Skip to content
Post Views: 37
அத்தியாயம் – 17-1
வந்தனா பிரச்சினையின் பின் செமெஸ்டெர் தேர்வுகள் நடக்கவே. அது வெளியில் பரவாமல் அடங்கி விட்டது. நிலாவும் செமெஸ்டெர் முடித்து விடுமுறைக்கு வந்திருந்தாள்.
அப்போது நிலவன் தனியாக அவளிடம் வந்தனா பிரச்சினையினைப் பற்றிக் கேட்டான். நிலா அதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டாள். தனது முதல் வருட டான்ஸ் வீடியோ கொண்டு தான் பிரச்சினை செய்தாள் என்று தெரிந்தால் அந்த பெண்ணை நிலவன் கல்லூரியை விட்டே வெளியே அனுப்பி விடுவான் என நிலாவிற்குத் தெரியும்.
நிலாவின் இளங்கலைப் படிப்பு இந்த வருடத்தில் முடிகிறது என்பதால், மேற்கொண்டு என்ன செய்யலாம் என யோசித்தாள். மேலே முதுகலைப் படிப்பைத் தொடரத் தான் எண்ணம். ஆனால் எங்கே எனத் தான் யோசித்தாள்.
Advertisement
எழிலனின் மாணவ-ஆசிரிய உறவு பற்றிய விளக்கம் கேட்ட பின், இதற்கு மேல் அங்கே படிப்பது சரிவராது எனத் தோன்றியது. அதே நேரம் எழிலனைப் பாராமல் தன்னால் காலம் கடத்த முடியுமா எனவும் வருத்தம் தோன்றியது.
நிலவனிடம் மேற்கொண்டு என்ன செய்வது என்பதுப் போல் கேட்டதற்கு, அவனும் உள்ளூரில் படிக்கலாம் எனத் தான் யோசனை கூறினான்.
நிலா, எழிலன், நிலவன் மூவரும் அவரவர் யோசனையில் இருக்க, விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கும் நாளும் வந்தது.
Advertisement
நிலாவை ஹாஸ்டலில் கொண்டு விட நிலவன் வந்தான். அது எப்போதும் நடப்பது தானே என நிலா சாதாரணமாக இருந்தாள். ஆனால் நிலவன் நேராகக் கல்லூரி முதல்வரைச் சந்தித்தான்.
Advertisement
வந்தனா செய்த பிரச்சனைப் பற்றிக் கூறி, தன் தங்கைக்கு ஏற்பட்ட அவப்பெயருக்கு நியாயம் கேட்டான். நல்ல வேளையாக இதை நிலாவை வைத்துக் கொண்டு செய்யவில்லை.
எழிலன், செழியன் மற்றும் நிலவன் மட்டுமே கல்லூரி முதல்வர் அறையில் இருந்தனர்.
பிரின்சிபால் “நிலவன், நீங்களும் நம்ம காலேஜ் ஸ்டூடண்ட் தானே. அந்த ஈவண்ட் அப்போ நீங்க கூட இருந்தீங்க. அதில் எந்தத் தப்பும் நடக்கவில்லை தானே. இதில் என்ன நியாயம் எதிர்பார்க்கறீங்க” எனக் கேட்டார்.
Advertisement
“சர், அந்த வீடியோ ஃபர்ஸ்ட் யாரு எடுத்தா? அது எப்படி அந்த பெண்ணிற்கு வந்தது. அந்த பெண் இந்த வருஷம் தான் காலேஜ் சேர்ந்திருக்கா. முதல் வருட நிகழ்ச்சிகள் அவளுக்குத் தனிப்பட கிடைக்குதுனா, வேறே யாரோ இதில் சம்பந்தப்பட்டு இருக்காங்கனு தானே அர்த்தம்?”
இந்த வாதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எழிலன் “நிலவன், அந்த வீடியோ எப்போதும் என்னுடைய ஸாங்க்ஸ் பாடும்போது எடுக்கச் சொல்வேன். அப்படி எடுத்தது தான். அதில் உங்கள் தங்கை பெர்ஃபார்மன்ஸ் சேர்ந்திருக்கும் என நான் யோசிக்கக் மறந்துவிட்டேன். அது வந்தனாவிற்கு நான் அதைப் பற்றி என்குயரி பண்ணிட்டேன். பழைய ஸ்டூடண்ட்ஸ் யாரோ இந்த பெண்ணிற்கு சொந்தம் போலிருக்கு. காலேஜ் எவெண்ட்ஸ் பற்றி எல்லாம் வந்தனா கேட்டதும், அப்போது இந்த வீடியோவைக் காட்டியிருக்கிறான். அவரிடமும் பேசி வீடியோ டெலீட் பண்ணச் சொல்லிட்டேன். பழைய குரூப் ஃபிரண்ட்ஸ் எல்லோருக்கும் பேசி அதைக் கிளியர் செய்திட்டேன்” என்றான்.
எழிலன் பதிலில் நிலவனுக்குத் திருப்தியில்லை என்றாலும், அவனின் செயல் சரி என்று தான் தோன்றியது. அதனால் சரி என்று விட்டான்.
பின் “சர், அந்த வந்தனா பொண்ணு மேலே என்ன ஆக்ஷன் எடுத்தீங்க?” எனக் கேட்டான்.
இதற்கு செழியன் “நிலவன், ஒரு சின்னப் பொண்ணு மெச்சூரிட்டி இல்லாமல் செய்த வேலைக்கு, வார்ன் பண்ணி அனுப்பறது மட்டும் தான் செய்ய முடியும். அதைச் செய்தோம். காஸ்ஸிப் பண்ணுறதுக்கு எல்லாம் சிவியர் ஆக்ஷனா எடுக்க முடியும்? அந்த பொண்ணோட லைப்பே போயிடும்” எனக் கூறினார்.
“சர், அந்த பொண்ணு காஸ்ஸிப் பண்ணினது என் தங்கையை. நாளைக்கு அவளுக்கு மட்டும் லைப் போகாதா?” எனக் கேட்டான் நிலவன்.
இதை செழியன் எதிர்பார்க்கவில்லை. பிரின்சிபால் “நிலவன், இது பெரிய விஷயம் இல்லை. வேறே யாருக்கும் எதுவும் தெரியாது. காலேஜ் லைப்லே இது எல்லாம் சகஜம்னு உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்.
“அதுக்கும் பவுண்ட்ரி லைன் இருக்கு சர். வெறும் பேச்சில் மட்டும்னா, எல்லாரும் ஈசியா கடந்திடுவாங்க. ஆனால் இங்கே ஒரு வீடியோ வச்சிப்பேசி இருக்காங்க. இது பின்னாடி தெரியவரும்போது கொஞ்சம் கூடவா உண்மையில்லாம இருக்கும்னு தானே யோசிப்பாங்க?” என்றான் நிலவன்.
எழிலன் திகைத்தான். “நிலவன், பழைய கற்காலம் மாதிரி பேசிட்டு இருக்கீங்க. இன்னிக்கு கேர்ள்ஸ் பப்ளிக்கா அப்பைர் பற்றிப் பேசறாங்க. லிவிங் டூ கெதர்னு போல்ட்டா இருக்காங்க. ஏதோ ஒரு காஸ்ஸிப்பிற்காக நீங்களே இப்படி நினைப்பீங்களா?” எனக் கேட்டான்.
“எழிலன், அப்படி நடக்கும்போது உண்மையைப் பேசறது தப்பில்லை. அதை வரவேற்கவும் முடியும். ஆனால் இல்லாத ஒரு விஷயத்தைக் கற்பனைப் பண்ணிப் பேசுவதை எப்படி அல்லோவ் பண்ண முடியும்? அதுக்கு ரியாக்சன் பண்ணலைனா, அவங்க சொன்னது உண்மை தானே அர்த்தம் ஆகும்” என்றான் நிலவன்.
செழியன் “நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்க நிலவன்?” என்றார்.
“அந்த பொண்ணு என் சிஸ்டர் கிட்டே மன்னிப்பு கேட்கணும். அதை வீடியோ எடுத்து வைக்கணும். எனக்கு வேண்டாம். காலேஜ்லே பிரின்சிபால் கிட்டே இருக்கட்டும். நாளைக்கு இதனால் என் சிஸ்டருக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது” என்றான் நிலவன்.
இது பிரின்சிபால் உட்பட யாருக்கும் பிடிக்கவில்லை. நிலவனோ பிடிவாதமாக நின்றான்.
அப்போது நிலாவைப் பிரின்சிபால் அழைத்து வரக் கூறினார். என்னவோ என்ற யோசனையோடு வந்த நிலா, அங்கே அண்ணனையும் மற்றவர்களையும் பார்த்துத் திகைத்து நின்றாள்.
எழிலனுக்குக் கோபமாக வந்தது. நிலாதான் எப்போதும் போல இந்த பிரச்சினையையும் நிலவனிடம் சொல்லிவிட்டாள் என நினைத்தான். அதனால் தான் நிலவன் இந்த குதி குதிக்கிறான் எனக் கோபம் வந்தது.
நிலா உள்ளே வந்ததும் “அண்ணா, நீ இன்னும் ஊருக்குக் கிளம்பலையா?” எனக் கேட்டாள்.
அண்ணன் பதில் சொல்லாமல் நிற்க, எழிலன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். நிலா பிரின்சிபால் பக்கம் திரும்பி “சர், என்ன விஷயம்?” எனக் கேட்டாள்.
பிரின்சிபால் நிலவனின் கோரிக்கையைக் கூறியதும், நிலா திகைத்தாள்.
“அண்ணா, இதை நீயே ஏன் பெரிசுபடுத்தறே?” எனக் கேட்டாள் நிலா.
எழிலன் சட்டென்று “பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி விடறயா நீ?” என்றான். நிலாவின் முகம் வேதனையைக் காட்டியது.
அப்போது செழியன் “எழிலா, என்ன இது?” எனக் கண்டித்தார்.
நிலவன் “மிஸ்டர் எழிலன், என் தங்கை இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை. எனக்கும் இங்கே சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவங்க மூலம் தான் தெரிந்து கொண்டேன். நிலாவிடம் நீங்க தேவையில்லாமல் பேச வேண்டியதில்லை” என்றான்.
“ம்ச். உங்க அண்ணன் தங்கச்சி பாசம் தான் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே. நீங்க செய்யச் சொல்ற காரியத்தாலே, அந்த பொண்ணுக்கு கேரியரே ஸ்பாயில் ஆகும் தெரியுமா? அவ ஐஏஎஸ் கனவில் இருக்கா. இது வெளிலே தெரிஞ்சா, என்ன ஆகும்?” என்றான் எழிலன்.
நிலா எழிலனை ஒரு மாதிரியாகப் பார்க்க, நிலவனோ எழிலனுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“மிஸ்டர் எழிலன், உங்களுக்கு ஐஏஎஸ் ஆக நினைக்கிற பொண்ணு பெரிய விஷயமாத் தெரியலாம். எனக்கும், என் குடும்பத்திற்கும் என் தங்கை லைப் தான் முக்கியம். அவ எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் அவளுக்கு எந்த பயாசும் இருக்கக் கூடாது என்பது தான் முக்கியம்” என்றான் நிலவன்.
“என்ன பெரிய லைப்? இந்த டிகிரி முடிச்சதும் உங்க தங்கைக்குக் கல்யாணம் கிராண்ட்டா பண்ணுவீங்க. அவ்வளவு தானே? வர மாப்பிள்ளை உங்களை விட வீட்டை விட்டு வெளியில் அனுப்பாத ஒருத்தனைப் பிடிப்பீங்க. இதுக்கு ஏன் இவ்ளோ ஸீன்” எனக் கேட்க, நிலாவிற்கு அவமானமாக இருந்தது.
நிலா லிட்டில் பிரின்சஸ் வகையறா தான். ஆனால் அவளின் தனித் தன்மையை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காதவள். இல்லை என்றால் ஆர்ட்ஸ் படிப்பிற்காக தலைநகரத்தை விட்டு வெளியே வந்து தங்கிப் படிப்பாளா என்ற சிந்தனை எழிலனுக்கு வரவேயில்லை.
நிலா “எழிலன் சர், ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விஷயம் பெரிசு தான். உங்களுக்கு ஐஏஎஸ் பெரிசுனா, எனக்கு என் அண்ணன் தான் பெரிய விஷயம். அவர் சொல்லுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை தான். ஆனால் நீங்க பேசறது என்னை இன்சல்ட் பண்ணுவது மாதிரி இருக்கு” என்றாள். இதில் எழிலனுக்குத் தலையிறக்கமாகி விட்டது. என்னை விட அவளின் அண்ணன் முக்கியமா என அவனின் மனது வேதனைப்பட்டது.
எழிலன் இதற்கு பதில் கூறுமுன் செழியன் “எழில், நீ ரொம்ப முறை தவறிப் பேசற? நிலவழகியைப் பற்றிப் பேச நாம யாரு? அவங்க ஃபேமிலிலே என்ன பண்ணுவாங்களோ அது அவங்க விருப்பம். வந்தனா விஷயம் மட்டும் பேசு” எனக் கண்டித்தார்.
அப்போது எழிலன் “ஏன் நான் பேசக் கூடாது? நிலவழகியின் வருங்காலம் நான் தானே” எனக் கூற, இப்போது நிலா உட்பட மற்ற எல்லோரும் திகைத்தார்கள்.
இது கிட்டத்தட்ட ப்ரபோஸ் போலத் தானே. நிலா என்ன சொல்வது எனச் சிந்திக்க, நிலவன் எழிலன் சட்டையைப் பிடித்தான்.
செழியன் எழிலனைப் பிடித்து தள்ளி நிறுத்தினாலும், “எழிலா, எங்கே வச்சு என்னப் பேசறே? அந்த வந்தனாவிற்கு ஸ்டூடண்ட், புரொஃபசர் உறவு பற்றிப் பாடம் எடுத்திட்டு, இப்போ அதையே நீயும் செய்யப் பார்க்கற?” என்றார்.
“அப்பா, இது நான் ஸ்டூடண்ட்டா இருந்தப்போ எடுத்த முடிவு. எல்லோரும் ஒரு விதத்தில் செட்டில் ஆனதும் சொல்லலாம்னு இருந்தேன். ஆனால் இன்னிக்கு இப்படி ஒரு சிட்சுவேஷன்லே சொல்லிட்டேன்” என்றான் எழிலன்.
பிரின்சிபால் பக்கம் திரும்பி “சர், என்னை மன்னிச்சிடுங்க. இது இங்கே நடந்திருக்கக் கூடாது. ஆனால் எனக்கு வேறே வழி தெரியலை” எனக் கூறி அவர் காலில் விழுந்து விட்டான் எழிலன்.
இப்போது பிரின்சிபால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். அவர் நிலவனைப் பார்க்க நிலவன் “நான் முதல் நாளில் இருந்து என் தங்கையை விட்டுத் தள்ளியிருன்னு சொல்லிட்டுத் தானே இருந்தேன். இப்படிக் கழுத்தில் கத்தி வைக்கறியே. நீ எல்லாம் என்ன மனுஷன்” என்றான்.
நிலா “அண்ணா” என அவன் தோள் சாய அப்போதும் எழிலன் நிலாவைத் தான் பார்த்தான்.
“நிலவன், இது உங்க தங்கைக்குக் கூடச் சொல்லலை. ஒருவகையில் நேரடியா உங்க கிட்டே பொண்ணு கேட்டு இருக்கேன். நீங்க மறுத்தாலும், அவ தான் என் மனைவி. வேணும்னா உங்க தங்கையின் மனசில் என்ன இருக்குனு கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்” என்றான் எழிலன்.
“என் தங்கை பற்றி எனக்குத் தெரியும். அவள் மனது சுத்தத் தங்கம்” என்றான் நிலவன்.
“சரிதான். ஆனால் அது எனக்குச் சொந்தமான தங்கம்” என பன்ச் டயலாக் அடித்தான் எழிலன்.
அதற்கு மேல் “நிலவன், நீங்க வாங்க நாம வீட்டிற்கு போய் பேசலாம். இதுக்கு மேலே இங்கே பேசினா நாம நிக்கிற இடத்திற்கு மரியாதை இல்லை” என்றார் செழியன்.
செழியனும் கல்லூரி முதல்வரிடம் எழிலனின் செயலுக்கு மன்னிப்புக் கேட்டார். பிரின்சிபால் இதை எப்படித் தீர்ப்பது எனப் பாருங்கள் என அனுப்பி வைத்தார்.
எழிலன் மீண்டும் மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியே சென்றான். செழியன், உடனே மலர்விழியை வீட்டிற்கு வரக் கூறினார்.
நிலவனும் தன் தந்தைக்கு அழைத்துப் பேசினான். அவர் உடனே ஃப்ளைட் பிடித்து வருவதாகக் கூறினார்.
செழியன், நிலவன், மற்றும் நிலாவைத் தங்கள் வீட்டிற்கு அழைத்தார். நிலவன் தங்கள் தந்தையோடு வருவதாகக் கூறிவிட்டு, நேராக ஏர்போர்ட் சென்றான். நிலாவும் அவனோடு சென்றாள்.
error: Content is protected !!