியபடிதான் கேட்டாள்.
“சனிக்கிழமை ஏர்லி மார்னிங் அங்கே இருப்பேன்…”
“ம்ம்… என் வீட்ல சூழ்நிலை எப்படி இருக்கு…?”
“எப்படி இருக்கும்னு நினைக்கிற..?”
அவளிடம் பதில் இல்லை.
“உன் அண்ணன்கூட இங்கேதான் இருக்கார்… உன்னை தீவிரமா தேடிட்டு இருக்காங்க…”
“ஐயோ…”
“பயப்படாதே… உன்னை கண்டுபிடிக்க முடியாது… அதெல்லாம் பாத்துக்கலாம்.
. நீ நிம்மதியா இரு…”
இங்கே அவளைப் பற்றி எழுந்த அவதூறான வார்த்தைகளையும் பேச்சுக்களையும் வீட்டாரின் கோபத்தையும் தேவையற்று அவளிடம் கூறி அவளை இன்னும் வதைக்க அவன் விரும்பவில்லை.
“சரி வைக்கிறேன்…” என்றவள் இணைப்பை துண்டித்திருந்தாள்.
உதடு குவித்து மூச்சுவிட்டவன் கட்டிலில் சென்று படுக்க மனமில்லாமல் கூடத்தில் வெறும் தரையில் கைகள் இரண்டையும் தலைக்கு அடியில் கொடுத்து அப்படியே மல்லாக்க படுத்துக் கொண்டான்.
இன்றைய சூழலில் அவளை பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைத்தாயிற்று. இப்போதைக்கு இவர்கள் யாருடைய கண்ணிலும் அவள் படக்கூடாது. இயல்பான அந்த புது வாழ்க்கைக்குள் அவள் சகஜமாகிக் கொள்ளட்டும். பின்னால் பார்க்கலாம்.
அந்த வாரம் அப்படியே கடந்திருந்தது. அன்றாடம் இரவில் ராதாவின் அலைபேசியில் இருந்து அழைத்து விபரங்களை அவனுக்கு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தாள் அஞ்சலி. இப்பொழுதெல்லாம் அவனிடம் சகஜமாக பேசத் தொடங்கி இருந்தாள். குரலிலும் பேச்சிலும் ஒரு தெளிவு தெரிந்தது.
வேலைக்கு சேர்ந்திருந்தாள்… புது வீட்டில் குடி புகுந்திருந்தாள்… ராதாவுடன் இன்னும் நிறைய நெருக்கமாகி இருந்தாள்… சவியும் புது சூழலுக்குள் பொருந்திப் போனாள்.
வெள்ளிக்கிழமை இரவில் இருந்து ஏதோ ஒருவித படபடப்புடன் எதிர்பார்ப்புடன் விடியலை ஆவலாக எதிர்பார்த்தபடி இருந்தாள் அஞ்சலி.
(தொடரும்)
error: Content is protected !!