Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்Contest Stories 2026

தூறலாய் நீ… சாரலாய் நான்…12

தூறல்…12
இரண்டு நாட்கள் இறக்கை கட்டி பறந்திருந்தன. பிரியமான நிமிடங்கள் கண்மூடி திறக்கும் முன் கழிந்து விடுகின்றன. அப்படிப்பட்ட நிமிடங்களைத்தான் அனுபவித்து கிளம்பி இருந்தான் குரு.


Advertisement

இரவு நேரப் பயணத்தில் மீண்டும் மதுரை திரும்ப பேருந்தில் அமர்ந்து கண்மூடி அமர்ந்திருந்தவனின் கண்கள் முழுக்க சவியின் சிரித்த அழகிய முகம்தான். இரண்டு நாட்களாக அவனை விட்டு அகன்றாள் இல்லை. உறங்கும் பொழுதும் அவன் கழுத்தை கட்டிக் கொண்டுதானே உறங்கினாள். அப்படி என்ன பிடித்தமோ இவனிடம். முதல் பார்வையிலேயே அவனிடம் அத்தனை ஒட்டுதலை காட்டினாளே. யார் என்றே தெரியாதபோதே அவனிடம் ஓடிவந்து அவனை கட்டித் தழுவி கழுத்தை கோர்த்துக் கொண்டு அன்னையிடம் அடியைப் பெற்றுக் கொண்டு அழுத நொடிகளை அவனால் மறக்க முடியுமா..?
அழுத விழிகளோடு புலம்பும் இதழ்களோடு அதிகாலைப் பொழுதில் அஞ்சலியை பார்த்த அந்த முதல் நொடிகளும் அவன் இதயத்தில் பத்திரமாய் ஓரமாய் ஒதுங்கித்தான் இருக்கின்றன. வெறுமையும் கோபமும் மட்டுமே சுமந்திருந்த அந்த கண்களில் இன்று புதுவிதமான ஒரு நிறைவை காண்கிறான்.

Advertisement

Advertisement

அவன் விடைபெற்று கிளம்பியபோது சின்னவளின் அழுத முகம் வாட்டியது என்றால் பெரியவளின் கூம்பிய முகமும் உள்ளுக்குள் உறுத்தியதே.
என்னை பிரிவதில் அவளுக்கு என்ன வருத்தமாம்..?

Advertisement

முதல்நாள் இரவு அவனிடம் அத்தனையும் மனம்விட்டுப் பேசினாளே. உள்ளுக்குள் அழுத்தி பூட்டி வைத்திருந்த ஆற்றாமையும் ஏக்கமும் வேதனையும் விரக்தியும் எத்தனை எத்தனை?
அவனது வாழ்வு மொட்டுவிட்டு மலர்ந்து விரிந்து சிரித்தபோது கருகிச் சாம்பலானது.
அவளது வாழ்வு பூப்பெய்தும் முன்னே பூ ஒன்று பூகம்பத்தில் அடித்துச் செல்லப்பட்ட கதைதானே.
தேவதைக் கதை கேட்க ஆரம்பிக்கும்போதே உறக்கம் தழுவிய குழந்தையின் நிலை. 
வாழ்வின் இன்பச்சாரலை அனுபவிக்கவே இல்லை அவள். சுயநலமிகளின் பேராசைக்கு இரையாக்கப்பட்ட பேதை. 
தவறே செய்யாமல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அப்பாவி நிரபராதிப் பெண்.
கணவனை இழந்த இளம் விதவைகளின் நிலை மட்டும் ஏன் எப்பொழுதும் பரிதாபகரமான பூதாகரமான எதிர்காலத்தில் தங்கிப் போகிறது. விதித்த வாழ்க்கையை வாழ்ந்துவிடு… இதை தாண்டி வேறு மார்க்கம் உனக்கு இல்லை என்று இந்த சமூகம் சுட்டிக்காட்டி அவளை காலில் போட்டு நசுக்கி அவளது உணர்வுகளை உயிரோடு புதைத்து விடுகிறது. 
எந்த நூற்றாண்டில் இந்த நிலை மாறும்..?
எங்கோ கடல் தாண்டி பிறந்து வளர்ந்து வாழ்க்கையை துவங்கி அங்கேயே வாழ்க்கையை தொலைத்து வெற்று பிம்பமாய் வேறு மார்க்கம் தேடி வந்தவன், இன்று புதிய அழகான சிறிய குருவிக் கூட்டுக்குள் சிக்கிக் கொண்ட இன்ப அவஸ்தையை உணர்கிறான். அவன் உயிரணுவில் உருவான சவி காற்றோடு கரைந்து காணாமல் போய்விட்டாள். இன்று அதே பெயர் கொண்ட அன்றைய அதே வயதில் கண்ட தன் மகளை இந்த சவியின் உருவத்தில் காண்கிறான்… மகிழ்கிறான்… அவனை மீறி இதயம் பாகாய் உருகி தேனாய் தித்திக்கிறது. அந்த குழந்தைக்காகவே ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிடக் கூடாதா என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. 
அதற்கு மற்றும் ஒரு காரணம் இன்றைய இரவு நிகழ்ந்தது. 
ராதா மற்றும் அஞ்சலியிடம் விடைபெற்று அஞ்சலியின் வீட்டிலிருந்து வெளியே அவன் கிளம்பிவர அஞ்சலி இடுப்பில் இருந்து அவனிடம் தாவி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கதறி அழுதாளே அந்த குட்டிப் பெண். 
“நீங்க இங்கேயே இருங்க… இருங்க… போகாதீங்க…”
விம்மி விம்மி அழுதபடி அவன் சட்டைக் காலரை அவள் நனைத்த நொடி அவன் இதயமும் சேர்ந்தல்லவா ஈரம் கசிந்தது. அவளை தேற்ற முடியாமல் இறுக்கி அணைத்து தன் நெஞ்சில் போட்டு முதுகு வருடியபோது பக்கத்து வீட்டிலிருந்து சிரித்தபடி நெருங்கி வந்தார் ஒரு பெண். 
இந்த ஒரு வாரத்தில் பெரிதான பழக்கம் இல்லை என்றாலும் தினமும் அஞ்சலி போகும்போதும் வரும்போதும் சினேகமாக புன்னகைப்பார். இரண்டு நாட்களாகத்தான் பெயர் வேலை என்று கேட்டுக் கொண்டார். 
“அடடா குட்டிப் பாப்பாவுக்கு எத்தனை அழுகை… அப்பாவை பிரியவே மனசு வரலையோ… அப்பா செல்லமா தங்கம்..? புருஷனும் பொண்டாட்டியும் ஆளுக்கு ஒரு பக்கம் வேலையில இருந்தா பிள்ளைங்க இப்படித்தான் ஏங்கிப் போயிருவாங்க… அழாதடா குட்டி… உன் அப்பா கண்டிப்பா அடுத்த வாரமும் உன்னை பார்க்க வருவார்…” 
சவியின் தலையை வருடியபடியே அக்கறையாக அவர் கூறிக் கொண்டிருக்க மற்ற மூவரின் முகமும் சட்டென மாறி ஒருவரை ஒருவர் சங்கடமாய் பார்த்துக் கொண்டனர்.
“அது…”
குரு ஏதோ கூற வர அவன் கையை அழுத்தமாக பற்றிய ராதா “பாப்பாவை அஞ்சலிகிட்ட கொடுத்துட்டு வா அப்பு… உனக்கு நேரம் ஆகுதுதானே…” என்று கூறி சவியை அவனிடமிருந்து வாங்கி “பாட்டி உனக்கு வரும்போது ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவேன்… சரியா…” என்று சொன்னபடியே அஞ்சலியிடம் ஒப்படைத்து குருவிடம் கண்ணசைத்து கிளம்ப அழும் குழந்தையை மீண்டும் அணைத்து ஆறுதல் செய்தால் கூடுதலாக அழுவாள் என்று கருதியவன் அஞ்சலியிடம் மட்டும் தலையசைத்து அங்கிருந்து நடக்கத் தொடங்கினான். ராதாவும் பேருந்து நிலையம்வரை அவனுடனே நடந்து வந்தார். 
“அத்தை… அந்த அம்மா ஏதோ தப்பா நினைச்சுட்டு இருக்காங்க…” 
“எல்லாருக்கும் விளக்கம் கொடுக்கோணும் என்டு அவசியம் ஒன்டும் இல்ல தம்பி…”
“இருந்தாலும்…” 
“அதை விடு..” வேகமாக இடைமறித்திருந்தார் ராதா.
“ஒரு உண்மையை சொல்லோணும் என்டா இந்த ரெண்டு நாளா நீயும் சவியும் விளையாடினதை பார்க்கும்போது உன் பிள்ளைகிட்ட நீ விளையாடின அந்த நாட்கள்தான் என் கண்ணுக்குள்ள ஓடுது தம்பி… இப்படித்தானே அவா கூடவும் இருந்த. உன் சிரிப்புல உண்மை இருந்தது… உன் கண்ணுல நிஜமான நேசம் இருந்தது… இந்த பிள்ளகிட்ட உன் பிள்ளையை பார்க்கிறியா..?” 
ராதாவின் கேள்விக்கு சட்டென அவனால் பதில் கூற முடியவில்லை. இல்லை என்று எப்படி சொல்வான்..? அவர் கேட்டதுதானே நிஜம். இவளிடம் தன் மகளைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். 
“பேர் கூட ஒத்துப் போயிருச்சு பாத்தியா..?” இழுத்து பெருமூச்சு விட்டுக் கொண்டார் ராதா.
“எனக்கும்கூட உன்னை குடும்பம் குழந்தை என்டு குடும்பஸ்தனா பாக்கணும் என்டு ரொம்ப ஆசை தம்பி…” 
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தும் அமைதியாக நடந்தபடியே திரும்பி அவர் முகம் பார்த்தான் குரு. 
“அந்த அம்மா சொன்ன வாய் முகூர்த்தப்படியே நீ ஏன் சவிக்கு அப்பாவா மாறக்கூடாது..? வாழ்க்கையை இழந்து நிக்கிற அஞ்சலிக்கு தற்காலிக பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணி கொடுத்த நீ ஏன் காலம் முழுக்க அவ மனுஷனா மாறி பாதுகாப்பு கொடுக்கக் கூடாது…?”
“அத்தை…”
நடையை நிறுத்தி அதிர்ந்து அவரைப் பார்த்தான் குரு.
“நான் ஒன்டும் தப்பா கதைக்கலையே அப்பு… காயம் பட்ட இடத்திலே காட்டமான மருந்தை போட்டுதானே புண்ணை சரி பண்றாவோ… ரெண்டு பேருமே வாழ்க்கையில நிறைய இழந்து காயம்பட்டு நிக்கிற பிள்ளைக… ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா ஆதரவா ஒரு அழகான வாழ்க்கையை ஏன் அமைச்சுக்கக் கூடாது… அது ஒன்டும் பிழை இல்லையே… உன்ற வாழ்க்கையை கதற கதற பறிச்சுக்கிட்ட அந்த கடவுள் உனக்கு வேற ஒரு மார்க்கமா வாழ்க்கையை கொடுக்கிறதா நினைக்கலாமே… உன் வாழ்க்கையில எல்லாமே முடிஞ்சு போயிருச்சா தம்பி… இன்னும் எதையுமே பெருசா வாழ்ந்து பார்க்கலையே… உன்னை குடும்பமா பார்த்தா என்ற கட்டையும் நிம்மதியா கண் மூடும்…”
குரு எதுவுமே பேசவில்லை… அமைதியாக அவரோடு நடந்தான். 
“நல்லா யோசி அப்பு… உன்னைவிட வேற ஒருத்தன் அஞ்சலிக்கு நல்ல மனுஷனா இருக்க முடியாது… சவிக்கும் நல்ல தகப்பன் உன்னை தவிர வேறு ஒருத்தன் கிடைக்கமாட்டான். உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைக்குமே ஒரு அர்த்தம் கிடைக்கும். இந்த ரெண்டு நாளாவே இந்த எண்ணம் என் மனசுல ஓடிட்டு இருந்தது. அந்த பொம்பிளையும் எதார்த்தமாவே சொல்லிட்டா…”
“வரேன் அத்தை… பொயிட்டு போன் பண்றேன்…”
தயாராக நின்றிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டான். 
உடனடியான பதிலை அவரும் அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. நிதானமாக யோசிக்கட்டும் என்று நினைத்துக் கொண்டவர் புன்னகையோடு கையசைத்து அவனுக்கு விடை கொடுத்திருந்தார்.
இரவு நேர பிரயாணத்தில் ஜன்னலோர காற்று தரும் இதத்தில் தன்னையும் மீறி உறங்கி விடுவது அவனது வழக்கம். ஆனால் இன்றைய இரவு அவனுக்கு தூங்கா இரவாகிப் போனது. உறக்கம் என்பது வரவே இல்லை… கண்களை மூடித்தான் அமர்ந்திருந்தான். ஆனால் கண்களுக்குள் சவியும் அஞ்சலியும் மாறி மாறி காட்சி தந்து கொண்டே இருந்தனர். 
அத்தை பேசிய விஷயங்கள் அசை போடப்பட்டு கொண்டே இருந்தன. இதற்கு முன்பு அவனது திருமணம் பற்றிய பேச்சை அவர் எடுத்ததே இல்லை. நாடு விட்டு நாடு வந்து அகதிகளாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் இழந்து இழப்புகளில் இருந்து மீண்டு வரவே நீண்ட காலம் பிடித்தமையால் வேறு எந்த சிந்தனையும் அவர்கள் மனதில் எழுந்திருக்கவில்லை. 
திருமணம் என்ற அந்த வார்த்தையில் அவன் விழிகளுக்குள் விரிந்து நின்றாள் தீபா. மூன்றரை ஆண்டு கால இல்லற வாழ்க்கை. சிறு சிறு ஊடல்களைத் தாண்டி மன வேற்றுமையில்லாத மனம் ஒத்த வாழ்க்கை. திருமணத்திற்கு பின்னான காதல்தான்… பழகப் பழக விருப்பமும் பிடித்தமும் ஏற்பட்டு ஒருவர் மேல் ஒருவர் உருவாக்கிக் கொண்ட காதல்தான்… அந்த வாழ்வு அத்தனை தித்தித்தது. சுகமான தாம்பத்திய வாழ்க்கையில் பரிசாக கிடைத்தவள் சைந்தவி. 
அவளுக்கு தந்தையான அந்த தருணம் இன்றும் நெஞ்சில் இனிமையை தேக்கிய நினைவுகள்தான். வெள்ளைப் பூச்சரம் ஒன்றை வாட்டமாய் கைகளுக்குள் வைத்து அந்த ஸ்பரிசத்தை உணர்ந்த நொடி சிலீர் என்று இந்த நொடியும் நெஞ்சில் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.
ங்ஙா… என்ற குட்டிக் குரல் ஓசையில் ஆரம்பித்து வாயில் தேனொழுக பேச முயற்சித்து சிணுங்கி அழுது சிரித்து தத்தி தவழ்ந்து மெல்ல நடை பயின்று தாய் தந்தையின் முகம் பார்த்து அவர்களிடம் தாவி விளையாண்டு “ப்பா…” என்ற முதல் வார்த்தையை முத்தாக உதிர்த்து அவன் கண்களில் கண்ணீர் பெருகச் செய்து ஒவ்வொரு வார்த்தையாக கற்று மழலை குரலால் மகிழ்ச்சியின் எல்லைக்கு அவனை அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகளும் தன் மகளோடு அவன் அனுபவித்து வாழ்ந்து அந்த வாழ்க்கையை மறக்கத்தான் முடியுமா..?
மனைவியையும் மகளையும் பற்றி நினைக்கும்போது தீப்பிடித்து எரியும் இதயம் மீண்டும் தன்னிலைக்கு திரும்பத்தான் செய்கிறது. இயக்கத்தை மட்டும் நிறுத்துவதில்லை. இன்னும் ஏனடா உயிரோடு இருக்கிறோம் என்று எண்ணிக் கொள்வதுண்டு. ஆனாலும் உயிர் வாழ்ந்தான்… வாழ்கிறான்… எப்படி இந்த உயிர் வாழ்கிறது என்று ஆச்சரியமாக கேள்வி கேட்டுக் கொள்வதும் உண்டு. ஆனாலும் நிதர்சன உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். பேசுகிறான்… நடக்கிறான்… உண்கிறான்… உறங்குகிறான்… ஆசிரியனாக கற்பிக்கிறான்… சிரிக்கிறான்… அனைத்துமே நாளடைவில் சாத்தியமாகித்தானே போனது.
விதித்த காலம்வரை உருப்படியாக ஏதேனும் செய்து வாழ்ந்துவிட்டு செத்துமடி என்று அவன் மூளை அவனுக்குள் ஆழமாக அறிவுறுத்திவிட்டதே. நடைப்பிணமான வாழ்க்கைதான்… அர்த்தமற்ற வாழ்க்கைதான்… ஆனால் இந்த சில நாட்களாக அவன் வாழ்விலும் ஓர் அர்த்தம் இருப்பதுபோல் சவியின் பூமுகம் அவனுக்குள் உணர்த்துவதுதானே உண்மை.
சவியின் தந்தை என்று அந்தப் பெண் கூறியபோது அவனையும் மீறி சிலிர்த்து பூரித்த மனம் அஞ்சலியை மனைவி என்ற எண்ண அடுக்கில் நிறுத்தவில்லை. அப்படி ஒரு கோணத்தில் அவன் சிந்திக்கவே இல்லை.
அத்தை எளிதாக கூறிவிட்டார். ஆனால் அதனை சாத்தியப்படுத்துவது அத்தனை எளிதான காரியம் அல்லவே. முதலில் இவன் மனம் அதற்கு ஒப்ப வேண்டும்… அஞ்சலிக்கும் அந்த எண்ணம் வேண்டும்… அதைத் தாண்டி இன்னும் நிறைய நிறைய…
சட்டென அவன் மனம் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அண்டை வீட்டு பெண்ணின் சவியின் அப்பா என்ற அந்த ஒற்றைச் சிலிர்ப்பை தவிர…
இந்த பத்து நாட்களில் பக்கத்து வீட்டில் சலசலப்பு சற்றே ஓய்ந்திருந்தது. அஞ்சலியின் அண்ணனும் தனது வேலையை பார்க்க கிளம்பி ஓடி இருந்தான். அவளைப் பற்றி விசாரிக்க எங்கெங்கோ யார் யாரையோ அனுப்பி இருப்பதாக கேள்விப்பட்டான் குரு. 
காமாட்சியும் ராமலிங்கமும்தான் அஞ்சலியை பற்றி அதிகமாக கவலை கொண்டனர். 
“நல்ல புள்ள… தாயும் மகளும் எங்கேயோ ஒரு பக்கம் நல்லா இருந்தா போதும்…” 
அவர்களது வருத்தத்தில் நிஜம் தெரிந்தது. அவர்களிடம் மட்டும் உண்மையை கூறலாமா என்று ஒரு மனம் யோசித்தாலும் வெள்ளந்தியான காமாட்சி ஏதேனும் ஒரு வகையில் யாரிடமாவது தன்னையும் மீறி கூறிவிட்டால் நிலைமை தலைகீழ்தான் என்று எண்ணிக் கொண்டவன் வாயை இறுக்கி மூடிக் கொண்டான்.
அன்று ராதாவிற்கு அழைத்திருந்தான் குரு. வழக்கமான நல விசாரிப்புகளுடன் அஞ்சலி சவியை பற்றியும் கேட்டுக் கொண்டான்.
“ஏனோ அந்த குட்டிக்கு உன்மேல ரொம்ப பாசம்… உன்னோட கதைக்கணும் என்டு சொன்னா. அஞ்சலிதான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி உன்னை சங்கடத்துக்கு ஆளாக்கிடுவான்னு போன் குடுக்க வேணாம்னு சொல்லிட்டா…”
“ம்ம்… உங்க அட்ரஸ்க்கு ஒரு பார்சல் அனுப்பி வச்சிருக்கன்… அஞ்சலிட்ட கொடுத்திருங்க…”
“அப்படியா..? என்ன அது..?”
“செல்போன்… ரொம்ப தேவையான ஒன்டு இல்லையா… ஆக்டிவேட் பண்ணிட்டு கால் எடுக்க சொல்லுங்க…”
ராதாவிற்கோ கொள்ளை மகிழ்ச்சி.
“தம்பி… நான் சொன்ன விஷயத்தைப் பத்தி…”
“பேப்பர் திருத்தோணும் அத்தை… நிறைய வேலை இருக்கு… பிறகு கதைக்கிறன்…” என்றவன் இணைப்பை துண்டித்திருக்க ராதாவின் இதழ்களில் ஓர் புன்னகை அரும்பியது.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!