நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-19

அத்தியாயம் – 19
“ஏற்றிச் செல்லாமல் விட்டுச் செல்கிறது. நடைமேடைகள் பார்த்திருக்க மனதுள் விளக்கடித்துக் கடக்கிற ரயில்… காதல்…”
கார் வீட்டை நோக்கி விரைந்தபோது, ஆதிரையின் கைகள் இன்னும் அந்த அழைப்புக் கடிதத்தை இறுகப் பற்றியிருந்தன. “இது நிஜம்தானா? அல்லது நேற்றைய கடற்கரை அலையில் கண்ட ஏதோ ஒரு பகற்கனவா?”. மித்ரனின் புன்னகை அவளுக்குப் பக்கபலமாக இருந்தாலும், ஒரு ஆராய்ச்சியாளராக அவள் கண்ட கனவு இன்று கண்முன்னே விரிந்திருப்பதை அவளால் சட்டென்று நம்ப முடியவில்லை.
Advertisement
வீட்டு வாசலில் கார் நின்ற வேகத்திலேயே, கதவு திறக்கும் சத்தம் கேட்டு கவினும் கண்மணியும் துள்ளிக்குதித்து ஓடி வந்தனர். வழக்கமாக மாலை நேரத்தில்தான் வீடு திரும்பும் அம்மா , இன்று மதியமே அதுவும் அப்பாவோடு வந்திருப்பது அவர்களுக்குப் பெரும் ஆச்சரியம். அம்மாவின் முகத்தில் இருக்கும் அந்தப் பிரகாசமும் அவர்களுக்கு ஏதோ ஒரு விசேஷத்தை உணர்த்தியது.
மித்ரன் காரிலிருந்து இறங்கி, இருவரையும் அணைத்துக் கொண்டான். “குட்டீஸ்… ஒரு சூப்பர் நியூஸ்! நம்ம அம்மா ஜெர்மனி போகப்போறாங்க. அங்க இருக்கிற பெரிய சயின்டிஸ்ட்ஸ் முன்னாடி அம்மா ஸ்பீச் கொடுக்கப் போறாங்க!”
பிள்ளைகள் இருவரும் உற்சாகத்தில் குதித்தனர். “ஜெர்மனியா? செம செம! அங்க ஸ்னோ இருக்குமாப்பா? “அம்மா, எனக்காக அங்கிருந்து ஒரு ‘நிண்டெண்டோ’ (Nintendo) அல்லது அங்க இருக்குற ஸ்பெஷல் லெகோ செட் (Lego set) வாங்கிட்டு வருவீங்களா?” என கவின் அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தான். ஆனால், கண்மணி மட்டும் சட்டென்று அமைதியானாள். அவள் மெல்ல ஆதிரையின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
Advertisement
“ஜெர்மனி ரொம்ப தூரமாம்மா? எத்தனை நாளைக்கு அங்க இருப்பீங்க?” என்று கண்மணி கேட்டபோது, ஆதிரையின் தொண்டை அடைத்தது. பெண் குழந்தைகளின் புரிதல் என்பதே தனித்துவமானது!
Advertisement
மித்ரன் அவளது கைகளைப் பற்றினான். “ஒரு பத்து பதினைஞ்சு நாள்தான் செல்லம். அம்மா சீக்கிரம் வந்திரு வா. அதுவரைக்கும் நீயும் கவினும் மதுரை அப்பம்மா வீட்ல ஜாலியா இருக்கலாம்,” எனச் சமாதானப்படுத்த முயன்றான். கவின் ‘மதுரை’ என்றதும் குஷியானான். ஆனால் கண்மணியின் கண்கள் கலங்கின. “ஆனா… எனக்கு நீங்க இல்லாமத் தூக்கம் வராதேம்மா…” என்றாள். ஆதிரை அவளை அணைத்துக்கொண்டாள்.
பிறந்ததிலிருந்து கண்மணியைப் பிரிந்து இரண்டு நாட்களுக்கு மேல் அவள் எங்கேயும் சென்றதில்லை. ஒரு தாயின் வெற்றிப் பயணத்தில், பிள்ளையின் கண்ணீர் ஒரு இனிமையான வலியாக வந்து வந்து போனது. மித்ரன் மெல்ல அவள் கன்னத்தைத் தட்டி, “நான் இருக்கேன் ஆதி… கவலைப்படாதே” என்பது போல ஒரு பார்வையை வீசினான்.
வீடு பரபரப்பானது. மித்ரனின் வழிகாட்டுதலில் பெட்டிகள் அடுக்கப்பட்டன. ஆதிரை தனது ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட கோப்புகளையும், அந்த நவீன மடிக்கணினியையும் ஒரு சிறிய கைப்பையில் மிகக் கவனமாகப் பத்திரப்படுத்தினாள்.
Advertisement
மதுரையை நோக்கி கார் பறந்தது. ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகள் ஆதிரையின் மனப்போராட்டத்தைச் சற்றே தணித்தன. ஈரக்காற்று மெல்ல மெல்ல மறைந்து, மதுரையின் கொளுத்தும் வெயிலுக்குள் அவர்கள் நுழைந்தனர். மதியம் மூன்று மணியளவில் அந்தப் பாரம்பரியமான ஓட்டு வீட்டை அடைந்தனர்.
வாசல் தெளித்துக் கோலமிட்டிருந்த அந்தப் பெரிய ஓட்டு வீட்டின் திண்ணையில் மித்ரனின் அம்மா காத்திருந்தார். கார் நின்றதும் ஆதிரை இறங்கி ஓடிப்போய் தன் மாமியாரைக் கட்டிக்கொண்டாள். இது வெறும் மருமகள் – மாமியார் காட்சி அல்ல, ஆதிரை இத்தனை காலம் அனுபவித்த வலிகளுக்கும், இப்போது கிடைத்திருக்கும் பெரும் அங்கீகாரத்திற்கும் சாட்சியாக இருந்த ஒரு பெண்ணின் ஆதரவு அது. ஆதிரைக்கும் மித்ரனுக்கும் இடையே விரிசல் விழுந்து அவள் பிரிந்து சென்ற அந்தத் துயரமான நாட்களில், மித்ரன் தன் தாயிடமும் ஒரு கணவனாக அவளுக்காகப் பரிந்து ஆதிரையின் நியாயங்களை எடுத்துரைத்திருந்தான். தன்னவளை யாரும் குறை கூறி விடக்கூடாது என்பதில் அத்தனை கவனம் அவனுக்கு.
அவர் ‘அத்தை’ என்ற நிலையைக் கடந்து, ஒரு பெண்ணாக ஆதிரையைப் புரிந்துகொண்டிருந்தார்.
“அத்தை… நான் ஜெர்மனி போறேன் த்தை!”. அந்த முதியவளின் கைகள் ஆதிரையின் தலையை மென்மையாக வருடின. “தெரியும்மா… மித்ரன் போன்ல சொன்னப்பவே என் கண்ணு கலங்கிடுச்சு. என் மருமகள் இவ்வளவு பெரிய உசந்த இடத்துக்குப் போறது எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? நீ படிச்ச படிப்பு இன்னைக்குத்தான் முழுமையா இருக்குன்னு தோணுது,” என்றார் .
ஆதிரை அந்த அரவணைப்பில் ஒரு தாயின் பாதுகாப்பை உணர்ந்தாள்.
ஆதிரையும் அவளது மாமியாரும் அந்தத் திண்ணையில் அணைத்துக்கொண்டிருந்த காட்சி, அந்தப் பழமையான வீட்டிற்கும் கூட ஒரு புது ஜீவனைக் கொடுத்தது. “சமூகம் கட்டமைத்த ‘மாமியார்-மருமகள்’ என்ற பிம்பங்களை உடைத்து, ஒரு பெண்ணின் கனவுகளுக்குப் பின்னால் மற்றொரு பெண் அரணாக நிற்கும் தருணம், ஒரு பெண்ணின் வெற்றியை இன்னொரு பெண் கொண்டாடும் தருணம் உண்மையில் ஒரு பேரழகு!
“நீ எதைப் பத்தியும் கவலைப்படாதே, புள்ளைங்களை நான் பார்த்துப்பேன். நீ போய் உன் திறமையை உலகத்துக்குக் காட்டிட்டு வா,” என அவளின் நெற்றியில் அத்தை முத்தமிட்டார்.
அன்பும் பாசமும் நிறைந்த அந்த மதிய உணவு, ஆதிரைக்கு ஒரு புதுத் தெம்பைக் கொடுத்தது. ஆனால், பிள்ளைகளை அங்கே விட்டுவிட்டு கிளம்பும் அந்த நிமிடம் கடினமாக இருந்தது.
ஆதிரையின் மனது ஒரு விசித்திரமான நிலையில் இருந்தது. ஒரு பக்கம், ஜெர்மனியின் அந்த நவீன ஆய்வக மேடை அவளை அழைத்தது. மறுபக்கம், தன் மகளின் கலங்கிய கண்கள் அவளைப் பின்னோக்கி இழுத்தன.
பிள்ளைகளைத் தன் மாமியாரின் அரவணைப்பில் விட்டுவிட்டு, கனத்த இதயத்தோடும் ஆனால் பெரும் இலட்சியத்தோடும் ஆதிரையும் மித்ரனும் கிளம்பினர். வழியில் ஒரு சர்ச் போயிட்டு போகலாம் ப்பா” என்றாள் ஆதிரை. கிறிஸ்து அரசர் ஆலயம் ஒன்று இடையில் வர… மித்ரனும் ஆதிரையும் உள்நுழைந்தனர்.
மெல்ல படியேறி இருகரம் விரித்து நின்ற இறைமகனை கண்டாள்.ஒரு தரம் ஆழ்ந்து நோக்கினாள்… கண்களில் வழிந்தது ஒரு துளி கண்ணீர். அப்படியே பலிபீடத்தின் (Altar) முன்பு தாழ் பணிந்து முழுதுமாய் தன்னை, தான் சார்ந்தவர்களை, சகலரையும் ஒப்புக்கொடுத்தாள். மித்ரன் அமர்ந்திருந்தான். மாதாவின் முகம்.. அவனுக்கு மீனாட்சித்தாயின் முகமாக இறங்கிற்று உள்ளே. கண் நிறைந்து பார்த்திருந்தான்.
தேவாலயத்திலிருந்து வெளி வருகையில், “ஆசீர்வாதமாய்… போய் வா“ என்ற வாசகம் செவிகளில் நாதமாய் ஒலித்தது. விமான நிலையம் விரைந்தனர்.
மதுரையிலிருந்து சென்னை வந்தடைந்தபோது இரவு எட்டு மணி. நகரின் விளக்குகள் ஆதிரையின் கண்கள் போல மின்னின.
“வா ஆதி… ஒரு முக்கியமான வேலை இருக்கு,” என்று அழைத்துக்கொண்டு நுங்கம்பாக்கத்திற்கு அருகில் இருந்த அந்தப் பெரிய ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தான்.
ஜெர்மனியின் கடும் குளிரைச் சமாளிப்பதற்கான அடர் வண்ண ஜீன்ஸ் பேண்ட்கள், உடலை இறுக்கிக்கொள்ளும் கம்பளி ஆடைகள், கனமான கோட்கள் என ஒவ்வொன்றையும் மித்ரன் தேடித் தேடித் தேர்ந்தெடுத்தான். ஆதிரை இயந்திரத்தனமாக ஆடைகளைத் தேர்வு செய்துகொண்டிருக்க, மித்ரன் மெல்ல ஒரு ஆடை வரிசையின் அருகே நின்றான். இளஞ்சிவப்பு (Pale Pink) நிறத்தில், செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கும் அடர் சிவப்பு நிற கிராப் டாப் ஒன்றை எடுத்து அவன் அதை ஆதிரையிடம் நீட்டினான். அந்தப் கடையின் மென்மையான மின்விளக்கு வெளிச்சத்தில் அதன் நிறம் ஜொலித்தது. மித்ரன் மெல்லிய குரலில் கூறினான் “ஆதி, அங்க இருக்கப்போற அந்தப் பனிப் பொழிவுக்கு இடையில… நீ இந்தச் சிவப்பு நிற டாப்ஸ் ல நடக்கும்போது, வெள்ளைத்தாளில் எழுதின அழகான ரெட் போயம் மாதிரி இருப்ப!”
ஆதிரைக்கு ஏனோ கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
மித்ரன் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் அவர்கள் தங்கினர்.
“ஆதி, நாளைக்கு காலைல விசா இண்டர்வியூ. உன்னோட ரிசர்ச் பேப்பர்ஸ், இன்விடேஷன் லெட்டர் எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு. ஒன்னும் பயப்படாதே,” என மித்ரன் அவளுக்கு ஊக்கமளித்தான். அந்த நீண்ட பயணக் களைப்பு, விசா நேர்காணல் குறித்த படபடப்பு என அனைத்தும் சேர்ந்து அவளை அழுத்தினாலும், தூக்கத்திலும் அவளது கண்கள் அந்த லேப்டாப் பிரசன்டேஷனையே பார்த்துக் கொண்டிருந்தன.
மறுநாள் காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா அலுவலகம். ஆதிரையின் இதயம் தாளம் போட்டது. மித்ரன் அவளது கரங்களைப் பற்றி, ” “கம் ஆன் மா… யூ கேன்!”என்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தான். அவள் சமர்ப்பித்த ஆய்வுத் தாள்களும், மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் அவசர அழைப்புக் கடிதமும் அவளுக்கு ஒரு பிரையாரிட்டி அந்தஸ்தைத் தந்தன. அதிகாரிகள் வியப்புடன் அவளைப் பார்த்தனர். “ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் பிரசன்டேஷன், டாக்டர் ஆதிரை!” என்ற வார்த்தைகளுடன் அவளது பாஸ்போர்ட்டில் விசா முத்திரை பதிப்பதற்கான அங்கீகாரம் கிடைத்தது.
அன்று மாலை… விசா கையில் கிடைத்ததும் ஒரு பெரும் பாரம் இறங்கியது. அன்று இரவு ஹோட்டல் அறையில் ஒரு நிசப்தம் நிலவியது.
“மித்ரா… தேங்க்ஸ்,” என்றாள் ஆதிரை மெல்லிய குரலில். ‘மித்ரா…’ என்ற அவளது அழைப்பு, யுகங்கள் கடந்து அவனுக்குக் கேட்டதாகக் கேட்டது.
மித்ரன் அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். “இது உன்னோட உழைப்பு ஆதி.. அங்க போய் கலக்கிட்டு வா,” என்றான். நேற்றைய போராட்டங்கள், இன்றைய வெற்றிகள் என அனைத்தும் ஒரு கணத்தில் மறைந்து, அந்த அறையில் அவர்களின் மூச்சுக்காற்று மட்டுமே எஞ்சியிருந்தது. அதிகாலை 5:45-க்கு அவளது கனவுப் பயணம் தொடங்கப் போகிறது. அவன் கைகளின் வளைவிற்குள் வாகாகத் புகுந்தவள், அவனது மார்பில் முகம் புதைத்து உறங்கிப் போனாள்.
அவளது கனவுகளில் ஜெர்மனியின் குளிர் காற்றும், ஆய்வகத்தின் சென்சார்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன.
அதிகாலை நான்கு மணி. சென்னை விமான நிலையத்தில் மித்ரனும் அவளுமாய் மௌனமாக நின்றனர். அங்கிருந்து மும்பை சென்று, பிறகு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் (Stuttgart) நகரத்திற்கு இணைப்பு விமானம்.
உள்ளே செல்லும் முன், அவள் மித்ரனின் கண்களோடு கண்கள் இணைத்து, அவன் தோள் சாய்ந்து பார்த்தாள். ஒரு கொழு கொம்பும், அதைப் பற்றியிருக்கும் பற்றுக் கொடியும் போல அவ்வளவு பிணைப்பு அந்தத் தருணத்தில் இருந்தது. அந்த ஐந்து நிமிட மௌனம், அவர்கள் இருபது வருடங்களாகப் பகிர்ந்துகொண்ட காதலை விடவும் ஆழமான நூறு கதைகளைப் பேசியது.
“முடிச்சிட்டு வா… காத்திருக்கேன்.” இருபது வருடங்களுக்கு முன்னால் பாண்டிச்சேரி பல்கலைக்கழகச் சாலையில் அவன் சொன்ன அதே வார்த்தைகள் இன்று மீண்டும் ஒலித்தன.
ஆதிரையின் மனம் விம்மியது. தாளமாட்டாமல் அவன் மார்பில் தன் இதழ்களை மென்மையாகப் பதித்தாள் ஆதிரை. அது வெறும் முத்தமல்ல, இதயம் இதயத்திடம் இதழ் வழி ஒரு சேதியைக் கடத்தியிருந்தது.
மித்ரன் மெல்லக் குனிந்து ஆதிரையின் முகம் நிமிர்த்தி, அவளது நெற்றியில் இதழ் ஒற்றி ஆழமானதொரு முத்தமிட்டான். “போயிட்டு வா பேபி… கலக்கிட்டு வா!” என்ற அவனது குரலில் இருந்த கம்பீரம் அவளுக்குச் சிறகுகளைக் கொடுத்தது.
ஆதிரை மெல்லப் பின்வாங்கி, கனத்த இதயத்துடனும் ஆனால் தெளிவான இலட்சியத்துடனும் உள்ளே சென்றாள்.
ஆதிரை உள்ளே சென்ற பின்பும், மித்ரன் அங்கேயே நின்றிருந்தான். அவளது உருவம் கூட்டத்திற்குள் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தவன், கால்கள் தானாக நகர அங்கிருந்த ஒரு மரபெஞ்சில் அமர்ந்தான்.
அவன் மெல்ல விழிகளை மூடினான். கடந்த பலப்பல நாட்களாக அவன் கட்டுப்படுத்தி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளும் இப்போது பேரலைகளாய் உள்ளுக்குள் எழும்பின.
எப்படியான ஒரு நிர்ப்பந்தத்தில் அன்று அவன் ஜெர்மனி சென்றான்? பின் தாய் மண்ணை மிதித்த அந்தத் தருணம், தன் சரிபாதியை, தன் ஜீவனைக் காணாத அந்தத் தனிமை… பிரிவின் துயரத்திலும் அவள் வருவாள் என்ற நம்பிக்கை தந்த அந்த காத்திருத்தல்… அழகரின் பேரருளால் நிகழ்ந்த அந்த எதிர்பாராத சந்திப்பு, மீண்டெழுந்த பாசத்திற்கு நடுவே, கவினின் கரம் உதறிய ஆதிரையின் கண்களில் அவன் கண்ட அந்த கனல்…அவள் தன்னை உணரட்டும் என்று அவன் காத்திருந்த அந்தப் பொறுமைப் போராட்டம்…ஆதிரையின் அருகாமை தாளமாட்டாமல், வார்த்தைகளை கொட்டிய தனதந்த சினம், காயங்களுக்கு மருந்தாக அமைந்த அந்த முத்தத்தின் மொழி…அவளது வெற்றியில் ஏற்பட்ட பெருமிதம்… தன் துணைவியின் அறிவை உலகமே வியக்க , இதோ இன்று வழியனுப்பும் இந்தத் தருணம் வரை…
இவை அனைத்தும் அவன் மனதிற்குள் ஒரு ஆவணப்படம் போல ஓடியது. அலைகள் மாறி மாறி அடித்துப் புரட்டித் துவம்சம் செய்தது.
இதில் எல்லாவற்றிலும் அவன் பக்கம் நியாயம் உண்டு… ஆனால் அந்த ஜெர்மனி நாட்களுக்குத் தான் தராத அந்த விளக்கம்… ஆதிரையின் தார்மீகக் கோபம்… மிகச்சரியே என்பதுதான் அவனது வாதமும்! ஆனாலும், அந்தச் சூழலில் அவனது நிலையையும் அவன் பக்கமிருந்த நியாயத்தையும் யார் உணர்த்துவார்?
“காலம்” ! “இனிவரும் காலம் உணர்த்தும்” என… இப்போது ஒரு அமைதியான கடற்கரையைப் போல ஓய்ந்து நின்றது மனது.
மித்ரன் அந்தப் பாரமான மனதோடு விமான நிலையத்தை விட்டு வெளியேறினான். அதே சமயம், ஆதிரை, விமானத்தின் உள்ளே நுழைந்தாள். பல விதமான மனிதர்கள், பல மொழிகள். ஆனால் அவள் கையில் இருந்த அந்த ‘ஸ்மார்ட் சென்சார்’ கோப்பு அவளுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது.
விமானம் விண்ணில் எழும்பியபோது, ஜன்னல் வழியாகத் தெரிந்த நிலப்பரப்பு மெல்ல மெல்லச் சிறுத்து மேகங்களுக்குள் மறைந்தது.
“மித்ரன் சொன்ன அந்தச் சந்தியா யார்? அவள் அங்கே இருப்பாளா?” என்ற எண்ணம் ஒரு நொடி வந்து போனாலும், அவளது கவனம் இப்போது மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் அந்த மேடையை நோக்கியே இருந்தது.
கண்டம் விட்டு கண்டம் தாண்டி, தன் அறிவால் ஒரு வரலாற்றைப் படைக்க ஆதிரை ஜெர்மனி மண்ணில் கால் பதிக்கத் தயாரானாள்.
