Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்-08

அத்தியாயம் – 8
நிலாவின் சோகமான விழிகள் எழிலனை ஏதோ செய்தது. எழிலன் தன் புல்லட்டை பார்க்கிங்லே விட்டுவிட்டு ஸ்டாஃப் ரூம் சென்ற போது, ஆதிரா ஏதோ கூற, நிலா சிரித்தாள். அதைப் பார்த்ததும் தான் எழிலனும் சகஜமானன்.
எழிலன் வரவும், ஆதிரா “சர், உங்க பாட்டு செம. வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. பேசாம சூப்பர் சிங்கர் மாதிரி புரோகிராம்லே கலந்துகிட்டா நிச்சயம் ப்ரைஸ் உங்களுக்குத தான்.  நீங்க காலேஜ் டேஸ்லர்ந்து பாடுவீங்களானு இப்போ தான் நிலா கிட்டே கேட்டுட்டு இருந்தேன். இப்போவும் கன்டினியூ பண்ணறீங்களா?” எனக் கேட்டாள்.
“அந்த பட்டம் வாங்க எல்லாம் நான் பாடலை ஆதிரா மேடம். எனக்கு எஸ்பிபி பாட்டுனா இஷ்டம். அதையே என்னோட தனித் திறமையா வளர்த்துகிட்டேன்” எனப் பதில் கூறினான் எழிலன்.


Advertisement

பின் “உங்க கேள்விக்கு நிலவழகி மேடம் என்ன பதில் சொன்னாங்க?” எனக் கேட்டான் எழிலன்.
நிலா எழிலனை முறைக்க, அவனோ அவளைப் பார்த்துக் கேலிப் புன்னகை செய்தான். ஆதிராவோ அதைக் கவனியாமல் கர்ம சிரத்தையாக அவனின் கேள்விகளுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.
“இந்த நிலா வாயிலர்ந்து ஒரு வார்த்தை வாங்க முடியாது சர். ஏதாவது கேட்டா நீயே கேட்டுத் தெரிஞ்சிக்கோனு சொல்லிடுவா. நீங்க பாடி கேட்டு இருக்காளாம். அதை மட்டும் பெரிய மனசு பண்ணி எனக்கு சொல்லிருக்கா. மற்றபடி உங்க ரெண்டு பேர் காலேஜ் டேஸ் பற்றி கேட்டா, வாய்க்குப் பெரிய ஜிப் தான்.” என வளவளத்தாள் ஆதிரா.

Advertisement

எழிலன் நன்றாகச் சிரித்தபடி “உங்க ஃப்ரெண்ட் எப்போதும் அப்படித்தானே. அவங்க பேசணும்னா நிறைய பேர் பர்மிஷன் தரணும்.” என்றான்.

Advertisement

ஆதிராவிற்கும் நிலவனைக் கூறுகிறான் எனப் புரிந்ததால், “ஆமாம். பாஷா பாய் வரை பர்மிஷன் வாங்கணும்” எனக் கூடச் சேர்ந்து நக்கலடித்தாள்.
“ஏன் அந்த பாஷா பாய், நீங்க எல்லாம் ஒரே காலேஜ்லே படிச்சிருக்கீங்கனு என்கிட்டே கூட சொன்னதில்லை. நேத்திக்கு அந்த வீடியோ பார்த்துக் கேட்டதுக்கு அப்புறம் சொல்றா. இந்தம்மா அவ்வளவு அழுத்தம்” என்றாள் ஆதிரா.
நிலாவிற்கு கோபமும், அழுகையும் ஒரே நேரத்தில் வந்தது. எப்போதும் அப்படித் தான். இப்படியான கேலிகளை பள்ளிப் படிக்கும் காலத்தில் இருந்து கேட்டிருக்கிறாள் தான். அவளால் எதிர்த்துச் சண்டையிடவும் முடியாது. நிலவனிடம் கூறினால் இன்னும் பிரச்சினை பெரிதாகும் என்பதால் சொல்லவும் மாட்டாள் நிலா. தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு மறுகுவாள்.

Advertisement

இன்றைக்கும் அதே தான் நடந்தது. நல்லவேளையாக இவர்கள் மூவர்  தவிர இன்னும் ஸ்டாஃப் ரூமிற்கு யாரும் வரவில்லை.
நிலா “யார் எப்படி கேலி பண்ணினாலும், எனக்கு என் அண்ணன் தான் பெஸ்ட்.” என சுவற்றைப் பார்த்துக் கூறினாள்.
அந்தக் குரலில் தெரிந்த வருத்தம் எழிலனை ஏதோ செய்ய, ஆதிராவும் சங்கடப்பட்டாள்.
ஆதிரா “சாரி நிலா, சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன். இனிமேல் இப்படிப் பேசலை. ஓகே” என்றாள்.
நிலா “ம்” என மட்டும் கூறினாள்.
எழிலனுக்கு ஒன்றும் சொல்ல முடியாத நிலை. இதற்கு முன்னும் எழிலன் நிலவன் குறித்துப் பேசும்போது இப்படியான பேச்சுக்கள் நிலாவை  வருத்தமடையச் செய்வது நன்றாகவே தெரியும். ஆனால் எழிலனின் எண்ணங்களை வார்த்தைகளில் கொட்டி விடுவான். பின் எப்படியோ அவளைச் சமாதானம் செய்வான்.
கல்லூரியில் இருப்பதால், அதுவும் இவர்கள் இருவர் பற்றி யாருக்கும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்பதால், எழிலனால் இங்கே எதுவும் கூற முடியவில்லை. நிலாவைக் கெஞ்சுவது போல பார்க்க, அவளோ எழிலன் புறம் திரும்பவும் இல்லை.
‘எழிலா உன் வாய் தான் உனக்கு எதிரி. உன் எதிர்காலம் அமோகமாத் தெரியுது’ என மனதிற்குள் நினைத்தான் எழிலன்.
அடுத்து அடுத்து மற்ற பேராசிரியர்கள் வர, இவர்கள் சம்பாஷனையை  அத்தோடு முடித்துவிட்டு வேலைகளைப் பார்த்தனர்.
எழிலன் முதுகலை வகுப்புகளுக்குப் பாடம் எடுக்க ஆரம்பிக்க, நிலா இளங்கலை வகுப்புகள் மட்டும் எடுத்துக் கொண்டிருந்தாள். அதனால் ஓய்வு நேரங்கள் தவிர, அதிகம் இருவரும் சந்திக்க நேரவில்லை. அப்போதும் மற்ற பேராசிரியர்கள் குறைந்த பட்சம் ஆதிரா மட்டுமாவது இருப்பாள் என்பதால் எழிலன் பெர்சனல் பேச்சுக்கள் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.
தனியாக நிலாவிற்கு காலை வணக்கம், இரவு வணக்கம் அனுப்புவதும் தொடர்ந்தது. அதை நிலா பார்த்ததற்கான புளூ டிக் மட்டும் இருக்கும். ஆனால் பதில் வராது. அத்தோடு நிலாவிற்கு என தினம் ஒரு பாடலும் ஷேர் செய்து வந்தான் எழிலன்.
தினமும் காலை, மாலை இருவேளையும் நிலாவின் வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரிப் பேருந்து நிற்குமிடம் நடக்கும் சந்திப்பு மட்டும் தொடர்ந்தது. ஆதிராவின் கலகலப்பின் இடையே இவர்கள் இருவருக்குள்ளும் வார்த்தைச் சண்டைகள் நடக்கும். அது பெரும்பாலும் நிலவனை இழுத்துத் தான் எழிலன் நிலாவிடம் வம்பு வளர்ப்பான். அதற்கு ஆதிராவும் ஒத்து ஊதுவாள்.
நிலாவின் தந்தையோ, நிலவனோ வரும் காரின் அரவம் தெரிந்ததும். தன் ஹெல்மெட் மாட்டிக் கொண்டுவிடுவான் எழிலன். நிலவன் நிலாவை அழைக்க வருகிறான் என்றால், தன் கியூட்டியோடு பறந்தே விடுவாள் ஆதிரா.
அதனால் இதுவரை எழிலனை நிலாவின் வீட்டினர் யாரும் நேரில் சந்திக்க வாய்ப்பு வரவில்லை.
அவ்வப்போது நிலா குழந்தை மஞ்சுவைப் பற்றி எழிலன் எதுவும் கேட்கவில்லையே எனத் தவித்தாள். குழந்தை தினமும் எழிலனோடுப் பேசுகிறாள் என நிலாவிற்கும் தெரியும். ஆனால் தன்னிடம் அதைப் பற்றி பேசவில்லையே என நிலாவிற்கு வருத்தமும், கோபமும் இருந்தது. அதனால் அவளும் எழிலனின் வீட்டினரைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
கல்லூரியிலோ, பேருந்து நிறுத்தத்திலோ கேட்க முடியாது தான். தனக்கு தனியாக தினமும் பாடலும், வாழ்த்து மெசேஜ்ஜும் அனுப்பும்போதும் கேட்கவில்லை என்பது தான் நிலாவின் குறை.
ஆதிராவின் காஸ்ஸிப் குரூப் உபயத்தால், எழிலனின் பாட்டுத் திறமை இங்கே உள்ள மற்ற டிபார்ட்மெண்ட் லெக்சரர்களிடம் பரவியது.
அடுத்து அடுத்து கல்லூரி விழாக்களில் எழிலனைப் பாடச் சொல்லிக் கேட்க ஆரம்பித்தனர்.
அதற்கு எழிலன் “இப்போ நான் காலேஜ் மேடைகளில் பாடறது இல்லை. ஸ்டூடண்ட்டா இருக்கும்போது வேறே. ஆனால் நாம பாடம் நடத்துற இடத்தில் இருப்பதால் கவனமா இருக்கணும். இல்லைனா மாணவர்களை நாம கண்டிக்கவோ வழி நடத்தவோ முடியாது. வேறே பெர்சனல் ஈவண்ட் எதிலும் வேணும்னா கண்டிப்பா பாடறேன்” என்றான்.
ஆதிராவின் தொணதொணப்பில் இந்த செய்தி நிலாவின் காதிற்கும் சென்றது. நிலா இளங்கலைப் படிப்பில் இறுதி ஆண்டு வரையில் எழிலனின் பாட்டு கல்லூரி நிகழ்ச்சிகளில் இடம் பெறாமல் இருந்ததே இல்லை. அப்போதே பகுதி நேர லெக்சரராக வேலைக்கும் சேர்ந்து விட்டான் எழிலன்.  இது  என்னவோ புதிதாகக் கூறுகிறாரே என தோளைக் குலுக்கிக் கொண்டாள் நிலா.
எழிலன் சென்னை வந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் சென்றிருந்தது. முதல் வாரம் அவனின் தனி வீட்டை ஒழுங்குப் படுத்துவதில் சென்றது.. இதுவரை எழிலனுக்குப் படிப்பு, வேலை எல்லாம் உள்ளூரில் அமைந்து விட்டது. வீட்டை விட்டு இத்தனை நாட்கள் வெளியில் தங்கியதில்லை. அது இந்த வயதிலும் எழிலனுக்கு ஹோம் சிக் உண்டாக்கி விட்டது. அதனால் அடுத்த வாரம் தங்கள் ஊருக்குச் சென்று விட்டான்.
இது மூன்றாவது வார விடுமுறை. இன்றைக்குத் தன் மகளைப் பார்க்க நினைத்தான். மஞ்சு பிறந்ததில் இருந்து எழிலன் தள்ளியே இருந்ததால், குழந்தையின் குரல் கேட்டும், போனில் பார்த்தும் சந்தோஷம் கொள்ளப் பழகியிருந்தான். அப்போதும் மாதம் ஒருமுறை குழந்தையைப் பார்த்து விடுவான்.
இந்த வார விடுமுறையை மகளோடு செலவிட நினைத்து, சனிக்கிழமை மாலை எழிலன் நிலாவின் தந்தைக்கு அழைத்தான்.
அதியமான் சற்றே யோசனையோடு போனை எடுத்து “ஹலோ” என்றார்.
“நான் எழிலன். இன்னிக்கு மஞ்சுவைப் பார்க்க வரலாம்னு நினைக்கிறேன்” எனக் கூறினான்.
“திடீர்னு சொல்றீங்க. நாங்க வெளியில் போலாம்னு இருக்கோம். பாப்பாவும் எங்க கூட வரா.” என்றார் அதியமான்.
“நோ ப்ராப்ளம். எப்போ ரிட்டர்ன் வருவீங்க. நீங்க வந்ததும் வந்து பாரக்கறேன்” என்றான் எழிலன்.
அதியமான் யோசனையோடு “எப்போதும் நீங்க சென்னை வந்தால் முன்னாடியே சொல்லிடுவீங்க. இங்கே ஸ்டே பண்ணிருக்கீங்களா? எங்கே அழைச்சுட்டு வரட்டும்?” எனக் கேட்டார்.
நிலா, நிலவன் இருவருமே தன்னைப் பற்றி அவர்கள் வீட்டில் பேசுவதில்லை என்று எழிலனுக்குத் தெரிந்தது. இது எழிலனுக்குக் கோபத்தை உண்டாக்கியது.
என்றாலும் பொறுமையாக “நீங்க டைம் சொல்லுங்க. நானே வந்து பார்க்கறேன்” என மீண்டும் அழுத்தமாகக் கூறினேன்.
அதியமானுக்கு எழிலன் கோபமாகப் பேசுவதாகத் தோன்ற, மகனிடம் கேட்க வேண்டும் என நினைத்தார். அதை அப்படியேக் கூறாமல், “டைம் கரெக்ட்டா சொல்ல முடியலை. நாங்க திரும்பினதும், உங்களுக்குக் கால் பண்ணறேன்” என்றார்.
எழிலனும் வேறு எதுவும் கூறாமல் “ஓகே” என மட்டும் கூறி வைத்துவிட்டான்.
நிலாவின் மீதான ஆதிக்கத்தில் நிலவனின் பங்கு ஐம்பது சதவீதம் என்றால், அவளின் தந்தையின் பங்கு முப்பது சந்தவீதம். மீதி இருபது சதவீதம் தன்னைத் தானே குழப்பிக் கொள்ளும் நிலாவின் அறிவு.
அதனால் அதியமானிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டான் எழிலன். ஆனால் நிலவனோடு மல்லுக் கட்டுவதற்கு அவர் தேவலை என்ற ரீதியில் இது போன்ற சமயங்களில் மட்டும் போனில் பேசுவான்.
சரி அதியமான் வந்துவிட்டுப் பேசட்டும் எனக் காத்திருந்தவன், தனது வார இறுதி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதும் போல புளுடூத் ஸ்பீக்கரில் எஸ்பிபியின் ராகங்கள் காற்றில் கலந்து கொண்டிருந்தது.
இன்றைய ஸ்பெஷல் ‘நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா’ என ஆரம்பிக்க, எழிலன் “வந்துட்டாளா நிலா” என வாய்விட்டுக் கூறினான். எஸ்பிபியின் பாடலில் நிலா என்ற வார்த்தையில்லாமல் இருப்பது வெகு அரிது தான். அப்படி அவரின் பாடல்கள் ஒலிக்கையில் தன்னுடைய நிலவழகியின் நினைவுகள் வருவதையும் எழிலானால் தடுக்க முடியாது.
இந்தப் பாடலில் ‘விழியில் ஏன் கோபமோ..விரகமோ தாபமோ’ வரிகளில் நிலாவின் கோபம் வெளிப்படுவதும், அதே நேரத்தில் அவளின் அன்பைக் காட்டும் விழிகளின் அழகு எழிலனின் நினைவில் வந்தது.
“அழகி, கொல்றடி நீ” என நினைத்துக் கொண்டான் எழிலன்.

-தொடரும்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!