நன்னிலவு நீ… தண்நிழல் நான்… – எபிலாக்

நன்னிலவு நீ… தண்நிழல் நான்…
பின்னுரை (எபிலாக்)
Advertisement
பெங்களூருவின் புகழ்பெற்ற அந்தப் பொறியியல் கல்லூரியின் திறந்தவெளி அரங்கம் (Open Air Theatre) மாணவர்களால் நிரம்பி வழிந்தது. விசில்களாலும் கைதட்டல்களாலும் அந்த இடமே அதிர்ந்து கொண்டிருந்தது. கலாச்சார விழாவின் சிகரமான ‘ரோபோடிக்ஸ் அண்ட் ஆர்ட்’ போட்டி இறுதிச் சுற்றை எட்டியிருந்தது.
அரங்கின் ஒரு பக்கம், ஒரு நவநாகரிக இளைஞன் தனது லேப்டாப்பில் தீவிரமாக எதையோ டைப் செய்து கொண்டிருந்தான். அவன் வடிவமைத்த ஒரு சிறிய ரோபோ, ஒரு வெள்ளை கேன்வாஸின் முன்னால் நின்று கையில் தூரிகையைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தது.
“டேய்! இன்னும் அஞ்சு நிமிஷம் தான்… உன் ரோபோ பெயிண்டிங் வரையுமா? இல்ல அங்கயே நின்னு தவம் பண்ணுமா?” என்று அவனது நண்பர்கள் கிண்டல் செய்தனர்.
Advertisement
ஆறடி உயரம், ஒரு கிரேக்கச் சிலையைப் போல இருந்தான் அவன்… காண்போரை வசீகரிக்கும் அந்த அபூர்வமான சாம்பல் நிறக் கண்கள் மின்ன சிரித்துக்கொண்டே, “பொறுங்கடா… இது ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (AI). இதுக்கு முன்னாடி ஒரு உருவம் வந்தாதான் இது வேலை செய்யும்,” என்றான்.
Advertisement
சரியாக அந்தத் தருணம்.. கையில் ஒரு பெரிய வண்ணத் தட்டோடு, காற்றில் பறக்கும் துப்பட்டாவைச் சரி செய்தபடி மேடையின் இன்னொரு பக்கத்திலிருந்து ஒரு இளம் பெண் இறங்கி வந்தாள்.
நல்ல உயரம், நீண்ட கூந்தல், முழு நிலவைப் போன்ற உருண்டையான முகம்… ஒரு சாத்வீகமான அழகில் மிளிர்ந்தாள் அவள்…! அவளைப் பார்த்ததும் ரோபோ விழித்துக்கொண்டு தானாக நகரத் தொடங்கியது.
“இதோ… என்னோட ‘சோர்ஸ் கோட்’ (Source Code) வந்துடுச்சு!” என, அந்த ரோபோ கேன்வாஸில் ஒரு பெண்ணின் கண்களைத் துல்லியமாக வரைய ஆரம்பித்தது.
Advertisement
“ப்ரோ, இது என் கண்ணு மாதிரியே இருக்கே?” என்று வியப்புடன் கேட்டாள் அந்தப் பெண்.
“உன் கண்ணு மட்டும் இல்ல சிஸ்… இது நம்ம அம்மாவோட கண்ணு!” என்றான் அவன் குறும்புடன்.
“எஸ்! நாங்கதான் டீம் ‘K & K’. ஏஐ (AI) துறையின் இறுதி ஆண்டு மாணவர்கள். இதோ எங்களது இன்னோவேட்டிவ் மாடல். ஒரு நிஜ மனிதனைப் பார்த்தே அவர்களின் ஆன்மாவை ஓவியமாக மாற்றும் ரோபோ!” என்று அவர்கள் முடிக்க, அரங்கம் அதிரும் அளவிற்கு கைத்தட்டல்கள் எழுந்தன.
அவர்கள் வேறு யாருமல்ல கவினும் கண்மணியும்தான். காலேஜில் அவர்கள் செய்த ரோபோட்டிக் டெமோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.
மேடையில் தங்களின் அபாரமான திறமையை நிரூபித்த பிறகு, கவினும் கண்மணியும் உற்சாகம் தாங்காமல் படிக்கட்டுகளில் இறங்கி ஓடி வந்தனர்.
நகரத்தின் பரபரப்பான டிராஃபிக் சத்தங்களுக்கு நடுவே, ஒரு அமைதித் தீவு போல வீற்றிருந்தது அவர்களின் அந்த அழகான டுப்ளக்ஸ் வீடு. முன்புறம் இருந்த தோட்டம், அங்குள்ளவர்களின் ரசனைக்குச் சான்றாக மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் கம்பீரமாக நின்றிருந்தது பாரிஜாத மரம். அதன் பவள நிறக் காம்புகளுடன் கூடிய வெள்ளை மலர்கள், தரை முழுவதும் ஒரு மென்மையான வெண்பட்டுப் போர்வை போல உதிர்ந்து கிடந்தன. இன்னொரு பக்கத்தில், பல வண்ணங்களில் காகிதப்பூச் செடிகள், குள்ளமான போன்சாய் வடிவங்களில் வைக்கப்பட்டிருந்தன. இளஞ்சிவப்பு, அடர் ஊதா மற்றும் வெள்ளை நிற இதழ்கள் அந்தப் பச்சைத் தோட்டத்திற்கு ஒரு நவீன ஓவியத்தின் வண்ணங்களைக் கொடுத்தன. தோட்டத்தின் மையப்பகுதியில், ஒரு அழகான மரத்தாலான ஊஞ்சல் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. சிட்-அவுட்டில் ஒரு சாய்வு நாற்காலியில் பேராசிரியர் அமர்ந்திருக்க, உள்ளிருந்து அத்தம்மா சூடான காபியுடன் வந்தார்.
“இந்தாங்க அண்ணன் காபி… நம்ம ஆளுங்க ரெண்டும் உள்ள சண்டையைத் தொடங்கிட்டாங்க!” இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். ஜெர்மனியிலிருந்து ப்ரபஸர் திரும்பியிருந்தார். மித்ரனும் ஆதிரையும் தங்கள் பணியில் தங்கள் ஆய்வில் பல மைல்கற்களை எட்டி சிறந்து விளங்கினர். அந்தம்மாவையும் கூட்டி கொண்டனர். மித்ரனும் ஆதிரையும் கவின் கண்மணி ப்ரபஸர் அன்ட் அத்தம்மா என அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக அந்த வீட்டில் வசிப்பது ஒரு வரமாகவே அமைந்திருந்தது.
புயலென உள்ளே நுழைந்த கவினையும் கண்மணியையும் பார்த்த பேராசிரியர், “வாடா என் கண்ணுங்களா! இன்னைக்கு உங்க சாதனைய யூடியூப் லைவ்ல பார்த்தேன். ‘யூ பீப்பிள் ராக்டு’…” “தேங்க்யூ படி(buddy)!“ என அவர் அவர்களைத் தழுவிக்கொண்டார்.
“தாத்தா… எல்லாம் ஓகே! ஆனா இந்த ரோம்-காம் கப்பிள் , டாடி மம்மி எங்கே? பசி உயிர் போகுது!” என்றான் கவின் வயிற்றைத் தடவிக்கொண்டே.
“அவங்க கிச்சன்ல இருக்காங்கப்பா… ஏதோ ‘பன்னீர் புதினா சாட்’ புதுசா செய்யறாங்களாம். அங்க ஒரே சத்தமா இருக்கு!” என்று சிரித்தார் தாத்தா.
“போச்சா” … என சிரித்தாள் கண்மணி.
சமையலறைக்குள் ஒரு போர் மேகமே சூழ்ந்திருந்தது. ஆனால், அது மசாலாவால் ஆனது! மித்ரன் ஒரு கையில் கூர்மையான கத்தியுடன், பன்னீர் துண்டுகளை மிகத் துல்லியமான 1-இன்ச் கனசதுரங்களாக வெட்டிக் கொண்டிருந்தான்.
“மித்ரன்! நான் சொல்றதைக் கேளுங்க… அந்த பன்னீர் மேல நீங்க போடுற அந்த மசாலா அதுக்குள்ள போகாது. முதல்ல ஒரு சின்ன டூத்-பிக்கால பன்னீர்ல அங்கங்க ஓட்டை போடுங்க. அப்போதான் நாம அரைக்கப்போற அந்த ‘கிரீன் மேஜிக்’ உள்ள வரைக்கும் இறங்கும்!” என்று ஆதிரை அதிகாரம் செய்தாள்.
மித்ரன் புருவத்தை உயர்த்தி, “ஆதி! இது பெங்களூரு கஃபே ஸ்டைல். பன்னீரை ரொம்ப டார்ச்சர் பண்ணக்கூடாது. இதோ பாரு… இதுதான் என் சீக்ரெட் ரெசிபி!” என்று ஒரு கிண்ணத்தைக் காட்டினான்.
அதில் புத்தம் புதிய புதினா இலைகள், மல்லித்தழை, இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் கறுப்பு உப்பு (Black Salt), மற்றும் ஒரு ஸ்பூன் கெட்டித் தயிர் சேர்த்து விழுதாக அரைக்கப்பட்டிருந்தது.
“இந்தா… இதை எடுத்து அந்த பன்னீர் மேல மெதுவா தடவு. அப்புறம், ஒரு இரும்புத் தவாவுல கொஞ்சமா வெண்ணெயைத் தடவி, அதுல ‘கஸ்தூரி மேத்தியை’ கைகளால நசுக்கித் தூவி, இந்த பன்னீரை அப்படியே ‘சியர்’ (Sear) பண்ணனும். அந்தப் பச்சை நிறம் மாறாம, பன்னீர் மட்டும் லேசா பொன்னிறமா மாறணும். அதுதான் ‘பெர்பெக்ஷன்’!” என்று மித்ரன் விளக்கினான்.
“அத்தோட முடிஞ்சுதா?”
“அதெப்படி?? அதுக்கு மேல என்னோட டச் வேணாமா? அந்தச் சூடான பன்னீர் மேல ‘சாட் மசாலா’வைத் தூவி, நறுக்கின வெள்ளை வெங்காயம், துருவின கேரட், அப்புறம் பொடியா நறுக்கின மாதுளை முத்துக்களை அள்ளித் தெளிக்கணும். கடைசியா ஒரு அரை மூடி எலுமிச்சையை அப்படியே பிழிஞ்சு விட்டா… அந்தப் புளிப்பும், காரமும், மாதுளையோட இனிப்பும் ஒண்ணா சேர்ந்து நாக்குல தாண்டவம் ஆடணும்!”
மித்ரன் சிரித்துக்கொண்டே பன்னீர் துண்டுகளைத் திருப்பினான். அந்தச் சமையலறை முழுவதும் நெய்யும் புதினாவும் கலந்த ஒரு சொர்க்க நறுமணம் கவ்வியது.
“ஆதி… ரெசிபி என்னவோ உன்னோடதுதான், ஆனா இந்த டேஸ்ட் என்னோடது!” என்றபடி, மசாலா ஒட்டிய ஒரு சிறு பன்னீர் துண்டை எடுத்து ஆதிரையின் வாயருகே நீட்டினான் மித்ரன்.
ஆதிரை அதைச் சுவைக்க வாய் திறந்தபோது, மித்ரன் கையை லேசாக விலக்கி, அவளது இடையைப் பற்றித் தன்பக்கம் இழுத்தான். ஆதிரையின் இதழ்களில் அந்தப் புதினா மசாலா ஒட்டியிருக்க, மித்ரனின் கண்கள் குறும்புடன் அவளை ஊடுருவின.
“மித்ரன்… தள்ளுங்க… பிள்ளைங்க வெளியே இருக்காங்க…” என்று அவள் மூச்சு வாங்க முணுமுணுக்க, “இருக்கட்டுமே… அவங்க அப்பாவும் அம்மாவும் இன்னும் அதே பழைய காதலோடு இருக்கிறதை அவங்க பார்க்கட்டுமே!”
“இந்தச் சமையலறை வாசனை உன்னோட சேர்ந்து வரும்போது, எனக்குப் பசியை விட உன் மேல இருக்கிற காதல் தான்டி அதிகமாகுது,” என்றபடி அவளது கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்தான்.
அந்த இடம் மசாலா வாசனைக்கும் மேலாக அவர்களின் காதலால் மணத்தது.
டைனிங் டேபிளில் பொறுமையிழந்த கவின், “என்னப்பா இது…! பசி வயிற்றைக் கிள்ளுது!” என்று கத்த, மித்ரன் சிரித்துக்கொண்டே சூடான ‘பன்னீர் புதினா சாட்’ தட்டுடன் வெளியே வந்தான். அனைவரும் மேசையைச் சுற்றி அமர்ந்து அந்த இனிய மாலைப் பொழுதைக் கொண்டாடினர்.
கவின், கண்மணி, தாத்தா, மித்ரன், ஆதிரை, அத்தம்மா என அந்த மேசையைச் சுற்றி அன்பின் பேரலை வீசியது.
“திடீரென்று பேராசிரியரின் மொபைல் ஒலிக்க, அதில் வந்த முகநூல் செய்தியைப் பார்த்த அவர் அப்படியே உறைந்து நின்றார். அவர் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது.
“டேய் மித்ரன்! இங்க பாருடா… யார் வர்றான்னு பாரு!” என்று உற்சாகமாகக் கத்தினார். அனைவரும் அவர் போனைப் பார்க்க… அங்கே ஒரு இளம்பெண்.. சாம்பல் நிறத் தீட்சண்யத்துடன் மின்னிய கண்கள், அதே வசீகரம்… அவள் லீயின் தங்கை மகள்… அமைரா (Amaira)!
தாத்தா குரலில் ஒரு உற்சாகம் பொங்க, “டேய்… இது லீயோட தங்கச்சி பொண்ணு அமைரா! அப்படியே லீயை மாதிரியே இருக்கா பாருடா!” என்று பேராசிரியர் நெகிழ்ச்சியுடன் சொல்ல, திரையில் அமையரா பேசினாள்: “தாத்தா… ஐ அம் கமிங் டு இந்தியா! உங்களைப் பார்க்க வர்றேன்!”
மித்ரனும் ஆதிரையும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து உறைந்து நின்றனர். லீயின் நினைவுகள் அவர்கள் மனக்கண்ணில் நிழலாட, அமையரா மெல்ல “ஹலோ…” என்று சொல்லிச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் லீயின் அதே பழைய குறும்பு மிளிர்ந்தது.
அந்தி முடிந்து இரவு எட்டிப்பார்த்தது.
வானத்தில் நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மின்னத் தொடங்கின. அவை தங்களுக்குள் பேசிக்கொண்டன..
“அங்க பார்..காதல் ஒரு முற்றுப் புள்ளியை நோக்கிப் போகல, அது ஒரு தொடக்கத்தை நோக்கிப் போகுது… அடுத்த தலைமுறையின் தொடக்கத்தை நோக்கி.”
நன்னிலவு முழுமையாக மேலே ஏறிக்கொண்டிருந்தது!
