Skip to content
Post Views: 5,225
வெறியோடு வேகமாக வீட்டிற்குள் நுழைந்த அஞ்சலி அவளை பார்த்தபடியே எழுந்து அமர்ந்த குருவின் மடியில் இருந்த தன் மகளை வெடுக்கென தூக்கி இருந்தாள்.
தூக்கிய வேகத்தில் குழந்தையின் கன்னத்தில் சப்பென அறைந்திருந்தாள்.
Advertisement
“ஆஆஆ… ம்மாஆஆ…”
குழந்தை வீறிட்டு துடித்து அழுதது. பட்டுக்கன்னம் குங்குமமாய் சிவந்து போனது. பார்த்துக் கொண்டிருந்த குருவின் இதயத்தில் அமிலத்தை ஊற்றியது போல் வலி. துடித்து அழும் குழந்தையை கண்களால் பார்க்கவே முடியவில்லை. கோபத்தில் கண்கள் சிவந்தவன் அவளிடம் இருந்து குழந்தையை பிடுங்கி தன்னோடு அணைத்துக் கொண்டான்.
Advertisement
Advertisement
“நீ எல்லாம் ஒரு பொண்ணா..? படிச்சவதானே… குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கிற ஒரு ஆசிரியைதானே நீயும்… பெத்த பொண்ண அதுவும் பச்சை மண்ண இப்படி அடிக்கிற..? யார் மேலயோ இருக்கிற கோபத்தை எல்லாம் இந்த அப்பாவி குழந்தைகிட்ட காட்டிட்டு இருக்கிற. அவ அப்படி என்ன தப்பு பண்ணினா..?”
கோபத்தோடு கடுகடுத்தவன் குழந்தையின் முதுகை வருடி கன்னத்தையும் வருடிவிட்டான்.
Advertisement
“என் குழந்தையை குடுங்க… குடுங்க… அவளை தூக்கி வச்சு கொஞ்ச நீங்க யாரு..? உன்ன மாதிரி ஆம்பளைங்கமேல எனக்கு நம்பிக்கையே கிடையாது… மொத்தத்துல ஆண் வர்க்கமே படு கேவலமான வர்க்கம்… உங்களுக்கெல்லாம் உங்க ஆசையை தீர்த்துக்க பச்ச குழந்தைதான் வேணுமோ..? குடு என் புள்ளைய…”
விஷ வார்த்தைகளை வாரி இறைத்து அவனை துடிக்க வைத்து குழந்தையையும் அவனிடமிருந்து பிடுங்கி இருந்தாள்.
அவள் கேட்ட வார்த்தைகளில் அனலில் விழுந்த புழுவாக துடித்துப் போனவன் அசைவற்று அங்கேயே நின்றிருக்க அவனை நோக்கி கை நீட்டியபடி கதறித் துடித்த பிஞ்சு குழந்தையை இன்னும் இரண்டு அடிகள் முதுகில் வைத்து அவளை இடுப்பில் சுமந்தபடியே வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தாள் அஞ்சலி.
அப்படியே மண்டியிட்டு விழுந்த நிலையில் அமர்ந்தான் குரு.
அவள் கொட்டிச் சென்ற வார்த்தைகளின் வீரியம் அவனை அணு அணுவாய் சிதைத்துக் கொன்றது.
‘அத்தனை கேவலமானவனா நான்..? அவள் கண்களுக்கு அப்படித்தான் தெரிகிறேனா..? அதனால்தான் ஆரம்பம் முதலில் குழந்தையை என்னிடம் நெருங்க விடாமல் தள்ளி வைத்தாளா..? அந்நிய ஆடவனிடம் பழகாத ஒரு நபரிடம் குழந்தையை கொடுக்கக் கூடாது என்ற சாதாரண எண்ணம்தான் அவளிடம் இருப்பதாக அல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன்… ஆனால் அவளுக்குள் இப்படி ஒரு எண்ணமா..?’
இதயம் துடித்துக் கதறியது.
அவளும் அவள் அம்மாவும் வாய் சண்டை இட்டுக் கொண்டிருப்பது காதுகளில் நன்றாகவே கேட்டது. யாரைக் கேட்டு என் குழந்தையை அவனிடம் கொடுத்தாய் என்று லதாவை போட்டு பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
“ஏன்டி… உன் கண்ணுக்கு எல்லாருமே தப்பாதான் தெரிவாங்களா..? உன்கூட வேலை பாக்குற ஒரு வாத்தியார்தானே. அந்த பையனை பார்த்தா அப்படியா உனக்கு தெரியுது..? ஏன்டி இப்படி எல்லாம் நடந்துக்கிற..? அப்படி பாத்தா உன் அப்பாவும் ஆம்பளதான்… அவரையும் தப்பானவர்னு சொல்லுவியா..?”
“ஆமா… அவரு மட்டும் என்ன பெரிய யோக்கியமா..? பெத்த பிள்ளையோட மனசுக்கும் உணர்வுக்கும் மதிப்பு கொடுக்காம சுயநலமா யோசிக்கிற மனுஷன்தானே. ஆம்பளைங்க எல்லாருமே நாம மட்டும் சந்தோஷமா இருந்தா போதும்னு நினைக்கிற கேவலமான கூட்டம்தான்…”
முன் கூடத்தில் அவள் கத்திக் கொண்டிருப்பது நொறுங்கி அமர்ந்திருந்த அவனை காதுகளில் தெளிவாகவே விழுந்தது.
அவன் வாழ்நாளில் இப்படி ஒரு பட்டத்தை சுமந்து நின்றதில்லை. அதுவும் ஒரு குழந்தையை தப்பான நோக்கத்தோடு கையாள்பவன் என்ற முத்திரையை அவள் பதித்து சென்ற இந்த விஷயத்தை அவனால் எளிதில் கடக்கவே முடியவில்லை. தொண்டையை அடைத்துக் கொண்டு கண்கள் கசிந்து நின்றன.
இந்த குழந்தையின் உருவத்தில் தன் குழந்தையை பார்த்து மனதை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தவனுக்கு எப்பேர்பட்ட பட்டம்..?
“அப்பா…”
கைகள் இரண்டையும் விரித்தபடி அவனை நோக்கி பாய்ந்து ஓடிவரும் அவன் மகள் சவி முழுமையாக கண்களுக்குள் விரிந்து நின்றாள்.
மறக்க முடியாது… முயற்சித்ததும் இல்லை… ஆனால் நினைவுகளை புதைத்துக் கொண்டான்… இல்லையேல் பொசுங்கி சாம்பலாகி என்றோ காற்றில் கரைந்து போயிருப்பான்.
ஏன் வாழ்கிறான் தெரியாது… ஆனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விருப்பம் இல்லை. படைத்த இறைவன் எடுக்கும் நாளையும் தீர்மானித்திருப்பான் என்று எண்ணிக் கொண்டான் போலும். அதுதானே நிதர்சனம். விதித்த காலம்வரை வாழ வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ இதயத்தில் எங்கோ தங்கிப் போன விஷயம்.
ஆதலால்தான் எத்தனையோ இடிகளையும் இழப்புகளையும் தாங்கியும் தாண்டியும் இன்னும்கூட சுவாசித்து உண்டு உறங்கி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
கடல் கடந்து வந்ததும்கூட காட்சிகளை மாற்றி கடும் பயணத்தில் ஆசுவாசம் செய்து கொள்ள மட்டும்தான். தான் கற்றுத் தேர்ந்த கல்வியும் திறமையும் குறைந்தது நான்கு பேருக்கு நல்லது செய்யும் எனில் அதற்காவது அர்த்தமாகி கொள்கிறேனே என்று தனக்குத்தானே இன்றுவரை ஓர் சமாதானம் கூறிக் கொள்கிறான்.
சுவாரசியமற்ற வெறுமையான வாழ்க்கை. அதை அழகாகிக் கொள்ள அவன் நினைத்ததும் இல்லை… விரும்பியதும் இல்லை…அவன் வாழ்வில் அழகியல் அனைத்தும் என்றோ ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்டதைப் போல் அழித்துச் செல்லப்பட்டதே. தெரிந்தோ தெரியாமலோ அந்த குட்டிப் பெண் தன் பெயராலும் வயதாலும் அவனை நிறைய ஈர்க்கிறாள். இழந்த சொர்க்கம் ஒன்று அருகிலேயே இருப்பதுபோல் அவனுக்குள் ஒரு இதம் பரவுகிறது.
இதயத்தில் ஓரமாய் முடங்கிக் கிடந்த தந்தை பாசம் பீறிட்டு கிளம்பியதால் அந்த குட்டிப் பெண்ணுடன் உரிமையோடு விளையாடியதற்கு அவனுக்கு கிடைத்த பட்டம்..???
எத்தனை நேரம் அதே நிலையில் அமர்ந்திருந்தானோ…
பக்கத்து வீட்டில் குழந்தையின் விசும்பல் சத்தம் வெகுநேரம் கேட்டபடிதான் இருந்தது.
யார்மேல் இவளுக்கு இத்தனை கோபம்..?
ஆண் சமூகத்தையே வெறுக்கும் அளவிற்கு இவள் வாழ்க்கை அத்தனை பாதிப்பிற்குள்ளானதா..?
எதுவாகவோ இருக்கட்டுமே… பச்சிளம் குழந்தையிடம் இப்படியும் நடந்து கொள்வாளா..? என்ன பெண் இவள்..? நினைக்க நினைக்க கோபமும் ஆத்திரமும் பீறிட்டு கிளம்பியது.
அதன் பின்னான நாட்களில் அவள் இருக்கும் திசைப்பக்கம் கூட அவன் திரும்பவே இல்லை. குறிப்பாக குழந்தையை பார்க்க சுண்டி இழுக்கும் விழிகளை வலுக்கட்டாயமாக வேறுபுறம் திருப்பிக் கொள்வான். அந்த குரலும் பக்கவாட்டாக தெரியும் அந்த உருவமும் அவனை இழுத்தாலும் அவன்மேல் விழும் பழிச்சொல்லைத் தாண்டி அந்த குழந்தை அவளிடம் வாங்கும் அடிகளை நினைத்துகூட பார்க்க முடியவில்லை.
பள்ளியிலும் அவள் எதிரில் வந்தாலும் அவன் விழிகள் வேகமாக வேறுபுறம் திரும்பிக் கொள்ளும். எதார்த்தமாக கூட அவள் முகத்தை பார்ப்பதை தவிர்த்தான் குரு. பள்ளி விட்டு வீட்டிற்கு கிளம்பும்போதும் அவள் கிளம்பிச் சென்று அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து வேறு எங்கேனும் சென்று விட்டுத்தான் வீட்டிற்கு வருவான். வந்த பின்பும் இறுக்கி கதவடைத்து வீட்டிற்குள்ளேயே இருந்து கொள்வான்.
அவள் சொன்ன வார்த்தையின் வீரியம் இன்னும் கூட கசடாக இதயத்தின் ஓரத்தில் அழுத்தி வலியை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் போதெல்லாம் மனதிற்குள் கூடுதலான வேதனை எழுந்து விடுகிறது. பேசாமல் வீட்டை காலி செய்து வேறு எங்கேனும் சென்று விடலாமா என்றுகூட தோன்றுகிறது. பல வேதனைகளை மறந்து இயல்பான வாழ்க்கையை நிம்மதி இல்லை என்றாலும் அமைதியாக கழிக்கத்தானே இங்கு வந்தான். ஆனால் இங்கு மொத்த அமைதியும் தொலைவது போல் தோன்றியது.
ராமலிங்கமும் காமாட்சியும் அவனுடன் நன்றாக பழகக் கூடியவர்கள் என்பதால் சில பொழுதுகளில் அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களோடு பேச்சுக்கு அமர்ந்து விடுவான். அவர்களது இயல்பான எதார்த்தமான பேச்சில் அவன் மனமும் சற்று அமைதி பெறும்.
அன்றும் அப்படித்தான்… வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன் பின்வாசலில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து வந்து அறையில் போட்டு இஸ்திரி செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி இருந்தான்.
எதேச்சையாக அறை ஜன்னல் வழியே கண்களைத் திருப்ப பக்கத்து வீட்டு அறை ஜன்னலில் ஏறி நின்று ஜட்டியோடு கம்பியை பிடித்துக் கொண்டு தலையை ஆட்டியபடி விளையாடிக் கொண்டிருந்தாள் சங்கவி.
தன்னை மீறிய புன்னகையுடன் சில நொடிகள் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் குரு. வழக்கம் போன்றே இதயம் பாகாய் உருகியது. அவளும் அவனை கண்டுகொண்டாள். மகிழ்ச்சியில் பால் பற்கள் தெரிய சிரித்தவள் “மாமா…” என்று ஆசையாக அழைத்தும் இருந்தாள்.
“சவி… டிரஸ் பண்ணிக்க வராம அங்கே என்ன பண்ற..?” கூடத்தில் இருந்து அதட்டலான அஞ்சலியின் குரல் கேட்டது.
“பிடாரி… பாத்துட்டான்னா போச்சு… பிள்ளையை வெறும் உடம்புல போட்டு அடிப்பா… ராட்சஷி…”
பற்களுக்குள் கோபமாக முணுமுணுத்துக் கொண்டவன் அங்கிருந்து நகர்ந்து கொண்டான்.
இதற்குள் வாசலில் ஏதோ வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வாசலை நோக்கி இருந்த அறை ஜன்னலை திறந்து பார்த்தான். வாகனம் நின்றது அவன் வீட்டில் அல்ல… அஞ்சலியின் வீட்டில்…யாரோ சிலர் இறங்கி வீட்டிற்குள் செல்வது தெரிந்தது.
யார் எங்கே வந்தா நமக்கு என்ன என்று எண்ணிக் கொண்டவனாய் தனது வேலையில் ஆழ்ந்தான்.
சிறிது நேரத்தில் கலவையான ஆண் குரலும் பெண் குரலுமாய் ஏதேதோ சலசலப்பு. அஞ்சலி ஏதோ அழுதபடியே பேசிக் கொண்டிருப்பதும் கேட்டது.
“இப்போ என்ன..? இன்னும் எவ்வளவு காலத்துக்கு உன்னை விளக்கெண்ணெய் வச்சு நீவிக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிற..?” ஒரு ஆணின் குரல் ஓங்கி ஒலிப்பது கேட்டது.
“யாரும் நீவ வேணாம்… என்னை தொந்தரவு பண்ண வேணாம்… இங்கே வராதீங்க…”
“அப்போ குழந்தையை எங்ககிட்ட ஒப்படைச்சிடு…”
“என் குழந்தையை நான் ஏன் கொடுக்கணும்..?”
“அது எங்க குடும்பத்து வாரிசு…”
“ஓஹோ… இது வேறயா..? குழந்தையை காரணமா வச்சு என்னை கார்னர் பண்றதுதான் உங்க வேலை இல்லையா..? நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க… என் குழந்தையை யார்கிட்டயும் கொடுக்க மாட்டேன்…”
“அப்போ எங்க பேச்சுக்கு கட்டுப்படு…” ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் குரலும் ஓங்கி ஒலித்தது.
“யாருக்கும் கட்டப்பட்டு வாழணும்னு அவசியம் எனக்கு இல்ல… தொடர்ந்து இனி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தா நான் போலீசுக்கு போவேன்…”
அதன் பிறகு ஆளாளுக்கு சத்தமிட்டு கத்தும் குழப்பமான குரல்கள் தொடர்ந்து கேட்க தலையை உலுக்கிக் கொண்டு வீட்டை பூட்டிக் கொண்டு ராமலிங்கம் வீட்டை நோக்கி கிளம்பி இருந்தான் குரு.
வீட்டின் முன்னே இருந்த திண்ணையில் அமர்ந்தபடி கோல நோட்டில் ஏதோ கோலம் வரைந்து கொண்டிருந்த காமாட்சி சிரித்த முகத்துடன் அவனிடம் நிமிர்ந்தார்.
“என்னக்கா… ஏதோ முக்கியமான வேலையா இருப்பீங்க போல…” சிரிப்புடன் கேட்டப்படியே அவருக்கு எதிரில் அமர்ந்து கொண்டான்.
“சின்ன சின்னதா கோலம் போட்டு பெரிய கோலம் எல்லாமே மறந்து போயிருச்சு தம்பி. முந்தி எல்லாம் ரோட்டை வளைச்சு கோலம் போடுவேன். இப்ப உடம்பு வணங்க மாட்டேங்குது. வெள்ளிக்கிழமையாச்சும் பெரிய கோலமா போடலாமேனு நோட்டை எடுத்து வச்சு பார்த்துட்டு இருந்தேன்…”
வழக்கமான வெள்ளந்தி பேச்சுடன் நோட்டை மூடி வைத்தவர் “காப்பித் தண்ணி குடிக்கிறீங்களா…” என்றபடியே எழுந்தார்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்… இருங்க (உட்காருங்க)… எல்லாம் முடிச்சிட்டுதான் வந்தேன்…”
இதேநேரம் எங்கோ கடைவீதிக்கு சென்றுவிட்டு உள்ளே நுழைந்தார் ராமலிங்கம். பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தபடியே வந்தவர் காமாட்சியின் அருகிலேயே அமர்ந்து கொண்டார்.
“தேனிக்காரய்ங்க திரும்பவும் அஞ்சலி மேல படையெடுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க போல…”
தன் மனைவியிடம் கூற “ஆமா… ஒரு கார் வாசல்ல நிக்குது… அவய்ங்கதானா..?” என்றார் தானும் மீண்டும் எட்டிப் பார்த்தபடி.
“அந்தப் புள்ளைய வாழவும் விட மாட்டேங்கிறாய்ங்க… சாகவும் விட மாட்டேங்கிறாய்ங்க… உள்ள ஒரே சத்தமா இருக்கு… ஏதோ முடிவோடதேன் வந்திருப்பாய்ங்க போல…”
“இவளுந்தேன் சரின்னு சம்மதிச்சுட்டு போக வேண்டியதுதான. இதை தாண்டி அவளுக்கும் வேற என்ன வழி இருக்கு..?”
“ஏ கூறு கெட்டவளே… அதுல அவளுக்கு விருப்பம் இருக்கணுமில்ல. அந்தப் புள்ளதேன் ஆகாதுன்னு சொல்லுதே… அவ அப்பனுக்காச்சும் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கணும். அவனும் சம்மந்தி குடும்பத்தோட சேர்ந்து ஒத்து ஊதிக்கிட்டு திரியிறாய்ன். எப்படி இருந்த பிள்ளையோட தலையெழுத்து இப்படி ஆகி கிடக்கு பாரு…”
கணவனும் மனைவியும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க அவர்கள் பேசியது புரியவில்லை என்றாலும் அஞ்சலியை சுற்றி பெரும் பிரச்சனை வலை பின்னப்பட்டுள்ளது மட்டும் புரிந்தது.
“வந்திருக்கிறவங்க யாரு..? அஞ்சலியோட ஹஸ்பண்ட் ஃபேமிலியா..?” தன்னையும் மீறி வெளிப்பட்ட ஆர்வத்துடன் கேட்டிருந்தான் குரு.
“ஆமா தம்பி…” இழுத்து பெருமூச்சு விட்டார் ராமலிங்கம்.
“வீட்டுக்காரரை பிரிஞ்சு வாழறாங்களா..?”
“அந்தப் பய ஒரு விபத்துல செத்துப் போயிட்டாய்ன். இப்ப வந்திருக்கிறவன் கொழுந்தன். அண்ணே இல்லேன்னா போகுது. என்னைய கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துன்னு எந்நேரமும் இந்த பிள்ளையை போட்டு இம்சையை கொடுத்துட்டு திரியுது அந்த குடும்பம்…”
சங்கடத்தோடு ராமலிங்கம் கூற குபீரென தாக்கப்பட்ட அதிர்ச்சியுடன் விழிகள் விரித்து அவரையே பார்த்தான் குரு.
(தொடரும்)
error: Content is protected !!