Skip to content
Post Views: 4,648
தூறல் – 21
அந்த சிறிய கூடம் முழுக்க நடந்து களைத்துப் போனாள் அஞ்சலி. காலை உணவும் தயாரிக்கவில்லை… நேரம் சென்று கொண்டே இருந்தது… நகத்தை கடித்தபடி திண்ணையில் சென்று அமர்ந்தாள்… உள்ளே இருந்த கைப்பேசி சத்தமிட்டது… ஓடிச்சென்று எடுத்தாள்… ராதாதான் அழைத்திருந்தார்.
Advertisement
“அ..அம்மா… சொல்லுங்கம்மா…”
“ஏன் அஞ்சலி இப்படி எல்லாம் பண்ற..?”
Advertisement
Advertisement
எடுத்த எடுப்பில் அவர் கேட்ட கேள்வியிலேயே அனைத்தையும் அவரிடம் கூறி இருக்கிறான் என்பது புரிந்தது. பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள் அஞ்சலி.
“அத்தனை ஆசையா ஓடிவந்த பையனை இப்படித்தான் கஷ்டப்படுத்துவியா..?”
Advertisement
“நான் எதுவும் தப்பா பண்ணலையே மா..?”
நீ பண்ணினது தப்பில்லையா..? உங்களைத்தானே அவன் உயிரா நினைச்சுட்டு இருக்கான்… அது உனக்கு புரியலையா..?”
“உங்களைன்னு சொல்லாதீங்க… சவின்னு சொல்லுங்க… சவிதான் அவருக்கு உலகம், உயிர்… அதை வேணா நான் ஒத்துக்குறேன்…”
“அவன் உலகத்துல நீயும் இருக்க அஞ்சலி…”
“ம்ம்… இருக்கலாம்… சவியோட அம்மாவா… அம்மாவா மட்டும்…”
“அப்படி நினைக்கிறவன்தான் தினமும் என்கிட்ட போன்ல புலம்புவானா..? நீ அவன்கூட பேசுறதே இல்லைன்னு எவ்வளவு ஏங்கி வேதனைப்பட்டான் தெரியுமா..? உன்னை யாரோன்னு நினைச்சா உனக்காக அவன் கலங்கி இருப்பானா..? அவனைப்பத்தி எனக்கு தெரியும்… குழந்தையில இருந்து அவனைப் பார்த்தவ நான்… எப்படி எல்லாமோ இருந்த குரு இன்னைக்கு மொத்தமா மாறி நிக்கிறான். எல்லாத்தையும் அவன் கடந்து வந்துட்டான் அஞ்சலி. இப்போ அவன் வாழ்றது உங்க ரெண்டு பேருக்காக… அது உனக்கு புரியலையா..?”
மீண்டும் அமைதியானாள் அஞ்சலி.
“இ..இப்போ என்ன பண்றார்..?”
“அப்படியே இறுகிப் போய் உட்கார்ந்து இருக்கான்… பாக்கவே கஷ்டமா இருக்கு… நீ வெளிக்கிட்டு இங்கே வா…”
“அவருக்கு பிடிக்கும்னு தேங்காய் ஆப்பத்துக்கு ஆட்டி வச்சிருக்கேன் மா… நீங்களும் இங்கேயே வந்துருங்க… எல்லாரும் இங்கேயே சாப்பிடலாம்…”
“அவனுக்கு பிடிச்சதை சமைக்கிற… ஆனா பிடிக்காததை பேசுற… என்ன பொண்ணும்மா நீ..? இப்போ அவன் இருக்கிற மனநிலையில அங்கே வந்து சாப்பிடுவான்னு எனக்கு தோணல. நீயும் பிடிவாதம் பிடிக்காம இங்கே உடனே வா… அவன் வரும் போதெல்லாம் சண்டை போட்டுட்டு… இது என்ன நல்லாவா இருக்கு..?”
ஒரு அனுபவசாலியான வயது மூத்த பெண்மணியாக தன்மையாக ராதா கூற சரி என்று கூறி கிளம்பத் தயாரானவளின் கண்களில் கூடத்தில் பரப்பிக் கிடந்த பொருட்களில் ஒரு புடவை கவரும் இருப்பது தெரிந்தது. அவளுக்காக எடுத்து வந்திருக்கிறான்… இதற்குமுன் எடுத்து தந்ததில் இரக்கமும் பரிதாப உணர்ச்சியும் ஒரு நல்ல மனிதனாக மனிதாபிமானமும் இருந்தது. ஆனால் இந்த முறை அவன் என்ன மனநிலையில் எடுத்திருப்பான் என்பது புரிந்தது. அந்த மனநிலையின் ஆழ்மன எண்ணங்கள்தானே அவளுக்கு தெரியவேண்டும்.
சில நொடிகள் அந்த புடவை கவரையே பார்த்துக் கொண்டிருந்தவள் வீட்டை பூட்டிக் கொண்டு ராதாவின் வீட்டை நோக்கி நடந்தாள்.
அவள் அங்கு சென்றபோது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தாள் சவி. வீட்டிற்குள் அவள் நுழைய அவள் முகத்தைக்கூட பார்க்காமல் வெடுக்கென எழுந்து அங்கிருந்த அறைக்குள் நுழைந்திருந்தான் குரு. அவன் கோபத்தின் தீவிரம் புரிந்தது.
அதே வேகத்தில் சட்டை பட்டனை போட்டபடியே வெளியே வந்தவன் “அத்தை… கொஞ்சம் வேலை இருக்கு… நான் வெளிக்கிடுறேன்…” என்றான் அவர் முகத்தை மட்டுமே பார்த்தபடி. அருகில் நின்றிருந்த அஞ்சலியை திரும்பியும் பார்க்கவில்லை.
“என்னப்பு… இன்னும் சாப்பிடல… சாப்பிட்டுப் போ…” என்றவர் வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தார்.
“இல்ல அத்தை… எனக்கு வேணாம்… பசிக்கல… மதியம் நீங்களே சமைங்க… நீங்கதான் சமைக்கணும்…”
கட்டளை போல் கூறியவன் இறுகிய முகத்தோடு அங்கிருந்து கிளம்பி இருந்தான். நெறிந்திருந்த புருவமும் சிவந்திருந்த விழிகளும் அவனது கோபத்தின் உச்சத்தை தெளிவாக அஞ்சலிக்கு தெரிவித்தன. சில மணித் துளிகளுக்கு முன்பு வேறு ஏதோ கதை பேசிய அவனது விழிகள் இப்பொழுது பெரும் கோபத்தை சுமந்திருப்பதை உணர்ந்து கொண்டவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
அவன் நடையில் காட்டிய வேகத்திலேயே அவனது கோபம் தெரிந்தது. அவன் சென்று மறையும்வரை அவன் முதுகையே பார்த்தபடி நின்றிருந்தாள் அஞ்சலி. ஒரு நீண்ட பெருமூச்சுடன் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தார் ராதா.
சவியை அழைத்து அவர் தயாரித்த காலை உணவை ஊட்டினார் ராதா. எத்தனையோ வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டாள் அஞ்சலி. அவன் உண்ணாமல் சென்ற பின்பு அவளுக்கு மட்டும் உண்ண மனம் வருமா..? ராதாவும் உண்ண மனமின்றி அமர்ந்திருக்க,
“பிபிக்கு மாத்திரை போட்டுட்டு இருக்கீங்கம்மா… நீங்க சாப்பிட்டுதான் ஆகணும்…” என்றவள் அவரை இழுத்துப் பிடித்து அமர்த்தி வலுக்கட்டாயமாக உண்ணவும் வைத்திருந்தாள்.
“மதியத்துக்கு நீயே சமைக்கிறியாம்மா…”
“வேண்டாம்மா… நீங்களே செய்ங்க… ஒரு வாய் வைக்கும்போதே யார் சமைச்சதுன்னு கண்டுபிடிச்சிடுவார்… அவர் இருக்கிற கோபத்துக்கு நான் சமைச்சது தெரிஞ்சா நிச்சயமா சாப்பிட மாட்டார்…”
“அவனைப்பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க… அப்புறம் ஏன்மா அவனை புரிஞ்சுக்காம நடந்துக்கிற..?”
“அவரை முழுசா புரிஞ்சுக்கிறதுக்காகத்தான்மா… சில விஷயங்களை தெரிஞ்சுக்கிறதுக்காகத்தான்…”
அவள் பேசியதின் உள்ளர்த்தம் அவருக்கு புரியவில்லை. என்னவென்று அழுத்திக் கேட்கவும் மனமில்லை. அமைதியாக மதிய உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கினார். உடன் நின்று கை வேலைகளை செய்து கொடுத்தாள் அஞ்சலி. நேரம் சென்று கொண்டே இருக்க குரு வந்திருக்கவில்லை.
“காலையிலயும் சாப்பிடல… இந்த பொடியனும் ஏன் இப்படி பண்றான்..?”
புலம்பியபடியே வாசலை அடிக்கொரு தரம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் ராதா.
மதியம் 2 மணிக்கு மேல்தான் சோர்ந்த முகத்தோடு வீட்டிற்குள் நுழைந்தான் குரு. வழக்கம் போன்று ஆசையோடு வந்த மகளை தூக்கி முத்தமிட்டு பெயருக்கு சிரித்து கை கால் முகம் கழுவி வந்து அமர்ந்தான். ஆனாலும் அந்த முகத்தில் சிறிதும் கனிவில்லை… அதே இறுக்கம்.
ராதா பரிமாற குழந்தை உண்டுவிட்டாளா என்பதை கேட்டுக் கொண்டு அமைதியாக உண்ணத் தொடங்கினான். சற்றுத் தள்ளிதான் சுவற்றோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள் அஞ்சலி. அவள் அங்கு இருக்கிறாள் என்று தெரிந்தும் மறந்தும் அவள்புறம் திரும்பவே இல்லை.
முகத்தை தூக்கிக் கொண்டு அவள் பேசாமல் இருந்தாலும் தட்டில் உணவு பரிமாறி அவளுக்கு நகர்த்தக் கூடியவன் அவள் உண்டாளா இல்லையா என்பதைப் பற்றி சிறிதும் லட்சியம் செய்யவில்லை. தலையை நிமிர்த்தாமல் உணவில் மட்டுமே கவனமாக இருந்தான்… பெயருக்குதான் கொறித்தான்… அதுவும் ராதாவுக்காக…முதலில் வைத்த சோற்றோடு எழுந்து கொள்ள வேகமாக அவன் கையை பற்றினார் ராதா.
“என்ன தம்பி இது..? குழந்தை மாதிரி சாப்பிடுவியா..? உன் கோபத்தை இதுலதான் காட்டுவியா..?”
“இதுக்குமேல சாப்பிட முடியல அத்தை…”
அவர் கையை விலக்கிக் கொண்டு எழுந்தவன் வேகமாகச் சென்று கை கழுவி வந்திருந்தான்.
சவி அங்கு இருந்த குழந்தைகளுடன் மீண்டும் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருக்க அவளை பார்த்தபடியே திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டான்.
“நீயும் சாப்பிடு அஞ்சலி…” தட்டில் உணவு பரிமாறினார் ராதா.
“வேணாம்மா… எனக்கு பசிக்கல…”
டொம்மென தட்டை ஓங்கி நிலத்தில் வைத்தவர் “என்ன பிள்ளைங்க ரெண்டு பேரும்..? எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசி சரி பண்ணுங்க… இப்படி பட்டினி கிடந்தா எல்லாம் சரியாயிடுமா..? உன்மேலதான் பிழை… நீதான் அவன்கிட்ட இறங்கிப் போய் கதைக்கோணும்… அன்டைக்கு அவன் பண்ணினது பிழை என்டு அவ்வளவு கோபப்பட்டு எப்படி எல்லாம் அவன்கிட்ட நடந்துக்கிட்ட… உன்கிட்ட இறங்கிப் போனானா இல்லையா..? இன்டைக்கு நீ பிழை பண்ணி இருக்க… நீதானே அவன்கிட்ட இறங்கிப் போகோணும்… ரெண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி வீம்பு பண்ணிட்டு இருந்தா என்ன அர்த்தம்..?”
கோபத்தோடு உரக்கவே பேசி இருந்தார் ராதா.
“வாசல்ல போய் உட்கார்ந்து இருக்கிறவர்கிட்ட என்ன பேசச் சொல்றீங்க..?” விட்டேற்றியாக பதில் அளித்தாள் அஞ்சலி.
“தம்பி… குமரா… உள்ளே வா…” இங்கிருந்தே குரல் கொடுத்தார் ராதா.
எழுந்து உள்ளே வந்தான் குரு.
“எங்க கம்பெனி முதலாளி அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணிட்டு வந்திருக்காங்க. நம்ம முகாம்ல இருந்து எல்லாரும் போய் பார்த்துட்டு வரலாம் என்டு இருக்கோம்… சவியையும் என் கூடவே கூட்டிட்டு போறன்…”
தகவலாகச் சொன்னவர் அவன் அடுத்து பேசும் முன் வேகமாக அங்கிருந்து வெளியேறி செருப்பை மாட்டிக் கொண்டு சவியையும் தூக்கிக் கொண்டு உடன் சில பெண்களுடன் அங்கிருந்து கிளம்பியும் சென்றிருந்தார். அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வேலையை அமர்த்திக் கொண்டார் என்பது புரிந்தது.
அங்கேயே நின்றவன் இடுப்பில் கை வைத்து அழுத்தமாக கண்மூடித் திறந்து மீண்டும் அங்கிருந்து வெளியேற எத்தனிக்க அவனை மறித்தபடி வந்து நின்றாள் அஞ்சலி.
“வழி விடு…”
அவள் முகம் பார்க்காமல் தலையை திருப்பியபடியே கூறினான்.
“உங்ககூட பேசணும்…”
“எனக்கு உன்கூட பேச எதுவுமே இல்ல…” முகம் கோபத்தில் பளபளக்க கோபமாக உறுமினான்.
“எதுவுமே இல்லையா..?”
“இல்ல…”
“நமக்குள்ள எதுவுமே இல்லையா..?” வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து கேட்டாள்.
வேறு பக்கம் கண்களை திருப்பி இருந்தவன் விருட்டென திரும்பி அவள் முகம் பார்த்தான்.
“எதுவுமே இல்லைன்னுதான் இன்டைக்கு காலையிலேயே நீ சொல்லாம சொல்லிட்டியே… அப்புறம் எதுக்கு இந்த கேள்வியை என்கிட்ட கேக்குற..?”
அவனது தடித்த குரல் சற்று ஓங்கித்தான் வெளிவந்தது.
“நான் அப்படி பண்ணினா அதுக்கு காரணம் என்னன்னு கேக்க மாட்டீங்களா..?”
“நீ ஏதாவது பண்ணுவ… அதுக்கு காரணம் கேட்டு நாய்க்குட்டி மாதிரி உன் பின்னாடியே நான் அலையணுமா..? நீ என்னதான்டி நெனச்சிட்டு இருக்க..?”
அவன் குரல் கூரிய ஆயுதம்போல் அவள் காதினை துளைக்க அவனை அழுத்தமாக சில நொடிகள் பார்த்தவள் வேகமாக திரும்பி சமையலறைக்குள் நடந்தாள்.
“ஏய் நில்லுடி… உனக்கு என்ன வேணும்..? என்ன தெரியணும்..? காசை கொடுத்து எனக்கும் என் பிள்ளைக்கும் இருக்கிற உறவை தள்ளி நிறுத்தப் பாக்குறியா..? அவகிட்ட எனக்கு உறவோ உரிமையோ இல்லைன்னு குத்தி காட்டிட்டே இருக்கியா..?”
உரத்த குரலில் கேட்டபடியே அவளை பின்தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தான் குரு.
ஆஆஆ… கோபத்தோடு சமையல் மேடையில் இருந்த ஒரு பாத்திரத்தை கையில் தூக்கி டமார் என மீண்டும் அதே இடத்தில் வைத்தாள் அஞ்சலி.
“இதுதான்… இந்த வார்த்தைதான்… தொட்டதுக்கெல்லாம் என் பிள்ளை என் பிள்ளைன்னு உங்க கவனமும் எண்ணமும் முழுக்க சவி மட்டும்தான்… அவளுக்காகத்தானே எல்லாம்… ஏன் நானும்கூட அவளுக்காகத்தானே… அவ இல்லேன்னா இந்த அஞ்சலி அனாதை…ஆசையா வளத்துற நாய் குட்டி போட்டா அதுக்கும் சோறு போட்டு வளர்த்துவாங்களே… அப்படித்தானே நான் உங்களுக்கு… என்ன இங்க குட்டிக்காக அம்மாவுக்கும் போனாபோகுதுன்னு என்னென்னவோ கிடைக்குது…”
கசந்த புன்னகையுடன் தொண்டை தழுதழுக்க பேசியவளை விழிகள் சுருக்கி பார்த்தபடி நின்றிருந்தான் குரு.
“அப்போ நான் யார் உங்களுக்கு..? சவியை உங்க மகளா ஏத்துக்கிட்டதால போனா போகுதுன்னு என்னை ஏத்துக்க முயற்சி பண்றீங்களா..? அப்போ என்னுடைய உணர்வுகள்..? ஆசைகள்…? சவி மட்டும் போதும்னு நினைச்சதாலதானே வேற ஒருத்தனுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நினைச்சீங்க. நான் சண்டை போட்டதாலதானே வேற வழியில்லாம என்னை ஏத்துக்கலாமான்னு முடிவுக்கு வந்திருக்கீங்க… அதையும் நீங்க வாய் திறந்து சொல்லல… கட்டாயத்திலதான் நான் உங்களுக்கு எல்லாம்னா அந்த எல்லாம் எனக்கு வேணாம்… ஆரம்பத்துல நீங்க காட்டுன இரக்கம் அக்கறை இதெல்லாம் ஏத்துக்க முடிஞ்சது… ஆனா இப்போ… இப்போ…” என்றவள் அதற்குமேல் பேச முடியாமல் தொண்டை விக்கினாள்.
கண்களில் இருந்து கதகதவென கண்ணீர் பெருக்கெடுத்து வழிய வேகமாக சுவற்றுப் பக்கமாக திரும்பிக் கொண்டவள் முகத்தை மூடி முதுகு குலுங்கினாள்.
சில நொடிகளில் அவள் தோளின்மேல் ஓர் இரும்புக்கரம் அதுவும் இதமாய்… குப்பென மின்சாரப் பாய்ச்சல் உடலைத் தாக்க அதிர்ந்து நின்றவளை தானே தன்புறமாக திருப்பினான் குரு.
சற்று முன்புவரை கோபத்தில் கனன்று கொண்டிருந்த அவன் முகம் கனிவின் ஊற்றாக மாறி இருந்தது. சினத்தை தேக்கி இருந்த விழிகள் ஆதுரமாக அவள் முகம் பார்த்தன.
அவள் இரு தோள்களிலும் அவன் இரும்புக் கரங்கள் அழுத்தமாக பதிந்திருந்தன.
“நான் உன் கண்ணை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்… நீ என் கண்ணை பார்த்து தெரிஞ்சுக்கலையா..?”
அவனது இரும்பை ஒத்த குரல் இத்தனை இளகிக் கேட்குமா..? அப்படித்தான் மென்மையடைந்து இருந்தது அவன் குரல்.
பதில் பேசாமல் தலை கவிழ்ந்தபடியே நின்றவளின் நாடியை பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்தினான்.
“கேட்டதுக்கு பதில் சொல்லுடி…”
அந்த டியில் அனைத்து உரிமையையும் காட்டி இருந்தான்.
அவள் கன்னங்களை தன் கைகளில் தாங்கிக் கொண்டவன் “என்னை பாரு…” என்றான் மென்மையாக.
இதழ் கடித்தபடி பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
“என்னை பாருடி…”
ஒவ்வொரு முறையும் அவனது டி என்ற அழைப்பில் அவளுக்குள் சொல்ல முடியாத சிலிர்ப்பு பரவிக் கொண்டே இருந்தது. மெல்ல விழிகள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தன.
“இரக்கம், அக்கறை இதெல்லாம் மனிதாபிமானம் இருக்கிற எல்லாருக்குமே வரும். ஆனா நேசம்..? காதல்..? பாக்குறவங்க மேல எல்லாம் வந்துடுமா..? ஆரம்பத்துல உன்மேல கருணை வந்தது உண்மை… அது காதலா மாறி பல மாசமாச்சுடி… அது உனக்கு புரியலையா..?”
ஆதங்கத்தோடு சொன்னவனின் விரல்கள் தன்னிச்சையாக அவளது கன்னங்களை வருட பீறிட்ட கண்ணீரோடு அவன் முகம் பார்த்தாள் அஞ்சலி.
(தொடரும்)
error: Content is protected !!