Skip to content
Post Views: 4,846
தூறல் – 18
ராதாவோடு இணைந்து அவரது வீட்டிற்கு வந்தவன் மகளை மடியில் அமர்த்தியபடியே டிவியை போட்டு அமர்ந்து கொண்டான். அவளுக்குப் பிடித்த கார்ட்டூன் சேனலை வைத்து தன் நெஞ்சில் சாய்த்து அமர்த்திக் கொண்டு அவனும் தளர்வாக சாய்ந்து அமர்ந்து கொண்டான். முகம் தனி பளபளப்புடன் மின்னி ஜொலித்தது. இன்னும்கூட இதழ்களில் குறுநகை.
Advertisement
ஒரு செல்ல ராட்சஷியை நினைத்துத்தான்.
‘எப்பா… என்னா ஆட்டம் ஆடிட்டா ரணபத்ரகாளி… சிக்கி இருந்தா பிழிஞ்சு ஜூஸ் குடிச்சிருப்பா…’
Advertisement
Advertisement
கீழிதழை கடித்து முறுவலித்தான்.
ராதா பரபரப்பாக மதிய உணவு சமைக்கும் வேலையில் இறங்கி இருந்தார். ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் செய்து முடித்தவர் உணவுப் பாத்திரங்களை கூடத்தில் அடுக்கி தகப்பனையும் மகளையும் உணவு உண்ண அழைத்தார்.
Advertisement
“அத்தை அவ இன்னும் வரலையே..?” வாசலில் ஒரு கண் பதித்தபடியே கேட்டான் குரு.
“ஏன் அவகிட்ட ரெண்டு குத்து வாங்க ஆசையா இருக்கா..?”
குறும்புச் சிரிப்புடன் கேட்டவரை முறைக்க முயன்று தோற்றான்.
“காலையில யாருமே சாப்பிடல… அவளும் சாப்பிட்டிருக்க மாட்டா… அவளையும் போய் கூட்டிட்டு வாங்க…”
“நீயே போன் பண்ணி கூப்பிடு…”
“ஐயோ என்னால முடியாது…”
அவன் தோள்களை குலுக்கிச் சொன்ன பாவனையில் பக்கென சிரித்திருந்தார் ராதா.
“நான் சவிக்கு சாப்பாடு ஊட்டறேன். நீங்க சிரமம் பாக்காம அவளை போய் கையோட கூட்டிட்டு வந்துருங்க… திமிர் பிடிச்சவ… போன் பண்ணினாலும் அநேகமா எடுக்க மாட்டா…”
அவன் கணிப்பு சரியே. ராதா விடாமல் அழைத்தும் அவள் அழைப்பை ஏற்கவே இல்லை.
“பிடாரி… பிடாரி… என்மேல இருக்கிற கோபத்தை அத்தைமேல ஏன் காட்டுறா..? திமிரு புடிச்சவ…”
இதழ் பிரிக்காமல் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு மகளுக்கு உணவை பரிமாறி அவனே ஊட்டத் தொடங்கினான். ராதாவும் உடனடியாக கிளம்பிச் சென்று அவளை கையோடு அழைத்துதான் வந்திருந்தார்.
அவள் முகத்தை அவன் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. பார்த்தால் கண்ணை நோண்டி விடுவேன் என்றாளே.
அவனை முறைத்தபடியேதான் வந்து அமர்ந்தாள். எனக்கும் உன் கோபத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பவன்போல் மூன்று தட்டுகளை எடுத்து வைத்து மூவருக்குமே உணவு பரிமாறினான் குரு. சவி உண்டு முடித்து அவன் மடியிலேயே படுத்துக் கொண்டாள்.
ஏய்… எந்நேரமும் ஒட்டி உரசிக்கிட்டேதான் இருப்பியா…? தின்னுட்டேல்ல… பாயில போய் படு… பாக்குறப்ப எல்லாம் கங்காரு குட்டி வயித்த கவ்விக்கிட்டு திரியிற மாதிரி… எந்திரிடீ…”
அவன்மேல் இருந்த கோபத்தை அப்படியே மகளிடம் திருப்பிக் கொண்டு இருந்தாள் அஞ்சலி.
“அம்மு… நீ போய் பாயில படு… அப்பா சாப்பிட்டு வந்திடறேன்… சரியா…”
எப்படியும் குழந்தை அடம்பிடிப்பாள்… வெறியில் அடித்தாலும் அடித்துவிடுவாள் அரக்கி என்றுதான் மகளிடம் குனிந்து சாந்தமாக பேசியிருந்தான் குரு.
மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புதானே அவன் மகள். தலையை ஆட்டிக் கொண்டு எழுந்தவள் சுவற்றை ஒட்டி இருந்த பாயில் சென்று படுத்துக் கொண்டாள்.
உணவுத் தட்டை அவள் பக்கமாக நகர்த்தி வைத்தான். ஆனால் விழிகளை நிமிர்த்தி அவளை பார்க்கவே இல்லை. ஆனால் அவளோ அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்… இல்லையில்லை… முறைத்துக் கொண்டே இருந்தாள்.
“அத்தை… இப்படி முறைச்சிக்கிட்டே இருந்தா நான் எப்படி சாப்பிடட்டும்..? திங்கறது வயித்துல ஒட்ட வேணாமா..?”
ராதாவிடம் திரும்பி அவன் கேள்வி கேட்க “ஙொப்பமவனே… ஒரு பார்வை பார்க்கல… ஆனா நான் எப்படி பார்க்கிறேன்னு மட்டும் தெரியுது… தென்னமரம்… லேசுப்பட்ட ஆள் இல்ல நீ… இருய்யா… உனக்கு இன்னும் இருக்கு…”
தனக்குள் சொல்லிக் கொண்டவள் விருட்டென தட்டை தன் அருகில் இழுத்து உணவை உண்ணத் தொடங்கினாள்.
சாந்தமாக அப்பாவியாக கண்கள் முழுக்க வேதனையை தேக்கி ஏதோ எதிர்பார்த்து எதையோ இழந்து பரிதாபமாக நடமாடிக் கொண்டிருந்த அஞ்சலியைத்தான் இதுவரை பார்த்திருக்கிறார் ராதா. அவளது மற்றும் ஒரு முகத்தை கண்டவருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது சிரிப்பாகவும் இருந்தது.
“என்ன அத்தை… எலி ரொம்ப பயமுறுத்துதா..?”
கை கழுவ உள்ளே எழுந்து சென்றபோது அத்தையிடம் ரகசியமாக கேட்டான் குரு.
“எலியா..?”
“ஒரு எலியை சமாளிக்கிறதே கஷ்டம்… இது அஞ்சு எலியாச்சே… இப்படித்தான் இருக்கும்… இதுதான் இதோட சுயரூபம்…”
அவளுக்கு கேட்டு விடக்கூடாது என்று தணிந்த குரலில் கூறி அவளையும் தலையை திருப்பி எட்டிப் பார்த்துக் கொண்டான்.
“அவளும் புதுசாதான் தெரியிறா… நீயும் புதுசாதான் தெரியிற தம்பி…” என்று சிரித்துக் கொண்டவர் முன்னறைக்குச் சென்றிருந்தார்.
உண்டவுடன் படுக்க வேண்டாம் என்று ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் வெறுமனே கண்கள் பதித்தபடி ஓரமாக அமர்ந்து கொண்டான் குரு. உண்ட மயக்கத்தில் உறங்கி இருந்தாள் சவி. கண்களை சொக்கிக் கொண்டு உறக்கம் வர மகளோடு சென்று படுக்கலாம் என்று லுங்கியை உதறிக் கொண்டு அவன் எழ அதுவரை அமைதியாக ஓரமாக அமர்ந்திருந்தவள் வெடுக்கென எழுந்து மகளின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள்.
‘அடிப்பாவி… வேணுன்னே பண்றா… இவள…’
பல்லை கடித்தவன் அவளை முறைத்தபடியே நின்றிருக்க அசட்டையாக அவனை ஒரு பார்வை பார்த்து உதட்டை சுழித்து முதுகை காட்டி திரும்பி படுத்துக் கொண்டாள் அஞ்சலி.
அவள் முதுகையே முறைத்தபடி நின்றிருந்தவனின் விழிகள் அப்படியே சிரிப்பிற்கு தாவி இருந்தன.
“பிடாரி…”
சத்தம் வெளிவராமல் இதழ்களை மட்டும் அசைத்துக் கொண்டவன் முன்னிருந்த திண்ணையில் சென்று படுத்துக் கொண்டான். தன்னையும் மீறி அயர்ந்து உறங்கியவன் கண் விழித்தபோது மாலை மயங்கி இருட்டவே தொடங்கி இருந்தது.
“தேத்தண்ணி குடிக்கிறியா தம்பி..?” கேட்டபடியே வெளியே வந்தார் ராதா.
சரி என்று தலையாட்டியவன் வீட்டிற்குள் நுழைய உள்ளே தாயும் மகளும் இல்லை.
அவன் கண்கள் அவர்களை தேடுவதை கவனித்தவர் ”அவ வீட்டுக்கு வெளிக்கிட்டு போயிட்டாப்பு…” என்று கூற அவனும் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி இருந்தான்.
“என்ன தம்பி தேத்தண்ணி கேட்டியே…”
“அங்கேயே போய் குடிச்சுக்கிறேன் அத்தை…”
அப்படியாவது இருவரும் சமாதானமாகிக் கொள்ளட்டும் என்று அவரும் மறுப்பு தெரிவிக்காமல் சரி என்று தலையசைத்திருந்தார்.
அவன் வீட்டிற்குள் நுழைந்தபோது சில பெண்களும் உடன் சில சிறுவர்களும் சிறுமிகளும் அங்கு இருக்க அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள் அஞ்சலி. அவனைப் பார்த்து அந்த பெண்கள் மரியாதையாக தலையசைக்க அவனும் சின்ன சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
“இவர்தான் உங்க வீட்டுக்காரரா மிஸ்..?”
ஒரு பெண் உரக்கவே கேட்டிருக்க அறைக்குள் இருந்தவனின் காதில் தெளிவாகவே அந்த வார்த்தை விழுந்தது.
“ஆமா என் அப்பாதான்…” சின்ன வாண்டும் முந்திக் கொண்டு பதில் அளித்திருந்தது.
“சரிக்கா… நீங்க நாளையில இருந்தே அனுப்பி வைங்க. பக்கத்துல வேற பசங்க இருந்தாலும் சொல்லுங்க…”
பேச்சை மாற்றிக் கொண்டு அஞ்சலி கூற அவர்களும் அவளிடம் விடைபெற்று வெளியேறி இருந்தனர்.
“சவிக்குட்டி… அம்மு…”
அறைக்குள் இருந்தே குரல் கொடுத்தான் குரு. ஓடி வந்து அவன் முன் நின்றிருந்தாள் சங்கவி.
“அப்பாவுக்கு டீ வேணும்… அம்மாவை போடச் சொல்றியா..?”
இவளிடம்தான் கூறினான்… ஆனால் அவள் காதில் விழவேண்டும் என்பதற்காகவே உரக்கவே கூறி இருந்தான்.
சுற்றுப்புறம் முழுக்க அவன்தான் சவியின் தந்தை அஞ்சலியின் கணவன் என்று அடையாளப்படுத்தப்பட்டு விட்டது. வெளியில் இருந்து பார்ப்பவருக்கு அப்படித்தானே தெரியும். அவளும் கௌரவமான ஆசிரியையாக ஒரு பெரிய பள்ளியில் வேலைக்கும் சேர்ந்துவிட்டாள். நிறைய மனிதர்களை பழகிக் கொண்டிருக்கிறாள்.
அவள் கணவன் நான் என்ற முத்திரை விழுந்த பின்பு வேறு ஒருவனை மணம் பேசி அவனை திருமணம் செய்துகொள் என்று சொன்னதால்தான் இவளுக்கு இத்தனை கோபமோ..? அப்படியானால் சமூகத்தை சமாளிக்கத்தான் அவளுக்கு என்மேல் இந்த எண்ணமா..? அடி மனதில் இருந்து வேறு எதுவும் எழவில்லையா..? ஆனால் அந்த கண்கள் நிறைய கதைகள் பேசியதே… ஏதேதோ என்னிடம் எதிர்பார்த்ததே… கேட்டதே… கொடுத்ததே. நான்தானே கண்டும் காணாமல் தவிர்த்தேன். அவளது இந்த கோபத்திற்கு பின்னணி அவள் என்மேல் கொண்டுள்ள நேசம் இல்லையா..? பாதுகாப்பினை பலப்படுத்திக் கொள்ளத்தானா..? சமூகத்தை சமாளிக்கத்தானா..?
கண்ணாடிக்காரனின் மூளைக்குள் புதிதாக நிறைய குழப்பங்கள்… டொங்கென சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். டீ கோப்பையைத்தான் அருகில் இருந்த ஸ்டூலின்மேல் அப்படி வைத்திருந்தாள் அஞ்சலி.
நிமிர்ந்து அவள் முகம் பார்க்க நெறிந்த புருவத்துடன் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வந்தவங்க எல்லாம் யாரு..? எதுக்கு வந்துட்டு போனாங்க..?”
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் வெளியேறிவிட டீ டம்ளரை கையில் எடுத்தபடியே அவளை பின்தொடர்ந்தான் குரு.
“அஞ்சலி பதில் சொல்லு…”
“சவிக்குட்டி… திங்கட்கிழமைல இருந்து இருந்து அம்மா டியூஷன் எடுக்கப் போறேன்… ஸ்கூல்லயும் நிறைய ஸ்டூடண்ட்ஸ் கேட்டிருக்காங்க. சம்பாத்தியம் பத்தல… அதை அதிகப்படுத்த இன்னும் ஏதாவது வேலை பார்க்கணும்ல…”
இவனது கேள்விக்கு மகளிடம் பதில் கூறிக் கொண்டிருந்தாள். ஒன்றும் புரியாமல் பிதுப்பிதுவென விழித்தபடி அமர்ந்திருந்தாள் சவி.
வேகமாய் அவள் முன்னே வந்து நின்றான் குரு.
“உனக்கு என்ன தேவை..? என்கிட்ட கேக்க மாட்டியா..?” ஆற்றாமையுடன் கேட்டான்.
விருட்டென நிமிர்ந்து அவனை முறைத்துப் பார்த்தாள் அஞ்சலி.
“ஏற்கனவே உங்களுக்கு நிறைய கடன் பட்டிருக்கேன்… அந்த கடனை கொஞ்சம் கொஞ்சமா தீக்கணும்… அதுக்காகத்தான்… போதாக்குறைக்கு வருங்காலத்துக்கு எனக்கும் என் பொண்ணுக்கும் சேமிச்சு வைக்கணும் இல்லையா..?”
அவள் சொன்ன வார்த்தைகளில் சுருக்கென இதயத்தில் ஏதோ தைத்தது.
“ஏன் அஞ்சலி இப்படியெல்லாம் பேசுற..? நான் கணக்கு பார்த்தா இதெல்லாம் பண்ணினேன்…”
“உங்க கணக்குவழக்கு எல்லாம்தான் தெளிவா தெரிஞ்சு போச்சே… மாப்பிள்ளை பார்த்தீங்களே… தேதி குறிச்சீங்களா..?”
மீண்டும் காலையில் ஆரம்பித்த சண்டையில் வந்து நின்றாள் அஞ்சலி.
‘திரும்பவுமா..?’ என்பதுபோல் அவளை ஆயாசமாய் பார்த்தான் குரு.
“நீ நல்லா இருக்கணும்னு யோசிச்சேன்… அது ஏன் உனக்கு புரியல..?”
மீண்டும் அவள் பற்களை நறநறவென கடிக்க சற்று பயந்து இரண்டு அடிகள் பின்வாங்கிதான் நின்றிருந்தான் குரு.
“யார் அந்த பன்னி மூஞ்சி வாயன்..?”
“ஏய்… அனாவசியமா பேசாத… அவன் என்னோட நண்பன்… ரொம்ப நல்லவன் தெரியுமா..?”
“அப்படியா..? அப்படின்னா உங்க தோள் மேல தூக்கி வச்சு இந்த ராமேஸ்வரம் பூரா ஊர்வலம் சுத்தி வாங்க. என்னை ஏன் கோர்த்துவிட பாக்குறீங்க..?”
அவள் தொண்டையின் டெசிபல் அதிகரிக்க சத்தம் போடாதே என்று கைகளை தணித்து குரலை தாழ்த்து என்று சைகையால் சொன்னான் குரு.
“அக்கம் பக்கம் நிறைய பேர் குடி இருக்காங்க அஞ்சலி… அசிங்கப்படுத்தாதே…” குரலை தணித்து கூறினான்.
“நீங்க என்னை அசிங்கப்படுத்தினது தப்பில்லையா..?”
“இப்ப என்ன பண்ணனும்..? உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா..?”
“ராதாம்மா வேணாம்னு சொல்லியும் தைரியமா என்கிட்ட வந்து பேசி இருக்கீங்க… எவ்வளவு திண்ணக்கம் உங்களுக்கு..?”
“ஐயோ தாயே திரும்ப ஆரம்பிக்காத… புள்ள பயந்து பயந்து பார்க்குறா…” கைகள் இரண்டையும் கூப்பினான்.
“இப்பகூட புள்ளைய பத்தின கவலைதான் உங்களுக்கு இல்லையா..? நான் ஒருத்தி உங்க கண்ணுக்கு தெரியவே இல்ல அப்படித்தானே…”
ஆதங்கமாய் வெளிவந்த அவள் குரலில் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான் குரு.
வலி, வேதனை, கோபம், அதனை கடந்த அது… அது… அது என்ன..??
நிமிர்ந்து அவன் முகம் பார்த்து முறைத்திருந்த அவளது அகன்ற விழிகளுக்குள் அவன் பிம்பம்தான் அழுத்தமாய் தெரிந்தது.
அவன் தோள்வரையே உயரம் உள்ளவள் மெல்ல எக்கி “இந்த முகரக் கட்டைக்கு நான் குறைச்சலா தெரியிறேனோ..? என்னைய எவனுக்கோ கோர்த்து விட்டுட்டா உலக மகா பேரழகி பின்னாடி வருவான்னு நினைப்போ..? தென்ன மரம்… உச்சி மண்டையில ஆடிக்கிட்டு இருக்கிற அத்தன முடியையும் கொத்தா புடுங்கிப் போட்டுட்டா கெழட்டுப் பையன்னு எவளும் வரமாட்டா… ஆளும் மொகரையும் பாரு…”
பயமே இன்றி உறுமியவள் வெடுக்கென திரும்பி சமையலறைக்குள் நுழைந்து கொள்ள அவன்தான் அசையாமல் அப்படியே நின்றிருந்தான்.
எப்படி அசைவான்..? காலையில் இருந்து அவள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கோபத்திலும் வார்த்தைகளிலும் கொள்ளை கொள்ளையாய் அவனை தேனாற்றிலும் பாலாற்றிலும் நனைத்துக் கொண்டே இருக்கிறாளே…
மொத்தமாய் குளிர்ந்து போனவன் உறைந்து போய் சிலையாகிப் போனானோ என்னவோ.
(தொடரும்)
error: Content is protected !!