Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 13.3

அதே நிதானம் தப்பாமல் பேசியவன் அவரது கார் பேனட்டில் ஒரு கால் ஊன்றி காரில் ஏறி சாவகாசமாக இரண்டு பக்கமும் கை வைத்து அமர்ந்து சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களை அவிழ்த்தான்.

சுற்றி இருந்த அத்தனை பேருக்கும் இந்த பார்த்திபன் வித்யாசமாக தெரிந்தான் விஷ்ணுவை தவிர.

ஆட்டோவை அழைத்து வந்திருந்த ஸ்ரீனி கூட பார்த்திபனின் பேச்சில் வியந்து வந்த வேலையை மறந்து நின்றான்.

என்றைக்கும் இல்லாமல் பட்டன் போடாமல் இருந்த அவன் சட்டை, கண்களில் காணாமல் போயிருந்த சாந்தம், அளவிற்கு அதிகமான நிதானம், உடலின் மொழியில் உஷ்ணம், வார்த்தையில் ஒரு பிடிவாதம் என இவன் வேறு ஒருவன். கிட்டத்தட்ட பித்தனாக தெரிந்தான்.



Advertisement

“அப்படிப்பட்ட எனக்கு ரொம்ப நாள் கழிச்சு ஒரு அடி… குட்டி அடி. பெத்த புள்ள முன்னாடி, கட்டுன பொண்டாட்டி முன்னாடி ஒரு குட்ட்ட்ட்டி அவமானம்.

ஆனா அது மண்டை வர போய் குடையிது. எங்கையோ உன் விசயத்துல தப்பு பண்ணிட்டோமோனு அடிச்சிட்டே இருக்கு. சரி பண்ணணும்ல தாமோதரன்? ஆமா பண்ணனும்”

அவனே பதில் கொடுத்து தலை அசைக்க அரண்டு போனான் ஸ்ரீனி. விஷ்ணுவை நெருங்கினான் வேகமாக, “அண்ணா என்ன இது, அத்திம்பேர் இப்டி பேசுறார். எனக்கு என்னமோ பயமா இருக்கு” என்றான் படபடப்பாக.

Advertisement

“டேய் உங்களுக்கெல்லாம் இவனை பத்தி சரியா தெரியல. இவன் தான்டா உண்மையான பார்த்திபன். ஆறே வருசத்துல எப்படி இவ்ளோ சம்பாதிக்க முடிஞ்சதுனு கொஞ்சமாவது யோசிச்சு பாத்துருக்கீங்களா?” இருண்டவன் தலை இல்லை என ஆடியது.

Advertisement

“பொதுவா எதுலயும் இன்வால்வ் ஆக மாட்டான், அப்டி உள்ள வந்துட்டா ஜெயிக்காம போக மாட்டான். வின்டேஜ் பார்த்திபன் எனக்கும் மேல பத்து மடங்கு இருந்தவன்டா, சுருக்கமா சொல்லனும்னா வெறிபுடிச்சவன்”

“ண்ணா பில்டப் எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே ண்ணா” விஷ்ணு வளைந்த புன்னகையோடு நண்பனை கண்ணாலே காட்டினான்.

“தம்பிக்கு பட்டது போதாது போல. இன்னும் என்கிட்ட இந்த வீம்பெல்லாம் தேவையா?” என்றார் தாமோதரன் மீண்டு வந்து.

Advertisement

“இது ஒரு பெரிய விஷயம்னு நினைக்கிறியா தாமோதரன்? பணத்தை எங்களால ஈஸியா சம்பாதிக்க முடியும். ஆனா இந்த அடி பணத்தையும் மீறியது”

“விடுடா பார்த்திபா, பிள்ளை மேல கை வச்சதுக்கே ஒரு நாள் ஜெயில்ல ஒக்கார வச்சோம், இதுல இந்த மாதிரி சின்ன புள்ள வேலை பாத்து சந்தோசப்பட்டுக்க நினைக்கிறான்.”

விஷ்ணுவின் கண்கள் தாமோதரனின் முகத்தை சுவாரஸ்யமாக பார்த்தது. இவர்கள் எதிர்பார்த்தது போல் அவரின் முகம் ஏமாற்றத்தை தான் வைத்திருந்தது.

இரு நண்பர்களுக்கும் அதீத ஏமாற்றம் ஏற்பட தான் செய்தது. இதனை அடுத்து அவர்கள் பத்து வருடத்திற்கு திட்டமிட்டு வைத்திருந்தனர். அது இப்பொழுது இல்லை என்றான பிறகு சற்று ஆடி தான் போயினர்.

அதோடு வாங்கிய கடனை காரணமே இல்லாமல் அடைக்க வேண்டும், ஆற்றில் இறைத்த நீராய் பணம் கண் முன்னே கரைந்து போக அதனை எதுவும் செய்ய முடியாத ஆதங்கம் இருவரிடமும். அதுவே மொத்தமாய் உருமாறி தாமோதரன் மேல் வெறியாய் நிக்கிறது.

தாமோதரன் ஓட்டுனரை அழைத்தவன், “வண்டிய வெளிய எடு” என்றான் விஷ்ணு. அவனோ அசையாமல் இருக்க அவன் கூறிய வேலையை தான் செய்ய போனாள் அனாயா.

“டேய்…” தாமோதரன் சத்தம் கொடுக்க ஓட்டுநர் வேகமாக அவள் முன்பு தான் வாகனம் எடுத்து வெளியே வர தாமோதரனும் ஏறிக்கொண்டார்.

ஸ்ரீனி அனாயாவை அழைத்து மருத்துவமனை செல்ல பார்க்க, விஷ்ணுவும் மனம் கேளாமல் தானும் உடன் சென்றான்.

பார்த்திபனுக்கோ குடவுனை விட்டு அகல மனமே இல்லை. இந்த சூழலை எப்படி சமாளிப்பதென தெரியாமல் அங்கேயே அமர்ந்துவிட்டான்.

நேரம் இரவு பனிரெண்டை கடந்த பிறகு தான் உயிர் வந்தது போல் வீட்டிற்கு சென்றான். வந்தவன் நேரே மாடிக்கு செல்ல பார்க்க, “பார்த்தி” மனைவியின் குரல் வரவேற்பறையிலிருந்து ஒலிக்க அப்டியே நின்று கீழே பார்த்தான்.

மனைவி சோபாவில் அமர்ந்திருக்க மகள் மனைவி மடியில் படுத்திருந்தாள். “ஆராம்மா நீ தூங்கலையா?” கேட்டவன் அவர்களை நெருங்கி மகளை கைகளில் எடுத்து, “வாங்க போகலாம்” என்றான்.

“ஏன்னா நீங்க சாப்பிடல இன்னும்” என்றாள் வேகமாக.

“இல்ல மாமி நான் சாப்பிட்டேன் வா”

அவன் நடக்க, அவன் கையை பிடித்து, “பொய் சொல்றிங்க ன்னா” அவன் முகமே காட்டிக்கொடுத்தது அவனின் வாட்டத்தை. காலை உணவிலிருந்து இரவு வரை எதுவும் எடுத்திருக்க மாட்டான்.

பிடிவாதமாக அவனை உணவு மேஜை அழைத்து சென்றவள் அவன் மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க தானே ஊட்டிவிட்டாள்.

காலையும் ஆரபி காலை உணவை தயாரிக்கும் முன்பே குளித்து வந்து மனைவியிடம் நின்றான், “நான் ஆபீஸ் கிளம்புறேன். கொழந்தை அம்மாகிட்ட இருக்கா” மனைவி தோளில் தட்டி கூறியவன் அவள் தடுக்கும் முன்பே கிளம்பிவிட்டான்.

ஆடிட்டர் அலுவலகம் வந்து மற்றவர்கள் வேலையை இழுத்து போட்டு தானே செய்தான். மற்ற ஆட்கள் வரும் முன்பு அவனே சில வேலைகளை செய்து முடித்திருக்க, அடுத்து விஷ்ணுவும் வந்தான்.

அவன் முகத்திலும் ஒரு அலுப்பான பார்வை தான்.

வந்ததும் உடனே, “லேண்ட் ஓனர் வீட்டுக்கு போகலாமா?” பார்த்திபனிடம் அமைதி, “யோசிக்காத பார்த்திபா. இந்த விஷயமெல்லாம் சூட்டோட சூட்டா முடிச்சிடனும்” என்றான் விஷ்ணு.

அதுவும் சரியாக பட, “சரி வா போகலாம்” இருவரும் உடனே அவரது இல்லம் சென்றனர்.

அந்த பெரிய வீட்டின் தோட்டத்தில் அமர்ந்திருந்த முத்துமாணிக்கம் முகம் அதிகமாக சோர்வை தட்டியது.

தலையில் கை வைத்து சோர்ந்திருந்தவர் அருகே ஏதோ ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார் அவர் மனைவி. எதுவும் அந்த பெரியவருக்கு நிம்மதி இல்லை போல்.

“உங்களுக்கு எதுக்கு சோகம், அதான் லம்ப்பா ஒரு கோடி அடிச்சாச்சுல”

விஷ்ணு தூரத்தில் நின்றே குரல் கொடுக்க இருவரும் அவரை நோக்கி நடந்தனர்.

விஷ்ணுவின் குரலில் நிமிர்ந்தவர் இருவரையும் சந்திக்க முடியாமல் பார்வை மாற்ற இருவரும் வந்துவிட்டனர்.

“போலீஸ்ல கம்ப்ளைன் கொடுக்கலாம்னு இருக்கோம், உங்கள வந்து போலீஸ் தூக்கிட்டு போகிறது மரியாதையா இருக்காது அதுனால நீங்களே கூட வந்தா நல்லா இருக்கும்” என்றான் பார்த்திபன்அவரிடம்.

முத்துவின் மனைவி, “தம்பி ஒக்காந்து பேசலாமே” என்றார் கணவனின் நிலை தெரிந்து.

“பேச ஒன்னுமில்லங்க, வரிங்களா இல்ல நாங்க போகவா?” அவசரப்படுத்தினான் பார்த்திபன்.

“வேணாம் ப்பா பணத்தை நாங்க இப்போவே கொடுக்குறோம்” அவர் மனைவி எழ, விஷ்ணு பார்த்திபன் பார்வை முத்துமாணிக்கத்தின் மேல் தான் இருந்தது.

அவர் வந்ததில் இருந்து எதுவும் பேசவில்லை. சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்த திணக்கம், தெனாவெட்டு இல்லை. குற்றஉணர்ச்சியை மீறி ஏதோ ஒன்று அவரை தடுத்தது போல் இருந்தார்.

“பணத்தை வாங்குற ஐடியா எங்களுக்கு இல்ல. அந்த இடம் எங்களுக்கு வேணும். அதுக்கான வேலை தான் இது” அவர் மேல் பார்வை வைத்தே பதில் கொடுத்தான் விஷ்ணு.

“தம்பி…” கண்களில் நீர் நிரம்ப எழுந்த அவர் கைகள் கூப்பி உடனே இருவர் முன்பு வந்து நின்றார்,

“நீங்க குடுத்த காசை கூட வாங்கிக்கோங்க, இடத்தை இனாமா உங்களுக்கு தர்றேன், ஆனா எதுவா இருந்தாலும் இப்போ என்னால முடியாது. இருந்த ஒத்த பேரனை ரெண்டு நாள் இந்தா தர்றோம் அந்தா வந்துடுவான்னு அலைகழிச்சிட்டு இருக்கானுங்க. உங்க பிரச்சனைல என் குடும்பம் அல்லாடிட்டு இருக்கு. போய்டுங்கயா”

எங்கே அடித்தால் வலிக்குமென தெரிந்து எளிமையாக காயை நகர்த்தியிருக்கும் தாமோதரனின் கூர் புத்தி சிறிதும் ரசிக்கும்படியாக இல்லை அவர்களுக்கு. தங்களுக்காக ஒரு குழந்தையை கடத்தியிருப்பது எந்த விதத்திலும் நியாயமாக படவில்லை.

பழிவெறி இருக்கலாம், ஆனால் இப்படி இரக்கமற்றதாகவா? விஷ்ணு அவனது புல்லட்டை உசுப்ப வாகனம் பறந்தது தாமோதரன் அலுவலகத்திற்கு. அது ஒரு காட்டன் ஆலை.

வேலை மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருக்க, அனாயாவோடு கைபேசியில் தீவிரமாக பேசிக்கொண்டே வந்த பார்த்திபன் விஷ்ணுவுக்கு வழிகூறினான்.

பார்த்திபன் கூறி இறுதியாக வந்து நின்ற இடம் எலக்ட்ரிக் ரூம். அதாவது மொத்த ஆலைக்கும் மின்னுற்பத்தி செய்யும் அறை. பெரிதாக இருந்தது.

“இப்ப அவனுக்கு கால் பண்ணுடா” பார்த்திபன் விஷ்ணுவிடம் கூற தகவல் பறந்து உடனே வந்து நின்றார் தாமோதரன்.

“என்ன பார்த்திபன் டொனேஷன் எதுவும் வேணுமா?” நக்கலாக கேட்டவர் உடனே தன்னுடைய உதவியாளரிடம் கை நீட்ட, அவனோ செக் புக் தேடி எடுத்து கொடுத்தான்.

“பத்து லட்சம்… ஓ… உங்களுக்கு தான் ஏதோ ஒரு கோடி நஷ்டமாமே. அப்போ ஒரு கோடி தரவா உதவியா இருக்கும்ல?”

தானே பேசி, பேசிய தொகையை எழுதி, “ஆபீஸ்ல வச்சு கேக்க தம்பிகளுக்கு கூச்சம் போல. வெளியே வச்சு கேக்குறாங்க” தலையை ஆட்டி சிரித்தார் அந்த தாளை இவர்களிடம் கொடுக்குமாறு உதவியாளரிடம் நீட்டி.

“எவ்ளோ பெரிய மனசு… இதுக்கு நன்றி சொல்ல வேணா?”

விஷ்ணுவின் உள்நோக்குள்ள சிரிப்பை அவர் கணிக்கும் முன்பே அவனுக்கு முன்னிருந்த ஒரு பெரிய காட்டன் நிறைந்த மூட்டையில் லைட்டரை திறந்து போட அது திமு திமுவென பற்றிக்கொண்டு எரிந்தது.

உடனே சுதாரித்த மற்ற ஆட்கள் அதனை சில நொடிகளில் அணைத்துவிட தாமோதரன் முகம் கோவத்தில் ஜிவ்வென சூடானது.

“தோ பார்றா பார்த்திபா பெருசு இதுக்கே ஷாக் ஆகிடுச்சு” விஷ்ணு நக்கல் பேச பார்த்திபன் முகத்தில் கோணல் சிரிப்பு.

அவருக்கு தெரிந்திருந்தது இவர்கள் எண்ணத்தில் ஓடுவது. இத்தனை பெரிய ஆலைக்குள் வந்து எந்த தடயமும் இல்லாமல் செல்வது எப்படி என்று. இந்த பக்கம் எந்த வகையான கண்காணிப்பு கேமெராவோ, காவலாளிகளோ இருப்பதில்லை.

காரணம் இங்கு வெறும் மின் சேவை மட்டுமே இருப்பது. சில நேங்களில் தேவையற்ற, இரண்டாம் ரகம் அல்லது வீணான துணிகளை இங்கு அடுக்கி வைத்து பிறகு வெளியேற்றுவார்கள்.

அதனை தான் விஷ்ணுவும் பார்த்திபனும் பயன்படுத்திக்கொண்டனர். யார் நேரமோ இன்று காலை தான் சில மூட்டைகளை அப்புறப்படுத்தி ஒரே ஒரு மூட்டை மட்டும் மீதமிருந்தது. இவர்கள் இதனை செய்தார்கள் என்று கூட ஆதாரம் திரட்ட முடியாது.

“சார் இங்க ஒரே சீமண்ணை வாசனை வருது”

 ஒருவன் பதறி தண்ணீரை தேட போக, “ஏய், நகந்த மொத்தமா கொளுத்திடுவேன்” கையில் தீப்பெட்டி வைத்து பார்த்திபன் எச்சரிக்கை அவன் அப்படியே நின்றுவிட்டான்.

“சார் பவர் சப்ளைல நெருப்பு புடிச்சா மொத்த…”

“ம்ம்…” தாமோதரனின் ஆத்திரமான ம்ம் என்ற வார்த்தையில் அவன் மௌனித்துவிட விழிகள் தெறித்து வெளியே விழும் அளவு கோவத்தோடு இருவரையும் பார்த்தார், “என்ன வேணும்டா உங்களுக்கு?” சாவகாசமாக வாகனத்தில் சாய்ந்து அமர்ந்த பார்த்திபன், கை கடிகாரத்தை பார்த்தான்.

“உனக்கு அஞ்சு நிமிஷம் டைம், நீ கடத்தி வச்சிருக்க முத்துமாணிக்கம் பேரன் அதுக்குள்ள அவங்க வீட்டுல இருக்கனும்”

“சேகரன்…” தன்னுடைய காரியத்தரசியை அழைக்க, அதற்குள், “யோவ் பெருசு நில்லுயா… அதுக்குள்ள என்ன அவசரம்” நிறுத்தி வைத்தான் பார்த்திபன்.

“ரெண்டாவது பாயிண்ட். எந்த இடத்தை நாங்க முடிக்கவே கூடாதுனு நீ கங்கணம் கட்டி நின்னியோ அதை நாங்க இந்த வாரமே மறுபடியும் முடிப்போம். ரெஜிஸ்ட்ரேஷன்க்கு கண்டிப்பா நீ வரணும், வர்ற” விஷ்ணு அத்தனை அழுத்தமாய் அழுத்தி கூற அவள் விழிகள் அப்படி சிரித்தது.

“நாலு நிமிஷம் தான் இருக்கு” பார்த்திபன் நினைவூட்ட அதற்கும் பார்த்திபனை முறைத்தார் தாமோதரன்.

“யோவ் முறைக்காம வேலைய பாக்க சொல்லுயா உன் ஆளுங்கள. அறிவானவனுங்களா இருந்தா நாங்க சொன்ன ஒடனே பையன அனுப்பிருப்பானுங்க. இதெல்லாம் வச்சு எப்படி தான் பிஸ்னஸ் பன்றியோ”

விஷ்ணு தலையில் அடித்துக்கொள்ள உடனே அழைப்பு பறந்து குழந்தையும் அவர்கள் வீட்டில் ஒப்படைக்கப்பட்டான். அதனை உறுதி செய்த நண்பர்கள் தீப்பெட்டியை தூக்கி எரிய பார்த்திபன் வாகனத்தை உயிர்ப்பிக்க விஷ்ணு பின்னால் ஏறிக்கொண்டான்.

கிளம்பியவன் பட்டென நிறுத்தி, “விஷ்ணு மறந்துட்டேன். அடுத்த தடவை நியாபகப்படுத்து, வர்றப்ப பெருசுக்கு கார் பொம்மை, சொப்பு ஜாமான் எல்லாம் வாங்கிட்டு வரலாம், இப்போல்லாம் குழந்தைங்க கூட மட்டும் தான் விளையாட்டாம்”

“அதுக்கென்னடா பார்த்திபா பால் பெட்டியும் சேர்த்தே வாங்கிட்டு வரலாம்” இவனும் இழுத்து நண்பனோடு ராகம் பாட, பார்த்திபன் இடது கை கொண்டு வலது மீசையை முறுக்கிவிட்டு, “வர்ட்டா…” என அவன் வெற்றி சிரிப்பு சிந்த உடனே சிவந்தது தாமோதரனுக்கு கோவத்தில்.

இருக்காதா பின்னே, ‘அவர் இடத்துக்கே வந்து, அவரையே மிரட்டி போனதும் இல்லாமல் குழந்தைகளோடு விளையாட மட்டும் தான் நீ என பேசியதோடு, மீசையை முறுக்கி காட்டி ஆம்பளையா நீ?’ என கொக்கரித்து சிரித்து போனால் எரிய தானே செய்யும். எரிந்தது தாமோதரனுக்கும். விஷ்ணு பார்த்திபன் மேல் பகை மலையளவு கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.

ஆனால் அவரது கோவத்தின் தீ கொடுக்கும் அடி என்னவோ நாயகர்களுக்கு அதிக சறுக்கலை தான் தர காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!