Skip to content
Post Views: 4,273
தூறல் – 35
அஞ்சலியை அணைத்தபடியே கண்மூடி சில நொடிகள் தன்னை சமன்படுத்தி நிமிர்ந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டான் குரு. முகத்தில் ஒரு தெளிவும் நிதானமும் தெரிந்தது.
Advertisement
அவளது பாதங்களை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டவன் “உன் அண்ணன் எப்படி..?” அவள் விரல்களுக்கு சொடுக்கெடுத்தபடியே கேட்டான்.
“நிதர்சனமான வாழ்க்கை வாழற ஒரு சராசரி ஆம்பள. அவன் உலகத்துல அவனோட சேர்த்து அவன் பொண்டாட்டியும் மகனும் மட்டும்தான். என் அப்பா அம்மாவுக்குகூட அங்கே இடமில்ல. எங்கமேல எல்லாம் பாசமே இல்லைன்னு சொல்ல முடியாது… பெரிய பாசக்காரனும் கிடையாது. அவன் மனைவி மகனுக்காக அவன் ஓடுறான்… உலகத்துல முக்கால்வாசிப்பேர் இப்படித்தானே… அதை தப்புன்னு எப்படி சொல்ல முடியும்..?”
Advertisement
Advertisement
“உன் அண்ணி..?”
“சுயநலத்தின் மொத்த உருவம்… என் அண்ணனை சுத்தி ஒரு நெருப்பு வளையத்தை போட்டு எங்க யாரையுமே அதுக்குள்ள நுழைய விடமாட்டாங்க. எங்க யாரையும் தொந்தரவு பண்ண மாட்டாங்க… அதே மாதிரி நாங்களும் அவங்களுக்கு எந்த தொந்தரவும் பண்ணக் கூடாதுன்னு நினைப்பாங்க. அதிலும் குறிப்பா நான் இங்கேயே வந்ததுக்கு அப்புறம் கையில சவியும் இருந்ததால எங்களை விட்டு மொத்தமாவே விலகி இருந்தாங்க… இப்பவும் இருக்காங்க. எல்லாம் பயம்… அருணுக்கு என்னை கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சொல்லி என் அண்ணனையும் என் அப்பா அம்மாவையும் அதிகமா வற்புறுத்தினதே அவங்கதான். அவங்க ரூட் கிளியர் ஆகணுமே. நான் இங்கேயே வந்து உக்காந்துட்டா காலம் முழுக்க நாங்க ரெண்டு பேரும் அவங்க தோள்ல சுமையா ஆயிடுவோம்னு ஒரு பயம். அதைவிட பெரிய காமெடி என்ன தெரியுமா..? இன்னும் 20 வருஷம் கழிச்சு அவங்க பையனுக்கு நம்ம பொண்ணை கட்டி வைக்கிற வற்புறுத்தல் வந்துடுமோன்னு ரொம்ப எக்ஸ்ட்ரீமா யோசிச்சுட்டாங்க. இப்பவெல்லாம் என்கூட பேசுறதைகூட ரொம்ப குறைச்சிட்டாங்க. நம்ம விஷயம் என்னை பொறுத்தவரைக்கும் என் அண்ணிக்கு பெரிய ரிலீஃபா இருக்கும். மனிதர்களில் எத்தனையோ நிறங்கள்… அவங்க நிறம் அப்படி…”
Advertisement
கசந்த புன்னகையோடு சொன்னவளை நெருங்கி அமர்ந்து அவள் விரல்களை கோர்த்துக் கொண்டான் குரு.
“என் அஞ்சுக்குட்டியும் என் சவிக்குட்டியும் இனி யாருக்கும் பாரமா இருக்கப் போறதில்ல. முழு பாரத்தையும் இதோ இங்கே ஏத்திக்கிட்டேன்…”
சந்தோஷமா தன் இதயத்தை தட்டிக்காட்ட அங்கேயே தனது முகத்தை சாய்த்து கொண்டாள் அஞ்சலி.
மறுநாள் விடியலில் அஞ்சலியின் அண்ணன் கபிலனும் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.
“அண்ணே வந்துட்டாம்மா… நீயும் மாப்பிள்ளையும் அவங்க அத்தையையும் அழைச்சிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடுங்க…”
அஞ்சலிக்கு போனில் அழைத்து கூறினார் லதா.
“அம்மா… நான் சொன்னதை நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். உங்க பையன் என்ன பெரிய பருப்பா..? அவன் சம்சாரம் என்னெல்லாம் உரு ஏத்தி அனுப்பி இருக்காங்களோ அதைத்தான் இங்கே வந்து ஒப்பிக்கப் போறான். கொஞ்சமாச்சும் என்மேல பாசம் இருந்தா இங்கே வந்து என்னை பார்க்கட்டும்… பேசட்டும்… எங்களால அங்கே வர முடியாது…”
பதிலைகூட எதிர்பார்க்காது பட்டென இணைப்பைத் துண்டித்து எரிச்சலோடு திரும்பியவளின் பின்னே நின்றிருந்தான் குரு.
“ஏன்டி இப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேசுற..? உன் பிறந்த வீடுதானே… அங்கே போறதுல உனக்கு என்ன அப்படி ஒரு பிடிவாதம்..?”
“யோவ்… என்ன..? மாமியா வீடு வா வான்னு இழுக்குதா..? இல்ல மச்சினன் அப்படியே ஈர்க்கிறாரா..? உங்க ஊர் பக்கம்தான் பொண்ணையும் கொடுத்து வீட்டையும் எழுதி வைப்பாங்க. இங்கே அந்த பப்பெல்லாம் வேகாது… மாமனார் வீட்டை ஆட்டைய போடலாம்னு பாக்குறியா..? என் அண்ணி வெடிகுண்டை தூக்கி உன் தலையிலேயே போடும்…”
வெடித்த சிரிப்போடு சொன்னவள் அவன் எட்டிப் பிடிக்கும் முன் அங்கிருந்து ஓடியே போயிருந்தாள்.
“வாங்க…”
புன்னகை முகத்தோடு கைகள் இரண்டையும் கூப்பி உள்ளே நுழைந்தவர்களை வரவேற்றான் குரு. தலையசைப்போடு தானும் வணங்கியபடியே உள்ளே நுழைந்தான் கபிலன்… உடன் லதாவும் கர்ணனும் நுழைந்திருந்தனர்.
“வாங்க… வாங்க…”
வேகமாக கூடத்திற்கு வந்த ராதா தானும் வரவேற்க அவரிடமும் தலையசைத்தவர்களை இருக்கையில் அமரச் செய்திருந்தான் குரு.
தயாராக வைத்திருந்த பழச்சாற்றினை குவளைகளில் மாற்றி அவர்களிடம் கொடுத்தார் ராதா.
குருவும் கபிலனும் நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் ஆழமாக பார்த்துக் கொண்டனர். குருவின் தோற்றமும், ஆளுமையும், அந்த கண்களில் தெரிந்த கூர்மையும், களை பொருந்திய அந்த முகமும் கபிலனுக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தி இருந்தன. அத்தோடு தாயும் தகப்பனும் அனைத்து விபரங்களையும் தெள்ளத் தெளிவாக அவனோடு ஏற்கனவே பேசி இருந்தார்களே.
அவர்கள் வந்து அமர்ந்த பின்னும் அஞ்சலி அங்கு வந்திருக்கவில்லை.
“அஞ்சு…”
தலையை திருப்பி அவளை அழைத்தான் குரு.
“ம்ம்… சவிக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருக்கேங்க… முடிச்சுட்டு வந்துடறேன்…” குரல் மட்டும் வெளியே வந்தது.
“அத்தை… அந்த கடன்காரி வேணும் என்டே பண்ணிட்டு இருக்கா… காதை திருகி அவளை பிடிச்சு வெளியே இழுத்துட்டு வாங்க…”
ராதாவின் காதில் அவன் முணுமுணுப்பாய் கூற அவரும் சமையல் அறைக்குள் சென்றிருந்தார்.
தன் தங்கை தன் முகத்தை காணக்கூட பெரிதாக விருப்பம் தெரிவிக்கவில்லை என்பது கபிலனுக்கும் புரிந்தது. அவளது ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் அவர்களால் அவள் கொண்ட வலியும் வேதனையும் வெறுப்பும்தான் வெளிப்படுகிறது. அது அவர்களுக்கும் புரியாமல் இல்லை.
“என்ன முடிவு பண்ணி இருக்கீங்க..?”
பேச்சை தொடங்கியிருந்தான் கபிலன்.
“எந்த முடிவை கேக்குறீங்க..?”
நிமிர்வாக அமர்ந்து நேர்கொண்ட பார்வையுடன் தானும் கேட்டிருந்தான் குரு.
“ரெண்டு பேரும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இப்படி ஒரே வீட்ல இருந்தா பார்க்கிறவங்க ரொம்ப அசிங்கமா பேச ஆரம்பிச்சிடுவாங்க. இப்பவே இந்த தெரு முழுக்க என்னென்னவோ பேசிக்கிறாங்களாம். குடும்ப கௌரவம்னு ஒரு விஷயம் இருக்குல்ல…”
“உன் கௌரவத்துக்கு அப்படி என்னண்ணே குறை வந்துருச்சு..?”
கபிலனிடம் கேள்வி கேட்டபடியே சமையலறையில் இருந்து வெளியே வந்திருந்தாள் அஞ்சலி.
“நீ இந்த வீட்டை விட்டு போனதுல இருந்து எத்தனை அசிங்கத்தை நாங்க எல்லாரும் ஃபேஸ் பண்ணினோம்னு தெரியுமா..?
புருவம் நெறிய கோபத்தோடு பதில் அளித்தான் கபிலன்.
“ஊர் எதைத்தான் பேசல..? என்னைக்குதான் பேசல..? மனசளவுல எவ்வளவு வெறுப்பும் விரக்தியும் இருந்தா நான் வீட்டை விட்டு போய் இருப்பேன்… அதைப்பத்தி உனக்கு எந்த யோசனையும் வரவே இல்லையா..?” ஆதங்கத்தோடு கேட்டாள் அஞ்சலி.
“எதுவா இருந்தாலும் உட்கார்ந்து பேசி இருக்கணும்ல…’
“யார்கிட்ட..? சொல்லு யார்கிட்ட..? உங்க மூனு பேர்கிட்டயும் நான் என்ன பேசல..? நீங்க எல்லாரும் எதை காதுல வாங்குனீங்க..? இங்கே பாருண்ணே… முடிஞ்சு போன கதை எதையும் பேசாதே. பேசினா உனக்கும் எனக்கும் நிறைய மனஸ்தாபம் வரும். அப்பாவும் அம்மாவும் உன்கிட்ட எல்லாமே தெளிவா சொல்லி இருப்பாங்க… ஒரு அண்ணனா எங்க கல்யாணத்தை முன்ன நின்னு நடத்து. அது போதும்…”
“அந்த தேனிக்காரங்க திரும்பவும் எந்த பிரச்சனையும் பண்ணாம இருக்கணும் அஞ்சலி…”
“என்ன பிரச்சனை பண்ணிடுவாங்க..? ஹான்… ஒன்னும் பண்ண முடியாது… எல்லாம் தெளிவா பண்ணி முடிச்சாச்சு… அந்த குடும்பத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லைன்னு எழுதி கொடுத்தாச்சு. இனி என் வழியில அவங்க குறுக்கிடவே முடியாதுன்னு வக்கீல்கூட எனக்கு தெளிவுபடுத்திட்டுதான் போனார். நீ தேவையில்லாம எதையும் யோசிக்க வேண்டாம்…”
அவள் தெளிவிலும் உறுதியிலும் அவனுக்கும் ஒருவித நிம்மதி பிறந்தது. தன் தந்தையிடம் திரும்பினான் கபிலன்.
“அப்பா… அப்போ உடனே முகூர்த்தத்துக்கு தேதி பாருங்க. லேட் பண்ணிட வேணாம்… என்னால லீவெல்லாம் எக்ஸ்டெண்ட் பண்ண முடியாது. நாளைக்கேகூட நல்ல முகூர்த்த நாள்தானே… நாம ஊரை அழைச்சு ஒன்னும் பண்ணப் போறது இல்ல… நம்ம வீட்டளவுக்கு சிம்பிளா முடிச்சுக்கலாம். இதுல உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லையே…” என்றபடியே குருவிடம் திரும்பினான் கபிலன்.
நாளைக்கேவா..? என்பது போல்தான் பார்த்தான் குரு. மொத்தத்தில் கபிலனின் அவசரத்தில் கடனை கழித்து கடமையை முடித்துவிடும் எண்ணம்தான் தெரிந்தது. என்ன மாதிரியான மனிதன் இவன் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
“வைஷ்ணவி வர வேணாமாப்பா..?” அவசரமாக கேட்டார் லதா.
“அவளுக்கு லீவு இல்லம்மா… என்னை மாதிரி நினைச்ச உடனே அவளால வரவும் முடியாது. கல்யாணம் முடியட்டும்… அப்புறம் ஒருநாள் இவங்களை அங்கே கூட்டிட்டு போற மாதிரி வேணா பிளான் பண்ணிக்கலாம்…”
குரு அஞ்சலியை திரும்பிப் பார்க்க ‘பார்த்தியா… உன் மச்சினனின் லட்சணத்தை…’ என்று விழிகளால் பேசினாள் அஞ்சலி.
அவசரமாக நாட்காட்டியை கையில் எடுத்து வந்த ராதா “தம்பி சொல்றதும் சரிதான்… நாளைக்கு வெள்ளிக்கிழமை… நல்ல முகூர்த்தநாள்… மீனாட்சி அம்மன் கோயில்ல வச்சு எளிமையா கல்யாணத்தை முடிச்சிடலாம். அடுத்தடுத்த ரெண்டு நாள் இவங்களுக்கும் ஸ்கூல் லீவுதானே… எல்லாருக்குமே ஈஸியா இருக்கும்…” என்றார் சிரித்தபடி.
தொண்டையை செருமிக் கொண்டு குருவிடம் திரும்பினான் கபிலன்.
“நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு…” என்று அவன் ஆரம்பிக்கும் முன் வேகமாக கையை நீட்டி தடுத்திருந்தான் குரு.
“ரொம்ப சம்பிரதாயமான விஷயங்கள் எதுவும் வேண்டாமே… இங்கே எந்த எதிர்பார்ப்பும் இல்ல… அஞ்சுவையும் என் பொண்ணையும் என்கிட்ட கொடுத்துடுங்க… அது போதும்…”
அழுத்தம் திருத்தமான அந்த வார்த்தைகளிலேயே மொத்தமாக அடங்கிப் போயிருந்தான் கபிலன். இதற்குமேல் ஒருவன் தனது நேசத்தை வேறு எப்படி வெளிப்படுத்திவிட முடியும். அவன் வெளிப்படுத்தியது அவன் நேசத்தை மட்டும் அல்ல… அவனது சிறந்த குணத்தையும்கூட.
இறுக்கம் மாறி கபலனின் முகத்தில் இதமான புன்னகை பரவியது.
“இதுக்குமேல நான் பேசுறதுக்கு எதுவுமே இல்ல… அஞ்சலி இனிமே சந்தோஷமா இருப்பான்னு மட்டும் தெளிவா உணர முடியுது…”
சொன்னவன் மெச்சுதலாக அஞ்சலியை பார்க்க அவளோ அமர்த்தலாக அவனை பதில் பார்வை பார்த்தாள்.
அன்றைய நாள் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டான் குரு. எளிமையான திருமணம் என்றாலும் திருமணத்திற்கு என்று சில வேலைகள் இருக்கின்றன அல்லவா. ராமலிங்கமும் காமாட்சியும் அவர்களோடு இணைந்து வேலைகளைப் பிரித்துக் கொண்டனர். மதிய உணவு முடித்து உடை வாங்க ஜவுளிக்கடைக்கு அனைவருமாக சென்றிருந்தனர்.
குருவின் கையைப் பிடித்து கிள்ளி அவனை தனியே அழைத்து வந்திருந்தாள் அஞ்சலி.
“எனக்கு உள்பாவாடை வாங்கறதா இருந்தாலும் அது உன் காசுலதான் வாங்கணும் புரிஞ்சுதா..?”
கட்டளையாகக் கூறியவளை குறுஞ்சிரிப்போடு பார்த்தான் குரு.
“உத்தரவு மகாராணி… வேற..?” தலையை தாழ்த்தி பவ்யமாக பதில் அளித்தான்.
“உங்களுக்கு முழுக்க முழுக்க என் அண்ணன்தான் எடுப்பான்… ஜட்டி வரைக்கும்… புரிஞ்சுதா..?
“ஏய் பைத்தியம்… போடி அந்த பக்கம்… எனக்கு எல்லாம் தெரியும்… வந்துட்டா…” என்று நகரப் போனவனை இழுத்துப் பிடித்தாள் அஞ்சலி.
“யோவ்… நான் சொன்னபடிதான் நடக்கணும். இது உனக்கான அங்கீகாரம்… உனக்குன்னு ஒரு மச்சினன் இருக்கான்… உறவுகள் இருக்காங்க… அதை காட்டிக்கதான் இது… புரிஞ்சதா..? பெருசா ஒட்டி உரச வேணாம்… ஆனா உரிமைப்பட்ட விஷயங்களை விட்டுக் கொடுக்கவும் வேணாம்… நாளைக்கு நம்ம பொண்ணுக்கும் பையனுக்கும் தாய்மாமாவா அவன் மடியில வச்சுதான் முடி எடுக்கிறது காது குத்துறதுன்னு எல்லாமே நடக்கும்… நடக்கணும்…”
“சந்தடி சாக்குல பையன்னு அதையும் உள்ள இழுத்துட்டு வந்துட்ட பாத்தியா..?” என்று சிரித்தான் குரு.
“நமக்கு பையன் பொறந்ததுக்கு அப்புறம்தான் சவிக்கும் காது குத்தப் போறோம்… ரெண்டு பேருக்கும் ஒன்னா வச்சுதான் எல்லாமே…”
“அடியே… இப்பதான்டி கல்யாண உடுப்பே எடுக்க வந்திருக்கோம்…”
“இது வேற டிபார்ட்மெண்ட்… நான் சொல்றது வேற டிபார்ட்மெண்ட்… உன் சாமர்த்தியத்தை பொறுத்துதான் சவிக்கு அஞ்சு வயசுல காது குத்துறமா..? பத்து வயசுல காது குத்துறமான்னு தெரியப் போகுது…” என்றவள் அடக்க முடியாத சிரிப்புடன் வேகமாக தன் பெற்றவர்களை நோக்கி நகர்ந்திருக்க, குப்பென உடல் முழுக்க சிவந்து போனவன் வெட்கத்தை மறைக்க முடியாமல் சிரிப்பையும் அடக்க முடியாமல் பிடரி முடியை அழுத்தமாய் கோதியபடியே கடந்து செல்பவளையே காதலோடு பார்த்தபடி நின்றான்.
தனது உற்ற நண்பன் பரசுராமனுக்கு மட்டும் அழைத்து விபரத்தை கூறி இருந்தான் குரு. அவனும் மகிழ்வோடு அன்று இரவே கிளம்பி மறுநாள் காலை வந்து விடுவதாக உறுதி கூறி இருந்தான்.
குரு, அஞ்சலி இருவரும் இணைந்து அவர்களது பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வருக்கும் நேரடியாகவே அழைப்பு விடுத்தனர். படித்த முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் அவர்களது எளிதான சுருக்கமான விளக்கங்களை கேட்டு மனப்பூர்வமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.
கூடுதலாக அஞ்சலியின்மேல் அக்கறை கொண்டு அவளது சான்றிதழ்களை குருவிடம் ஒப்படைத்த அந்த பள்ளியின் அலுவலக ஊழியருக்கும் அழைப்பு விடுத்தனர். நல்ல மனம் படைத்தவர்களிடமிருந்து நிறைவான வாழ்த்துக்கள்தானே வெளிப்படும்.
அனைவருக்கும் விளக்கங்கள் கொடுக்க முடியாது… பள்ளியிலும் வெவ்வேறு விதமான பேச்சுக்கள் விதவிதமாக இன்னும் சிறிது நாட்களுக்கு சுழலும்… அது அவர்களுக்கும் தெரியும்… எத்தனையோ கடந்து வந்தவர்களுக்கு இவற்றை கடப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்லவே.
(தொடரும்)
error: Content is protected !!