Skip to content
Post Views: 3,582
அவள் உடைந்து நிற்கும் கோலம் கண்டவன் உள்ளம் வெதும்பி போனான் “சுப்பு உன்னை காயப்படுத்தும் நோக்கம் சத்தியமா எனக்கு இல்லை”.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இது நமக்கான வாழ்க்கை நாம தான் வாழணும்!
“உன்னை ஏன் கட்டினேன்னு ஒரு நாளும் ஃபீல் பண்ண மாட்டேன்”. ஏன்னா நானா தான் உன்னை ச்சூஸ் பண்ணினேன். அதே மாதிரி தான் நீயும்.
சரி தவறெல்லாம் முடிவு எடுக்கும் முன்ன தான் யோசிக்கணும். வேண்டாம்னா உங்க வீட்டுல அப்போவே சொல்லியிருக்கணும். “இப்போ வந்து மாட்டிக்கிட்டேன்னு பேசறதை ஜோக்குன்னு என்னால எடுத்துக்க முடியாது”. அப்படி ஒரு உணர்வு முகிழ்ந்தது அந்த குரலில்.
Advertisement
ஸாரி…. அவள் கண்கள் தளும்பியது.
ஜன்னலோரம் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.
எப்படி மனசாட்சியே இல்லாம உங்க தம்பிக்கு என் தங்கச்சியை கேட்க தோணுது உங்களுக்கு?
Advertisement
அவ BTech படிச்சுட்டு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறா. On sight ஆஃபர் அவளுக்கு இருக்கு.
Advertisement
ஏன் மன்னருக்கு என்ன குறை? எழிலுக்கு கோபம் வந்துவிட்டது.
என்ன நிறை? நீங்களே சொல்லுங்க?
தீபா….கத்திவிட்டான்.
Advertisement
சும்மா சத்தம் போடாதீங்க. ஒரு சாதாரண கான்ஸ்டபிளுக்கு ஒரு லட்சம் ரூபாக்கு மேல சம்பளம் வாங்குற சாஃப்ட்வேர் எஞ்சீனியரை எப்படி கொடுப்பாங்க?
தீபா சொந்ததுக்குள்ள இதெல்லாம் ஒரு பேச்சா?
இதோ பாருங்க சொந்தம்னு சொல்லி என்னை கொடுத்தது போதும். காலுக்கு தகுந்தது தான் செருப்பு. உங்க தம்பிக்கு தகுந்த மாதிரி ஒரு +2 முடிச்ச பொண்ணு டிகிரி முடிச்ச பொண்ணு இந்த மாதிரி இருந்தா பாருங்க.
இந்த பேச்சை இதோட விட்டுடுங்க. என்ன சொல்லி உங்க வீட்டுல சமாளிப்பங்களோ அது உங்கப்பாடு. எங்கம்மா முடியாதுனு என்கிட்ட நேரடியாவே சொல்லிட்டாங்க. பொண்ணு கேட்டு போய் அவமானபட்டா என்னை குறை சொல்லக்கூடாது.
அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த மன்னர் முழுதும் கேட்டுவிட்டான்.
உறவினர் திருமணத்திற்கு பூமாலையும் பாப்பாத்தியும் போயிருந்தனர். வீட்டில் எழிலும் அவன் மனைவியும் தான்.
வீட்டில் யாரும் இல்லை என்கிற மிதப்பில் தான் கூடத்தில் உட்கார்ந்து இப்படி சத்தமாக எடுத்தெறிந்து பேசிக் கொண்டிருந்தாள் தீபா.
உள்ளே நுழைந்த தம்பியை கண்டு கொண்ட எழில் பதறிவிட்டான்.
மன்னரு…. அவனுக்கு தொண்டை அடைத்தது.
தீபா அலட்டிக் கொள்ளவேயில்லை. அவனுக்கு கேட்டிருக்கும் என்று அவளுக்கு தெரியும். இருந்தாலும் இவனெல்லாம் ஒரு ஆளா என்ற மனப்பாண்மை.
எழிலுக்கு தான் மனம் பதைத்தது. தம்பியை எப்படி ஏறெடுத்து பார்க்க?
மன்னர் மிகுந்த ரோஷக்காரன். அவனை போய் இப்படி பேசி ஏழைரையை கூட்டி விட்டாளே.
எதுவும் பேசாது குளித்து உடைமாற்றி வந்தவன் கிச்சனுக்கு புகுந்தான்.
தீபா உணவு பரிமாற வர…. நான் போட்டு சாப்பிட்டுக்கிறேன் என்றான்.
தீபா முகத்தை சுழித்துக் கொண்டு தங்கள் அறைக்கு போய்விட்டாள்.
டேய் மன்னரு…. எழில் பேச வர… போதும் என்பதாய் கை உயர்த்தி தடுத்தவன் போ என்பதாய் கண் காட்டினான்.
அவ்வளவு தான் இன்றுவரை அதைப்பற்றி அவன் பேசவில்லை.
அந்த பெண் நித்யா தான் வேண்டும் என்றெல்லாம் மன்னர் கேட்கவில்லை. கேட்டுப் பார்க்கலாம் என்று பெற்றவர்கள் சொல்லும் போது சரி கேளுங்கள் என்று சொன்னான்.
தான் எந்த வகையிலும் மட்டம் என்ற தாழ்வு மனப்பான்மை அவனுக்கு என்றுமே இருந்ததில்லை.
தன்னைப் பற்றி அண்ணி மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக எண்ணிக் கொண்டான் அவ்வளவுதான்.
இன்று இதை சுப்ரஜா கேட்டு கிளறி விட வேண்டிய அவசியமில்லை தான். இவளும் தான் மட்டம் என்று நினைத்துக் கொண்டுதானே “நான் வந்து தொக்காக மாட்டிக்கிட்டேன்” என்று பேசுகிறாள். அது தான் அவன் மனதை பிசைந்தது.
மனம் சமன்படாது இருளை வெறித்துக் கொண்டிருந்தவனின் தோளில் விழுந்தது அவன் மனையாளின் வளைக்கரம்.
ஸாரி… நான்…. அவளுக்கு எப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரியாமல் தடுமாறினாள்.
அவள் உணர்வுகள் புரிந்தவன் அவள் கரம் பற்றி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
ஏன் என்னை அழுத்தகாரன்னு சொல்றாங்க தெரியுமா? சட்டுன்னு யோசிக்காம எதுவும் பேசிட மாட்டேன். முடிவு எடுக்க டைம் எடுத்துப்பேன் ஆனா எடுத்த முடிவுல ஸ்டராங்கா இருப்பேன்.
நித்யாவை லவ் பண்ணல… அவ மேல க்ரஷ் இல்லை.சொந்தம் தானே கேட்டு பார்ப்போம்னு சொன்னாங்க. சரி கேளுங்கன்னு சொன்னேன்.
அவங்க வேண்டாம்னு சொல்லிடதினால நான் அப்படியே தனிமரமா நின்னுடலை. நானும் நிறைய பெண் பார்த்து ஒத்துவரலை வேண்டாம்னு சொல்லியிருக்கேன். அதை ஒரு நிகழ்வா கடந்துட்டு போயிடுவேன். மண்டையில் போட்டு உருட்ட மாட்டேன் என்றான் புரியும்படி.
புரிந்தது எனும் விதமாய் தலையாட்டினாள்.
ஒரு சொல் கொல்லும்! ஒரு சொல் வெல்லும் என்றான்.
அவள் குறுகி அமர்ந்து விட்டாள்.
“———————–”
சனிக்கிழமை மதியமே நேரமாய் வீடு வந்தவன் சுப்ரஜாவை அம்மா வீட்டுக்கு அழைத்து சென்றான்.
ஐநூறு ரூபாய் அவள் கையில் கொடுத்தவன் ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வா என்று அய்யங்கார் பேக்கரி வாசலில் பைக்கை நிறுத்தினான்.
இதுல என்ன வாங்க முடியும்? முதன் முதலில் அம்மா வீட்டுக்கு போறோம் இப்படி பிசினாரித்தனமா காசு கொடுக்குறார். நம்மை பத்தி என்ன நினைப்பாங்க? கடுகடுத்தவள் தன்னிடம் இருக்கும் பணத்திலும் சேர்த்து எண்ணூறு ரூபாய்க்கு ஸ்வீட், காரம்,பிஸ்கெட்,கேக் என்று பெரிய பை நிறைய வாங்கி வந்தாள்.
மன்னர் எதுவும் கேட்கவில்லை. வழியில் அவள் கேட்ட பானிபூரி வாங்கி கொடுத்து அழைத்து வந்தான்.
இருள் கவிழும் முன் குறும்பூர் வந்து சேர்ந்தார்கள்.
நவமணிக்கு மகளை பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி. பாதாதி கேசம் வரை ஊடுறுவி பார்த்தார்.
சுபிக்கே வெட்கமாகி விட்டது.
மாப்பிள்ளையை வரவேற்று உபசாரம் தொடங்கிவிட்டனர் மாமியார் வீட்டினர்.
மகளிடம் தனிமையில் விசாரித்தார். மாமியார் நல்லத்தனமா பழகறாங்களா?ஓர்ப்படிங்க பேச பிடிக்க இருக்காங்களா? கட்டிக் கொடுத்து அனுப்பிய தாயின் தவிப்பு நூதனமானது. நவமணியும் விதிவிலக்கல்ல.
எங்க மாமியார் ரொம்ப நல்ல டைப்ம்மா. அஞ்சலி அக்கா போன வாரம் வந்து போனாங்க. எல்லாரும் நல்லா பழகறாங்க, ஒன்னும் பிரச்னை இல்லை என்றாள்.
காலங்கோலம் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடு. உங்க மாமியார் சமைக்கும் போது கூட மாட இருந்து கத்துக்கோ. அவங்க வீட்டு நடைமுறை என்னனு பார்த்து பழகிக்கோ. எத்தனை நாளைக்கு அவங்களே செய்வாங்க? அலுப்பு சலிப்புல ஏதாவது நாலு வார்த்தை சொல்லிட்டா அப்புறம் வருத்தமாகிடும் குட்டி என்றார் மகள் தலையை வருடிக் கொடுத்து.
ம்ம்மா நைட் சாப்பாடு போடுவியா இல்லை அட்வைஸ் பண்ணியே நேரத்தை ஓட்டிடுவியா? என்று சிரித்து விட்டாள்.
என் பதைபதைப்பு உனக்கு சிரிப்பா இருக்கு. உனக்கு ஒரு பொண்ணு பிறந்து அதை கட்டிக் கொடுத்து அனுப்பினா தான் புரியும் என்று முறைத்தார்.
போம்மா எனக்கு பையன் தான் பிறக்கும். அப்படியே பொண்ணு பிறந்தாலும் நான் பொண்ணு கூடவே வீட்டோட மாமியாரா போயிடுவேன் என்றாள்.
மகள் பேச்சில் கல கலத்து சிரித்து விட்டார் நவமணி.
“——————-“
இரவு உணவு முடிந்து காற்றோட்டமாய் வெளியில் நடந்து போனான் மன்னர்.
அப்பா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா? கணவன் தனியே நிலம் வாங்கி வைத்திருப்பதும் ஆடு வளர்ப்பதும் சொல்லி சிரித்தாள்.
நவமணிக்கு பெருமையாய் இருந்தது. இவ்வளவு கருத்தான மாப்பிள்ளை யாருக்கு வாய்க்கும்!
அப்பாக்கு திருப்தியா இருக்கவும் தான் இந்த மாப்பிள்ளையை முடிவு பண்ணினேன் என்றார் பூவராகன்.
பெரிய அப்பாடக்கர் மாப்பிள்ளையை தான் தேடி பிடிச்சீங்க….ரொம்ப தான் பெருமை போங்க என்று முகத்தை சுழித்தாள்.
இல்லையா பின்ன? இந்த காலத்துல கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் இவ்வளவு பொறுப்பான புத்திசாலியான மாப்பிள்ளை யாரு அமைவா?என்றார் பூவராகன்.
அம்மா சொல்ல மறந்துட்டேன் இந்த செயினை பாருங்க என்று கழுத்தில் கிடந்த டாலர் செயினை எடுத்து காட்டினாள்.
ஏது புதுசா இருக்கு? மாப்பிள்ளை வாங்கி கொடுத்தாரா? என்றார் நவமணி கையில் பிடித்து டிசைனை பார்த்தபடி.
அட போம்மா…. நல்ல ஞாபக சக்தி உனக்கு! நீங்க உங்க மாப்பிள்ளைக்கு போட்டது தான் என்றாள்.
ஆமா…. நீ ஏன் போட்டிருக்க? புரியாமல் கேட்டார்.
உங்க மாப்பிள்ளைக்கு நகை போட்டுக்க பிடிக்காதாம். டாலர் கோர்த்து எனக்கு செயினா கொடுத்துட்டார் என்றாள்.
இன்னும் பெருமை பிடிப்படவில்லை நவமணிக்கு.
பிறந்த வீட்டில் ராணியாக வாழ்கிறேன் என்று மகள் சொல்ல கேட்பதை விட வேறென்ன பெருமை இருந்துவிடும் மகளை பெற்ற தாயிற்கு.
“————————–“
அம்மா வீட்டுக்கு வந்ததும் அப்படியே டாலடிக்குது பேஸ்.
ஆமா இது என் அம்மா வீடு. உங்க அம்மா வீட்டில் நீங்க ஹேப்பியா இருக்கிற மாதிரி எங்க அம்மா வீட்டில் நான் ஹேப்பி.
நாளைக்கு திருச்சி போய் வருவோமா? அக்கா,மாமா விருந்துக்கு கூப்பிட்டாங்கல்ல.
அடுத்த வாரம் பார்க்கலாம் என்றான்.
ஏன் நாளைக்கு என்னவாம்? அவளுக்கு முகம் சுணங்கிவிட்டது.
நாளைக்கு காலையில் நாம ஊருக்கு கிளம்பணும். திருச்சி போக தோது படாதும்மா. கோயிலுக்கு கெடா(ஆடு) வெட்டி படையல் போட ஒரு பார்ட்டிக்கு ஆறு கெடா வேணுமாம். நான் போய் தான் பார்க்கணும்.
ஏன் வேற யாரும் பார்க்க முடியாதோ அந்த தரகு வேலையை? கோபத்தில் சிடு சிடுத்துவிட்டாள்.
சுப்பு ஆடு நம்மோடதுன்னா நாம போய் தான் பேசணும்.
ஏன் மாமா பார்த்துக்க மாட்டாரா? உங்க பிரண்ட் சசி, கதிர்கிட்ட சொன்னா அவங்க பார்த்துக்க மாட்டாங்களா?
நம்ம பொருளுக்கு நாம தான் விலை நிர்ணயம் பண்ணனும். எங்கப்பாக்கு அவ்வளவு சாமர்த்தியம் பத்தாது.
நீங்க மட்டும் தான் உலகத்திலே சாமர்த்தியம்னு நினைப்பு! சிடு சிடுவென்று வெடித்தாள்.
இப்போ எதுக்கு கோபம்? அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்.
இங்கிருந்து திருச்சி பக்கம் தானே…. இவ்வளவு தூரம் வந்துட்டோம். அவள் சமாதானம் அடையவில்லை அவள் பேச்சு அவளுக்கு.
நீ போய் விருந்து முடிச்சுட்டு வா! படுத்து விட்டான்.
அவளுக்கு புசு புசுவென்று அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
நீங்க முசுடுன்னு உங்க அண்ணி அப்போவே சொன்னாங்க. கண்ணீரை வழித்து துடைத்துக் கொண்டே படுத்துக் கொண்டாள்.
கணன்று வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு கண்மூடிக்கொண்டான்.
“————————–“
என்ன மாப்பிள்ளை மதியம் கறி விருந்து சாப்பிட்டு கிளம்பலாமே…. பூவராகன் அக்கறையாய் கேட்டார்.
இல்லை மாமா கொஞ்சம் அவசர வேலை. அடுத்து வரும் போது கண்டிப்பா மதிய சாப்பாடு சாப்பிடற மாதிரி வரேன் என்றான்.
கிளம்பவே அவளுக்கு மனம் வரவில்லை. ஆமையை விட மெது மெதுவாய் தான் கிளம்பினாள். ஒரு நாலு நாள் தங்கிட்டு போனா எவ்வளவு நல்லா இருக்கும்! அவள் மனம் ஏங்கியது.
கல்யாணம் ஆகியே பத்து நாள் ஆகவில்லை. ஆனாலும் அவளுக்கு நாலு நாள் தங்கிவிட்டு போக ஏக்கம் வந்ததில் வியப்பில்லை. ஏனெனில் பெண்களின் மனநிலை அது தான். தாய் வீட்டை விட அவர்களுக்கு சொர்க்கம் உண்டோ?
நேத்து நைட் தான் வந்தோம் இன்னைக்கு காலையில் கிளம்புறோம்…. உள்ளுக்குள் அவ்வளவு புலம்பினாள்.
குட்டி எதுக்கு இவ்வளவு தின்பண்டம் வாங்கிட்டு வந்தீங்க? இங்கே யாரு இதெல்லாம் சாப்பிடறாங்க. நீங்க எடுத்துட்டு போங்க சாப்பிடுவீங்க என்று காரம் பிஸ்கெட் மட்டும் எடுத்துக்கொண்டு ஸ்வீட், கேக் எல்லாம் மகளுக்கே கொடுத்தனுப்பினார் நவமணி.
ஒரு அழுத்தமான பார்வை மனைவியை பார்த்தான். அவள் குனிந்து கொண்டாள். பெருமையாய் அவ்வளவு வாங்கி வந்திருந்தாளே…
வெய்யிலுக்கு முன்ன கிளம்பறோம் மாமா என்று விடைபெற்றுக் கொண்டான்.
மனமே இல்லாமல் புகுந்த வீடு கிளம்பினாள் சுபி.
“———————”
வரும் வழியில் அவள் எதுவும் பேசவில்லை. கோபமாக இருக்கிறாள் போலும்.அதைவிட அவனும் கோபமாக தான் இருந்தான்.
மெல்ல சூரியன் முறைக்க தொடங்கிவிட்டான். அவஸ்தையாய் அவள் நெளிவதை பார்த்து வழியில் இளநீர் வாங்கி கொடுத்தான். கடு கடுப்புடன் குடித்து விட்டாள்.
இனி வண்டியில் வருவது சரி வராது என்று எண்ணிக்கொண்டான். எழுபத்திரண்டு கிலோ மீட்டர் வண்டியில் மனைவியை அழைத்து வருவது கஷ்டம் என்று உணர்ந்து கொண்டான்.
மீண்டும் ஓரிடத்தில் நிறுத்தி சூடான கீரை வடை வாங்கி கொடுத்தான்.
எப்படியோ முறைத்துக் கொண்டும் சிலுப்பிக் கொண்டும் முடியனூர் வந்து சேர்ந்தார்கள்.
வாம்மா…,”அம்மா அப்பாலாம் சுகந்தானே?” நலம் விசாரித்த பாப்பாத்தி மன்னரு கை கால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் என்றார்.
அம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ சாப்பிடு என்று மனைவியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
“இந்த உச்சி வெய்யிலில் கிளம்பி வரணுமா?” வெய்ய தாழ்ந்து சாயங்காலமா வர வேண்டியது தானே…? அவள் மனநிலை புரியாமல் அவர் பேசிக் கொண்டே போக…. கடுப்புடன் அறைக்குள் போய் அடைந்து கொண்டாள்.
“——————-“
டேய் கிங்கு இந்த ஆட்டை பத்துக்கு கேட்கறாங்க,எனக்கு நியாயமா தான் படுது. நீ என்ன சொல்ற? கதிர் வியாபாரம் பேசினான்.
டேய் குறைஞ்சது பதினைஞ்சு கிலோ வரும்டா. கிலோ எட்டு நூருன்னு கணக்கு வைச்சா கூட பனிரெண்டாயிரம் வரும். ஆட்டுக்கு தோல் இருக்கு, கால், ரத்தம், போட்டி (குடல்) எல்லாத்துக்கும் ரேட் இருக்கு.
பனிரெண்டுக்கு பாரு என்றான்.
அண்ணே சாமிக்கு படையல் போட வாங்குறோம். மொத்தமா ஆறு கிடா வாங்குறோம் பார்த்து சொல்லுங்கண்ணே என்றார் ஆடு வாங்க வந்த நபர்.
சாமிக்கு நியாயமான விலையில் வாங்கி தாண்ணே படையல் போடணும். இல்லண்ணா மருதவீரன் கோச்சிப்பார். உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். எழுபத்தெட்டு கொடுத்துட்டு எடுத்துக்கோங்க என்றான்.
என்ன அண்ணே இவ்வளவு சொல்றீங்க? கொஞ்சம் பார்த்து சொல்லுங்க! நாம சாமானியப்பட்ட குடும்பம்ணே.
அதெல்லாம் காது குத்துக்கு மொய் பணம் லட்ச கணக்குல வரும். ஜமாய்ச்சிட மாட்டிங்க?
சாமிக்குன்னு சொன்னதுனால ரெண்டாயிரம் குறைச்சுக்குறேன். இந்த ரெண்டு ஆடும் இருபது கிலோ கிட்ட வரும். நான் என்னைக்கும் அபாண்டமா விலை சொல்ல மாட்டேன்.கண்டிப்பா உங்களுக்கு நஷ்டம் வராது. எழுபத்தாறு கொடுத்துட்டு எடுத்துட்டு போங்க.
அண்ணே…
பசி வயித்தை கிள்ளுது. அட்வான்ஸ் கொடுத்துட்டு போனாலும் சரி. மொத்தமா கொடுத்துட்டு இப்போவே எடுத்துட்டு போனாலும் சரி என்று கராறாய் பேசி முடித்துவிட்டான்.
அது தான் மன்னர். வழ வழ கொழ கொழ அவனுக்கு பழக்கம் இல்லை.
error: Content is protected !!