Skip to content
Post Views: 86
அத்தியாயம் – 10
நிலவனுக்கு நிலா அந்த வீட்டில் கஷ்டப்படுகிறாள் என்ற எண்ணமே தவிர, அவளை எழிலனிடமிருந்து பிரிக்க வேண்டும் என்பது எல்லாம் இல்லை. நிலா எழிலனை விரும்பித் திருமணம் செய்துக் கொண்டாள் என நிலவனுக்கு நன்றாகவேத் தெரியும். எழிலன் ஆட்டிட்யூட் தான் பிடிக்காதே தவிர, குணத்தில் நல்லவன் என்பதும் அவனுக்குத் தெரியும்.
எழிலன் பேசிய ஒரு சில வார்த்தைகளுக்கு அவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே நிலவனின் எண்ணம். அத்தோடு நிலா மட்டுமல்ல குழந்தை மஞ்சுவும் தன் பார்வையில் இருக்க வேண்டும் என்ற நினைப்பு. அதற்காகத் தான் மஞ்சுவைத் தன் தகப்பனோடு நன்றாகவேப் பழக விட்டான். பின்னாளில் யாருக்காக இல்லாவிட்டாலும் மஞ்சுவிற்காக எழிலன் இறங்கி வருவான் என்ற நம்பிக்கை நிலவனுக்கு இருந்தது.
நிலவனுக்கு ஏற்கனவே மஞ்சுவிடம் சில நாட்களாக அவளின் அப்பாவின் பேச்சு அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. இது தொடரும் போது, மஞ்சுவிற்காக எழிலன் சென்னை வந்துவிடுவான் என்பது தான் நிலவனின் கணிப்பு. அது பொய்க்கவும் இல்லை.
Advertisement
இதோ சென்னையில் அதிலும் நிலா வேலை செய்யும் கல்லூரியிலேயே லெக்சரர் வேலைக்கு வந்து விட்டான் தானே. இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகி விடும் என தான் நினைத்தான் நிலவன்.
ஆனால் எழிலன் என்ன நினைப்பில் இருக்கிறானோ என்ற பயம் இப்போது நிலவனுக்கும் வந்தது. அவனின் பேச்சில் நிலாவின் மீதான உரிமையை எழிலன் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என நிலவனுக்குப் புரிந்தது தான். இருந்தாலும் தன் மேல் உள்ள கோபத்தில் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறதே என யோசித்தான் நிலவன்.
மஞ்சு அருகில் வந்து “மாமா, நிலாமா ஏன் அழறா?” எனக் கேட்டதும், சுற்றுப்புறம் உணர்ந்தான் நிலவன்.
Advertisement
நிலாவும் தன்னைச் சரி செய்தபடி “ஒண்ணுமில்லடா குட்டி. அம்மா கண்ணில தூசி விழுந்துதா, அதான் தண்ணி வருது. இப்போ சரியாயிடுச்சே” என்றாள்.
Advertisement
நிலவனும் “ஆமாம்டா மஞ்சு குட்டி. நீங்க பலூன் எல்லாம் விளையாடியாச்சா?” எனக் கேட்டான்.
“பலூன் வேணாம். நான் அம்மா மாதிரி தா தை டான்ஸ் ஆடப் போறேன்” எனவும் இருவரும் சிரித்து விட்டனர்.
நிலாவின் அரங்கேற்ற வீடியோ அவ்வப்போது குழந்தைக்குப் போட்டுக் காட்டுவார்கள். நிலாவும் வாரம் ஒருமுறை நடன வகுப்புகள் எடுக்கிறாள். சில முறை அங்கே மஞ்சுவையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதைக் கொண்டு மஞ்சு தானும் ஆடப் போவதாகக் கூறியது இருவருக்கும் சிரிப்பை வரவழைத்தது.
Advertisement
குழந்தை மஞ்சுவிற்கு பாட்டுக் கேட்க மட்டுமே பிடிக்கும். எந்தப் பாடல் கேட்டாலும் அதன் முதல் வரி மட்டும் நியாபகம் வைத்துக் கொள்வாள்.
ஆனால் நிலாவைப் போல நடனத்தில் ஆர்வம் இருந்தது. அடம் பிடித்து பரத நாட்டிய உடை ஒன்றை வாங்கி அலங்காரம் செய்து போட்டோவும் எடுத்து வைத்திருக்கிறார்கள் நிலாவின் வீட்டினர். இதில் நிலவனுக்குத் தான் ஏக பெருமை. எழிலனைப் போல இல்லாமல், தன் தங்கையைப் போல அவளின் மகளும் இருக்கிறாள் என ஒரு கர்வம்.
உண்மையில் எழிலனுக்கும் அதில்தான் சந்தோஷம் அதிகம். அந்த பரதநாட்டிய உடை போட்டோவை நிலா மலர்விழிக்கு அனுப்பியிருக்க, அவர் தன் மகனுக்கும் காண்பித்தார். அந்த போட்டோ தான் எழிலனின் ஃபோன் டிஸ்ப்ளே போட்டோ. இந்த போட்டோ எடுக்கும்போது மஞ்சுவிற்கு மூன்று வயது தான்.
இப்போது மஞ்சுவின் பேச்சில் நிலவனுக்கும், நிலாவிற்கும் மனது சரியாக ஆரம்பித்தது. நிலா மஞ்சுவை அணைத்துக் கொள்ள, நிலவன் தன் தங்கையை அணைத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் நிகழ்ச்சியின் முக்கியப் பகுதி முடியவும், நிலவன் தன் தந்தையை அழைத்து வீட்டிற்குச் செல்லலாம் என்றான்.
நிலாவிடம் நடந்த வம்பளப்புகள் எதுவும் அவளின் தந்தை அதியமானிற்கு தெரிந்திருக்கவில்லை. அதனால் “என்னடா அவசரம்? இன்னும் சாப்பிடலை. ஃபங்சனும் இன்னும் முழுசா முடியலை. ஏன் மஞ்சுவின் அப்பா உனக்கும் ஃபோன் பண்ணினாரா?” எனக் கேட்டார்.
“அவர் எப்போ ஃபோன் பண்ணினார்?” எனக் கேட்டான் நிலவன்.
“பார்ட்டி கிளம்பற முன்னாடி பேசினார்.”
“என்னனு சொன்னார்?”
“திடீர்னு மஞ்சுவைப் பார்க்க வரவானு கேட்டார்.”
“நீங்க என்ன பதில் சொன்னீங்க?”
“நாங்க வெளியில் கிளம்பறோம், வந்ததும் சொல்றேன்னு சொல்லிட்டேன்”
“ம்ச். அவர் ஃபோன் பண்ணதை நீங்க அப்போவே சொல்லியிருந்தா இங்கே வந்திருக்கவே வேண்டாம்” என்றான் நிலவன்.
“என்னடா பேசற? ஃபர்ஸ்ட் நம்ம மாதவன் வீட்டு ஃபங்சனுக்கு வராம இருக்கவே முடியாது. அடுத்து மஞ்சுவின் அப்பா இங்கே வர்றதா இருந்தா முன்னாடியே சொல்லிடுவார். இப்படி திடீர்னு கேட்டா நமக்கு வேறே வேலை இல்லையா?” என்றார் அதியமான்.
“ம்ச். உள்ளூரில் இருக்கும்போது எப்போ வேணா பார்க்க வருவார் தானே?” எனக் கூறவும் அதியமான் அதிர்ச்சியாகப் பார்த்தார்.
“அவர் சென்னை வந்திருக்கிறது உனக்குத் தெரியுமா?”
“நம்ம வீட்டுப் பக்கத்து கேட்டட் அபார்ட்மெண்டுலே தான் அவர் வீடு எடுத்து தங்கியிருக்கார்”
“என்னது வீடு எடுத்திருக்காறா? அவர் வேலை ஊரில் தானே?”
“ம்ச். இங்கே சென்னைக்கே வேலைக்கும் வந்துட்டார். அதுவும் நம்ம நிலா வேலை பார்க்கிற காலேஜ்லே தான் அவரும் ஜாயின் பண்ணியிருக்கார்” என நிலவன் கூறவும், அதியமான் அதிர்ச்சியானார்.
“உனக்கு எப்போ எப்படி தெரியும்?”
“ஒன் வீக் ஆச்சு. எங்க அலுமினி குரூப் பார்ட்டிலே நான் பார்த்தேன்”
“ரொம்ப நல்லா இருக்குடா. அவர் இங்கே வந்திருக்கிறதை என் கிட்டே ஏன் சொல்லலை.” எனக் கேட்டார் அதியமான்.
அப்போதுதான் நிலவன் தன் தந்தையிடம் தான் இது பற்றி எதுவும் கூறவில்லை என்று நினைவு வந்தது.
“இல்லைபா. நிலா சொல்லியிருப்பானு நினைச்சேன். அதோட டெய்லி பஸ் ஸ்டாப்லே கொண்டு விடும்போது பார்த்திருப்பீங்கனு நினைச்சுட்டேன்.” என மெல்லிய குரலில் பதில் கூறினான் நிலவன்.
“ம். அவ அதுக்கு மேலே இருக்கா. உங்க அம்மா கிட்டே கூடச் சொல்லலை போலிருக்கு. ரெண்டு பேரும் அவங்க இஷ்டத்துக்குத் தான் இருக்கீங்க இல்ல?” எனக் கேட்டார் அதியமான்.
“அப்படி எல்லாம் இல்லைபா. என்னவோ அவர் இங்கேயே வேலை மாத்தி வந்ததில் எனக்கும் குழப்பமா இருந்துது. அதான் உங்க கிட்டே சொல்லணும்னு நியாபகம் வரலை”
“என்னவோ பதில் சொல்லு. அவர் இங்கே இருக்கார்னு தெரிஞ்சா, அவரையும் பார்ட்டிக்கு வரச் சொல்லிருப்பேன். மாதவனைத் தான் அவருக்கு நல்லாவே தெரியுமே. இப்போ பாரு. நம்ம குடும்பத்தில் ஒருத்தரை விட்டுவிட்டு வந்த மாதிரி இருக்கு. சரி. மாதவன் கிட்டே இதைச் சொல்லிட்டுக் கிளம்பலாம்” என்றார் அதியமான்.
“சரி. ஆனால் அவர் இங்கே வேலை மாற்றிருக்கார் எல்லாம் இப்போ சொல்ல வேண்டாம். சாதாரணமா வந்திருக்கிறதா சொல்லிக்கலாம். அவர் என்ன எண்ணத்தில் இருக்கார்னு தெரியாம நாம யார் கிட்டேயும் எதுவும் கமிட் பண்ணிக்க வேண்டாம்” என்றான் நிலவன்.
“நீ சொல்றதும் சரிதான்.” என்றவர், மாதவனிடம் சென்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினார் அதியமான்.
நிலவனின் அன்னைக்கு தீடிரெனக் கிளம்புவது ஏன் எனப் புரியவில்லை என்றாலும், அந்த பெண்மணி பேச்சு காரணமாக இருக்கும் என எண்ணிக் கொண்டார். நிலவனும், அவன் அப்பாவும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே குழந்தை மஞ்சுவைச் சாப்பிட வைத்திருந்தார் தேன்மொழி. நிலாவும் மஞ்சுவோடு பேசிக் கொண்டிருக்கவே, அப்பா, பிள்ளை பேச்சுக்கள் எதுவும் அவளின் கவனத்தில் பதியவில்லை.
அதியமான் குடும்பத்தினர் சாப்பிடாமல் கிளம்பியபோதும், இவர்கள் வீடு வந்து சேர ஒன்பது மணியை நெருங்கி விட்டிருந்தது. குழந்தை மஞ்சுவும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். வீட்டிற்குச் செல்லும்போதே எழிலனுடன் பேசலாம் என நினைத்த அதியமான், குழந்தை உறங்குவதைக் கண்டு விட்டுவிட்டார்.
இவர்கள் வீட்டை அடைந்ததும், முதலில் சாப்பிடச் சென்றனர். டைனிங் ஹாலில் அமர்ந்திருக்கும்போது எழிலனுக்கு அழைத்தார் அதியமான்.
எழிலன் ஃபோன் எடுக்கவும் “நான் அதியமான் பேசறேன். இப்போ தான் வீட்டுக்கு வந்தோம். பாப்பா தூங்க ஆரம்பிச்சிட்டா. நாளைக்கு அவளைக் கூட்டிட்டு வரட்டுமா?” எனக் கேட்டார்.
எழிலனும் நேரத்தைப் பார்த்துவிட்டு “சரி. நாளைக்கு கிண்டி பார்க் கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன். ஒரு டிரஸ் எக்ஸ்ட்ரா கொடுத்து விடுங்க. நானே வந்து கூட்டிட்டுப் போறேன்” என்றான்.
“ஓகே. நீங்க மார்னிங் பிரேக்பாஸ்ட் சாப்பிட இங்கே வந்துடறீங்களா?” என அதியமான் கேட்க, நிலாவிற்கு புரையேறியது. நிலவனும் முழித்தான்.
தேன்மொழி யோசனையோடு அதியமானைப் பார்த்தார்.
அந்தப் பக்கம் எழிலனுக்கும் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. இதுவரை அதியமான் அப்படிக் கேட்டதில்லை. மஞ்சுவை இவர்கள் ஊருக்கு அழைத்து வரச் சொல்லித் தான் பார்த்திருக்கிறான் எழிலன். அவனின் குடும்பத்தினர் மூவருமே ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள் என்பதால், ஒன்று போல விடுமுறை எடுத்துக் கொண்டு வர முடியாது. குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், மாதம் ஒரு முறை விடுமுறை தினங்களைக் கணக்கில் கொண்டு மஞ்சுவை அங்கே அழைத்துவரக் கூறுவான் எழிலன்.
ஆரம்பத்தில் நிலாவின் குடும்பத்தினர் பெரிய விஷயமாக இதைப் பேசினாலும், பின் விளைவுகளை உணர்ந்து எழிலன் போக்கிற்கு வரத் தொடங்கினார். எழிலனும் அதியமான் வேலைகளை ஒதுக்கிக் கொண்டு வர ஏதுவாக முன்னதாகவேக் கூறிவிடுவான். அல்லது அவரின் வசதியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லுவான்.
எழிலன் எப்போதாவது ஒரு சில சமயம் மட்டும் சென்னை வந்து மகளைப் பார்த்து விட்டுச் செல்வான். அப்போது எல்லாம் அதியமானும் அவனை வீட்டிற்கு அழைத்ததில்லை. எழிலனும் அதற்கு கேட்டதுமில்லை.
இன்றைக்கு அதியமான் காலை உணவிற்கு வரச் சொல்லவே, எழிலன் திகைத்தான். இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு “அது எல்லாம் வேண்டாம். குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை மட்டும் கொடுத்து விடுங்கள். எனக்கு நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் எழிலன்.
“சரி. நான் காலையில் பாப்பா எழுந்ததும் ஃபோன் செய்கிறேன்” எனக் கூறி வைத்து விட்டார் அதியமான்.
அவர் ஃபோனை வைத்ததும் நிலவன் “அப்பா, இப்போது எதுக்கு அவரை வீட்டுக்கு வரச் சொன்னீங்க?” எனக் கேட்டான்.
“அப்போ எங்கே வரச் சொல்ற?”
“எப்போதும் பொது இடத்துக்குத் தானே கூட்டிட்டுப் போவீங்க?”
“அவர் திருச்சியில் இருந்து இங்கே வந்தபோது சிட்டிகுள்ளே ரூம் போட்டிருப்பார். இங்கே வரை வந்திட்டுத் திரும்பி சிட்டி போறது டைம் வேஸ்ட்னு ரெண்டு பேருக்கும் காமன் பிளேஸ்கு வரச் சொல்வார். இப்போ அடுத்த பில்டிங்லே இருந்துட்டு எங்கியோ கூட்டிட்டு வரச் சொல்வாரா?” எனக் கேட்டார் அதியமான்.
தேன்மொழி தான் “என்னது அடுத்த பில்டிங்கா? எத்தனை நாளா இங்கே இருக்கார்? நம்ம வீடு இருக்கும்போது எதுக்கு யார் வீட்டிலோ இருக்கார் மாப்பிள்ளை?” எனக் கேட்டார்.
“ம். உன் மாப்பிள்ளை அவர் வேலையை இங்கேயே மாற்றிக் கொண்டு வந்துவிட்டார். அவர் வேலை பார்ப்பது உன் மகளின் காலேஜ்லே தான். தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறார். வீட்டை ஏற்பாடு செய்தது உன் மகன்.” எனக் கூறவும் தேன்மொழி திகைத்து மகன், மகள் இருவரையும் பார்த்தார்.
எழிலனை மாப்பிள்ளை என அழைப்பது தேன்மொழி மட்டுமே. நிலவன் சில நேரம் எழிலன் என்பான். பல நேரங்களில் நேரடியாகப் பேசவே மாட்டான். அதியமான் நிலாவின் முன் மாப்பிள்ளை என்பார். நிலவனிடமோ, தேன்மொழியிடமோ பேசும்போது நிலா வீட்டுக்காரர் என்று தான் குறிப்பிடுவார். நிலவனை விடவும் எழிலனை வேண்டாம் என்றது அதியமான் தான். கொஞ்சம் ஸ்டேட்டஸ் பார்ப்பவர். நிலாவின் பிடிவாதம் அவரை மண்டியிடச் செய்தது. அதற்காக நிலா கணவனைப் பிரிந்து வர வேண்டும் என எண்ணியதில்லை அதியமான். அவருக்குள் சில கணக்குகள் போட்டு வைத்திருந்தார். அவர்களின் பிரிவு தான் நினைத்தது நடக்க வாய்ப்பாக இருக்கும் என நினைத்தார் அவ்வளவு தான்.
இன்றைக்கு அவரே வீட்டிற்கு கூப்பிடவும் தான் நிலா அதிசயித்தாள். தேன்மொழியின் கோபம் பார்த்த பிறகு தான் தன் அன்னைக்கு இந்த விஷயமே தெரியாது என உணர்ந்துக் கொண்டாள் நிலா.
“அம்மா, அது வந்து..” என தயங்கிப் பேச வர “ஏண்டி, எங்களை எல்லாம் என்னனு நினைச்சுட்டு இருக்க? உனக்கு சப்போர்ட் பண்ணறதால நீ எது செய்தாலும் பேசாம இருப்போம்னா? பார்ட்டியிலே அந்தம்மா கிட்டே சொன்ன மாதிரி, உனக்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் வரட்டும்னு பார்த்தேன். நீ என்னடானா அந்த மனுஷன் வேலைக்கு இங்கே வந்ததைக் கூட சொல்லாம இருக்க?” எனப் பொரிந்து தள்ளினார் தேன்மொழி.
நிலவன் உடனே “நிலாவைச் சொல்லாதீங்க. அவ வீட்டுக்காரர் நம்ம யார் கிட்டேயும் சொல்லிட்டு வேலை பார்க்க இங்கே வரலை. அப்போ அவ மட்டும் என்ன செய்ய முடியும்?” எனத் தன் அன்னையிடம் கூறினான்,
“நீ சும்மா இரு நிலவா. எல்லா விஷயத்திற்கும் உன் தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காத?
“அம்மா, உங்கக்கிட்டே சொல்லக் கூடாதுனு இல்லை. அடுத்த பிஹெச்டி பண்ண தான் வந்திருக்கார். இங்கேயே வேலை பார்ப்பாரா இல்லை அங்கே ஊருக்குப் போவாரானு எல்லாம் எனக்கு தெரியலை. அடுத்து ரெண்டு பேரும் காலேஜ் விஷயங்கள் தவிர வேறே எதுவும் பேசவும் இல்லை. எனக்கே என்னனு புரியாம இருக்கும்போது, நான் உங்ககிட்டே என்ன சொல்றது?” எனக் கேட்டாள் நிலா.
நிலாவின் பேச்சில் தேன்மொழி லேசாகச் சமாதானமானாலும், இன்னும் அதிருப்தியுடன் தான் மகளைப் பார்த்தார்.
பின் “நிலா, நாளைக்கு காலையில் அவர் மஞ்சுவைக் கூட்டிட்டுப் போக வரும்போது, நீ வெளியே வந்து அவர்கிட்டே பேசு. உன்னையும் தான் சொல்றேன் நிலவா. அவர்கிட்டே ஐஞ்சு நிமிஷம் உட்கார்ந்து பேசிட்டு, பாப்பாவை அனுப்பி வைக்கலாம். அதுக்காக நிலா விஷயம் பற்றி என்ன முடிவெடுக்கப் போறார்னு எல்லாம் கேட்க வேண்டாம். மஞ்சுவை வச்சு நாம கார்னர் பண்ணறோம்னு நினைச்சுக்குவார். இதுவரை தான் அண்ணனும், தங்கச்சியும் எல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு வேலைப் பார்த்தீங்க. இனிமேல் நடக்கிறது எல்லாரும் சேர்ந்து பேசி பொறுமையா முடிவெடுக்கலாம். சரியா” என நீளமாகப் பேசி முடித்தார் தேன்மொழி.
நிலவன், நிலா இருவரும் ஆ எனப் பார்த்தார்கள். நிலா தான் “அம்மா, நீயா இப்போ பேசின. இல்லை உனக்குள்ளே ஆவி எதுவும் புகுந்துடுச்சா?” எனக் கேட்க, நிலவன் சிரித்து விட்டான்.
“ஏன் கேட்க மாட்டீங்க? உங்க ரெண்டு பேருக்கும் சண்டைனு வந்தா நான் எப்படி இருப்பேன்னு தெரிஞ்சிருக்கும். அண்ணன் சொல்றத தங்கச்சி தாண்டறது கிடையாது. தங்கச்சி நினைக்கிறதை செய்து முடிக்கிற அண்ணன். எல்லாம் சரியா நடக்கும்போது நான் தலையிடத் தேவையில்லாம இருந்தது. ஆனால் நிலாவ அவங்க வீட்டை விட்டுக் கூட்டிட்டு வரும்போது நம்ம பிள்ளையை நாம விட்டுக் கொடுக்க முடியாம வாய்யை மூடிட்டு இருந்தேன். மஞ்சுவிற்கு விவரம் தெரிய ஆரம்பிச்சாச்சு. இதுக்கு மேலேயும் சும்மா இருந்தா, நல்லா இருக்காதுனு நானே கொஞ்ச நாளா நினைச்சுட்டு இருந்தேன். இப்போ நல்ல வாய்ப்பு வந்திருக்கு. எல்லாரும் சேர்ந்து நடந்தத சரி பண்ணற வழியைப் பார்க்கலாம்” என்றார் நிலாவின் அன்னை.
நிலவனுக்கு முழுச் சம்மதம் இல்லை தான். ஆனால் நிலாவின் மனதை எண்ணிப் பேசாமல் இருந்தான். நிலாவோ, மஞ்சுவோ எழிலனைத் தாண்டி வேறு எதையும் யோசிக்க மாட்டார்கள் என்பதை இத்தனை நாளில் புரிந்துக் கொண்டிருந்தான் நிலவன்.
அடுத்து நிலா வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும், அவளிடத்தில் தெரிந்த மாற்றங்களும் நிலவனுக்குப் புரிந்தது. பிடிவாதமாக கல்லூரிக்குக் காரில் செல்ல மாட்டேன் என்றாள். தனியாக அனுப்ப மாட்டோம் என நிலவனும், அதியமானும் கூற, கல்லூரிப் பேருந்தில் செல்கிறேன் எனக் கூறினாள். நிலவன் முடியாது என்ற போது, நிலா அவனிடத்தில் எதுவும் பேசாமலே இரண்டு நாட்கள் இருந்தாள். பிறகு தான் நிலவன் இறங்கி வந்தான்.
எழிலனோடு திருமண விஷயம் என்ற போது கூட, நிலவனைப் பேசித் தான் கரைத்தாள் நிலா. இப்போது வெளிப்படையாகக் கோபத்தைக் காண்பிக்க ஆரம்பித்ததில் நிலாவிடத்தில் ஏற்பட்ட மாற்றம் நன்றாகப் புரிந்தது. பழைய நிலா இனிமேல் திரும்பி வர வாய்ப்பில்லை என நினைத்தான் நிலவன்.
அதனால் நிலவனின் அன்னை கூறியது போல் அடுத்து என்ன எனப் பார்ப்பது தான் நல்லது என உணர்ந்துக் கொண்டான் நிலவன்.
நிலாவின் வீட்டினர் எல்லோரும் உறங்கச் செல்ல, நிலா மீண்டும் எழிலனின் வாய்ஸ் மெசேஜ் கேட்டாள். இன்றைய கோட்டா ‘தோகை இளமயில்’ பாடல் தான் போல் என நினைத்தாள்.
பெரிதாக மெசேஜ் எதுவும் எழிலன் நிலாவிற்கு அனுப்ப மாட்டான். இருவருக்குள்ளும் நேசம் என்ற ஒன்று மலர்ந்த காலத்தில் இருந்தே அப்படித் தான். ஏதாவது மனதிற்கு பிடித்த விஷயம் நடந்தால் இப்படிப் பாட்டுகளாக வெளிவரும். அதைத் தாண்டி நேரில் பேசிக் கொள்ளும் ஒன்றிரண்டு நிமிடங்களில் தான் அவர்களின் நேசம் வளர்ந்தது.
இந்த எண்ணம் தோன்றும் போதே நிலாவின் நினைவுகள் கல்லூரிக் காலத்திற்குச் சென்றது.
-தொடரும்-
error: Content is protected !!