Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்-13(2)

அத்தியாயம் – 13 (2)
நிலா ஒருபுறம் எழிலனின் நினைவுகளில் இருக்க, எழிலனுக்கும்  நிலாவின் நினைவே. கலை நிகழ்ச்சிகளில் அவளின் நடனம் இல்லையே என காலேஜ் லெக்சரர்ஸ் பலர் எழிலனிடமே கேட்டனர். எக்ஸாம்ஸ், ஸ்டடீஸ் ஃபர்ஸ்ட் இயர்னு கொஞ்சம் பயப்படறாங்க எனக் கூறி சமாளித்தான்.
எழிலனின் நண்பர்களும் அவனிடத்தில் கேட்டனர். நிலா கலந்து கொள்ளாததற்கு தங்கள் செயல் தான் காரணமா என வருந்தினர். எழிலன் அப்படி எல்லாம் இருக்காது என ஆறுதல் கூறினான். உண்மை அதுதான் என்றாலும், அதைச் சொல்வதால் எந்தப் பயனும் இல்லை என நினைத்தான். இவர்கள் நிலாவிடம் பேசி சரி செய்கிறேன் என ஆரம்பிக்க, மீண்டும் நிலவன் உச்சியில் ஏறி நிற்பான். அது தேவையா என யோசித்தான். அதோடு அவர்களின் படிப்பு முடியப் போகும் நேரம் தேவையில்லாமல் எதுவும் செய்யப் போய், நண்பர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடக் கூடாது எனவும் நினைத்தான் எழிலன்.
செமெஸ்டெர் பரீட்சைகள் ஆரம்பித்தது. இதில் ஒவ்வொரு வருட மாணவர்களுக்கும் வேறு வேறு நாட்களில் தேர்வுகள் நடைபெற்றதால், ஒருவர் மற்றவரைச் சந்திக்க முடியவில்லை. கல்சுரல் நிகழ்ச்சிகளுக்கும் பெரிதான இடைவெளி இருந்தது.


Advertisement

பரீட்சைகள் முடிந்து எல்லோருக்கும் செமெஸ்டெர் லீவு விடப்பட்டது. இந்த விடுமுறை முடிந்ததும் நிலவன் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். இவர்களின் தந்தையின் நண்பர் மாதவனின் நிறுவனத்தில் அதற்கு ஏற்பாடு செய்து விட்டான் நிலவன். விடுமுறையில் நிலாவின் குடும்பத்தினர் வெளியூர் சென்றனர்.
நிலா குடும்பத்தோடு இருந்தாலும், எழிலனின் நினைவுகள் வந்து கொண்டு தான் இருந்தது.
எழிலனும் சில நாட்கள் தன் அம்மாவழி தாத்தா, பாட்டி வீட்டில் இருந்துவிட்டு வந்தான். திருநெல்வேலி அருகில் உள்ள கிராமம் அது. இன்னமும் கிராமம் எனும் வரையரையில் தான் இருந்தது அந்த ஊர். அவனின் தாத்தா வேலன் அரசாங்கத் துறையில் பத்திரப் பதிவாளராக வேலைப் பார்த்து ஓய்வு பெற்றவர். இப்போது அவனின் பாட்டி வள்ளியுடன் தங்களின் சொந்த கிராமத்தில் விவசாயமும், பொதுப் பணிகளும் செய்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

ஒருவகையில் எழிலனின் அப்பா வழித் தாத்தா சிவஞானமும் அதே ஊரைச் சேர்ந்தவர் தான். திருச்சியில் இருக்கும் தனது பல்பொருள் அங்காடியை மகன் செழியனிடம் கொடுத்துவிட்டு, கிராமத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்பது தான் அவரின் விருப்பமும். ஆனால் செழியன் பேராசிரியராகச் செல்லவே, கடையை மற்றவரிடம் கொடுக்க முடியாமல் திண்டாடுகிறார். அதனால் இவர்களின் நிலங்களும், தோப்பும் மேற்பார்வையிடுவது மலர்விழியின் தந்தை வேலன் தான்.  

Advertisement

சிவஞானத்திற்கு பேரன் எழிலனும் கடைப் பக்கம் வருவதில்லை என அத்தனைக் குறை. அவரைச் சமாதானம் செய்யவே ஒவ்வொரு செமெஸ்டெர் விடுமுறையிலும் ஒரு வாரம், பத்து நாள் என கிராமத்திற்குச் சென்று வருவான் எழிலன். விடுமுறையின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ எழிலனின் பெற்றோரும் வந்து தங்கிச் செல்வார்கள்.
இந்த விடுமுறைக்கும் எப்போதும் போல சென்றான் எழிலன். மலர்விழி, செழியன் அளவு எழிலனால் கிராமத்து பேச்சு வழக்கில் பேச முடியாது. மலரின் ஆச்சி சுந்தரம் இருந்தவரை, மலர் ஆச்சி என்றே குறிப்பிட்டு வருவதை எழிலன் ஆச்சரியமாகப் பார்ப்பான். அதே போல தாத்தா சிவஞானம் முழு கிராமத்து ஆசாமியாகவே பேசுவதும் வியப்பாக இருக்கும். முதலிலேயே அங்கே இவர்கள் குடும்பத்திற்கு நல்ல மரியாதை தான். வேலன் அங்கே முழுமையாகச் சென்ற பிறகு இன்னும் நல்ல மதிப்பு.
இரண்டு நாட்கள் பெரியவர்களுடன் நேரம் கழித்தவனுக்கு, மூன்றாம் நாள் தானாக நிலவழகியின் நினைவு வந்தது. அன்றைக்கு பௌர்ணமி என, எழிலனின் பாட்டி எல்லோருக்கும் நிலவு ஒளியில் சாதம் உருட்டிக் கொடுப்பதாகக் கூறினார். அப்படி அவர் கூறிக் கொண்டிருக்கையில் நிலவழகியின் பெயர் நினைவில் வர, அடுத்து அவளின் உருவமும் கண்ணெதிரே வந்தது.

Advertisement

எழிலனின் பாடும் திறமை தெரிந்தவர்கள் தான் அவனின் தாத்தா, பாட்டி. அதனால் அவனைப் பாடச் சொன்னார்கள். அவர்களுக்காக கொஞ்சம் பழைய பாடல்கள் தான் பாடுவான் எழிலன்.
இன்றைக்கும் அதே போல ஜெமினி கணேசன் பாடல் எடுத்துக் கொண்டான். “ஆயிரம் நினைவு .. ஆயிரம் கனவு .. காணுது மனது” பாடல் பாடினான்.
‘நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ” எனப் பாடும் போது எழிலனின் உதட்டில் தவழ்ந்த சிரிப்பு பெரியவர்களுக்குப் புதிதாக இருந்தது.
தாத்தாவும், பாட்டியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். எப்போதும் எழிலன் ரசித்துத் தான் பாடுவான். ஆனால் இந்த முறை பெரிய வித்தியாசம் தெரிந்தது. எழிலன் பாடி முடித்ததும் கண்களைத் திறந்தான்.
எதிரில் பெரியவர்கள் இருவரும் அவனையேப் பார்த்தனர்.
“என்ன தாத்தா அப்படிப் பார்க்கறீங்க?” எனக் கேட்டான் எழிலன்.
“உன்கிட்டே என்னவோ சேஞ்ச் தெரியுது எழிலா” என்றார் வேலன். பேரனிடம் சாதாரணமாகவே தான் பேசுவார் அவர். கிராமத்துப் பேச்சு வழக்கில் அவனிடத்தில் பேச மாட்டார்.
“அது எல்லாம் ஒண்ணுமில்லையே. இந்த பாட்டு இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் பிராக்டிஸ் பண்னினேன். அதான் சரியா பாடனும்னு அதிகமா இன்வால்வ் ஆகிட்டேன்” எனச் சமாளித்தான் எழிலன்.
“ம். நீ சொன்னா சரிதான்” என யோசனையோடு கூறினார் வேலன்.
பாட்டி வள்ளியோ எழிலனைப் பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தார்.
எழிலன் “என்ன பாட்டி?” எனக் கேட்டான்.
“இல்ல. உனக்கு யாரையாவது பிடிச்சு இருக்கோ?” எனக் கேட்டார் வள்ளி.
அவரின் கேள்வியில் எழிலனுக்குப் புரை ஏறியது. “பாட்டி உங்களுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்?” எனக் கேட்டான்.
“இது வரை உன் பாட்டு கேட்கும்போது உன்னோட ரசனை மட்டும் தான் எங்களுக்குத் தெரியும். ஆனால் இன்னிக்கு உன்னோட மனசே வெளிலே தெரியற மாதிரி எங்களுக்குத் தோணுது” என்றார் வள்ளி.
எழிலனுக்கு லேசாக வெட்கம் வந்தது. ‘ஐயோ எழிலா இப்படியாடா இருப்ப’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
ஆனால் வெளியில் “பாட்டி, தாத்தாக்குச் சொன்ன பதில் தான் உனக்கும். இந்த பாட்டு முதல் தடவை பாடறேன். அதனால் உங்களுக்கு அப்படித் தோணியிருக்கும்” எனச் சமாளித்தான் எழிலன்.
பாட்டி நம்பியது போல தெரியவில்லை. ஆனால் மேற்கொண்டு எதுவும் கேட்கவும் இல்லை.
எழிலன் “சரி. உள்ளே போய் படுப்போமா?” எனக் கேட்க, இன்னும் அதிர்ச்சியானர்கள் பெரியவர்கள்.
எப்போதும் இது போல இரவு நேரங்களில் வெளியில் படுப்பதைத் தான் விரும்புவான் எழிலன். பெரியவர்கள் தான் “எங்களுக்கு முடியலை எழிலா. போகலாம் வா” என அழைப்பார்கள்.
பெரியவர்கள் ஒருவரையொருவர் பார்த்து விட்டு “சரிப்பா” என்றனர். வீட்டிற்குள் சென்றதும், தாத்தா, பாட்டி அவர்கள் அறைக்குச் செல்லும்வரை, கூடத்தில் இருந்தான் எழிலன்.
அவர்கள் சென்றதும், எழிலனுக்கு என்று இருக்கும் அறைக்குச் சென்றான். எப்போதும் அவன் முதல் முறை பாடும் பாடலை ரெகார்ட் செய்து வைப்பான் எழிலன். இன்றைக்கும் ஆயிரம் நினைவு பாடல் தன்னுடைய மொபைலில் ரெகார்ட் செய்திருந்தான். அதை எடுத்து மீண்டும் கேட்டான். பின் என்ன நினைத்தானோ அந்த பாடல் ரெகார்டிங்கை நிலாவிற்கு அனுப்பி வைத்தான் எழிலன்.
பாடல் அனுப்பிய பின் செய்திருக்க வேண்டாமோ என நினைத்து, அதை அழித்து விட முயற்சித்தான். அதற்குள் நிலா பார்த்ததற்கு உண்டான பளு டிக் வந்திருக்கவே, இனி டெலீட் செய்தால் தான் தவறாகப் போகும் என நினைத்து அப்படியே விட்டு விட்டான்.
நிலாவின் பதிலுக்காக எழிலன் காத்திருக்க, கொஞ்ச நேரம் எந்த பதிலும் வரவில்லை. சிறு ஏமாற்றத்துடன் உறங்க ஆரம்பிக்க, அப்போது மெசேஜ் வந்தது.
“நீங்க பாடினது ரொம்ப நல்லா இருக்கு” எனப் பதில் அனுப்பியிருந்தாள் நிலா.
“ஓ. உங்களுக்கும் அனுபிட்டேனா? எந்த பாட்டும் முதல் தடவை பாடும்போது பீட்பேக் கேக்க என் ஃபிரண்ட்ஸ் குரூப்கு அனுப்புவேன்.  அது உங்களுக்கும் வந்திடுச்சு போலிருக்கு. சாரி” எனப் பதில் அனுப்பினான் எழிலன். அவன் பேச்சில் பாதி மட்டுமே உண்மை.
அந்தப் பாட்டின் ஒரிஜினல் வெர்ஷனும் கேட்டுவிட்டுத் தான் எழிலனுக்குப் பதில் அனுப்பியிருந்தாள் நிலா. அதற்கு சற்றும் குறையாத அதே துள்ளலோடு எழிலனும் பாடியிருந்தான். இதைத் தனக்குத் தெரியாமல் அனுப்பியிருப்பான் எழிலன் என நிலா நம்பத் தயாராக இல்லை.
நிலவனோடு நடந்தப் பிரச்சினைகளின் பின், எழிலன் நிலாவிற்கு எந்த மெசேஜ்ஜும செய்தது இல்லை. தெரியாமல் அனுப்பினேன் என்பது எல்லாம் பொய் என்றே நிலாவிற்குத் தோன்றியது.
தனக்குள் ரகசியமாகச் சிரித்த நிலா, “ஓ. அப்படியா சீனியர். நானும் பாட்டை எனக்குத் தான் அனுப்பி இருக்கீங்கனு நினைச்சு, ரிப்ளை பண்ணிட்டேன். சாரி” என மெசேஜ் செய்தாள் நிலா.
எழிலனுக்கும் சிரிப்பு வந்துவிட, சிரிக்கும் எமோஜி ஒன்றை நிலாவிற்கு அனுப்பி வைத்தான். நிலாவும் அதற்கு தம்ஸ்அப் அனுப்பினாள்.
வெகு நாட்களுக்குப் பிறகு நிலா, எழிலன் இருவரும் மகிழ்ச்சியுடன் உறங்கினர்.
மறுநாள் அந்தப் பாடலை மீண்டும் தன் நண்பர்கள் குழுவிற்கும், பெற்றோர்களுக்கும் அனுப்பி வைத்தான் எழிலன். எல்லோரும் ஒன்று போல் ரொம்ப நல்லா இருக்கு. அனுபவிச்சுப் பாடியிருக்க எனப் பதில் அனுப்பினார்கள். அவனின் பெற்றோர்கள் ரொம்பவே பாராட்டியிருந்தனர்.
அந்த செமெஸ்டெர் விடுமுறை முடியப் போகும் நேரத்தில் செழியனும், மலர்விழியும் கிராமத்திற்கு வந்தனர். சிவஞானமும் வந்திருந்தார்.
தோப்பு கணக்கு, வழக்குகள் பார்ப்பது, கோவிலுக்குச் சென்று வருதல் என எல்லோருக்கும் பொழுது நன்றாகவேக் கழிந்தது.
அடுத்த நாள் கிளம்பவேண்டும் என பேசிக் கொண்டிருந்த போது, வள்ளி மலர்விழியிடம் பேசினார்.
“மலர், நம்ம எழிலனுக்கு இந்த ஆறு மாசத்தோடு படிப்பு முடியப் போகுதில்ல?” எனக் கேட்டார்.
“ஆமாம்மா. ஆனா அவனோட சப்ஜெக்ட்லே அவனுக்கு நிறைய ரிசர்ச் பண்ண முடியும். என்ன பண்ணப் போறான்னு தெரியலை” என்றார் மலர்விழி.
“ம். அப்போ வேலைக்கு எப்போப் போகப் போறான்?”
“எங்க காலேஜ்லேயே அவனை வேலைக்கும் கூப்பிட்டு இருக்காங்க. இந்த ஆறு மாசம் பார்ட் டைம் மாதிரி எல்லா லெக்சரருக்கும் ஹெல்ப் பண்ணுவான். கோர்ஸ் முடிஞ்சதும் அவனை அசிஸ்டண்ட் லெக்சரர்  ஆக்கிடுவாங்க. அப்புறம் எங்களை மாதிரி முழு நேர புரொஃபசர் ஆகிடுவான்.”
“அப்போ ஆறு மாசத்துக்கு அப்புறம் அவனுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்க ஆரம்பிச்சிடலாமா?” எனக் கேட்டார் வள்ளி.
“மா. அவன் வயசு என்ன? இப்போ தான் படிப்பே முடிக்கப் போறான். அதுக்குள்ளே என்ன அவசரம்? நீங்க பேசறதைக் கேட்டா கோபப்படப் போறான்” என்றார் மலர்விழி.
“எனக்கு என்னவோ அவன் சந்தோஷம் தான் படுவான்னு தோணுது” என்றார் வள்ளி.
மலர் தன் அன்னையைப் புதிராகப் பார்க்க, வள்ளி அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.
அடுத்த நாள் எல்லோரும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி விட்டிருந்தனர். வள்ளி மேற்கொண்டு எதுவும் சொல்லாத போதும், மலர்விழிக்கு மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. மலரின் திருமணத்திற்கு கூட அவசரப்படாதவர், அதிலும் சுந்தரம் ஆச்சியுடனே மல்லுக் கட்டி நின்றவர் வள்ளி. அவர் இத்தனைச் சீக்கிரம் எழிலன் திருமணம் பற்றிப் பேசியதற்கு காரணம் இல்லாமல் இருக்காது என நினைத்தாள். அதனால் எழிலனை உற்று நோக்க ஆரமபித்தார் அவனின் அன்னை மலர்விழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!